Archive for ஹரன் பிரசன்னா

சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்

நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சமயம். தங்கராமு ஐயா என்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். இவரை தமிழ் வாத்தியாராக, கணக்கு வாத்தியாராக அல்லது ஆங்கில வாத்தியாராக, எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம். ஏனென்றால் எதை வேண்டுமென்றாலும் எடுப்பார். எதுவுமே எங்களுக்குப் புரியாது என்பதால் அவர் எதை எப்படி எடுத்தாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்கள் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஐயாவிற்குத் திடீரென்று தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. வித்தியாசமில்லாமல் சகட்டுமேனிக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிற சட்டம் அமலில் இருந்துவந்தாலும் அது உபயோகப்படாததால், புதுச்சட்டம் ஒன்றைப் பிறப்பித்துவிட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவராவது பேசவேண்டும் என்று. அதற்கு அந்த அந்த வகுப்பாசிரியர்களே பொறுப்பு. பையன்களின் பேச்சாற்றலை வளர்ப்பதைவிட தமது மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும் என்கிற வேகம் பெருகிப்போந்த நிலையில், தங்கராமு ஐயாவின் கைகளில் நான் மாட்டிக்கொண்டேன்.

அவர் எழுதிக்கொடுத்த பன்னிரண்டு பக்கங்களுக்கு மேலான சுதந்திர தின எழுச்சி உரையை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்யும் சக்தி எனக்கு அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் எளிதில் மனப்பாடம் செய்துவிட்டேன். குரல் வேறு கணீரென்று இருக்கும். அதனால் எல்லாரும் என்னை உசுப்பேத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் மனப்பாடம் செய்த பகுதிகளை வீட்டில் சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தேன். வீர உரை வேறு. நானே கப்பலோட்டிய தமிழனாக மாறிவிட்டதுபோன்ற வேகத்தில், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்று ஒப்பித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் அண்ணா வந்தார். முதல் கேள்வி, ‘ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, ‘இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா’ என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். ‘நாராயணா, இவன் சொல்றதக் கேளு’ என்று சொல்லி, என்னைப் பார்த்து, ‘சொல்லுடா!’ என்றார். நான், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.’ அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், ‘தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். என் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது. இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. மடமடவென ஒப்பிக்கும்போது, அந்த வரி வரும்போது ஒரு துணுக்குறலுடன் மெல்லத்தான் சொல்லுவேன்.

ஆகஸ்ட் 15. வகுப்பில் எல்லார் முன்னிலும் தங்கராமு ஐயா என்னைப் பேசச் சொன்னார். சும்மா வீரவசனம் பொங்கி ஓடியது. ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்ற வரி வரும்போது லேசாகச் சிரித்துவிட்டு, முழுதும் பேசி முடித்தேன். தங்கராமு ஐயா, ‘என்ன எடையில பல்லக் காமிக்கிறவன்? ஒழுங்கா பேசமுடியாதா? சுதந்திரம்னா நக்கலா ஒனக்கு?’ என்றார்.

நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்ட்டு (ஓவிய ஆசிரியர்) என்னைக் கூப்பிட்டு, ‘நல்லா பேசறியேப்பா… இதுக்கு முன்னாடி நிறையப் பேசிரிக்கியோ?’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் முதல்ல பேசப்போறேன்’ என்றவுடன், கையில் இருந்த பத்து பைசாவைக் கொடுத்து (1987இல்) ‘வெச்சிக்கோ’ என்றார். உடனடியாக ஓடிப்போய் குச்சி ஐஸ் வாங்கித் தின்றேன். என்னுடன் படித்த நரசிம்மன் என்னையே பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

எல்லாரும் வரிசையாக கலையரங்கத்திற்குச் சென்றோம். பேசப்போகிறவர்களெல்லாம் மேடைக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்கள். நான் ஓரமாக அமர்ந்துகொண்டேன். லேசாக பயம் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பயப்படுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டேன். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். மேடை ஏறினேன். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் என் பார்வையில் பட்டது. எங்கு திரும்பினாலும் வெள்ளை வேட்டியும் நீல அரை டிரவுசரும் பச்சை தாவணியும் கண்ணில் பட, என் நாக்கு எழவே இல்லை. யாராவது ஓடிவந்து ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டாங்களா என்பது போலப் பார்த்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒப்பிக்கத் தொடங்கினேன்.

