Archive for அரசியல்

S.I.R – my views

SIR திருத்தம் மிக முக்கியமானது. இது குறித்து முன்பே பலமுறை பேசி இருக்கிறோம். இன்று வரும் இத்தனை சதவீத ஓட்டுப் பதிவு என்பதெல்லாம் 80% மட்டுமே சரியாக இருக்க வாய்ப்பு. ஏனென்றால், இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாதது, பலருக்கும் இரண்டு இடங்களில் வாக்கு இருப்பது, நாம் நீக்கச் சொல்லி இருந்தாலும் நீக்கப்படாமல் இருப்பது, சில உள்நுழைப்புகள் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். இதனால் இந்தத் திருத்தம் அவசியமானது.

ஆனால் இதன் நடைமுறைதான் தேவையின்றிப் பலரைக் கலங்கடித்துவிட்டது. இப்போதும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு வேண்டுமென்றே பரப்பப்பட்ட அரசியல் உள்நோக்கமும் ஒரு காரணம் என்றாலும், குழப்பம் இல்லாமல் இல்லை என்பதுதான் உண்மை.

நான் இந்த SIR நடவடிக்கையை எப்படி எதிர்கொண்டிருப்பேன்? இதைத் தேர்தல் ஆணையம் செய்திருக்கவேண்டும் என்று சாமானியனாகக் கருதுகிறேன். அவர்களுக்கு இருக்கும் அழுத்தங்கள் எல்லாம் எனக்கும் புரியும். ஆனாலும் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ஆணையத்தின் பார்வையில் மட்டுமே பார்த்ததே அன்றி, தமிழக மக்கள் பார்வையில் பார்க்கத் தவறிவிட்டது அல்லது வேறு வழியின்றி அமைதியாக இருந்துவிட்டது என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

• முதலில் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டியது, 2024 வரை வாக்களித்து அதே இடத்தில் அதே முகவரியில் நீங்கள் இருந்தால் இந்த முறையும் வாக்களிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை என்பதை. அதாவது, தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் உங்கள் பெயர் இருந்து, அதே முகவரியில் இருந்தால் நீங்கள் வாக்களிப்பதில், எஸ் ஐ ஆர் படிவம் தருவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது.

• பின்னர் சொல்லி இருக்கவேண்டியது, நீங்கள் முகவரி மாறி இருந்து, பழைய முகவரியில் வாக்களித்துக் கொண்டிருந்தால், உங்கள் பெயர் நிச்சயம் நீக்கப்படும் வாய்ப்பிருக்கிறது, ஆனால் அஞ்சத் தேவையில்லை, உங்கள் பழைய ஐடியையும் புதிய முகவரி நிரூபணங்களையும் கொடுத்து, வரைவுப் பட்டியல் வெளியான பிறகு அப்ளை செய்யலாம், அதுவரை பொறுமையாக இருங்கள் என்பதை.

• ஒருவேளை நீங்கள் முகவரி மாறி இருந்தாலும், அதே தொகுதியில் இருந்தால், இதே படிவத்தில் நீங்கள் நிரப்பிக் கொடுக்கலாம் என்பதை.

• முதலில் சில படிவங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன, உங்கள் வீட்டுக்கு வர 15 நாளாவது ஆகும், அப்படியும் வரவில்லை என்றால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கவேண்டும்.

• எப்போது பி எல் ஓ வருவார் என்பதை, யார் யாரெல்லாம் மொபைல் எண்ணை தங்கள் வாக்காளர் அட்டையுடன் இணைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எஸ் எம் எஸ் அல்லது இமெயில் மூலம் தகவல் அனுப்புவோம் என்ற முடிவை எடுத்திருக்கலாம்.

• பி எல் ஓ உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் வீடு பூட்டி இருந்தால், அவர் இன்னும் இரண்டு முறை வருவார், மொத்தம் 3 முறையும் உங்கள் வீடு பூட்டி இருந்தால், அந்தப் புகைப்படத்தை பி எல் ஓ எங்களுக்கு அனுப்புவார். இதையும் சொல்லி இருக்க வேண்டும். சில இடங்களில் இப்படி ஃபோட்டோ அனுப்பச் சொல்லி வாய்மொழித் தகவல் மூலம் கட்டளை இடப்பட்டிருப்பதாக அறிந்தேன். இது நல்ல விஷயம். சும்மா வராமல் வீட்டில் ஆள் இல்லை என்று சொல்வதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

• ஆன்லைனில் தாங்களாகவே முன்வந்து எஸ் ஐ ஆர் பதிவு செய்ய விரும்புவர்கள், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர் இனிஷியல் உட்பட ஒரே போல் இருந்தால், உங்களுக்கு லாகின் இருந்தால், அதைச் செய்யலாம். இல்லையென்றால் பி எல் ஓ மூலமாக மட்டுமே இதைச் செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கவேண்டும்.

• மூன்று முறை வந்தும் நீங்கள் இல்லை என்றால், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் என்று சொல்லலாம்.

• இந்தப் படிவத்தை எப்படி நிரப்புவது என்று ஒரு வீடியோவை எங்கள் வலைத்தளத்தில் ஏற்றி இருக்கிறோம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது மொழிகளில் உள்ளது, பாருங்கள் என்று சொல்லலாம்.

• இப்படி எல்லாம் சொல்லி முடித்துவிட்டு, 2002 மற்றும் 2005 சிறப்புத் திருத்தப் பட்டியல் பற்றிச் சொல்லவேண்டும். அப்படிச் செய்யாமல், முதலில் இதைச் சொல்லிவிட்டு, எல்லாரும் குழம்பி, அப்பா அம்மாவின் பெயர், தன் பெயர் எதுவும் 2002 சிறப்புத் திருத்தப் பட்டியலில் கிடைக்காமல் – இதெல்லாம் அவசியமே இல்லை. திருத்தப்பட்டியலில் இருந்தால் நிரப்புங்கள், இல்லை என்றால் அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, 2004 வரை நீங்கள் வாக்களித்து சரியான முகவரியில் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, இது அவசியமில்லை என்று சொல்லி இருக்கவேண்டும்.

