Archive for புத்தகப் பார்வை

புத்தக விற்பனை குறித்து

இரா நடராசன் அந்திமழை செப்டம்பர் இதழில் அவருடைய புத்தகங்கள் 20,000 முதல் 30,000 வரை விற்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை ஒட்டி எழுந்த சிந்தனைகளின் தொகுப்பு இது. மற்றபடி, இரா நடராசனின் புத்தகங்கள் இத்தனை விற்பது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளருக்கும் இதைவிடக் கொண்டாட்டமான விஷயம் வேறு எதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகமும் இந்த எண்ணிக்கையில் விற்கவேண்டும். மிக நல்ல அல்லது புகழ்பெற்ற புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இனி எழுதப்போவதெல்லாம் என் அனுபவங்கள் தரும் சித்திரத்தை மட்டுமே. இது மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் நான் உண்மையாக இருக்கும் என்று நம்புவதை மட்டுமே இங்கே சொல்கிறேன். இதற்குத் தரவுகள் கிடையாது என்ற போதிலும்.

சாரு நிவேதிதா தனது புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்றிருக்கவேண்டும் என்று அடிக்கடி எழுதுவதைப் பார்க்கலாம். ஆனால் யதார்த்தத்தில் அவரது புத்தகங்கள் 3000 தான் விற்கின்றன என்பதையும் எழுத அவர் தவறுவதில்லை. இது முக்கியமானது. நமது லட்சியம் கனவு ஆசை வேறு. யதார்த்தம் வேறு. யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால்தான் நாம் கனவை அடைய என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கவாவது முடியும். 

புத்தக விற்பனையில் பலவகை உண்டு. ஒரு சில புத்தகங்கள் மட்டும் பல்லாயிரம் விற்பதுண்டு. சில புத்தகங்களைக் கல்லூரிகள் பள்ளிகளில் வாங்குவதால் அதன் விற்பனை ஆயிரக்கணக்கில் விற்பதுண்டு. கல்லூரியில் பாடப்புத்தகமாக வைக்கப்படும் புத்தகங்களும் இப்படி விற்பனையாவதுண்டு. இவற்றையெல்லாம் தேவை சார்ந்த விற்பனை என்று வரையறுக்க இயலாது. தேவை ஏற்படுத்தப்பட்ட புத்தகங்கள் இவை. மக்களிடையே தானாக ஏற்பட்ட தேவை காரணமாக விறப்னையான புத்தகங்களே ஒரு சமூகத்தின் புத்தக விருப்பத்தைச் சொல்ல வல்லது. திணிக்கப்பட்ட விற்ப்னை எவ்விதத்திலும் சமூகத்தின் புத்தகத் தேவையைச் சொல்வதாகாது. ஒரு எழுத்தாளருக்குத் தன் புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் விற்பது மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடியதா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். தானாக ஏற்பட்ட தேவை காரணமாக அவ்விற்பனை நடந்திருந்தால் அது ஓர் எழுத்தாளனுக்குக் கொண்டாட்டத்துக்குரிய ஒரு சாதனையே.

விற்பனையை முன்வைத்து தமிழின் நட்சத்திர எழுத்தாளர்கள் என்று நமக்கே சில மனப்பதிவுகள் இருக்கலாம். கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், வைரமுத்து, மதன், இப்படிச் சிலர். இவர்கள் புத்தகங்களின் விற்பனையைப் பற்றி நாம் தெரிந்துகொண்டாலே நமக்கு இருக்கும் மயக்கங்கள் தெளியலாம். 

இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டி உள்ளது. தமிழில் இதுவரை எந்தப் பதிப்பகமும் தெளிவான விற்பனை விவரங்களை முன்வைத்ததில்லை. எனவே இவற்றையும் புத்தகச் சந்தையிலிருந்து வரும் செவிவழிச் செய்தி வழியாகவும் அனுபவம் வழியாகவே மதிப்பிடவேண்டி உள்ளது. நாளை ஏதேனும் ஒரு பதிப்பகம், நான் சொல்லப்போகும் இக்கூற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாக மறுத்து, தங்கள் புத்தகங்களின் சிறப்பான விற்பனையை நிரூபிக்குமானால், எனக்கு அது மகிழ்ச்சியான தோல்வியாகவும், சிறந்த பாடமாகவும் இருக்கும் என்றே சொல்லிக்கொள்கிறேன். எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பல விற்பனை/பதிப்பக நண்பர்களுக்கும் இது பொருந்தும்.

ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்கலாம் என்று அனுமானிக்கிறேன். தமிழில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பொன்னியின் செல்வன் புத்தகமே விற்பனையில் சாதனை படைத்த நூலாக இருக்கமுடியும். இதைத் தொடர்ந்து கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு நூல்கள் விற்றிருக்கலாம். அதேபோல், புத்தகம் வெளிவந்த வேளையில் அக்னிச் சிறகுகள் பெரிய சாதனை படைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். இதுவரை ஒட்டுமொத்தமாக ஆறு லட்சம் பிரதிகள் விற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். 

இதற்கடுத்து வைரமுத்துவின் நாவல்கள் இந்த இடத்துக்கு வர வாய்ப்புள்ளது. மூன்றாம் உலகப்போர் நாவல் வெளிவந்த 6வது வாரத்தில் 30,000 பிரதிகள் விற்றிருந்தது. வைரமுத்துவின் கவிதை நூல்கள் இந்த அளவு விற்பனை ஆவதில்லை. வைரமுத்துவின் மற்ற இரண்டு நாவல்களும் இதைவிட அதிகமாக விற்றிருக்க வாய்ப்புண்டு.

மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கிமுகிபி, மனிதனும் மர்மங்களும் போன்றவை வருடம் ஆயிரக்கணக்கில் விற்கும் புத்தகங்கள்.

எழுத்துலகின் சூப்பர் ஸ்டாரான சுஜாதாவின் சூப்பர் ஹிட் புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் 6,000 பிரதிகள் விற்கலாம் என்று நினைக்கிறேன். சூப்பர் ஹிட் புத்தகங்கள் மட்டுமே இப்படி. மற்ற புத்தகங்கள் சராசரியாக வருடத்துக்கு ஆயிரம் விற்கலாம்.

இவை இல்லாமல் எழுத்தாளர் யாரென்றே தெரியாமல், அந்த புத்தகப் பெயர் தரும் ஆர்வம் மற்றும் அதன் உள்ளடக்கம் தரும் அனுபவம் ஆகியவற்றுக்காக விற்கும் புத்தகங்கள் உண்டு. (ராஜிவ் கொலை வழக்கு, ஹிட்லர், முசோலினி வகையறா.) துறை சார்ந்த புத்தகங்கள் அதிகம் விற்பதுண்டு. (அள்ள அள்ள பணம் வகையறா.) தொடராக வந்து விற்பனையில் கொடிகட்டும் புத்தகங்கள் உண்டு. (விகடனின் பல புத்தகங்கள்.) இவை எல்லாம் தானாக எழுந்த தேவை சார்ந்து விற்கும் புத்தகங்கள். இதில் பெருமைகொள்ள எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் எல்லாவித உரிமையும் உண்டு.

குழந்தை நூல்களின் விற்பனை பற்றி யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழில் 6 வயதுக்குட்பட்ட குழந்தை நூல்கள் இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். எங்காவது தேடித் தேடி சில புத்தகங்களை வாங்கினால்தான் உண்டு. அதற்கு மேற்பட்ட வயதுக்கான புத்தகங்கள் இன்னது என்ற வகையில்லாமல் நிறையவே உள்ளன. பாரதிப் புத்தகாலயம் நிறைய புத்தகங்களை குழந்தைகளுக்கென வெளியிட்டுள்ளது. ஆனால் அவற்றின் தேவை சார்ந்த விற்பனை குறித்த ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.

இந்த அடிப்படையில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். தமிழகத்தில் இருக்கும் 200 கடைகளின் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் போன் மூலமும்தான் இந்த விற்பனை நடந்திருக்கமுடியும். எனவே விற்பனையாளர்கள் மிக எளிதாக எந்தப் புத்தகங்களுக்குத் தேவை இருக்கிறது என்பதனைக் கண்டுகொள்வார்கள். திடீரென ஒரு புத்தகம் தேவை இருப்பதாகச் சொல்லப்பட்டால், அது இந்த விற்பனையாளர்களின் வழியே விற்கப்படாமல் இருந்தால், அது தானாக எழுந்த தேவையைச் சார்ந்து நிகழ்ந்த புத்தக விற்பனை அல்ல என்றே பொருள்.

இந்த நோக்கில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். நாளையே ஒரு சாதிச் சங்கமோ மத அமைப்போ ஒரு புத்தகத்தை வெள்யிட்டு, அவற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காண்பிக்கமுடியும். இது ஏற்கெனவே நிகழ்ந்தும் இருக்கிறது. இவை புத்தக விற்பனையின் மேன்மையைச் சொல்வதாக நான் நம்பவில்லை. எப்படி இருந்தாலும் அது விற்பனைதானே என்று நினைப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ளக்கூடும். என்னால் இயலாது.

இன்றிருக்கும் நிலை மாறி ஒவ்வொரு புத்தகமும் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதை முன்னெடுக்க இன்று என்ன விற்கிறது என்பதை உண்மையாக நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலை வரவேண்டும். அதோடு நல்ல புத்தகங்களுக்கும் நன்றாக விற்கும் புத்தகங்களுக்குமான தூரம் குறையவேண்டும். 

இரா. நடராசனின் ஆயிஷா புத்தகம் இப்படி விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாப் புத்தகங்களும் இப்படி விற்கிறது என்று என்னால் நம்பமுடியவில்லை. நான் ந்ம்பாத ஒன்று உண்மையாக இருக்கமுடியாது என்று நிச்சயம் சொல்லமாட்டேன். அப்படி அது உண்மையாக இருக்குமானால், நான் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது என்றே பொருள். இரா. நடராசனின் புத்தகங்கள் மேலும் மேலும் விற்க வாழ்த்துகள்.

