Archive for ஹரன் பிரசன்னா

நாடகம் – அழைப்பிதழ்

mudiyAtha saman - azaippithaz

கோபி கிருஷ்ணன் நினைவாக கோபி கிருஷ்ணனின் “முடியாத சமன்” சிறுகதையின் நாடகமாக்கம்.

நாடகமாக்கம்: வெளி ரங்கராஜன்

நடிப்பு, இயக்கம்: ஜெயராவ் (கூத்துப்பட்டறை)

Social Work, a-social work, anti-social work கோபி கிருஷ்ணனின் ‘சமூகப் பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ நூலின் ஆங்கில மொழியக்காம், வெளியீடு.

ஆங்கில மொழியாக்கம்: லதா ராமகிருஷ்ணன்
நூல் வெளியிடுபவர்: மா.அரங்கநாதன்

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.ஜலாலுதீன் அறிமுகம்.

அறிமுகம் செய்பவர்: ‘வசந்தம்’ சிறப்புக் குழந்தைகள் பள்ளி இயக்குநர் திருமதி. அல்லி

தமது பணி குறித்தும், கோபி கிருஷ்ணன் குறித்தும் ஜலாலுதின் அனுபவப் பகிர்வு.

இடம்:

தக்கர் பாபா வித்யாலயா,
வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர், சென்னை – 17.

நாள்: 04.06.2005, சனி மாலை 6.00 மணி.

ஏற்பாடு: குறிஞ்சி அமைப்பு.

Share

மரணத்தின் நிகழ்வு – கவிதை

யாராலும் தடுக்கமுடியாத
இந்நிகழ்வின் மரணம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
இக்கணத்தை
கால ஓட்டத்தில்
மனப்பிரதியில்
அச்செடுத்து வைக்கிறேன்
ஓர் தலைசிறந்த பார்வையாளனாக
வெற்றுக் கடமையுணர்வுடனல்லாமல்
உள்ளார்ந்த ஐக்கியத்துடன்
இந்நிகழ்வு
நிகழ்ந்துகொண்டிருக்கும்
இந்நேரம்
மிக இரம்மியமானது, இனிமையானது
நீங்கள் அறிவீர்களா?
மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும்
கிழவியைச் சுற்றிப் பெருங்கூட்டம்
அவள் வைத்த வாதா மரத்திலிருந்து
வாதாங்கொட்டை கீழே விழும் ஒலி
சொத்.

Share

பிரதாப முதலியார் சரித்திரம் – ஒரு பார்வை

ஒரு விருந்தாளிப் பதிவாக பிரதாப முதலியார் சரித்திரம் புத்தகம் பற்றிய எனது விமர்சனம் தேசிகனின் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. அதை வலைப்பதிந்த தேசிகனுக்கு நன்றி. எப்போதும் அதிக நட்சத்திரக் குத்துகளையும் ஓரளவு கணிசமான பின்னூட்டங்களையும் பெறும் தேசிகன் இனிமேல் என் பதிவை ஏற்றச் சம்மதிக்கமாட்டார் என்றே நம்புகிறேன். 🙂

என் விமர்சனத்தைப் படிக்க விரும்புகிறவர்கள் சொடுக்க வேண்டிய சுட்டி: http://desikann.blogspot.com/2005/05/blog-post_26.html

நன்றி

தமிழின் முதல் உரைநடை நவீனம் என்று சொல்லப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டு 1879-ம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் உரைநடை நவீனத்தை வாசிப்பதிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த நான், அதன் நடையையும் அதிலிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களையும் ஒருவாறு கற்பனை கொண்டு, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பெரும் கஷ்டமாய் இருக்கும் என நினைத்திருந்தேன். புத்தகம் கையில் கிடைத்து அதை வாசிக்கத் துவங்கிய பின்பு, நான் செய்து வைத்திருந்த கற்பனை எத்தனை அபத்தமானது என்பது புரிந்தது. எவ்விதத் தங்குதடையில்லாமல் வாசிக்க முடிந்தது பெரும் ஆச்சரியமாய் இருந்தது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவலை வாசிக்கிறோம் என்கிற எண்ணமே பெரும் எழுச்சி தருவதாக அமைந்தது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும்போதும் என் மூதாதையர் எனக்கு விட்டுச் சென்ற தனிப்பட்ட கடிதத்தைப் படிப்பது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழின் நவீனம் இன்னமும் சரளமாய் வாசிக்கக்கூடியதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது என்கிற எண்ணம் தந்த கிளர்ச்சியே இந்த நூலின் வாசிப்பனுவபம். தமிழின் உரைநடை, தமிழில் எழுதிவந்த எழுத்தாளர்களால் எத்தனைத் தூரம் மாறியுள்ளது, மேன்மை பெற்றுள்ளது என்பதை அறியவும், புனைவு என்பது யதார்த்ததின் அடுக்குகளில் இருப்பதுதானன்றி வேறில்லை என்கிற எண்ணம் கொண்ட இக்கால எழுத்துக்கும், புனைவு என்பது முழுக்க புனைவே என்கிற அக்கால எழுத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி ஆலோசிக்கவும் பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு ஆவணமாகிறது.

பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்து வாழ்வாங்கு வாழ்கிறார்கள். இங்கே பிரதாப முதலியாரின் இளமையும் அவரின் மூதாதையர்களின் குறிப்பும், பிரதாப முதலியாரின் கல்வியும் விவரிக்கப்படுகிறது. கூடவே ஞானாம்பாளின் வாழ்வும் இதே வகையில் விவரிக்கப்பட, ஞானாம்பாளுக்கும் பிரதாப முதலியாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு ஒரு சிறு தடங்கலும், அதைத் தெய்வம் தாமே களைந்து வைப்பது போன்ற ஓர் உரைநடை உத்தியும் அதைத் தொடர்ந்து திருமணமும் என நகரும் கதை, ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் சந்திக்கும் பிரச்சனைகளும், அதை அவர்கள் திறம்பட – தெய்வத்தின் துணையுடன் – தீர்த்துக்கொண்டு, ஞானாம்பாள் எப்படிச் சிறந்த “பத்தரை மாத்துத் தங்கமாக” விளங்குகிறாள் என்பதுடன் “சுப மங்களமாக” முடிவடைகிறது. இக்கதையை வாசிப்பவர்கள் எல்லாருமே வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார் ஆசிரியர்! கதையின் எல்லா நிகழ்வுகளுமே தெய்வத்தின் துணையுடனோ அதிர்ஷ்டத்தின் துணையுடனோ, பழங்காலத் திரைப்படங்களில் வருவது போல, பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் தொடர்ந்து தப்பித்துக்கொண்டும் வென்று கொண்டும் இருப்பது போல (மிகச் சரியாகச் சொல்வதானால் ‘பிரதாப முதலியார் சரித்திரத்தில் வருவது போல பொன்னியில் செல்வனிலும் பழங்காலத் திரைப்படங்களிலும்’ என்று மாற்றிச் சொல்லவேண்டும்) கதாநாயகனுக்கும் நாயகிக்கும் சார்பாகவும் அவர்கள் வெல்லும் வண்ணமும் அமைகின்றன. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் வென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கும் பெரும் மனக்கிலேசமும் சோதனையும் நேரும்; சில அத்தியாங்களில் அதை அவர்கள் தாண்டியிருப்பார்கள். அதுமட்டுமன்றி கதாநாயகனைச் சேர்ந்தவர்களும் வென்றுகொண்டே இருக்கிறார்கள். அதிர்ஷ்டம் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கிறது. எதிர்நாயகன் என்கிற தனிப்பட்ட ஒரு பாத்திரம் இல்லை. தேவையான இடங்களில் அவ்வப்போது எதிர்நாயகர்கள் தோன்றி, கதாநாயகன் வெல்லும்போது, அவனை வாழ்த்திவிட்டு அவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். இந்த உரைநடை நவீனத்தை “கதை” என்றே சொல்லவேண்டும். மாறி மாறிக் கதை சொல்கிறார்கள். பஞ்ச தந்திரக் கதைகளில் வருவது போல, கதைக்குள் கதையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஞானாம்பாள் இரண்டு அத்தியாங்கள் முழுவதும் அவளுக்குத் தெரிந்த கற்புக்கரசிகளின் கதைகளைச் சொல்கிறாள். பிரதாப முதலியார் ஒரு அத்தியாயம் முழுவதும் அவருக்குத் தெரிந்த கதைகளை, துணுக்குச் செய்திகளைச் சொல்கிறார். பிரதாப முதலியாரின் தாயார், மஞ்சள் மகிமை கொண்ட பெண்குலச் சிரோன்மணிகளின் கதைகளை வாயாரச் சொல்கிறார். இதை விட்டால் இன்னும் சில அத்தியாங்களில் துணுக்குகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார்கள். துணுக்குகள் இதைப் பற்றித்தான் என்றில்லை. ஞானாம்பாள் அரசியாக, அதிர்ஷ்டவசமாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, ஒரு அரசனின் கடமைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார். அப்போது அவர் லஞ்சம் பற்றியும் வழக்கறிஞர்களின் நேர்மையின்மை பற்றியும் தமிழ் புறக்கணிக்கப்படுவது பற்றியும் விடாது பேசுகிறார். 1879-இல் வந்த கதை என்பதை மனதில் கொள்ளவேண்டும். சற்று மலைப்பாகத்தான் இருந்தது.

