அப்பா

அப்பா

–ஹரன் பிரசன்னா

மழை நின்ற பாடில்லை. விடாமல் சோவெனப் பெய்துகொண்டிருந்தது. அப்பாவின் பதட்டமும் தணிந்த பாடில்லை. இந்த அப்பா எனக்குப் புதியது. இப்படி ஒரு நிலையில் அப்பாவைப் பார்த்ததில்லை.

அம்மாவிற்கு அடங்கிய அப்பா, அம்மா மரணத்தில் அழுதுகொண்டே சரி சரி நேரமாயித்து.. சீக்கிரம் எடுங்கோ என்று சொன்ன அப்பா, வைதேகி இந்தக் குடும்பத்துக்கு சாந்தாவுக்குப் பின்னாடி வந்த தெய்வம் மாதிரி.. வீட்டுப் பொம்மனாட்டிங்க கண்ணுல தண்ணி வராத வரைக்கும்தான் அந்தக் குடும்பம் விளங்கும் என்று என் கல்யாணத்தன்றைக்கு என்னிடம் சொன்ன அப்பா , முதலிரவிற்கு மறுநாள் காலையில் என்னடா பெரிய பிரச்சனை ஒண்ணும் இல்லையே என்று கேட்ட அப்பா, மாலை போட்டுண்டிருக்கேன். பத்து நாள்தான். கொஞ்சம் ரகுவைத் தள்ளியிருக்கச் சொல்லும்மா என்று வைதேகியிடம் சொன்ன அப்பா என்று பலத் தோற்றங்கள் கண்ட எனக்கு அப்பாவின் இந்த பதட்டம் புதிது. என்னவென்று கேட்டால் ஒண்ணுமில்லைடா என்ற ஒற்றைத் தெறிப்பாய் பதில் வரும்.

என்ன அப்படி ஒரு பதட்டம்?

வைதேகியைத் தூங்கச் சொல்லிவிட்டு அப்பாவிடம் போனேன்.

"அப்பா தூங்கலையா?"

"நீ தூங்கலையோ?"

"ஏன் இப்படி பதட்டமா இருக்கேள்?"

"ஒண்ணுமில்லையே"

"சுகர் குறைஞ்சிடுத்தா.. கொஞ்சம் ஜீனி கொண்டுவரட்டா?"

"ஒண்ணுமில்லை. போய்த் தூங்கு"

அப்பா அதிகமாய்ப் பேசி நினைவிலில்லை. சிரித்தாலும் வெடித்தாலும் அளவாய்த்தானிருக்கும். பக்கம் பக்கமாய்க் கேள்விகள் கேட்டாலும் நாலு வார்த்தைகளில் பதிலிருக்கும். அதிகம் சொல்லவில்லை என்பதற்காக அந்த பதில் குறைந்துவிடாது. காலத்திற்கும் நிற்கும்.

அப்பாவின் நினைவுகளுடன் கட்டிலில் சரிந்தேன். வைதேகி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பாரம் இறக்கிவைக்க ஒரு ஆளிருந்தால் பிரச்சனை இருக்காது. எனக்கு எல்லாம் அவர்தான் என்ற எண்ணம் இருப்பதனால்தான் இந்தப் பெண்களுக்கு சட்டென்று தூக்கம் வந்துவிடுகிறது. கோபம் அழுகை கூச்சலுக்குப் பின் ஒன்றுமே நடக்காதது போல காபி வேணுமா என்று கேட்கும் மனோபலம் இருக்கிறது. என்னால் ஏன் எல்லாமே வைதேகி என்று இருக்க முடியவிலலை. அவளிடம் சொல்லாத எத்தனை விஷயங்கள் என்னிடம் இருக்கின்றன.

