Archive for சிறுகதை

வயசு – சிறுகதை


நீளமான அந்தத் தெருவின் ஒரு முனையில் இருந்து பார்க்கும்போது அடுத்த முனையில் பச்சைப் பசேல் என புற்கள் காற்றில் ஆடுவது தெரிந்தது. நாலு எட்டு வேகமாய் நடக்க முடிந்தால் பதினைந்து நிமிடத்தில், வயற்வரப்புகளைக் கடந்து ஓடைக்குச் சென்று விடலாம். ஓடையில் இப்போது நீர் இருக்குமா எனத் தெரியவில்லை. இப்போதெல்லாம் எத்தனைப் பையன்கள் ஓடைக்குச் சென்று குளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஷவர் இல்லாமல் ஷானு ஒருநாள் கூட குளிக்கமாட்டாள். “தண்ணீரைத் திறந்துவிட்டு, ஷவரில் அக்காடான்னு குளிக்கும்போது ஒரு சுகம் வரும் பாருங்க தாத்தா” என்று சொல்லும்போது அவள் சின்னஞ்சிறு முகத்தில் பரவும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவளிடம் ஓடையில குளிச்சிருக்கியாம்மா என்று கேட்கக்கூட பயம் எனக்கு.அவள் கட்சிப்படி, ஓடை, வயற்காட்டில் நீர் பாய்ச்சுவதற்கும் எருமைகள் குளிப்பதற்கும்தான்.

மிகுந்த பிரயாசையுடன் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக வைத்து நடந்தேன். நிறைய வீட்டுக் கதவுகள் பூட்டியே இருந்தன. கோபால ஐயர் கோலோச்சிய காலத்தில், எந்த வீடாவது பூட்டியிருந்தால், பெரும் அக்கறையோடு என்னைத் தேடி வந்து, “அந்த அம்மாஞ்சி நாம நினைச்சா மாதிரி சும்மா இல்லைங்காணும். அவன் பெண்டாட்டி மூணாவதா உண்டாயிருக்கா. அதான் அம்மா ஆத்துக்கு கொண்டு போயி விடப் போயிருக்கான்” என்பார். அம்மாஞ்சி மேல் கோபால ஐயருக்கு எப்போதும் ஒரு கோபம் இருந்துகொண்டே இருந்தது. அம்மாஞ்சியின் மனைவியை கோபால ஐயர் ஒரு தலையாக காதலித்ததாக ஊர்க்கதை உண்டு. ஊர்க்கதைகளுக்கா பஞ்சம். என்னைக்கூட குசும்பி என்று என் காது படவே பேசியிருக்கிறார்கள். கோபால ஐயர் செத்தபோது அந்த அம்மாஞ்சிதான் இழுத்துப் போட்டுக்கொண்டு எல்லா காரியங்களையும் செய்தான். அதைக் கோபால ஐயரிடம் சொல்ல முடியாது போன வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது.

நான் தெருவில் நடக்கிறேன் என்பதே என்னாலேயே நம்ப முடியவில்லை. தனியாக நடக்கமுடியும் என்ற நம்பிக்கை போன பிறகு நடமாட்டம் எல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான். வெளியில் இறங்கினாலே ஒப்பாரி வைப்பாள் காமாட்சி. வெளியில் பெண்ணெடுத்தால் மாமனாரை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ள மாட்டாள் என்று சுற்றம் எல்லாம் சொன்ன போதும் ஒரு காலில் நின்று விக்கிக்கு அவளை மணமுடித்துவைத்தேன். விக்கிக்கு காமாட்சிமேல் ஒரு பிரியம் இருந்தது எனக்குத் தெரியும். ஊர்வாயை அடைக்கிற மாதிரித்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறாள். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க முடிகிறதா என்ன?

சம்சுதீனின் வீடு அடையாளமே தெரியாமல் மாறிவிட்டிருக்கிறது. சம்சுதீன் இறந்த போது அவன் மனைவியிடம் சென்று துக்கம் விசாரிக்கக் கூட முடியவில்லை. நான் செல்லவேண்டுமானால் துணைக்கு யாராவது வேண்டும். விக்கி அவனே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். சம்சுதீன் இறந்த அன்று அவன் குடும்பம் இனிமேல் எப்படி வாழுமோ என்று அத்தனை வருத்தப்பட்டேன். சின்ன வயதிலிருந்தே என் கூட ரொம்பப் பிரியமாக இருந்தவன் அவன் தான். அவன் பிள்ளைகள் யாருமே ஒழுங்காகப் படிக்காமல் ஊர்சுற்றியாக இருப்பதை நினைத்து எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பான். “அஞ்சை பெத்தததுக்கு விக்கி மாதிரி ஒருத்தனைப் பெத்திருந்தா நிம்மதியா இருந்திருப்பேன்” என்று அவன் புலம்பும்போது சங்கடமாக இருக்கும். திடீரென ஒரு நாள் முஸ்தபா வேலைக்கு சவுதி போவதாக வந்து சொல்லிவிட்டுப் போனான். சம்சுதீன் உயிரோடு இருந்த காலத்தில் முஸ்தபா மேல் தனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்று என் நேர்படவே சொல்லியிருக்கிறான். “முஸ்தபா எப்போதும் வாப்பாவை எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான்” என்று சம்சுதீனின் மனைவி நூர்ஜஹான் எத்தனையோ முறை சொல்லி அழுதிருக்கிறாள். இப்போதிருக்கும் வீட்டைப் பார்க்கும்போது முஸ்தபாவை நினைத்துச் சந்தோஷப்படத்தான் தோன்றுகிறது. என்னவோ அப்போதிருந்தே விக்கி மாதிரி எனக்கு முஸ்தபா மேலும் ஒரு அன்பு. இது சம்சுதீனுக்கும் தெரியும்.

அடுத்தது முதலியார் வீடு. பெருமாள்நாயகம் முதலியாருக்கும் எனக்கும் பம்பரம் விளையாடும் காலத்திலிருந்தே ஆகாது. சரியான கோவக்காரன் அவன். பேச்சு பேச்சாய் இருக்கும்போதே கை நீட்டி விடுவான். என் அப்பாவும் அவன் அப்பாவும் எங்களுக்காக எத்தனையோ தடவை சண்டை போட்டிருக்கிறார்கள். அவனும் அதிக நடமாட்டம் இல்லாமல் படுக்கையில்தான் கிடப்பதாகக் காமாட்சி சொல்வாள். படியேற முடிந்தால் ஒரு தடவை போய்ப் பார்க்கலாம்தான். பெருமாள்நாயகத்தின் மருமகள் காமாட்சி மாதிரி இல்லை. ராங்கி. எதாவது படக்கென்று சொன்னாலும் சொல்லிவிடுவாள். நாளை விக்கி திட்டினாலும் திட்டுவான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பைத் தள்ளி வைத்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

லேசாக மூச்சு முட்டியது. கீழே விழுந்துவிட்டால் அசிங்கம். காமாட்சி திட்டமாட்டாள். ஆனால் அழுவாள். வாய்விட்டு அழுவாள். பார்க்கவே கஷ்டமாக இருக்கும். தெருக்கோடியில் இருக்கும் “மஞ்ச வீடு”க்கு எதிரில் இருந்த புளியமரத்தை வெட்டுகிறார்கள் என்று சொன்னபோது எனக்கு எதையோ இழந்த மாதிரி இருந்தது. யாருக்கும் தெரியாமல் அதைப் பார்க்க போனபோதுதான் முதல்முறையாகத் தெருவில் விழுந்தது. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. விழுந்த வேகத்தில் எழ முயன்ற போது, மீண்டும் விழுந்தேன். “ஐயோ.. தாத்தா விழுந்துட்டார்” என்று அம்மாஞ்சியின் பேரன்தான் கத்திக்கொண்டே ஓடினான். காமாட்சி அழுது புலம்பிக்கொண்டே வந்து என்னைத் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு போனாள். அன்றைக்கு முழுவதும் “தொங்கிச் செத்துருவோமா” என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அதுக்குக் கூட யாரையாவது கூப்பிட வேண்டும். பெரியநாயகம் நடமாட்டத்துடன் இருந்தாலாவது அவனைக் கேட்டிருக்கலாம்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நடையைத் தொடர ஆரம்பித்தேன். கோபாலு வீட்டைக் காலி செய்து போன பின்னர் வேறு யாரோ குடிவந்திருக்கிறார்கள். காமாட்சி சொன்ன பெயர் ஞாபகத்தில் இல்லை. இன்றைக்கு வந்தால் கேட்டு வைத்துக்கொள்ளவேண்டும். அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்குரல் கேட்டது. தெளிவாகப் புரிந்தது. “ஐயோ.. ஷானுவோட தாத்தா தனியா நடக்குறாங்கம்மா”

கைக்கும் காலுக்கும்தான் க்ஷ£ணம். கண்ணுக்கும் காதுக்குமில்லை.

இன்னும் ரெண்டு வீடு தாண்டி விட்டால் என் வீட்டுக்குப் போய்விடலாம். படியேற வேண்டும் என்று நினைத்த போதே கொஞ்சம் பயமாக இருந்தது. உட்கார்ந்து உட்கார்ந்தாவது ஏறிவிடலாம் என நினைத்துக்கொண்டபோது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் தலையில் யாரோ கட்டையால் அடித்த மாதிரி ஒரு உணர்வு. கண் கட்டிக்கொண்டு வந்து, “செத்தேன்” என்றே முடிவுசெய்துவிட்டேன். இரண்டு நிமிடங்களில் தன்நிலைக்கு வந்தேன். கண் இத்தனை இருட்டிக்கொண்டு வந்தும், நான் கீழே விழவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். என் காலுக்குக் கீழே ஒரு கிட்டிப்பில் கிடந்தது. அதை எடுக்க ஒரு சின்னப்பையன் ஓடி வந்துகொண்டிருந்ததையும் பார்த்தேன். குனிந்து நிமிர்வது அத்தனைச் சுலபமில்லை என்றாலும் அவன் வருவதற்குள் கிட்டிப்பில்லைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் பக்கத்தில் வந்து நின்றான். என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தான். தூரத்தில் இருக்கும் மற்ற இரண்டு பையன்களையும் செய்கையால் அழைத்தான். வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பையன்மார்களில் ஒருத்தனையும் அடையாளம் தெரியவில்லை. மூன்று பேரும் புதுப்பையன்கள். ஒருத்தன் ஆரம்பித்தான்.

“தெரியாம பட்டுட்டு.. குடு தாத்தா”

மற்ற பையன்மாரும் சேர்ந்துகொண்டார்கள்.

“ஆமா தாத்தா”

பையன்கள் இன்னும் கிட்டி விளையாடுகிறார்கள் என்பதைக் காணும்போதே சந்தோஷம் வந்தது. நான் ஆடிய காலத்தில் சம்சுதீன்தான் கிட்டி விளையாட்டில் பெரிய ஆள். அம்மாஞ்சி ஆட்டைக்கே வரமாட்டான். கிட்டி விளையாட்டு என்றாலே அவனுக்குப் பயம்.

நான் ” ஏண்டே இதெல்லாம் இன்னும் ஆடுதிகளா?” என்றேன்.

பையன்கள் பதில் சொல்லாமல் கிட்டியை வாங்குவதிலேயே குறியாய் இருந்தார்கள்.

“தெரியாம பட்டுட்டுங்கேன்லா.. குடு தாத்தா”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கடே மொதல்ல. வேறென்னெல்லாம் ஆடுவீக?”

“கிரிக்கெட் ஆடுவோம். இன்னைக்கு பந்து வாங்கக் காசில்லை. அதுதான்.” அவன் குரலில் எரிச்சல் கலந்திருந்தது. இன்னொருத்தன் கொஞ்சம் ரோஷக்காரன் போல.

“பதில் சொல்லியாச்சுல்ல குடு” என்றான்.

“கேள்வி முடியலை. இன்னும் இருக்குடே” என்றேன் கொஞ்சம் நமட்டுடன்.

என் கிண்டல் அவர்களுக்கு இரசிக்கத்தக்கதாய் இல்லை. அனாலும், கிட்டிப்பில் என் கையில் இருப்பதால் மையமாய்ச் சிரித்து வைத்தார்கள்.

“சரி. என்னையும் ஆட்டைக்குச் சேர்த்துக்கோங்க. நான் தர்றேன்” என்றேன்.

“ஐய.. நடக்கவே முடியலையாம். ஆட்டைக்காம்” ஊமைக்கொட்டான் என நான் நினைத்திருந்த ஒரு சிறுவன் பட்டென்று பதில் சொல்லவும், மற்றவன்கள் சிரித்தார்கள்.

“நான் நல்லா விளையாடுவேண்டே. ஒரு தடவை சான்ஸ் கொடுத்துப் பாரு.. அப்றம் பேசு” என்றேன்.

“சரி ஒரே ஒரு ஆட்டைதான். அப்புறம் கிடையாது” என்று ஒரு வழியாய் இறங்கிவந்தார்கள். கைத்தாங்கலாய் அவர்கள் விளையாடும் இடத்துக்குக் கூட்டிப் போனார்கள். எத்தனையோ வருடங்கள் கழித்து கிட்டி விளையாடப் போகிறேன். எனக்குள் சந்தோஷஅலை அடிக்க ஆரம்பித்தது.

“தாத்தா.. இந்தா கம்பு. சட்டுன்னு கெந்து. உன்னை நான் சீக்கிரம் அவுட்டாக்கிடுவேன்”

அவந்தான் கிட்டியில் பெரிய ஆள் போல. சம்சுதீன் மாதிரி. சம்சுதீன் யாரையும் சீக்கிரம் அவுட்டாக்கி விடுவான். கிட்டிப்பில்லை கேட்ச் பிடிப்பான். அல்லது கிட்டிப்பில்லை எறிந்து தாண்டை அடித்துவிடுவான். அல்லது கிட்டிப்பில் இருக்கும் இடத்தில் இருந்து தாண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை லாங் ஜம்ப் மாதிரி தாண்டிவிடுவான். இந்த மூன்றில் எது செய்தாலும் ஆட்டக்காரன் அவுட். இப்போதெல்லாம் என்ன விதி என்று தெரியவில்லை.

“ஏண்டே இதைக் கம்புன்னா சொல்தீய? நாங்க தாண்டும்போம்”

“நாங்க அப்படியும் சொல்வோம்” என்றான் ரோஷக்காரன்,. ஒரு விதக் கிண்டல்தொனியுடன்.

“சரி.. சும்மா விளையாடுங்கன்னு சொன்னா என்னடே அர்த்தம்? ரூல்ஸ் சொல்ல வேணாமா?”

ஊமைக்கொட்டான் ஒப்புவிக்க ஆரம்பித்தான்.

“நீங்க கெந்தும்போது நாங்க கேட்ச் பிடிச்சா அவுட். இல்லைனா கிட்டிப் பில்லை எறிஞ்சு கம்பை அடிச்சாச்சுன்னா அவுட். இல்லைனா ஓடி வந்து கிட்டிப்பில் இருந்த இடத்துலேர்ந்து கம்பு இருக்கிற இடத்துக்குத் தாண்டுவோம். சரியா தாண்டியாச்சுன்னா நீங்க அவுட்” என்று சொல்லிவிட்டு ரோஷக்காரனைப் பார்த்து “சரிதாம்ல?” என்றான்.

பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை.

” சரி ஒரு வேளை இந்த மூணும் நீங்க செய்ய முடியலைனா…?”

” நீங்க விளையாடலாம். மூணு சான்ஸ். அதுக்குள்ள உயிரடியாவது அடிச்சிடனும்…”

பொறுமை இழந்து போன ரோஷக்காரன், “தாத்தா.. ஆட்டயப் பத்தி உங்களுக்குத் தெரியுமா தெரியாதா ? ” என்றான். இனியும் சந்தேகம் கேட்டால் ஆட்டைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டால், ரொம்ப நாள் கழித்துக் கிடைத்த சந்தோஷம் பூர்த்தியாகாமல் போய்விடும் என்று தோன்றியதால் அமைதியாகிவிட்டேன்.

“சரி.. ஒரு தடவை நீ ஆடு. அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் நான் ஆடறேன்” என்றேன்.

ரோஷக்காரன் அலட்சியமாய் கிட்டியை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு கம்பையும் எடுத்துக்கொண்டு ரொம்ப ஸ்டைலாக நடந்து, சாண் நீளத்திற்குத் தோண்டப்பட்டிருந்த குழிக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு…

“ரெடியா..? கெந்தவா?”

“சீக்கிரம் கெந்துல.. தாத்தாவுக்கு காமிக்கிறதுக்குத்தான.. அவரை சீக்கிரம் அனுப்பிட்டு நாம ஆரம்பிக்கலாம்” என்றான் மூன்றாமவன்.

நீளமான குழிக்குப் பக்கவாட்டாய் குச்சியை வைத்து, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு, குனிந்துகெந்தத் தயாரானான்.

“கெந்தப் போறேன்.. கெந்தப் போறேன்..”

“கெந்துல.. உயிரை வாங்காத” – மூன்றாமவன்.

பின்புறத்தை இடதும் வலதுமாய் இரண்டு புறம் அசைத்துவிட்டு, அழுத்தி ஒரு கெந்து கெந்தினான். கிட்டிப்பில் காற்றில் பறந்து உயரே சென்று கீழே வந்து விழுந்தது. இத்தனை தூரம் சம்சுதீன் கூடக் கெந்தியதாய் நினைவில்லை எனக்கு. மூன்றாமவன் கிட்டிப்பில் விழுந்த இடத்தில் இருந்து, தாண்டைப் பார்த்துக் குறி வைத்து எறிந்தான். ஆனால் அடி படவில்லை. ரோஷக்காரன், “என்னயவே அவுட்டாக்கப் பாக்கியா நீயி! இருலே உனக்கு நான் யாருன்னு காட்டுதேன்” என்ற வசனம் பேசிக்கொண்டு தாண்டை எடுத்துக்கொண்டு கிட்டியை அடிக்க எத்தனித்தான்.

