தாயம்


தாயம்

–ஹரன் பிரசன்னா



“போதன்னைக்கும் இதே ஆட்டம்தானா? ஆம்படையான் ஆத்துல இருக்கானே.. அவனோட செத்த நாழி பேசுவோம்னு உண்டா நோக்கு? வர்றாளே பொம்மனாட்டிகளும் என்னைப் பார் என் சமத்தைப் பார்னு.. புருஷா ஆத்துல இருக்காளேன்னு ஒரு லஜ்ஜை வேண்டாம்.. குதிராட்டம் வளர்ந்துர்றதுகள்.”

“நா ஆடுனா உங்களுக்குப் பொறுக்காதே. கரிச்சி கொட்டியாறது. இனி இந்தத் தாயத்த தொட்டா என்ன சவமேன்னு கூப்பிடுங்கோ. எப்ப பாரு தனக்குப் பண்ணனும் தனக்குப் பண்ணனும்னுதான் புத்தி. மத்தவா எப்படிப்போனா உங்களூக்கென்ன? இது ஒண்ணுதான் போது போயிண்டிருந்தது. அதுவும் பொறுக்கலை உங்க கண்ணுக்கு..”



இதோ வந்துடுவேன் இதோ வந்துடுவேன்னு சொல்லிண்டே இருக்கார். ஆளைக் காணோம். எனக்கு கையும் காலும் வெடவெடங்கிறது. அந்த நாசமாப் போன நாத்து எங்க போய் தொலஞ்சதோ? வயித்துல ஜனிச்சதோ ஒண்ணே ஒண்ணு. அதுவும் மசனை.

பொம்மனாட்டி ஒத்த ஆளா அல்லாடிண்டிருக்கேன். அவர் வர்ற வரைக்கும் சித்தப்பாவை இங்க வந்து இருக்கச் சொல்லுன்னு அனுப்பி எத்தனை நாழியாறது. இன்னும் வந்த பாடில்லை. மீசை வந்தவனுக்கு தேசம் தெரியாதும்பா.. சரியாத்தன் சொல்லிருக்கா. எங்க எதைப் பார்த்துண்டு நின்னுண்டு இருக்கோ.

பத்தாம் நாள் சப்பரத்துக்கு மீசை வெச்சதாட்டம் கொழுந்தன். அப்பாவுக்கு இழுத்துண்டு இருக்கு வாடான்னு சொல்லி எத்தனை சமயம் ஆறது. கேட்டா பிஸினஸ்ம்பான். டாலர்ம்பான். பொண்டாட்டிக்கு புடவை எடுக்கணும்னா நாலு நாள் நாயா சுத்துவான். அவ மகராணி. மூத்தான்னு ஒரு மரியாதை கிடையாது. பெரியவான்னு ஒரு சொல் கிடையாது. ஆங்காரி. ஒரு நாள் மாமவுக்கு சிருக்ஷை செஞ்சிருப்பாளா? வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்னு பேச்சு. நாம சொல்லி என்ன பிரயோஜனம். ஆம்படையான் செல்லம்.

அவர். மகா புருஷர். அப்பா சரியில்லை. வெளிய போகாதீங்கோன்னு தலை தலையா அடிச்சுண்டதுதான் மிச்சம். எவனோ மரண நாடி பார்ப்பானாம். அவனை கையோடு கூட்டிண்டு வரப் போறேன்னு போனார். நாலு போன் வந்ததே தவிர அவரை ஆளைக் காணோம். அவன் வர்றதுக்குள்ளே மரண நாடியே வந்துடுத்து போல.

தெய்வமே. வயசான ஜீவன். கஷ்டப்படுத்தாது கொண்டுபோ. ராஜாவாட்டம் வாழ்ந்தார். நோய் நோக்காடுன்னு விழுந்ததே இல்லை. ஆஜானுபாகு.. பஞ்ச கச்சை கட்டிண்டு அங்கவஸ்த்திரத்தை போட்டுண்டு தாத்தா கம்பை கைல வெச்சிண்டு நடப்பாரே.. ரெண்டு கண்ணு போதாது. தேஜஸ்வி.. வந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரை சாப்பிட்டியான்னு ஒரு நாளாவது கேட்காம தூங்கிருப்பாரா? அவர் கூடக் கேட்டதில்லை. என்னை அப்படிப் பாத்துண்டது இல்லை. அப்படி ஒரு ஆத்மா. எப்போ மாமி போனாளோ அப்பமே எல்லாம் போயிடுத்து அவருக்கு. கட்டிண்டவான்னு அப்படி ஒரு இஷ்டம். யாரு இருப்பா இந்தக் காலத்துல? மாமியும் சும்மா சொல்லப்படாது. ஆம்படையான்னா உசுரையே விடுவா. யாரு எதிர்பார்த்தா எல்லாத்தையும் தவிக்கவிட்டுட்டு திடீர்னு போவான்னு? எல்லா நாளும் போல சமைச்சா. குத்து ிளக்கு ஏத்துனா. ஊஞ்சல்ல படுத்துண்டா. என்ன மாமி.. சாப்பிடலையான்னு கேட்டதுக்கு பதிலே இல்லை. சுக ஜீவி. சாவுன்னா அப்படி வரணும். ஆண்டவன் கிருபை வேணும். யாருக்கு கொடுத்து வெச்சிருக்கு?