வகுப்பில், வீட்டில் பேசிய வீர வசனம், உச்ச ஸ்தாதி எதையும் காணோம். கடகடவென ஒப்பித்தேன். ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்கிற வரி வந்தது. அடுத்த வரி வரவில்லை. அந்த வரியிலேயே நின்றுகொண்டிருந்தேன். பால்ராஜ் ஐயா, ‘சரிப்பா, சும்மா கிடைக்கலை. அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற? அதச் சொல்லு மொதல்ல’ என்றார். அவ்வளவுதான். அதைச் சொல்வதையும் நிறுத்திவிட்டேன். கூட்டத்தில் கலகலவென பேச ஆரம்பித்துவிட்டார்கள். பின்னாலிருந்து யாரோ, ‘சரி போ போ’ என்று சொன்னார்கள். கீழிறங்கிவிட்டேன். ஆர்ட்டு தூரத்தில் இருந்து முறைத்தார். நரசிம்மன், ‘இதெல்லாம் தேவையா ஒனக்கு’ என்றான்.

இன்று யோசித்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. [தங்கராமு ஐயா அந்த வருடமே, நான் அவருக்கு பேப்பர் திருத்த கொடுத்த பேனாவைத் திரும்பத் தராமலேயே, மேலே போய்ச்சேர்ந்தார். நரசிம்மன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பால்ராஜ் ஐயா ரிட்டயர் ஆகி பல மாணவர்களுக்கு நன்மை செய்தார்.]

சில தினங்களுக்கு முன்பு சடகோபனின் ‘சிறை அனுபவம்’ என்கிற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். (அகல் வெளியீடு.) அப்போது மீண்டும் இந்த சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் நினைவுக்கு வந்தது. சத்யாகிரஹியான சடகோபன் அவரது அஹிம்சைப் போராட்டத்தின் ஒருபகுதியாகச் சிறைக்குச் சென்றபோது அங்கு அவர் சந்தித்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டு சத்யாகிரஹிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் என்று யோசித்தபோது, ஒரு நெகிழ்வான மனநிலையில் விழுந்தேன்.

சிறையில் அவருக்குத் தரப்பட்ட உணவின் தரம், வேலையின் கடுமை, பட்ட கஷ்டங்கள், சத்யாகிரஹிகள் அல்லாத பிற கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்த சிறிய நூல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சிறையை எமலோகத்தில் இருக்கும் நரகத்துடன் ஒப்பிடுகிறார் சடகோபன். இன்று சிறை எந்த நிலையில் இருக்கும்? நிச்சயம் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவின் நிலைமைகள் பல இடங்களில் கேள்வி கேட்கப்பட்டாலும், சுதந்திரம் என்கிற ஒன்றை அனுபவிக்கும்போது அதன் மேன்மை புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

.

Share

ஒரு கவிதை, சில ஹைக்கூக்கள்

முடிவு

இணைகோட்டின்
ஆளுக்கொரு பக்கத்தில் நின்றுகொண்டு
நான் கல்லெறியத் தொடங்கினேன்
நீ எச்சிலை உமிழ்ந்தாய்
சில யுகங்கள் காலச் சுழற்சியில்
நம்மிரு இடங்களும் மாறின
அப்போது நான் எச்சில் உமிழ
நீ கல்லெறியத் தொடங்கினாய்

சில ஹைகூக்கள்

இரண்டு பக்கமும்
திறந்துகிடக்கும் வீட்டில்
மீன் தொட்டி

-oOo-

பறக்கும் காலண்டரில்
கண்ணில் படுகின்றன
கடந்த நாட்கள்

-oOo-

மரம், அதன் நிழல்
சின்னச் சின்னதாய்
வெயில்

-oOo-

அமர்ந்திருக்கும் ஈ
சத்தமின்றி நெருங்கும் பல்லி
ஒலிக்கிறது செல்ஃபோன்

-oOo-

குடைக்குள்ளிருந்து
அழுகிறான் சிறுவன்
காகிதக் கப்பலில் மழை நீர்

-oOo-

மரண வீட்டில்
ஊதுபத்தி
சிரிக்கும் குழந்தைகள்

-oOo-

Share

துக்ளக்கில் வெளியான கருத்துப்படம் (கார்டூன்)

08.08.2007 இதழில் வெளியான இந்த கார்டூனைப் பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கருத்துப்படம் துக்ளக் சத்யாவினுடையது.