Share

மதுரை சுல்தான்கள்

மதுரை சுல்தான்கள் புத்தகத்தை நேற்று படித்து முடித்தேன். இந்தப் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு புத்தகம் தனக்கான வாசகர்களைத் தேடிக்கொள்ளும் என்று இலக்கியவாதிகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதை வைத்து நானே பலமுறை பகடி செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகம் உண்மையில் என்னைத் தேடிக்கொண்டது என்றே சொல்லவேண்டும். 2012ல் இந்தப் புத்தகம் வந்தபோது நான் அதை படிக்கவில்லை. பிறகும் படிக்கவேண்டும் என்றுகூட நினைக்கவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) இறந்தபோது, எங்கள் நண்பர்களுக்குள் சில மடல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் அவர் மதுரா விஜயம் என்ற நூலை மையமாக வைத்து எழுதிய திருவரங்கன் உலா பற்றிப் பேசிக்கொண்டோம். அப்போது ஒரு நண்பர், ‘பிரசன்னா, நீங்கள் பரிந்துரைத்த மதுரை சுல்தான்கள் புத்தகம் இப்போது இருப்பில் உள்ளதா’ என்று கேட்டார். உண்மையில் நான் இந்தப் புத்தத்தைப் படித்திருக்கவில்லை. அவருக்குப் பரிந்துரைத்த நினைவும் இல்லை. ஒருவேளை அவர் கேட்டு, நான் வழக்கம்போல் நல்ல புத்தகம் என்று சொன்னேனா என்றும் நினைவில்லை. 🙂 ஆனால் அவரிடம் அதையெல்லாம் சொல்லாமல், புத்தகம் இருப்பில் உள்ளது என்று பதில் அனுப்பிவிட்டேன். பின்பு அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நாளை அந்த நண்பர் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லவாவது தயாராக இருப்போம் என்றுதான் படிக்கத் தொடங்கினேன்.

இதற்கிடையில் எஸ் பி சொக்கலிங்கம் பற்றித் தெரிந்துகொண்டதும் இந்தப் புத்தக வாசிப்பனுபவத்துக்கு உறுதுணையாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது. 😛

மதுரை சுல்தான்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், இந்திய சுல்தான்கள் யாரெல்லாம் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்தார்களோ அவர்களைப் பற்றியெல்லாம் இந்த நூல் பேசுகிறது. சுல்தான்கள் ஆட்சியின்போது இங்கே வந்த பயண யாத்ரிகர்கள் (இப்ன் பதூதா, மார்கோ போலோ போன்றவர்கள்) அன்றைய தமிழ்நாட்டைப் பற்றிச் சொல்லிச்சென்ற குறிப்புகள் எளிய தமிழில் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. 96 பக்கங்கள் மட்டுமே உள்ள சிறிய நூல்தான் இது. 2 மணி நேரத்தில் படித்துவிடலாம்.

வரலாற்றை ஆய்வு நோக்கில் சொல்வது ஒரு வகை. ஒரு பருந்துப் பார்வையில் எளிய தமிழில் சொல்வது ஒரு வகை. இந்நூல் இரண்டாம் வகையைச் சார்ந்தது. மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ மிக முக்கியமான புத்தகம். நான் இந்தப் புத்தகத்தை முதன்முதலில் (1996 வாக்கில்) வாசித்தபோது, இப்படியெல்லாம் பள்ளிகளில் வரலாற்று வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து ஏங்கியிருக்கிறேன். அதே நடையில் அதேபோன்று மதுரை சுல்தான்கள் புத்தகமும் எழுதப்பட்டிருப்பது இனிய ஆச்சரியம். கில்ஜி வம்சம், பாண்டியர்கள், மாலிக் கபூர், குஸ்ரவ் கான், துக்ளக் வம்சம் பற்றியெல்லாம் மிகச் சிறப்பாக, மிக எளிமையாக, மிக சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’

அலாவுதீன் கில்ஜிக்கு மாலிக் கபூர் மீது ஈடுபாடு. முபாரக் கில்ஜிக்கு குஸ்ரவ்கான் மீது ஈடுபாடு. மாலிக் கபூர், குஸ்ரவ் கான் – இருவருமே முஸ்லிமாக மதம் மாறிய இந்துக்கள். மாலிக் கபூர் ஒரு திருநங்கை, இயற்பெயர் சந்த்ராம். வரலாற்றின் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், சுல்தான்கள் / துக்ளக் படையெடுப்பின்போது திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சிலை அடையும் அலைக்கழிப்பின் விவரணைகள் அட்டகாசமாகப் பதிவாகியுள்ளது. துலுக்க நாச்சியார் (சுரதானி) பற்றிய சித்திரம் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. பின்பு உல்லா கான் (முகமது பின் துக்ளக்) படையெடுப்பின்போது ரங்கநாதர் சிலையைக் காப்பாற்ற ஒரு குழுவே உயிரைத் தியாகம் செய்யும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயம், எவ்வித மிகை உணர்ச்சியும் இன்றி, நடந்தது நடந்தவாறு இந்நூலில் விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. அதேபோல் இன்னொரு ரசனையான விஷயம், கங்காதேவி மதுரா விஜயம் நூலில், மீனாட்சி அம்மன் சொன்னதாக கம்பணாவுக்கு எழுதியிருக்கும் கடிதம். 

மதுரை சுல்தான்கள் பற்றி குறைவாகவே சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவுதான் கிடைத்தனவோ என்னவோ.

என் தேர்வில் மிக முக்கியமான புத்தகம். புத்தகம் எழுதிய எஸ்.பி. சொக்கலிங்கத்துக்கு பாராட்டுகள்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-608-7.html

புத்தகத்திலிருந்து ஒரு பக்கம்:

:ms4

 

Share

ஹர்ஷர் மற்றும் கடைசிக் கோடு

இரண்டு புத்தகங்களைப் படிக்க எடுத்திருக்கிறேன். அடுத்த ஒரு மாதத்துக்கு அதிகம் படிக்க விருப்பம். எல்லாம் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாட்டுக்காகத்தான். 

இப்போது எடுத்திருக்கும் புத்தகங்கள்: கடைசிக் கோடு – ரமணன் எழுதியது, கவிதா வெளியீடு. இன்னொன்று, ஹர்ஷர், ஆனந்த விகடன் வெளியிட்டது. 

கடைசிக் கோடு இந்தியாவின் வரைபடம் பிறந்த கதையைச் சொல்லும் புத்தகம். கொஞ்சம் ஜனரஞ்சகமான நடையில் எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கிழக்கு பாணி. தனிப்பட்ட ரசனையில் எனக்கு கிழக்கு பாணி புத்தகங்கள் உவப்பானவை அல்ல என்றாலும், இந்தப் புத்தகம் படிக்க ஓரளவுக்கு சுவாரஸ்யமாகவே உள்ளது. கண்கள் பனித்தன, மீசை துடித்தது வகையறாக்களைத் தாண்டிவிட்டால், நிறையவே ரமணன் புத்தகத்துக்காக உழைத்துள்ளது தெரிகிறது. இந்தப் புத்தகத்துக்கு மாலன் முன்னுரை எழுதியுள்ளார். அவர் அதைப் பொதுவில் பகிர்ந்தால், நிறைய பேர் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

படிக்கப்போகும் இன்னொரு புத்தகம் ஹர்ஷர் பற்றியது. இந்திய வரலாற்றில் ஹர்ஷர், கனிஷ்கர், ஔரங்கசீப் பற்றிய புத்தகங்கள், எளிய தமிழில் இருப்பவை நல்லது. அதை விகடன் புரிந்துகொண்டுள்ளது. இந்தப் புத்தகங்களின் உள்ளடக்க விஷயங்களின் தரம் பற்றித்தெரியவில்லை. படித்தபின்பு சொல்கிறேன். வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கசீப், ஔரங்கசீப்பின் புகழ்பாடும் புத்தகமாக இருக்கவேண்டும். இதையும் விகடன் வெளியிட்டுள்ளது. ஹர்ஷர் பற்றிய புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டியதில், நன்றாக எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. முழுவதும் படித்தால் தெரியும்.

வரலாற்றுப் புத்தகங்களுக்குத் தமிழில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இதை மெனக்கெட்டு எழுத எழுத்தாளர்கள் கிடைப்பது கஷ்டம். அதுதான் பெரிய சவால். விகடன் இந்த வகையில் சில புத்தகங்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுவந்துகொண்டே இருக்கின்றது. போஜ ராஜன் நான் படிக்க விரும்பும் இன்னொரு புத்தகம். இதையும் விகடன் வெளியிட்டுள்ளது.

கடைசிக் கோடு புத்தகம் பற்றி கல்கி வெளியிட்டுள்ள விமர்சனம் இங்கே.

போஜ ராஜன் புத்தகம் பற்றி விகடன் வெளியிட்டுள்ள குறிப்பு:

போஜன், பெரும் புலவன், மொழி, இலக்கியம், சமயம், தத்துவம், இசை, விஞ்ஞானம், சிற்பம், கட்டக்கலை, மருத்துவம், போர்க்கலை என அனைத்துத் துறைகளிலும் அவனுக்கு இருந்த புலமைக்கு அவன் இயற்றிய நூல்களே சான்று. கவிகளை ஆதரித்துப் போற்றினான்.

இலக்கியத் துறையில் சம்பூராமாயணத்தை இயற்றினான். சிருங்கார மஞ்சரி கதா என்ற கதையைஎழுதினான். போஜன் எழுதிய நூல்களில் கட்டக்கலை பற்றிப் பேசும் சமாரங்கண சூத்ரதாரா என்ற நூல் நகர நிர்மாணம் பற்றிப் பேசுகிறது. போஜன் கட்டியதாகச் சொல்லப்படும் 104 கோயில்களில், சைவக் கோயில்களே பெரும்பாலானவை.