எந்த ஓரத்தில் கிட்டி தூக்கிக்கொண்டு நிற்கிறது எனக் குறிபார்த்து, தரையில் மூன்று முறை ஸ்டைலாய் கோடு போட்டுவிட்டு, அடிக்க, கிட்டிப்பில் வானத்தில் எழும்பியது. அது கீழே விழுமுன் தொடர்ந்து தட்ட, “ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு..சே.. எட்டுத்தானா.. பன்னெண்டாவது அடிக்கணும்னு நினைச்சேன்” என்றான். நான் ஆடிய காலத்தில் மூவடி அடிப்பதே பெரும் சாதனை. இவன் சர்வ சாதாரணமாய் எட்டடி அடிக்கிறான்.

இரண்டாவது முறை கிட்டிப்பில் காற்றில் எழும்ப வில்லை. மூன்றாவது முறை கொஞ்சம் எழும்பியது, ஒரே அடியாக இழுத்து அடித்தான். தூரத்தில் சென்று விழுந்தது.

மூன்றாமவன் ” எத்தனை வேணும்? ” என்றான்.

ரோஷக்காரன் ரொம்ப யோசனைக்கு பின் நூத்தம்பது என்றான். ” சரி எடுத்துக்கோ” என்றான் மூன்றாமவன். ஊமக்கோட்டன் இடையில் நுழைந்து, “இருக்காதுல. அளந்து பார்ப்போம்” என்றான். “சரி அள” என்றான் ரோஷக்காரன். ஊமக்கோட்டன் தாண்டை வைத்து அளந்தான். தாண்டின் நீளத்தில், கிட்டிப்பில் இருக்கும் இடத்தில் இருந்து, குழிக்கு நூற்று இருபது தடவைதான் வந்தது. ஊமக்கோட்டான் ரொம்ப உற்சாகமாகி, “நாஞ் சொன்னேம்லா” என்றான்.

ரோஷக்காரன் “ரொம்ப அல்ட்டிக்காதடே..”என்றான்.

“ஆட்டைப் போச்சா நம்பர் போச்சா”

கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் ரோஷக்காரன் “நம்பர் போச்சு” என்றான். அவன் சொன்ன விதம் படு ஸ்டைல். மீண்டும் அவன் கெந்தப் போனான்.

“நான் எபப ஆட?” என்றேன்.

“தாத்தா ஒரு தடவதான கேக்காரு.. அவர் விளையாடிட்டுப் போவட்டும்” என்றான் மூன்றாமவன். ஒரு வழியாக தாண்டு என் கைக்கு வந்தது.

என்னால் குனிந்து நின்று கெந்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஆசை விடவில்லை. செத்தாலும் சரி என்ற வீராப்பு வந்துவிட்டது எனக்கு. கிட்டிப்பில்லை குழிக்கு பக்கவாட்டில் வைக்காமல் நீளவாக்கிலேயே வைத்தேன்.

“இது ஆட்டையில கிடையாது. ராக்கெட்லாம் விடக்கூடாது” என்றான் ஊமக்கோட்டான்.

“சரி விடுல. தாத்தா எத்தனை தூரம் கெந்துதாருன்னு பாக்கலாம்” என்றான் ரோஷக்காரன்.

நான் பின் பக்கமாய்த் திரும்பி நின்றேன். மூச்சு முட்டியது. ஆசுவாசப்படுத்த கொஞ்ச நேரம் அப்படியே நின்றேன். மனதுக்குள் சம்சுதீன், பெரியநாயகம் எல்லாம் வந்து போனார்கள்.

“சீக்கிரம் கெந்து தாத்தா”

மெல்லக் குனிந்த போது, முதுகின் அடிப்பாகத்தில் இருந்து ஒரு வலி மேலே பரவியது. கண்ணைக் கட்டிக்கொண்டு வந்த மாதிரி கூடத் தோன்றியது. அதே மாதிரி அதிக நேரம் இருந்தால், மயக்கம் வந்தாலும் வரலாம் என்று தோன்றவே, சிரத்தையில்லாமல் ஒரு கெந்து கெந்தினேன். கிட்டிப்பில் காற்றிலெல்லாம் பறக்கவில்லை. தரையை உரசிக்கொண்டு கொஞ்ச தூரம் சென்று அமைதியானது. இரண்டு கால்களின் வழியாக உலகைப் பார்த்து நாளாயிற்று. பையன்மார்கள் தலைகிழாகச் சிரித்தார்கள்.

“ஹ்ம். இம்புட்டுதானா? இதுக்குத்தான் இம்புட்டு நேரமா?” என்றான் ரோஷக்காரன். நான் மெல்ல நிமிர்ந்தேன். உடலின் பிடிப்புகளில் இருந்து சொடக்கு விழும் சத்தங்கள் கேட்டது.

” என்ன தாத்தா.. ஓடி வந்து தாண்டிரவா? ” கேட்டுவிட்டுச் சிரித்தான் ரோஷக்காரன். பதிலேதும் சொல்லத் தோன்றவில்லை. அப்படியே எங்கேயாவது கொஞ்ச நேரம் உட்கார்ந்தால் போதும் எனத் தோன்றியது.

“போனா போவட்டும். ஒரு தடவை விட்டுக்கொடுல.. என்ன அடிக்கார்னு பாப்போம்” என்றான் மூன்றாமவன். சரி என்று சொல்லிவிட்டு, என்னை அவுட்டாக்காமல் விட்டுக்கொடுத்தான்.

“தாத்தா.. ஐயோபாவம்னு விட்டுக்கொடுத்துருக்கேன். நல்லா அடிச்சு பாயிண்ட் எடுக்கனும் என்ன?”

“இல்லடே.. என்னால முடியலை. ஆட்ட போதும். நீங்க விளையாடுங்க”

“தாத்தா.. சும்மா ஆடு தாத்தா.. ஐயோ பாவம்னு அவன் விட்டுக்கொடுத்திருக்காம்லா” என்று வக்காலத்து வாங்கினான் ஊமக்கோட்டான். எனக்கும் ஆசை வந்தது. திக்கித் திணறி நடந்து கிட்டிப் பில் அருகில் சென்றேன். இன்னொரு முறை குனிய வேண்டும் என நினைத்தபோது வந்த பயத்தை ஒத்தி வைத்தேன்.

தாண்டைக் கையில் வைத்து, கிட்டிப்பில் எந்த நுனி தூக்கி இருக்கிறது எனப் பார்த்தேன். ஒரு நுனியும் வாகாய் இல்லை. ரொம்ப யோசனைக்குப் பின் அதிகம் குனியாமல், ஒரு நுனியை அடித்தேன். அது மேலெழும்பாமல், மண்ணில் உள்ளே புதைந்துகொண்டது.

“தாத்தா ஒரு சான்ஸ் போயிடுச்சு. இன்னும் ரெண்டு சான்ஸ்தான் இருக்குது” என்றான் மூன்றாமவன்.

இரண்டாம் முறை அடித்த போதும் கிட்டிப்பில் காற்றில் எழும்பவே இல்லை.

“ஐயோ.. உயிரடியாவது அடி தாத்தா.. இல்லைனா அவுட்..”

கையின் மணிக்கட்டில் வலி விண்ணென்று தெரித்தது. கடைசியாய் ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று அடிக்க, கிட்டிப்பில் காற்றில் எழும்பி லாவகமாய், தாண்டில் மாட்ட, விசுக்கென்ற சத்தத்துடன் பறந்தது. அதை நானே எதிர்பார்க்கவில்லை.

“தாத்தா பரவாயில்லைல” என்றான் ஊமக்கோட்டான்.

“ஆமால” என்றனர் மற்ற இரண்டு பையன்மார்களும்.

“சரி தாத்தா உனக்கு எத்தனை பாயிண்ட் வேணும் கேளு!”

நான் “நூறு”என்றேன்.

மூன்றாமவன் “ஸ்தூ..” என்று சொல்லிவிட்டு “தாத்தா.. நூறு இருக்காது. அம்பதுதான் இருக்கும். அம்பது கேளு” என்றான். அவனுக்கு என்னைப் பிடித்துவிட்டது போல.

“இல்லை. நூறுதான்” என்றேன். “வேணும்னா அளந்து பாத்துக்கோ”

ரோஷக்காரன் அளந்தான். அம்பத்தெட்டு தாண்டுகள்தான் வந்தது.

“நாந்தாஞ் சொன்னேம்லா..” என்றான் மூன்றாமவன். அவன் கண்ணில் பரிதாபம் தெரிந்தது.

“சரி ஆட்ட போச்சா? நம்பர் போச்சா?” என்றான் ஊமக்கோட்டான்.

நான் “ஆட்ட போச்சு” என்றேன்.

***

இந்தக் கதை சிறப்பு அம்பலத்தில் வெளியாகியது.


 

***

Share

மழை நாள்

ஒரு காதல் கதை
—ஹரன் பிரசன்னா

னக்குப் பாண்டிமாரோடு இருந்த கோபங்கள் எல்லாம் இப்படிச் சடாரென நீர்த்துப் போகும் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவேயில்லை. இத்தனை நாள் தனக்கிருந்த இனவெறியால் சிந்திக்க முடியாமல் போனதை நினத்து வருந்தும் வேளையில் நிஜத்தைத் தெரியவைத்தச் சொர்ணலதாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டான். நன்றி சொல்லத் தேவையில்லை என்றது அவனது உள்மனம். மூன்றாம் நபர்களுக்குள் இருக்கவேண்டிய
ஒரு சொல் அவர்களுக்கிடையில் வருவதை அவன் அறவே விரும்பவில்லை.

கிருஷ்ணன் பிள்ளை, தனது காதலை சொர்ணலதாவிடம் சொல்லி மூன்று நாள்தான் ஆயிருக்கும். அவளும் நாணிக் கோணி வெட்கி அதை ஏற்றுக்கொண்ட நிமிடம் சடாரென வானத்தில் நீந்தி, மேகத்தைக் கிண்டல் செய்து விட்டு, சூரியனை முறைத்துவிட்டு, நிலவிடம் சேதி சொல்லிவிட்டுத் தரைக்கு வருவதற்குள் சொர்ணா கம்ப்யூட்டர் சென்டரை விட்டு, வெட்கத்தையும் சேர்த்தெடுத்துக்கொண்டு, ஓடிப்பொயிருந்தாள். சொர்ணலாதவை கடந்த மூன்று நாளாய் சொர்ணா என்றுதான் கூப்பிட்டான் கிருஷ்ணன் பிள்ளை. அதை இரசித்தாள் சொர்ணா என்பதை அவன் அறிந்தபோது இனித் தொடர்ந்து அப்படியே கூப்பிட முடிவு செய்தான். அவன் என்ன சொன்னாலும் அவள் சிரித்தாள். அவர்களுக்குள் மூன்று வருடங்கள்.. இல்லை இல்லை… முப்பது வருடங்கள் காதல் இருந்ததாய்த் தோன்றியது அவனுக்கு.

கலமசேரியில் மலையாளக் குட்டிகளை சைட் அடித்துக்கொண்டு தனது இளவயதைக் கழித்துக்கொண்டிருந்த கிருஷ்ணன்பிள்ளைக்குக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. போயும் போயும் பாண்டிமாரோடு வேலை பார்க்கப்போறியா என்ற கூட்டுக்காரர்களின் கிண்டலையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தமிழ் மண்ணை மிதித்தான். அன்று அவனிருந்த மனநிலையில் அவனிடம் யாராவது நீ ஒரு தமிழ்ப்பெண்ணைத்தான் மணக்கப்போகிறாய் என்று சொல்லியிருந்தால், சொல்லியது யாரானலும், காறி உமிழ்ந்திருப்பான். அதற்குக் காரணம் இருந்தது. அவன் அதுவரை சொர்ணாவைச் சந்தித்திருக்கவில்லை.

மலையாளி கொலையாளி; மலைப்பாம்பை நம்பினாலும் மலையாளத்தானை நம்பாதே என்று எல்லோரும் அவன் காது படப் பேசுவதெல்லாம் பழகிப் போய், எல்லாம் தன் தலையெழுத்து என்று மனம் நொந்த ஒரு நிமிடத்தில்தான் சொர்ணலாதவைச் சந்தித்தான்.
அவள் கண்கள் பேசுவதைக் கண்டு கொஞ்சம் வசமிழந்த மனசை அதட்டு உருட்டி – ஆ குரங்கி தமிழானு – அடக்கி வைத்தான். அவள் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து அளந்து கொணட்டி கொணட்டிப் பேசினாள். ஏஸியும் ஏர் ·ப்ரெஷ்ணரின் மணமும் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்கள் நிறைந்த அறையும் அவளை படபடப்பாக்கியிருக்கலாம். தினம் தினம் எத்தனை பெண்களும் பையன்களும் இப்படி வந்து போகிறார்கள்..

“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”

அவளின் ஆங்கிலம் கண்டு கிருஷ்ணன்பிள்ளை சிரித்துக்கொண்டான். ஆனால் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது. உடனே தமிழன்மார்கள் எல்லாம் லோரி என்றும் ஸோரி என்றும் கோப்ம்பெனி என்றும் ஆரம்பித்துவிடுவார்கள் என அவனுக்குத் தெரியும். ஒருவழியாய் தனக்குத் தெரிந்த தமிழில் சொல்லி அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டு அவளைச் சேர்த்துக்கொண்டான். கிருஷ்ணன் பிள்ளை நினைத்திருந்தால் சொர்ணலதாவுக்கு கொஞ்சம் கூடுதல் டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாம்தான். தமிழச்சிக்குப் போய் கொடுப்பானேன் என விட்டுவிட்டான்.

இபோது கிருஷ்ணன் பிள்ளைக்கு, அன்று டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. அவளைக் கண்ட முதல் நாள் முதல் நேற்று முதல்நாள் சொன்ன ஐ லவ் யூ வரைக்கும் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக்கொண்டான்.

“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”
“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”எனத் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். இன்று உறங்குவோம் என்று கிருஷ்ணன் பிள்ளைக்குத் தோன்றவில்லை.

கிருஷ்ணன்பிள்ளை காதல் அவனை இந்தப் பாடு படுத்தும் என எதிர்பார்க்கவில்லை. மிகுந்த பிரயாசைக்குப் பின் தூங்க ஆரம்பிக்கும்போது கனவில் சொர்ணா வந்து, “என்ன தூக்கம் வரலியா?”என்பாள். இவன் உடனே, “நீ பறையுன்ன தமிழ் எத்தற சுகமானு அறியோ?”என்பான். இப்படி மாறி மாறி ஆளுக்கொரு பாஷயில் கதைத்து முடிக்கும் போது காலை விடிந்திருக்கும். இல்லையென்றால் கனவில் அவள் வந்து “அஞ்சனம் வெச்சக் கண்ணல்லோ மஞ்சக் குளிச்ச நெஞ்சல்லோ”என்பாள். இவன் பதிலுக்கு “இனிக்குந் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே”என்பான். இப்படியே பாடிப் பாடி காலை விடிந்திருக்கும்.

இன்றைக்கு காலையில் நேர்ந்த அந்தச் சம்பவத்துக்குப் பின் , இனித் தூங்கக்கூட முடியாது என்று தோன்றியது கிருஷ்ணன் பிள்ளைக்கு. அவன் இன்னும் தன் புறங்கையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். இதுவரை இல்லாத ஒரு மிருதுத்தன்மை அவனது புறங்கைக்கு எப்படி வந்தது என்ற ஆச்சரியம் இன்னும் அடங்கவில்லை. காலையில் கிருஷ்ணங்கோவிலுக்குப் போயிவிட்டு வரும்போது தெரியாத்தனாமாக சொர்ணாவின் புறங்கையில் அவன் புறங்கை பட்டுவிட்டது. அதிர்ந்து போனான் கிருஷ்ணன் பிள்ளை. சொர்ணாவும் ஒரு நொடி அதிர்ந்தாள். பின் வெட்கப்பட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை தான் ஒரு கவிஞனாய் இல்லாமல் போய்விட்டோமோ என்று முதன்முறையாக வருந்தினான். இருந்திருந்தால் அப்படியே காதல் ரசம் சொட்டச் சொட்ட அந்த நிமிடத்தையும் சொர்ணாவின் வெட்கத்தையும் வார்த்தைகளில் கொட்டியிருப்பான்.

கையின் புறங்கையை முகர்ந்து பார்த்தான். எங்கிருந்தோ காற்றில் “சந்தனத்தில் கடஞ்செடுத்தொரு சுந்தரி சில்பம்”என்ற வரிகள் மிதந்து வந்தது. சொர்ணா வெள்ளைப் பட்டுடுத்தி சந்தனக் கீறலிட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை வெள்ளைப் பட்டில் முண்டுடுத்தி மோகமாய் அவளை நெருங்கினான். அவள் “வேண்டாம்.. வேண்டாம் “எனச் சிணுங்கினாள். அவளின் சிணுங்கல் அவனை மேலும் தூண்ட… அந்த நேரத்தில் போன் ஒலிக்காமல் இருந்திருந்தால் அவளை முத்தமிட்டிருப்பான். ஏக எரிச்சலில் போனை எடுத்தான். கிருஷ்ணன்பிள்ளையின் அம்மா அழுதுகொண்டே அவனது பாட்டி இழுத்துக்கொண்டிருப்பதாய்ச் சொன்னாள். கிருஷ்ணன் பிள்ளைக்கு ரொம்ப வருத்தம் மேலிட்டது. அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பாட்டி இழுத்துக்கொண்டிருக்கிறாள் என்ற கேட்டவுடனேயே கலமசேரிக்குப் போய் அவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது அவனுக்கு.

கிருஷ்ணன் பிள்ளைக்கு தலையைச் சுற்றியது. அப்பாவிடமிருந்த கம்யூனிச இரத்தம் அவனுக்குள் இல்லையென்பது அவனுக்குத் தெரியும். அந்த இரத்தம் அப்படியே கிருஷ்ணன் பிள்ளைக்கும் வந்திருந்தால் இப்படி அவசியமில்லாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ள நேர்ந்திருக்காது. அவனது கொச்சச்சன் சுகுந்தன்நாயரை நினைத்தாலே கிருஷ்ணன் பிள்ளைக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவன் வீட்டில் சொர்ணா விஷயம் தெரிந்த ஒரே நபர் சுகுந்தன் நாயர் மட்டுமே.