Thanks:Thuglak

Share

இரு கவிதைகள்

புகைப்படம் எடுத்தல்

மிகுந்த களேரபத்திற்குப் பின்னரே
குடும்பத்தின் புகைப்படம் எடுத்தோம்
ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும் பாட்டியை
ஐந்து நிமிடம் பேசாமல் இருக்க வைக்க பெரும்பாடு ஆகிவிட்டது
அண்ணியை முதலில் அழைக்கவில்லை என்று அண்ணனுக்கு கோபம்
நம்மை அழைக்கிறார்களா பார்க்கலாம் என்று சிலர்
அப்பா ஃபோட்டோவுக்கு மட்டும் எப்போதும் தயார்
அக்கா அத்தானை சீக்கிரம் வரச்சொல்லி ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள்
நான் என் மனைவியுடன் எப்போது தனியறைக்கு அனுப்புவார்கள் என காத்துக்கொண்டிருந்தேன்
ஃபோட்டோகிராஃபர் அழகான பெண்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்
ஒருவழியாக ஃபோட்டோவும் எடுத்தார்
படத்தில் அனைவரும் அழகாக, மிக அழகாக, குறிப்பாக இயல்பாக, சிரித்துக்கொண்டிருந்தோம்,
படத்தில் தோற்றம் மறைவு விடுத்து வாழும் நாளின் குறிப்பேற்ற முடியாதது போல.

பேரமைதி

ஒரு கண் விழிப்பில்
தங்கள் வாசல்களை இழந்தன
வீடுகள் அனைத்தும்
தெருக்கள் அனைத்தும் கலையிழந்துவிட்டிருக்க
எந்தக் கோலத்தை எங்கு பொருத்த என்றறியாமல்
சுற்றிக்கொண்டிருந்தன பூனைகள்
திறந்து கிடக்கும் வீடுகள் வெளியிட்ட சத்தங்களில்
பறவைகள் பதறிப் பறக்க
மனித சத்தத்தை அறிந்து
பயந்தன நாய்கள்
நடுங்கிப் போன கடவுள்
கடும் தலைவலியோடு
கதவுகளுக்கு ஆணையிட்டான்
வாசலைப் பொருத்திக் கொள்ள
அந்நொடியில் பேரமையிதில் ஆழ்ந்தது இவ்வுலகம்.

Share

Life is beautiful – தொடரும் பதட்டம் (திரைப்பார்வை)

Thanks:movies.yahoo.com

Joshua orefice (ஜோஷ்வா ஆர்ஃபிஸ்) தன் தந்தையின் தியாகத்தைப் பற்றிச் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. Guido Orefice (கைடோ ஆர்ஃபிஸ்) என்கிற இத்தாலி நாட்டுக்கார யூதர் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் சமயத்தில் இத்தாலியின் ஒரு நகரத்திற்கு புத்தகக் கடை வைப்பதற்காக வருகிறார். அங்கு Dora (டோரா) என்னும் ஆசிரியரைச் சந்திக்கிறார். டோரா இத்தாலி நாட்டுப்பெண் என்றாலும் யூதப்பெண் அல்ல. தொடர்ச்சியாக நேரும் திடீர்ச் சந்திப்புகளில் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலருகிறது. டோரா ஏற்கனவே ஒரு நாஜிக்கு நிச்சயம் செய்யப்பட்டவள். அவர்கள் நிச்சயதார்த்தத்தின் போது கைடோ அவளைக் கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறான். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஐந்து வருடங்கள் இனிமையான வாழ்க்கை. ஜோஷ்வா என்னும் மகன் பிறக்கிறான்.