மாமா படுத்து பத்து நாள் ஆறது. ஆகாரம் வல்லிசா இல்லை. மூணு நாளா இழுத்துண்டு இருக்கு. ஏதேதோ சொல்றார். ரோஜா வேணும்னார். எதுக்கு மாமான்னா பதிலே இல்லை. இன்னைக்கு கார்த்தால ரோஜா வாங்கிக் கைல கொடுத்தது. இன்னும் கைலயே வெச்சிண்டு இருக்கார். என்னென்னமோ சொல்றார். கோர்ட்ன்றார். அமீனான்றார். புத்தி பிறள்றது. நிலையில்லை. இப்பவும் என்னவோ சொல்றார்.

தெருவுல ஆட்டோ சத்தம் கேட்கிறது. அவராய்த்தான் இருக்கும். நேக்கு அழுகை முட்டிண்டு வர்றது.


“இப்போல்லாம் தாயம் அடுறதே இல்லையாடி?”

“என்னைக் கிளறாதேள். அப்புறம் பத்ரகாளி ஆயிடுவேன்.”

“இல்லை. இன்னைக்கு நானும் நீயும் ஆடுறோம் வா.”

“கெட்டது போங்கோ.. அடுத்த ஆத்துக்காரா பார்த்தா சிரிப்பா.. நீங்களூம் உங்க ஆட்டமும்.. நன்னாயிருக்கு..”

“என் பொண்டாட்டி நா ஆடறேன். அடுத்தவா சிரிக்க என்ன இருக்கு. இன்னைக்கு நானும் நீயும் தாயம் ஆடுறோம்.. ஆமா சொல்லிட்டேன்”

என்ன கேட்டேன்னு அவருக்கு இத்தனை கோபம்னு தெரியலை. எரிஞ்சு விழுந்துட்டார். என் கஷ்டம் எனக்கு. இத்தனை மெல்லமா வர்றேளேன்னு கேட்டா அது ஒரு தப்பா. அவரையும் என்ன சொல்ல. அப்பா இப்படிக் கிடக்குறாரேன்னு அவருக்குக் கஷ்டம். மரண நாடி பார்க்கவந்தவன் என்ன சொன்னான்னு கேட்கலாம்னா பயமா இருக்கு. ஆம்படையான்கிட்ட பயந்தா காரியம் நடக்குமோ?

“செத்த நில்லுங்கோ. அவன் என்ன சொன்னான்?”

“நீ கேட்கலையாக்கும்? நிலைக்குப் பக்கத்துலதானே இருந்தாய்?”

“சரியாக் கேட்கலை. சொல்லுங்கோ.”

“இது மரண நாடி இல்லையாம். உயிரெல்லாம் போகாதாம். உசுருக்கு ஆபத்து இல்லைனான்””

“பால வார்த்தான்.”

நாத்து ஓடி வந்து சொன்னான்.

“அப்பா.. தாத்தா கை காலை எல்லாம் ஒரு மாதிரி முறிக்கிறார்ப்பா “

அவர் ஓடினார். நானும் ஓடினேன்.

“பெருமாளே ஒண்ணும் ஆகாது பாத்துக்கோ”

“என்ன பண்றேள்?”

“குருடா எழவு.. நோக்கு பார்த்தா தெரியலயோ?”

“தெரியறது.. தெரியறது.. இப்படி யாராவது ஆணியை வெச்சி தரையில தாயக்கட்டம் வரைவாளா? பின்ன அது
போகவே போகாதோன்னோ..”

“இருந்துட்டுப் போறது.. உன்ன என்னடி பண்றது? ஒவ்வொரு நாளும் சாக்பீஸ் தேடவேண்டாமோன்னோ.”

“அது சரி. அதிவிஷ்டு அனாவிஷ்டு”

அவர் கண்ணுல ஜலம். முழிச்சிண்டு நிக்கறோம். பதட்டத்துல ஒண்ணும் ஓடலை. அழுகைதான் வர்றது. தெய்வம் மாதிரி பட்டு மாமி வந்தாளோ நேக்கு உசிர் வந்ததோ. பட்டு மாமி மாமாவை பார்த்துவிட்டு சொன்னாள்.

“மச மசன்னு நிக்காதேள்.. இன்னும் அரைமணியோ ஒரு மணியோ.. போய்டும்.. சொல்றவா எல்லாருக்கும சொல்லிடு..”