சின்ன வயதிலேயிருந்து கொச்சச்சன் மேலே கிருஷ்ணன்பிள்ளைக்கு பாசம் அதிகம் இருந்தது. சுகுந்தன்நாயருக்கும் கிருஷ்ணன்பிள்ளை மேலே வாஞ்சை ஜாஸ்தி. தனது முதல் பையனாகத்தான் அவனைப் பார்த்தார் சுகுந்தன் நாயர். அவனை “மோனே”என்று விளிக்கும்போதே அவரின் நிஜமான வாத்சல்யம் அதில் தெரியும். அந்தச் சுதந்திரம் தந்த தைரியத்தில்தான் கிருஷ்ணன்பிள்ளை தன் பிரேம விஷயத்தை நாயரிடம் சொன்னதும்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் நாயர், “இது சரியா வராது மகனே “என்றார். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுகுந்தன் நாயர் இப்படி நிறைய விஷயங்களில் குறி சொல்வதுமாதிரி ஏதாவது உளறி வைப்பார். அதைக் கேட்கும்போது கிருஷ்ணன் பிள்ளைக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வரும். மரியாதை காரணமாயும் அவர் மேல் வைத்த உண்மையான பாசம் காரணமாயும் அதை அப்படியே விட்டுவிடுவான். நாயர் தன் காரியத்திலேயே இப்படி ஏதாவது சொல்லி வைப்பார் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கலவரமடைந்து போனான்.

“அது என்ன கொச்சச்சா? அப்படிச் சொல்லிட்டீங்க”என்றான் கிருஷ்ணன் பிள்ளை. நாயர் பெரிதாய் விளக்கம் ஒன்றும் கொடுக்கவில்லை. “நம்ம குடும்பத்துக்கு நல்லதில்லை. இது சரியாகாது மோனே”என்று மீண்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார்.

கிருஷ்ணன்பிள்ளை இதைக் கேட்ட சில தினங்களுக்குக் கொஞ்சம் வருத்தமாய் இருந்தான். பின் ஒரு தடவை சொர்ணாவைப் போனில் கூப்பிட்டுப் பேசிய பின் கொச்சச்சனையும், அவர் சொன்ன விஷயங்களையும் மறந்துபோய்விட்டான். ஆனால் நேற்று நடந்த சம்பவம் அவனை மீண்டும் கொஞ்சம் கலவரப்படுத்தியிருந்தது.

திருவனந்தபுரம் ரோட்டில் சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பிடித்துக்கொண்டது. பக்கத்திலிருக்கும் ஒரு பள்ளி வளாகத்தில் ஒதுங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமையான காரணத்தால் பள்ளியில் யாருமில்லை. சுற்றிலும் மரங்கள் பசுமையாய் சிலிர்த்துப் போயிருந்தது. மழையின் மண்வாசனையும் தூறலும் சொர்ணாவின் அருகாமையும் கிருஷ்ணன்பிள்ளைக்கு ஒரு கிளர்ச்சியை தந்துவிட்டது. சொர்ணாவும் அதே நிலையில்தான் இருந்தாள். சொர்ணாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. தனிமையும் மழையும் பலப்பல எண்ணங்களைக் கிளற மெல்ல முன்னேறி அவள் கைகளைப் பற்றினான். கையை உதறுவாள் என்று எதிர்பார்த்திருந்த கிருஷ்ணன்பிள்ளைக்கு அவள் அப்படிச் செய்யாதது தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் முன்னேறினான். மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு நீர்த்துளி உதட்டில் இருந்துகொண்டு கிருஷ்ணன்பிள்ளையின் உயிரை வாங்கியது. அவள் கைகள் ஒருவித நடுக்கத்தில் இருப்பதை உணர்ந்த கிருஷ்ணன்பிள்ளை பிடியை இறுக்கினான்.

எங்கிருந்தோ வந்த ஆடு ஒன்று மே என்று கத்தியபடி அவர்களைக் கடந்து கொண்டு ஓடியது. மழைக்குப் பயந்து அதுவும் ஒதுங்கியிருக்கவேண்டும். ஆட்டின் குரல் சொர்ணாவை தன்நிலைக்குக் கொண்டுவந்தது. மென்மையாக கிருஷ்ணன்பிள்ளையின் பிடியைத் தளர்த்திவிட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்றாள். கிருஷ்ணன்பிள்ளை ஆட்டைத் துரத்திக்கொண்டு ஓடினான். சொர்ணலதா அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

மழை வெறித்த பின்பு தன் அறைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்பிள்ளை எப்போதும் போல் வீட்டிற்குப் போன் செய்தான். சுகுந்தன் நாயருக்கு நெஞ்சுவலி வந்ததாயும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாயும் அவன் அம்மா வருத்தம் கலந்த குரலில் சொன்னாள். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. “இது சரியா வராது”என்று சுகுந்தன் நாயர் சொல்வது போலத் தோன்றியது அவனுக்கு.

இப்போது ஒன்றன் பின் ஒன்றாய் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்ததில் சுகுந்தன் நாயர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று தோன்றத் தொடங்கியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. அவளது புறங்கை மேலே பட்ட அன்றுதான் அவனது முத்தச்சிக்கு மேல் சரியில்லாமல் போனது. பகவதி புண்ணியத்தில் அவள் பிழைத்துக்கொண்டாள். நேற்று சொர்ணாவை மீண்டும் தொட்டபோது கொச்சச்சனுக்கு நெஞ்சு வலி வந்தது.

இப்படியெல்லாம் கண்மூடித்தனமாய் யோசிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டாலும் இந்த எண்ணங்களை, கிருஷ்ணன்பிள்ளையால் களைய முடியவில்லை. நெடு நேரத் தீவிர யோசனைக்குப் பின் அயர்ச்சியில் அப்படியே உறங்கிப் போனான்.

அதிகாலையிலேயே சொர்ணா கூப்பிடுவாள் என்று எதிர்பார்க்காத அவனுக்கு, அவள் குரலைக் கேட்டதும் சந்தோஷமாய் இருந்தது. அவளுடன் பேச ஆரம்பித்தக் கொஞ்ச நேரத்திற்கெல்லாம், நேற்று இரவு தானாய் ஏற்படுத்திக்கொண்ட கற்பனைகள் எத்தனை மோசமானவை என்று அவனுக்குப் புரிந்தது. இனி அப்படி நினைக்கக்கூடாது என்பதை ஒரு சபதமாகவே எடுத்துக்கொண்டான்.

ரொம்பத் தயங்கித் தயங்கி சொர்ணா கேட்டாள்.

“இன்னைக்கு ·ப்ரீயா இருந்தா படத்துக்குப் போகலாம். எங்க வீட்டுல எல்லாரும் மதுரைக்குப் போயிருக்கிறாங்க. எனக்கு படிக்க வேண்டியிருக்குதுன்னு நான் வரலைனு சொல்லிருக்கேன். இன்னைக்கு உங்களுக்கு டைம் இருக்குமா?”

கிருஷ்ணன் பிள்ளைக்கு நம்பவே முடியவில்லை. எத்தனை நாளாய்க் கெஞ்சியிருப்பான். ஒருநாள் கூட மசியாத சொர்ணா, தானே அழைத்து சினிமாவுக்குப் போகலாமா என்கிறாள். அந்தச் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளில்லை அவனிடம்.

“செரி..”என்றான். அவன் குரலில் இருந்த சந்தோஷம் அவனுக்கே தெரிந்தது.

திரையில் காட்சிகள் வேகவேகமாய் மாறிக்கொண்டிருந்தன. கொஞ்சம் புரிந்தும் நிறைய புரியாமலும் படத்தை இரசித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. சொர்ணாவின் அருகாமை அவனுக்குச் சொல்லமுடியாத சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இருவரின் கைகளும் அருகருகில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் சொர்ணாவின் கையைப் பிடிக்கலாம். அவள் ஒன்றும் உதறி விட மாட்டாள் என்று தெரியும் அவனுக்கு. உதறவேண்டுமானால் மழைக்கு ஒதுங்கிய நாளிலேயே உதறியிருக்கலாம். கையை இன்னும் இரண்டடி நகர்த்தினால் சொர்ணாவின் மிருதுவான கைகளைப் பற்றி விட முடியும்.

இப்படி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் லேசான வெப்பத்தோடு சொர்ணாவின் கைகள் தன் கைகள் மீது பரவுவதைக் கண்டு அவளைப் பார்த்தான். அவனும் அவள் கையை
பலமாகப் பற்றிக்கொண்டான். கைகளை மெல்ல இறுக்கினான்.

தோளை அவள் பக்கமாகச் சாய்த்து அவள் முகத்தை மிக அருகில் இருந்து இரசித்தான். அவள் அவன் கைகளை மேலும் மேலும் இறுக்கினாள். இன்னும் கொஞ்சம் வசமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கொஞ்சம் நெருங்கி, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளின் கன்னங்களில் உதடுகளால் லேசாய் முத்தமிட்டான். அவள் கண்களைத் திரைகளிலிருந்து விலக்கவே இல்லை. அதே சமயம் கிருஷ்ணன்பிள்ளையின் கைகளை இன்னும் இறுக்கினாள்.

கைகளை மெல்ல விடுவித்துக்கொண்டான் கிருஷ்ணன்பிள்ளை. அவளின் முகத்தை அவனை நோக்கித் திருப்பினான். அவளது சுவாசம் அவன் மீது வெம்மையாகத் தாக்கியது. அவளின் கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. கண்கள் பாதி சொருகிய நிலையில் இருப்பதாகப் பட்டது கிருஷ்ணன்பிள்ளைக்கு.

விரல்களால் சொர்ணாவின் உதடுகளை மெல்ல வருடினான். அவளது கழுத்து நரம்புகள் புடைத்து அடங்குவது, அந்த மங்கலான வெளிச்சத்தில் கூடத் தெளிவாய்த் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை உதடுகளை வருடினான். முகத்தை முன்னே இழுத்து, மிக அழுத்தமாய் உதடுகளில் முத்தமிட்டான் கிருஷ்ணன்பிள்ளை. சூர்யா யாரையோ சுட்டுக்கொண்டிருந்தபோது சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தார்கள்.

படம் முடிந்து வரும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒரு தடவை ஸாரி சொல்லிவிடலாமா என்று கூடத்தோன்றியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. ஆனாலும் அமைதியாய் இருந்துவிட்டான்.

அவளை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டுத் தானும் பஸ் பிடித்து ரூமிற்குள் நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. வேகமாய் எடுக்கப் போனான். கட்டாகி விட்டது. யார் அழைத்திருப்பார்கள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. சொர்ணா அழைத்திருப்பாளோ? இருக்காது. இப்போதுதானே போனாள். ஒருவேளை.. கலமசேரியிலிருந்து அழைத்திருப்பார்களோ.. இப்படித் தோன்றிய போதே கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது அவனுக்கு. இன்றைக்கும் ஏதாவாது நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. நேற்றுதான் கொச்சச்சனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாய் அம்மா சொன்னாள். ஒருவேளை அவருக்கு ஏதாவது…

மீண்டும் போன் ஒலித்தது. அவனுக்கு அதை எடுக்கவே பயமாய் இருந்தது. “நம்ம குடும்பத்துக்கு இது சரியாகாது”என்று கொச்சச்சன் சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. இந்த முறையும் எதாவது நேர்ந்திருந்தால் என்ன செய்வது என்றே கிருஷ்ணன் பிள்ளையால் யோசிக்க முடியவில்லை. மனதை அடக்கிக்கொண்டு போனை எடுத்தான்.

“ஹலோ”

“சொரணா பேசறேன்”

கொஞ்சம் நிம்மதியானது கிருஷ்ணன் பிள்ளைக்கு.

“ம் பறா..”என்றான் கிருஷ்ணன் பிள்ளை. விசும்பல் சத்தத்திற்கிடையில் சொர்ணா சொன்னாள்.

“ஏதோ ஆகிஸிடெண்ட்டாம். அப்பாவை சீரியஸாக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறாங்க”என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள்.

000

Share

மரணம்

சூன்யத்தின் பார்வை சூன்யம் நிறைந்ததாக, கொடூரமானதாக இருக்கிறது. அதன் கண்கள் தாங்கமுடியாத வெம்மையை உமிழ்கின்றன. மனதை சுழற்றியடிக்கிறது ஊளையிடும் பெருங்காற்று.

காந்தி ஓ வென்று பெருங்குரலெடுத்து அழுகிறாள். பெத்த வயிறு என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெருப்பின் ஜ்வாலை காற்றில் நீந்துகிறது.

நெருப்பின் மீதான என் பார்வை விலகவே இல்லை. என் கண் எரிகிறது. சூடாகிறது. நெருப்புக்குச் சுடுமா? சுட்டாலும் அது நெருப்புக்கு இஷ்டமானதாய் இருக்கவேண்டும். எதையிட்டாலும் உள்வாங்கி எரியும் நெருப்புக்குப் பேதமில்லை. அதன் சிவந்த நாக்கின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்தில் இறந்து போன பாலா மாதிரியும் கூட. எனக்கு ஜில்லிடுகிறது. என்னையறியாது கண்கள் பனிக்கின்றன.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது.

என் நினைவுக்குத் தெரிந்து நேர்ந்த முதல் மரணம் பாட்டியினுடையது.

தரையில் விழாமல் பம்பரத்தைக் கையிலெடுத்து எல்லோருக்கும் என் பராக்கிரமத்தைக் காட்டிக்கொண்டிருந்தேன். தெருவில் நிறைய சுள்ளான்கள் என்னைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாளாய் வீட்டில் ஏகப்பட்ட ள்கள். பாட்டிக்கு இழுத்துக்கொண்டிருக்கிறது. இப்போ அப்போ என்று எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டி எமகாதகி. சாவதாயில்லை. எலும்பும் தோலுமாய் இருக்கும் பாட்டியைக் கண்டாலே பிடிக்காது எனக்கு. காய்ந்து போன மார்புகளை ரவிக்கையால் அடிக்கடி மூடிக்கொள்வாள். அவென் ஏம் பேராண்டி என்று என்னை இறுக்கக் கட்டிக்கொண்ட நாள்களும் உண்டு. இப்போது இழுத்துக்கொண்டு கிடக்கிறாள். எல்லோரின் கவனமும் பாட்டியின் சாவு மேலேயே இருந்ததால் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரண்டு நாளாய் யாரும் என்னைப் படிக்கச் சொல்லவில்லை. நான் பம்பரமும் கையுமாக அலைவதை என் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாலும் சும்மாயிருந்தாள். வந்தவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து, பாட்டியின் இல்லாத மேன்மைகளைத் தேடிப்பிடித்து சொல்வதற்குத்தான் அம்மாவிற்கு நேரமிருந்தது. பாட்டி இன்னும் இரண்டு நாள் இழுத்துக்கொண்டிருந்துவிட்டு பின் செத்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

என் நினைப்பில் இடியைப் போட்டுவிட்டு அன்று இரவே பாட்டி செத்தாள். ஒப்பாரிக்கு ள் சொல்லி அனுப்பினார்கள். நான்கைந்து பொம்பளைகள் வந்து ஒரு வட்டமாகக் கூடி அமர்ந்து மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். ஒருத்தி பாட்டியை இந்திராணி என்றாள். இன்னொருத்தி ஒரு படி மேலே போய் உலகத்துக்கே படியளந்த த்தா என்றும் சொன்னதாக நினைவிருக்கிறது. எவளோ என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவளும் ஒப்பாரி இடவந்த மற்ற பொம்பளைகள் போலவே ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. னால் அவளின் மார்புகள் பாட்டியினுடையதைப் போல் உலர்ந்தில்லாமல் செழுமையானதாக இருந்தன. அவளிடமிருந்து வேர்வையும் மண்ணெண்ணையும் கலந்த ஒரு வீச்சம் எழுந்தது. போயும் போயும் மண்ணெண்ணெயைக் குடிப்பார்களா என்ன? எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

பாட்டியின் மரணத்தில் அன்று மனதுக்குள் அமர்ந்து கொண்ட ஏதோவொரு வாடை இப்போது இங்கே என் வீட்டில் இருக்கிறது. பத்தி எரிகிறது. அந்த வாடையா? இல்லை. மண்ணெண்ணெய் நெடியும் இல்லை. பின் எந்த வாடை? எல்லா சாவு வீட்டிலும் இதே வாடை இருக்குமோ என்னவோ. பதினைந்து வயதில் முகர்ந்த வாடை இன்னும் உள்ளிருப்பதே இன்னொரு சாவில்தான் தெரிகிறது.

னால் அன்றைய எழவிற்கும் இன்றைய சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள். அன்றைய மரணம் எதிர்பார்த்தது. நான் அதிகம் நேசிக்காத உறவினுடையது.

நான் நேர்கொண்ட அடுத்த மரணம் அப்பாவினுடையது.

அப்பா எனனுள் மிக ழமாய் பதிந்தவரல்ல. எனக்குள் அவ்வப்போது தலைதூக்கும் வக்கிரம் அப்பாவிடமிருந்து வந்ததாய்த்தான் இருக்கவேண்டும்.

போர்வையை மூடிக்கொண்டு, அன்று படித்த மஞ்சள் பத்திரிகையின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அம்மாவின் எதிர்ப்பும் அப்பாவின் கெஞ்சலும் கேட்டு அயற்சியாய் உணர்ந்ததுண்டு. அம்மா பலமாய் எதிர்க்கிறாளா ஊடுகிறாளா என்று தெரியுமுன்னரே அப்பா இறந்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார்.

மீண்டும் ஒப்பாரிப் பெண்கள். அம்மாவின் அழுகை. மண்ணெண்ணெய் நெடி. சாவு வீடு எனக்கு மட்டும் இரசிக்க முடிந்ததாய்ப் போனது கண்டு எனக்கே என்னைக் குறித்த ச்சரியம்.

