Archive for அஞ்சலி

Pareeksha Gnani

ஞாநியைப் பற்றி எழுதுவதை இரு பிரிவினர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஒன்று ஞாநி போலத் தீவிரமான இடதுசாரி கருத்துடையவர்கள். இன்னொன்று என்னைப் போன்ற இந்துத்துவக் கருத்து உடையவர்கள். இரு பிரிவினருக்கும் இவன் ஏன் ஞாநி பற்றி எழுத வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும்.

ஆனால் ஞாநி நிஜமாகவே அன்பானவர். பிடித்தவர்கள் மேல் ஒளிவு மறைவு இல்லாமல் அன்பைப் பொலிபவர். அதற்காகவாவது அவரைப் பற்றி எழுதத்தான் வேண்டும். அன்புக்கும் அரசியல் சார்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது எனக்கும் தெரியும்.

ஞாநிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், கிட்னி மாற்ற வேண்டிய கட்டாயம் வந்திருந்தது. வாரா வாரம் அவர் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் படிக்க உதவியாக இருக்கும் என்று கிண்டில் கருவி ஒன்றை பத்ரி வாங்கி கொடுக்கச் சொல்லி இருந்தார். அதைக் கொடுப்பதற்காக நானும் மருதனும் அவர் வீட்டுக்குச் சென்றோம்.

அதற்கு முன்பு எனக்கு ஞாநியுடன் நல்ல பழக்கம் உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சிகளில் அவர் என்னிடம் பேசுவதை எல்லாம் முன்பு எழுதி இருக்கிறேன். அதேபோல் அவரது பரீக்ஷாவில் நாடகம் நடிக்க என்னை அழைத்த கதையையும் எழுதி இருக்கிறேன். எனவே அவை மீண்டும் இங்கே வேண்டாம்.

நானும் மருதனும் அவர் வீட்டுக்குள் போனபோது, ஒரு கட்டிலில் பனியன் லுங்கியுடன் அமர்ந்திருந்தார். மிகவும் சோர்வாக இருந்தார். அதிக நேரம் பேச வேண்டாம் என்ற அறிவுறுத்தலுக்குப் பின்னர்தான் உள்ளே வந்திருந்தோம். நாங்களும் உடனே கிளம்பத் தயாராகத்தான் இருந்தோம். ஆனால் அவர் எங்களை விடவே இல்லை. நீண்ட நேரம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டினார். எப்போதுமே ஞாநி அப்படித்தான் என்றாலும், அந்தச் சூழலில் அது மிகவும் வினோதமாகவே இருந்தது. மருதன் அவ்வப்போது மெல்ல மெல்லப் பேசினார். நான் நிறையப் பேசினேன்.

ஞாநியின் உடல் உபாதைகள் பற்றி எல்லாம் கேட்டேன். டிவி விவாதம் ஒன்றில் பேசப் போனபோது, அங்கே தரப்பட்ட டீ அவர் மேல் கொட்டிவிட்டது. கொதிக்க கொதிக்க இருந்த அந்த டீ கொட்டியதில், அவர் நெஞ்சுப் பகுதித் தோல் உரிந்துவிட்டது. அப்போது பட்ட கஷ்டத்தை எல்லாம் பகிர்ந்துகொண்டார்.

அவருக்குச் செய்யப்படும் டயாலிசிஸ் பற்றி விரிவாகச் சொன்னார். அந்த நான்கு மணி நேரம் என்ன செய்வது என்று தெரியவில்லை, பைத்தியம் பிடிக்கிறது, இந்த கிண்டில் உதவக்கூடும் என்றார்.

முன்பே என்எச்எம் ரீடர் என்ற இ-புத்தக ரீடர் ஒன்றை வடிவமைக்கும் நோக்கத்தில், அதை விளக்கி அவரிடம் பேசி இருக்கிறேன். புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வதில் அவருக்கு அத்தனை ஆர்வம். புத்தகம் பதிப்பிக்கச் செலவே இல்லை, ஆனால் விற்பனை ஆன்லைனில் நடக்கும் என்றால், எழுத்தாளனுக்கு அது எத்தனை பெரிய வரம் என்று சிலாகித்தார். ஆனால் இ-புத்தக உலகம் அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எழுத்தாளர்களையும் கைவிட்டு விட்டது.

அதேபோல் அவர் ஏதோ ஒரு வெகுஜன இதழில், சக்கர நாற்காலியில் ஆட்சி செய்யும் கருணாநிதி ஓய்வெடுக்கப் போகலாம் என்பது போல எழுதிவிட, அதைத் தொடர்ந்து திமுகவினர் அவரைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஸ்டாலின் அவருக்கு ஃபோன் செய்து பேசியதாகச் சொன்னார். திமுகவினர் அளவுக்கு ஸ்டாலின் கோபப்படவில்லை என்றாலும், அவரிடமும் வருத்தம் இருந்தது, ஆனால் நான் சொன்னதுதான் நியாயம் என்று அவரிடம் வெளிப்படையாகவே சொன்னேன் என்றார். கருணாநிதி இத்தனை வயதுக்குப் பிறகு இன்னும் கஷ்டப்படாமல் பதவியில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு அந்தப் பதவியைத் தரலாம் என்றுதான் ஞாநி எழுதியிருந்தார் என நினைக்கிறேன்.

பின்பு பேச்சு எங்கெல்லாமோ போனது. ஒரு கட்டத்தில், ‘எனக்குப் பணப் பிரச்சினை இப்போது இல்லை. டயாலிசிஸ் செய்யத் தேவையான பணம் தர குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ராஜ வைத்தியம் நடக்கிறது. ஆனால் ஒரு மகனாக நான் என் சித்திக்கோ என் அம்மாவுக்கு இப்படிச் செய்ய முடியவில்லை’ என்று சொன்னவர், விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டார். அதுவரை ஞாநியை அப்படிப் பார்த்ததில்லை என்பதால், எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

பின்பு மெல்லத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார் ஞாநி. புத்தகக் கண்காட்சி பற்றி, இனி புத்தகங்களின் எதிர்காலம் என்னாகும் என்பது பற்றி எல்லாம் நிறையப் பேசினார். சீக்கிரமே உடல்நிலை சரியாகி வந்து பல புதிய விஷயங்களைச் செய்யப் போவதாகவும், ஓ பக்கங்களைத் தொடரலாமா என்பது பற்றியும், தீம்தரிகிடவைக் கொண்டு வரலாமா என்பது பற்றியும் பேசினார்.