• அடுத்து மிக முக்கியமாக, வரைவுப் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யச் சொல்வது.

• வரைவுப் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு அவர்களது மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். இமெயில் அனுப்பலாம்.

இவற்றை எல்லாம் செய்யாமல், எடுத்த எடுப்பில் 2002/2005 சிறப்புப் பட்டியலைப் பற்றி பேசி, 1987க்குப் பின்னர் பிறந்திருந்தால் என்று சொல்லிக் குழப்பி, இன்று என்னடா என்றால் அதை ஃபில்லப் செய்யத் தேவை இல்லை என்கிறார்கள். அவர்களே நிரப்புவார்களாம். எப்படி முடியும்? நம்மாலேயே முடியவில்லை, அவர்களால் எப்படி முடியும்? அன்று மொபைல் இல்லை, ஆதார் இல்லை, பெயரோ கிருஷ்ணனைக் குரங்கு என்று அடித்து வைத்திருந்தார்கள், எப்படி நிரப்புவார்கள்?

மிக முக்கியமாக, ஆளும் கட்சிகள் இதை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யச் சொல்லவேண்டும். தேர்தல் வரும் நேரத்தில் இப்படி முட்டி மோதிக் கொண்டிருப்பது அவசியமற்றது.

இதை எளிதாக்க என்னவெல்லாம் செய்யலாம்?

• புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைப் படிவத்தை கல்லூரியிலேயே நிரப்பச் சொல்லவேண்டும். இது அனைத்துக் கல்லூரியின் வேலையாக வேண்டும். எப்படி பள்ளிகள் ஆதார் எண் வழங்க ஏற்பாடு செய்தார்களோ அதைப் போல. ஒரு ஊரைச் சேர்ந்த மாணவன் இன்னொரு ஊரில் இருந்தாலும் ஆன்லைனில் அப்ளை செய்து வாக்காளர் அட்டை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

• இறந்தவர்களுக்கான டெத் சர்ட்டிஃபிகேட் தரப்படும்போது அவர்கள் வாக்குச் சீட்டின் நகல் அதனுடன் சேர்க்கப்பட்டு மாதம் ஒருமுறை இவர்களது பெயர்கள் கட்டாயமாக நீக்கப்படவேண்டும்.

• ஆதார் எண்ணை வாக்காளர் எண்ணுடன் இணைத்தால் பாதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதைச் செய்ய ஏன் இத்தனை யோசனை என்று தெரியவில்லை.

இனி நாம் செய்யவேண்டியது என்ன?

• பி எல் ஓ உங்களிடம் வந்து படிவங்களைத் தருவது வரை ஓயவே ஓயாதீர்கள். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல், அவருக்கு ஃபோன் செய்வது, மெசெஜ் அனுப்புவது, அவர் பதில் அளிக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்துக்கு மெயில் அனுப்புவது என்று தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள். வாக்கு உங்கள் உரிமை. அதை சரியாகத் தரவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அவர்கள் சொன்ன வேலையை பி எல் ஓ செய்ய வேண்டியது கட்டாயம்.

• பி எல் ஓ ஏக்கப்பட்ட அழுத்தத்தில் இருப்பதால் அவரிடம் அமைதியாக உரையாடலாம். அவர் வேண்டுமென்றே சதி செய்கிறார் என்கிற கான்ஸ்பிரஸிக்குள் போகவேண்டாம்.

• பெரும்பாலான பி எல் ஓக்கள் சரியாக உங்கள் படிவத்தைத் தந்துவிடுவார்கள். ஆனால் சிலர் உங்கள் வீடு பூட்டி இருக்கிறது என்று சொல்ல முற்படலாம். காரணம், ஏன் அலையவேண்டும், ஒரு வாக்குதானே என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை நாம்தான் முறியடிக்கவேண்டும். ஆனால் 90% பி எல் ஓக்கள் இப்படிச் செய்வதில்லை.

• படிவத்தை நிரப்புவது மிக எளிது. படிவம் கையில் கிடைப்பதுதான் பிரச்சினை. அதை நிரப்புவது ஒரு விஷயமே இல்லை. 2002 / 2005 ஐ மறந்துவிட்டு நிரப்புங்கள்.

• மீண்டும் படிவத்தை அவரிடம் சேர்ப்பது மிக முக்கியமானது.

• வரைவுப் பட்டியல் வந்த உடனேயே உங்கள் வாக்கு இருக்கிறதா என்று உறுதி செய்து ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

• வரைவுப் பட்டியலில் இல்லை என்றால், மீண்டும் வாக்காளர் அட்டைக்கு அப்ளை செய்யுங்கள். சரியான முகவரி மற்றும் சான்று இருந்தால் இது மிக எளிதான விஷயம். நம்மால் செய்யமுடியவில்லை என்றால் இ சேவை மையத்தில் சிறப்பாகச் செய்து தருவார்கள்.

நான் இப்போது எந்த நிலையில் இருக்கிறேன்? சிலர் லூசுத்தனமாக நான் என்னவோ பிஜேபிக்கு எதிராகப் பேசுவது போல் உளறினார்கள். அவர்களை எல்லாம் ப்ளாக் செய்துவிட்டேன். வாக்குரிமை இருந்தால்தான் பிஜேபி வரும். இல்லையென்றால் மாங்காய் பறித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். மாங்காய் மந்திரத்தில் முளைக்காது மோனே!