நான் இரசித்துக்கொண்டிருக்க தொடர்ந்து அப்பாவும் பாட்டிகளும் மட்டும் இறப்பதில்லை. மரணங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை சொல்லியும் சொல்லாமலும் செல்லும் விஷயங்கள் கனத்தவை. இன்று நேர்ந்து விட்ட பாலாவினது மாதிரி. பாலா. கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்துவிட்ட ஜனனம். கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்து விட்ட மரணம்.

காந்தியின் அன்றைய எதிர்ப்பார்ப்புகள் நியாயமானவை. நானும் பங்கெடுத்துக்கொண்டவை. முதலிரவில் சங்கமித்த நிமிடங்கள் முதல் பாலா பிறந்தது வரை அவள் அவளாய்த்தான் இருந்தாள். கருவுற்றதை என்னிடம் சொல்லி வெட்கித்த நிமிடங்கள் காவியம் என்பேன். பாலா பிறந்த பின் எல்லாம் மாறிப்போயின.

எதற்காய் அத்தனை பெரிய தண்டனை என்று நான் யோசிக்காத நாளேயில்லை. காந்தி அழாது உறங்கிய இரவே இல்லை.

பாலா பிறந்த போதே முதுகில் பெரிய கட்டி. பிறந்த தினமே பரேஷன் என்றார்கள். ரொம்ப ரிஸ்க் என்றார்கள். கடவுளை நம்புங்க என்றார்கள். கவலைப்படாதீங்க என்றார்கள்.

….என்றார்கள். ….என்றார்கள். … என்றார்கள். இத்யாதி.

காந்தி அப்போதுதான் முதன்முதலாய்ப் பெருங்குரலெடுத்து அழுததும். நான் வெளிக்காட்டாது எனக்குள்ளே ஓலமிட்டேன். ஒரே ஒரு குறையுடன் பாலா உயிர்பிழைத்தான். இரண்டு கால்களிலும் உணர்ச்சியில்லை. தவழ்தல் கூட சாத்தியமில்லை. கொஞ்சம் பெரியவனானதும் இன்னொரு பரேஷன் மூலம் நடக்க வைக்க முடிந்தாலும் முடியலாம் என்றார்கள்.

முதல் குழந்தை நடக்க முடியாது ஒரே இடத்திலேயே இருந்து அழுவது கண்டு கண்டு காந்தி அரண்டு போனாள். அவளுக்குள்ளேயே அழுது ஒடுங்கினாள். நான் உட்பட்ட எல்லாமே அவளுக்கு வெறுப்பாகிப் போனது. எப்போதும் பாலாவைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது மட்டும் அவளுக்குப் பிடித்தமானதாயிருந்தது. சிரிப்பு பேச்சு ஒன்றும் இல்லாத காந்தியைக் காணவே கவலையாயிருக்கும் எனக்கு.

பல மாதங்கள் கழித்த ஒரு இரவில் அவளைத் தொட்டபோது ஏதோ தெருவில் போகிறவன் தொட்டபடி கண்கள் காட்டினாள். நான் பயந்து பின்வாங்கினேன். தீர்மானமாய்ச் சொன்னாள் இனி நமக்கு வேண்டாமென்று. ஏன் என்று கேட்கும் தைரியம் எனக்கில்லை. ஏதோ பேச்சுக்குச் சொல்கிறாள் என்ற என் எண்ணம் தவறாய்ப் போனது. காந்தி நெருப்பானாள். நான் என்னை அடக்கக் கற்றுக்கொண்டேன்.

இனி நமக்கு வேண்டாம் என்ற காந்தி தன்னை மறந்த ஒரு இரவில் கட்டை உடைத்துக்கொண்டு விட்டாள். அல்லது நான் உடைத்தேன். அன்றைக்கு காந்தியின் வேகமும் க்ரோஷமும் என்னைக் கொஞ்சம் பயமுறுத்திவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்ணின் சாந்தம் இல்லை. இரண்டு வருடங்களின் தனித்த இரவுகளை ஒரே இரவில் தீர்க்க நினைக்கிறாளோ என்றும் தோன்றியது. மூச்சு வாங்கி மேலே சரிந்தபோது "இப்போ மட்டும் பாலா ஞாபகம் இல்லையா?"என்று கேட்கலாமா என்று நினைத்தேன். நான் கேட்காமல் விட்டதற்கு பாலா எனக்கும் மகன் என்பதும் இனியும் இரவுகள் வரும் என்பதும் காரணங்களாய் அமைந்துவிட்டன.

நேற்று எங்களுக்குள் நடந்த சம்பாஷணைகள் என் தலைக்குள் தெறிக்கின்றன. அவளால் என்னை மட்டுமே குற்றம் சாட்ட முடியவில்லை என்ற ஒரே காரணத்தினால்தான் நான் தப்பித்தேன்.

என் சந்தோஷத்தை அவளோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அவள் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதாயும் அதற்குத் தானும் காரணமாகிவிட்டதாயும் புலம்பித் தீர்த்தாள். பாலா உண்டானதைச் சொன்னபோது நடந்த நிகழ்வுகள் என் மனக்கண்ணில் வந்து மறைந்தன. மெல்ல நெருங்கி உச்சி முகர்ந்து கையால் வயிற்றைத் தடவி உதட்டைக் கௌவி இறுக்கிக் கட்டிப்பிடித்த நிமிடங்கள் நேற்றும் நிகழ்ந்திருக்க வேண்டியவை. னால் நேற்று ஒரு கை ஓசை. பாலாவைக் கருக்கொண்ட அன்று இருவருக்குள்ளிருந்த சந்தோஷம் நேற்று என்னிடம் மட்டும்தான் இருந்தது. நேற்று அவள் மனதுள் நான் குற்றவாளியாக்கப் பட்டிருந்தேன்.

காந்தியின் புலம்பலை மீறி என்னுள் ஒரு சந்தோஷம் பரவியது. இன்னொரு மகனோ மகளோ பிறந்து அது தவழ்வதை, நடப்பதை எல்லாம் ரசிக்க முடியும். காந்தியின் குற்ற உணர்ச்சியும் என் மீதான சாடல்களும் அதைக்காணும்போது மறையும். அப்போது காந்தியிடம் சொல்ல வேண்டும், பாலா இருக்கும்போதே இரண்டாவதாய்க் கருவுற்றது பெரிய பாவமொன்றும் இல்லை என்று.

ஜ்வாலை எண்ணெயில்லாமல் சிறுகத் தொடங்குகிறது. சொந்தக்கார கிழவியருத்தி எண்ணெயிடுகிறாள். கிட்டத் தட்ட எல்லோரும் வந்தாகிவிட்டது. நான் யாருடனும் பேசவில்லை. அமைதியாயிருக்கிறேன். எல்லோரும் காந்தியைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். கொண்டு போகலாம் என்று யாரோ சொல்கிறார்கள். நான் சரி என்கிறேன், எப்படிச் செத்தான் என்ற யோசனையில். முனகல் சத்தம் கேட்டதாய்க்கூட நினைவில்லை.

காந்தியின் வீறிடல் என்னைக் குலுக்குகிறது. என்னிடம் அவளுக்கான தேறுதல் வார்த்தைகளில்லை. என்னை நானே கூட தேற்றிக்கொள்ள முடியாது. என்னைத் தேற்றவும் யாருமில்லை.

பாலாவின் நேற்றைய சிரித்த முகம் மனதை விட்டு இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை. காந்தி பலமுறை சொல்லி அழுத வரிகளை மீண்டும் சொல்லி அழுகிறாள். "யாருமே என்னைப் புரிஞ்சிக்கலையா..? பாலா.. நான் உன்ன மறந்துருவேன்னு நினைச்சிட்டியா.. பெரிய தண்டனையா கொடுத்திட்டியே..”

எனக்குக் குறுகுறுக்கிறது.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது. பாலா மாதிரி.
 

Share

கேள்விகள்

ரவு முழுதும் செய்த வேலையின் அலுப்பு உடலெங்கும் பரவியிருந்தாலும் அந்தக் காலை நேரத்தின் குளிர்ந்த காற்று அக்கணத்தை இரம்மியமானதாக ஆக்கிகொண்டிருந்தது. வேகமான எதிர்காற்று மூக்கினுள்ளே சென்று ஒருவித சுகமான எரிச்சலை விட்டுச் சென்றது. காதுகளின் வழியே அது சீறிப்பாயும் வேகம் சத்தத்தில் தெரிந்தது. ஆலையின் ஒவ்வொரு புகைபோக்கியாய்க் கடந்து நகர எல்லைக்குள் நுழையும்போது சாலையின் இரு புறங்களிலும் கருப்புத்தோல் பெண்கள் கலையத்திலும் எவர்சில்வர் தூக்குச் சட்டியிலும் பதனீர் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வித சினேகப் பார்வையும் நாம் மறையாத வரை அவர்களின் முகத்தில் தோன்றும் சிரிப்பும் ஒரு வித வியாபார அழைப்பு.

காற்றில் கலையும் தலைமுடியை கைகளால் கோதினேன். நிறைய மணற்துகள்கள் கையில் ஒட்டிக்கொண்டன. ஹெல்மேட் அணிந்துகொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் கடிகாரத்தைப் பார்த்தேன். அது ஆறு இருபது காட்டியது. பைக்கின் வேகத்தை கொஞ்சம் குறைத்தேன். பிரம்மச்சாரி வாழ்க்கையில் நான் போய் செய்யப்போவது எதுவுமில்லை. தூக்கம், சாப்பாடு, ஷி·ட் என்பன தரும் அலுப்பில் ஒரு வித சந்தோஷம் கண்டுகொள்ளப் பழகினால் வாழ்க்கை இனிமையாயிருப்பதாய்க் கற்பிதம் கொள்ள வசதியாய் இருக்கும். எனக்கு அது பழக்கப்பட்டுவிட்டது.

டவுண்ஷிப் தாண்டி ரவுண்டானா கடந்து பிள்ளையார் கோவில் பக்கத்து சந்தில் திரும்பி அக்ரஹாரத்தில் நுழைந்தபோது பெருமாள் கோவிலிருந்து புல்லாங்குழல் இசை காற்றில் மிதந்து வந்தது. பட்டருக்கு எப்போதும் ·பர்ஸ்ட் ஷி·ப்ட் என்று நினைத்துக்கொண்டேன்.

வண்டியை கோவிலுக்கு பக்கவாட்டிலுள்ள என் வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு டீக்கடைக்காரனுக்கு ஒரு புன்னகை புரிந்துவிட்டு வாசல்படியில் இருந்த தினந்ததியைக் கையிலெடுத்த போது பக்கத்துவீட்டு மாடியிலிருந்து ரேணுகா மாமி என்னவோ கேட்டாள்.

"என்ன மாமி.. காதுல சரியா விழல."

ஜன்னல் வழியாக வரப்போகும் குரலைத் தெளிவாய்க் கேட்க ஆயத்தமானேன்.

"மாமா உன்னப் பார்க்கணும்னார். அவசரமில்லை. எப்பமுடியுமோ அப்ப வா.."

"இப்பவே வரட்டா"என்றேன்.

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் "சரி வா"என்றாள். தினத்தந்தியைக் கையிலெடுத்துக் கொண்டு சாவியை சுழற்றியபடி மாமிவீட்டு மாடிப்படியில் ஏறினேன். காலிங்பெல்லை அழுத்துமுன் மாமியின் குரல் உள்ளிருந்து, "வெறுமனே தெறந்துதான் இருக்கு.வா"என்றது. செருப்பை விட்டுவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றேன். மாமி வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். இன்னும் குளிக்கவில்லை போல. அப்படியானால் மாமா சமையல் கட்டில் தான் இருக்கவேண்டும்.

"என்ன மாமி.. இன்னைக்கும் ராவுஜிதான் சமையலா?"

"ஆமா.. உள்ளதான் இருக்கார் போ”

எந்தவித சங்கோஜமும் இல்லாமல் சமையற்கட்டு வரை செல்வது எனக்கே ஆச்சரியமான ஒன்று. ராவுஜி சிவப்பான தொந்தியை ஒரு துண்டால் இறுக்கிக் கொண்டு கடுகை வெடித்துக்கொண்டிருந்தார். துண்டு எப்போதுவேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற எண்ணத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் ராவுஜிக்கு அந்தக் கவலை இருந்ததாகவே தெரியவில்லை.

மாமி அங்கிருந்தே கத்தினாள்.

"அவனுய காபி ஆக்கி கொட்றி"

ராவுஜி காபி குடிக்கிறியா என்றார். சரி என்றேன். பிறகு காபி போடுவதில் மும்முரமாகிவிட்டார். அறை முழுதும் சாமான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இறைந்து கிடந்தன. மாமி வீட்டில் இருந்திருந்தால் இப்படி இருந்திருக்காது. குறைந்த பட்சம் ராஜி இருந்திருந்தாலாவது..

இந்த எண்ணம் எழுந்ததும் வயிற்றுக்குள் என்னவென்று தெரியாத ஒரு உருண்டை புரண்டு அடங்கியது. அதற்குள் ராவுஜி காபி ரெடி என்றார். காபியைக் கையில் எடுத்து குடித்துக்கொண்டே ராவுஜியைக் கேட்டேன்.

"என்ன விஷயம்?"

நான் காபியைப் பற்றி கமெண்ட் சொல்வேன் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? ஒரு நொடி சுதாரிப்புக்குப் பின் சொன்னார்..

"நேத்து பஜார்ல நம்ம இன்ஸ்பெக்டரைப் பாத்தேன்."

அவர் முகம் சீரியஸாகியது. குரல் தணிந்தது. மாமிக்கு கேட்ககூடாது என்று நினைத்திருக்கலாம். அதுவும் சரிதான். எனக்கும்கூட கொஞ்சம் படபடப்பு உண்டானதை அறிந்தேன். இனி ராவுஜியின் முகத்தைப் பார்க்கும் சக்தி இருக்காது என்று எனக்குத் தெர்¢யும். ராவுஜிக்கும் அப்படித்தான். இது பற்றி பேசும்போது அவர் என்னைப் பார்க்கமாட்டார். எந்த ஒரு அப்பாவிற்கும் அப்படித்தான். நான் காபியின் நுரைகள் எப்படி அடங்குகின்றன என்பதைப் பார்த்தவண்ணம் ராவுஜி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் தாளித்த வாணலியில் புளிக்கரைசலை ஊற்றிக்கொண்டே,

"அவர வந்து பாக்கச் சொன்னாரு. நீயும் கூட வந்தீன்னா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். இன்னைக்கு காலேல போகலாம்னு இருக்கேன். வர்றியா?"

பதிலுக்காய் தொக்கி நிற்கும் கேள்விகள் கேட்பது ராவுஜியின் பழக்கமல்ல. நைட் ஷி·ப்ட் முடிந்து தூங்கிகொண்டிருந்தாலும் எழுப்பி பதினோரு மணிக்காட்சிக்கு வா என்பார். வர்றியா என்பது இப்போது தொற்றிக்கொண்டுள்ள புதுப்பழக்கம்.

எப்போதும் யோசனையிலிருக்கும் அவருக்கும் இந்த உலகத்திற்கும் ஒரு இடைவெளி விழுந்தது போன்ற உணர்வு எனக்கு மேலிட்டது. அதை அவரால் தவிர்க்க இயலாதென்பதும் உண்மை.

"இன்னைக்கு ஆ·ப்தானே ராவுஜி. கண்டிப்பா வர்றேன்."

"கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? எண்ணி வெச்சிருப்பியே"என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். நேரத்துடன் ஒட்டாத வெறுமை நிறைந்த சிரிப்பு எனக்கு எப்போதும் இஷ்டமாய் இருந்ததில்லை. அதை அவர் கண்டு கொண்டதுபோல நிறுத்திக்கொண்டார். நான் பதிலேதும் சொல்லாமல் சுருட்டிய தினத்தந்தியால் கையில் தட்டியபடியே வெளியில் வந்தேன். மாமி ராவுஜியிடம் "காபி கொட்றியா?"என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

வளைந்த மாடிப் படிகளின் கீழிருந்த சிறிய மணற்வெளியில் குட்டையாய் தென்னை நின்றுகொண்டிருந்தது. இதைக்காணும்போதெல்லாம் ராஜியின் நினைவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தென்னையின் கிளைகள் ஆடுவதற்கும் ராஜியின் சிரிப்புக்கும் எப்போதும் வித்தியாசம் தெரிந்த்தில்லை எனக்கு.

முதல்முறை கண்டபோதே வந்த ஈர்ப்பும் பழகப் பழக விரிந்த நட்பும் என் வழக்கமான வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தந்துகொண்டிருந்ததை எப்போதும் நினைப்பேன். என்றோ நிச்சயிக்கப் பட்டுவிட்ட அவளின் அவனை, கொஞ்சம் உரிமை எடுத்து நான் கிண்டல் செய்யும்போதெல்லாம் அவள் சந்தோஷமும் பொய்க்கோபமும் கலந்து அண்ணா என்று கூப்பிடும் அந்த ஒலி இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

வெளியில் வந்து கேட்டைப் பூட்டிவிட்டுத் திரும்பியபோது டீக்கடைக்காரன் சொன்னான்.

"தம்பி.. காபி கொண்டுவந்தேன். வூடு பூட்டியிருந்துச்சு"

"ராவுஜி வீட்டுக்குப் போயிட்டேன். கொஞ்ச நேரம்கழிச்சு கொண்டுவாங்க"என்று சொல்லிவிட்டு என் வீட்டு படிகளில் ஏறினேன். மேலேயிருந்து ராவுஜி குரல் கொடுத்தார்.

"பதினோரு மணிவாக்குல ஸ்கூலுக்கு வா"

பூட்டிய என் வீட்டுக் கதவைத் திறந்த படியே சரி என்று கத்தினேன்.