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கசேப் புத்தகத்துக்கு ஜூனியர் விகடனில் புத்தகன் எழுதியிருக்கும் விமர்சனம் இங்கே

இதையெல்லாம் சொல்லக் காரணம், இதைப் படிப்பவர்கள் உடனே www.nhm.in/shop சென்று இந்தப் புத்தகங்களையும் வேறு பலப்பல புத்தகங்களையும் வாங்கத்தான். நன்றி!

இன்னும் படிக்க எடுத்து வைத்திருக்கும் சில புத்தகங்கள்: நெல்லை ஜமீன்கள் (சமஸ்தானங்களும் சரிவுகளும்) – விகடன் வெளியீடு; தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும் (கருத்து=பட்டறை வெளியீடு); ஆர். எஸ். எஸ். (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) – சஞ்சீவ் கேல்கர் எழுதியதின் மொழிபெயர்ப்பு – கிழக்கு பதிப்பகம்; நேரு (உள்ளும் புறமும்) – நயந்தாரா செகல் எழுதியதின் மொழிபெயர்ப்பு – கிழக்கு பதிப்பகம், குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் – கிழக்கு வெளியீடு.

ஆர் எஸ் எஸ்  (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) – சஞ்சீவ் கேல்கர் எழுதியதின் மொழிபெயர்ப்பும் நேரு (உள்ளும் புறமும்) புத்தகமும் இன்னும் வெளியாகவில்லை. வெளியானதும் சொல்கிறேன்.

ஆர் எஸ் எஸ் (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) புத்தகத்தின் விளம்பரம்:

rss ad

Share

Thooppukkaari – Malarvathi’s Novel

தலித் நாவல்களை தலித்துகள் எழுதுவதுதான் அழுத்தம் நிறைந்ததாகவும் உணர்வுபூர்வமான வலியைப் பதிவு செய்வதாகவும் இருக்கும் என்றும், தலித்துகள் அல்லாத ஓர் எழுத்தாளர்கூட சிறப்பான முறையில் தலித் நாவலைப் படைக்கமுடியும் என்றும் இரண்டு கட்சிகள் எப்போதுமே உண்டு. இந்த முறை தலித் அல்லாத, ஆனால் தலித்தின் வாழ்க்கையை நெருக்கமாக உணர்ந்து வாழ்ந்த வலியை அனுபவித்த ஒரு படைப்பாளி, அதிலும் ஒரு பெண் இந்த நாவலை எழுதியிருப்பது இந்நூலுக்கு அதிக்கப்படியான முக்கியத்துவத்தை அளிக்கிறது. நாவலின் முதலும் கடைசியுமான ஒரே முக்கியத்துவம் இது மட்டும்தான் என்பதுதான் சோகம்.

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்ததைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் நாவலாசிரியர் மலர்வதியின் பெயரும், நாவல் பெயரும் அடிபடத்துவங்கியதும், அனைவரும் இந்நூலைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். 2011ல் வெளியான நூல் நல்ல கவனம் பெற்றது 2013ல்தான்.

வாழவே வழியில்லாத நிலையில் ஒரு ’நாடாத்தி’ (கனகம்), மலம் அள்ளும் துப்புரவு வேலைக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் போராட்டங்களே கதை. அந்தப் பெண்ணை எல்லாருமே தூப்புக்காரி என்றே அழைக்கிறார்கள். அந்தப் பெண்ணின் மகள் (பூவரசி), மரியாதையற்ற இத்தொழில் இருந்து வெளிவந்தாரா என்பதுதான் கதையின் உச்சம். நூல் முழுக்க நாகர்கோவில் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. படிக்க ஆரம்பித்த உடனேயே சட்டெனத் தடுமாற வைக்கும் வட்டார வழக்கு. பல சொற்கள் பலருக்கும் புரியாமல் போகும் வாய்ப்பு அதிகம். வட்டாரச் சொற்களுக்கான பொருளடைவு நாவல் முடிந்தபின்பு கொடுக்கப்பட்டுள்ளது. அது கொடுக்கப்பட்டிருப்பதே நாவல் முடிந்தபின்புதான் பலருக்கும் தெரிந்திருக்கும். அதை முதல் பக்கங்களிலேயே கொடுத்திருக்கலாம். 

மலர்வதியின் இரண்டாவது நாவல் இது. இன்னும் நாவல் வடிவம் மலர்வதிக்குக் கைக்கூடவில்லை என்பது தெரிகிறது. நாவல் என்பது வெறும் கதை சொல்லல் அல்ல. ஆவணப் பதிவு மட்டும் அல்ல.

இந்நாவலில், கதையோடு தொடர்ந்து இடையிடையே வரும் தத்துவங்கள் கதையோடு சம்பந்தப்படாமலோ அல்லது மிகச் சம்பிரதாயமாகவோ சொல்லப்படுகின்றன.  நாவலை மையமாக வைத்து வாசிகன் யோசிக்க வாய்ப்பளிக்காமல், அனைத்தையும் நாவலாசிரியரே சொல்லிவிடுவதால் அவை பெரும்பாலும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கதையும் பெரும்பாலும் யூகிக்கத்தக்கதாகவே இருக்கிறது. அதிலும் கதையின் உச்சத்தில் வரும் இறுதிப் பக்கங்கள் முழுக்க முழுக்க நாடகத்தனமாகவும், வலிந்து திணிக்கப்பட்ட முற்ப்போக்குத்தனம் கொண்டதாகவும் உள்ளன.

நாடார் பெண் ஒருவர் தலித் வாழ்க்கை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்ததுடன் தூப்புக்காரியாகிறார். இப்பின்னணியில் நாவலை வாசிக்கவேண்டி உள்ளதால், இந்நாவல் பெரும்பாலும் பொருளாதார அடுக்கோடு சம்பந்தட்ட ஒன்றாகவே தோற்றம் கொள்கிறது. அதோடு ஏன் ஒரு நாடார் பெண் மலம் அள்ளப் போனார் என்பது பற்றிய ஆழமான குறிப்புகள் இல்லை. என்னதான் வறுமை என்றாலும், தலித் அல்லாத ஒருவர் இவ்வேலைக்குச் செல்வாரா என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது. ஒரு மருத்துவமனையில் துப்புரவு வேலை என்பதை ஏற்கமுடிகிறது. ஆனால் நாவல் முழுக்க வரும் மலம் பற்றிய விவரிப்புகள், ஏன் அந்த மருத்துவமனையில் அப்படி உள்ளது என்ற ஐயங்களை ஏற்படுத்துவதோடு, இந்த வேலையை எப்படி ஒரு நாடார் பெண் ஏற்றுக்கொண்டார் என்றும் யோசிக்க வைக்கிறது.

தூப்புக்காரிக்கு வரும் கஷ்டங்கள் அனைத்துமே நாடகத்தன்மை கொண்டதாகவே அமைகின்றன. இடையிடையே அவருக்குக் கிடைக்கும் மனித உதவிகளும்கூட, அடுத்தடுத்து இயற்கையாகவே தகர்ந்துவிடுவது, நாவலில் சோகத்தை வலிந்து ஊட்டுவதாகத் தோற்றம் தருகின்றது. அதேசமயம், படித்து முன்னேறினால் இத்தொழில் இருந்து விடுபட்டு வாழ்வில் முன்னேறலாம் என்ற நம்பிக்கையைச் சொல்வதில் மலர்வதி பின்வாங்கவில்லை. இது நம்பிக்கை தரக்கூடியதுதான். 

தூப்புக்காரியாக வேலை செய்தாலும், தன் மகளுக்கு வரும் மாப்பிள்ளை நிச்சயம் சக்கிலியராகவோ வேற்று சாதி ஆணாகவோ இருக்கக்கூடாது என்று கனகம் எண்ணுவதும், அதையே படித்த மகள் பூவரசி எண்ணுவதும் அப்படியே நாவலில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் யதார்த்தம். வழக்கம்போல, மேல் சாதி ஆண் தன் மனத்தைத் திறந்து காட்டாதவனாகவும், சாக்கடை சுத்தம் செய்யும் சக்கிலியரோ (மாரி) பல துன்பங்களுக்குப் பின்பும் தூய்மையான அன்பைச் செலுத்துபவராகவும் வருகிறார். இதில் நமக்கு முக்கியமாகத் தோன்றுவது, பூவரசியின் எண்ணங்களே. 

கற்பு, ஒழுக்கம் போன்றவற்றுக்கு எந்த தனிப்பட்ட அர்த்தமும் இல்லை என்பதை இந்நாவலில் இரண்டு இடங்களில் பார்க்கமுடிகிறது. ஒன்று, சக்கிலியராக வரும் மாரியின் தொடர்புகள். இன்னொன்று, பூவரசி மனோ உடலுறவு. ஏன் திடீரென்று மாரி இறந்துபோகிறார், அதற்குப் பின்பு ஏன் நாவல் எவ்வித யதார்த்தமும் இல்லாமல் (அதற்கு முன்பும் பெரிய அளவில் யதார்த்தம் இருந்துவிடவில்லை என்பது வேறு விஷயம்) அலைபாய்ந்து போகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. நாவல் என்பதற்கு ஒரு தொடக்கம், ஒரு முற்போக்கு முடிவு, நடுவில் கதை என்பன போன்றவை தேவை என்ற கற்பிதங்கள் கலைந்துபோன இச்சூழலில் இந்நாவல் அதே பழைய பாதையில் பயணிக்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். இந்தக் கற்பிதங்களில் இருந்து விடுபட்டு, மொழி நடையில் கூடுதல் கவனம் செலுத்தி, ஒரு நல்ல எடிட்டர் மூலம் நாவல் நன்கு எடிட் செய்யப்படுமானால், அடுத்த நாவலில் மலர்வதி அதிகம் மிளிரக்கூடும்.