தீம்தரிகிட இதழ் வெளிவந்த போது நான் அதன் சந்தாதாரராக இருந்தேன். அப்போது ஞாநி மரத்தடி யாஹூ இணையக் குழுமத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அதை ஒருங்கிணைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதால், எனக்கு ஞாநியுடன் மெயில் பழக்கம் இருந்ததால், சந்தாதாரராக ஆகி இருந்தேன். ஆனால், நான்கைந்து இதழ்களில் அவர் இதழை நிறுத்திவிட்டார். அடுத்த முறை அவரைப் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது, என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்டேன். பணம் திரும்ப வரவில்லையா என்று கேட்டார். வரவில்லை என்றேன். எல்லாருக்கும் லெட்டர் போட்டு பணத்தைச் சரியாகக் கொடுத்தேனே, உங்களுக்கு எப்படி மிஸ் ஆனது எனத் தெரியவில்லை என்றார். பணம் பிரச்சினை இல்லை என்றேன். இல்லை, இல்லை, ஏதாவது புத்தகங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். வேண்டவே வேண்டாம் என்று சொன்னேன். பின்பு நண்பர்கள் பலர், தீம்தரிகிட இதழுக்குச் சந்தா செலுத்தியதாகவும் அந்த இதழ் நிறுத்தப்பட்டபோது அவரிடம் இருந்து அதற்கு ஈடான புத்தகம் திரும்ப வந்ததாகவும் சொன்னார்கள்.

ஞாநி பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ற அரசியலை ஆதரித்துப் பேசுபவர் என்றெல்லாம் பலர் புகார் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அப்படி இல்லை. யாரேனும் அவருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலேனும் பண உதவி செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர் பணம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அவர் தங்கள் கருத்தைப் பேசுவதற்காக மற்றவர்கள் பணம் கொடுத்திருப்பார்களே ஒழிய, பணம் தந்தவர்களுக்காகக் கருத்தை மாற்றிப் பேசுபவர் அல்ல ஞாநி என்பதே என்றென்றைக்குமான நிலைப்பாடு. ஞாநி இறந்த பின்பு பல நண்பர்களிடம் இதை நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். மெல்ல மெல்லச் சிலர் அதை ஏற்றுக் கொண்டார்கள் என்றே நம்புகிறேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இப்போது வேறு சிலர் மற்ற சிலரைப் பற்றிப் போகிற போக்கில் இப்படிச் சொல்வதைப் பார்க்கிறேன். ஒன்று பணம் கொடுக்காதீர்கள். அல்லது, பணம் கொடுத்தது அவர் கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால், ஓர் ஊக்கத்தொகையாகக் கொடுத்தேன் என்று சொல்லுங்கள். இவை அன்றி, ஒருவருக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்தை மாற்றிப் பேசச் சொல்லி இருந்தால், அது வேறு அரசியல்.

ஞாநி ஆதரித்த கருத்துகள் எனக்குக் கொஞ்சம் கூட ஏற்பில்லாதவை. அன்றும், இன்றும், என்றும். அதேபோல், என்னுடைய கருத்துகள் ஞாநிக்கு எந்த வகையிலும் பொருட்படுத்தத் தகாதவையே. ஞாநி நிலையில் இருந்து பார்த்தால் எந்த வகையிலும் முக்கியத்துவம் பெற வேண்டியவன் அல்ல நான். ஆனாலும் ஞாநி எல்லோரையும் போல எனக்கும் சரிசமமான மரியாதை கொடுத்தார். ஏனென்றால், அதுதான் ஞாநி.

பின்குறிப்பு

ஞாநி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது பேஸ்புக்கில் ஒருவர் ஞாநி எத்தனை ஓட்டுகள் பெறுவார் என ஒரு போட்டியை நடத்தினார். சும்மா இல்லாமல் நானும் அதில் கலந்து கொண்டு, இருப்பதிலேயே குறைவான ஓட்டுகளை அவருக்குச் சொல்லி இருந்தேன். 7500 ஓட்டுகள் வாங்குவார் என சொன்னேன் என்று நினைக்கிறேன். என்ன கொடுமை என்றால் அதில் நான்தான் ஜெயித்தேன். ஞாநி இதையும் புன்னகையுடன் கடந்தார்.

Share

Father’s day

இரண்டு நாட்களுக்கு முன்பாக திடீரென்று ஓர் எண்ணம். அம்மாவை நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அப்பாவை நாம் நினைத்துக் கொள்கிறோமா என்று. அந்த நினைப்பே எனக்குள் பெரிய சங்கடத்தையும் ஒரு விதிர்விதிர்ப்பையும் தோற்றுவித்து விட்டது.

அம்மாவுக்கு இணையாக அப்பாவும் என்றும் போற்றத் தக்கவர். மறக்க முடியாதவர். மறக்கக் கூடாதவர். அன்பே உருவானவர். எளிமையானவர். ஒப்புக்காகப் பாசம் வைக்காமல், பகட்டுக்காகப் பாசம் பாசம் என்று பேசித் திரியாமல் அனைவரது மேலும் உண்மையான பாசம் வைத்தவர். தான் தாழ்வுற்றிருந்த போதும் தனது நிலையில் உயர்ந்திருந்த போதும் யாருக்கும் எந்தக் காலத்திலும் தீங்கு நினைக்காதவர். எதிராளிகளுக்குத் தன்னைப் போலவே கள்ளம் கபடம் தெரியாது என்று ஏமாந்தவர். அந்த ஏமாற்றத்திலும் அவரே வென்று நின்றவர். சூது வாது தெரியாத குழந்தை போன்றவர். ஐந்து நிமிடத்துக்கு மேல் கோபத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாதவர். யார் மீதாவது கோபம் கொண்டுவிட்டால் தன் மேல் தவறே இல்லாத போதும் தான் கொண்ட கோபத்துக்காகக் குற்றவுணர்ச்சி கொள்ளும் ஓர் அதிசயப் பிறவி.