மேலே மின்விசிறி சுழல்வதை பார்த்துக்கொண்டே இருந்த ஞாபகம் இருக்கிறது. எப்போது உறங்கினேன் என்ற நினைவில்லை. ஒரு வித அரை குறை உறக்கம். எப்போதும் விழித்திருப்பது போன்ற எண்ணமும் நன்றாகத் தூங்கியது போன்ற எண்ணமும் ஒன்றாய் எழுந்து என்னை அலுப்பாக்கியது. கண்ணைத் திறந்து மணியைப் பார்க்கத் தோன்றாமல் அலாரம்தான் அடிக்கட்டுமே என்ற எண்ணத்திலேயே இருந்தேன். ராவுஜி காத்துக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் மேலோங்கவும் போர்வையையும் சோம்பேறித்தனத்தையும் உதறிவிட்டு குளிக்கச் சென்றேன். என்னவென்னவோ நினைவுகள் என்னைச் சுழற்றிக்கொண்டிருந்தன. அன்றும் இதே போன்ற ஒரு விடுமுறை நாள்தான். எப்போதும்போல விழிக்கவில்லை. ரேணுகா மாமியின் அலறலும் ராவுஜியின் கதறலும் கேட்டு அடித்துப்புரண்ட நினைவு இப்போதும் கலவரமேற்படுத்துகிறது. நான் போவதற்குள் ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டிருந்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டார்கள். எதையும் கிரகிக்கும் நிலையில் இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது. ராஜி தூக்கில் தொங்கிவிட்டாள். இப்போது உயிரில்லை. பிணமாய்த் தொங்கும் ராஜியை எல்லோரும் கஷ்டப்பட்டு கீழே இறக்கியபோது நான் வெளியில் எங்கேயோ வெறித்தவண்ணம் இருந்தேன்.

அதற்குப் பிறகு ராவுஜியை பார்க்கும் தைரியமோ அவரைத் தேற்றும் பக்குவமோ அழுது அழுது வீங்கிப்போன மாமியின் முகத்தைப் பார்க்கும் சக்தியோ எனக்கில்லை. இப்படியெல்லாம் நேரும் என்பதும் இவையெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதும் என்னால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையல்ல. அங்கேயே மரம் போல நின்றிருந்தேன். என்னென்னவோ சொன்னார்கள். போலீஸ் கேஸாகுமுன் பிணத்தை எடுக்கவேண்டும் என்று சொல்லி ஐந்து மணி நேரத்தில் காரியத்தை முடித்தார்கள். நேற்று பேசியவள் இன்றில்லை என்னும் உண்மை நெஞ்சைக் குடைந்தபோது கொஞ்சம் கலவரமடைந்துதான் போனேன். ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்வி என் மனதில் ஓடிய வண்ணம் இருந்தது.

ராவுஜியையும் மாமியையும் எல்லாரும் தேற்றிக்கொண்டிருந்த போது ஒரு காரில் இருந்து ராஜிக்கு பேசி வைக்கப்பட்டிருந்த பையனும் வேறு சிலரும் இறங்கினார்கள். ராஜியின் கட்டாயத்தின் பேரில் அந்தப் பையனை நான் ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். கூட வருவது அவன் அப்பாவும் அவரின் நண்பர்களுமாய் இருக்கவேண்டும். அவன் அப்பா அவனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு எல்லா கூட்டத்தையும் மீறி வீட்டினுள்ளே சென்றார். அவனைப் பார்த்ததும் மாமி மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். ராவுஜி துண்டைஎடுத்து வாயை மூடிக்கொண்டு சரிந்திருந்த மார்புகள் குலுங்கக் குலுங்க அழுதார். பையனின் அப்பா கேட்டார்.

"என்னாச்சு?"

கன்னடத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசிக்கொண்டார்கள். ராவுஜி கேட்டகேள்விக்கு மட்டும் பதில் சொன்னார். பையனின் அப்பா ராவுஜியின் மன நிலையைக் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.

"நீ என்ன பண்ணிருக்கனும்? நாங்க வர்ற வரைக்கும் வெச்சிருக்கணுமா வேண்டாமா?
அவனப் பாரு.. அழுது அழுது.. அவனுக்கு என்ன ஆறுதல் சொல்றது நானு? அவன் கடைசியா அவ மொகத்தைப் பார்த்திருந்தான்னா கூட ஒரு ஆறுதலா இருந்திருக்கும்.."

"இல்லடா. போலீஸ் கேஸாயிரும்னுதான்.. .. "

"சும்மா சொல்லாத.. திடீர்னு வந்து என் பொண்ணுக்கு ஒன் பையனக்கொடுன்னு சொன்னப்பவே யோசிச்சேன். சரி கூட படிச்சவனாச்சேன்னு நம்பித்தான் சரின்னேன். என்னடா தூத்துக்குடியில இல்லாத ஸ்கூலான்னதுக்கு அவ அத்தை வீட்டுல தங்கிப் படிக்கட்டும்ன. இப்பதான் புரியுது அவ பத்தாவது படிக்கும்போதே எவன் பின்னாடியோ சுத்திருக்கான்னு. "

ராவுஜி இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ரீதியில் நின்றிருந்தார். பையன் பேசினான். அதிகமாய் ராஜியை நேசித்திருப்பான் போல. பேசும்போது கண்ணிலிருந்து நீர் வழிந்த வண்ணம் இருந்தது.

"அப்பா சும்மா இர்றி.."என்று அவன் அப்பாவை அதட்டிவிட்டு ராவுஜியை நோக்கி "மாமா. அவரு சொல்றத கேக்காதீங்க. எனக்குத் தெரியும் என் ராஜி பத்தி. அவ எம்மேல உசிரயே வெச்சிருந்தா. என்கிட்ட கூட சொல்லாம இப்படிச் செஞ்சிக்கிட்டான்னா வேற ஏதோ காரணம் இருக்கணும்.. சொல்லுங்க.. என்ன காரணம்? "

"தெரியலையேப்பா.."ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் ராவுஜி.

"பொய் சொல்றீங்க.. உங்களுக்குத் தெரியாம இருக்க சான்ஸே இல்லை. சரி விடுங்க. ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருந்தாளா?"

ராவுஜி எதுவும் இல்லையென்று தலையசைத்தார். பையன் தனக்கு கடிதம் எழுதி வைக்காமல் ராஜி சாகமாட்டாள் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். மீண்டும் பையனின் அப்பா கத்தத் தொடங்கினார். ராவுஜி திட்டம்போட்டு தன்னையும் தன் பையனையும் ஏமாற்றிவிட்டதாகக் கத்தினார். தெருக்காரர்கள் சிலர் சமாதானம் பேசி அவரை அனுப்பி வைத்தார்கள். போகும்போது தனக்கும் ராவுஜி குடும்பத்திற்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனார்.

அலாரம் அடித்த போதுதான் ஷவரில் நெடு நேரமாய் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். வேகவேகமாய் தலைதுவட்டிக்கொண்டு கத்தும் அலாரத்தை நிறுத்திவிட்டு புறப்பட்டேன்.

ராவுஜி பயந்தபடி ஒன்றும் இருக்கவில்லை. இன்ஸ்பெக்டர் தன் பையனுக்கு ட்யூசன் சொல்லித்தரவேண்டுமென்று கேட்டார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. பஜாரில் பார்த்தபோதோ அல்லது ஒரு ·போன் போட்டோ கேட்டிருக்கலாம். ஆனால் ராவுஜி அப்படியெல்லாம் நினைத்ததாகத் தெரியவில்லை. தனது கடமை அது என்பது போல பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை ராஜி விஷயத்தில் இன்ஸ்பெக்டர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சியாய் இருந்திருக்கலாம். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து ஏதாவது கேட்கவேண்டும் என்ற தொனியில், "எப்ப கல்யாணம்? என்னைலேர்ந்து லீவு", என்றார். உடனே மறந்துபோகும்படியான ஒரு பதிலைச் சொல்லிவிட்டு பரஸ்பரம் சிரித்துவிட்டு நானும் ராவுஜியும் கிளம்ப ஆயத்தமானபோது ராவுஜி இன்ஸ்பெக்டரிடம்,

"நீங்க வரச்சொன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்"

"என்னவோ ஏதோன்னா.. ஓ.. நீங்க இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருக்கிறீங்களா? அது முடிஞ்சி போச்சு. ஆக்சிடென்டல் டெத்துன்னு சர்டி·பிகேட் வாங்கின பின்னாடிதான எரிச்சோம். இனிமே ஒரு பிரச்சனையும் வர வாய்ப்பில்ல. நீங்க மறக்கவேண்டியதுதான் பாக்கி"

"நா எப்பவோ மறந்துட்டேனே.. எப்ப அவ எங்கள வேண்டாம்னு நெனச்சிட்டாளோ அப்பவே அவள நாங்க மறந்தாச்சு.."

ரொம்ப அலட்சியமாய் பேசுவதாய் ராவுஜி நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் குரல் அவருடன் ஒத்துழைத்ததாகத் தெரியவில்லை.

"ஜஸ்ட் ஒரு க்யூரியாஸிட்டி.. உண்மையிலேயே அவ லெட்டர் எழுதும் எழுதி வைக்கலயா?"

எனக்குள்ளிருந்த அதே கேள்வியை இன்ஸ்பெக்டர் கேட்கவும் கொஞ்சம் உன்னிப்பானேன்.

"என்ன சார் நீங்க.. லெட்டர் இருந்திருந்தா உங்க கிட்ட கொடுத்திருக்க மாட்டேனா.. நீங்க எவ்வளவு ஹெல்ப் பண்றீங்க.."

ராவுஜி இதைத் தவிர எதுவும் சொல்லமாட்டாரென எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டருக்கும் அதே எண்ணமோ என்னவோ. "ஓ.. ஜஸ்ட் கேட்டேன்"என்றார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தோம். ராவுஜியை ஏதோ ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டு இருந்தது. இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் நடந்தோம். நானும் ராவுஜியும் எங்கு போனாலும் நடந்து போவதே பழக்கம். ராவுஜிக்கு நான் பைக் ஓட்டும்போது என் பின்னே அமர்ந்து வர பயமும் கூட. ரேஷ் ட்ரைவிங் என்பார்.

என் சிந்தனைகளைக் கலைக்கும் விதமாகவும் அவரை அவரே சாந்தப் படுத்திக்கொள்ளும் விதமாகவும் எங்களிடையே நிலவியிருந்த மௌனத்தை அவரே கலைத்தார்.

"அப்புறம் கல்யாண வேலைலாம் ஊர்ல அப்பாவும் அம்மாவும் பார்க்குறாங்களா?"

அந்தக் கேள்வி அவருக்குள்ள படபடப்பைக் காட்டுவதைத்தவிர வேறொன்றையும் சாதித்ததாகத் தெரியவில்லை.

"ம்"

"என்ன யோசனை பலமா இருக்கு?"

அவரை ஆழ ஊடுருவிப் பார்த்தேன். எனக்குள்ளிருந்த அந்தக் கேள்வியை கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். நீயுமா என்பது பதிலாய் இருக்கக்கூடும். இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டேன்.

"ராஜி ஏன் அப்படி செஞ்சிக்கிட்டா? உங்களுக்கு நெஜமாவேத் தெரியாதா? அவ உண்மையிலேயே லெட்டெர் எதுவும் எழுதி வைக்கலயா?"

என்றாவது ஒரு நாள் இதைக்கேட்பேன் என்று ராவுஜி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ. பெரிய அதிர்ச்சி ஒன்றும் அவர் முகத்தில் இல்லை.

"அப்படி ஒன்னு இருந்தா உன்கிட்ட கூடச் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறியா?"

இதற்குப் பிறகு அவரிடம் இதைப் பற்றிக் கேட்பது முறையல்ல என்று நினைத்துக்கொண்டேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்ற ரீதியிலான முகத்துக்கு நேரான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது, அமைதியாயிருப்பதைத் தவிர?

ராவுஜி ராஜியின் நினைவுகளை ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வந்தார். சில சமயங்களில் அவரையும் மீறி கண்ணீர் வந்தது. சீக்கிரம் ஸ்கூல் வந்துவிடாதா என்று இருந்தது எனக்கு.

"எப்படி வளர்த்தேன் தெரியுமா? ஆசை ஆசையா வளர்த்த பொண்ணு இப்படிப் போனா எப்படிடா வாழ்றது? என்ன விடு. மாமியை நினைச்சுப் பாரு. இப்பவும் ராத்திரியில பொலம்புறா.. அவ அழும்போது நெஞ்ச அடைக்கும் எனக்கு. நேத்து சொல்றா.. ராஜிய நெனச்சுப் பார்த்தாஅவ சிரிச்ச முகமே ஞாபகம் வரமாட்டேங்குதுங்க.. தொறந்த கண்ணும் வீங்குன முகமும் வெளிதள்ளின நாக்கும் ஞாபகம் வந்து பயமா இருக்குதுங்கன்றா. பெத்தவளுக்கு எப்படியிருக்கும்?"

எனக்கு பயமாய் இருந்தது. அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. நல்லவேளை. ஸ்கூல் வந்துவிட்டது.

"சரி ராவுஜி நான் கிளம்புறேன். ரொம்ப தூங்கிட்டேன்னா ராத்திரி ஒரு ஆறரைக்கு எழுப்பிவிட்டுருங்க. வரட்டா"என்றேன்.

சம்பந்தமில்லாத உரையாடல்களின் உதவி புரிந்தது.

அவர் பேச்சை மாற்றுவதைவிட அவரை விட்டு விலகிவிடுவது இப்போதைக்கு நல்லது. எனக்கும் கொஞ்சம் தனியாக இருக்கவேண்டும்.

ராவுஜி, "சரி போ. போய் தூங்கு. ஒரே ஒரு விஷயம். ஒங்கிட்ட இவ்வளவு நாள் சொல்லாதது தப்புதான். ஆனாலும் நீ புரிஞ்சுக்குவன்னு நெனைக்கிறேன்"என்ற பலமான பீடிககக்குப் பின், "ராஜி சாகுறதுக்கு முன்னாடி ஒரு லெட்டர் எழுதி வெச்சிருந்தா"என்றார்.

எனக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. எப்படியோ இத்தனை நாள் என்னைக் குடைந்துகொண்டிருந்த என் கேள்விக்கு விடை கிடைத்தால் சரி என்ற எண்ணத்தால் உண்டான பரப்ரப்பை அடக்கிக்கொண்டு கேட்டேன்.

"நா மொதல்லயே நெனச்சேன். என்ன எழுதியிருந்தா?"

"அத நான் படிக்கவேயில்லை. படிக்காமயே கிழிச்சுப் போட்டுட்டேன். அவ எதாவது எழுதி அதைப் படிச்சுட்டு நம்ம பொண்ணா இப்படின்னு நினைக்கிறதை விட ஏன் செத்தான்னு எல்லாரையும் மாதிரி காரணம் தெரியாம இருந்தா போதும்னு நினைச்சிதான் அதைக் கிழிச்சிப் போட்டுட்டேன்"என்றார்.

நெஜமாவா என்று வாய் வரை வந்த கேள்வியை மனதிற்குள்ளேயே அழுத்தி வைத்தேன். உண்மையோ பொய்யோ அதை எற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இன்னும் அவரை கேள்வி கேட்பது சரியில்லை என்றும் பட்டது.

"நீங்க செஞ்சது சரிதான்"

"மாமிகிட்ட சொல்லிடாத. ப்ளீஸ்"

"சரி"என்றேன்.
 

Share

தாயம்


தாயம்

–ஹரன் பிரசன்னா



“போதன்னைக்கும் இதே ஆட்டம்தானா? ஆம்படையான் ஆத்துல இருக்கானே.. அவனோட செத்த நாழி பேசுவோம்னு உண்டா நோக்கு? வர்றாளே பொம்மனாட்டிகளும் என்னைப் பார் என் சமத்தைப் பார்னு.. புருஷா ஆத்துல இருக்காளேன்னு ஒரு லஜ்ஜை வேண்டாம்.. குதிராட்டம் வளர்ந்துர்றதுகள்.”

“நா ஆடுனா உங்களுக்குப் பொறுக்காதே. கரிச்சி கொட்டியாறது. இனி இந்தத் தாயத்த தொட்டா என்ன சவமேன்னு கூப்பிடுங்கோ. எப்ப பாரு தனக்குப் பண்ணனும் தனக்குப் பண்ணனும்னுதான் புத்தி. மத்தவா எப்படிப்போனா உங்களூக்கென்ன? இது ஒண்ணுதான் போது போயிண்டிருந்தது. அதுவும் பொறுக்கலை உங்க கண்ணுக்கு..”



இதோ வந்துடுவேன் இதோ வந்துடுவேன்னு சொல்லிண்டே இருக்கார். ஆளைக் காணோம். எனக்கு கையும் காலும் வெடவெடங்கிறது. அந்த நாசமாப் போன நாத்து எங்க போய் தொலஞ்சதோ? வயித்துல ஜனிச்சதோ ஒண்ணே ஒண்ணு. அதுவும் மசனை.

பொம்மனாட்டி ஒத்த ஆளா அல்லாடிண்டிருக்கேன். அவர் வர்ற வரைக்கும் சித்தப்பாவை இங்க வந்து இருக்கச் சொல்லுன்னு அனுப்பி எத்தனை நாழியாறது. இன்னும் வந்த பாடில்லை. மீசை வந்தவனுக்கு தேசம் தெரியாதும்பா.. சரியாத்தன் சொல்லிருக்கா. எங்க எதைப் பார்த்துண்டு நின்னுண்டு இருக்கோ.

பத்தாம் நாள் சப்பரத்துக்கு மீசை வெச்சதாட்டம் கொழுந்தன். அப்பாவுக்கு இழுத்துண்டு இருக்கு வாடான்னு சொல்லி எத்தனை சமயம் ஆறது. கேட்டா பிஸினஸ்ம்பான். டாலர்ம்பான். பொண்டாட்டிக்கு புடவை எடுக்கணும்னா நாலு நாள் நாயா சுத்துவான். அவ மகராணி. மூத்தான்னு ஒரு மரியாதை கிடையாது. பெரியவான்னு ஒரு சொல் கிடையாது. ஆங்காரி. ஒரு நாள் மாமவுக்கு சிருக்ஷை செஞ்சிருப்பாளா? வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்னு பேச்சு. நாம சொல்லி என்ன பிரயோஜனம். ஆம்படையான் செல்லம்.