“என்ன மாமி வந்தும் வராததுமா குண்டைத் தூக்கிபோடுறேள்? மரண நாடி பார்த்துட்டு பயப்படவேணாம்னான். இப்போ இப்படி சொல்றேள்.”

“அவன் சொன்னான் சொரக்காய்க்கு உப்பில்லைனு. நேக்கு தெரியாதா.. தத்து பித்தாட்டம் நிக்காம ஆகற காரியத்தைப் பாருடி.. என்னடா சங்கரா நின்னுண்டு இருக்காய்? கட்டில்ல இருக்காரோன்னோ.. பாயை விரிச்சி கீழே படுக்க வைடா.. போற உசுரு கட்டில்ல போகப்படாது.”

ஆக மாமி முடிவே பண்ணிவிட்டாள். மாமி சொன்னதும் அவர் அப்பாவை அலாக்காகத் தூக்கி பாயில் படுக்க வைத்தார். அவரையும் அறியாமல் அவருக்கு கண்ணீர் வந்தது. நாத்து ரொம்ப பயந்துடுத்து. அங்கே நிக்காத போன்னு அதட்டி அனுப்பிவிட்டு நானும் அவரும் மாமியும் அவர் தலை மாட்டில் உட்கார்ந்துகொண்டோம்.

“மாமி. எப்படி இருந்தவர். இப்படி சுக்கா ஆயிட்டாரே மாமி”

“இதுதாண்டி சாஸ்வதம். எது விதிச்சிருக்கோ இல்லையோ.. இது விதிச்சிருக்கு.. எல்லாருக்கும். மனச தேத்திண்டு நாத்துக்கு சாப்பாடு போடு. அப்படியே நீயும் சங்கரனும் சாப்பிட்டுடுங்கோ.. ஜீவன் போயிடுத்துன்னா எல்லாம் முடியறவரைக்கும் சாப்பிடப்பிடாது”

“சரி மாமி”

நாத்துவைக் அழைத்து அடுக்களைக்குள் செல்லுமுன் மாமாவின் முனகல் கேட்பது போல இருந்தது. நாத்துவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அங்கு போனேன். மாமாவின் தலையை அவர் மடியில் வைத்துக்கொண்டிருந்தார். பட்டு மாமி
சொன்னாள்.

“ஒரு டவரால பாலை ஊத்திக்கொண்டுவாடி.. எல்லாரும் ஒரு கரண்டி பாலை வார்த்திடுங்கோ.. சந்தோஷமா அடங்கட்டும்”

“மாமி.. அப்பா ஏதோ முனங்கறார்”

“நினைவு தப்பிடுத்து. இனி அப்படித்தான்”

“இனிமே நினைவே வராதா?””

“அது பகவான் செயல். போ. போய் பாலைக்கொண்டுவா.. நாத்துவையும் அழைச்சிண்டு வா.. எல்லாரும் பாலை ஊத்திடுங்கோ”

அடுக்களைக்குள் சென்று பால் எடுக்கும்போது மாமா முனகுவது கொஞ்சம் தெளிவாகக் கேட்டது. ஏதோ தாயம் என்று சொல்வது போல தெரிந்தது. மாமி அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

“தாயக்கட்டை இருந்தா கைல கொடுடி.”

தாயக்கட்டையை எங்கே தேடுவது. அதற்குள் நாத்து ஓடிப்போய் எடுத்துக்கொண்டு மாமியிடம் தந்தான். நான் பாலை எடுத்துக்கொண்டு ரேழிக்குச் சென்றேன். பட்டு மாமி மாமாவின் உள்ளங்கையை விரித்து தாயக்கட்டையை வைத்து கையை மடக்கி விட்டாள். அவர் கையிலிருந்து தாயக்கட்டை எப்போது வேண்டுமானாலும் விழும்போல இருந்தது. மேல் மூச்சு வாங்குவதும் கூட மெல்ல அடங்கத் தொடங்கியது. பட்டு மாமி சொன்னாள்.

“எல்லாரும் ராமா ராமா சொல்லுங்கோடி”

அவர், நான், பட்டு மாமி, நாத்து எல்லாரும் சொல்ல ஆரம்பித்தோம்.


“சும்மா சொல்லப்புடாது. நன்னாவே ஆடறேள்”

“இதுல நன்னா ஆடறதுக்கு என்னடி இருக்கு. விழறதை நகட்றேன்.”

“கதை. எதுக்கு எந்த காயை நகட்டனும், எப்போ எந்தக் காயை வெட்டணும்னு சூட்சமம் தெரிஞ்சிருக்கு. பொம்மனாட்டி கணக்கா. அதிர்ஷ்டமும் இருக்கு. தாயம்னு சொல்லிப் போடுறேள். எந்த தெய்வம் துணைக்கு வருமோ, தாயம் விழுது.”