பதிவிரதையைப் பாராட்டும் முகமான கதை என்கிற ஆதார விஷயத்தையும் முழுக்க முழுக்க புனைவு என்கிற ஆதார விஷயத்தையும் கொஞ்சம் புறந்தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படத் தொடங்கும். அதனால் இது தமிழின் மிகச்சிறந்த உரைநடை ஆவணங்களுள் ஒன்றாகிறது.

முதலில் இதன் நடையைச் சொல்லவேண்டும். இந்த உரைநடையில் ஒரு வரி எளிதில் முடிவடையாததாக இருக்கிறது. சில சமயம் ஒரு வரி ஒரு பத்தியாகிறது. அவள் சொன்னாள் என்று முடிந்துவிடவேண்டிய இடம் அவள் சொன்னபோது என்று தொடர்கிறது. இது அக்காலத்தின் உரையின் வடிவம். உரைநடை மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது. சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் கலக்காத வரிகள் குறைவு என்கிற அளவிற்குத் தொடர்ந்து சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் உரைநடையில் வந்துகொண்டேயிருக்கின்றன. தமிழ் வார்த்தைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறு பத்திரிகைகளும் தமிழார்வலர்களும் எவ்வளவு தூரம் வென்றிருக்கிறார்கள் என்பதை அறிய இந்நூலை ஒப்புநோக்கலாம். இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சமிஸ்கிருத வார்த்தைகள் இன்று வழக்கொழிந்துவிட்டன. சில வார்த்தைகளை பாரதியாரின் கட்டுரைகளில் காணலாம். அவையன்றி, புதியதாக, தமிழோடு சேர்த்து எழுதியும் பேசியும் வரப்பட்ட பல வார்த்தைகளை இந்நாவலில் காணலாம். இவையன்றி, புழக்கத்திலிருந்து அருகிவிட்ட நிறையத் தமிழ்வார்த்தைகளையும் காணலாம்.

அடுத்ததாக கவனிக்கவேண்டியது ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு. வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு சில இடங்களில் நாவலாசிரியரின் திறமை பளிச்சிடுகிறது. துணுக்குகள் பலவற்றை ஆசிரியர் ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழின் முதல் உரைநடை நவீனம் என்ற அறிவிப்போடு அவர் இதைச் செய்திருப்பதால், அவை கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற போதும், அவற்றை ஆசிரியர் எழுதியிருப்பது, ஓர் ஆவணம் என்கிற வகையில், அறிந்துகொள்ள ஆர்வமூட்டுவதாகவும், இன்னமும் இந்தக் கதைகளை மையமாக வைத்துப் பட்டிமன்றங்களிலும் திரைப்படங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறியக்கூடியதாகவும் உள்ளது. வாய்வழிக் கதைகள் அப்போது முதல் இப்போது வரை விடாமல் கடத்தப்பட்டு வருகின்றன. நாம் இப்போதும் சொல்லிச் சிரித்துக்கொள்ளக்கூடிய துணுக்குகளை இந்நாவலில் காணலாம். நாம் இன்றும் கேட்டுச் சிரிக்கும் கதைகள், நம் முன்னோர்களால் அன்றும் சிலாகிக்கப்பட்டது என்கிற உணர்வு, முதலில் நான் சொன்னதுபோல பேரெழுச்சித் தருவதாய் இருந்தது. இந்த உணர்வே இந்த நாவலை நான் படிக்கும்போது தொடர்ந்து வந்தது, மையச் சரடாக. அவற்றில் சில துணுக்குகள் இன்றையத் திரைப்படங்களிலும் காணக் கிடைக்கின்றன! ஒருவகையில் தமிழ்த் திரைப்படங்கள் 1879-இல்தானே இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்!

நாவல் வாசிப்பவர்கள் யாரும் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டு விடக்கூடாது என்பதை ஆதர்சமாக வைத்துக் கதை எழுதியிருக்கிறார் வேதநாயகம் பிள்ளை. கதையின் தொடர்ச்சியை விடாமல் போதிக்கிறார். ஒன்றிரண்டு அத்தியாங்கள் விட்டுபோனாலும் அடுத்த சில அத்தியாங்களில் விட்டுப் போன இடத்திலிருந்து தொடர்ந்து வந்து, கதையின் நகரும் சரடோடு இணைத்துக்கொள்கிறார். விட்டுப் போன சங்கிலிகளை விடாமல் சேர்த்து இணைப்பது போல. இதே உத்தியினை பொன்னியின் செல்வனிலும் காணலாம். வாசகர் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டுவிடக்கூடாது என்பதே முக்கியக் குறிக்கோளாக இருப்பவர்கள் செய்யும் விஷயமிது. மேலும் முதல் உரைநடை நவீனம் என்பதால் அவர் அதிகச் சிரத்தை எடுத்து இதைச் செய்தது புரிந்துகொள்ள முடிகிறது.

