ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை

அந்திமழையில் ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு கடையில் வெளி ரங்கராஜன் சி.சு.செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’ நாவலை வெளியிட்டு அதைப் பற்றிப் பேசினார். அன்றே ஜீவனாம்சம் வாங்கினேன்.

பிராமண விதவைப் பெண் சாவித்திரியின் உலகம் புத்தகம் முழுதும் சுழல்கிறது; நம்மைச் சுழன்றடிக்கிறது. சாவித்திரியின் எண்ண ஓட்டத்தில் எழுதப்பட்டுள்ள கதையில் சாவித்திரியின் நினைவுகள் எழுப்பும் கேள்விகள், கேவல்கள், ஆசைகள் அனைத்தும் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விதவைப் பெண்ணின் உலகம் தீவிரமாகவும் ஆழமாகவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த சாவித்திரி சமையல் கூடத்தைத் தாண்டாதவள். அவளின் உலகம் என்பது வெளி நபர்கள் மூலம் ஏற்படுத்தப்படுகிற ஒன்று. ஒவ்வொரு வெளி நபர் வரும்போதும் சாவித்திரி நினைவுச் சுழலுக்குள் ஆள்வதும், அவர்களின் மூலம் அறிகிற விஷயங்களில் இருந்து நிகழ்கால உலகத்தை யூகத்தில் உருவாக்கிக்கொள்வதும் விதவைப் பெண்ணின் கட்டுப்பெட்டி வாழ்க்கையை வெளி எளிதாகத் தெரிவித்துவிடுகின்றன.

சாவித்திரியின் புகுந்த வீடு வாழ்க்கை அவளுக்குத் தந்திருந்த சுதந்திரம் மீதும் உரிமை மீதும் அவளுக்குப் பெரிய கர்வம் இருக்கிறது. அவள் சமைத்த உணவின் ருசியின் மீது நடத்தப்படும் இயல்பான விவாதங்கள் யார் வீட்டிலும் நிகழக்கூடியதே; அதை வைத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் மறைமுகமாகச் சொல்லிவிட முடிகிறது செல்லப்பாவிற்கு. சாவித்திரி எப்பேற்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாள் என்று வாசிக்கிற வாசகரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நினைக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர். செல்லப்பாவின் வரிகளில் பூடகம் இல்லை. ஆனால் அவை ஒரு மனிதனின் மன ஆழத்தில் இருந்து வெளிப்படும் சொற்பமான வார்த்தைகள் தரும் அதிக பட்ச விளைவை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவை. நாவலில் வரும் மிகக்குறைந்த கதாபாத்திரங்கள் இத்தகைய வலிமையான உணர்வுகளால் பின்னப்பட்ட வசனங்களினால் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. மிகச் சில இடங்களில் மட்டுமே நேரடியாக இடம்பெறும் கணபதி, சாவித்திரியின் எண்ண ஓட்டங்களின் மூலமாகிறான். சாவித்திரியின் எண்ண ஓட்டங்கள் ஒன்று கணபதியிலிருந்து தொடங்குகின்றன; அல்லது கணபதியில் -நேரடியாகவோ மறைமுகமாகவோ – முடிகின்றன. கணபதி குழந்தை என்பதன் மூலம் சாவித்திரியின் எண்ணத்தில் அவளுக்குக் குழந்தை இல்லாதது எங்கோ புதைந்து எரிந்து கொண்டிருக்கிறதோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது. சாவித்திரி சுமங்கலியாய் இருந்தபோது அவளது பிறந்த வீட்டில் அண்ணனோடும் மன்னியோடும் அவளுக்கிருக்கிற சிநேகபாவம் வெளிப்படும் இடங்கள் மிகவும் கிண்டலும் கேலியுமாக வெளிப்பட்டுப் போகிறது. பின்னாளில் விதவையாக அவ்வீட்டில் இருக்க நேரிடுகிற சாவித்திரிக்கு அத்தகைய சுதந்திரங்கள் அப்போது தானாகவே விலகிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. அது சாவித்திரியாக உருவாக்கிக்கொள்வதில்லை. அல்லது அவளது அண்ணனோ மன்னியோ உருவாக்கிவிடுவதில்லை. எந்தவொரு விதவைப் பெண்ணுக்கும் எளிதாக ஏற்பட்டுவிடுகிற தனிமை.

