கவிதைகள்

கனவு

நீண்ட நாளுக்குப் பின் தோட்டம்
மீண்டும் கனவில் வந்தது
தானகவே முளைத்திருந்த
பப்பாளி மரங்களின் கிளைகளில்
வெள்ளை வெள்ளையாகக் காய்ந்து கிடந்தது
காகத்தின் எச்சம்
சிறுவர்கள் எறிந்த பந்து
கண்டெடுக்கப்படாமல் அலைந்து
நிலைத்திருக்கவேண்டும், அதன்
உடலெங்கும் மண்ணாக
கரிய சுவரில்
நிழலில்லா கரும்பூனை
தோட்டத்தைப் பார்த்தபடி நடக்க
மண்வாசனையுடன் லேசான தூரலென
திசை மறக்கத் தொடங்கினேன்
கனவு கலையும் நேரம்
கை பிரிந்து செல்லும்
காற்றைப் பற்றிக் கவலையில்லை
எங்கேனும் சுற்றித் திரிந்து
மீண்டு ஏகும்
எனக்கான கனவைப் போல
எனக்கான காற்றும்.

-oOo-

மாயக் கண்ணாடி

லாயத்திலிருந்த சிவப்புக் குதிரை
என்னை வலப்பக்கம் செல்லச் சொன்னது
அங்கிருந்த ஆற்றில் கண்விழித்து நின்றபோது
குளித்துக்கொண்டிருந்த மீனொன்று
நீரில் மூழ்கச் சொன்னது
பாதாள உலகத்தில் படுத்துக்கிடந்த பாம்பு
மாயக் கதவொன்றைத் திறக்க
இரட்டைச் சாலைகள் விரிந்தன
சுமைதாங்கிக் கல்லில்
காத்துக்கொண்டிருந்த
அதி யௌவனப் பெண்ணொருத்தி
என் ரேகையைப் பார்த்து
தென்மேற்குத் திசை போகச் சொன்னாள்
அங்கே நான் தெய்வமென்றறியும்
சிலை ஒன்று காத்துக் கிடப்பதாக
வழியெங்கும் நமத்துக் கிடந்த கோரைப் புற்கள்
என் வழி தவறென்றன
மாயக் கண்ணாடியைக் கோபம் கொண்டு உடைத்தேன்
சிதறி விழுந்த கண்ணாடிகள்
ஆளுக்கொரு திசை சொல்லி நின்றன.

-oOo-

இரவுகளின் வரைபடம்

தினம் தினம் வரைந்துவைத்த
இரவுகளின் படங்களில்
வழியும் கருமையிருந்தது
தெருநாய்களின் ஊளையிருந்தது
கழட்டி வைக்கப்பட்ட கொலுசிருந்தது
எரியும் சிறு அகலும்
வியர்வையும் அலுப்பும்
தோல்வியும் வெற்றியும்
ஒன்று சேர்ந்து குழம்பிக் கிடந்த
காகிதம் இருந்தது
அழும் குழந்தையின் எரிச்சலைப் போல
விடிகிற வானமும் இருந்தது.

-oOo-

Share

Comments Closed