ஆம் என் அப்பா உண்மையிலேயே‌ அதிசயமானவர்தான்.

Share

Kumari Anandhan

சில வருடங்களுக்கு முன்பு மதியம் 1.45 மணி இருக்கும். அப்பொழுது கிழக்குப் பதிப்பகத்தில் இருந்தேன். செக்யூரிட்டி வந்து, ஒருவர் புத்தகம் வாங்க வந்திருக்கிறார் என்று சொல்லவும், உணவு நேரம் முடிந்து 2 மணிக்குதானே விற்பனை தொடங்கும் என்று சொன்னேன். வந்தவர் பெரிய மனிதர் போல் இருக்கிறார், கூட போலிஸ் ஒருவரும் இருக்கிறார், விற்பனைப் பிரதிநிதிகள் மதிய உணவுக்குப் போயிருக்கிறார்கள் என்று சொல்லவும் நான் போய்ப் பார்த்தேன். அங்கே சேரில் குமரி அனந்தன் அமர்ந்திருந்தார். அத்தனை தள்ளாத வயதில் எப்படி மாடி ஏறி வந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. கடை திறக்க அரை மணி நேரமாகும் என்று சொல்லி, அவருக்கு வேண்டிய புத்தகங்களை எழுதி வாங்கிக்கொண்டு, வீட்டிற்குப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லவும் ஆச்சரியப்பட்டார். இப்படி எல்லாம் செய்வீர்களா என்றெல்லாம் கேட்டார். ஃபோன் நம்பரைக் கொடுத்து, இனி ஃபோன் செய்தால் போதும் புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்று சொன்னேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சென்றார்.

குமரி அனந்தன் என்றதும் அதுவரை எனக்கு நினைவுக்கு வந்ததெல்லாம், 1996ல், முதல்நாள் வரை காங்கிரஸுக்கு எதிராகக் கோஷம் போட்டுவிட்டு, மறுநாள் காங்கிரஸ் சொன்னவுடன் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்றுக்கொண்ட குமரி அனந்தனின் முகம்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குமரி அனந்தனை நினைக்கும் போது அவர் மாடிக்கு வந்து காத்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வரும்.

குமரி அனந்தன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி. அவரை இழந்து தவிக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share

Azhagaradi in Madurai and my father

அழகரடியும் அப்பாவும்

மதுரை அழகரடியின் நினைவுகள் மறக்க முடியாதவை. என்னதான் உள்ளும் புறமும் திருநெல்வேலிக்காரனாக இருந்தாலும் 87 முதல் 91 வரை அழகரடியில் வாழ்ந்த காலங்கள் எப்போதுமே பசுமையானவை. இப்படித்தான் நான் என பின்னால் அமையப்போகும் பலவற்றுக்கு அங்கே தான் விதை ஊன்றப்பட்டது என்பது என் மனப்பதிவு. குறிப்பாக இரண்டு பேர் இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர். கொஞ்சம் கமலஹாசனும் கூட. ஆனால் இன்று கமல்ஹாசன் முற்றிலுமாக என்னிடமிருந்து விலகி விட்டார். வெறுப்பு கூட தோன்றி விட்டது. ஆனால் இளையராஜாவும் சச்சினும் அன்று எந்த நிலையில் இருந்தார்களோ அதைவிட கூடுதலான உயரத்தில் இப்போதும் இருக்கிறார்கள்.

அழகரடியை நினைக்கும் போது பல விஷயங்கள் எப்போதும் மனதில் வந்து போகும். அவற்றில் ஒன்று அப்பாவின் நினைவு.

அப்பா, நான், அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என்று ஒண்டிக் குடித்தன வீடு ஒன்றில் வாழ்ந்தோம். வரண்டா போன்ற ஒன்றில் தட்டி போட்டு மறைக்க அது தாத்தாவும் பாட்டி அறையானது. அம்மா அப்பா அக்கா எல்லாம் வீட்டுக்குள் படுத்துக்கொள்ள நான் வெளியே திண்ணையில் படுத்துக் கொள்வேன். வீட்டு வாடகை அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கலாம் என நினைவு. அப்பாவுக்கு சம்பளம் 300 ரூபாய் போல. தினம் பேட்டா ஒரு ரூபாய் டீ குடிக்க. அந்த ஒரு ரூபாயைப் பத்திரமாகச் சேர்த்து வைப்பார். தினச் செலவுக்கு தின வட்டிக்குப் பணம் வாங்கி ஓட்டிய காலம். அப்பா வேல்முருகன் லாரி சர்வீஸ் சென்ற ஒரு கம்பெனியில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார்.

அழகரடியில் இருந்து மெய்ஞானபுரத்தில் குடியிருந்த சித்தப்பா வீட்டுக்கு நடந்து போகும்போது அப்பாவின் ஆபிசைக் கடந்து போக வேண்டும். அப்போது ஆஃபிசுக்குச் சென்று அவரைப் பார்ப்பேன். பென்சிலின் பின்னால் ரப்பர் பேண்டைச் சுற்றி அதை ரப்பராகப் பயன்படுத்துவார். எப்போதும் அந்த பென்சிலைக் காதில் வைத்திருப்பார். பெரிய கணக்கு நோட்டைத் திறந்து ஏதேதோ பெரிய பெரிய நோட்டுகளில் கணக்குப் போட்டுக் கொண்டே இருப்பார். கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்தார். அவரது ஆஃபிஸுக்கு நான் சென்றதும் ஒரு சேரில் அமரச் சொல்வார். டீ குடிக்கிறியா என்று கேட்பார். வேண்டாம் என்பேன். ஏனென்றால் அம்மா என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லி அனுப்பி இருப்பார். அப்படியும் ஒன்றிரண்டு முறை டீ வாங்கிக் கொடுத்திருக்கிறார். என்னவோ அப்பாவை மிகப் பெரிய கம்பெனியில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். மனதுக்குள் அத்தனை பெருமையாக இருக்கும். அப்படியே சித்தப்பா வீட்டிற்கு அந்தப் பெருமிதத்துடன் நடந்து செல்வேன்.