சாவித்திரியின் நினைவுகள் ஒரு பெண்ணின் மன ஆழங்களை வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. அதிலும் விதவைப் பெண்ணாகிவிட்ட சாவித்திரிக்குத் தன் நினைவும் தன் கற்பனையும் தன் யூகமும் மட்டுமே துணை என்றாகிவிடுகிறபோது, எப்போதோ நடந்த விஷயங்களை அசை போடுவதும், அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் யோசிப்பதும், ஒவ்வொரு முறையும் அதைப் புதிய கோணத்தில் அணுகுவதும் சில சமயம் சரியாக அதை அடைவதும், சில சமயம் தனக்குத் தோதான கருத்தை அடைந்துகொள்வதும் நாவல் முழுவதும் நிகழ்கிறது. சாவித்திரியின் அண்ணனோ மன்னியோ சாவித்திரியைத் துன்புறுத்துகிறவர்கள் அல்ல. ஆனால் ஒரு நிலையில் தன் தொடர்ச்சியான யோசனைகளின் மூலம் சாவித்திரி அப்படி ஒரு நிலைக்கு வாசகர்களைக் கொண்டு வந்து விடுகிறாள். ஏனென்றால் அவளது மனதில் புகுந்தவீடு தந்த சுதந்திரம் மீதும், சாவித்திரி என்கிற ஈகோவிற்கு அவ்வீடு தந்த மரியாதையின் மீதும் பெரிய இஷ்டமும் அதைப் பறிகொடுத்துவிட்ட அவலமும் கலந்து கிடக்கிறது. பிறந்த வீடு சிறையில்லை என்ற நிலை இருந்தபோதும் புகுந்த வீட்டின் பிரேமையும் கணபதியின் வாத்சல்யமும் அவளை அப்படி ஒரு நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

அண்ணன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவன் நினைக்குமாறே செய்துகொள்ளலாம் என்கிற சாவித்திரி, அதன் பின் அதைப் பின்தொடர்ந்து யோசிக்கும்போது அவளுக்கு அவளே முன்வைத்துக்கொள்ளும் கேள்விகள் வாசகனைப் பதட்டமடையச் செய்கின்றன. சாவித்திரி அவளது அடுத்த முறையில் அவள் மனத்திலிருக்கும் கேள்விகளை, ஆசைகளைத் தெளிவாக அண்ணன் முன் சொல்லிடவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் பதட்டமடைகிறான். மீண்டும் மீண்டும் சாவித்திரியின் நினைவுகளாலேயே சுழன்றடிக்கப்படும் வாசகன் ஒரு கட்டத்தில் சாவித்திரியாகி, அச்சுழலில் இருந்து வெளியேறத் துடிக்கிறான். சாவித்திரி சீக்கிரம் கணபதியைக் கைகளில் ஏந்திக்கொள்வது பற்றிய ஒரு பிம்பத்தை வாசகன் உருவாக்கிக்கொண்டு, அதை மனதில் வைத்தே அந்நாவலை வாசிக்கிறான். இப்படி ஒரு விஷயத்தை வாசகன் மனதில் சாவித்திரியின் நினைவுகள் மூலம் சொல்லி, சாவித்திரி பிறந்த வீட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென்கிற பதட்டத்தை உருவாக்குவதில் சி.சு.செல்லப்பா மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறார். ஒரு விதவைப் பெண்ணுக்கு, அதிலும் தன் வீடு மட்டுமே உலகம் என்று வாழ்ந்துவிட்ட பெண்ணுக்கு எண்ணங்களே துணை. எனவே இந்நாவலுக்கு நினைவோடை உத்தியைத் தவிர வேறு ஏதும் உசிதமில்லை என்ற முடிவெடுத்துவிட்ட தருணத்திலேயே செல்லப்பா பெரும்பாலான நாவலை உருவாக்கிவிட்டார் எனலாம்.