அவர். மகா புருஷர். அப்பா சரியில்லை. வெளிய போகாதீங்கோன்னு தலை தலையா அடிச்சுண்டதுதான் மிச்சம். எவனோ மரண நாடி பார்ப்பானாம். அவனை கையோடு கூட்டிண்டு வரப் போறேன்னு போனார். நாலு போன் வந்ததே தவிர அவரை ஆளைக் காணோம். அவன் வர்றதுக்குள்ளே மரண நாடியே வந்துடுத்து போல.

தெய்வமே. வயசான ஜீவன். கஷ்டப்படுத்தாது கொண்டுபோ. ராஜாவாட்டம் வாழ்ந்தார். நோய் நோக்காடுன்னு விழுந்ததே இல்லை. ஆஜானுபாகு.. பஞ்ச கச்சை கட்டிண்டு அங்கவஸ்த்திரத்தை போட்டுண்டு தாத்தா கம்பை கைல வெச்சிண்டு நடப்பாரே.. ரெண்டு கண்ணு போதாது. தேஜஸ்வி.. வந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரை சாப்பிட்டியான்னு ஒரு நாளாவது கேட்காம தூங்கிருப்பாரா? அவர் கூடக் கேட்டதில்லை. என்னை அப்படிப் பாத்துண்டது இல்லை. அப்படி ஒரு ஆத்மா. எப்போ மாமி போனாளோ அப்பமே எல்லாம் போயிடுத்து அவருக்கு. கட்டிண்டவான்னு அப்படி ஒரு இஷ்டம். யாரு இருப்பா இந்தக் காலத்துல? மாமியும் சும்மா சொல்லப்படாது. ஆம்படையான்னா உசுரையே விடுவா. யாரு எதிர்பார்த்தா எல்லாத்தையும் தவிக்கவிட்டுட்டு திடீர்னு போவான்னு? எல்லா நாளும் போல சமைச்சா. குத்து ிளக்கு ஏத்துனா. ஊஞ்சல்ல படுத்துண்டா. என்ன மாமி.. சாப்பிடலையான்னு கேட்டதுக்கு பதிலே இல்லை. சுக ஜீவி. சாவுன்னா அப்படி வரணும். ஆண்டவன் கிருபை வேணும். யாருக்கு கொடுத்து வெச்சிருக்கு?

மாமா படுத்து பத்து நாள் ஆறது. ஆகாரம் வல்லிசா இல்லை. மூணு நாளா இழுத்துண்டு இருக்கு. ஏதேதோ சொல்றார். ரோஜா வேணும்னார். எதுக்கு மாமான்னா பதிலே இல்லை. இன்னைக்கு கார்த்தால ரோஜா வாங்கிக் கைல கொடுத்தது. இன்னும் கைலயே வெச்சிண்டு இருக்கார். என்னென்னமோ சொல்றார். கோர்ட்ன்றார். அமீனான்றார். புத்தி பிறள்றது. நிலையில்லை. இப்பவும் என்னவோ சொல்றார்.

தெருவுல ஆட்டோ சத்தம் கேட்கிறது. அவராய்த்தான் இருக்கும். நேக்கு அழுகை முட்டிண்டு வர்றது.


“இப்போல்லாம் தாயம் அடுறதே இல்லையாடி?”

“என்னைக் கிளறாதேள். அப்புறம் பத்ரகாளி ஆயிடுவேன்.”

“இல்லை. இன்னைக்கு நானும் நீயும் ஆடுறோம் வா.”

“கெட்டது போங்கோ.. அடுத்த ஆத்துக்காரா பார்த்தா சிரிப்பா.. நீங்களூம் உங்க ஆட்டமும்.. நன்னாயிருக்கு..”

“என் பொண்டாட்டி நா ஆடறேன். அடுத்தவா சிரிக்க என்ன இருக்கு. இன்னைக்கு நானும் நீயும் தாயம் ஆடுறோம்.. ஆமா சொல்லிட்டேன்”

என்ன கேட்டேன்னு அவருக்கு இத்தனை கோபம்னு தெரியலை. எரிஞ்சு விழுந்துட்டார். என் கஷ்டம் எனக்கு. இத்தனை மெல்லமா வர்றேளேன்னு கேட்டா அது ஒரு தப்பா. அவரையும் என்ன சொல்ல. அப்பா இப்படிக் கிடக்குறாரேன்னு அவருக்குக் கஷ்டம். மரண நாடி பார்க்கவந்தவன் என்ன சொன்னான்னு கேட்கலாம்னா பயமா இருக்கு. ஆம்படையான்கிட்ட பயந்தா காரியம் நடக்குமோ?

“செத்த நில்லுங்கோ. அவன் என்ன சொன்னான்?”

“நீ கேட்கலையாக்கும்? நிலைக்குப் பக்கத்துலதானே இருந்தாய்?”

“சரியாக் கேட்கலை. சொல்லுங்கோ.”

“இது மரண நாடி இல்லையாம். உயிரெல்லாம் போகாதாம். உசுருக்கு ஆபத்து இல்லைனான்””

“பால வார்த்தான்.”

நாத்து ஓடி வந்து சொன்னான்.

“அப்பா.. தாத்தா கை காலை எல்லாம் ஒரு மாதிரி முறிக்கிறார்ப்பா “

அவர் ஓடினார். நானும் ஓடினேன்.

“பெருமாளே ஒண்ணும் ஆகாது பாத்துக்கோ”

“என்ன பண்றேள்?”

“குருடா எழவு.. நோக்கு பார்த்தா தெரியலயோ?”

“தெரியறது.. தெரியறது.. இப்படி யாராவது ஆணியை வெச்சி தரையில தாயக்கட்டம் வரைவாளா? பின்ன அது
போகவே போகாதோன்னோ..”

“இருந்துட்டுப் போறது.. உன்ன என்னடி பண்றது? ஒவ்வொரு நாளும் சாக்பீஸ் தேடவேண்டாமோன்னோ.”

“அது சரி. அதிவிஷ்டு அனாவிஷ்டு”

அவர் கண்ணுல ஜலம். முழிச்சிண்டு நிக்கறோம். பதட்டத்துல ஒண்ணும் ஓடலை. அழுகைதான் வர்றது. தெய்வம் மாதிரி பட்டு மாமி வந்தாளோ நேக்கு உசிர் வந்ததோ. பட்டு மாமி மாமாவை பார்த்துவிட்டு சொன்னாள்.

“மச மசன்னு நிக்காதேள்.. இன்னும் அரைமணியோ ஒரு மணியோ.. போய்டும்.. சொல்றவா எல்லாருக்கும சொல்லிடு..”

“என்ன மாமி வந்தும் வராததுமா குண்டைத் தூக்கிபோடுறேள்? மரண நாடி பார்த்துட்டு பயப்படவேணாம்னான். இப்போ இப்படி சொல்றேள்.”

“அவன் சொன்னான் சொரக்காய்க்கு உப்பில்லைனு. நேக்கு தெரியாதா.. தத்து பித்தாட்டம் நிக்காம ஆகற காரியத்தைப் பாருடி.. என்னடா சங்கரா நின்னுண்டு இருக்காய்? கட்டில்ல இருக்காரோன்னோ.. பாயை விரிச்சி கீழே படுக்க வைடா.. போற உசுரு கட்டில்ல போகப்படாது.”

ஆக மாமி முடிவே பண்ணிவிட்டாள். மாமி சொன்னதும் அவர் அப்பாவை அலாக்காகத் தூக்கி பாயில் படுக்க வைத்தார். அவரையும் அறியாமல் அவருக்கு கண்ணீர் வந்தது. நாத்து ரொம்ப பயந்துடுத்து. அங்கே நிக்காத போன்னு அதட்டி அனுப்பிவிட்டு நானும் அவரும் மாமியும் அவர் தலை மாட்டில் உட்கார்ந்துகொண்டோம்.

“மாமி. எப்படி இருந்தவர். இப்படி சுக்கா ஆயிட்டாரே மாமி”

“இதுதாண்டி சாஸ்வதம். எது விதிச்சிருக்கோ இல்லையோ.. இது விதிச்சிருக்கு.. எல்லாருக்கும். மனச தேத்திண்டு நாத்துக்கு சாப்பாடு போடு. அப்படியே நீயும் சங்கரனும் சாப்பிட்டுடுங்கோ.. ஜீவன் போயிடுத்துன்னா எல்லாம் முடியறவரைக்கும் சாப்பிடப்பிடாது”

“சரி மாமி”

நாத்துவைக் அழைத்து அடுக்களைக்குள் செல்லுமுன் மாமாவின் முனகல் கேட்பது போல இருந்தது. நாத்துவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அங்கு போனேன். மாமாவின் தலையை அவர் மடியில் வைத்துக்கொண்டிருந்தார். பட்டு மாமி
சொன்னாள்.

“ஒரு டவரால பாலை ஊத்திக்கொண்டுவாடி.. எல்லாரும் ஒரு கரண்டி பாலை வார்த்திடுங்கோ.. சந்தோஷமா அடங்கட்டும்”

“மாமி.. அப்பா ஏதோ முனங்கறார்”

“நினைவு தப்பிடுத்து. இனி அப்படித்தான்”

“இனிமே நினைவே வராதா?””

“அது பகவான் செயல். போ. போய் பாலைக்கொண்டுவா.. நாத்துவையும் அழைச்சிண்டு வா.. எல்லாரும் பாலை ஊத்திடுங்கோ”

அடுக்களைக்குள் சென்று பால் எடுக்கும்போது மாமா முனகுவது கொஞ்சம் தெளிவாகக் கேட்டது. ஏதோ தாயம் என்று சொல்வது போல தெரிந்தது. மாமி அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

“தாயக்கட்டை இருந்தா கைல கொடுடி.”

தாயக்கட்டையை எங்கே தேடுவது. அதற்குள் நாத்து ஓடிப்போய் எடுத்துக்கொண்டு மாமியிடம் தந்தான். நான் பாலை எடுத்துக்கொண்டு ரேழிக்குச் சென்றேன். பட்டு மாமி மாமாவின் உள்ளங்கையை விரித்து தாயக்கட்டையை வைத்து கையை மடக்கி விட்டாள். அவர் கையிலிருந்து தாயக்கட்டை எப்போது வேண்டுமானாலும் விழும்போல இருந்தது. மேல் மூச்சு வாங்குவதும் கூட மெல்ல அடங்கத் தொடங்கியது. பட்டு மாமி சொன்னாள்.

“எல்லாரும் ராமா ராமா சொல்லுங்கோடி”

அவர், நான், பட்டு மாமி, நாத்து எல்லாரும் சொல்ல ஆரம்பித்தோம்.


“சும்மா சொல்லப்புடாது. நன்னாவே ஆடறேள்”

“இதுல நன்னா ஆடறதுக்கு என்னடி இருக்கு. விழறதை நகட்றேன்.”

“கதை. எதுக்கு எந்த காயை நகட்டனும், எப்போ எந்தக் காயை வெட்டணும்னு சூட்சமம் தெரிஞ்சிருக்கு. பொம்மனாட்டி கணக்கா. அதிர்ஷ்டமும் இருக்கு. தாயம்னு சொல்லிப் போடுறேள். எந்த தெய்வம் துணைக்கு வருமோ, தாயம் விழுது.”

“தெய்வம் இல்லைடி மண்டு. நீதான்”

“இது என்ன புதுக்கரடி விடுறேள்”

“நோக்கு தெரியாதோ? கட்டிண்டவ மேல ஆம்படையான் உண்மையா அன்பு வெச்சிருந்தான்னா, தாயம்னு சொல்லிப்
போட்டா தாயம் விழுமாம். கோமதிப் பாட்டி சொல்லலையா நோக்கு?”

“இந்த கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.”

“இது கிண்டல் இல்லைடி. நிஜம்”

“அப்படியானா இப்பப் போடுங்கோ”

“இப்பமா?”

“ஏன் இப்போ என் மேல பாசம் இல்லியோ?”

“ஏன் இல்லாம. போடுறேன் பாரு”

“வேண்டாம். பின்னாடி வழியாதேள்”

“அடி போடி இவளே.. இப்பப்பாரு”

“சீக்கிரம் போடுங்கோ.. எத்தன தரம் உருட்டுவேள்”

“செத்த பொறேண்டி என் சமத்துக்கொடமே”

“இதுக்கு மேல பொறுக்க முடியாது.. இப்போ தாயம் போடப்போறேளா இல்லையா?”

“சரி.. பத்து ஒன்பது எட்டு ஏழுன்னு ஒண்ணு வரை எண்ணு.. அப்பப் போடுறேன்”

“சரி எண்றேன்.. பத்து.. ஒன்பது.. எட்டு.. ஏழு.. ஆறு……..”

ராமா ராமா ராமா ராமா…

மனசுக்குள் சேவிக்காத தெய்வம் இல்லை. நல்ல கதி அடையட்டும் பெருமாளேன்னு நெக்குருகித்தான் நிக்கறேன். தாரை தாரையா கண்ணீர் வர்றது. கால் அடங்கிடுத்து என்றாள் மாமி. அப்போதான் கொழுந்தனுக்கு வழி தெரிஞ்சது போல. நேக்கு கோபம் பொத்துண்டு வர்றது. அவர் கண்ணாலே அதட்டினார். அமைதியா இருந்துட்டேன். அவன் முகத்தையும் பார்க்கலை. அவனும் ஒரு கரண்டி பால் ஊத்தினான். பாலில் பாதி வாயின் ஓரம் வழியாகவே வழிஞ்சிடுத்து. அவனும் அழுதான். அப்பா அப்பா என்றான். மாமாவிடம் இருந்து பதிலே இல்லை. அவனைப் பார்க்க பாவமாயும் இருக்கு. நான் வளர்த்த பிள்ளையோன்னோ.

ராமா ராமா ராமா ராமா

கால் அடங்கிடுத்து என்றாள் பட்டு மாமி. ஆனால் வாயில் மட்டும் ஏதோ ஒரு முனகல் இருந்துண்டே இருக்கு. என்ன சொல்ல நினைக்கிறாரோ.. பத்து பேரு சுத்தி நின்னுண்டா ஜீவன் போகாதும்பா. ஆனா மாமி இன்னும் கொஞ்ச நேரத்துல முழுசா அடங்கிடும்னு சொல்றா. என்ன நம்பிக்கையோ எழவோ. தாலி கட்டிண்டு வந்த நாள்லேர்ந்து நேத்து வரை ஒவ்வொண்ணா நினைவுக்கு வந்து நெஞ்சக் குடையறது. நேக்கே இப்படின்னா அவருக்கு எப்படி இருக்கும்? இரத்த பாசம்னா.

“வயிறு அடங்கிடுத்து”

ராமா ராமா ராமா ராமா

இப்போ முனகலும் இல்லை. தலையை அப்புறம் இப்புறமாய் மாமா அசைக்கிறார். நேக்கு வயிறுள் ஒரு பந்து உருள்றது. மாமா உடம்பை நெளக்கிறார்.


“அஞ்சு.. நாலு.. மூணு.. ரெண்டு.. ஒண்ணு.. போடுங்கோ”

பல்லைக் கடிக்கிறார். வாயின் வழியாக லேசாய் ரத்தம் வழியறது. அவர் அப்பான்னு கதறினார். நான் மாமான்னு கதறினேன். மாமி விடாது ராம நாமம் சொன்னாள். மாமா கையை விரித்தார். கையிலிருந்த தாயக்கட்டை தெறித்து அந்தாண்டை விழுந்தது. பின் ஒட்டுமொத்தமாய் அடங்கினார். நானும் அவரும் அழுதோம். எங்களைப் பார்த்து
நாத்துவும் அழுதான். கொழுந்தனும்.

“எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

“ஏண்டி?”

“சொன்ன மாதிரியே தாயம் போட்டுட்டேளே”

Share

இறங்குமுகம்


இறங்குமுகம்

–ஹரன் பிரசன்னா

கையில் கடவுச்சீட்டுடன் விமான தளத்தில் கிஷ் செல்லும் பயணிகள் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்த சிலர் வரிசையில் நின்றிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். மற்ற விமான சேவைகளில் அளிக்கப்படும் உபசாரமும் மரியாதையும் கிஷ்ஷ¤க்குச் செல்லும் விமான சேவையில் இருக்காது என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்ததால் மரியாதைக் குறைச்சல் கோபம் தரவில்லை. இருந்தாலும் விசிட் விசா முடிந்து மற்றொரு விசிட் விசா வாங்கி வரவேண்டியிருக்கும் கூட்டத்தில் என்னையும் சேர்த்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கொஞ்சம் மேதைமை உள்ளவன். அடித்தட்டுக் கூட்டத்திலிருந்து எந்த செய்கைகள் என்னை தனித்தாக்குமென்று அறிவேன். கையிலிருந்த கனத்த ஆங்கிலப் புத்தகத்தில் லயிப்பது போன்ற பாவனையின் மூலம் என் தனித்துவத்தை விரும்பி நிறுவ முயன்றேன்.

வரிசை நகருவதாகவேத் தெரியவில்லை. விமானத்தில் மரியாதைக் குறைச்சல் எதிர்பார்த்திருந்த எனக்கு விமான தளத்தில் மரியாதைக்குறைச்சல் எதிர்பாராததாய்ப் பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற உடனடி முடிவுக்கு வந்தேன். கொஞ்சம் தூரத்தில் முழுக்க வெள்ளையாய் ஒரு அரபி ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பி, செல்லில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தான். அவன் விமானதளத்தின் ஒரு அதிகாரியாக இருக்கவேண்டும் என்று தோன்றவே வரிசையிலிருந்து விலகி அவனிடம் சென்று அவன் பேச்சு முடியும்வரைக் காத்திருந்தேன். சாவகாசமாய் பேசி முடித்துவிட்டு “சொல்லுங்கள் அன்பரே”என்றான். மிகத் தெளிவான ஆங்கிலத்தில் மறுமொழி அளித்தேன். கேள்வியை உள்ளடக்கிய ஒரு மறுமொழியில் அவன் என் ஆங்கிலத்தின் தரமும் வழக்கமான விசிட் விசா கூட்டத்தில் நான் ஒருவன் அல்லன் என்பதும் அவனுக்குப் பிடிபட்டிருக்கவேண்டும். கொஞ்சம் சுவாரஸ்யமானான்.