அப்பா தனக்காக எதையும் சேமிக்க வேண்டும் என்று நினைத்தவர் இல்லை. அத்தனை வருமானமும் இல்லை. பெரிய பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டவர் இல்லை. அதற்கான பெரிய கல்வித் தகுதிகளும் இல்லை. ஆனால் எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை மாறாத உறுதியுடையவராக இருந்தார். அவரது இயல்பே அன்புதான். கள்ளம் கபடமற்றவர். எத்தனை வேகமாக கோபம் வருகிறதோ அத்தனை வேகமாக கோபத்தை இழக்க கூடியவர். பின்பு அதிலேயே குற்ற உணர்ச்சி கொண்டு, தான் கோபம் கொண்டவரிடம் ஏதாவது பேசி சமாதானம் செய்யும் வரை நிலை இல்லாமல் தவிப்பவர். அம்மா சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிராகப் பேச நினைத்தாலும் அதை ஆரம்பித்துப் பாதியிலேயே விட்டுவிட்டு அம்மா சொல்வதையே சரி என்று வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்.

எல்லோரையும் போல ஒரு குழந்தையாகவே பிறந்தார். குழந்தையாகவே வளர்த்தார். குழந்தையாகவே வாழ்ந்தார். அப்படியே மறைந்தார்.

அப்பாவும் அம்மாவும் இல்லாமல் இன்று நாங்கள் இல்லை. அழகரடி வீட்டில் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. 15 நாளுக்கு ஒருமுறை கூட இட்லி தோசை சாப்பிட்டிருக்க மாட்டோம். ரேஷன் அரிசி சாப்பாடுதான். தினமும் காலை செய்த குழம்பு ரசம்தான் இரவு வரை. பொரியல் எப்போதாவது இருக்கும். குடும்பமாகச் சேர்ந்து திரைப்படத்திற்குப் போன கதை எல்லாம் கிடையவே கிடையாது. எனக்குத் தெரிந்து ஒரு முறை படித்துறை மடத்தில் சாப்பிட்டுவிட்டு நான் அண்ணா அக்கா அம்மா அப்பா என அனைவரும் பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்த மைக்கேல் மதன காமராஜனுக்குச் சென்றோம். அதற்கு முன்னும் பின்னும் இப்படி அத்தனை பேரும் சேர்ந்து பார்த்த வேறு படங்கள் நினைவுக்கு வரவில்லை.

அப்பா எங்களுக்காகவே வாழ்ந்தார். அப்பாவை நினைக்காத நாளில்லை. மறந்த நொடி இல்லை. எங்கிருந்தாலும் அப்பா எங்களை அணைத்து ஆசீர்வதிக்கட்டும்.

இன்று அப்பாவின் திதி.

Share

Madurai Saravanan is no more

மதுரை சரவணன் – அஞ்சலி

புத்தகக் கண்காட்சிகளில் பங்கெடுத்தவர்களுக்குத் தெரியும் மதுரை சரவணன் என்பவரை. நல்ல கனத்த உடல். நடக்க முடியாமல் நடப்பார். ஆனால் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் வேலை செய்வார். எப்படி இவரால் இந்த உடலை வைத்துக்கொண்டு வேலை செய்ய முடிகிறது என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது.

சிறந்த வாசகர். ஆழமான நினைவாற்றல். ஹிந்துத்துவ ஆதரவாளர். என்றாலும் அனைத்து அரசியல் நூல்களையும் வாசிப்பார். பழைய நூல்கள் மற்றும் பத்திரிகைகளைத் தன் வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். எந்தப் பழைய நூலும் இவரிடம் கிடைக்கும். ஒரு நூலின் பெயரைச் சொன்னால் அதன் ஆசிரியர் பெயர், அதன் பதிப்பகம் என்று எல்லாவற்றையும் சொல்வார். அதை யார் மறு பதிப்பு போட்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்.

புத்தகக் கண்காட்சியில் எந்த வாசகராவது எந்த பதிப்பகத்திலாவது ஏதாவது ஒரு புத்தகத்தைத் தேடுவது இவர் கண்ணில் பட்டுவிட்டால் போதும், உடனே அங்கே ஆஜராகி அந்தப் புத்தகம் தொடர்பான அத்தனை தகவல்களையும் கொட்டிவிடுவார்.

பல முன்னணி பதிப்பகங்கள் இவரிடம் பழைய நூல்களைப் பெற்றே புதிய பதிப்புகளைக் கொண்டு வந்தன. கிழக்கு பதிப்பகம் சுஜாதாவின் நூல்களை வெளியிட்ட போது பல நூல்களை இவர் கொடுத்தார். அதற்குப் பதிலாக கிழக்கு வெளியிட்ட பல அரசியல் நூல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து நூல்களாவது எங்களிடம் இருந்து வாங்கிக் கொள்வார். ஒரே மாதத்தில் அவற்றைப் படித்தும் முடித்துவிடுவார்.

புத்தகக் கண்காட்சியில் பங்கெடுக்க வேறு ஊர்களுக்குப் பயணமாகும்போது, வயதான, கண்பார்வைக் குறைபாடு உள்ள தன் அம்மாவையும் அழைத்து வருவார். இங்கே சங்க அமைப்பு ஆதரவு பெற்ற இடங்களில் தங்க வைப்பார். இவர் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வார். அம்மாவின் உடல்நிலை ஏற்றுக்கொள்ளாது என்ற நிலைவந்தபோது, அம்மாவை மதுரையிலேயே தெரிந்தவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு இவர் மட்டும் வருவார்.

