Archive for ஹரன் பிரசன்னா

இரவின் படம் – கவிதை

அன்று தீடீரென்று மழை பெய்துவிட்டிருந்தது.
தலைமாட்டில் அமர்ந்துகொண்டு விஜிதா விடாமல்
தக்காண பீடபூமி பற்றி படித்துக்கொண்டிருந்தாள்
மழை போலவே திடீரென விரிந்த என் எண்ணச் சிக்குகளின்
-அது கனவாகவே இருக்கவேண்டும்.
ஒவ்வொரு பிம்பத்திலும் ஒவ்வொரு தாமரைப்பூ இருந்தது
தலைமாட்டில் திடீரென
(a+b)3-ன் சத்தம்
பாதி திறந்த கண்களின் வழியே உள் நுழைகிறது
படபடத்துக்கொண்டிருக்கும் இடாகினிப் பேய்களும்.
எப்படியோ உறங்கியிருக்கிறேன்/விழித்திருக்கிறேன்.
நானிருந்த சூழலுக்கு மிக அந்நியமாய் அறை விளக்கு
மீண்டும் கண்மூட
என் புலன்களின் வழியே மலர்கிறது
முதல் தாமரைப்பூ

Share

வாசலில் நிற்கும் பெண் – கவிதை

சில வருடங்களாய் வாசலில் நிற்கிறாள் அப்பெண்
அதிகாலை வேளைகளில் அவளை உணர்வதுண்டு
அவளின் கண்கள் சதா அலைந்துகொண்டிருக்கின்றன
எதிரிலிருக்கும் புதருக்குள்
அந்த அதிகாலையில் ஓடுகின்றன இரு நாய்கள்
அன்றுதான்
அதிசயமாய்
ஒரு மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி
எருக்கம்பூவில் அமரக்கண்டேன்
விடிந்துகொண்டிருக்கும் வேளையில்
வராண்டாவில்
ஒரு நீளமான முடி சுற்றிக்கொண்டிருந்தது
அப்பெண்ணின் கண்களிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை
ஸ்டிக்கர் பொட்டுத் தடங்களற்ற குளியலைறை உள்ள என் வீட்டு வாசலில்
குவிந்துகொண்டிருக்கிறது என் கவனமெல்லாம்.

Share

காற்தடம் – கவிதை

நிலவொளியில்
இரவின் நிலமெங்கும்
விரிந்து கிடக்கும்
காற்தடங்கள்
இம்மழையில் அழிகின்றன

ஒரு காற்தடத்தையும்
மழையின் துளிகளையும்
உற்று நோக்கிக்கொண்டிருக்கிறேன்

முதல் துளி விழ வெகு நேரமாகியது
புண்ணியம் செய்தவனின் காற்தடம்
வெகு விரைவில் அழிவதில்லை என்கிற
என் தத்துவப் பின்னணி விரியுமுன்
இரண்டாவது மூன்றாவது துளிகள் விழுந்துவிட்டன
அவற்றின் வரிசையை இனங்காணுமுன்
அடுத்தடுத்து விழுந்த துளிகள்
புதிய ரேகையை அமைத்தன
அது ஒரு கவிதையின் கணமென தெளிந்தேன்

பக்கத்தில் தேங்கிக் கிடந்த நீரிலிருந்து
ஒரு தவளை
அக் காற்தடத்தில் குதித்தோடியது
இப்போது அது தவளையின் காற்தடமாக மாறியிருந்தது
மழை வலுத்தது
அக்காற்தடம் முற்றிலும் சேதப்பட்டுப் போனது
அல்லது நிலமெங்கும் வியாபித்துவிட்டது
யாரோவொருவனின் காற்தடத்தைப் பற்றிய
என் எண்ணங்கள்
அதை முற்றிலும் அழிக்க விடுவதில்லை என உணர்ந்தேன்

வேறொரு காற்தடம் தேடத் துவங்கியபோது
தவளையின் காற்தடமாக மாறிவிட்டிருந்த அக்காற்தடம்
இம் மண்ணிலிருந்து நீங்கிவிட்டிருக்கவேண்டும்

நிலவொளியில்
இரவின் நிலமெங்கும்
விரிந்து கிடக்கும்
காற்தடங்கள்
இம்மழையில் அழிகின்றன
நான் அடுத்தடுத்த
காற்தடங்களைப் பற்றி
எண்ணத் துவங்கும்போதும்

Share

விரிசல் – கவிதை

சட்டென புலப்பட்டது
சுவரில் விரிசல்
நேற்றுவரை இல்லாமலிருந்ததோ
என்கிற கேள்விக்கு விடையில்லை
கொஞ்சம் உற்றுப் பார்க்கும்போது
அழகாகப் பட்டது
சுவரில் மின்னல் போல
மெல்ல தடவிப் பார்க்கும்போது
கிளரும் விரல்கள்
உள்ளே ஒரு விதை வைத்தால்
பெருமரம் முளைக்குமோ?
வீட்டுக்குள்ளே ஓர் ஆலமரம்!
விரிசலில் ஊதினேன்
மண் வாரி கண்ணுக்குள் விழ
லேசாய் உறுத்தியது
இன்னொரு சமயம்
பலமாய்க் கதவடைத்து மூடியபோது
சிற்சில எறும்புகள் உதிரின
என் உடலை
விரிசலுக்குள் புகுத்தி
வெளி வந்தபோது
மேலெங்கும் கவிதை வரிகள் ஒட்டியிருந்தன
எறும்புகள் கவிதைகளைத் தின்கின்றனவா?
பின்னொரு சமயம் யோசிக்கவேண்டும்
விரிசலை மறைக்கும் விதமாய்
ஒரு கண்ணாடியை மாட்ட
முகத்தில் அறைந்தது என் முகம்
இப்போது
என் முகத்தின் பின்னே
மறைந்திருக்கிறது விரிசல்
இன்னொரு சமயம் நீங்கள் வரும்போது
அக்கண்ணாடியை அவசியம் காணவும்.