என் படிவம் (பல குழப்படிக்குப் பிறகு) என் கையில் கிடைத்துவிட்டது. நிரப்பித் தயாராக வைத்திருக்கிறேன். இன்று வாங்கிக் கொள்கிறேன் என்று பி எல் ஓ சொன்னார். இன்று வேலையோ என்னவோ. வரவில்லை. நாளை வாங்கிக் கொள்வார். நாளையும் அவரால் வரமுடியவில்லை என்றால் நானே அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று கொடுத்துவிடுவேன்.

நம் வாக்கு நம் உரிமை.

Share

SIR initial mess ups in Tamilnadu – 2

என்னை யார் எப்படித் திட்டினாலும் பரவாயில்லை. தொடர்ந்து வாக்காளர்ப் பட்டியல் திருத்தத்தின் குளறுபடிகளைப் பதிவு செய்கிறேன்.

இரண்டு நாள் முன்பாக பிஎல்ஓவிற்கு என் வாக்காளர் அட்டையை அனுப்பினேன். உங்கள் பாகம் எண் 798 என்று அவர் சொன்னார். இல்லை என்றேன். ஆனால் அதுதான் என்று சொல்லிவிட்டார். இன்று மீண்டும் தேர்தல் ஆணையம் வலைத்தளத்துக்குள் சென்று என் வாக்காளர் எண்ணை எடுத்து அதில் பாகம் எண் நான் சொன்னதுதான் இருப்பதை உறுதி செய்து அதே பி எல் ஓவிற்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி இருக்கிறேன். அவரிடம் இருந்து பதில் வந்ததும் அப்டேட் செய்கிறேன்.

அப்டேட்: பி எல் ஓவை அழைத்தேன். அனைத்தையும் சொன்னேன். மிகவும் பொறுமையாகப் பேசினார். மீண்டும் சரி பார்க்கிறேன் சார் என்று சொல்லி இருக்கிறார்.

தேர்தல் ஆணைய வலைத்தளத்தின் காமெடி அடுத்து.

அதில் உள்நுழைய உங்கள் ஈபிக் எண் அல்லது மொபைல் எண்ணைத் தரலாம் என்றது. என் வோட்டர் ஐடி ஈபிக் எண்ணை உள்ளிட்டதும், இப்படி ஒரு பதிவே இல்லை என்று சொல்லிவிட்டது. மீண்டும் என் மொபைல் எண்ணை உள்ளிட்டதும் ஓடிபி வந்தது. உள் நுழைந்தேன். அங்கே அழகாக என் பெயரும் வாக்காளர் பட்டியலில் என் எண்ணும் உள்ளது. பிறகு ஏன் இப்படி ஒரு பதிவே இல்லை என்று வலைத்தளம் சொன்னது என்பது தெரியவில்லை.

அடுத்த காமெடி.

2005ல் என் ஓட்டு இருந்தது திருநெல்வேலியில். அதைக் கண்டுபிடிக்கலாம் என்று பார்த்தால், எந்த பூத்தில் ஓட்டு போட்டீர்கள் எனக் கேட்டது. டவுண் மார்க்கெட் தெருவில் இருக்கும் தாய் சேய் நலவிடுதியில் ஓட்டு போட்டேன். அல்லது ஏதோ ஒரு மெடிகல் செண்டர். அது எந்தத் தெரு என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் அந்த வாக்காளர் எண்ணின் பாகம் எண்ணைக் கேட்கிறது. யாருக்குத் தெரியும்?

அப்பா அம்மா பெயரைத் தேடலாம் என்றால் அவர்கள் ஓட்டர் ஐடி வேண்டுமாம். அதற்கு எங்கே போவது? அம்மா அப்பாவே போய்விட்டார்கள், ஓட்டர் ஐடி எப்படி இருக்கும்?

இன்னொரு லின்க்கில் பெயரை வைத்துத் தேடலாம் என்றிருந்தது. ஹரிஹரபிரசன்னா, ஹரிஹர பிரசன்னா, ஹரிஹர ப்ரசன்னா, ஹரிஹரப்ரசன்னா, ஹரிஹரப்ரஸன்னா, ஹரி ஹரப்ரசன்னா, ஹரி ஹர பிரசன்னா என்று ஆயிரம் காம்பினேஷனிலும் என் அப்பா பெயரை ஒரு ஆயிரம் காம்பினேஷனிலும் தேடினாலும், போடா மயிரே என்று சொல்லிவிட்டது வலைத்தளம்.

இந்த முறை எப்படியாவது ஓட்டு போட்டே ஆகவேண்டும் என்பது லட்சியம். போட முடியாமல் போகப் போகிறது என்பது நிச்சயம்.

இதில் கமெண்ட் போடுபவர்களின் காமெடி சொல்லி மாளாது. ரொம்ப எளிது, எனக்கு ஈசியாக இருந்தது, உங்களுக்கு ஃபில்லப் பண்ண தெரியவில்லை, உங்களிடம் சரியான ஓட்டர் ஐடி இல்லை, என் கிராமத்துக்கே எல்லாருக்கும் ஒரே நாள்ல கிடைச்சிருச்சு – இப்படி தோன்றுவதையெல்லாம் எழுதுவது. சிரித்துவிட்டு நகர்கிறேன்.