இவருக்கு சில பெரிய வேட்டிகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அன்புடன் பெற்றுக்கொண்டார். தடம் வெளியிட்ட அனைத்துப் புத்தகங்களையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். வலம் இதழை வாசித்துவிட்டு அடிக்கடி ஃபோனில் பேசுவார்.

பேச ஆரம்பித்தால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பேசுவார். சரவணன், வேலையா இருக்கேன் என்று சொன்னால், சரி அப்புறம் கூப்பிடறேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுவார்.

சுவாசம் பதிப்பகம் ஆரம்பித்தவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது இவரை இவரது வீட்டிலேயே சென்று சந்தித்தேன். குறுகலான சந்தில் ஒரு வீடு. அதுவும் மூன்றாவது மாடிக்கு மேலே உள்ள தட்டோட்டியில் ஒரு சின்ன இடம். அங்கே சுற்றிலும் புத்தகங்கள். பக்கத்தில் ஒரு சின்ன சந்து போன்ற வீட்டில் பழைய புத்தகங்களும் பத்திரிகைகளும். மழை வந்தால் தாங்காதே என்று கேட்டேன். கோணி போட்டு மூடி வைப்பேன் என்றார். எப்படி தினம் தினம் நாலு மாடி ஏர்றீங்க என்று கேட்டபோது, இந்த வாடகையே எனக்கு தர முடியலை என்றார்.

மதுரையில் நான் அவரைப் பார்த்தபோது அவருக்கு உடல்நிலையில் பல பிரச்சினைகள் இருந்தன. அந்த வருடப் புத்தகக் கண்காட்சிக்கு அவர் வந்திருக்கவில்லை. அதற்குப் பிறகும் வரவே இல்லை. அவரது வீட்டுக்கு நாங்கள் வந்திருப்பது கூட தெரியாமல் அவரது அம்மா துவைத்துக்கொண்டிருந்தார்.

மதுரை சரவணனை 2017 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு பேட்டி எடுத்து அதை அப்போது யூ டியூபில் வெளியிட்டேன். இன்று தேடிப் பார்த்தால் அந்தப் பேட்டி நீக்கப்பட்டது என்று காண்பிக்கிறது.

மதுரை சரவணன் பல பதிப்பகங்களுக்கு உதவி செய்திருக்கிறார். பதிப்பகங்களும் இவருக்கு உதவி இருக்கின்றன. இன்றுதான் அறிந்தேன், மதுரை சரவணன் இரண்டு நாள்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார் என. நல்ல வாசகர் ஒருவரை நாம் இழந்திருக்கிறோம். சரவணன் ஆன்மா சத்கதி அடையட்டும். ஓம் ஷாந்தி.

Share

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி

2001கள் வாக்கில் மரத்தடி யாஹூ குழுமத்தில் கைக்கு வந்தவற்றை எழுதுவது வழக்கம். அப்போது அந்திமழை.காம் என்றொரு ஆன்லைன் இதழ் இருப்பதே எனக்குத் தெரியாது. என் கவிதை ஒன்றை அந்திமழை என்னும் வலைத்தளம் வெளியிட்டிருப்பதாக நண்பர் ஒரு சொல்லவும், என்னடா இது ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வெளியிட்டிருக்கிறார்களே என்று நினைத்து, அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கவிதை வெளியிட்டதை என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று நான் எழுதிய கடிதத்துக்கு பதில் வந்தபோதுதான் இளங்கோவன் என்று ஒருவர் இருப்பதே எனக்குத் தெரியும்.

அந்த வலைத்தளத்தின் பெயர் அந்திமழைதானா என்பது கூட இப்போது சந்தேகமாக இருக்கிறது. ஆனால் இளங்கோவனின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது.

பத்துப் பதினைந்து நாள்கள் கழித்து, துபாய்க்கு ஒரு மடல் போஸ்டலில் வந்தது. பார்த்தால், என் கவிதையை வெளியிட்டு, அதை அச்செடுத்து தபாலில் அனுப்பி இருந்தார்கள். ஆன்லைன் தளமே ஆன்லைனில் வாசிக்கத்தானே, ஏன் அச்செல்லாம் என்று இளங்கோவனுக்கு பதில் அனுப்பினேன். எப்போது வேண்டுமானாலும் என் படைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்ன நினைவு.

அதன் பிறகு பல முறை இளங்கோவனுடன் தொடர்பு நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே தற்செயலாக அமைந்தவைதான். புத்தகக் கண்காட்சிகளில் பார்ப்பது. ஏதேனும் புத்தக வெளியீட்டில் பார்ப்பது. குறிப்பாக, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட, சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக்கு அவர் வந்திருந்தார். சாருவுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்யாமல் விலகிச் சென்றபோது, என்னை அழைத்துப் பேசினார். இருவரும் சேர்ந்து டீ குடித்தபடி பேசினோம்.

அந்திமழையில் இருந்து அடிக்கடி படைப்புகள் கேட்பார்கள். எழுதிக் கொடுப்பேன். நண்பர் அசோகன் பெரும்பாலும் அதை அப்படியே பிரசுரிப்பார். ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் இதழில் ஏன் எழுதுகிறீர்கள் என்று சில ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள். என் கருத்தை அவர்கள் திருத்துவதே இல்லை, பின்னர் என்ன பிரச்சினை என்பதே என் பதிலாக இருந்தது.

படைப்புக்கான சன்மானத்தை மிகச் சரியாக அனுப்பும் இதழ் அந்திமழை.

ஜெயமோகன் அந்திமழை இதழை முன்னெப்போதோ தீவிரமாகத் திட்டி எழுதியபோது, நான் அந்திமழை போன்ற இடைநிலை இதழ்களின் அவசியத்தைப் பற்றி எழுதினேன். அதற்கும் இளங்கோவன் நன்றி செலுத்தினார்.

