Tag Archive for ரஞ்சித்

காலா விமர்சனம்

காலா

பொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்தான் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாகவே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.

ஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.

படத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.

ரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவேண்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.

ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ணாங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.

இப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.

படத்தின் செட்டிங்க்ஸ் அபாரம். அப்படியே கண்ணுக்குள்ளே தாராவியைக் கொண்டு வந்துவிட்டார்கள். பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.

இனி…

இப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண்மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மிக பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.

மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.

இங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு சார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.

இத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் உண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத் தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.

ஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் என்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

இத்திரைப்படத்தின் சாதனை என்ன? ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லது எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.

ஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.

Share

மெட்ராஸ் திரைப்படம் பற்றி நாலு வரி

* ஆடுகளம், மதயானைக் கூட்டம் வரிசையில் வைக்கத்தக்க ஒரு படம். 

* இடைவேளை வரை மிரட்டல். இடைவேளைக்குப் பிறகும் மோசம் என்றெல்லாம் இல்லை. நன்றாகவே உள்ளது. ஆனால் வழக்கம் போன்ற ஹீரோயிஸம் பாணிக்குப் போனதே பெரிய சறுக்கல். அதிலும் கடைசிக் காட்சியில் ஹீரோ கால்பந்து ஆடுவதைக் காட்டி அதைப் போல வில்லன்களைப் பந்தாடுகிறார் என்று காட்டியிருப்பது மிகப்பெரிய சறுக்கல். (சவுக்கு வெளியிட்டிருந்த கட்டுரையில், இப்படம் கருப்பர் நகரத்தின் காப்பி என்று எழுதும்போது, கருப்பர் நகரத்தில் வரும் ஹீரோ கால்பந்து ஆடுபவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எது காப்பி எது மூலம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை காப்பி என்றால், காப்பி அடிப்பவர் ஏன் அப்படியே கால்பந்து ஆடுபவராக வைத்தார் என நினைத்துக்கொண்டேன். இந்தக் காட்சிக்காகத்தான் என்றால், சிரிப்பே வருகிறது. கபடி ஆடுபவராக வைத்திருக்கலாம். காப்பி அடிக்கவே கூடாது. அடித்தே தீரவேண்டும் என்றால், மூலத்தைவிட ஒரு படி மேலே போய்விடவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதுவேறு இதுவேறு என்று சொல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

* தலித்துகளுக்கான படம் என்று பெரிய பிரசாரம் நடக்கிறது. இருக்கட்டும். நல்ல விஷயம்தான். தலித்துகளுக்கான படம் மிகத் தெளிவான அடையாளங்களுடன் வரவேண்டியது அவசியம். ஆனால் இப்படம் அப்படி அமையவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நாமாக இதை தலித் திரைப்படம் என்று எடுத்துக்கொள்கிறோம். அல்லது அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் தலித் என்பதால், இப்படத்தின் மூலம் தங்கள் ‘படைபலம்’ (படைபலம் பற்றி ரெண்டு மூணு பெத்துக்க சொல்லி வருகிறது. வீரத்தாய் திட்டத்தில் ராம கோபாலனும் இதையே சொன்னார். 🙂 இரண்டும் ஒன்றல்ல. ஆனாலும் என்னவோ ஒற்றுமை உள்ளது) உலகத்துக்குத் தெரியட்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் போல.  இதில் தவறில்லை. ஆனால் அதற்காக இப்படம் தலித்துகளுக்கான கனவுப்படமெல்லாம் இல்லை. இன்னும் நாம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர் சொல்லாத முதல் மரியாதை, காதல், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் இருந்து ஒரு இம்மிகூட முன்னேறிவிடவில்லை. 

* இது தலித்துகளுக்கு உள்ளே நடக்கும் பிரச்சினையா அல்லது தலித்துகளுக்கும் நாயுடுகளுக்குமான பிரச்சினையா (அப்படி ஒன்று இருக்கிறதா) அல்லது ஒரே கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள் மட்டும்தானா என்ற குழப்பமெல்லாம் எவ்வகையிலும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நாமம் வைத்துக்கொண்டு வருபவர்களை இணையப் புரட்சிக்காரர்கள் தலித்துகள் என்று எப்போதும் சொன்னதில்லை. அவர்களை மேல் சாதிக்காரர்கள் என்றே ஓட்டியிருக்கிறார்கள். ஆனால் அதே பொதுப்புத்திக்காரர்கள் இப்படத்தை எப்படி தலித்துகளின் படமாக ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நம் ஜனம் முன்னேற வேண்டும் என்ற வசனத்தை இருதரப்பும் பேசிக்கொள்கிறார்கள் என்பதால் குழப்பம் உச்சமடைகிறது.