Share

SIR initial mess ups in Tamilnadu – 1

எஸ் ஐ ஆர் இல் எந்தக் குழப்பமும் இல்லை, எளிதாக இருக்கிறது என்று ஆளாளுக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சம் குழப்பம் இருக்கிறது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கேட்டால் என்ன என்னவோ காரணம் சொல்கிறார்கள். எலக்‌ஷன் கமிஷன் கொடுத்திருக்கும் நம்பருக்கு எல்லாம் போன் செய்து கேட்டாகிவிட்டது. உங்கள் வீட்டுக்கு வரவில்லையா என்று என்னிடமே மீண்டும் கேட்கிறார்கள். தெருவில் கேட்டால், வந்தார்கள், ஆனால் அவர்களிடம் பெரும்பாலான வாக்காளர் பட்டியல் படிவங்களே இல்லை, தெருவின் முக்கில் ஒரு சேர் போட்டு அமர்ந்திருந்தார்கள் உங்களுக்குத் தெரியாதா என்கிறார்கள். அவர்கள் சேர் போட்டு அமர்ந்திருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவர்களிடமும் பெரும்பாலான படிவங்கள் இல்லை. ஆனால் தெருக்காரர்கள்‌ அனைவரிடமும் ஓட்டர் ஐடி இருக்கிறது. இவர்கள் வரைவுப் பட்டியலை வெளியிட்டு விட்டு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவரும் மீண்டும் அப்ளை செய்ய வேண்டும் என்றால், இது என்ன லாஜிக்? என்னவோ பெரிய குழப்படி நடந்து கொண்டிருக்கிறது. இதைச் சரியாகத் திருத்தாவிட்டால் தேர்தலின் போது பொதுமக்கள், கட்சிகள் பாகுபாடு இல்லாமல் கதறப் போகிறார்கள். போகிறோம்.

தற்போது இருக்கும் ஓட்டர் ஐடி சரியாக இருந்தால் அவர்கள் பெயரை நீக்கக் கூடாது. இதை ஏன் செய்யாமல் விட்டார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

2002-2005 பட்டியலைப் பார் என்பதெல்லாம் சென்னை போன்ற நகரங்களுக்கு எப்படிப் பொருந்தும்?

எஸ் ஐ ஆர் எளிய விளக்கம் என்று டிவிகளில் வருகிறது. அதில் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் யாரிடமும் பதில் இல்லை. என்னிடம் ஓட்டர் ஐடி இருக்கிறது, ஆனால் படிவம் கொண்டு வருபவர்களிடம் என்னைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய படிவம் இல்லை. என்ன செய்ய வேண்டும்? மிக சாதாரணமாகச் சொல்கிறார்கள், வரைவுப் பட்டியலைப் பார்த்துவிட்டு மீண்டும் அப்ளை செய்யுங்கள் என்று. அப்படியானால் இத்தனை நாள் என்னிடம் இருந்த ஒட்டர் ஐடியும் நான் போட்ட ஒட்டும் என்ன? இது தவறில்லையா?

அதேபோல் முகவரி மாறி வேறு ஒரு தொகுதிக்குப் போயிருந்தால் அப்போதும் நாம் வரைவுப் பட்டியல் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். இப்படி ஒரு நடைமுறையைக் கண்டுபிடித்தவரை என்னவென்று சொல்வது.

ஓட்டர் ஐடி சரியாக இருந்து, நீங்கள் இருக்கும் வீடும், அங்கே நபர்களும் சரியாக இருந்தால், அதை சரியான வாக்காளர் விவரமாக எடுத்துக் கொள்ளாத வரை இந்தத் திருத்தம் பல குழப்பங்களை மட்டுமே கொண்டு வரும்.

***

எஸ் ஐ ஆர் விஷயமாக இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் தேர்தல் கமிஷன் வலைத்தளத்தில் இருந்து பாஜக பி எல் ஏ அலுவலரின் நம்பரை பெற்றேன். ஒரு பெண் பேசினார். மிகப் பொறுமையாக எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலைத் தந்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் தந்த நபரை அழைத்தேன். அவரும் பெண். அவரும் மிகப் பொறுப்பாகப் பேசி யாரிடம் நான் பேச வேண்டும் என்று இன்னொரு தகவலைச் சொன்னார். கூடவே எனது வாக்காளர் அட்டையை வாங்கி யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மூன்றாம் நபரை அழைத்தேன்‌ அவர் ஓர் ஆண். அவர் மேலும் சில விவரங்களைச் சொல்லிவிட்டு இன்னொரு நபரிடம் பேசச் சொன்னார் அதற்குள். முதலாம் நபர் மீண்டும் அழைத்து, சரியான நபரிடம் பேசச் சொல்லி இன்னொரு எண்ணைக் கொடுத்தார். அவரும் அவரால் இயன்ற எல்லா உதவிகளையும் வழங்கினார். இந்த நான்கு பேருமே பிஜேபிக்காரர்கள். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் 2002க்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால்தான் படிவத்தை நிரப்பிக் கொண்டு வருவார்கள் போல. இல்லையென்றால் வரைவுப் பட்டியல் வந்த பிறகு நாம் அப்ளை செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு நான் புரிந்து கொண்ட தலைவிதி.

Share

Badri’s daily news coverage in Kizhakku News YouTube channel

பத்ரி தினமும் செய்தித்தாள்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் யூடியூப் வீடியோ கிழக்கு நியூஸ் யூடியூப் சேனலில் நேற்றில் இருந்து வருகிறது. சுவாரசியமாக இருக்கிறது. காலையில் வாக்கிங் செல்லும் போது இதைப் போன்ற ஒரு வீடியோ மிகவும் உதவியாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் இதைக் கேட்டுவிட்டால் முக்கியமான செய்திகளில் 25 சதவீதமாவது தெரிந்து கொள்ளலாம். அதிலும் பத்ரிக்கு இருக்கும் உலகளாவிய ஞானம் இதில் பல விஷயங்களை நமக்குச் சொல்கிறது.