எல்லா ஆண்களும் இப்படித்தான் இருக்கவேண்டும். அப்பாவும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். அம்மாவிற்கு அடங்கி அம்மா சொல்வதுதான் வேதம் என்று வாழ்ந்திருந்தாலும் அம்மாவுக்குத் தெரிந்திருக்காத அப்பாவின் இன்னொரு பக்கம் நிச்சயம். எதையும் நீட்டி முழக்காமல் நறுக்குத் தெறித்தார்போல் பேசும் அப்பாவிடம் சுகமாய் இருந்தாளா அம்மா?

ஏனிப்படி என்னை நானே கேள்விகளால் குடைந்துகொண்டிருக்கிறேன். அப்பா தூங்கியிருப்பாரா என்ற எண்ணம் வந்தது. ஜன்னல் வழியே ஏறிட்டேன். நாற்காலியில் ஏறி பரணில் இருந்த ஒரு பெட்டியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். மணி பார்த்தேன். பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. என்ன ஆச்சு என் அப்பாவுக்கு?

OOO

குருவாயூருக்கு வாருங்கள் என்ற பாடல் ஒலித்துதான் எழும் பழக்கம். அப்பாவிற்கு அந்தப் பாட்டின் மேல் என்ன இஷ்டமோ. பைத்தியம் மாதிரி தினம் தினம் அதையே கேட்டுக்கொண்டு. இன்று பாடல் சத்தத்தைக் காணோம். அப்பா இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாரா? மணி பார்த்தேன். பத்தரை காண்பித்துக்கொண்டிருந்தது. இரவு எத்தனை மணிக்குத் தூங்கினேன்? காலையில் வைதேகி ஏன் எழுப்பாமல் விட்டாள்.

வைதேகி என இரைந்தேன். காபியுடன் வந்தாள். அவள் முகம் பார்க்கும்போது கோபம் படிந்து விடுகிறது. இரண்டு வருடங்கள் இருக்கும் அவள் எனக்கே எனக்காய் வந்து. இன்னும் அதே சினேகம். அதே வசீகரம். என்ன தவம் செய்தனை? அப்பா நன்றிக்குரியவர்.

மீண்டும் அப்பா பற்றிய எண்ணம் வந்தது. நேற்று அப்பா பதட்டமாய்த்தான் இருந்தாரா இல்லை என் வீணான எண்ணங்களா? ஒருவேளை தினம் தினம் அப்பா இப்படித்தான் இருக்கிறாரோ? நேற்று மட்டும்தான் நான் அவரைக் கூர்ந்து பார்த்தேனோ?

இன்று எப்படியிருக்கிறார் என்று பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

என் எண்ணங்களில் கோர்வையில்லை என்பதை அறிந்தேன். வைதேகி நான் ஏதாவது கேட்பேன் என்று நின்றிருந்தாள்.

"அப்பா எங்கடி?"

"கார்த்தாலயே வெளிய போறேன்னார்."

"எங்கயாம்?"

"நான் எப்படி கேக்றது?"

"தூத்தறதே.. குடை கொண்டு போனாரா?"

"கொண்டு போனார்"

நேற்று இரவு முழுதும் அப்பா எதையோ தேடிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. படுக்கையறையிலிருந்து ஹாலுக்கு வந்தேன். நாற்காலி பரணுக்குக் கீழே அதே இடத்தில் இருந்தது. அதில் ஏறி பரணிலிருந்த பெட்டியில் கையைத் துழாவினேன். புத்தகங்களாகத் தட்டுப்பட்டது. பெட்டியைக் கீழே இறக்கினேன். வைதேகி சமையற்கட்டிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு இந்த நான் புதிது.

"அப்பா எப்ப வருவாருன்னு சொன்னாரா?"

உதட்டைப் பிதுக்கினாள். காண அழகாயிருந்தது.