Share

மூன்றாம் கட்டத்திலிருந்து துவங்கும் ஆட்டம் – கவிதை

வெகு நேர மோதலுக்குப் பின்
எனக்குத் தீக்குச்சியும்
உனக்குக் கல்லுமென முடிவானது,
யதேச்சையாய் என்றாலும் வெகு கச்சிதமாய்.

சோழிகள் உருட்டப்பட்ட தருணங்களிலெல்லாம்
உன் கண்களில் தொடங்கி அடங்கியது ஜ்வாலை
எனது ஜ்வாலையை விழுங்கி விட்டிருந்தன
என்னிரு கண்கள்

வெகு முன்பு நானும் நீயும் ஆடிய
தொடக்க கால ஆட்டங்களிலிருந்த
பரஸ்பர புரிந்துணர்வும் வாஞ்சையும்
இப்போதும் இருப்பதாகச் சொல்லிக்கொள்வோம்
சொல்லி வைத்த மாதிரி

ஒரு தாயம் விழும் தருணம்
எரிமலை

உனது கைக்குள் அடங்காமல் தெறித்துவிழும்
சோழியைப் பற்றி எடுக்கிறேன்
உன் கையின் தகிப்பு சோழிக்குள்

கடைசியாய் எனக்கு ஒரு தாயம் விழுகிறது.
தீக்குச்சி பற்றி எரிய
மூன்றாம் கட்டத்திலிருந்து ஆட்டத்தைத் துவக்குகிறேன்
முதலிரண்டு கட்டங்களைப் பற்றிய உணர்வே உனக்கில்லை.
நாம் சோழியை மட்டும் உருட்டிக்கொண்டிருக்கிறோம்.

Share

அவன் எறிந்த கல் – கவிதை

தெளிந்த நீரோட்டத்தின் கீழே
வெகு கீழே
அலைந்து கொண்டிருந்தது கலங்கல்
ஒரே ஒரு கல் போதும்
எத்தனை சொல்லியும் கேளாமல்
அக்கல்லுடன் வந்தான் அவன்
மரங்களிலிருந்து பேரிரைச்சலுடன் பறந்தன பறவைகள்
அத்தனை பெரிய இடி
பச்சை மரம் ஹோவென பற்றி எரிந்தது
அன்றிரவு அம்மா செய்த கார்த்திகை அடை
கல்லை விட்டு எழவே இல்லை
பிய்ந்தே போனது
முடிவில் அவன் கலங்கிய நீரோட்டத்தில் குதித்தான்
என் புறங்கையில் கண்ணீர்த்துளி

-oOo-

Share

இப்போது வேண்டாத மழைக்கு – கவிதை

இம்மழை எனக்காகவே பெய்கிறது, நானறிவேன்
நான் இம்மழையைக் கவிதையில் பிடிக்க விரும்புகிறது
எதிர்பாராத ஒரு நேரத்தில்
இம்மழை அதற்காகவே பெய்கிறது
மூடியிருக்கும் கதவிடுக்கின் வழியே
வழிந்து வரும் நீர் ஏக்கத்துடன் பார்க்கிறது
என்னை எழுதேன் என்று
வெளியில் கேட்டுக்கொண்டிருக்கும்
ஹோவென்னும் சத்தத்தை மீறிக்கொண்டிருக்கிறது
அறைக்குள் சுற்றும் ஃபேனின் சத்தம்
நான் மழைக்குச் சொல்லவில்லை
வானெங்கும் என் கண்கள்
கொஞ்சம் வெயிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதென்று
என்னையும் மழையையும்
பிரித்திருக்கும்
சுவர்களின் கீறல்களின் வழியே
இன்னும் உள் வடிந்துகொண்டிருக்கிறது மழை நீர்

Share

நாடகம் – அழைப்பிதழ்

mudiyAtha saman - azaippithaz

கோபி கிருஷ்ணன் நினைவாக கோபி கிருஷ்ணனின் “முடியாத சமன்” சிறுகதையின் நாடகமாக்கம்.

நாடகமாக்கம்: வெளி ரங்கராஜன்

நடிப்பு, இயக்கம்: ஜெயராவ் (கூத்துப்பட்டறை)

Social Work, a-social work, anti-social work கோபி கிருஷ்ணனின் ‘சமூகப் பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ நூலின் ஆங்கில மொழியக்காம், வெளியீடு.

ஆங்கில மொழியாக்கம்: லதா ராமகிருஷ்ணன்
நூல் வெளியிடுபவர்: மா.அரங்கநாதன்

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.ஜலாலுதீன் அறிமுகம்.

அறிமுகம் செய்பவர்: ‘வசந்தம்’ சிறப்புக் குழந்தைகள் பள்ளி இயக்குநர் திருமதி. அல்லி

தமது பணி குறித்தும், கோபி கிருஷ்ணன் குறித்தும் ஜலாலுதின் அனுபவப் பகிர்வு.

இடம்:

தக்கர் பாபா வித்யாலயா,
வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர், சென்னை – 17.

நாள்: 04.06.2005, சனி மாலை 6.00 மணி.

ஏற்பாடு: குறிஞ்சி அமைப்பு.

Share