அந்திமழை போன்ற ஓர் இதழ், அதுவும் வண்ண நிறத்தில், நல்ல தரத்தில் எப்படி இத்தனை வருடங்கள் தொடர்ந்து வந்தது என்பதே பெரிய புதிர். ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டதாக இருக்கும். ஒரு வேள்வி போல் இந்த இதழ்ப் பணியைச் செய்தாலன்றி, இதனால் கிடைக்கப் போவது எதுவுமில்லை. மாறாக கெட்ட பெயரும் வந்து சேரும். இத்தனை வருடங்கள் அந்திமழை அதுவும் அழகிய வடிவமைப்பில் நல்ல தரத்தில் கொண்டு வந்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். இளங்கோவன் போன்ற ரசிகர் ஒருவரின் பிடிவாதமும் ஆர்வமும் இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை.

இத்தனை சீக்கிரம் நம்மைவிட்டு மறைவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சென்று வாருங்கள் இளங்கோவன். உங்கள் தொடர் பணியை இந்தத் தமிழ் உலகம் மறக்காது. கண்ணீர் அஞ்சலி.

Share

சூர்ப்பனகை

கெ.ஆர்.மீராவின் ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு படித்தேன். எனக்கான தொகுப்பல்ல. இத்தனை வெளிப்படையான பெண்ணியம் எனக்கு ஆகாது. ஒரு கதை நம்மோடு கொள்ளும் ஆத்மார்த்தமான உறவை முடிவு செய்வது அதனுள் இருக்கும் அந்தரங்கமான, ஆர்ப்பாட்டமில்லாத கதையின் போக்குதான். வெளிப்படையாக ஆடம்பரமாக அலட்டலாக அது கதையை மீறும்தோறும் அக்கதை பிரசாரக் கதையாகிறது. இந்த ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு முற்றிலுமாக ஆடம்பரமாக, பிரசாரமாக ஆகிவிடவில்லை. அந்தரங்கமாக அமைதியாகவும் இல்லை. இரண்டுக்கும் இடையே இருக்கிறது.

இத்தொகுப்பில் ‘லி’ என்னும் எழுத்து அச்சாகாமல் ‘-’ என்று அச்சாகி இருக்கிறது. ஒரு பதிப்பகம் பதிப்பிக்கும் புத்தகங்களில் இதுபோன்ற எதிர்பாராத பிழைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பதிப்பாளனாகப் பல சம்பவங்களை இதுபோன்று பார்த்திருக்கிறேன். எனவேதான் எழுத்துப் பிழைகளைப் பற்றி நான் என் விமர்சனங்களில் எழுதுவதே இல்லை. இதைச் சொல்வது வேறொரு காரணத்துக்காக.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சாதேவி’ ஆரம் வெளியீடாக வெளிவந்தது. அதில் முதல் கதையில் மட்டும் பி என்ற எழுத்தைக் காணவில்லை. மற்ற கதைகளில் பிரச்சினை இல்லை. திஸ்கி எழுத்துருவில் பழைய எழுத்துரு ஒன்றை வேறொரு எழுத்துக்கு மாற்றும்போது நிகழ்ந்த விபரீதம் இது. முன்பெல்லாம் ‘ஆ’ என்ற எழுத்தில் பிரச்சினை வரும். 2000களில் தமிழ் எழுத வந்தவர்களுக்கு நினைவிருக்கும். ஆபாசமாகப் பேசினான் என்பது பாசமாகப் பேசினான் என்று வந்துவிடும். இதற்காக நான் என்ன செய்வேன் என்றால், ஆ என்ற எழுத்தை மட்டும் %% என்று ரீப்ளேஸ் செய்துவிட்டு, எழுத்துரு மாற்றிவிட்டு, பின்னர் %% என்பதையெல்லாம் ஆ என்று மாற்றுவேன்.

சாதேவி தொகுப்பில் பி என்ற எழுத்து இல்லை, அதற்குப் பதிலாக ப என்று இருப்பதாக ஆனந்த் அழைத்துச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை ப்ரூஃப் பார்த்தும் பி இல்லையா? மை காட்! நான் ப்ரூஃப் பார்த்தது யூனிகோடில். பி சுழித்துக்கொண்டு போனது வேறொரு எழுத்துருவில்.

‘சூர்ப்பனகை’க்கும் இப்படித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும். அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள்.

அனந்த் என்றதும் நினைவுகள் அவரைச் சுற்றுகின்றன. நான் கிழக்கில் இருந்தபோது மூன்றாவது எம்.டியாகச் சில காலம் வந்தவர் அனந்த். அமெரிக்கவாசி. சார் என்று அழைக்கவே கூடாது, அனந்த் என்றே அழைக்கவேண்டும் என்றார். அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. எல்லாவற்றிலும் ஓர் அமெரிக்க ஒழுங்கை எதிர்பார்த்தார். அதனாலேயே மறுநாளில் அனைவருக்கும் அவர் பிடிக்காமல் போனார்.

ஆனால் பழக பழகத்தான் தெரிந்தது அவர் மனசுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது என்று. இதனாலேயே கூட அவருக்குப் பிரச்சினைகள். அவரால் பிறருக்கும்.

நான் கிழக்கில் இருந்து விலகி சுவாசம் தொடங்கியபோது என்னை அழைத்து அத்தனை அன்பாகப் பேசினார். என்ன என்னவோ அறிவுரைகள் சொன்னார். வாட்ஸப்பில் நீள நீள கட்டுரைகளை அனுப்பினார். முதலீடு தொடர்பான லின்க்குகளை அனுப்பினார்.

ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அவருடனான தொடர்பு குறைந்துபோனது. ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலம் சரியின்றி இறந்து போன செய்தியைக் கேட்டபோது உண்மையிலேயே வருந்தினேன். இதை எழுதும்போது கூட ஏதோ ஒரு சோகம் பரவத்தான் செய்கிறது. நல்ல மனிதர். தன்னை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத, சில பிடிவாதங்களில் தேங்கிவிட்ட மனிதர்களை எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

நேரமிருப்பவர்கள் சூர்ப்பனகை சிறுகதைத் தொகுப்பையும், நேரமே இல்லாவிட்டாலும் சாதேவி தொகுப்பையும் வாங்கவும்.