நாவலின் சில இடங்கள் சிறந்த சிறுவர் கதைக்கான களமாக விளங்குகின்றன. பொன்னியின் செல்வனை நான் சிறந்த சிறுவர் நாவல் என்றே சொல்லுவேன். ஒருவகையில் பிரதாம முதலியார் சரித்திரம் கூட அப்படித்தான். எல்லாவற்றையும் வலிந்து வந்து ஊட்டி, எளிதாக்கிவிடும் உத்தி அப்படிப்பட்ட எண்ணம் அளித்திருக்கலாம். சில கதைகளும் துணுக்குகளும் சில இடங்களும் சிறுவர்களுக்குச் சொல்லி உற்சாகப்படுத்த முடியக்கூடியவை. ஒரு வீரன் பிரஸ்தாபிக்கும் துணுக்கு ஒன்று, “தலை இல்லாததால் காலை மட்டும் வெட்ட முடிந்தது” என்கிற ஹாஸ்யத்தைப் பேசுகிறது. விக்கிரமபுரியில் பிரதாப முதலியார் சிக்கிக்கொள்ள, அங்கிருக்கும் மக்கள் பிரதாப முதலியாரின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், சிறுவர் ஹாஸ்ய நூலுக்கானவை. அவை தீர்க்கப்படும் முறைகள், சிறுவர் விவேக நூலுக்கானவை.

நாவலில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் லஞ்சம் பற்றிய அத்தியாயங்கள். ஞானாம்பாள் அரசனாக (ஆம்! அரசியாக அல்ல. அரசனாக. அவள் ஆண் வேடம் பூண்டு அரசாள்கிறாள்!) ஆளும்போது செய்யும் உபதேசங்களும், தான் செய்யவேண்டியதாக அவள் கொள்ளும் ஆக்ஞைகளும். அதில் முக்கியமாக அவள் லஞ்சம் பற்றிப் பேசுகிறாள். இதைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், நாம் இன்னும் 1879-இல்தான் இருக்கிறோம். அக்காலத்திலேயே “இக்காலத்தில் கலி முத்திப் போச்சு” என்று சலித்துக்கொள்ளும் வசனங்கள் பற்றிச் சிரித்துக்கொள்வேன். அது இந்நாவலிலும் தவறாமல் இடம்பெறுகிறது. இன்னொரு விஷயம் வக்கீல்களின் தொழில் நேர்மையைப் பற்றியது. அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ஞானாம்பாள் “பிரஸ்தாபிக்கிறாள்.” இவையும் எவ்வித மாற்றமுமில்லாமல் அப்படியே இக்காலத்திற்குப் பொருந்திவருகிறது!

நாவலில் ஞானாம்பாள் தமிழ் பற்றிப் பேசுகிறாள். இரண்டு வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிடும் முறையை விமர்சிக்கும்போது, தமிழின் மேன்மைகளும் வழக்கொழிந்துபோன சமிஸ்கிருதம் மற்றும் இலத்தீன் மொழிகளை விட தமிழ் எவ்விதம் சிறப்பு வாய்ந்தது என்பதையும் பேசுகிறாள். இதை ஆசிரியரின் தமிழுணர்வாய்க் காணலாம். ஆனால் அதை அவரது நடையில் காண இயலவில்லை. வெகு இயல்பாக வக்கீல் என்றும் பீசு என்றும் இன்ன பிற ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். மேலும் “அவைகள்” என்றும் “மெள்ள மெள்ள” என்றும் (மட்டுமே) எழுதியிருக்கிறார். (சுஜாதா கவனிக்கவேண்டும்.)

சர்வ சாதாரணமாக நாவலெங்கும் துலுக்கன் என்றும் சக்கிலியன் என்றும் கையாளப்பட்டிருக்கிறது. வண்ணான், அம்பட்டன், தோட்டி போன்றவர்களுக்கு ஆசனம் கொடுப்பது ஏற்புடையதல்ல என்கிற கருத்தும் ஓரிடத்தில் வருகிறது.