இதற்குமுன்பு கிறித்துவ மதம் தொடர்பான மூன்று கட்டுரைத் தொகுதிகள் எழுதியிருக்கும் மேரி புளோரா என்னும் மலர்வதிதான் இந்நாவலின் நூலாசிரியர். தோழர் பொன்னீலனும் மேலாண்மை பொன்னுசாமியும் இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் ‘தூப்புக்காரி’ நாவலை வாசித்தால், இந்நூல் வேறொரு வகையில் ஆவணமாகும்.

தூப்புக்காரி, அனல் வெளியீடு, மலர்வதி, விலை ரூ 75, பக் 136.

ஆனலைனில் வாங்க இங்கே செல்லவும்.

Share

லதா ரஜினிகாந்தின் அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்

 

 

லதா ரஜினிகாந்த் எழுதிய ’அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்’ புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இது ஹிந்துத்துவப் புத்தகம்தானோ என்று எண்ண வைத்துவிட்டார் லதா. எல்லா இடங்களிலும் பாரத தேசம் என்றே குறிப்பிடுகிறார். சுவாமி தயானந்த சரஸ்வதி அருளாசி வழங்கியுள்ளார். ஆர்ய சமாஜம் பற்றி, Go back to Vedas பற்றி, விவேகானந்தர் பற்றி, கோவில் சிலைகளைக் காப்பது பற்றி, நம் பாரதக் கல்வி முறையிலும் கலாசாரத்திலும் மொகலாய மற்றும் பிரிட்டிஷ் ஆதிக்கங்கள் பற்றிப் பல குறிப்புகளை காண்கிறேன். அதற்குப் பின்னர்தான் குழந்தைகளின் கல்வி பற்றிய கட்டுரைகள் தொடங்குகின்றன. மிகத் தெளிவாக புராதன பாரதத்தின் மேன்மையையும் சிறப்பையும் தொடர்ந்து செல்லும் விதமாகவே கல்வி இருக்கவேண்டும் என்ற பார்வையை நூலெங்கும் காணமுடிகிறது. லதா ரஜினிகாந்தை நினைத்து சந்தோஷப்படாமல் இருக்கமுடியவில்லை.

இது தொடராக (இந்திய வெறுப்புக் குழுவாக மாறியிருக்காத) ஆனந்தவிகடனில் வந்திருக்கிறது. முதல் பதிப்பு 1999ல் வெளியாகியிருக்கிறது. தற்போதைய பதிப்பை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

வாங்கிப் பயனடையுங்கள் நண்பர்களே. 🙂

Share

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் என்ற புத்தகத்தின் பெயர் மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் இப்புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். 2005ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அலைகள் வெளியீட்டகம் புத்தக அரங்கில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். அலைகள் வெளியீட்டகத்தின் மற்ற புத்தகங்கள் எல்லாம் எனக்கு பயத்தை ஊட்டுவனவாக இருந்தன. எனவே இப்புத்தகமும் இப்படி இடதுசாரி புகழ்ச்சியைத் தூக்கிப் பிடிக்கும் புத்தகமாக இருக்கும் என்று நினைத்து வாங்காமல் விட்டுவிட்டேன். அடுத்தடுத்த புத்தகக் கண்காட்சிகளிலும் இப்படியே.

wrapper_sathi_vazhakkugal

ஒரு புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் இந்தப் புத்தகத்தைக் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தார்கள். அப்போதெல்லாம் விஜயபாரதம் அரங்கில் யாரையுமே எனக்குத் தெரியாது. எப்படி இந்தப் புத்தகத்தை இங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கவும் எனக்குக் கூச்சமாக இருந்தது. உடனே அலைகள் வெளியீட்டகம் ஸ்டாலுக்குப் போனேன். அங்கேயும் இதே புத்தகம் இருந்தது. அப்படியானால் இது இடதுசாரி உயர்வுநவிற்சிப் புத்தகமா, ஆமென்றால் அதை ஏன் விஜயபாரதம் விற்கிறது என்றெல்லாம் எனக்குக் குழப்பம். உள்ளே புரட்டிப் பார்த்ததில் பல சுவாரஸ்யமான வழக்குகளும், காந்தியைப் பற்றி விமர்சனங்களும் கண்ணில் பட்டன. அப்போதும் வாங்காமல் வந்துவிட்டேன்.

பின்பு ஒருமுறை அரவிந்தன் நீலகண்டன் இந்தப் புத்தகத்தை சிலாகித்துப் பேசினார். இனிமேல் தைரியமாக இந்தப் புத்தகத்தை வாங்கலாம் என்று முடிவு கட்டி, அன்றே அப்புத்தகத்தை வாங்கினேன்.

இப்போது கிழக்கு வெளியீடாக பிரபல கொலை வழக்குகள் என்றொரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. இப்படி ஒரு புத்தகம் வரவேண்டும் என்று உழைத்ததன் முழுப் பங்கும் மருதனையே சாரும். தமிழ்பேப்பரில் நானும் அவரும் எடிட்டர்களாக இருந்தபோது, கொலை வழக்குகள் பற்றி வக்கீல் ஒருவர் எழுதப்போகிறார் என்று மருதன் சொல்லவும், எனக்கு மீண்டும் சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் புத்தகம் நினைவுக்கு வந்தது. அப்போதும் அதை வாசித்தேன்.

கடந்த சில தினங்களாக மீண்டும் இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

பிரபல கொலை வழக்குகள் புத்தகம் போல, சரித்தரத்தை மாற்றிய சதி வழக்குகள் புத்தகம் எவ்விதமான சட்டப் பார்வையையும் கொண்டிருக்கவில்லை. மேலும் சுதந்திரத்துக்கு முற்பட்ட சதி வழக்குகளை மட்டுமே ‘சரித்திரத்தை மாற்றிய சதிவழக்குகள்’ புத்தகம் பேசுகிறது. எனவே எல்லா சதி வழக்குகளும் இந்திய சுதந்திரத்தோடு பிணைந்துகொண்டுள்ளது. இது புத்தகத்துக்கு ஒரு பொதுப்பார்வையையும் தந்துவிடுகிறது.’1961முதல் 1977 வரை பாரதம் இதழில் சில பகுதிகளும், பின்னர் 40 வாரங்களுக்கு சுதந்திரம் இதழிலும் இக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. விடுதலைப் போரில் தமிழகச் சதி வழக்குகள் என்ற பெயரில் வெளிவந்த புத்தகத்தில் இதிலிருந்த சில கட்டுரைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். அலைகள் வெளியீடாக 2001ல் சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் என்ற பெயரில் புத்தகம் வெளிவந்திருக்கிறது. இப்போதும் கிடைக்கிறது.

இந்திய சுதந்திரம் என்றாலே காந்தி என்ற பெயர் மட்டுமே தெரியும் என்பவர்கள் நிச்சயம் வாசிக்கவேண்டிய நூல் இது. பெயர் தெரியாத எண்ணிலடங்கா தியாகிகளுக்கு இந்த நூல் அர்ப்பணம் என்று நூலாசிரியர் சமர்ப்பணத்தில் சொல்லியிருக்கிறார். இந்நூல் முழுமைக்கும் அப்படிப் பெயர் தெரியாத பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நாம் பார்க்கலாம். கூடவே காந்தியின் முக்கியத்துவத்தையும் நாமே உணர்ந்துகொள்ளமுடியும். இந்நூலில் காந்தியைத் தவிர்க்கமுடியாமலும் அதே சமயம் புகழமுடியாமலும் உள்ள தவிப்பை நாம் மிக எளிதாகக் கடந்துவிடமுடியும்.

index_sathi_vazakkugalபடிக்கும்போதே ஒருவித வீராவேசத்தைக் கொண்டு வரும் எழுத்து நடையில் இப்புத்தகம் உள்ளது. அதேசமயம் அது தறிகெட்டு மேலெழும்பி வெற்று உயர்வுநவிற்சி வாக்கியங்களாகவும் ஆகிவிடவில்லை. பல்வேறு சிறிய சிறிய ஆனால் அரிய குறிப்புகள் நூல் முழுவதும் உள்ளது. ஒருவித இடதுசாரி நோக்கில் எழுதப்பட்டிருப்பதால், காந்தியைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம் காந்தியின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் ஆசிரியர். காந்தியைப் பற்றி பல்வேறு தலைவர்கள் சொன்ன எதிர்க்கருத்துக்களையெல்லாம் மிக முக்கிய ஆவணங்களாகக் கருதி அவற்றை மொழிபெயர்த்து இந்நூலில் சரியான இடத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதில் ஒன்று இங்கே:

சௌரி சௌரா சம்பவத்தை அடுத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டபின்பு, நேரு எழுதுவது இது. (காக்கோரி சதி வழக்கில் இது கொடுக்கப்பட்டிருக்கிறது.)

“இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில், மக்கள் அடக்குமுறை தாளாமல் பலாத்காரத்தை உபயோகித்து விட்டார்கள் என்பதற்காக, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே ஒத்திவைப்பதா? ஆம் என்றால், காந்திஜி கூறும் அகிம்சைக் கொள்கையில் எங்கோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த மகத்தான தேசத்தின் கோடிக்கணக்கான மக்களுக்கும், அகிம்சைக் கோட்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து உதறி பாடம் நடத்தி, ஒவ்வொருவரையும் அகிம்சாவாதியாக மாற்றிய பின்னர்தான் போராட்டத்தைத் தொடரவேண்டும் என்றால், இம்மாதிரி பலாத்காரச் சம்பவங்கள் இனி ஒரு போதும் நடக்காது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் போராட்டம் நடத்தவேண்டும் என்றால் அது ஒரு காலத்திலும் சாத்தியப்படாது.

அப்படியே சாத்தியப்பட்டாலும் அதற்குப் பிரிட்டிஷ் போலிசார் நம்மோடு ஒத்துழைப்பார்களா? சாத்வீகமாகப் போராடும் தொண்டர்கள் மீது ஆத்திரத்தைக் கிளறிவிடும் அடக்குமுறைகளை ஏவாமல் இருப்பார்களா? இதற்கான உத்தரவாதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தரமுடியுமா? அதுவும் கைக்கூலிகள் தாங்கலே இம்மாதிரி வன்முறைச் செயல்களைச் செய்துவிட்டுப் பழியை நமது இயக்கத்தின் மீது போடுவதை நம்மால் தடுக்க இயலுமா? ஒருக்காலும் முடியாது.