படம் தனது இரண்டாவது பயணத்தைத் தொடர்கிறது. இரண்டாம் உலகப் போர் முடிவை நெருங்கும் சமயம். ஜோஷ்வாவின் பிறந்தநாளன்று யூதர்கள் அனைவரும் நாஜி வதைமுகாமுக்கு (Nazi Concentration Camp) வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்லப்படுகிறார்கள். அப்படி அழைத்துச் செல்லப்படும் 8000 பேர்களில் கைடோவும் ஜோஷ்வாவும் அடக்கம். அலங்கோலமாகக் கிடக்கும் தனது வீட்டைப் பார்த்தவுடன் டோரா புரிந்துகொள்கிறாள். நாஜி வதை முகாமுக்குச் செல்லும் புகைவண்டியில் தானும் செல்ல பிடிவாதம் பிடித்து, வண்டியில் ஏறிக்கொள்கிறாள்.

தன் மகன் ஜோஷ்வா பயந்துவிடக்கூடாது என்பதற்காக இது ஒரு விளையாட்டு என்று சொல்லி நம்ப வைக்கிறான் கைடோ. தொடர்ந்து விளையாட்டின் விதிகளைக் கூறி, ஆயிரம் புள்ளிகளை யார் வெல்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்றும் சொல்லி வைக்கிறான். வெற்றிப் பரிசாக நிஜமான பீரங்கி வண்டி கிடைக்கும் என்று சொன்னவுடன் – ஏற்கனவே பீரங்கி வண்டி பொம்மையின்மீது ஆர்வமாக இருக்கும் ஜோஷ்வா – இந்த விளையாட்டிற்குச் சம்மதிக்கிறான்.

வதைமுகாமில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக அடைக்கப்படுகிறார்கள். அனைவரும் கட்டாயம் வேலை செய்யவேண்டும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வேலை இல்லை. சில நாள்களில் இவர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் தான் படும் கஷ்டங்களையெல்லாம் மறைத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் விளையாட்டு என்று சொல்லி, அதற்கான புள்ளிகளைச் சொல்லி, தன் மகனைக் குதூகலமாக வைத்திருக்கிறான்.

அமெரிக்கப் படைகள் வதைமுகாமை நெருங்குவதைக் கேள்விப்பட்டவுடன், எல்லா யூதர்களையும் கொன்றுவிட்டு, அங்கிருக்கும் ஆவணங்களையும் தீவைக்க முயல்கிறார்கள் நாஜிகள். இனியும் காத்திருந்தால் தன் மனைவியை இழக்க நேரிடும் என்று நினைக்கும் கைடோ, தன் மகனை ஒரு மர அலமாரியில் ஒளிந்திருக்கச் சொல்கிறான். என்ன ஆனாலும் வெளியே வரக்கூடாது என்றும் அன்று மட்டும் அப்படி ஜோஷ்வா வெளியில் வராமல் இருந்துவிட்டால் ஆயிரம் புள்ளிகளை வென்று விடலாம் என்றும் நிஜமான பீரங்கி வண்டி கிடைத்துவிடும் என்றும் சொல்கிறான். ஜோஷ்வாவும் சம்மதிக்கிறான். பின்னர் பெண் வேடமிட்டுக்கொண்டு, தன் மனைவியைத் தேடி, பெண்கள் பகுதிக்குள் நுழைகிறான். அங்கு மாட்டிக்கொள்ளும் அவன், நாஜிகளால் கொல்லப்படுகிறான்.

விடிகிறது. அலமாரியிலிருந்து வெளிவரும் ஜோஷ்வாவின் முன்னே வந்து நிற்கிறது நிஜமான பீரங்கி வண்டி. தனது வெற்றிக்கான வண்டி என நினைத்து சந்தோஷப்படுகிறான் ஜோஷ்வா. ஜோஷ்வாவும் அவனது அம்மா டோராவும் ‘நாம் வென்று விட்டோம்’ என்று சொல்லி இணைவதுடன் முடிகிறது திரைப்படம்.