பெட்டியைத் திறந்தேன். முழுக்க டைரிகள். 1969 முதல் 1985 வரையிலான டைரிகள். எதை எடுத்துப் படிக்க என்று குழம்பினேன். ஒரு முடிவுக்கு வந்தவனாய் 1973 ம் வருட டைரியை எடுத்தேன். படிக்க ஆரம்பித்தேன். வைதேகி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்தவர் டைரியைப் படிக்கக்கூடாது என்று அவள் சொல்லவில்லை. நானும் நினைக்கவில்லை. நான் என்ன அடுத்தவனா. ஒரே இரத்தம் எப்படி அடுத்தது ஆகும்?

ஒன்றும் சுவாரஸ்யமில்லை. ஒவ்வொரு பக்கமும் வரவு செலவுகளால் நிரப்பப்பட்டிருந்தது. நிறைய பக்கங்களில் இன்று குறிப்பிடும்படியாய் ஒன்றும் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பா சுவாரஸ்யமான மனிதர் இல்லையோ? கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோமோ? அயர்ச்சியில் அந்த டைரியை மூடி வைத்துவிட்டு 1972 ஐ எடுத்தேன். நிறைய பக்கங்கள் எழுதாமல் இருந்தது. ஒரு சில பக்கங்கள் முழுவதுமாக எழுதப்பட்டிருந்தன. வாசிக்க ஆரம்பித்தேன்.

"கேட் திறக்குற சத்தம் கேக்குது. அப்பாவாயிருக்கும்."வைதேகி.

அவரின் டைரியை படிப்பதை அப்பா பார்த்தால் என்ன சொல்லுவாரோ. எல்லா டைரிகளையும் போட்டு மூடி பெட்டியைத் தூக்கிப் பரணில் வைத்தேன். நாற்காலியையும் அதே இடத்தில் வைத்தேன். கடைசியாய் பார்த்த டைரி மட்டும் தரையில் இருந்தது. அப்பா வருமுன் அதை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தேன்.

விட்டிற்குள்ளே நுழைந்ததும் அப்பா கேட்டார்.

"அவன் எங்கே?"

"இன்னும் எழுந்திருக்கலை. எழுப்பட்டுமா?"

பெண்கள் போல் இயல்பாய் பொய் சொல்ல முடியாதென்று வைதேகியிடம் சொல்ல வேண்டும்.

"வேண்டாம். கசகசன்னு இருக்குது. குளிக்கணும். கொஞ்சம் வெந்நீர் வெச்சா தேவலை"என்று அப்பா சொல்வது கேட்டது. நான் படுக்கையறையில் தூங்கிகொண்டிருப்பதாய் இருந்தேன். டைரி என்னருகில் படபடத்துக்கொண்டிருந்தது.

OOO

இரவு அப்பா தூங்கியபின் டைரியைப் பிரித்தேன். வைதேகி அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் மௌனம் என்னை என்னவோ செய்தது. என் மௌனம் அவளை என்னவோ செய்கிறது என்பதும் அறிவேன். ஆனாலும் இருவரும் மௌனமாய் இருந்தோம்.

டிசம்பர் 18,

…சாந்தா எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள் எனத் தெரியவில்லை. ஓ வென அழுவாள். அழட்டும். வஞ்சிக்கப் பட்டதாய்ப் புலம்புவாள். சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. மனைவி என்ற ஸ்தானத்தின் அர்த்தம் பணிவிடை செய்வது என்பது அவள் எண்ணம். அதை மீறிய புரிந்து கொள்ளுதலோ சூழ்நிலையின் கைதி மனிதன் என்பதன் அர்த்தமோ அவளுக்குள் ஏறாது. விளக்கினால் தான் ஏமாற்றப்பட்டதாய்ச் சொல்லலாம். எப்படியும் சொல்லத்தான் வேண்டும். இன்றில்லை. என்றாவது ஒருநாள்….

நான் ஏனோ படபடப்பாய் உணர்ந்தேன். வைதேகி புரிந்துகொண்டிருக்க வேண்டும். டைரியை மூடி வைத்துவிட்டு நெருங்கி முத்தமிட்டாள். அவள் தலையை வருடிச் சிரித்தேன். என்ன என்றாள். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் டைரியைப் பிரித்தேன். வைதேகி அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அடுத்தடுத்த பக்கங்கள் வெள்ளையாய்ச் சிரித்தன.