இந்தியா முழுவதிலும் எந்த ஒரு இடத்திலும் வன்முறைச் சம்பவமே நடக்காது என்ற உத்தரவாதம் ஏற்பட்டால்தான் இயக்கத்தைத் தொடரமுடியும் என்று காந்திஜி கருதுவாரானால் அவரது இயக்கமும் சரி; அகிம்சைப் போராட்டமும் சரி, ஆயிரம் ஆண்டுகளானாலும் வெற்றி பெறப் போவதில்லை. ஒரு அடிமை நாட்டு மக்களிடமிருந்து, அடச்க்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அப்படிப்பட்ட உத்தரவாதத்தைப் பெற எவராலும் முடியாது.”

 

இதுபோன்ற பல குறிப்புகள் இந்நூல் முழுவதும் குவிந்து கிடக்கின்றன. இதில் வரும் வழக்குகளின் விவரங்களையெல்லாம் மனத்தில் இருத்திக் கொள்ளவே முடியாது என்றே நினைக்கிறேன். அத்தனை வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. 32 வழக்குகள் பற்றி மிக விவரமாக 432 பக்கங்களுக்கு விரிகிறது இந்த நூல். ஆய்வு செய்து எழுதப்பட்டிருந்தாலும், மிக அடிப்படையான தேசப்பற்றை முதன்மையாக வைத்தே இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் அறிந்துகொள்ளவேண்டிய, ஆனால் பெயர் கூடத் தெரியாத, தூக்குக் கயிற்றில் தன் உயிரைவிட்ட பல தலைவர்களைப் பற்றிப் படிக்கும்போது மயிர்க்கூச்செறிவதைத் தவிர்க்கமுடியவில்லை. புத்தகத்தின் நடைகூட மயிர்க்கூச்செறியும் விதமாகவே உள்ளது. நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம்.

15 வயதில் இருக்கும் ஒரு பையனுக்கு இந்நூலில் உள்ள சில தேர்ந்தெடுத்த வழக்குகளை அறிமுகப்படுத்தினால் அவன் நிச்சயம் இந்திய தேசியத்தின் பக்கம் வர வாய்ப்புள்ளது. இந்தியாவா, இன்னும் இருக்கிறதா, இன்னும் இருக்கணுமா என்ற ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கு மத்தியில் இது போன்ற புத்தகங்களைப் படிப்பது மட்டுமே இந்திய தேசியத்தை மாணவர்கள் மனத்தில் பிடித்துவைக்கும். நாட்டுப்பற்று என்பது பிற்போக்குத்தனமானது அல்ல, இந்திய தேசியம் என்பது வாய்ப்பந்தல் வழியே எதிர்கொள்ளமுடிந்துவிடும் சிறுமைகொண்ட கற்பிதம் அல்ல, அது உயர்வானது என்பது புரிய வழிவகுக்கும். நம் மாணவர்கள் திடீர் குபீர் இடதுசாரிக் கருத்துகள் வழியே (நாசமாகப்) போகாமல் இருக்க நாம்தான் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். கூடவே நூலில் தெரியும் சில செக்யூலர்த்தனமான வாசகங்களையும் பொறுத்துக்கொள்ளவேண்டும்.

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், அலைகள் வெளியீடு, சிவலை இளமதி, 240 ரூ.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-814-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Share

அம்புலிமாமா, துளிர்

அம்புலிமாமா: கடந்த மூன்று மாதங்களாக அம்புலிமாமா வாசித்துவருகிறேன். அபிராமுக்காக அரவிந்தன் நீலகண்டன் சந்தா செலுத்தியிருந்தார். அதிலிருக்கும் கதைகளை அபிராமை வாசிக்கச் சொல்வதும், நான் அதை வாசித்து அபிராமுக்குக் கதை சொல்வதுமே நோக்கம். தமிழில் குழந்தைகளுக்கென நல்ல நூல்கள் வருவதாகத் தெரியவில்லை. எந்த வயதினருக்கு என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கத் தரவேண்டும் என்று முடிவெடுக்கக்கூடிய நிலையில், நம் முன்னே புத்தகங்கள் தமிழில் கொட்டிக் கிடக்கவில்லை. அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவற்றை நான் சின்ன வயதில், நூலகங்களிலும், அதை வாங்கும் நண்பர்கள் வீட்டிலும் காத்திருந்து வாசித்திருக்கிறேன். இன்று பாலமித்ரா வருகிறதா எனத் தெரியவில்லை. முதன்முதலில் சிறுவர் மலர் வந்தபோது அருமையான படக்கதைகள் வந்தன. இதற்காகவே வெள்ளி காலை எழுந்ததும் என் நண்பன் வீட்டுக்கு ஓடுவேன். எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் பேப்பரே வாங்கமாட்டார்கள். அவ்வளவு கஷ்டம். அப்போது எனக்கு 10 வயது இருக்கலாம்.

பின்பு கல்லுப்பட்டியில் படிக்கும்போது அங்கே இருக்கும் நூலகத்துக்குச் சென்று படிப்பேன். சரியாக இந்த அம்புலிமாமா, பாலமித்ராவை யாராவது எங்காவது ஒளித்து வைத்திருப்பார்கள். அதை நாம் கண்டுபிடித்து படித்துவிட்டு அடுத்தமுறை வந்ததும் படிக்க மீண்டும் அதை ஒளித்துவைத்துவிட்டு வரவேண்டும். மதுரையில் அழகரடியில் உள்ள நூலகத்திலும் அம்புலிமாமா, பாலமித்ராவுக்கு ஒரு பெரிய வரிசையே இருக்கும். கையில் கிடைப்பதே பெரிய விஷயம். 

இப்போதைய அம்புலிமாமாவைப் படிக்கும்போது இப்படி பழைய ஞாபகங்கள் வருகின்றன. ஹிந்து தர்மம் நோக்கிலான சிறுவர் கதைகளை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே என் நோக்கம். அம்புலிமாமாதான் எனக்கு இருக்கும் ஒரே தேர்வு. 

மூன்று இதழ்கள் வாசித்ததில் இருந்து எனக்கு உருவான கருத்துகள். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தரத்தை அப்படியே காத்து வைத்திருப்பது ஒரு பெரிய சாதனை. சந்தேகமேயில்லை. அதிலும் வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதையைப் படிக்கும்போது, முதல் சில வரிகளும், கடைசி சில வரிகளும் அப்படியே உள்ளதைப் பார்க்கும்போது, சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று அபிராமில் பார்க்கிறேன். இரண்டாவது இதழ் வாசிக்கும்போது, போன மாசம் வந்த அதே கதைதாம்ப்பா என்று சொல்லிவிட்டான். பின்பு நான் விளக்கியதும்தான், ஆரம்ப வரிகள் ஒன்றாகவும், பிறகு கதை மாறியும் வரும் என அவனுக்குப் புரிந்தது. விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் இப்போது டிவியில் அச்சுபிச்சுத்தனமாக வருகின்றன. அதைப் பார்த்துப் பழக்கப்பட்ட சிறியவர்களுக்கு, இக்கதைகள் பிடிக்குமா அல்லது வெறுக்குமா எனச் சொல்லத் தெரியவில்லை. அபிராமுக்கு ஓரளவு பிடித்திருந்தது என்றே நினைக்கிறேன். கதைகள் கொஞ்சம் நீளம் என்றே நினைக்கிறான்.

ஒன்றிரண்டு ஒரு பக்கக் கதைகள் வருகின்றன. அவற்றை உடனே படித்துவிடுகிறான். இந்த ஒரு பக்கக் கதைகளின் பிரச்சினை, வரிகளை உடைக்காமல் நீளமாக எழுதுவது. கமா போட்டு எழுதிக்கொண்டே போய்விடுகிறார்கள். ஐந்திலிருந்து எட்டு வார்த்தைகளுக்கு மிகாமல் இருப்பது நல்லது. என்ன ஆரம்பித்தோம், எங்கே முடிகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்வதில் ஏழு வயது அபிராமுக்குச் சிக்கல் உள்ளது. படிக்க படிக்க சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒரு பக்கக் கதைகளை இன்னும் அதிகம் தந்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள நான்கைந்து பக்கக் கதைகளை படித்துவிடுகிறான். அதில் சிக்கல் வருவதில்லை. பள்ளியில் தரப்பட்ட பயிற்சி காரணமாக இருக்கலாம். பெங்களூரு புத்தகக் கண்காட்சி சென்றிருந்தபோது, பல நல்ல சிறுவர் ஆங்கில நூல்கள் 50% தள்ளுபடியில் கிடைத்தன. அள்ளிக்கொண்டு வந்தேன். சிறிய அழகான புத்தகமாக, நான்கைந்து பக்கங்களில் ஒரு கதைகள். இப்படி 10 கதைகள் அடங்கிய ஒரு புத்தகம். இதுபோல 20 புத்தகங்களாவது வாங்கியிருப்பேன். ராமாயணம், மகாபாரதம் படக்கதைகள் கிடைத்தன. வாங்கவில்லை. அடுத்தமுறை வாங்கவேண்டும். படக்கதைகள் போல சிறுவர்களுக்குப் பிடித்துப்போவது வேறொன்றில்லை. புத்தகத்தைப் படிப்பது மகிழ்ச்சி தருவது என்பதைவிட, நாம் புத்தகம் படிக்கிறோம் என்ற கர்வமே அபிராமுக்கு அதிகம் உள்ளது. 🙂

அம்புலிமாமாவின் இன்னொரு பயன், இதிலிருக்கும் கதைகளைப் படித்துவிட்டு கலந்துகட்டி நாமாக ஒரு கதையை உருவாக்கி தினம் சொல்லிவிடலாம். அந்த வகையில் அம்புலிமாமாவுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

படக்கதைகள் அபாரம். படக்கதைகளில் உள்ள வரிகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கிறார்கள் போல. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். 

