Tag Archive for NEET

நீட்: திருமாவளனுடனான பாண்டேவின் நேர்காணல்

பாண்டே உடனான திருமாவளவனின் பேட்டி பார்த்தேன். (MP3 கேட்டேன்!) நீட் பிரச்சினை தொடர்பான பேட்டி. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த பாண்டேவின் குரல் ஏற்படுத்திய ஒரு சலிப்பைத் தொடர்ந்து அவரது குரலையே கொஞ்சம் நாளாகக் கேட்கவில்லை. அச்சலிப்பைத் தாண்டிவர எனக்கு இத்தனை மாதங்கள் ஆகி இருக்கின்றன.

இப்பேட்டி மிக அட்டகாசமான பேட்டி என்றே சொல்லவேண்டும். தெளிவான கேள்விகளை முன்வைத்தார் பாண்டே. சுற்றிச் சுற்றி தன் முடிவுகளுக்கே திருமாவளவனைக் கொண்டு வந்தார். நீட்டை நான்கே கேள்விகளுக்குள் அடக்கினார்.

புள்ளிவிவரங்களின்படி,

1. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எவ்விதப் பங்கமும் வரவில்லை.

2. நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தின்படிப் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்படவில்லை. அதாவது 62% பேர் வென்றிருக்கிறார்கள்.

3. நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு அல்ல, ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் அரசுப் பள்ளியில் படித்துவிட்டு மருத்துவம் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 312 பேர் மட்டுமே.

4. நீட் தேர்வில் பாவப்பட்ட அனிதாவின் இடம் இன்னொரு தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கே சென்றுள்ளது.

இவை அனைத்தையும் திருமாவளவன் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் திருமாவளவன், சமூக நீதிப் பிரச்சினைக்காக நீட்டை எதிர்க்கவே இல்லை என்றொரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். 🙂

நேற்று வந்த புள்ளிவிவரத்தின்படி (உண்மையாக இருக்கும்பட்சத்தில்) நீட் தேர்வால் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் பொய்யாகி இருக்கிறது.

இப்போதைக்கு நீட் எதிர்ப்பாளர்களிடம் இருக்கும் அவர்கள்தரப்பு நியாயங்கள் இவையே:

1. மாநில அரசின் உரிமை பறிபோகிறது. (இதற்கு பாண்டே, கடந்த 20 வருடங்களாகவே கல்வி பொதுப்பட்டியலில்தானே உள்ளது என்றார்.)

2. கோச்சிங் மூலம் சேர்வார்கள். எனவே பணம் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும். (ப்ளஸ் டூவிலும் இதுதான் நடக்கிறது. எதிர்காலத்தில் நீட் தேர்விலும் நாமக்கல் வகையறா மாணவர்கள் இதேபோல் கோச்சிங் மூலம் நிச்சயம் அதிகம் வெல்வார்கள் என்பதும் உண்மைதான். இது ஒரு பிரச்சினைதான். ஆனால் இதை ஒன்றும் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.)

3. நீட் தேர்வை ஒட்டியே மாநிலத்தின் பாடத்திட்டம் அமைக்கப்படும். இதனால் தமிழ்நாட்டின் பண்பாட்டோடு ஒட்டிய பாடப்பகுதிகள் புறக்கணிக்கப்படும். (தமிழ்ப்பண்பாடு புறக்கணிக்கப்படும் என்பதை நான் நிச்சயம் ஏற்கமாட்டேன். இது ஒருக்காலும் நடக்காது என்றே நினைக்கிறேன்.)

இது போக திருமாவளவன் குறிப்பிட்ட ஒரு விஷயம், சி பி எஸ் சி பாடத்திட்டத்தை ஒட்டியே இனி மாநிலப் பாடத்திட்டமும் உருவாக்கப்படும் என்று சொன்னது. நீட் தேர்வால் இந்நிலை வரும் என்றார். ஆனால் உண்மையில் இப்போதே அப்படித்தான் உள்ளது. இதற்கு முன்பும் அப்படித்தான் இருந்தது. எப்போதுமே மாநிலப் பாடத்திட்டம் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பாடத்திட்டத்தை மேம்படுத்தும்போதும் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிக் கொஞ்சம் சேர்த்தும் கொஞ்சம் நீக்கியும் ஒரு பாடத்திட்டத்தை வரையறுப்பார்கள். மாநிலப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை பாடத்திட்டத்தின் தரம் உயர்த்த, ஒரு வகுப்புப் பாடத்தை அதற்கு முந்தைய வகுப்புக்குக் கொண்டுபோவார்கள். அதாவது 8ம் வகுப்பில் உள்ள பாடத்தில் சிலவற்றை 7ம் வகுப்புக்குக் கொண்டு போவார்கள். இப்படித்தான் இவர்களது பாடத்திட்ட வரையறை – என் பார்வையில் – இருந்துள்ளது. எனவே இனி மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிச் செல்வார்கள் என்பது ஒரு கற்பனையே. ஏனென்றால் ஏற்கெனவே அப்படித்தான் உள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்திலும் புத்தகத்திலும் பெரிய குறைகள் எல்லாம் இல்லை. (இந்த சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது வந்த முதல் புத்தகத்தில் குறைகள் இருந்தன, அவை பின்னர் களையப்பட்டன.) பாடங்களை+ நடத்தும் விதத்தில்தான் பள்ளிகள் மேம்படவேண்டும். 9ம் வகுப்பை ஏறக்கட்டிவிட்டு பத்தாம் வகுப்பு நடத்துவது, பதினோராம் வகுப்புப் பாடத்தை தூக்கி எறிந்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பள்ளி நடத்துவது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை என்கிற ஒன்றை ஒழித்துக்கட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, ஒழுங்காகப் பாடத்தை நடத்தி, புரிய வைத்து அதன்படிக் கேள்விகள் கேட்டுத் தேர்வு நடத்தினாலே போதும்.

அத்துடன் வெறும் நீட் தேர்வு மூலம் வரும் மதிப்பெண்கள் மட்டுமே என்றில்லாமல், பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் கட் ஆஃபில் சேர்ப்பதும் நல்லது. என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இந்த கட் ஆஃபில் குறைந்த அளவிலாவது ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களைச் சேர்ப்பது. இல்லையென்றால் ஆங்கிலம் மற்றும் தமிழைக் கடனுக்கெனப் படிப்பார்கள். இப்படித்தான் நான் படிக்கும் காலத்திலேயே இருந்தது. இதையும் மாற்றவேண்டும்.

திருமாவளவன் தன் நிலைக்கேற்ற பதிலைப் பொறுமையாகச் சொன்னார். பொய், தேவையற்ற காட்டுக்கத்தல், எதையாவது சொல்லிவிட்டுப் போவது போன்ற வீரமணித்தனங்கள் எல்லாம் இல்லாமல் கேள்விகளின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு கையாண்டது பாராட்டத்தக்கது. நிச்சயம் பார்க்கவேண்டிய நேர்காணல்.

Share