“உங்கள் பயணச்சீட்டைப் பார்க்கலாமா”என்றான். “சந்தோஷத்துடன்”என்று சொல்லி பயணச்சீட்டைக் காண்பித்தேன். சரிபார்த்துவிட்டுத் திருப்பித் தந்தான். “எல்லோரும் விசா மாற்றத்திற்காக மட்டுமே செல்லும் கிஷ்ஷ¤க்கு துபாயின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற நீங்கள் செல்வது ஒரு ச்சரியமான நிகழ்வுதான்”என்றான். சிரித்துவிட்டுக் கேட்டேன்.

“நான் அதிக நேரமாய் அந்த நகராத வரிசையில் நின்று பொறுமை இழந்துவிட்டேன். எங்கள் ஊரில் புகைவண்டி நிலையத்தில் கூட இத்தனை நேரம் நின்றதாய் நினைவில்லை. ஒரு விமான தளத்தில் அதுவும் ஒரு நாற்பத்தைந்து நேர நிமிட பயணத்தில் அடையக்கூடிய இலக்கிற்கு இத்தனை நேரம் காக்க வைத்ததன் மூலம் உங்களை அறியாமலேயே நீங்கள் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள்”என்றேன். பொறுமையின்றி சிரித்தான். ஒரு புகைவண்டி நிலையத்தை, அதுவும் ஒரு இந்தியப் புகைவண்டி நிலையத்தை துபாயின் பன்னாட்டு விமான தளத்துடன் ஒப்பிட்ட எனது இரசிப்புத்தன்மையை அவன் விரும்பியிருக்க மாட்டானென்றறிவேன். ஆனால் இது போன்ற எதிராளியைக் கொஞ்சம் கூச வைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது. அதிலிருக்கும் சந்தோஷமே அலாதியானது.

அவன் கொஞ்சம் பொறுமை காக்கவும் என்று சொல்லி விலகிச் சென்றான். எல்லோருக்குள்ளும் பதில் சொல்லாமல் நழுவும் என் இந்தியநாட்டு மனப்பான்மை ஒளிந்திருக்கிறது. ஒருவழியாய் வரிசை நகர ஆரம்பித்தது.

மிகச் சிறிய இரஷிய விமானம் என்னைத் தூக்கிக்கொண்டு பறந்தது. இதுபோன்ற விமானங்களில் பயணிப்பது என் மாட்சிமையைக் குறைக்குமென்றாலும் தொழில் கருதி பொறுக்க வேண்டியிருக்கிறது. விசா மாற்றத்திற்குச் செல்லும் இந்தியர்களின் அவலநிலை குறித்த ஆய்வுக்கட்டுரை என் தலையில் விழுமென்பது நானே எதிர்பாராததுதான். ஆனாலும் மோசமில்லை. மோனியுடன் மீண்டும் ஒரு இனிமையான இரவைக் கழிக்க முடியும்.

பயணிக்கும் ஏறத்தாழ நாற்பது நபர்களில் என்னுள்ளிட்ட ஒன்றிரண்டு பேர்தான் கனவாண்கள். பெரும்பான்மை இந்தியர்களும் சில பாகிஸ்தானிகளும் கடைமட்டக் கூலிகளாயிருக்கவேண்டும். கட்டுரையில் அவர்களை எவ்விதம் வர்ணிக்கலாமென்ற உள்ளூறும் யோசனையினூடே ஒவ்வொருவராய் நோட்டமிட்டபோது “தமிழகத்தின் பொருளாதார நெருக்கடிகள் – கம்யூனிசப் பார்வை”என்ற புத்தகத் தலைப்பு என்னை நிறுத்தியது. நான் படித்திருக்கும் மிகச்சில தமிழ்ப்புத்தகங்களில் அதுவுமொன்று என்பது காரணமாயிருக்கலாம் என்று நிறுவிக்கொண்டேன். காரணமில்லாமல் எதுவுமே நிகழாதென்பது எனக்குள்ளாய் நிரூபிக்கப்பட்டுவிட்ட கொள்கை.

அந்தப் புத்தகம் முப்பதுகளைத் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு கணவானின் கையிலிருந்தது. நான் கொண்டுள்ள கணவான்களின் இலக்கணத்தில் பொறுத்திப் பார்த்த போது தேறினான் என்பதால் அவனை கணவான் என்கிறேன். மூக்கின் நுனியிலிருக்கும் கண்ணாடியின் வழியே ஒவ்வொரு வரிக்கும் மாறும் லாவகம் அவன் கண்களின் அசைவில் தெரிந்தது. வழுக்கையும் தொப்பையும் இல்லாதிருந்தால் வடிவில் எனக்குப் போட்டியாளானாய் இருந்திருப்பான். அரைமணி நேரப் பயணத்தில் அந்த இலங்கைக் காரனுடன் – அவன் இலங்கைக்காரனாய்த்தான் இருக்கவேண்டும்; என் உள்ளுணர்வுகள் தவறுவதேயில்லை என்று உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்- கொஞ்சம் கதைக்கலாமென்று விழைந்தேன். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத்தான் வேண்டும். கண்ணில் தெரிகிறதே.

மிகப்பெரிய முன்னுரையோ தொடர்ச்சியான முகமன்களோ எனக்கு பிடிக்காதென்பதால் நேரடியாகத் தொடங்கினேன்.

“இந்தப் புத்தகத்தில் பெரியதாய் ஒன்றுமில்லை. வழக்கம்போல இந்தியா கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிசப் பார்வை என்பதெல்லாம் வெற்றுப் புலம்பல். கம்யூனிஸம் குருடாகி நாள்கள் ஆகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒற்றை வரியில் சொல்வதானால் இடதுசாரி மனப்பான்மையின் தாக்குதல்களின் தொகுப்பாய் இப்புத்தகத்தைக் கொள்ளலாம்”என்றேன். பதிலாய் “யார் நீங்கள்?”என்றான். ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய மிகச்சிறிய குறிப்பைத் தந்துவிட்டு என் விவர அட்டையை நீட்டினேன். வாங்கினான். ஆனால் அதை நோட்டமிடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்களுக்கு என்ன வேண்டும்?”அந்த ஒரு கேள்வியால் என் பேச்சில் கவரப்பாடத கணவானும் இருக்கிறானோ என்ற சந்தேகம் என்னுள் முளைவிடத் தொடங்கிற்று. “உங்களுடன் சில நிமிடங்கள் கதைக்கலாமென்று.. ..”மறித்து பதிலளித்தான்.

“இன்னொரு சமயம். இப்போது என்னால் முடியாமைக்கு வருந்துகிறேன். சந்திப்போம்”என்று சொல்லி நான் நகரும் முன்னமே புத்தகத்தைத் தொடர்ந்தான். நான் என் இருக்கைகுக்குச் செலுத்தப்பட்டேன். அவமானப் படுத்தப் பட்ட கணங்களை நான் மறப்பதே இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

கிஷ் பெருத்த ஈரப்பதத்துடன் இரவு பன்னிரண்டு மணிக்கு எங்களை உள்வாங்கிக் கொண்டது. என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு என் பார்வை அந்த இலங்கைக்காரனைச் சந்திக்காதிருந்தது. ஆனால் மனம் சொல் பேச்சு கேட்பதேயில்லை. அவமதிக்கப்பட்ட் நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைத்தவண்ணம் சுழன்றது.

என் பெயர் எழுதப்பட்ட அட்டையைத் தூக்கியபடி ஒரு ·பிலிப்பனோக்காரி நின்றிருந்தாள். என் பெயருக்குக் கீழாய் ஜார்ஜ் என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. நான் அந்த ·பிலிப்பினோக்காரியை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “கிஷ் தீவுக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்”என்றாள். நன்றியுரைத்துவிட்டு, செல்லலாமா என்றேன். “திரு. ஜார்ஜுக்காய் உங்களையும் காத்திருக்க வைப்பதில் வருந்துகிறேன்”என்றாள். “நான் ஏன் ஜார்ஜுக்காய் காத்திருக்கவேண்டும்”என்றேன். “மன்னிக்கவும்”என்று சொல்லிச் சிரித்தாள். இதுபோன்ற சமாளிப்புகளை நான் அறவே ஏற்பதில்லை என்றாலும் எதிராளி என் முன்னே நெளிகிறான் என்ற சந்தோஷம் என்னுள் பரவியதல் கொஞ்சம் அமைதிகாத்தேன். என் எரிச்சல் கோபமாகுமுன் அந்த இலங்கைக்காரன் வேகமாய் எங்களை நெருங்கி தன்னை ஜார்ஜ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவள் என்னிடம் சொன்ன அதே வரவேற்புகளை எழுத்துப் பிசகாமல் அவனிடமும் சொன்னாள். எங்களை ஒரு சொகுசு காரில் ஏற்ற்¢க்கொண்டு தங்குமிடத்திற்கு கூட்டிச் சென்றாள். அடுத்தடுத்து அமர்ந்திருந்தும் நானும் இலங்கைக்காரனும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ள வில்லை.

நாங்கள் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் எதிரெதிர் அறைகளில் தங்க வைக்கப்பட்டோம்.
பயணக் களைப்பை குளியலில் கொஞ்சம் குறைத்துவிட்டு வரவேற்பை அடைந்து மோனியை நலம் விசாரித்தேன். இரவில் அவளின் தேவையைச் சொன்னேன். இன்றேவா என்றாள். நான் இன்றேவா என்றால் என்று எதிர்க்கேள்வி கேட்டேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நன்றி என்றேன். இன்னும் அரைமணி நேரத்தில் வருவதாய்ச் சொன்னாள். அவளை கடந்த முறை முதலாய்க் கண்ட மாத்திரத்திலேயே ஆப்கானிஸ்தானி என்று உணர்ந்தேன். என் யூகத்திறனை அறிந்து வியந்தாள். வெகுவாய்ப் புகழ்ந்தாள். காணும் அனைவரும் அவளை இரானி என்றே நினைப்பதாயும் நான் ஒருவன் மட்டுமே ஆப்கானிஸ்தானி என்று அறிந்ததாயும் சொன்னாள். இதுபோன்ற புகழ்ச்சியின் இறுதி என்னவென்று அறியாதவனாய் என்னை அவள் நினைத்திருக்கக்கூடும். இருநூறு எமாரத்திய திர்ஹாம்கள் அதிகமாகும்.

ப்கானிஸ்தானிய பாலியல் தொழிலாளிகள் கூட நேரம் தவறலை விரும்புவதில்லை போல. மிகச்சரியாய் அரைமணி நேரத்தில் அறைக்குள் வந்தாள். மணி இரண்டைத் தொட்டிருந்தது. சொந்தக்கதைகளை சொல்லிய வண்ணம் இருந்தாள். அவளின் தம்பி இரசாக் பதிநான்கு வயதில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் குழுவிற்கு தன்னை அர்பணித்துக்கொண்டானாம். அவனுக்கு போன மாதம் நடந்து முடிந்த திருமணத்திற்கு இவள் ப்கானிஸ்தான் சென்று வந்தாளாம். பாலியல் தொழிலில் பேச்சுத்தடைச்சட்டம் வந்தால் நல்லது. எனக்குத் தூக்கம் வருகிறது என்றேன். பெருமூச்செறிந்தாள். அறையின் விளக்குகளை அணைக்கலாமா என்றாள். விளக்குகள் இருக்கட்டும் என்றேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நான் அழகை அனுபவிக்க மட்டுமல்லாமல் இரசிக்கவும் தெரிந்தவர்கள் என்றேன். இது இரசனை இல்லை நோயின் அறிகுறி என்றாள். பணம் வாங்கும்போது பாவங்கள் கரைவதுபோல உடல் தளர்ந்து விலகும்போது நோயும் கரையும் பெண்ணே என்றேன். அதற்கு மேல் எனக்குப் பொறுமையில்லை. எதிர் அறையில் விளக்கு இன்னும் ஏன் எரிகிறது என்ற யோசனையை தள்ளி வைத்துவிட்டு மோனியை முகரத் தொடங்கினேன். அவள் எரியும் விளக்கைப் பார்த்த வண்ணம் ஒத்துழைத்தாள்.

இரவு எத்தனை மணிக்கு உறங்கினேன் என்பதோ மோனி எப்போது என் அறையைவிட்டு வெளியே சென்றாள் என்பதோ எனக்கு நினைவில்லை. எதிரறையில் இருந்து காட்டுத்தனமாக வந்த ஒரு இசை என்னை எழுப்பியதை உணர்ந்தேன். அது எந்த மொழிப்பாடல் என்று நான் தெரிந்திருக்கவில்லை என்பது என் மனதுள் ஒரு ஆற்றாமையை உண்டாக்கியது. அந்த இலங்கைக்காரன் -பெயர் கூட ஜார்ஜ் என்று நினைவு- கொஞ்சம் திறமையுள்ளவன் என்று ஒரு எண்ணம் கிளர்ந்தபோது உடனே அதை வேசமாய் பிய்த்து எறிந்தேன். அவமானப்படுத்தப்படுவது மறப்பதற்கல்ல.

இன்று மாலை ஐந்து மணிக்கு துபாய் திரும்பவேண்டும். நாளை காலை கட்டுரையின் முதல் பிரதியைத் தரவேண்டும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவது அத்தனை கடினமல்ல. சிற்சில கடினமான ஆங்கிய பிரயோகங்களுடன் சில மேற்கோள்களையும் கூட்டிச் சேர்த்தால் உலகம் கைதட்டும். மோனியைத் தொலைபேசியில் அழைத்தேன். வரவேற்பில் ஒருத்தி மோனி இன்று வரவில்லை என்றாள். குரலில் இந்தியத்தனம் இருந்தது. எனக்கு இந்தியப் பெண்கள் மீது மோகம் இல்லை. மோனியின் செல்·போன் எண்ணைக் கேட்டேன். கொடுத்தாள். உடனே தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பில் இன்றுமா என்றாள். அவளின் ஹாஸ்யம் இரசிக்கத்தக்கதாய் இல்லை. சில நிர்வாண நிமிடங்கள் தரும் சலுகையினால் மோனி தப்பித்தாள். கட்டுரை எழுதத் தேவையான சில புத்தகங்கள் வேண்டுமென்றேன். வரவேற்பைத் தொடர்புகொள்ளச் சொன்னாள். நீ வரமுடியாதா என்றேன். இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று தொடர்பைத் துண்டித்தாள்.

இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாயே வந்துவிட்டாள்.

“விடுதியில் தான் இருந்தாயா? வரவேற்பில் நீ வரவில்லை என்றார்கள்”என்றேன்.

“நான்தான் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தேன். எதிரறையில்தான் இருந்தேன்.”என்றாள்.

“அந்த இரசனைகெட்ட இலங்கைக்காரனுடனா?”

“உங்களுக்குத் தெரியுமா ஜார்ஜை? மறக்கமுடியாத அதிசயமான மனிதர். வரிக்கு வரி தாய்நாடு தாய்மொழி என்கிறார் தெரியுமா?.. “என்றாள்.

“பசப்பில் மயங்காதே பெண்ணே. இவர்களுக்கெல்லாம் நாடு களம். மொழி ஒரு ஆயுதம். கிணற்றுத்தவளைகள். மொழியை அவர்கள் வாழவைப்பதாய்ச் சொல்வார்கள். அதுவும் இலங்கைத் தமிழனல்லவா. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்படுவான். உலக அறிவு இருக்காது”

“இல்லை திரு. பென்னி. நீங்கள் தவறாய்ச் சொல்லுகிறீர்கள். ஆப்கானிஸ்தான் பற்றி என்ன அழகாய்ச் சொன்னார் தெரியுமா? உருதில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையாம். அழுதே விட்டேன் தெரியுமா.. ஓ என் தாய்நாடே என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டீர்களானால் உணர்வீர்கள்”என்றாள்.

“பசப்பு மொழிகளின் கூரிய ஆயுதம் கவிதை என்றறிவாயா நீ?”

“எனக்கு வாதிக்கத் தெரியாது திரு. பென்னி.

“எந்த நாட்டில் பூக்கள் மலர்வதில்லையோ
எந்த நாட்டில் குண்டுச் சத்தம் மூச்சுச்சத்தத்தைவிட அதிகம் கேட்கிறதோ
எந்த நாட்டில் குழந்தைகள் முலைப்பால் குடிப்பதில்லையோ
அந்த நாட்டிலும் பெண்கள் ருதுவாகிறார்கள் “

என்ற வரிகளைக் கேட்டவுடன் ஆப்கானிஸ்தானின் புழுதி நிறைந்த தெருக்களும் போரில் பெற்றோரை இழந்த குழந்தையின் அழுகையும் என் ந்¢னைவில் வந்து போனதை நீங்கள் அறிய மாட்டீர்கள். “

“நீ அதிகம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிந்திக்கிறாய் மோனி. கவிதை என்பது உயற்சியாகச் சொல்லுதல் மட்டுமே.”

“எனக்குத் தெரியவில்லை. எனக்குப் பிடித்த வரிகளைச் சொன்னேன். சரி விடுங்கள். உங்களுக்கு நான் இப்போது எந்த வகையில் உதவ முடியும்? சொல்லுங்கள்”என்றாள்.

என் தேவைகளைச் சொன்னேன். அரைமணிநேரத்தில் எல்லாம் கொண்டு வந்து தந்தாள். விடைபெற்றுச் சென்றாள். ஜன்னல் திரைகளை விலக்கி அவள் எங்கே செல்கிறாள் என்று நோட்டமிட்டேன். அவள் அந்த எதிரறைக்குள் சென்றாள். எனக்கு ஏனோ கோபமாய் வந்தது.

