Tag Archive for malaiyalam

Sarvam Maaya

சர்வம் மாயா (M) – இப்படி அழகான க்யூட்டான ஒரு பேய் கிடைக்குமானால் நான்கைந்து பேய்களுடன் வாழலாம் என்பதைத் தாண்டி இந்தப் படத்தில் ஒரு சுக்கும் இல்லை. ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமான கதைகளை மலையாளிகள் காதலிக்கிறார்கள் என்பது புரியவில்லை. கதை திரைக்கதை லாஜிக் என எதுவுமே இல்லாமல் மொக்கையாக ஒரு திரைப்படம். அங்கங்கே லேசாகப் புன்னகை வரப் பார்க்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படத்தை முழுமையாக ஏன் பார்த்தோம் என்பதும் புரியவில்லை. கதாநாயகி அழகாக நடிக்கிறார். நிவின் பாலி தன் பங்கைச் சிறப்பாகச் செய்கிறார். ஆரம்பத்தில் இருந்தே மெதுவாக நகரும் திரைப்படம். போட்டுப் படுத்தி எடுத்து விட்டார்கள். மலையாள படங்களைத் தமிழ் டப்பிங்கில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள்‌ எத்தனையோ அரத மொக்கையான மலையாளப் படங்களைப் பார்த்து வைரம் பாய்ந்த கட்டைகள் மட்டும் ஒரு முறை பார்க்கலாம்.

Share

Kalamkaval review

களம்காவல் (M) – பார்க்கும்போது போரடிக்காமல் செல்கிறது என்பது பிளஸ். மம்மூட்டியின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. ஆனாலும் என்னவோ முழுமையாக அதை உள்வாங்க முடியாத அளவுக்கு ஒரு இடறல் படம் முழுக்க இருக்கிறது. திரைக்கதையாகப் பார்த்தால் மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மம்மூட்டியா இப்படி என்கிற பரபரப்பு, முதல் 10 நிமிடங்களில் குறையத் தொடங்கியதும் திரைக்கதை பக்கம் நம் கவனம் செல்லும் போது, என்னடா இது என்ற எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஒரு 50 வயது பெண்ணுக்கு 20 திருமணங்கள் நடந்த செய்தி நமக்குத் தெரியும். நம் ஊரில் ஆண்களுக்கான ‘இந்த’ poverty செய்தி நமக்குப் புதியதல்ல. ஆனால் ஒரு 50 வயது ஆணுக்கு இத்தனை பெண்கள் அதுவும் குழந்தை குட்டியுடன் உள்ள பெண்கள் ஏன் விழுந்தார்கள் என்பதற்கான காரணம் எதுவுமே வலுவாக இல்லை என்பது மிகப்பெரிய குறை. ஆனாலும் முதல் 10 நிமிடமும் கடைசி அரை மணி நேரமும் விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன. மிகப்பெரிய ஆறுதல் கொலைக்கு ஒரு மோட்டிவ் காண்பிக்கிறேன் என்று எதையாவது காண்பிக்காமல் இது இப்படித்தான் என்று முதலிலேயே நமக்குச் சொல்லி விடுவது. நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நடக்கும் திரைப்படம் என்பதால் பின்னணியில் தமிழ்ப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தக் காலத்தில் வந்த நேரடித் தமிழ் பாடல்களைப் பயன்படுத்தாமல் இவர்களே தமிழ்ப்பாடல் போன்ற சிலவற்றை உருவாக்கிப் படம் முழுக்கப் பல இடங்களில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். மலையாளிகளே எழுதும் தமிழ்ப் பாடல் எப்படி இருக்கும்? ஆம், இதிலும் நாராசமாகத்தான் இருக்கிறது.

Share

Ronth Malayalam Movie

ரோந்த் (M) – எப்படியாவது ஒரு நல்ல படம் கொடுத்துத் திகைக்க வைப்பதில் மலையாளிகளை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நல்ல திரைப்படம் ரோந்த்.

கதை எல்லாம் எதுவும் இல்லை. அல்லது கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது. காவல் நிலையத்தில் நடப்பதை அப்படியே காண்பிக்க முயன்ற ஆக்‌ஷன் ஹீரோ பிஜு திரைக்கதையைப் போல, ஒரு ரோந்தின் போது நடப்பதை அப்படியே காண்பிக்கும் வகையிலான திரைக்கதை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமும் இருக்கிறது. இது சீரியஸான திரைப்படம். திலீஷ் போத்தன் அசரடிக்கிறார். அவரது உடல்மொழி பிரமிப்பூட்டுகிறது. திலீஷ் போத்தனின் கதாபாத்திரத்தை நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு பிரமாதமாக நடித்திருக்கிறார்.

திரைப்படம் நெடுக வரும், குழந்தைகளின் மீதான வன்முறை குறித்த காட்சிகள் பதற வைக்கின்றன. படத்தில் இதுவே பிராதனம்.

கடைசி அரை மணி நேரம் பரபரப்பாகச் செல்கிறது திரைக்கதை. முடிவைப் பற்றிப் பலர் நெகடிவாகக் கருத்துச் சொல்லி இருந்தார்கள். ஒருவகையில் அது சரிதான். அதே சமயம், காவல்துறையின் இன்னொரு முகத்தைக் காண்பிக்கும் அந்த முடிவு சரியாக உள்ளதாகவும் தோன்றுகிறது.

நிச்சயம் பார்க்கவேண்டும். தீலீஷுக்காக.

Share