Share

மடங்கள்

எனக்கு மடம் என்பது சின்ன வயதில் எப்படி அறிமுகமானது என்றால், வருடத்துக்கு மூன்று நாள்கள் அங்கே சாப்பிடப் போவோம் என்ற அளவில்தான். அதுவும் எனக்கு எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்களே. பின்னால் அதற்குள்ளே இருந்த பிரிவுகள் எல்லாம் தெரியவந்தபோது வெட்கமாகிப் போனது. போன எல்லா மடங்களிலும் ராகவேந்திரரையே மனதுக்குள் நினைத்து, பொத்தாம் பொதுவாக ‘பூஜ்யாய ராகவேந்திராய’ சொல்லிக் கும்பிட்டிருக்கிறேன். தெரிந்ததும் அந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே. எங்கள் மடமான வ்யாஸராய மடம் என்பது கூட, கல்யாணக் காரியங்களுக்கு மட்டுமே யாரோ சொல்லி, அந்தப் பெயர் என் செவிக்கு எட்டும் முன்னரே மறைந்துபோன ஓர் ஒலியாகவே இருந்தது.

ராகவேந்திரரின்ஆராதனையின் மூன்று நாள்களில், அம்மா எங்களை வம்படியாக அழைத்துக்கொண்டு மடத்துக்குப் போவாள். ஆராதனை என்பது ஸ்ரீ ராகவேந்திர் ஜீவ சமாதி அடைந்த நாள் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது. மதுரையில் பேச்சியம்மன் படித்துறையில் இருக்கும் மடத்துக்குத்தான் அதிகம் போவோம். அதற்கு முன்னரும் பின்னரும் திருநெல்வேலி ஜங்க்‌ஷனில் இருக்கும் மடத்துக்குப் போயிருந்தாலும் அது மதுரையின் மடம் அளவுக்குப் பெரியதல்ல.

மதுரை மடத்தில் சாப்பாடு போட நேரமாகும். பரிமாற ஆள் இருக்காது. கூட்டம் அம்மும். அதுவும் ரஜினியின் ஸ்ரீ ராகவேந்திரர் படத்துக்குப் பிறகு கேட்கவே வேண்டாம். சாப்பாடு பரிமாறி அதைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவி வெயிலும் கல்லும் புழுதியும் சகதியும் இருக்கும் இடத்தில் கை கழுவி விட்டு, அங்கிருந்து அழகரடியில் இருக்கும் வீட்டுக்கு நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆட்டோ, ரிக்‌ஷா எதுவும் வைக்க மாட்டார்கள். அவ்வளவு வறுமை. பேச்சியம்மன் படித்துறையில் என் அம்மாவுக்கு தூரத்து உறவினர் வேதவியாஸ ராவ் என்று ஒருவர் இருந்தார். வெயிலில் ஏன் அலைகிறீர்கள், எங்கள் வீட்டில் தங்கி, காப்பி சாப்பிட்டுவிட்டு, வெயிலாறப் போகலாம் என்று சொல்வார்கள். அம்மா சந்தோஷமாக அங்கே தங்குவார். ஆனால் எனக்கு என்னவோ போல இருக்கும். (அந்த மாமாவும் அத்தையும் தங்கமானவர்கள். நான் சொல்வது அந்த வயதில் என் மன ஓட்டத்தை.)

ஒவ்வொரு சமயம் பக்கத்தில் இருக்கும் தேவி தியேட்டரில் மதியம் படம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். அன்று சந்தோஷமாக மடத்துக்குப் போவேன். அன்றைக்குப் பார்க்க இலை போட நேரமாகிவிடும். எரிச்சலாக வரும்.

பரிமாறுபவர்கள் அத்தனை பேரும் தன்னார்வத்தின் பேரில் உதவுபவர்கள். அதில் ஒருவர் மதியம் ஒரு மணிக்குப் பரிமாறிவிட்டு, நடுரோட்டிலேயே பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவார். அம்மா என்னை அழைத்துக் காண்பிப்பார், பாத்தியா எவ்ளோ பக்தின்னு என்று சொல்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

மடத்துக்கு இப்படிச் சாப்பிடப் போகணுமா என்று அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவோம். அவனவன் குருகளு பிரசாதம் கிடைக்காதான்னு ஃபாரின்ல இருந்து வர்றான், பக்கத்துல இருந்துட்டு போறதுக்கு என்ன கொள்ளை என்பதே என் அம்மாவின் பதிலாக இருக்கும். சாப்பாடு போடலைன்னா நீ மட்டும் போவியா என்று எதாவது சொல்லி மடக்குவோம்.

மதுரை மடத்தில் சாப்பாடு போட எப்போதும் தாமதாகிவிடும். செய்வார்கள், செய்வார்கள், பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். அங்கிருக்கும் மண்டபத்தில் யாரையாவது பாட அழைத்திருப்பார்கள். வீரமணி ராதா அடிக்கடி வருவார்கள். அவர்கள் பாடுவார்கள், பாடுவார்கள், பாடிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்போது 11 முதல் 15 வயது வரை இருக்கலாம். சரியாகப் பன்னிரண்டு மணிக்கெல்லாம் வயிறு பசியில் கூவத் தொடங்கிவிடும். மத்தியானம் நல்ல சாப்பாடு என்று பெரும்பாலும் காலையில் எதாவது மோர் சாதம் இருக்கும். அதுவும் இல்லையென்றால், சாமி கும்பிடப் போகும்போது சாப்பிடக் கூடாது என்று சொல்லி, வெறும் வயிறாக இருக்கும். அந்தப் பசியில் 2 மணி வரை சாப்பாட்டுக்காகக் காத்திருக்கும்போது எரிச்சலாக வரும்.