1879-இல் ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பு எவ்விதம் இருந்தது என்பதை இந்நாவல் கொண்டு அறியமுடியவில்லை. இந்நாவல் நானறிந்த வரையில், ஆங்கிலேயர்களின் அடி போற்றுவதாகவே அமைந்துள்ளது. நேரடியான புகழ்ச்சி வைக்கப்படவில்லை எனினும், சில நிகழ்ச்சிகள் மூலம், அவர்கள் பரிபாலனை செய்வதில் தவறில்லை என்றே ஆசிரியர் நினைக்கிறார் என்று எண்ண வழிவகுக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வைக்கப்படாததால் இப்படி எடுத்துக்கொள்ளத் தோன்றியதோ என்னவோ. ஆங்கிலேய நீதிமான்களின் விசாரனையின் போதோ வேறு சில ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலோ ஆசிரியர் தம் கருத்தையோ அல்லது வேறொரு கதாபாத்திரத்தின் மூலம் எதிர்க்கருத்தையோ வைக்கவேயில்லை.

தமிழின் முதல் உரைநடை நவீனம் மூன்றாம் பார்வையில் எழுதப்படாமல், பிரதாப முதலியாரின் “சுயசரிதம்” போல தன் கூற்றிலேயே சொல்லப்படுகிறது.

தேவையான இடங்களில் வேதநாயகம்பிள்ளை விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். ஆசிரியர் கிறிஸ்துவர் என்பதால் இருக்கலாம். ஆனால் கதையின் வேறெந்த இடங்களிலும் இதை இனம் காண முடியவில்லை. மதம் பற்றிய மேன்மையான கருத்துகள் ஒவ்வொரு இடங்களில் இடம் பெற்றாலும், எதிர்மறைக் கருத்துகளே இல்லை.

நமது கலாசாரம் என்பது பெண்களின் பத்தினித் தன்மையும், கணவனுக்கும் குடும்பத்திற்கும் சேவகம் செய்வதும் என்று சொல்லும் நூல், ஒரு பெண் அரசனாகவும் நின்று சாதிக்க முடியும் என்றும் சொல்கிறது. சில மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும், விதவை மறுமணத்திற்கு ஆதரவான ஒரு கருத்தும் சோதிடம் பொய் என்பதான விவாதமும் கதையினூடே வந்து போகின்றன.

யதார்த்த கதைகளிலிருந்து ஒரு மாறுபட்ட கதையை, ஆம்!, “கதையை” வாசிக்க விரும்புகிறவர்கள் வாசிக்கலாம். நான் இந்நாவலை வாசிப்பதற்கு முன்பு, எனக்கு சென்டிமென்டலாக இருந்த எண்ணம், தமிழின் முதல் உரைநடை புனைவை வாசித்தே ஆகவேண்டும் என்பதே. இதே எண்ணமுள்ளவர்கள் நிச்சயம் வாசிக்கலாம்.

Share

ஒரு அவசரப்பதிவு – மதி கந்தசாமிக்கு

தங்கமணியின் பதிவொன்றில் மதியின் பின்னூட்டமொன்றைக் கண்டேன். அவரது பாணியில், போகிற போக்கில் சொல்கிறார்போல் விஷமத்தனத்தைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மதியின் இந்த விஷமத்தனம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இந்த முறை புதிய ஒன்றுடன் வந்துள்ளார். எனி இண்டியன்.காமை அவரது பல நண்பர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினாராம். அதுவும் நான் கேட்டுக்கொண்டபடியாம். நான் எப்போதும் நட்பையும் எனது வேலையையும் ஒன்றாகக் கலக்கவிடாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் கொள்வேன். எனி இண்டியனில் சேர்ந்த பின்பு இதுநாள் வரையில், இணைய நண்பர்கள் யாரிடமும் -நேரில் பார்த்திரா விட்டாலும், இணையத்தின் மூலம் எனது மிக நெருக்கமான நண்பர்களாகிப் போன ஜெயஸ்ர், ஹரியண்ணா, ஆசீஃப் மீரான், ஆசாத் பாய், கே.வி.ராஜா, உஷா ராமசந்திரன், மரத்தடி ப்ரியா, பரிமேழலகர், ஹைகூ கணேஷ் மற்றும் பலர் உள்ளிட்ட யாரிடமும் – எனி இண்டியன் பற்றி நண்பர்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை. இவ்வளவு ஏன்? இணையத்திற்கு முன்பே எனக்கு மிக நெருக்கமான நண்பரான எம்.கே. குமாரிடம் கூட இப்படிக் கேட்டதில்லை. உண்மை இப்படியிருக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் தனக்குப் பிடிக்காதவர்களின் மீது வெறுப்பை உமிழவும் மதி “நான் கேட்டுக்கொண்டபடி” என்று எழுதியிருக்கிறார். அவராகவே அவரது நண்பர்களிடம் சொன்னதாக அவர் ஒத்துக்கொண்டால், பெரும் இழுக்கு வந்துவிடும் என்று அவர் அஞ்சுகிறாரோ என்னவோ.