அம்புலிமமாவின் இதழ் வடிவம் மாறியிருக்கிறது. கல்கி தந்த கலாசாரா ஷாக்கெல்லாம் இல்லை. பெரிய சைஸிலும் இதழ் நன்றாகவே உள்ளது. ஒரு முக்கியமான சௌகர்யம், எழுத்துரு கொஞ்சம் பெரிதாக உள்ளது. சிறுவர்கள் படிக்க ஏதுவாக இருக்கிறது. ஜனவரி சிறப்பிதழ் மட்டுமே வடிவம் மாற்றப்பட்டுள்ளதா, முழுக்கவே இதழ் வடிவம் மாற்றப்பட்டுவிட்டதா எனத் தெரியவில்லை. ஃபிப்ரவரி இதழ் இன்னும் வரவில்லை. இதழ் எப்போது கைக்குக் கிடைக்கும் என்றே தெரிவதில்லை. இது ஒரு குறை.

நகைச்சுவைத் துணுக்குகள் வருகின்றன. சில துணுக்குகள் அபாரம். சில புளித்துப்போனவை. ஆனாலும் சிறுவர்களுக்கு புன்னகையைப் பூக்க வைக்கும் என்பது நிச்சயம்.

ஆங்கிலத்தில் சந்தாமா ஜூனியரை அபிராமுக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆன்லைனில் சந்தா செலுத்த: www.chandamamashop.com. சந்தா செலுத்துபவர்கள் கவனத்துக்கு, 40 முதல் 45 நாள்கள் ஆகுமாம் முதல் இதழைப் பெற.

துளிர். நான் 8ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு துளிர் அறிமுகமாகியது. மதுரையில் என் பள்ளியில் உள்ள அனைவருக்கும் ஓர் இதழை இலவசமாகக் கொடுத்தார்கள். அந்த இதழ் நல்ல இதழ் என்று ஆசிரியர்கள் சொன்னார்கள். அதற்குப் பின்பு துளிர் இதழைப் படித்ததில்லை. அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன் துளிர் என்ற பெயரை. ஆனாலும் இதழ் பற்றிய ஒரு நல்ல எண்ணம் மனத்தில் இருந்தது. சரி, அதையும் வாங்குவோம் என்று அபிராமுக்காக சந்தா செலுத்தினேன். ஏண்டா வாங்கினோம் என்ற எண்ணத்தைத் தந்திருக்கிறது துளிர். யாருக்காக இதழ் வருகிறது, என்ன பேசுகிறோம், என்ன நோக்கம் என எல்லாவற்றிலும் குழப்பமே எஞ்சுகிறது. இது எந்த வயதினருக்கு என்பதை இன்னும் என்னாலேயே யூகிக்கமுடியவில்லை. இதையும் 3 இதழ்கள்தான் படித்திருக்கிறேன். இன்னும் 3 இதழ்கள் பார்த்துவிட்டு மேலே சொல்கிறேன். முதல் 3 இதழ்கள் தந்த அனுபவம் அத்தனை நன்றாக இல்லை என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன். இத்துடன் சேர்த்து ஓர் ஆங்கில இதழுக்கும் சந்தா செலுத்தினேன். அது குப்பை.

Share

ஆரிய சமாஜம் நூல் மதிப்புரையும் மலர்மன்னன் பதிலும்

நான் 14- ஜூன்-2010ல் எழுதிய ‘ஆரிய சமாஜம்’ நூலின் மதிப்புரையும், அதற்கு 5-ஜூலை-2010ல் மலர்மன்னன் எழுதிய பதிலும் இங்கே – சேமிப்புக்காக.

மலர்மன்னன் முன்பு எழுதியிருந்த ‘திமுக தோன்றியது ஏன்?’ புத்தகத்தைப் படித்தபோது, அவ்ர் மேலிருந்த சில முன் அனுமானங்கள் உடைந்தன. என்றாலும், அவர் மேல் நான் கொண்டிருந்த முன் அனுமானங்களில் சிலவற்றை இன்னும் ஆழப்படுத்துவது போலவும் சில விஷயங்கள் அப்புத்தகத்தில் இருந்தன. குறிப்பாக பிராமண சார்புடைய பார்வை. எந்த ஒரு பார்வையும் நிச்சயம் தேவை என்னும் ஜனநாயக அடிப்படையிலும், பிராமணப் பார்வை என்பதே இன்று ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாகிவிட்ட நிலையில், அவர் எவ்வித சங்கடமும் இன்றி அதனை முன்வைப்பதும் அப்புத்தகத்தை முக்கியமானதாக்கியது என்று நினைத்தேன். (பிராமணச் சார்பு என்பதை அவர் மறுக்கக்கூடும்.)

மீதமிருந்த, ஆழமாகிப் போன, மலர்மன்னன் பற்றிய எனது முன் தீர்மானங்களை ‘ஆரியசமாஜம்’ புத்தகம் அடியோடு உடைத்துப் போட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. மலர்மன்னன் இப்புத்தகத்தை எப்படி எழுதினார் என்னும் கேள்வி என் மனத்துள் இன்னும் உழன்றபடியேதான் உள்ளது. தன் மனத்தில் இருந்த பிராமணச் சார்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, புதிய மனிதனாக, தயானந்தரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு இப்புத்தகத்தை எழுதினாரா அல்லது பிராமணச் சார்பு ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகத்தை எழுதும்போது தன் சாயல் வரக்கூடாது என நினைத்து இப்படி எழுதினாரா எனத் தெரியவில்லை. எப்படி எழுதியிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே, பாராட்டத்தக்கதே.

ஹிந்துத்துவம் எனப்து ஜாதியின் கைகளில் சிக்கி சீரழிந்துவிட்ட/கொண்டிருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஹிந்துத்துவம் என்பது ஜாதியில்லாமல் இயங்கமுடியாதோ என்கிற மிகப் பெரிய உள்மனச் சிக்கலில் நான் விழுந்த நிலையில், இப்புத்தகத்தைப் படித்தது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசமளித்தது என்றே சொல்லவேண்டும்.

ஜாதியின் அத்தனை காரண காரியங்களையும் உடைக்கிறது தயானந்தரின் முழக்கங்கள். 200 வருடங்களுக்கு முன்பாகவே, ஹிந்துத்துவம் என்பது எப்படி இருக்கலாம் என்று இன்று சிந்திப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் அன்றே சரியான தீர்க்கமான வழியைச் சொல்லிச் சென்றிருக்கிறார் தயானந்தர். அவர் அன்று அப்படிச் சொன்னதை, மேல் சாதியினரான பிராமணர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை, இன்றைய பிராமணர்களை வைத்தே அறிந்துகொண்டுவிட முடியும். ஆனால் அதனை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், வேத முறையிலான வாழ்க்கை முறையை முன்வைத்திருக்கிறார் தயானந்தர். அதோடு, வேதங்களில் ஜாதிய முறைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். வேதங்களில் ஜாதி இருப்பதாகச் சொல்லப்படும் ஆதாரங்களுக்கெல்லாம் சரியான பொருளைச் சொல்லி, ஜாதி என்பதை அடியோடு மறுத்திருக்கிறார் தயானந்தர்.

வருணம் பற்றிப் பேசும்போது, பிறப்பால் வருணம் நிர்ணயிக்கப்படுவதை அடியோடு எதிர்த்திருக்கிறார். ஒரு பிராமணன் பிறப்பால் பிராமணனாவதிலலை என்றும், தங்களுடைய செயலாலே ஆகிறார்கள் என்றும், அப்படி எந்த ஒரு வருணத்தவரும் பிராமணராக முடியும் என்று மிக ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் தயானந்தர். 

பூணூல் அணிவது எல்லோருக்குமான சடங்கு என்றும், சந்தியாவந்தனம் என்பதும் தனிப்பட்ட சொத்தல்ல, அதுவும் பொதுவானது என்று எடுத்துரைத்திருக்கிறார் தயானந்தர்.

பிராமணன் சடங்குகள் செய்விப்பது கடமையல்ல, ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தாங்களே சடங்குகளைச் செய்துகொள்ளலாம், வேத கால ஹிந்து முறையில் அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்கிறார் தயானந்தர்.

எத்தனையோ பிராமணரல்லாத ரிஷிகள் நல்வாழ்வு வந்து பிராமணரைப் போல் உயர்ந்ததையெல்லாம் இப்புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இப்படி ஒரு புத்தகத்தைப் படிப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் இன்றைய நிலையில் இப்படி ஒரு நிலையை ஹிந்துமதம் கொண்டிருக்குமானால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை.

உயர் குணங்களோடு, ஜாதியற்ற சிந்தனையோடு உடல் ரீதியான பலமும் தேவை என்பதை தயானந்தர் சொல்லியிருக்கிறார். இதனைத்தான் பல ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களுக்குத் தேவையான வகையில், சில சமயம் வன்முறை கூட சரி என்னும் அர்த்தத்தில் சொல்வதைக் கேட்கிறேன். 

தயானந்தர் உருவ வழிபாட்டை முற்றிலும் கைவிடச் சொல்லுகிறார். இந்த நிலைப்பாட்டில் ஆசிரியர் மலர்மன்னன் பிறழ்வது தெரிகிறது. தயானந்தரைப் பற்றி எழுதும்போது இதனைச் சொல்லியாக வேண்டிய ஆசிரியர், சில இடங்களில் உருவ வழிப்பாட்டைக் கைவிட்டால் என்னென்ன ஊறுகள் நேரும் என்பதைச் சொல்லிச் செல்கிறார். குறிப்பாக, ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தயானந்தரும் சந்தித்துக்கொண்டிருக்காத போது, இவர்கள் சந்தித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று அவர் சொல்வது ஒரு எடுத்துக்காட்டு. ராம கிருஷ்ண பரமஹம்ஸர் உருவ வழிபாட்டைக் கைவிட்டிருக்க மாட்டார் என்று சொல்லும் மலர்மன்னன், தயானந்தரும் தன் கருத்தில் உறுதியாக இருந்திருப்பார் என்று சொல்வதற்குப் பதிலாக, சில ஞானிகளுக்கு தயானந்தர் விலக்கு அளித்திருக்கக்கூடும் என்கிற யூகத்துக்குத் தாவி விடுகிறார். இது போன்ற மலர்மன்னன் கொஞ்சம் தத்தளிக்கும் இடம், 1857 குறித்து தயானந்தர் பேசாதது பற்றியும், மனு தர்மத்தை தயானந்தர் ஏற்றுக்கொள்வது பற்றியும் எழுதும்போதும்.