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள மடத்தில், பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பரிமாறுவார்கள். மடத்தில் இடம் கம்மி. பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும்போதும் அம்மா விடவில்லை. அரை நாள் லீவு போட்டுக்கிட்டு வா, இல்லைன்னா நான் தனியா வீட்டுக்குப் போகணும் என்றெல்லாம் சொல்லி, என்னை வர வைத்துவிடுவார். நானும் சாப்பிட்டுவிட்டு அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு, எதாவது படம் பார்க்கப் போய்விடுவேன். அப்படிப் பார்த்த ஒரு படம் மலைச்சாரல் என நினைவு. கதாநாயகியின் போஸ்டரைப் பார்த்து அந்தப் படத்துக்குப் போய் பல்பு வாங்கினேன் என நினைக்கிறேன்.

மடம் என்பது அதன் தேவையுடன் எங்களுக்குப் பின்னர் அறிமுகம் ஆனது. அது வருடத்துக்கு மூன்று நாள் சாப்பிடும் இடம் மட்டுமல்ல, அதனால் நமக்கு நிறைய சமயக் கடமைகள் நிறைவேறும் என்று புரியத் தொடங்கியது எப்போதென்றால், என் தாத்தாவின் மரணத்தின் போது. பத்து நாள் காரியங்களை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ பாத ராஜர் மடத்தில் செய்யும்போதுதான் உணர்ந்தோம். அப்போதுதான் எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டதும். பின்னர் சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அப்பாவுக்கும் எங்கள் மாமாவுக்கு அதே மடத்தில் வைத்தே காரியங்கள் நடந்தன.

பின்பு சென்னைக்கு வந்து செட்டில் ஆனோம். அம்மாவுக்குத் தெரியாத ஊர். ஆனாலும் விடவில்லை. ஆராதனை சமயத்தில் எப்படியாவது என்னை மடத்தில் விட்டுவிடு என்றார். நான் காலையிலேயே தி.நகரில் இருக்கும் அலுவலகத்துக்குப் போய்விடுவேன். என் மனைவி என் அம்மாவுக்கு ஒரு ஆட்டோ அமர்த்தித் தருவாள். அலுவலகத்துக்கு அம்மா வந்துவிட, அங்கிருந்து அருகில் இருந்த தி.நகர் மடத்துக்குக் கொண்டு போய்விடுவேன். நீண்ட வரிசை இருக்கும். அம்மா வரிசையில் நின்றிருப்பாள். ஏம்மா இப்படி கஷ்டப்படற, சாப்பாட்டுக்கா பஞ்சம் என்று கேட்பேன். நீ போடா என்று சொல்லிவிடுவாள். வரிசையில் அம்மா நின்றிருந்த சித்திரம் கண்களில் நீருடன் இப்போதும் எட்டிப் பார்க்கிறது. எப்படிச் சாப்பாட்டுக்காக அம்மா வரிசையில் நிற்கிறாள் என்கிற கேள்வி என்னை வாட்டி எடுத்தது. ஆனால் அதை அம்மா ஒரு சுக்காகக் கூட மதிக்கவில்லை.

திருநெல்வேலியில் பாட்டபத்து-வில் வைக்கதஷ்டமி நடக்கும். அன்று ஊர்ச்சாப்பாடு போடுவார்கள். அதற்கும் அம்மா எங்களை அழைத்துக்கொண்டு போய்விடுவாள். ஆனால் மடத்தில் ஆராதனைக்கு வந்தே ஆகவேண்டும் என்னும் அளவுக்கு வற்புறுத்தமாட்டாள். ஒரு தடவை போய்விட்டு, பின்னர் வரமுடியாது என்று மறுத்துவிட்டேன். அம்மாவையும் அலையவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் மடத்துக்கு ஆராதனைக்குப் போவதை மட்டும் எங்களால் தடுக்கமுடியவில்லை.

அம்மா போய் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ராகவேந்திரரின் ஆராதனை துவக்க நாளைக்கு இரண்டு நாள் முன்னர் அம்மாவின் திதி வரும். நான் அம்மாவுக்குத் திதி செய்யப் போகும்போது மடமே பரபரப்பாக இருக்கும். ஏனென்றால், அம்மாவின் திதிக்கு முதல்நாள் பெரும்பாலும் வரலக்ஷ்மி பூஜை இருக்கும். (சில சமயம் மாறும்.) திதி அன்றேவோ அல்லது மறுநாளோ ரிக் வேத உபகர்மா இருக்கும். அதற்கு மறுநாள் ராகவேந்திரரின் பூர்வ ஆராதனை ஆரம்பித்துவிடும். எனவே முழு பரபரப்பில் இருக்கும் மடம். திதி அன்று எப்போதும் சூழ்ந்திருக்கும் அம்மாவின் நினைவுகளைத் தாண்டி, மடத்தில் சாப்பிட அம்மா எடுத்துக்கொண்ட சிரத்தை என்னை மூழ்கடிக்கும்.

இந்த முறை ஞாயிற்றுக் கிழமை ராகவேந்திரரின் உத்தர ஆராதனை வந்தது. என் பையனையும் மகளையும் அழைத்துக்கொண்டு போக முடிவு. என்னைப் போல் அவர்கள் முரண்டெல்லாம் பிடிக்கவில்லை. உடனே சரி என்று சொல்லிவிட்டார்கள். அடிக்கடி போய் பழகிவிட்டதால் அவர்களுக்கு அது வித்தியாசமானதாகத் தெரியவில்லை போல. அதுமட்டுமல்ல, மடங்கள் இப்போதெல்லாம் அலாரம் வைத்தது போல் சரியாகப் பன்னிரண்டரைக்குள் இலை போட்டுவிடுகின்றன. உதவி செய்யவும் ஆள்கள் பலர் இருக்கிறார்கள். மேலும், மகனும் மகளும் மதியம் 1 மணி வரை பசியுடன் இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்கள். எனவே அவர்களுக்கு இது ஒரு கஷ்டமான விஷயமாகவே தெரியவில்லை. நான் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் ஒரு பக்கம் என் மனதில் ஓட, என்னையறியாமல் என் வீட்டில் நான் சொன்னேன், ‘குருகளு பிரசாதம். கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்.’ அம்மாவுக்குப் புரையேறி இருக்கும்.

Share