ஆடு ஜீவிதம் (M)
வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் செல்லும் ஒருவன் பாலைவனத்தில் அராபிய முதலாளி ஒருவனிடம் மாட்டிக்கொண்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அங்கேயே கிடந்து பாடுபடுவதும், அங்கிருந்து தப்பிப்பதும்தான் கதை. சர்வைவல் மூவி வகை.
பென்யாமின் எழுதி ஆடு ஜீவிதம் மலையாள நாவலாக வெளிவந்து (தமிழ் மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறது) கிட்டத்தட்ட 2 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்ற நூல். நாவலாக ஆடு ஜீவிதம் மிக முக்கியமான ஒன்று. ஆனால் படமாக அது நாவலைப் போல அத்தனை நேர்த்தியாக வந்திருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
ஆடு ஜீவிதம் திரைப்படம் வழக்கமான மலையாளப் படங்கள் போல மெல்லவே நகர்கிறது. மிகவும் மெல்ல. அதுவும் இடைவேளைக்குப் பிறகு மிக மிக மெல்லத்தான் நகர்கிறது. என்னதான் ஒருவனது வாழ்க்கையை ரத்தமும் சதையுமாகக் கண்முன்னே பார்க்கிறோம் என்றாலும் இத்தனை மெல்ல நகரும் படத்துடன் அமர்ந்திருப்பது பெரிய சவால்தான். இது பாலைவன வாழ்க்கையைக் கண்முன் கொண்டுவருகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு பிளெஸ்ஸி இப்படி ஒரு திரைப்படத்துடன் வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் இயக்குநர் பிளெஸ்ஸி செய்த ஒரு தவறு, எடுத்த எடுப்பில் நாயகன் வளைகுடா நாட்டுக்கு வந்து இறங்கி இருப்பதைக் காட்டிவிட்டு, அதன் பின்னர் ஃபிளாஷ்பாக்கில் அவனது வீட்டையும் அவன் சந்தோஷமாக இருந்த வாழ்க்கையையும் காண்பித்தது. அப்படி அல்லாமல் அவன் சந்தோஷமாக இருந்த காட்சிகளை எல்லாம் கோவையாக முதலில் கட்டிவிட்டு பின்னர் ஒட்டுமொத்தமாக வளைகுடாவை ஆரம்பித்திருந்தால், மக்கள் அனைவருக்கும் ஒரு பதைபதைப்பு இருந்திருக்கும். அதை இயக்குநர் தவற விட்டுவிட்டார்.
நாவலாக நுணுக்கங்களையும் உள்முரண்பாடுகளையும் உணர்ச்சிச் சிக்கல்களையும் கொண்டிருந்த நஜீப், திரைப்படத்தில் ஒற்றைத்தன்மை உடையவனாக மாறிவிடுகிறான். எங்கே உள்மனச் சிக்கல்களையும் அவனது போராட்டங்களையும் வைத்தால் நாயகனுக்கு எதிரான உணர்வு பார்வையாளர்களுக்கு வந்து விடுமோ என்பதற்காக இயக்குநர் இப்படிச் செய்துவிட்டார் போல. கோபத்தில் நஜீப் ஆடுகளை அடிப்பது, ஆசனவாயில் கம்புகளைச் செருகுவது போன்ற காட்சிகள் எல்லாம் நாவலில் புரிந்துகொள்ள முடியும், திரைப்படத்தில் முடியாது என்று பிளெஸ்ஸி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
நாவலில் பதறச் செய்யும் இடங்களான, நஜீப் ஆடுகளுடன் வேறு வழியின்றி உறவு கொள்ள முடிவெடுப்பது திரைப்படத்தில் இல்லை. அதேபோல் நாயகன் மிகவும் மிகவும் அங்கதத்துடன் பேசிக்கொள்ளும் காட்சிகள் எதுவுமே இல்லை. ஒவ்வொரு ஆட்டுக்கும் மோகன்லால், இஎம்எஸ் என்றெல்லாம் பெயர் வைப்பது, குறிப்பாக ஓர் ஆட்டுக்கு ஏன் ராணி என்று பெயர் வைத்தேன் என்று சொல்வது போன்ற புன்னகை ததும்பும் காட்சிகள் எதுவுமே படத்தில் வரவில்லை. அதனால் படம் ஒரே சோகமயமாகிவிட்டது.
இத்தனை கஷ்டப்பட்டும் ஓர் இளைஞன் தன் முதலாளியைக் கொன்றால்தான் என்ன என்று நாம் யோசிப்போம். நாவலில் அப்படி ஒரு காட்சி உண்டு. படத்தில் இல்லை.