மனுதர்மம் பற்றிய தனியான ஒரு அத்தியாயம் கடைசியாக வருகிறது. புத்தகத்தின் பின்னட்டையில், மனுதர்மத்தில் காலத்துக்கு ஏற்றதை மட்டுமே ஏற்றார் என்று பொருள்பட வருகிறது. ஆனால் புத்தகத்தினுள்ளே, தயானந்தர் மனுதர்மத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார் என்ற பொருள்பட, மலர்மன்னன், கிட்டத்தட்ட வாதாடிச் செல்கிறார். 

மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே முன்வைத்து இதனை மலர்மன்னன் அணுகியிருப்பது சரியானதல்ல. ஒரு பிராமணன் தவறு செய்தால் அவனுக்கு அதிகத் தண்டனையும், பிராமணரல்லாத மற்ற வருணத்தவர் தவறு செய்தால், பிராமணனுக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையும் தரப்படுவதை சுட்டிக்காட்டும் மலர்மன்னன், பிராமணரல்லாத வருணத்தவர் பிராமணர்களைத் திருமணம் செய்துகொள்ளும்போது மனு தர்மம் சொல்லும் சட்டங்களைப் பற்றிப் பேசவே இல்லை. பிராமணனுக்கு அதிக தண்டனை தரும் சட்டங்களைவிட மிகவும் முக்கியமான்வையும், சர்ச்சைக்குரியவையும் எதுவென்றால், பிராமணனுக்கு அதிக சலுகைகள் தரும் சட்டங்களும், பிராமணனை ஒரு பீடத்தின் மேல் அமர்த்தி வைக்கும் சட்டங்களுமே ஆகும். அதைப் பற்றி தயானந்தரின் கருத்தென்ன என்பதை மலர்மன்னன் விளக்கவில்லை.

அதேபோல, தயானந்தர் பெண் விடுதலையைப் பற்றிப் பேசுவதைச் சிலாகிக்கிறார். ஆனால் மனு தர்மமோ என்றென்றும் பெண் ஆணைச் சார்ந்தே நடக்கவேண்டும் என்று சொல்கிறது. 

மேலும், மனு தர்மத்தில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் பாட பேதங்கள் என்கிறார் மலர்மன்னன். அதாவது, எவையெல்லாம் பிரச்சினைக்குரியவையோ அவையெல்லாமே பாட பேதங்கள் என்று சொல்லிக்கொண்டுவிட ஏதுவாக இப்படிச் சொல்கிறாரோ என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தயானந்தர் சொல்லியிருக்கும் எல்லாக் கருத்துகளுக்கும் சரியான விளக்கம் அளித்துவிட வேண்டும் என்கிற மலர்மன்னனின் தவிப்பு, சில இடங்களில் யூகங்களுக்குத் தள்ளிவிடுகிறது. 1857 பற்றிய யூகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருப்பார் என்கிற யூகம் போலவே, யாகங்களின் மூலம் காற்றில் புகையைக் கலப்பதால் நன்மை பயக்கலாம் என்னும் யூகம். இப்படி யூகங்களுக்குச் செல்வதை விட, இப்படித்தான் தயானந்தரின் வாழ்வில் நடந்தது, இப்ப்படித்தான் தயானந்தர் சொன்னார் என்று சொல்லி விட்டுவிடுவது நல்லது. (ஆனாலும் அதனை தன் வாதப்படி எடுத்துச் சொல்லும் எல்லா உரிமைகளும் மலர்மன்னனுக்கு உள்ளது. என்ன ஒன்று, அதனைப் படிக்கும்போது லேசான புன்னகை இதழோரத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!)

தயானந்தரின் இறப்புக்குக் காரணமாக அமைபவர் ஓர் இஸ்லாமியர். தயானந்தர், ஹிந்து மதத்தின் சடங்காச்சாரங்களைத் தீவிரமாக எதிர்த்தது போலவே, பிற மத ஆக்கிரமிப்பையும் எதிர்த்திருக்கிறார். எனவே ஒரு முஸ்லிம் அவரைக் கொல்ல எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அதே போலவே, தங்கள் ஆதாரங்களெல்லாம் பறிபோகிறதே என்று வேறு அதிகார வர்க்கத்தினர் சிலர் கூட, ஒரு முஸ்லிமின் தயவோடு தயானந்தரைக் கொல்ல முயன்றிருக்கக்கூடும் என்ற ஒரு தியரியும் உள்ளது. ராஜ புத்திர அரசர்கள் கூட அவரைக் கொல்ல முயன்றார்கள் என்று நிரூபிக்கப்படாத கூற்றும் உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னொரு எண்ணம் தோன்றியது. யூத் ஃபார் தர்மா என்ற தயானந்த சரஸ்வதியின் அமைப்பு (இந்த தயானந்தர் வேறு, ஆரிய சமாஜத்தின் தயானந்தர் வேறு) ஒன்றின் கூட்டத்தில் பேசிய அரவிந்தன் நீலகண்டன், கூட்டத்தினரின் கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் சொன்னார். பிராமணரைத் தவிர எல்லா வருணங்களும் அழிந்துவிட்ட நிலையில், பிராமண வருணம் ஏன் அழியவில்லை என்றால், இன்று மற்ற எல்லா வருணத்தவரைப் போல எந்த ஒரு வருணத்தாரும் எந்த ஒரு வருணத்தாரின் வேலையையும் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது. அதாவது ஒரு சூத்திர வருணத்தவன் வைசிய வருணத்தவனின் வேலையையும், வைசிய வருணத்தவன் மற்ற வருணத்தின் வேலையையும் செய்ய முடியும். பிராமண வருணத்தவன் கூட இதே போல் மற்ற வருணத்தின் வேலையைச் செய்ய இயலும். ஆனால் பிராமண வருணத்தாரின் தொழிலாகக் கருதப்படுவதை மற்ற வருணத்தாரால் செய்யமுடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாறி, மற்ற எந்த வருணமும் பிராமணனின் தொழிலாகக் கருதப்படுவதைச் செய்யலாம் என்னும் நிலை தோன்றினால், எல்லா வருணங்களும் தம்மளவில் ஒன்று கரையும் நிலை வரலாம் என்றார். இது தயானந்தர் அன்றே சொன்னதன் சாரம்தான் என்று தோன்றுகிறது.

இப்புத்தகத்தை மிகவும் சிறப்பாக, மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மலர்மன்னன். எங்கே எதனைச் சொல்கிறோம், எந்த விஷ்யத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அழுத்திச் சொல்கிறோம் என்பதிலெல்லாம் ஒரு தேர்ந்த எழுத்தாளராக வெளிப்பட்டிருக்கிறார் அவர். அதேபோல் ஒரு புத்தகமாக வருவதற்காக அவர் பல விஷயங்களைத் தேடியதோடு மட்டுமில்லாமல், அதனைச் சரியாகத் தொகுத்து அளித்திருக்கிறார். இன்னும் தொடர்ந்து மலர்மன்னன் பல்வேறு புத்தகங்களை தனது தனித்துவத்தோடு எழுதவேண்டும். அது தமிழ்ச்சூழலில் ஒரு புதிய திறப்பாக நிச்சயம் அமையும்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-419-9.html 

மலர்மன்னனின் பதில்:

அன்புள்ள ஸ்ரீ ஹரன் பிரஸன்னா,

ஆரிய சமாஜம் நூலுக்கு நீங்கள் எழுதியுள்ள விமர்சனத்தை நண்பர்கள் அனுப்பித் தந்தமையால் வாசிக்கக் கிடைத்தது.

நூலாசிரியன் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கும்படியான விமர்சனம் எழுதும் உங்கள் சாமர்த்தியத்தை முதலில் மெச்சுகிறேன்.

1. நீங்கள் பிராமணச் சார்பாகப் பார்ப்பதை நான் நியாயத்தின் சார்பாகப் பார்க்கிறேன். ஆகையால் எனது பார்வையை பகிரங்கப்படுத்துவதில் எனக்குச் சங்கடம் ஏதும் ஏற்படுவதில்லை. 

2. 1857-ல் அது குறித்து சுவாமி தயானந்தரிடமிருந்து எதிர்ரவினை ஏதும் வராமை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்ஸர்-தயானந்தர் நிலைப்பாடுகள், மனுஸ்மிருதி பற்றறிய அவரது கருத்து, முதலானவை குறித்துச் சரியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே எனது கருத்துகளை நிறுவியுள்ளேன். ஆகவே அவை யூகங்கள் என்கிற வட்டத்துக்குள் அடங்காது என நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வாதங்கள் எனக்கொள்வது சரியாக இருக்கலாம்.

3. ‘ம’ எனப் பிரபலமடைந்த மகேந்திரநாத் குப்தா, ‘Gospel of Sri Ramakrishna’ என்ற தலைப்பில் பரமஹம்சரின் சொற்ப கால அன்றாட நிககழ்வுகளைப் பதிவு செய்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது அமுத மொழிகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளாக சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இதில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்த்ததாகவும் அவரது சமாதி நிலை கண்டு வியந்து போற்றிச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் இருவருக்குமிடையே உருவ வழிபாடு குறித்து ஸம்வாதம் ஏதும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை. 