***

இந்த முறை இரஷிய விமானத்தில் என் வலது பக்கத்தில் அந்த இலங்கைக்காரன் இருந்தான். அவனைப் பார்க்கும்போதே இனம்புரியாத ஒரு எரிச்சல் உள்ளுள் பரவுவதை அறிந்தேன். அவன் என்னை எப்படி உணருகிறான் என்று தெரியவில்லை.

இன்னும் பதினைந்து நிமிடங்களில் துபாயில் விமானம் தரையிறங்கும். அதற்குமுன்னாய் அவன் என்னை மறக்காதவாறு ஒரு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது. எனக்குத் தோன்றினால் சரியாய்த்தான் இருக்கும். ஆனால் அவன் ஏதோ ஒரு ஆங்கிலப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான். என்பக்கம் திரும்பவேயில்லை. வேறு வழியின்றி நானே தொடங்கினேன்.

“மன்னிக்கவேண்டும் திரு. ஜார்ஜ்”என்றேன். சொல்லுங்கள் என்ற பாவனையில் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி மூக்குக்கண்டாடிக்கும் நெற்றிக்குமான இடைவழியேப் பார்த்தான்.

“நேற்று மோனி நீங்கள் ஒரு கவிதை சொன்னதாய்ச் சொன்னாள்”

“மோனி.. ஓ அந்த ஆப்கானிஸ்தான் விபச்சாரியா?”

எனக்கு சட்டென்று ஒரு கோபம் பரவி அடங்கியது.

“திரு ஜார்ஜ். எப்படி உங்களால் இப்படிச் சொல்ல முடிகிறது?”

“நிஜத்தை நிஜமாய் சொல்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள். எந்த வித சுற்றிவளைத்தலோ ஆபரணமோ இல்லாமல் அம்மணமாய் இருப்பது போன்ற ஒன்று உங்களுக்கு விருப்பம் என்றறிந்தேன்.”

“நானாய் பேச எத்தனித்தேன் என்ற ஒரு காரணத்திற்காய் நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம் என்பதில்லை”

“அப்படியானால் மிக்க நல்லது. இத்தோடு நமது பேச்சை நிறுத்திக்கொள்ளலாம்”

“சரி நிறுத்திக்கொள்ளலாம். னால் ஒன்றைச் சொல்லத்தான் வேண்டும். உங்கள் இரசனைக்கும் வெளி அங்க அசைவுகளுக்கும் அதிக தூரம்”

“இருக்கலாம். ஆனால் எல்லா இரவிலும் நான் விளக்கை அணைக்கிறேன். குருடாகிப் போனப் பார்வையென்றாலும்.”

கொஞ்சம் புரியாத அவன் பதிலை உள்வாங்கிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது நான் மிகுந்த அவமானமாய், நாற்சந்தியில் நிர்வாணமாய் நிற்பதாய் உணர்ந்தேன்.

விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.

Share

அப்பா

அப்பா

–ஹரன் பிரசன்னா

மழை நின்ற பாடில்லை. விடாமல் சோவெனப் பெய்துகொண்டிருந்தது. அப்பாவின் பதட்டமும் தணிந்த பாடில்லை. இந்த அப்பா எனக்குப் புதியது. இப்படி ஒரு நிலையில் அப்பாவைப் பார்த்ததில்லை.

அம்மாவிற்கு அடங்கிய அப்பா, அம்மா மரணத்தில் அழுதுகொண்டே சரி சரி நேரமாயித்து.. சீக்கிரம் எடுங்கோ என்று சொன்ன அப்பா, வைதேகி இந்தக் குடும்பத்துக்கு சாந்தாவுக்குப் பின்னாடி வந்த தெய்வம் மாதிரி.. வீட்டுப் பொம்மனாட்டிங்க கண்ணுல தண்ணி வராத வரைக்கும்தான் அந்தக் குடும்பம் விளங்கும் என்று என் கல்யாணத்தன்றைக்கு என்னிடம் சொன்ன அப்பா , முதலிரவிற்கு மறுநாள் காலையில் என்னடா பெரிய பிரச்சனை ஒண்ணும் இல்லையே என்று கேட்ட அப்பா, மாலை போட்டுண்டிருக்கேன். பத்து நாள்தான். கொஞ்சம் ரகுவைத் தள்ளியிருக்கச் சொல்லும்மா என்று வைதேகியிடம் சொன்ன அப்பா என்று பலத் தோற்றங்கள் கண்ட எனக்கு அப்பாவின் இந்த பதட்டம் புதிது. என்னவென்று கேட்டால் ஒண்ணுமில்லைடா என்ற ஒற்றைத் தெறிப்பாய் பதில் வரும்.

என்ன அப்படி ஒரு பதட்டம்?

வைதேகியைத் தூங்கச் சொல்லிவிட்டு அப்பாவிடம் போனேன்.

"அப்பா தூங்கலையா?"

"நீ தூங்கலையோ?"

"ஏன் இப்படி பதட்டமா இருக்கேள்?"

"ஒண்ணுமில்லையே"

"சுகர் குறைஞ்சிடுத்தா.. கொஞ்சம் ஜீனி கொண்டுவரட்டா?"

"ஒண்ணுமில்லை. போய்த் தூங்கு"

அப்பா அதிகமாய்ப் பேசி நினைவிலில்லை. சிரித்தாலும் வெடித்தாலும் அளவாய்த்தானிருக்கும். பக்கம் பக்கமாய்க் கேள்விகள் கேட்டாலும் நாலு வார்த்தைகளில் பதிலிருக்கும். அதிகம் சொல்லவில்லை என்பதற்காக அந்த பதில் குறைந்துவிடாது. காலத்திற்கும் நிற்கும்.

அப்பாவின் நினைவுகளுடன் கட்டிலில் சரிந்தேன். வைதேகி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பாரம் இறக்கிவைக்க ஒரு ஆளிருந்தால் பிரச்சனை இருக்காது. எனக்கு எல்லாம் அவர்தான் என்ற எண்ணம் இருப்பதனால்தான் இந்தப் பெண்களுக்கு சட்டென்று தூக்கம் வந்துவிடுகிறது. கோபம் அழுகை கூச்சலுக்குப் பின் ஒன்றுமே நடக்காதது போல காபி வேணுமா என்று கேட்கும் மனோபலம் இருக்கிறது. என்னால் ஏன் எல்லாமே வைதேகி என்று இருக்க முடியவிலலை. அவளிடம் சொல்லாத எத்தனை விஷயங்கள் என்னிடம் இருக்கின்றன.

எல்லா ஆண்களும் இப்படித்தான் இருக்கவேண்டும். அப்பாவும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். அம்மாவிற்கு அடங்கி அம்மா சொல்வதுதான் வேதம் என்று வாழ்ந்திருந்தாலும் அம்மாவுக்குத் தெரிந்திருக்காத அப்பாவின் இன்னொரு பக்கம் நிச்சயம். எதையும் நீட்டி முழக்காமல் நறுக்குத் தெறித்தார்போல் பேசும் அப்பாவிடம் சுகமாய் இருந்தாளா அம்மா?

ஏனிப்படி என்னை நானே கேள்விகளால் குடைந்துகொண்டிருக்கிறேன். அப்பா தூங்கியிருப்பாரா என்ற எண்ணம் வந்தது. ஜன்னல் வழியே ஏறிட்டேன். நாற்காலியில் ஏறி பரணில் இருந்த ஒரு பெட்டியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். மணி பார்த்தேன். பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. என்ன ஆச்சு என் அப்பாவுக்கு?

OOO

குருவாயூருக்கு வாருங்கள் என்ற பாடல் ஒலித்துதான் எழும் பழக்கம். அப்பாவிற்கு அந்தப் பாட்டின் மேல் என்ன இஷ்டமோ. பைத்தியம் மாதிரி தினம் தினம் அதையே கேட்டுக்கொண்டு. இன்று பாடல் சத்தத்தைக் காணோம். அப்பா இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாரா? மணி பார்த்தேன். பத்தரை காண்பித்துக்கொண்டிருந்தது. இரவு எத்தனை மணிக்குத் தூங்கினேன்? காலையில் வைதேகி ஏன் எழுப்பாமல் விட்டாள்.

வைதேகி என இரைந்தேன். காபியுடன் வந்தாள். அவள் முகம் பார்க்கும்போது கோபம் படிந்து விடுகிறது. இரண்டு வருடங்கள் இருக்கும் அவள் எனக்கே எனக்காய் வந்து. இன்னும் அதே சினேகம். அதே வசீகரம். என்ன தவம் செய்தனை? அப்பா நன்றிக்குரியவர்.

மீண்டும் அப்பா பற்றிய எண்ணம் வந்தது. நேற்று அப்பா பதட்டமாய்த்தான் இருந்தாரா இல்லை என் வீணான எண்ணங்களா? ஒருவேளை தினம் தினம் அப்பா இப்படித்தான் இருக்கிறாரோ? நேற்று மட்டும்தான் நான் அவரைக் கூர்ந்து பார்த்தேனோ?

இன்று எப்படியிருக்கிறார் என்று பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

என் எண்ணங்களில் கோர்வையில்லை என்பதை அறிந்தேன். வைதேகி நான் ஏதாவது கேட்பேன் என்று நின்றிருந்தாள்.

"அப்பா எங்கடி?"

"கார்த்தாலயே வெளிய போறேன்னார்."

"எங்கயாம்?"

"நான் எப்படி கேக்றது?"

"தூத்தறதே.. குடை கொண்டு போனாரா?"

"கொண்டு போனார்"

நேற்று இரவு முழுதும் அப்பா எதையோ தேடிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. படுக்கையறையிலிருந்து ஹாலுக்கு வந்தேன். நாற்காலி பரணுக்குக் கீழே அதே இடத்தில் இருந்தது. அதில் ஏறி பரணிலிருந்த பெட்டியில் கையைத் துழாவினேன். புத்தகங்களாகத் தட்டுப்பட்டது. பெட்டியைக் கீழே இறக்கினேன். வைதேகி சமையற்கட்டிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு இந்த நான் புதிது.

"அப்பா எப்ப வருவாருன்னு சொன்னாரா?"

உதட்டைப் பிதுக்கினாள். காண அழகாயிருந்தது.

பெட்டியைத் திறந்தேன். முழுக்க டைரிகள். 1969 முதல் 1985 வரையிலான டைரிகள். எதை எடுத்துப் படிக்க என்று குழம்பினேன். ஒரு முடிவுக்கு வந்தவனாய் 1973 ம் வருட டைரியை எடுத்தேன். படிக்க ஆரம்பித்தேன். வைதேகி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்தவர் டைரியைப் படிக்கக்கூடாது என்று அவள் சொல்லவில்லை. நானும் நினைக்கவில்லை. நான் என்ன அடுத்தவனா. ஒரே இரத்தம் எப்படி அடுத்தது ஆகும்?

ஒன்றும் சுவாரஸ்யமில்லை. ஒவ்வொரு பக்கமும் வரவு செலவுகளால் நிரப்பப்பட்டிருந்தது. நிறைய பக்கங்களில் இன்று குறிப்பிடும்படியாய் ஒன்றும் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பா சுவாரஸ்யமான மனிதர் இல்லையோ? கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோமோ? அயர்ச்சியில் அந்த டைரியை மூடி வைத்துவிட்டு 1972 ஐ எடுத்தேன். நிறைய பக்கங்கள் எழுதாமல் இருந்தது. ஒரு சில பக்கங்கள் முழுவதுமாக எழுதப்பட்டிருந்தன. வாசிக்க ஆரம்பித்தேன்.

"கேட் திறக்குற சத்தம் கேக்குது. அப்பாவாயிருக்கும்."வைதேகி.

அவரின் டைரியை படிப்பதை அப்பா பார்த்தால் என்ன சொல்லுவாரோ. எல்லா டைரிகளையும் போட்டு மூடி பெட்டியைத் தூக்கிப் பரணில் வைத்தேன். நாற்காலியையும் அதே இடத்தில் வைத்தேன். கடைசியாய் பார்த்த டைரி மட்டும் தரையில் இருந்தது. அப்பா வருமுன் அதை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தேன்.

விட்டிற்குள்ளே நுழைந்ததும் அப்பா கேட்டார்.

"அவன் எங்கே?"

"இன்னும் எழுந்திருக்கலை. எழுப்பட்டுமா?"

பெண்கள் போல் இயல்பாய் பொய் சொல்ல முடியாதென்று வைதேகியிடம் சொல்ல வேண்டும்.

"வேண்டாம். கசகசன்னு இருக்குது. குளிக்கணும். கொஞ்சம் வெந்நீர் வெச்சா தேவலை"என்று அப்பா சொல்வது கேட்டது. நான் படுக்கையறையில் தூங்கிகொண்டிருப்பதாய் இருந்தேன். டைரி என்னருகில் படபடத்துக்கொண்டிருந்தது.

OOO

இரவு அப்பா தூங்கியபின் டைரியைப் பிரித்தேன். வைதேகி அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் மௌனம் என்னை என்னவோ செய்தது. என் மௌனம் அவளை என்னவோ செய்கிறது என்பதும் அறிவேன். ஆனாலும் இருவரும் மௌனமாய் இருந்தோம்.

டிசம்பர் 18,

…சாந்தா எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள் எனத் தெரியவில்லை. ஓ வென அழுவாள். அழட்டும். வஞ்சிக்கப் பட்டதாய்ப் புலம்புவாள். சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. மனைவி என்ற ஸ்தானத்தின் அர்த்தம் பணிவிடை செய்வது என்பது அவள் எண்ணம். அதை மீறிய புரிந்து கொள்ளுதலோ சூழ்நிலையின் கைதி மனிதன் என்பதன் அர்த்தமோ அவளுக்குள் ஏறாது. விளக்கினால் தான் ஏமாற்றப்பட்டதாய்ச் சொல்லலாம். எப்படியும் சொல்லத்தான் வேண்டும். இன்றில்லை. என்றாவது ஒருநாள்….

நான் ஏனோ படபடப்பாய் உணர்ந்தேன். வைதேகி புரிந்துகொண்டிருக்க வேண்டும். டைரியை மூடி வைத்துவிட்டு நெருங்கி முத்தமிட்டாள். அவள் தலையை வருடிச் சிரித்தேன். என்ன என்றாள். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் டைரியைப் பிரித்தேன். வைதேகி அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அடுத்தடுத்த பக்கங்கள் வெள்ளையாய்ச் சிரித்தன.

டிசம்பர், 26

….சாந்தா ஒரு ஆச்சரியம். இந்த இரண்டு வருடங்களில் அவளுக்குள் இப்படி ஒரு சாந்தா இருப்பது தெரியாமல் போனது எப்படி. எத்தனைத் தெளிவாய் எத்தனைத் தீர்க்கமாய் ஒரு முனங்கலோ முகச்சுளிப்போ இல்லாமல் பழசு போகட்டும் என்றாள். அத்தனை எளிதாய்ப் போகக்கூடியதல்ல என்பதையும் சொல்லத்தான் வேண்டும்…

அடுத்த இரண்டு பக்கங்களில் வரவு செலவு கணக்குகள் மட்டுமே இருந்தது. தினம் தினம் வரவு செலவு எழுதி என்ன சாதித்தார் என்று ஒரு முறையாவது அப்பாவிடம் கேட்கவேண்டும்.

டிசம்பர், 30

…இப்போதெல்லாம் சாந்தாவைத் தவிர வேறதையும் சிந்திக்க முடிவதில்லை. ஒரு நான்கு நாளில் ஒரு ஆணை இப்படி மாற்றும் வல்லமை பெண்ணுக்கு உண்டு போலும். விதையாய் இருந்து வளர்ந்து விருட்சம் போல பரவி விட்டாள். நான் அவள் முன் தூசி போல உணர்கிறேன். நினைவு தெரிந்து நீண்ட நாள்களுப்பின் இன்றுதான் நிம்மதியாய் உறங்கினேன். சாந்தா காரணம். இனி கோமளத்தைப் பற்றிய உறுத்தல்களில்லை. ரகுவிற்கு அம்மா இருக்கிறாள். சாந்தா. இனி என்னுடனும் சாந்தாவுடனும் அவன் வளைய வருவான். கோமளத்தின் ஆத்மா சாந்தமடையும். ரகுவின் ரோஜாப்பூ போன்ற முகத்தைப் பார்த்துக் கொஞ்சலாம். என்னென்னவோ கற்பனைகள். சாந்தா.. என்ன தவம் செய்தனை? உண்மையாய் உன்னை கும்பிடவேண்டும் சாந்தா. உன்னிடம் சொன்னால் சரி விடுங்கோ என்று சொல்லி நான் தூசிக்கும் கீழானவன் என்று சொல்லாமல் சொல்லலாம். எங்கிருந்து கொண்டாய் இந்த வல்லமையை?….

வரிகளின் அர்த்தம் மனதில் ஊன்றியபோது ஒட்டுமொத்த உலகமும் பிளந்த வானத்தின் வழியாய்த் தலையில் வீழ்வது போலிருந்தது. கைகால்கள் செயலிழந்து போனது போன்ற ஒரு பிரமை. வைதேகி என்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

"என்ன ஆச்சு?"என்றாள்.

"ஒண்ணுமில்லை"என்றேன்.

"நீங்களும் அப்பா மாதிரி ஒண்ணுமில்லைனு சொல்ல ஆரம்பிச்சிட்டேளா?"

எனக்குச் சுருக்கென்றது.

"என்னவோ போல இருக்கேளே" -வைதேகி விடமாட்டாள்.

"அடுத்தவா டைரியைப் படிச்சிருக்கக்கூடாது"என்றேன்.

"சரி விடுங்கோ"என்று சொல்லி என்னைக் கட்டிக்கொண்டாள். ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அப்பா, எல்லா நாளும் உண்டான, இத்தனை நாள் நான் புரிந்துகொள்ளாத அதே படபடப்போடு, இந்த வருடத்திய டைரி எழுதிகொண்டிருக்கலாம்.
 

Share