பென்யாமின் தெளிவாக ஒரு பேட்டியில் சொல்கிறார் (மலையாள மனோரமா பேட்டி), இந்த நாவலின் தொடக்கம், ஒரு தனியாள் அவனுக்கும் கடவுளுக்கும் இடையே எப்படிப் பேசிக்கொள்வான் என்பதுதான் என்கிறார். உண்மையான நஜீப் எத்தனையோ தடவை தற்கொலை செய்துகொண்டால்தான் என்ன என்று யோசித்திருக்கிறான். ஆனால் அதை நாவலாக்கிய பென்யாமின், எங்கேயும் அந்தத் தற்கொலை எண்ணம் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். என்ன ஆனாலும் இறைச் சிந்தனையை விட்டுவிடக் கூடாது என்பதுவே பென்யாமின் அடிப்படை. இப்படமும் கிட்டத்தட்ட அதைச் சொல்கிறது என்றாலும், நான் ஏன் இன்னும் அல்லாவைக் கும்பிடவேண்டும் என்று நஜீப் சலித்துக்கொள்ளும் காட்சி உண்டு. இது ஒரு சின்ன விஷயம். ஆனால் ஒரு நாவலைப் படமாக்கும்போது இப்படி அடிப்படையில் கை வைப்பதில் எனக்கு உடன்பாடு எப்போதுமே கிடையாது. பரதேசி திரைப்படத்தில் மதமாற்றத்துக்காகத்தான் டாக்டர் உதவி செய்தார் என்பதும், ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று காட்சிப்படுத்தல்களிலும் எனக்கு எப்போதுமே உடன்பாடு இல்லை.
பாலைவனத்தில் இதுதான் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்பதைக் கடினப்பட்டு ஏற்றுக்கொள்ளும் நஜீப் ஒரு கட்டத்தில் ஆடுகளுடன் அன்பாக இருக்க ஆரம்பிக்கிறான். அதனால்தான் அவன் ஆட்டை விட்டுப் பிரிந்து செல்லும்போது அத்தனை வருத்தத்துடன் போகிறான். திரைப்படத்தில் இது சரியாக வரவில்லை. முக்கியமாக ஒரு கர்ப்பிணி ஆடு தன் குட்டியை ஈன்றெடுக்கும் போது, அதை வளர்க்கும் நஜீப், தனக்கு மகன் பிறந்தால் என்ன பெயர் வைக்க நினைத்தானோ அதையே வைக்கிறான். ஆனால் அந்த ஆண் கிடாவுக்கு விதை நீக்க அரபாப் முடிவெடுக்கும்போது துடித்துப் போகிறான். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் படத்தில் இல்லை.
படம் வேறு நாவல் வேறு என்று எடுத்துக் கொண்டால், இத்திரைப்படம் மிக நேரடியாக எளிமையாகப் போய்விடுகிறது. பாலைவனத்திலிருந்து நஜீப் தப்பித்துப் போவதை அணு அணுவாகக் காட்டி இருக்கிறார்கள். குறிப்பாக ஹகீம் இறக்கும் காட்சி அபாரம். படத்தில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் பிரித்விராஜ் மிகப்பெரிய பலம், சில காட்சிகளில் அதீத நடிப்பு என்றாலும் கூட. இந்த இரண்டையும் விட்டுவிட்டால் படத்தில் என்ன இருக்கிறது என்று கேள்வி நமக்கு வரத்தான் செய்கிறது.
இத்தனை மெல்ல நகரும் காட்சிகளை வைத்ததற்குப் பதிலாக நாவலில் பல காட்சிகளை எடுத்துக்கொண்டு அனைத்தையும் சேர்த்து விறுவிறுப்பான திரைக்கதையாக்கி சிறிய சிறிய காட்சிகளாக வேகமாக நகரும் படமாகத் திரைக்கதையாக்கி, கூடவே அங்கதத்தையும் வைத்திருந்தால் படம் நிச்சயம் மேம்பட்டிருக்கும். இப்போது யாரோ ஒருவனின் வலியை நாம் ஏற்கவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தவிக்கும் ஒரு நிலையில்தான் இருக்கிறோம்.
மலையாளிகளின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது வளைகுடா நாட்டில் வேலை பார்ப்பார்கள். எனவே அவர்களுக்கு இந்தப் படம் ஒரு நெருக்கத்தைத் தரலாம். ஆனாலும் கூட இத்தனை மெல்ல நகரும் திரைப்படம் எத்தனை மலையாளிகளுக்கு அப்படி ஒரு நெருக்கத்தைத் தரும் என்பது எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படியான திரைப்படங்களுக்கு மலையாளிகள் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நிஜம்தான். தமிழ்ப் பார்வையில் இருந்து நாம் பார்க்கும்போது நமக்கு இந்தப் படம் சிறிது அன்னியப்பட்டு நிற்கும். ஆனாலும் எங்கோ ஒருவன் ஏதோ ஒரு கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு அனுபவிக்கும் துயரை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தால் இந்தப் படம் ஓரளவுக்குப் பிடிக்கலாம்.