“தெய்வம் இல்லைடி மண்டு. நீதான்”

“இது என்ன புதுக்கரடி விடுறேள்”

“நோக்கு தெரியாதோ? கட்டிண்டவ மேல ஆம்படையான் உண்மையா அன்பு வெச்சிருந்தான்னா, தாயம்னு சொல்லிப்
போட்டா தாயம் விழுமாம். கோமதிப் பாட்டி சொல்லலையா நோக்கு?”

“இந்த கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.”

“இது கிண்டல் இல்லைடி. நிஜம்”

“அப்படியானா இப்பப் போடுங்கோ”

“இப்பமா?”

“ஏன் இப்போ என் மேல பாசம் இல்லியோ?”

“ஏன் இல்லாம. போடுறேன் பாரு”

“வேண்டாம். பின்னாடி வழியாதேள்”

“அடி போடி இவளே.. இப்பப்பாரு”

“சீக்கிரம் போடுங்கோ.. எத்தன தரம் உருட்டுவேள்”

“செத்த பொறேண்டி என் சமத்துக்கொடமே”

“இதுக்கு மேல பொறுக்க முடியாது.. இப்போ தாயம் போடப்போறேளா இல்லையா?”

“சரி.. பத்து ஒன்பது எட்டு ஏழுன்னு ஒண்ணு வரை எண்ணு.. அப்பப் போடுறேன்”

“சரி எண்றேன்.. பத்து.. ஒன்பது.. எட்டு.. ஏழு.. ஆறு……..”

ராமா ராமா ராமா ராமா…

மனசுக்குள் சேவிக்காத தெய்வம் இல்லை. நல்ல கதி அடையட்டும் பெருமாளேன்னு நெக்குருகித்தான் நிக்கறேன். தாரை தாரையா கண்ணீர் வர்றது. கால் அடங்கிடுத்து என்றாள் மாமி. அப்போதான் கொழுந்தனுக்கு வழி தெரிஞ்சது போல. நேக்கு கோபம் பொத்துண்டு வர்றது. அவர் கண்ணாலே அதட்டினார். அமைதியா இருந்துட்டேன். அவன் முகத்தையும் பார்க்கலை. அவனும் ஒரு கரண்டி பால் ஊத்தினான். பாலில் பாதி வாயின் ஓரம் வழியாகவே வழிஞ்சிடுத்து. அவனும் அழுதான். அப்பா அப்பா என்றான். மாமாவிடம் இருந்து பதிலே இல்லை. அவனைப் பார்க்க பாவமாயும் இருக்கு. நான் வளர்த்த பிள்ளையோன்னோ.

ராமா ராமா ராமா ராமா

கால் அடங்கிடுத்து என்றாள் பட்டு மாமி. ஆனால் வாயில் மட்டும் ஏதோ ஒரு முனகல் இருந்துண்டே இருக்கு. என்ன சொல்ல நினைக்கிறாரோ.. பத்து பேரு சுத்தி நின்னுண்டா ஜீவன் போகாதும்பா. ஆனா மாமி இன்னும் கொஞ்ச நேரத்துல முழுசா அடங்கிடும்னு சொல்றா. என்ன நம்பிக்கையோ எழவோ. தாலி கட்டிண்டு வந்த நாள்லேர்ந்து நேத்து வரை ஒவ்வொண்ணா நினைவுக்கு வந்து நெஞ்சக் குடையறது. நேக்கே இப்படின்னா அவருக்கு எப்படி இருக்கும்? இரத்த பாசம்னா.

“வயிறு அடங்கிடுத்து”

ராமா ராமா ராமா ராமா

இப்போ முனகலும் இல்லை. தலையை அப்புறம் இப்புறமாய் மாமா அசைக்கிறார். நேக்கு வயிறுள் ஒரு பந்து உருள்றது. மாமா உடம்பை நெளக்கிறார்.


“அஞ்சு.. நாலு.. மூணு.. ரெண்டு.. ஒண்ணு.. போடுங்கோ”

பல்லைக் கடிக்கிறார். வாயின் வழியாக லேசாய் ரத்தம் வழியறது. அவர் அப்பான்னு கதறினார். நான் மாமான்னு கதறினேன். மாமி விடாது ராம நாமம் சொன்னாள். மாமா கையை விரித்தார். கையிலிருந்த தாயக்கட்டை தெறித்து அந்தாண்டை விழுந்தது. பின் ஒட்டுமொத்தமாய் அடங்கினார். நானும் அவரும் அழுதோம். எங்களைப் பார்த்து
நாத்துவும் அழுதான். கொழுந்தனும்.

“எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

“ஏண்டி?”

“சொன்ன மாதிரியே தாயம் போட்டுட்டேளே”

Share

Comments Closed