எனி இண்டியன்.காம் தொடங்கிய காலத்தில் என்னுடைய மெசெஞ்சரில் மதியிடமிருந்து ஒரு ஆஃப்லைனர் வந்திருந்தது. அதில், எனி இண்டியன்.காமில் ஹரன்பிரசன்னா என்ற பெயரைக் கண்டதாகவும் அது ஒன்றே அவருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், அதனால் அவர் தன் நண்பர்களிடம் சொல்லப்போவதாகவும் சொல்லியிருந்தார். நானும் “அந்த ஹரன் பிரசன்னா நாந்தான். சந்தேகப்படவேண்டாம்” என்ற பதிலை அனுப்பியிருந்தேன். அடுத்த முறை வந்த ஆஃப் லைனரில், அவரது இலங்கைத் தோழி ஒருவர், புலிநகக்கொன்றையின் ஆங்கிலப் பதிப்பை வாங்க விரும்புவதாகவும், அது கிடைக்குமா என்றும் கேட்டிருந்தார். அப்போது பதில் அளிக்கும்போது, அதைப் பற்றி விசாரிக்கிறேன் என்றும் பல இலங்கைத் தமிழர்கள் தொலைபேசி மூலமும், இணையத்தின் மூலமும் எங்களிடம் வாங்குகிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அடுத்த ஆஃப்லைரில் மதி, அந்த இலங்கைத் தோழி வேறொரு மூலத்தின் வழியே அப்புத்தகத்தை வாங்கிவிட்டதாகச் சொன்னார். இவ்வளவுதான் நடந்தது.

நான் யாருடன் சாட் செய்யும்போதும் அதை சேமிப்பதில்லை. அதனால் மதியுடனான சாட்டையும் சேமிக்கவில்லை. மேலும் இது ஆஃப்லைனரில் நடந்தவை. சாட் என்று கூடச் சொல்லமுடியாது. முதன்முதலில் என் பெயரைக் கண்டுவிட்டு நம்பிக்கை வந்ததாகவும் அதனால் தன் நண்பர்களிடம் சொல்லப்போவதாகவும் சொன்னவர் மதிதாம். ஆனால் இப்போதோ, போகிற போக்கில், நான் கேட்டுக்கொண்டபடி என்று எழுதுகிறார். மிக நுணுக்கமான வேறுபாட்டின் மூலம் தன்னை உயர்வாக்கிக்கொள்ள விரும்புகிறார். மதியின் இக்குணம் நான் முன்னமே அறிந்ததுதான்.

நான் இப்போது சொன்னவற்றை, நான் ஏற்கனவே எழுதுவதை தொடர்ந்து வாசிப்பவர்கள் நிச்சயம் நம்புவார்கள். மதியுடன் நட்பு வைத்திருக்கிறவர்களும் நம்புவார்கள். மதியிடம் சென்று “மற்ற நண்பர்களிடம் சொல்லுங்கள்” என்று நான் கேட்டுக்கொள்ளவில்லை. மதி அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடவேண்டும். இல்லை என்றால் இதற்கான விளக்கம் அளிக்கவேண்டும்.

தங்கணி, மதி இது பற்றி உங்கள் பதிவில் பேசியதால் நான் இங்கு பதிலிட வேண்டியதாயிற்று. உங்கள் பதிவை இதற்குப் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

நன்றி,
ஹரன்பிரசன்னா

Share

சௌந்தரம்மாளின் நினைவுகள் – கவிதை

சௌந்தரம்மாளைப் பார்க்கவேண்டும்
நேற்றுதான் அவள் பெயரை அறிந்திருந்தேன்
காகிதக் கப்பல்கள் பொதுமிக் கிடந்த நாளொன்றில்
நிறைய ஃபோன்களுக்குப் பின்
சௌந்தரம்மாள் வீட்டைக் கண்டேன்
வீடெங்கும் தோசை மணம்
சௌந்தரம்மாள் ஒரு சிறிய அறையில் படுத்திருந்தாள்
நான் உள்ளே செல்லவில்லை
கையிலிருந்த ஆவணத்தைத் தந்து கையெழுத்து வேண்டுமென்றேன்
மகனின் முகத்தில் அகற்றவியலாத சோகம் அப்பியிருந்தது
திரையில் மெல்ல நகரும் கலைப்படம் ஒன்றின்
கதாநாயகன் போல அதை வாங்கிச் சென்றான்
மறுநாள் சௌந்தரம்மாள் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
பார்வதி தியேட்டரை அடுத்துள்ள சந்தில் நுழைந்து மீளும்போதெல்லாம்
என்னளவில் வயது ஒரு நாளேயான
நான் பார்த்திராத சௌந்தரம்மாள் பிறந்துகொண்டேயிருக்கிறாள்