இதில் சில சுவாரசியமான விஷயங்களைச் செய்யலாம். ஒன்று, அனைத்துப் பத்திரிகைகளிலும் அந்த செய்தி குறித்து வந்திருக்கும் ஹெட்லைனையும் முதல் இரண்டு வரிகளையும் மேம்போக்காக வாசிக்கலாம். இது நேரத்தைக் கூட்டும் என்றாலும் சுவாரசியமாக இருக்கும். ஒரே விஷயத்தைப் பல பத்திரிகைகள் எப்படிக் கையாளுகின்றன என்று பார்க்க உதவியாக இருக்கும். இதை பத்ரியே செய்வது கடினம் என்றால், கூட ஒருவரை வைத்துக்கொள்ளலாம். நிச்சயம் கூட ஒருவரை வைத்துக் கொள்கிறேன் என்று அவர் நேற்றே சொல்லி இருந்தார்.

இன்னொரு முக்கியமான விஷயம், முரசொலி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ்கள் அங்கே இல்லாமல் இருப்பது. முடிந்தால் கி வீரமணியின் பத்திரிகை ஏதேனும் இருந்தால் அதையும் வைக்கலாம். தலைப்புச் செய்திகள் மட்டுமாவது அவற்றிலிருந்து சொல்வது நிச்சயம் சுவாரசியமாகவே இருக்கும்.

அதேபோல் தமிழ்நாட்டளவில் நான்கு செய்திகள், இந்திய அளவில் ஒன்றிரண்டு செய்திகள், வெளிநாட்டு அளவில் ஒரு செய்தி என்று ஒரு வரைமுறை வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் மூன்று நிமிடம் ஒதுக்கினாலே 25 நிமிடங்கள் தாராளமாக வரும். சில சமயங்களில் முக்கியத்துவம் கருதி இவற்றை மாற்றிக் கொள்வதிலும் தவறில்லை.

அதேபோல் ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கும் ஒரு பெயர் இருப்பது நல்லது. நாளை யூடியூபில் தேடும்போது வசதியாக இருக்கும். இப்போது ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு பெயர் வைக்கிறார்கள். கூடவே அனைத்துக்கும் சேர்த்து ஒரு பொதுப்பெயர் நிச்சயம் தேவை. அதற்கான ஒரு தனி கேட்டகிரி லின்க் இருப்பதும் நல்லதுதான்.

https://youtube.com/@kizhakkunews?si=r-PLn91uMOV7PVvw

Share

Sridhar Subramaniyam on Taliban

11.10.2025

ஸ்ரீதர் சுப்ரமணியம் வழக்கம் போல் பாஜகவைத் திட்ட ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். எப்போதும் போல் காவிகளைத் திட்டுவதோடு அவர் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரது நேரம், தாலிபானையும் வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். ஒரு படி மேலே போய், முகத்தை மூடாத பெண்களைப் பார்த்தால் தாலிபன் அமைச்சருக்கு மூடு வருமே என்றெல்லாம் கேட்டுவிட்டார். அவர் நினைத்துக் கொண்டு எழுதியது, ‘நாம் திட்டுவது தாலிபனைத்தான், லைக் அள்ளப் போகிறது’ என்று. ஆனால் கமெண்ட் போட்டவர்கள் அவர் தாலிபனைத் திட்டுவதாக நினைக்கவில்லை. அப்புறம் என்ன நடக்கும்? அவரைக் காவியாக்கிவிட்டார்கள்.  அதிலும் மயிலாப்பூர் மாமி என்றெல்லாம் கமெண்ட் கேவலமாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காலம் முழுக்க என்னதான் நீங்கள் கரடியாகக் கத்தினாலும் நீ பாப்பான்தானே என்று சொல்லக்கூடிய டெம்ப்லேட் ஞாநி தொடங்கி இன்று வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. (ஸ்ரீதர் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது)

அது எப்படியோ போகட்டும், அங்கே கமெண்ட் போடுபவர்களுக்கு… நீங்கள் பாஜகவைத் திட்டுங்கள் அல்லது ஸ்ரீதரைத் திட்டுங்கள், ஆனால் ஸ்ரீதர் காவி என்று சொல்லி பாஜகவை அசிங்கப்படுத்தாதீர்கள்.

Sridhar’ post:

https://www.facebook.com/share/p/1GvLV377vx

13.10.2025

எதிர்பார்த்தது போலவே ஸ்ரீதர் சுப்பிரமணியம் தனது நடுநிலைமையைப் பறைசாற்றிக் கொள்ள கொஞ்சம் கூட அடிப்படை நியாய உணர்வே இல்லாமல் ஆர்எஸ்எஸ்-ம் தாலிபனும் ஒன்றுதான் என்று தீர்ப்பளித்து விட்டார். 

ஏன் இவர்களையெல்லாம் மறந்தும் கூட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஆதரிப்பதில்லை என்பதும், இப்படிப்பட்டவர்கள் அடிப்படைவாதிகளால் திட்டப்படும் போது ஏன் ரசிக்கிறார்கள் என்பதும் இந்த அராஜகத்துக்காகதான். 

இப்படிப்பட்டவர்கள் நம் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் என் நியாய உணர்வுக்காக மட்டுமே இது போன்ற பதிவுகளை எழுதுகிறேன்.

https://www.facebook.com/share/p/1DBuveS7Zt

Share

Justice Gavai And Rakesh Kishore

நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் செருப்பு வீசியது கண்டிக்கத் தக்கது. கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு செயல். இந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் எள்ளளவும் பிறழக் கூடாது.