ஆரம்பக் காட்சிகளைப் பார்த்துவிட்டு, தமிழ்ப்படம் போல இருக்கிறதே என்று என்னை நினைக்க வைத்த திரைப்படம், இறுதியில் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்துவிட்டது. படம் முடிந்த சில மணி நேரங்கள் அந்தப் பதட்டத்தை உணர்ந்தேன். ஒரு தந்தைக்கும் மகனுக்குமான ஒரு பாசத்தை இப்படி ஒரு கோணத்தில் முன்வைத்த படம் என்னை அதிசயிக்க வைத்துவிட்டது. கைடோவும் டோராவும் காதல் செய்யும் காட்சிகளையெல்லாம், அவை அபத்தமாக இருந்தாலும், பின்னர் அவர்கள் எதிர்கொள்ளப்போகும் பெரும் வதையை பார்வையாளர்கள் உணரத் தேவையான களமாக மாற்றியதில் இயக்குநரின் திறமை அசாத்தியமானது. இயர்க்குநர் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்த Robert Benigini. (ராபர்ட் பெனிகி.) அவரது மனைவியாக நடித்த நடிகை அவரது நிஜ மனைவியாம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் வசனங்களும் காட்சிகளும் பின்னர் எவ்வளவு சாமர்த்தியமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை யோசிக்கும்போது, திரைக்கதையின் உச்சம் புரிகிறது. ஒரு காட்சியில் கைடோ ஒரு மனிதனிடம் ‘உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?’ என்று கேட்கிறான். அந்த மனிதன் சண்டையிடும் தன் மகன்களை நோக்கி, ‘பெனிட்டோ, அடாஃப்! நல்ல பையன்களாக இருங்க’ என்கிறான். சொல்லிவிட்டு மீண்டும் கைடோவை நோக்கி, ‘என்ன கேட்டீங்க?’ என்கிறான். கைடோ அந்தக் கேள்வியை மீண்டும் கேட்காமல், ‘மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டேன்’ என்று சொல்லி முடித்துக்கொள்கிறான். தன் மகன்களுக்கு இப்படிப் பெயர் வைத்திருக்கும் நாஜிக்கு யூத வெறுப்பு எவ்வளவு இருக்கும் என்பதைச் சட்டென புரிந்துகொண்டுவிடுகிறான் கைடோ.

கைடோவும் ஜோஷ்வாவும் கடைக்குச் செல்கிறார்கள். அங்கு ஒரு அறிவிப்புப் பலகை, ‘நாய்கள் மற்றும் யூதர்கள் அனுமதி இல்லை’ என்கிறது. ஜோஷ்வா ஏன் இப்படி எழுதியிருக்கிறது என்று கேள்வி கேட்கிறான். வழக்கமான முறையில் கைடோ ஒரு கற்பனை பதிலைச் சொல்கிறான். இந்தக் கற்பனையே அவனுக்குக் கடைசிவரை கை கொடுக்கிறது. பெரிய ஆபத்திலிருக்கும்போதுகூட இப்படி ஒரு கற்பனை விளையாட்டைச் சொல்லியே அவன் த மகனைச் சந்தோஷமாக வைத்திருக்கிறான்.

வதை முகாமில் அடைக்கப்பட்டவுடன், தான் சொல்லும் விளையாட்டு சம்பந்தமான கதைகளைத் தன் மகன் நம்பவேண்டும் என்பதற்காக, நாஜியின் முன்னிலையில் ஜெர்மனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறான். நாஜி அதிகாரி வதைமுகாமின் சட்டங்களைச் சொல்லச் சொல்ல, அதை விளையாட்டின் விதிகளாக ஆங்கிலத்தில் சொல்கிறான். ஜோஷ்வாவும் இந்த விளையாட்டு உண்மையே என்று நம்பிவிடுகிறான். கொஞ்சம் தவறினாலும் கைடோ உயிரிழக்கும் அபாயம் அதிகம். இப்படியே கடைசி வரை ஒவ்வொரு விஷயத்திலும் chance எடுக்கும் கைடோ, ஒரு கட்டத்தில் தன் அன்பான மகனை விட்டுவிட்டு உயிர் துறக்கிறான்.

தான் கொல்லப்பட அழைத்துச் செல்லப்படும்போதுகூட, தன் மகனுக்கு, தன் உடலை அஷ்ட கோணலாகச் செய்து காட்டி சிரிக்க வைத்துவிட்டுப் போகிறான். விஷயம் புரியாத ஜோஷ்வா அந்த அலமாரியின் திறப்பு வழியாக, சிரித்துக்கொண்டே செல்லும் தன் தந்தையைப் பார்க்கிறான். அதுவே தான் தன் தந்தையைக் கடைசியாகப் பார்க்கப்போவது என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் இவை அனைத்தையும் அறிந்துகொள்ளும் பார்வையாளர்கள் அடையும் மனநிலையை விவரிக்க முடியாது.