Share

ஜெயலலிதாவின் வெற்றி

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஏழு கட்சிக் கூட்டணிகளின் பலத்தில் அ.தி.மு.க. காணாமல் போகும் என்று மிக நம்பியபடியால், ஏற்கனவே முடிவு தெரிந்துவிட்ட கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க விரும்பாததுபோல், இந்தத் தேர்தலிலும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தேன். நேற்று காலை முக்கியச் செய்தியாக ஜெயாவில் “அ.தி.மு.க. முன்னணி” என்று ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் ஷாக் அடித்தது போல் உணர்ந்து, ஜெயா டி.வி. வழக்கம்போல் முதல் சுற்றை மட்டும் வைத்துக்கொண்டு பொய் சொல்லும் என்று நினைத்து, சன்னுக்கு மாறினேன். அங்கேயும் அதே முக்கியச் செய்தி. என்னால் சிறிது நேரத்திற்கு நம்பவே முடியவில்லை. 1998 நாடாளு மன்றத் தேர்தலிலும் 2001 சட்ட சபைத் தேர்தலிலும் கூட இதே போல் நடந்தது நினைவுக்கு வந்தது. வாக்கு வித்தியாசங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.விற்குச் சாதகமாகவே ஏறிக்கொண்டு வந்தது. அ.தி.மு.க. வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் வெற்றியை விட தி.மு.க. மற்றும் கூட்டணியின் தோல்வி எனக்குச் சந்தோஷமாக இருந்தது. ஏழு கட்சிக் கூட்டணியை ஜெயலலிதா முறியடிப்பார் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க.வின் பக்கம் கணிசமான தன்னம்பிக்கை உயர்ந்திருக்கிறது. தி.மு.க.வின் நிலைமை நேர்மாறாகியிருக்கிறது. தி.மு.க. வென்றிருந்தால் கூட்டணிக் கட்சிகளைக் கருணாநிதியால் சமாளிக்க முடிந்திருக்கும். இப்போது கூட்டணிக் கட்சிகளின் கையில் கருணாநிதி சிக்கியிருக்கிறார். இட ஒத்துக்கீட்டில் பெரும் குழப்பங்கள் நேரும் வாய்ப்புள்ளது. ஒன்றிரண்டு கட்சிகள் கூட்டணி தாவும் சாத்தியக்கூறுகளும் அதிகரித்திருக்கிறது. ஜெயலலிதா ஏற்கனவே “தாம் வெற்றி பெற மட்டும் பிறந்தவர்” என்று நினைப்பவர். இந்த வெற்றியின் மூலம் அந்தக் கனவை நிஜம் என்று மீண்டும் நம்புவார். கூட்டணி சேர விரும்பும் கட்சிகளைக் கூட “தன் இலக்கணப்படியே” அலட்சியப்படுத்துவார். இப்படி பல நிகழ்வுகளை சாதகமாகவும் பாதகமாகவும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இடைத்தேர்தல் முடிவுகள்.


Thanks: Dinamani.com

அடுத்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெல்லக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிறைய இல்லை எனினும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்று நான் நினைப்பதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. கருணாநிதி முடிவு எடுக்கத் தெரியாதவர்; தயங்குபவர். யாருக்கும் குற்றமில்லாமல் நல்ல பெயர் வாங்கப் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஜல்லி அடிப்பவர். மிக முக்கியமாக, தீவிரவாத விஷயத்தில் அவரின் மனம் தீவிரவாதிகளுக்குப் பரிவு என்ற நிலையையே எப்போதும் எடுக்கும். ஹிந்து மத தூஷனை ஒன்றே மதச்சார்பின்மை என்று நம்பும், அதைத் தீவிரமாகப் பரப்பும் கருத்துடையவர். தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கையில் சிக்கி சுதந்திரமாகச் செயல்படும் தன்மையை இழந்தவர். இக்காரணங்களால் தி.மு.க. வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியில் சில விஷயங்கள் நான் மிகவும் ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்திருக்கின்றன. அவையெல்லாம் ஜெயலலிதாவின் முடிவு எடுக்கும் தன்மைக்கும், தைரியத்திற்கும் சான்றளிப்பவை. அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை, மதமாற்றத் தடைச் சட்டம், தீவிரவாதத்தின் மீது தொடந்து நடவடிக்கை, சங்கராசாரியார் கைது போன்றவற்றைச் சொல்லலாம். வீரப்பன் கொல்லப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்தைத் தூற்றி உளறிக்கொட்டாமல் இருப்பதும் கூட பாராட்டப்படவேண்டியதே. அமைச்சர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று நினைக்கவைக்கும் அமைச்சரவை, தொடர்ந்து அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கும் நிர்வாகக் குளறுபடி போன்ற விஷயங்கள் ஜெயலலிதாவிடம் இருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் அரசியலைப் பார்க்கும்போது, அடுத்த தேர்தலிலும் ஜெயலலிதாவே வெற்றி பெறுவது நல்லது என்று தோன்றுகிறது.