கவாய் சொன்ன தீர்ப்பை நானும் ஏற்கவில்லை. அதேபோல், பல நீதிமன்றங்களின் பல செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவும், குழப்பம் தருவதாகவும் இருக்கின்றன. ஒரு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாகச் சிக்கிய பணமெல்லாம் நீதித்துறையின்மீது நம்பிக்கையின்மையைப் பல மடங்கு கூட்டின. இவை எல்லாமே உண்மை. ஆனால் இந்த நேரத்தில் இவற்றையெல்லாம் சொல்லி, ஹிந்து மதக் கடவுளை கவாய் ஏளனம் செய்ததற்காக ராகேஷின் செயலை நாம் ஆதரிப்போம் என்றால், அது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

இந்த நேரத்தில் திராவிட ‘முற்போக்காளர்கள்’ இதுதான் சாக்கு என்று, மிகவும் நியாயவாதிகள் போலப் பேசுகிறார்கள். அவர்களுக்கு நாம்தான் அந்த இடத்தைக் கொடுக்கிறோம் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

இதே போன்ற ஒரு செயலை, ஹிந்து ஆதரவு நீதிபதிக்கு ஹிந்து எதிர்ப்பு வழக்கறிஞர் செய்திருந்தால், இந்நேரம் இந்த ‘முற்போக்காளர்கள்’ அவருக்கு கலைமாமாமணி விருதைக் கொடுத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களது இரட்டைத் தனத்தையும், தேவைக்கேற்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அதுவே நேர்மையான, உலகமே விதந்தோதும் நீதியான செயல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதையும் நாம் லட்சத்து ஓராவது முறையாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதில் பெரிய நியாயவான்கள் போல, ‘அந்த நீதிபதியின் தீர்ப்பும் சரியல்ல’ என்று சதாரணமாகச் சொல்பவர்களைக் கூட ஜாதி ரீதியாகத் தூற்றிக்கொண்டு அலைவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்கள் என்றுமே பொருபடுத்தத் தகுந்தவர்கள் அல்ல. தொடர்ந்து எக்ஸ்போஸ் செய்யப்படவேண்டியவர்கள். இவர்களுக்கு இருப்பது இரண்டே இரண்டுதான், ஒன்று ஹிந்து மத வெறுப்பு, அடுத்து பிராமணக் காழ்ப்பு. இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

நீதிபதி கவாயின் ஹிந்து மதக் கடவுள் மீதான விமர்சனமும், ராகேஷ் அவர் மேல் செருப்பு எறிந்ததும் வேறு வேறு என்று நாம் இந்நேரத்தில் பார்க்கவேண்டும். சரியாகச் சொல்வதென்றால், கவாயின் செயலைவிட ராகேஷ் செய்தது அராஜகமானது. கண்டிப்போம்.

Share

Puthiya Thalaimurai Blocked in Arasu Cable

புதிய தலைமுறை முடக்கப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனங்கள்.

நாம் என்னதான் கண்டனம் தெரிவித்தாலும், நாளையே இந்தப் புதிய தலைமுறை திமுகவுக்குச் சொம்படிக்கத்தான் போகிறது என்றாலும், இப்போது ஓர் அநியாயம் நடக்கும்போது அதைக் கண்டிக்கவேண்டியது அவசியம்.

இப்படியெல்லாம் நடந்தாலும் தமிழ் ஊடகங்கள் ஒருநாளும் திருந்தப் போவதில்லை என்றாலும், இந்த முடக்கம் அநியாயமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் இப்படி எதாவது நடந்தால் வீறுகொண்டு எழுந்து, இதென்ன ஆட்சி என்றெல்லாம் முழக்கமிட்ட ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் வாலைச் சுருட்டி அமர்ந்திருப்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியமானது.

எழுத்தாளர்களுக்கு, ‘முற்போக்காளர்களுக்கு’ மனிதர்களை விட உயர்ந்த நிலை கொண்டவர்களுக்கு நிச்சயம் இரண்டு கொம்பு இருக்கிறது என்றுதான் நானும் நம்ப விரும்புகிறேன். என்ன பிரச்சினை என்றால், திமுக என்று வரும்போது மியாவ் என்று கத்திவிடுகிறார்கள்.

Share

Statement of Padaippalar Sangamam

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது!
‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

#
நாள்: 05.10.2025.
#

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:
___________________

கடந்த 2025, செப். 27ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜயின் பிரசாரப் பயணம் கரூர் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கரூரில் பலியானோருக்கு ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்த நிகழ்வு விபத்தா, சதியா என்ற கோணத்தில் விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்திருக்கிறது. அவரும் தனது விசாரணையைத் தொடங்கிவிட்டார். தவிர கரூர் மாவட்ட காவல் துறையும் தேவையான புலன் விசாரணையை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளும் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில்தான், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் 2025 அக். 2ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, கரூர் கொடிய நிகழ்வுக்கு நடிகர் விஜய் தரப்பு மட்டுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறது. விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை கண்டிக்கத் தக்கதே.

போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாதது, கூட்டத்தை நிர்வகிக்கத் தெரியாதது, நடிகர் என்ற பிராபல்யத்தை முறையாகப் பயன்படுத்தாதது, பொறுப்பின்மை ஆகியவை த.வெ.க. கட்சியின் தவறுகள். குறிப்பாக, நடிகர் விஜய் பொறுப்புள்ள அரசியல் தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் கண்டித்தாக வேண்டும்.

ஆனால், கரூர் துயர நிகழ்விற்கு விஜய் தரப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் அறிந்தே உள்ளனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது, குறுகிய இடத்தில் அனுமதி அளித்து அரசியல் நோக்குடன் செயல்பட்டது ஆகியவை மாநில அரசின் தவறுகள்.

மேலும், கண்மூடித்தனமாகக் கூடி நெரிசலை ஏற்படுத்திய கட்டுப்பாடற்ற ரசிகர்கள் மற்றும் சினிமா மோகம் கொண்ட மக்களுக்கும் இதில் இணையான பொறுப்பு உண்டு.