நான் பல்லாண்டுகளுக்கு முன் ‘ம’ வை ஆங்கிலத்தில் வாசித்திருந்தபோதிலும் ஆரிய சமாஜம்நூலை எழுதுகையில் இது எனது நினைவில் இல்லை. யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய தயானந்த ஜோதியிலிருந்து வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பயன் படுத்தியதால் அவற்றின் அடிப்படையில் இருவரிடையே சந்திப்பு நிகழ வாய்ப்பின்றி தயானந்தர் வங்காளத்தைவிட்டுச் சென்றுவிட்டார் என எழுதிவிட்டேன்.. 

பின்னர் ‘அமுத மொழிகளை’ வாங்கிப் படித்தபொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணரை தயானந்தர் பார்த்த விவரம் கவனத்திற்கு வந்தது. உடனே ஸ்ரீ பத்ரியுடன் தொடர்பு கொண்டு, புத்தகத்தில் இத்தகவலைச் சேர்த்துவிட வேண்டுமென்று சொன்னேன். அதற்குள் புத்தகம் அச்சாகிவிட்டபடியால் கால கடந்துவிட்டது, அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

உண்மையில் சுவாமி தயானந்தர்-ஸ்ரீ ராம கிருஷ்ணர் இடையே சந்திப்போ, வாதப் பிரதி வாதங்களோ நிகழவில்லைதானே. சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த பரமஹம்சரைக் கண்டு, இது ஓர் அசாதாரன நிலை என்று தயானந்தர் போற்றிச் சென்றதாக மட்டுமே தகவல் உள்ளது.. ஆகையால் ஒருவகையில் எனது பதிவில் பெரிய முரண் இல்லை. எனக் கொள்ளலாம். உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத சுவாமி விவேகானந்தரையே தம்மை குருவாக ஏற்குமாறு செய்தவராயிற்றே,, கடவுளைப் பல உருவங்களாகவே பார்த்துப் பரவசமடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர்! இந்த அடிப்படையில், ராமகிருஷ்ணர் விக்கிரகங்களை வெறும் விக்கிரகங்களாக அல்லாமல் கடவுள்களாகவே பார்த்து சல்லாபிப்பவர் எனபதைக் கண்டுகொண்ட தயானந்தருக்கு ராமகிருஷ்ணரின் உருவவழிபாட்டில் என்ன பிரச்சினை இருந்திருக்கக் கூடும்?

4. நமது கலாசாரம் கோயில் கலாசாரமாக ஆழ வேரோடிவிட்ட பிறகு, நம் கலைகள் யாவும் உருவ வழிபாட்டைச் சார்ந்தே உருவாகிவிட்டபிறகு (ராமாயணமும் பாரதமும் இல்லை யென்றால் நமக்கு ரசிக்கத் தெருக்கூத்தே இல்லை என்று தெருக்கூத்துப் பிரியரான அண்ணா ஒருமுறை என்னிடம் மனம் திறந்து சொன்னதுண்டு!), பல்வேறு தொழில்களும் கோயில் நடை முறைகளைச் சார்ந்து உருவாகிப் பல்லாயிரம் மக்களின் ஜீவாதாரமாகிவிட்ட பிறகு, மேலும் மிகவும் முக்கியமாக மிகப் பெரும்பாலான மக்ககளுக்கு உருவ வழிபாடுகளின் மூலமாகவே தெய்வ நம்பிக்கையும் அதன் பயனாக ஆறுதலும் திட சித்தமும் முற்றிலும் கிடைக்கிற சாத்தியக் கூறு உள்ளபோது, உருவ வழிபாட்டிற்கு முற்றிலுமாக முழுக்குப் போடுவது சரியல்ல என்பதே எனது கருத்து. ஆரிய சமாஜத்துடன் எனக்குப் பல் ஆண்டுகளாகத் தொடர்பு சென்னையில் மட்டுமல்ல, வேறு நகரங்களிலும் உள்ளது. இன்று அதில் உள்ள பலர் உருவ வழிபாட்டைக் கைவிட மனமின்றி இருப்பதை அறிவேன். மேலும் சுவாமி தயானந்தரே ஹிந்து சமயம் பல்வேறு கோட்பாடுகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களால் கட்ட மைக்கப்படுள்ளது என்று கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளேன். எனவே, என் குல தெய்வமான கொல்லூர் மூகாம்பிகையை என் அன்னையாகவே அறிந்துள்ள எனக்கு இந்த விஷயத்தில் தவிப்போ தத்தளிப்போ இல்லை. உருவ வழிபாட்டில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறும் முறைகேடுகள், பல தெய்வ வழிபாடு மக்களிடையே ஏற்படுத்தும் பேத உணர்வு முதலான பிரத்தியட்ச நிலவரங்கள்தாம் தயானந்தரை உருவ வழிபாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கச் செய்திருக்க வேண்டும்.. மனோ ரீதியாக பல தெய்வ நம்பிக்கையிலும் வழிபாட்டிலும் உள்ள பிற நன்மைகளையும் அறிந்துள்ளேன். 

5. சாதாரண எழுத்தாளர்களே தங்கள் எழுத்தில் முன்னுக்குப் பின் முரணாக எதேனும் எழுதிவிடுவோமோ என்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கையில், மனுவைப் போன்ற பேரறிஞர் முன்னுக்குப் பின் முரணாக விதிமுறைகளை எழுதுவாரா என்று யோசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் உலகில் உள்ள அறிஞர்கள் பலரும் மனுஸ்மிருதியில் பல இடைச் செருகல்கள் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் உள்ள 2685 வாக்குகளில் 1214 வாக்குகளே அசலானவை என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியிருப்பதைப் பதிவு செய்துள்ள ளேன். பெண்கள் விஷயத்தில் மனுவில் முரண்பாடு ஏதும் இல்லை. ‘புத்ரேண துஹிதா ஸமா’ (மகன்-மகள் இருவரும் சரிசமானவர்களே) என்று சொல்லியிருக்கும் மனு, எல்லா நிலையிலும் ஆண்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துப்பட அறிவுறுத்தியிருப்பதைப் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என அவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

6. புரோகிதர்களாக இருந்து எல்லாச் சடங்குகளையும் செய்து வைக்க ஆரிய சமாஜத்தில் ஊழியர்கள் இருப்பதை எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இவர்கள் மந்திரங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் அவற்றின் பொருளையும் உடனுக்குடன் எடுத்துக் கூறுகிறார்கள். இந்த ஊழியர்கள் ஜாதியின் அடிப்படையில் பிராமணர்கள் அல்லவாயினும் வர்ண அடிப்படையில் பிராமணர்களாக உள்ளனர். எனவே பிராமண வர்ணத்தின் பணியை பிற வர்ணத்தவர் மேற்கொள்ள முன்வராததால் அதில் மட்டும் பிற வர்ண நுழைவு நிகழவில்லை எனக் கருதத் தேவையில்லை. 

7. கும்ப மேளா போன்ற பல லட்சம் மக்கள் கூடுவதால் வரும் கழிவுகளை அகற்ற சுகாதார அதிகாரிகள் ஆறுகளையே பயன்படுத்தி வந்ததால் திருவிழாக்களின் போதெல்லாம் கலாரா பரவுவது இயல்பாக இருந்தது. தயானந்தர் ஆங்கிலேயே அதிகாரிகளைச் சந்தித்துக் கழிவுகளை ஆற்றில் எறியாமல் எரித்துவிடுமாறு அறிவுரை கூறினார். அதனால் எழும் புகைமண்டலத்திற்கு மாற்றாக மூலிகைச் சுள்ளிகளைத் தீயில் இட்டால் காற்று தூய்மையடையும் என்றும் கூறினார். ஆங்கிலேய அதிகாரிகள் எளிதில் புரிந்துகொண்டு சம்மதிக்க வேண்டும் என்பதற்காகவே சமயச் சடங்கு போன்ற வேள்வியை நடத்தலாம் எனக் கூறுவதை அவர் தவிர்த்திருக்கக் கூடும்.. இந்த விளக்கத்தை நான் தெரிவிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் வேள்வித் தீயின் பயன் குறித்தும் ஓர் அனுமானம் போன்ற தொனி வந்துவிட்டிருக்கலாம். 

8. மனுஸ்மிருதியின் மூலப் பிரதியை எடுத்து வைத்துகொண்டு, வரிக்குவரி ஆராய்ந்து, எவையெல்லாம் அசல், எவையெல்லாம் இடைச் செருகல் என ஆதாரப் பூர்வமாக எழுத விருப்பம்தான். அதில் இறங்கிவிட்டால் பிறகு வேறு எந்த வேலையிலும்  ஈடுபட முடியாது. நானோ, இன்றளவும் முழுக்க முழுக்க எழுத்தின் மூலம் வரும் வருமானத்தையே நம்பியிருப்பவன். ஆகையால் யாராவது குறைந்த பட்சம் ஆறுமாத கால அவகாசம் தந்து ஸ்பான்ஸர் செய்தாலன்றி அந்த வேலையைக் கையில் எடுக்க இயலாது! நீங்கள் என்னிடம் மேலும் எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளமையால் இதனைக் குறிப்பிடுகிறேன்.

9. பண்டிதர்களும் புரோகிதர்களும் தங்கள் பிழைப்பைக் காத்துக் கொள்வதற்காக தயானந்தரைக் கொன்றுபோட முகமதிய நர்த்தகியையும் முகமதிய வைத்தியரையும் பயன்படுத்திக் கொண்டதை எனது நூலில் தெளிவாகவே பதிவு செய்துள்ளேன். எனவே முழுப்பழியையும் முகமதியர்மீது நான் சுமத்திவிடவில்லை!

இவ்வளவு விரிவான விளக்கம் தரக் காரணம், குறைகளுக்கு சமாதானம் சொல்லவேண்டும் என்கிற கவலை அல்ல. உங்களைப் போல் இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை மனநிறைவளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எழுதலானேன்.

அன்புடன்,

மலர்மன்னன் 
ஜூலை 05, 2010 

 

Share