டிசம்பர், 26

….சாந்தா ஒரு ஆச்சரியம். இந்த இரண்டு வருடங்களில் அவளுக்குள் இப்படி ஒரு சாந்தா இருப்பது தெரியாமல் போனது எப்படி. எத்தனைத் தெளிவாய் எத்தனைத் தீர்க்கமாய் ஒரு முனங்கலோ முகச்சுளிப்போ இல்லாமல் பழசு போகட்டும் என்றாள். அத்தனை எளிதாய்ப் போகக்கூடியதல்ல என்பதையும் சொல்லத்தான் வேண்டும்…

அடுத்த இரண்டு பக்கங்களில் வரவு செலவு கணக்குகள் மட்டுமே இருந்தது. தினம் தினம் வரவு செலவு எழுதி என்ன சாதித்தார் என்று ஒரு முறையாவது அப்பாவிடம் கேட்கவேண்டும்.

டிசம்பர், 30

…இப்போதெல்லாம் சாந்தாவைத் தவிர வேறதையும் சிந்திக்க முடிவதில்லை. ஒரு நான்கு நாளில் ஒரு ஆணை இப்படி மாற்றும் வல்லமை பெண்ணுக்கு உண்டு போலும். விதையாய் இருந்து வளர்ந்து விருட்சம் போல பரவி விட்டாள். நான் அவள் முன் தூசி போல உணர்கிறேன். நினைவு தெரிந்து நீண்ட நாள்களுப்பின் இன்றுதான் நிம்மதியாய் உறங்கினேன். சாந்தா காரணம். இனி கோமளத்தைப் பற்றிய உறுத்தல்களில்லை. ரகுவிற்கு அம்மா இருக்கிறாள். சாந்தா. இனி என்னுடனும் சாந்தாவுடனும் அவன் வளைய வருவான். கோமளத்தின் ஆத்மா சாந்தமடையும். ரகுவின் ரோஜாப்பூ போன்ற முகத்தைப் பார்த்துக் கொஞ்சலாம். என்னென்னவோ கற்பனைகள். சாந்தா.. என்ன தவம் செய்தனை? உண்மையாய் உன்னை கும்பிடவேண்டும் சாந்தா. உன்னிடம் சொன்னால் சரி விடுங்கோ என்று சொல்லி நான் தூசிக்கும் கீழானவன் என்று சொல்லாமல் சொல்லலாம். எங்கிருந்து கொண்டாய் இந்த வல்லமையை?….

வரிகளின் அர்த்தம் மனதில் ஊன்றியபோது ஒட்டுமொத்த உலகமும் பிளந்த வானத்தின் வழியாய்த் தலையில் வீழ்வது போலிருந்தது. கைகால்கள் செயலிழந்து போனது போன்ற ஒரு பிரமை. வைதேகி என்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

"என்ன ஆச்சு?"என்றாள்.

"ஒண்ணுமில்லை"என்றேன்.

"நீங்களும் அப்பா மாதிரி ஒண்ணுமில்லைனு சொல்ல ஆரம்பிச்சிட்டேளா?"

எனக்குச் சுருக்கென்றது.

"என்னவோ போல இருக்கேளே" -வைதேகி விடமாட்டாள்.

"அடுத்தவா டைரியைப் படிச்சிருக்கக்கூடாது"என்றேன்.

"சரி விடுங்கோ"என்று சொல்லி என்னைக் கட்டிக்கொண்டாள். ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அப்பா, எல்லா நாளும் உண்டான, இத்தனை நாள் நான் புரிந்துகொள்ளாத அதே படபடப்போடு, இந்த வருடத்திய டைரி எழுதிகொண்டிருக்கலாம்.
 

Share

Comments Closed