இந்த இடைத் தேர்தல் வெற்றி, அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை. பொதுவாக இடைத்தேர்தல் முடிவுகள், ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே அமையும். (1990 வாக்கில் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அப்போது இந்தக் கருத்தை கருணாநிதி வழிமொழிந்திருந்தார்!) அப்படி இருந்தும், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருப்பது பற்றி தி.மு.க. தரப்பு ஆலோசிப்பது நல்லது. 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும்போது, “இது பணநாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் தோல்வி” என்று ராமதாஸும், “அதிகாரத் துஷ்பிரயோகமும் பணபலமும் கொண்டு ஜெயலலிதா வென்று விட்டார்” என்று நல்லகண்ணுவும் “விதிகளை மீறிச் செயல்பட்டு அ.தி.மு.க. வென்றது” என்று கருணாநிதியும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளாமல் இருப்பது. இவையெல்லாம் இல்லாமல் தேர்தல் நடந்தது என்று உறுதி சொல்ல வரவில்லை. ஆனால் இவற்றில் தி.மு.க. கூட்டணி சளைத்ததல்ல என்பதே நாம் நோக்கவேண்டியது. அதில்லாமல், இந்த முறை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்காணிப்பு மிக அதிக அளவில் இருந்தது. அதனால் பணத்தின் மூலம் வென்று விட்டார்கள் என்று சொல்லி, தங்கள் தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராயாமல் ஜெயலலிதா பாணியில், தி.மு.க. அறிக்கை விட்டுக்கொண்டிருக்காமல் யோசிப்பது நல்லது.

அ.தி.மு.க. வெற்றிக்குப் பின் வலைப்பதிவில் வந்து பார்த்தேன். யாரும் அதைப் பற்றி எழுதவில்லை. தேர்தலுக்கு முன்பு, மூக்கு சுந்தர் மட்டும் அவர் பதிவில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நல்லது என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். (என்ன தைரியம்!) இதே தி.மு.க. வென்றிருந்தால் ஊடகங்கள் மாறி மாறி ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கையும் எதேச்சாதிகாரத்தையும் மாறி மாறிக் கண்டித்த வண்ணம் இருக்கும். அ.தி.மு.க.வின் வெற்றியை ஏற்றுக்கொள்வதோ பாராட்டுவதோ, ஊடகங்கள் வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் “அ.தி.மு.க. வை எதிர்ப்பது மட்டுமே நடுநிலைமை” என்ற நடுநிலைமைக்கு எதிரானதாக அமைந்திருக்கும். ஆனால் வெற்றி பெற்றதோ அ.தி.மு.க. பின் எப்படி பாராட்ட முடியும்? ஆனால் அந்த “நடுநிலையாளர்கள்” வகையில் இருக்க விரும்பவில்லை. இந்த அ.தி.மு.க. வெற்றி தேவையான ஒன்று. தொடரவேண்டிய ஒன்றும். இந்த கருத்தைச் சொல்லவே இந்தப் பதிவு.

Share

ஆளுமை – கவிதை

எதிர்பாராமல்
யாரோ எறிந்த பந்தின்
விசை தாங்காமல்
நொறுங்கியது கண்ணாடிச்சுவர்
மீஉறுதியின் உச்சப்புள்ளி
உடைந்து போன சில்லுகள்
கொஞ்சம் மிச்சத்துடன்
என் கேள்வியோ
மீண்டு
உட்குவிந்த வலையாய்
துப்பும்போது
விசை தாங்குமோ
வலையாகுமோ
அவ்வாளுமை

-oOo-

Share

P.K.Sivakumar’s Interview in Jaya TV, Kalai malar program

P.K.Sivakumar’s interview will be telecasted tomorrow morning at 7.30 in Jaya TV-kaalai malar Program. He talks about anyindian.com in the program. Your comments are highly appreciated.

On behalf of Sivakumar,
Prasanna

Share