ஜீவனாம்சம் கேட்கலாமா வேண்டாமா என்கிற கேள்விக்கு சாவித்திரியிடம் நேரடியான பதிலில்லை. பல சமயங்களில் புகுந்த வீட்டின் பெருமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்கள் சார்பாகவே யோசிக்கிறாள் சாவித்திரி. ஆனாலும் சாவித்திரியின் அண்ணனின் நேரடியான கேள்விகளுக்கு சாவித்திரியிடம் பதிலில்லை. அவளது பதில்கள் எல்லாமே அவள் மனதுள் பெரும் போராட்டமாக மட்டுமே நடந்து அங்கேயே முடிந்துவிடுகின்றன. மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே ஒவ்வொரு வார்த்தையாக வெளிப்படத் தொடங்குகின்றன. வார்த்தைகள் என்றால் சாதாரண வார்த்தைகள் அல்ல. அவ்வார்த்தைகள் சாவித்திரியின் மாற்றத்தை, அவளது சிந்தனைகளின் கோணங்களை வெளிப்படுத்தும் ஆழமான வார்த்தைகள். இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லும் வசனங்களில் இருக்கும் வார்த்தைகளின் வலிமை முக்கியமாகப் பார்க்கவேண்டியது. சாவித்திரியின் நினைவோட்டம் பெரும்பாலும் ஏதோ ஒரு வார்த்தையிலிருந்தே தொடங்குகிறது. அவளது முடிவும், அவளது மாற்றமும் மிகப் பெரிய வரியிலிருக்கும் ஏதோ ஒரு வார்த்தையில் குடியிருக்கிறது. வார்த்தையின் பலத்தைப் புரிந்துகொண்ட சி.சு.செல்லப்பா, அவற்றை பிராமணக் குடும்பத்து நடவடிக்கைகளில் கையாளுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாவலில் தொடர்ச்சியாக வரும் நினைவுகள் ஒரு சமயத்தில் அலுப்புத் தட்ட தொடங்குகின்றன. ஆனால் இந்த அலுப்பே வாசகனின் பதட்டத்திற்குக் காரணமாகவும் அமைகிறது. எப்போது சாவித்திரி இந்த அலுப்பு நிறைந்த நினைவுகளாலான உலகத்திலிருந்து வெளியேறுவாள் என்று ஒவ்வொரு வாசகனும் சிந்திக்கத் தொடங்கிவிடுகிறான். சாவித்திரியின் மாமனார் இறந்துவிடுகிறபோது, அவளுக்கு அதில் அதிகம் தீட்டில்லை என்ற விஷயத்தைத் தொடர்ந்து சாவித்திரியின் நினைவுகள் செல்லுகிறது. அவளுக்கான உலகம் எது, அவளுக்கான வீடு எது என்பதை சாவித்திரி கண்டடைந்துவிடுகிறாள் என்று வாசகன் முடிவுக்கு வரும்போது, “துக்கத்துக்குப் போன காலோடு அங்கு தங்கவா?” என்று கேட்டு வாசகனைக் குழப்பத்துக்குள் ஆழ்த்துகிறார் சி.சு.செல்லப்பா. ஒரு நேரடியான திறந்த முடிவு ஏனில்லை என்ற கேள்வி சாவித்திரியோடு தொக்கி நிற்கிறது. அதுவரை சாவித்திரியின் நினைவுச்சுழலுக்குள் சுழன்றடித்த அலை வாசகன் மனதில் இடம் பெயர்ந்துகொள்கிறது.

ஒவ்வொரு அத்தியாய முடிவில் வரும் வார்த்தைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அடுத்த அத்தியாய தொடக்கத்தில் பயன்படுத்தப்படுவது, உணர்வு ரீதியான கடத்தலுக்கு உதவினாலும், அடுத்த அத்தியாயத் தொடக்கம் இப்படித்தானிருக்கும் என்ற முன்னேற்பாடு வாசகன் மனதில் ஏற்பட்டுவிடுவது, அத்தியாயத்தின் தொடக்கத்திற்கு, வலிந்து திணித்தது போன்ற செயற்கைத்தனத்தைத் தந்துவிடுகிறது. உணர்வுத் தொடர்ச்சியின் பலம் வார்த்தைத் தொடர்ச்சியில் சிதைந்துபோய்விடுகிறது போலத் தோன்றுகிறது.

விதவைப் பெண்ணின் உடல் இச்சை சார்ந்த பிரச்சினைகள் பற்றிச் சி.சு.செல்லப்பா எங்கேயும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. சாவித்திரியின் சிந்தனைகள் மீண்டும் மீண்டும் உறவு வட்டத்தில் பல்வேறு கோணங்களில் விரிகிறதேயன்றி, திருமணம் ஆன சில காலங்களில் கணவன் இறந்துவிட விதவையாகும் அவளின் உடல் சார்ந்த மோகம் பற்றி அவள் அதிகம் சிந்திப்பதில்லை. நாவலின் ஓட்டம் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் சாவித்திரியின் எண்ணங்களுக்குள் காமம் என்கிற ஒன்றே இல்லாமல் போவது சாத்தியமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

நினைவு மடிப்புகளுள் உள்ளடைந்துகிடக்கும் உணர்வுகளின் வெளிப்பாடே இந்நாவலை நடத்திச் செல்கிறது. ஒரு நிகழ்வின் எல்லாக் கோணங்களையும் படம்பிடிக்கிறது செல்லப்பாவின் எழுத்து. சொல்லப்படாத விஷயங்கள் குறித்துச் சிந்திக்க வைக்கும் கூர்மையான வசனங்கள் இந்நாவலின் பலம்.

[ஜீவனாம்சம் – சி.சு.செல்லப்பா – காலச்சுவடு – 70.00 ரூபாய்]

Share

Comments Closed