* வட சென்னையை சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நிறையப் படங்கள் வட சென்னையைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தேவைக்கு மட்டும் வட சென்னையைக் காட்டிவிட்டுச் செல்லும் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒட்டுமொத்த படமே வடசென்னையில்தான் நடக்கிறது.

* இத்தனை மெனக்கெட்டவர்கள் வெண்பதுமை போல இருக்கும் கார்த்தியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய குறை இது. இதற்கும் ஏதோ சாதித் தொடர்பே காரணம் என்றார்கள். யார் யார் என்ன என்ன ஜாதி என்றெல்லாம் தெரியாததால் என்னால் இதனுள் மேற்கொண்டு போகமுடியவில்லை. இக்குறையைத் தீர்ப்பது அன்பு மேரி காதல் காட்சிகள். அட்டகாசம்.

* இயக்குநர் ரஞ்சித்தைப் பொருத்தவரை அட்டகத்தி என்ற சுமாரான படத்திலிருந்து இது மிகப்பெரிய தாவல். அட்டகத்தியையே ஆனையாக்கும் என்றார்கள். இன்று இன்னும் அதிகமாக. தங்கள் அரசியலுக்கு தன்னைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்துவிட்டு ரஞ்சித் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவது நல்லது. இது நல்ல படம்தானே அன்றி மிகச் சிறந்த தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கியமான படமல்ல. அப்படத்தை ரஞ்சித் எடுக்கக்கூடும். தன் கவனத்தை மின்மினி அரசியல் சமூகப் போராளிகளிடம் தொலைக்காமல் இருந்தால்.

* சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மிரட்டல். இவரும் இன்னும் சாதிக்கட்டும். 

* படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இரண்டை வெட்டியிருக்கலாம்.

* தொடர்ந்து மாறி மாறிக் காட்டப்படும் நம்பிக்கைத் துரோகக் காட்சிகள் அஞ்சானை மிஞ்சுகின்றன. இக்காட்சிகள் தமிழ்த் திரையுலகில் க்ளிஷேவாக மாறிவிட்டன. இனியும் இதைப் பிடித்துக்கொண்டு அலைவதில் லாபமில்லை என்பதோடு நஷ்டமுண்டு!

* எல்லோரும் படத்தில் வரும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், அம்பேத்கர் நூல் போன்றவற்றைச் சொல்லி அதன் குறியீடுகளை வியக்கிறார்கள். நாமும் நம் பங்குக்குக் கொளுத்தி வைப்போம். படத்தில் வராத படங்கள் இல்லை. ரஜினி படம், சாய் பாபா படம், கிறித்துவ கதாபாத்திரங்கள், ஹிந்து சாமியார்கள் என என்னவெல்லாமோ வருகின்றன. அம்பேத்கர் படம் வருகிறது. புத்தர் சிலை வருகிறது. சே குவேராவின் படம்கூட வருகிறது. வராத ஒரே ஒரு படம் ஈவெராவின் படம் மட்டுமே. ரஞ்சித்தை இதற்காக எத்தனை பாராட்டினாலும் தகும். வடசென்னையில் ஈவெரா படமில்லை என்று உரக்க நிரூபித்துவிட்டார். 😀 (எங்காவது யாராவது இப்படத்தில் ஈவெரா படம் வருவதை ஆதாரத்துடன் சொன்னால், அப்படியா கவனிக்கலைங்க என்று மட்டும் சொல்வேன் என உறுதி கூறுகிறேன்.)

* கடைசியாக – ஆடுகளம், மதயானைக் கூட்டம், மெட்ராஸ் எனக் கொண்டால் என் வரிசை இப்படி: மதயானைக் கூட்டம், ஆடுகளம், மெட்ராஸ்.

* தனுஷ் நடித்திருக்கவேண்டிய திரைப்படம். தனுஷ் நடிக்காததால் நமக்கு பெரிய இழப்பு இது. 🙁

* தியேட்டரில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். Do NOT miss. 

ஸாரி, நாலு வரி இல்லை, நாற்பது வரிகள் எழுதிவிட்டேன்.

Share