இந்த மூன்று தரப்பினரும் நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இதனையே நாமும் வலியுறுத்துகிறோம்.

ஆனால், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளவர்கள், மாநில அரசின் தவறுகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள். தங்கள் கூட்டறிக்கையை திமுக ஆதரவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் வெளியிட்டிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்குவதை ஏற்க முடியாது.

இலக்கியம், கலை மற்றும் எழுத்துலகில் ‘தாதா’ மனநிலையுடன் சிலர் செயல்படுவதையும், தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு உதவுவதற்காக கூட்டறிக்கை வெளியிடுவதையும், நடுநிலையான படைப்பாளர்களால் ஏற்க முடியாது.

இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருப்பவர்களில் பெரும்பாலோர், இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட இயலாது.

நாட்டுநலனோ, மக்கள் மீதான நேசமோ இன்றி கூட்டறிக்கை வெளியிட்ட இந்தக் குறுங்குழுவை அன்றே ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டித்தோம். இவர்களின் இயல்பிலேயே ஒருசார்புத் தன்மையும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளும் இருக்கின்றன. எனவேதான், தற்போது இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் தேவை என்னவென்று ஆராய வேண்டியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அக். 3ஆம் தேதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது நீதிமன்றம் இரு தரப்புக்கும் முக்கியமான கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உண்டு.

இந்தத் தருணத்தில், பொதுக்கருத்து உருவாக்கம் மூலமான நிர்பந்தத்தை நீதித்துறை, தனிநபர் விசாரணை ஆணையம், காவல்துறை ஆகியோர் மீது அளிப்பதற்காகவே, திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனரோ என்று சந்தேகிக்கிறோம். இது குற்றம் தொடர்பான விசாரணை நடைமுறையைப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும், சமூகத்தின் மனசாட்சியாகவும் அரசுக்கு உண்மையை எடுத்துக் கூறும் துணிவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமே ஒழிய, அரசின் தவறுகளை நியாயப்படுத்துபவர்களாக இருந்துவிடக் கூடாது.

எனவே, ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிக்கும் மாநில அரசுக்கும் ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையை உரிய கண்டனத்துடன் நிராகரிக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் குறுங்குழுவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்பதை ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் தெளிவுபடுத்துகிறோம்.

கரூர்த் துயரம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடைபெற வேண்டும்; குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற விவகாரங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