சில காட்சிகளை வாழ்நாளில் மறக்கமுடியாது என நினைக்கிறேன். வதைமுகாமில் தன் மகனைத் தோளில் தூங்க வைத்துக்கொண்டு இருளில் நடந்து வரும் கைடோவின் கண்முன் விரிகிறது ஒரு காட்சி. அங்கு மலையாக பிணங்களும் எலும்புகளும் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. கைடோ அடையும் திடுக்கிடல் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

தன் தந்தையைக் கொல்லத்தான் கூட்டிச் செல்கிறார்கள் என்பது தெரியாமல், ஆயிரம் புள்ளிகளுக்காக, மர அலமாரியில் ஒளிந்த்திருக்கும் மகனின் கண் வழியும் விரியும் காட்சியாக ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் திறப்பின் வழியே, கைடோ நடந்து செல்வதைக் காட்டும் காமிராவின் பதிவு அது. மிகச்சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.

நான் சொன்னால் மேரி நிச்சயம் உதவுவாள் என்று சொல்லி அதைச் செய்வதும் அதைப் பார்த்து டோரா அசந்துபோவதுமான காட்சிகள், காமெடி என்று சொல்லப்படும் காட்சிகள், டெலிபதியில் ஒருவரைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று நம்பிச் செய்யும் காட்சிகள் போன்ற சில, நாம் பார்த்து அலுத்துப்போன காட்சிகள்கூட, கைடோவின் கதாபாத்திரத்தை நிறுவுவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

கைடோ ஒரு வெயிட்டராக வாழ்க்கையைத் துவங்குகிறான். அவன் வேலை செய்யும் ஹோட்டலுக்கு வரும் நாஜி ஒருவர், கைடோவின் திறமையை நினைத்து வியக்கிறார். எப்பேற்பட்ட புதிரையும் எளிதில் விடுவிக்கிறான் கைடோ. இந்த நாஜியை வதைமுகாமில் இருக்கும்போது சந்திக்கிறான் கைடோ. (அப்போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் எனக்குப் புரியவில்லை. அந்த நாஜி கைடோவுக்கு உதவ முற்படுகிறார். அவரின் உதவியை கைடோவும் எதிர்பார்க்கிறான். அந்த நாஜி மீண்டும் ஒரு புதிரைச் சொல்லி அழுகிறார். அதற்கு விடை கட்டாயம் தெரியவேண்டும் என்கிறார். இக்காட்சி எனக்குப் புரியவில்லை. உண்மையில் அவர் கைடோவுக்கு உதவுகிறாரா அல்லது தன் விடுகதையில்தான் குறியாய் இருக்கிறாரா, எதற்கு இக்காட்சி என்பது விளங்கவில்லை. விளங்கியவர்கள் சொல்லவும். நான் இன்னொரு விதமாகப் புரிந்துகொண்டது, தன்னால் உதவமுடியாத நிலையில் இருப்பதாகவும் வாத்துக்கூட்டங்கள் போலத்தான் செயல்படமுடியுமென்று அவர் சொல்வதாக.)

வதை முகாமில் குளிப்பது என்றால் மரணத்திற்கு உட்படுத்துவது என்று பொருள். இது தெரியாத கைடோ, வழக்கம்போல் குளிக்க மறுக்கும் தன் மகன் ஜோஷ்வாவை, குளிக்க வற்புறுத்துகிறான். இதுவும் பார்வையாளர்களைப் பதட்டம் கொள்ளச் செய்யும் இன்னொரு காட்சி. வயதான யூதர்கள் மற்றும் குழந்தைகளை வதைமுகாமில் வாயுக்கலத்தில் (Gas Chamber) வைத்துக் கொல்கிறார்கள். (சிலர் ஓவனில் வைத்தும் கொல்லப்படுகிறார்கள்.) அவர்களைக் கொல்ல அழைத்துச் செல்லும்முன், நாஜிகள் தொடர்ந்து இப்படி அறிவிக்கிறார்கள். “அவரவர்கள் ஆடையை பத்திரமாக அவரவர்கள் இடத்தில், அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எண்ணுடன் சேர்த்து வைக்கவும். அப்போதுதான் திரும்ப வந்த பின்பு அதை அணிந்து கொள்ளமுடியும்.” அறிவிக்கும் நாஜிகளுக்கு நன்றாகத் தெரியும், இப்போது குளிக்கச் செல்லும் வயதான யூதர்கள் யாரும் திரும்ப வரப்போவதில்லை என்று. ஆனாலும் அதைப் பற்றிய எந்தவொரு உணர்ச்சியும் இன்றி அவர்கள் சொல்கிறார்கள்.

