சீதக்காதி

சீதக்காதி திரைப்படம் பார்த்தேன். மிகவும் வேறுபட்ட முயற்சிகளுக்குரிய படத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் அதனளவில் நின்று பார்ப்பது நல்லது. ஆனால் சில வேற்று முயற்சித் திரைப்படங்களை நாம் இந்த நல்ல அளவுகோலுடன்கூட அணுகிவிடமுடியாது. சீதக்காதியை அணுகலாம். இதுதான் இதன் முதல் ஆறுதல்.

படத்தின் முதல் சில நிமிடங்கள் மட்டுமே வரும் விஜய் சேதுபதியால் எந்த ஒரு நாடகக் காட்சியிலும் சிறப்பாக நடிக்கமுடியவில்லை. அவர் ஔரங்கசீப்பாக நடித்தாலும் விஜய் சேதுபதியாகவே இருக்கிறார். அதிலும் அவர் தூய தமிழ் வசனத்தைப் பேசும்போதெல்லாம் சென்னைத் தமிழில் பேச முற்படும் அவர் முகம் மட்டுமே கண் முன்னால் வருகிறது. ஆனால் அவர் இறந்தபின்பு அவரது ஆன்மா புகுந்து நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் அசத்திவிடுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய பளஸ் இதுவே.

இது தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய ஒரு பகடியாகவும், அதைவிட, தமிழ்த் திரையுலகத்தையும் ரசிகர்களையும் பற்றிய கூடுதலான பகடியாகவும் அமைந்திருக்கிறது. பல நுணுக்கமான காட்சிகளில் இயக்குநர் தென்படுகிறார். இதுபோன்ற பகடித் திரைப்படத்தில் எதைப் பகடியாக்குகிறார்களோ அதில் சரணடையவேண்டி வரும். இதிலும் அப்படி வருகிறதுதான். ஆனால் அதை சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

இத்தகைய படங்களில், இறுதியில் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள நேரும். இத்திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. பகடியாகவும் ஒன்றைப் பயன்படுத்தி, அதை அறிவியல் ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய சிக்கலும் இப்படத்துக்கு கூடுதலான பிரச்சினையாக இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஒரு வசனத்தில் படத்தை முடிப்பதெல்லாம் வேறு வழியின்றி, இருக்கும் வழிகளில் சிறந்த ஒன்றென இதை ஏற்றுக்கொண்டு செய்வது.

அய்யா நடிக்க வராவிட்டால் என்னாகும் என்பதை ஒரே மாதிரியான தொடர்ச்சியான நீளமான இரண்டு காட்சிகளில் காண நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. இதைத் தவிர்த்திருந்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட மலினமான பேய் நகைச்சுவைப் படம் அளவுக்குப் போய்விட்டது. அக்காட்சிகளில் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பால் கொஞ்சம் சிரிக்கமுடிகிறது என்பதும் உண்மைதான்.

இந்தக் கதையை இன்னும் எப்படி வேறு விதமாகக் கையாண்டிருக்கலாம் என்று யோசித்ததில் தோன்றியது, முதலில் வரும் அய்யாவாக வேறு ஒரு முக்கியமான நடிகரை (கமல்!) நடிக்கவைத்துவிட்டு, அதற்கு அடுத்து அவர் ஆன்மா புகும் ஒரு நடிகராக விஜய் சேதுபதியை மாற்றி இருந்தால் படத்துக்கு வேறொரு பார்வை கிட்டி இருக்கும். ஆனால் இப்படி நடிகர்களை மாற்றிக்கொண்டே செல்லும் திரைக்கதையை மாற்றவேண்டி இருக்கும்.

ஒட்டுமொத்தமாக படத்தின் மேக்கிங் தரம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பல காட்சிகள் சாதாரண தொலைக்காட்சி நாடகங்களைப் போல இருந்தன.

அய்யா என்ற பெயரை ஈவெரா என்று யோசித்துப் பார்த்தேன். கொஞ்சம் திக்கென்று இருந்தது. பின்னர் சிரிப்பாகவும் வந்தது. (கமான் பாலாஜி தரணிதரன், நீங்க என்ன நினைச்சு இதைச் செஞ்சீங்க?)

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பெயர். சீதக்காதி. நல்ல யோசனை. இதைப் போன்ற படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நினைத்துப் பாவமாக இருந்தது. பாலாஜி தரணிதரனுக்கு அடுத்த படம் கிடைத்து அது ஒட்டுமொத்தமாக எல்லா வகையிலும் நல்லதாக அமையட்டும்.

பின்குறிப்பு: பிராயசித்தமாக பூர்ணம் விஸ்வநாதனின் ஊஞ்சல் நாடகத்தைப் பார்க்கவேண்டும். அதில் நடிக்கும்போது அய்யா செத்துப் போவது நல்ல விமர்சனம்தான்.

Share

Comments Closed