-தமிழக நலனில் அக்கறையுடன்…

‘திராவிட மாயை’ சுப்பு, சென்னை
இசைக்கவி ரமணன், சென்னை
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சென்னை
பேராசிரியர் ப.கனகசபாபதி, கோவை
கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை
எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஈரோடு
கவிஞர் ரவி சுப்பிரமணியன், சென்னை
கவிஞர் பெ.சிதம்பரநாதன், கோவை
கவிஞர் லட்சுமி மணிவண்ணன், நாகர்கோவில்
பத்ரி சேஷாத்ரி, சென்னை
மோகன் ஜி ஷத்ரியன், சென்னை
பி.டி.டி.ராஜன், சென்னை
இயகோகா சுப்பிரமணியம், கோவை
அர்ஜுன் சம்பத், கோவை
பேராசிரியர் உமையொருபாகன், நாகர்கோவில்
வானவில் க.ரவி, சென்னை
எஸ்.கே.கார்வேந்தன், தாராபுரம்
பா.பிரபாகர், சென்னை
ம.வெங்கடேசன், சென்னை
என்.சி.மோகன்தாஸ், சென்னை
டாக்டர் சீனிவாசகண்ணன், நாகர்கோவில்
பத்மன், சென்னை
நம்பிநாராயணன், சென்னை
வ.மு.முரளி, திருப்பூர்
ஹேமா கோபாலன், சென்னை
மீனாட்சி ஸ்ரீதர், சென்னை
ஜவஹர் வெங்கடசாமி, சென்னை
பாஸ்கர் சுப்பிரமணியம், சென்னை
ஒமாம்புலியூர் ஜெயராமன், சென்னை
ஜெயகிருஷ்ணன் கோபால், சென்னை
முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன், சென்னை
ஆமருவி தேவநாதன், சென்னை
செங்கோட்டை ஸ்ரீராம், சென்னை
சந்திர.பிரவீண்குமார், சென்னை
ஹரன் பிரசன்னா, சென்னை
ஜடாயு, பெங்களூரு
பி.ஆர்.மகாதேவன், சென்னை
சத்தியப்பிரியன், சேலம்
எஸ்.ஜி.சூர்யா, சென்னை
கோதை ஜோதிலட்சுமி, சென்னை
பி.வெங்கடாசலபதி, திருநெல்வேலி
முனைவர் காயத்ரி சுரேஷ், சென்னை
அருட்செல்வப்பேரரசன், திருவொற்றியூர்
கவிஞர் சுரேஜமீ, சென்னை
கவிஞர் உமாபாரதி, சென்னை
கவிஞர் பாபு பிரித்திவிராஜ், நாகர்கோவில்
கவிஞர் சுதே.கண்ணன், நாகர்கோவில்
கவிஞர் அமுல்ராஜ், திருவண்ணாமலை
கவிஞர் மீரா வில்வம், மும்பை
கவிஞர் லட்சுமி சாஹம்பரி, பெங்களூரு
கவிஞர் திருமலைக்கண்ணன், ஸ்ரீரங்கம்
கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், திருப்பூர்
கவிஞர் சிவதாசன், திருப்பூர்
கோவிந்தராஜ், திருப்பூர்
விசாலி கிருஷ்ணன், சென்னை
கமலநாதன். சென்னை
கவிஞர் பால்முகில், சென்னை
கவிஞர் துரைசிங், கன்னியாகுமரி
கவிஞர் இயற்கை, செஞ்சி
கவிஞர் நந்தலாலா, சென்னை
கவிஞர் சுராகி, திருவொற்றியூர்
கவிஞர் மீ.விஸ்வநாதன், சென்னை
கவிஞர் விவேக்பாரதி, சென்னை
கவிஞர் எஸ்.சுவாதி, சென்னை
கவிஞர் தில்லைவேந்தன், சென்னை
கவிஞர் ஹரிஹரன், சென்னை
கவிஞர் முரளிகிருஷ்ணா, சென்னை
கவிஞர் விஜயகிருஷ்ணன், சென்னை
கலைச்செல்வி ஸ்ரீநிவாஸ், சென்னை
வழக்கறிஞர் எம்.விஜயா, சென்னை
ராதா எஸ்.தேவர், சென்னை
ராமசுப்பிரமணியன், சென்னை
ராகவேந்திரா, சென்னை
நடராஜ சாஸ்திரி, சென்னை
ஜனனி ரமேஷ், சென்னை
முனைவர் செ.ஜகந்நாத், மதுரை
சோ.விபின்ராஜ், கன்னியாகுமரி
ஜா.விநாயகமூர்த்தி, விழுப்புரம்
அசோக்ராஜ், கும்பகோணம்
சே.வெங்கடேசன், திருவண்ணாமலை
பத்மா சந்திரசேகர், சென்னை
பொன்.மூர்த்திகன், பறங்கிப்பேட்டை
நிழலி, பெரம்பலூர்
பாவலர் கா.நேசன், திருகளப்பூர்
ச.மோகன், பெரம்பலூர்
தேவரசிகன், கும்பகோணம்
ஜி.பி.இளங்கோவன், கும்பகோணம்
மா.செல்வகுமார், கல்லூர், கும்பகோணம்
கே.மணிமாறன், சென்னை
திருமை பா.ஸ்ரீதரன், சென்னை
பி.வீரராகவன், சென்னை
பேராசிரியர் ஜோஸபின்மேரி, பாளையங்கோட்டை
பேராசிரியர் பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி
வி.வி.பாலா, சென்னை
விதூஷ், சென்னை
கே.ஜி.ஜவர்லால், சென்னை
முனைவர் சடகோபன், சென்னை
முனைவர் தர்மசேனன், சென்னை
சக்திவேல் ராஜகுமார், சென்னை
ஜெயந்தி நாகராஜன், சென்னை
கே.கந்தசாமி, கோவை
புதுகை பாரதி, புதுக்கோட்டை
தசரத் ஷா, காஞ்சிபுரம்
அருண்பிரபு, சென்னை
ஆனந்த்பிரசாத், சென்னை
துக்ளக் சத்யா, சென்னை
ஆர்.ராமமூர்தி, சென்னை
குமரேசன், சென்னை
திவாகர், சென்னை
தேவப்பிரியா, சென்னை
ஆண்டனி, சென்னை
அரவிந்தா நாஞ்சில், சென்னை

மற்றும் பலர் (200க்கு மேற்பட்டோர்)

#
##

(இந்த அறிக்கையை ஆதரிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் தங்களை பின்னூட்டத்தில் இணைக்கலாம்).


ஒரே ஓர் அறிக்கை படைப்பாளர் சங்கமம் சார்பாக. கதறல் ஆரம்பம்.

இவர்களுக்குள்ளே இப்படி ஒரு நெட்வொர்க்கா என்று அங்கலாய்ப்பு.

முன்பு ஒரு முறை காலச்சுவடு இதழில் சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு பேட்டியில், ‘இப்போதெல்லாம் பாஜக ஆதரவுக் குரல்கள் எல்லாம் கேட்கின்றன’ என்ற ரீதியில் அங்கலாய்த்ததற்கு இணையான, கருத்துச் சுதந்திரப் பீராய்வு தொடக்கம்.

அத்தனை பேரும் பாஜக ஆதரவாளர்கள் என்று ஒரு கண்டுபிடிப்பு. இதே கண்டுபிடிப்பு, போலி முற்போக்காளர்கள் காய்த்து ஊற்றிய அறிக்கையில் ‘அத்தனை பேரும் அர்பன் நக்ஸல்கள்’ என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை.

’இந்த அறிக்கைக்கு நன்றி, எத்தனை பேர் பாஜக ஆதரவாளர்கள் என்று கண்டுகொண்டோம்’ என்று உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கமெண்ட். அதே வெங்கயாத்தைத்தான் நாங்களும் காய்ச்சி ஊற்றிய அறிக்கையில் கண்டுகொண்டு இதனை வெளியிட்டிருக்கிறோம்.

இதில் சிகரம் வைத்த திராவிட மாடல் கமெண்ட் ஒன்று உண்டு. அத்தனை பேரையும் விட்டுவிட்டு, அர்ஜூன் சம்பத் எழுத்தாளரா என்ற கேள்வி. ஏன் அர்ஜூன் சம்பத்தை மட்டும் கேட்கவேண்டும்? நூல் நூல் என்று சொல்லிக்கொண்டே, உண்மையில் திராவிட மாடலுக்கு உறுத்துவது என்ன ஜாதி வெறி என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை என்பதற்கு இந்த கமெண்ட் இன்னும் ஓர் ஆதாரம்.

அந்த காய்ச்சி ஊற்றிய அறிக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இருக்கலாமாம், ஆனால் நேர்மையான அறிக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் வரக் கூடாதாம்! எரியட்டும் எரியட்டும்.

Share