தற்செயலாகத் தடுக்கி விழும் ஒரு நாஜி பெண் அதிகாரியைப் பார்த்து, யூதப் பெரியவர் ஒருவர் அந்தப் பெண்ணை மெல்லத் தொட்டு, “அடிபட்டு விடவில்லையே” என்று கேட்கிறார். அந்த நாஜி அதிகாரி பதில் சொல்லாமல் அந்தப் பெரியவரை வெறுப்புடன் பார்க்கிறார். அந்த ஒரு பார்வையிலேயே தெரிந்துவிடுகிறது, அவள் யூதர்கள் மேல் கொண்டிருக்கும் வெறுப்பு. அது ஒரு தனி மனிதன் மேல் கொண்டிருக்கும் வெறுப்பல்ல. இன வெறுப்பு.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பான அம்சம், ராபர்ட் பெனிகி அரசியல் கருத்தாக எதையும் உரக்கச் சொல்லாமல் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் பக்கமே விட்டுவிடுவது. டோராவைப் பார்ப்பதற்காக மாறு வேடத்தில் செல்லும் கைடோ, இத்தாலியின் இனத்தைப் பற்றிச் சொல்வதாக வரும் வேடிக்கைக் காட்சி மட்டுமே, நாஜிகளின் மீது வைக்கப்படும் விமர்சனம் என்று சொல்லவேண்டும். மற்ற எல்லாமே பார்வையாளர்களே திர்மானித்துக்கொள்ள வேண்டும். கைடோ தனது கடையின் பெயரை Jewish Store என்று வைத்திருக்கிறார்.

ராபர்ட் பெனிகியின் நடிப்பும் அவரது மனைவியின் நடிப்பும் சிறுவனாக வரும் நடிகனின் நடிப்பும் யதார்த்தமான நடிப்புக்கு உதாரணமாக விளங்குகின்றன.

படம் ஏற்படுத்திய பாதிப்பு இரண்டு நாள்களுக்காவது நீடிக்கும் என நினைக்கிறேன்.

வாய்ப்பு கிடைக்கிற அனைவரும் நிச்சயம் பார்க்கவும்.

சில குறிப்புகள்:

01. ஜெர்மன் பெயர்களை எப்படி சரியாகத் தமிழில் உச்சரிக்கவேண்டும் எனத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த விதத்தில் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

02. நாஜி என்கிற பதத்தை, தன் இனத்தை உச்சமாகக் கருதும் இத்தாலியின் ஜெர்மனியின் இராணுவ வீரர்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.

Share

துக்ளக்கில் இன்னும் சில ஆளுமைகள் புத்தகம் பற்றிய சிறு விமர்சனம்

18.07.2007 தேதியிட்ட துக்ளக் இதழில் வெங்கட் சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ புத்தகம் பற்றிய சிறு விமர்சனம் வெளியாகியுள்ளது.


நன்றி: துக்ளக்.

இன்னும் சில ஆளுமைகள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

Share

தினமணியில் மறையும் மறையவர்கள் புத்தகம் பற்றிய சிறு அறிமுகம்

12.07.07 தேதியிட்ட தினமணியில் ‘மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள்’ புத்தகம் பற்றிய சிறு குறிப்பு வெளியாகியுள்ளது.

நன்றி: தினமணி.

மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

Share

உயிர் எழுத்து இதழில் இலக்கிய உரையாடல்கள் புத்தகத்தின் விமர்சனம்

உயிர் எழுத்து ஜூன் 2007 இதழில் இலக்கிய உரையாடல்கள் புத்தகத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. எழுதியவர் பாவண்ணன்.


நன்றி: உயிர் எழுத்து.

இலக்கிய உரையாடல்கள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

உயிர் எழுத்து இதழுக்கு ஆன் லைனில் சந்தா செலுத்த இங்கே சொடுக்கவும்.

Share