Tag Archive for மலையாள சினிமா

Lokah Chapter 1 Chandra Review

லோகா சாப்டர் 1‌ சந்திரா (M) – மலையாளிகளுக்கு என்று எப்படித்தான் கதை கிடைக்கிறதோ‌, அசத்தி விட்டார்கள் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாருங்கள், இது படு குப்பை.

இடைவேளை வரை அத்தனை மோசமில்லை. குறிப்பாக நஸ்லேனும் அவர் நண்பர்களும் அடிக்கும் லூட்டியும், கல்யாணி யாரென்று தெரிந்த பிறகு நஸ்லேன் பேசும் வசனங்களும் தியேட்டரையே குலுங்க வைக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து, தொடர்ந்து வாய் விட்டுச் சிரித்தேன். ஆனால் டொவினோ கால்‌ வைத்ததும் படம் குப்பை ஆகிவிட்டது.

ஒட்டுமொத்தமாகவே மிகவும் சுமார்தான். மின்னல் முரளியில் இருந்த ஆத்மார்த்தமும் மக்கள் நன்மைக்காகப் போராடுவதும் இதில் வலுவாக வெளிப்படவில்லை.

இந்தப் படத்தில் காண்பிக்கும் பல குறியீடுகளை வைத்துக்கொண்டு அப்படி இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், யக்‌ஷி கதைகளின் தொன்மம் அது இது என்றெல்லாம் கதை சொல்வார்கள். அது எல்லாமே உண்மையாக இருந்தாலும் ஒரு படமாக இது குப்பை என்பதில் மாற்றம் இல்லை. அதுவும் தமிழர்கள் தியேட்டரில் பார்த்தால் வரும்போது சொட்டு ரத்தம் இல்லாமல்தான் வெளியே வருவார்கள். அதிலும் கடைசி ஒரு மணி நேரம் எழுந்து ஓடி விடலாமா என்றாகிவிட்டது.

வில்லனுக்கு எதிராக நாயகி பிரமாண்டமாக நிற்க வேண்டும் அல்லவா? அது எதுவும் இதில் வரவே இல்லை.

அழகான கல்யாணியை ஏன் இப்படிக் காண்பித்து வெறுப்பை உண்டாக்கினார்கள் என்று தெரியவில்லை. பார்த்தால் நஸ்லேனுக்காகப் பார்க்கவும். மற்ற எதற்காகவும் பார்க்கவே தேவையில்லை.

இதில் இது சாப்டர் 1 மட்டும்தானாம்! இன்னும்‌ எத்தனை‌ சாப்டர்களோ! செத்தோம்.

வில்லனாக வருபவர் கௌடா என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் பேசுகிறார். அவரது அம்மாவும் பார்க்க பிராமணப் பெண் போல் இருக்கிறார். ஆனால் பிராமணர் என்று எங்கேயும் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை. ஏன் இந்தக் குழப்பம் என்று தெரியவில்லை.

Share

Nari Vettah

நரி வேட்ட (M) – தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று கூவும் நடிகர்கள் மலையாளத்துப் பக்கமோ தெலுங்குப் பக்கமோ சென்று விட்டால் வாலைச்‌ சுருட்டிக்கொண்டு நடிப்பது கூட பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களின் உயிருக்கு உயிரான தமிழர்களுக்கு எதிராக நடிக்கவும் தயங்குவதில்லை. ஏற்கெனவே சோமசுந்தரம் சட்டாம்பி என்னும் மலையாளத் திரைப்படத்தில், தமிழர்களைக் கழுத்தறுப்பவர்களாகக் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த முறை சேரன்.

தமிழர்கள் மலையாளக் கதாபாத்திரம் ஏற்று வில்லனாக நடிப்பதில் பிரச்சினை இல்லை. இந்தப் படத்தில் சேரன் தமிழராகவே நடித்திருக்கிறார். நாம் மலையாளிகளை நல்ல விதமாகக் காண்பிப்பதில்லை. எனவே மலையாளிகள் தமிழர்களை நல்லவிதமாக காண்பிக்கிறார்களா என்று கேட்க நமக்குத் தகுதி இல்லை. ஆனால் சேரன் போன்றவர்கள் எப்படி இது போன்ற படத்தில் நடிக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியம். பணம் பத்தும் செய்யும்.

இதை விட கொடுமை என்னவென்றால், இந்தத் திரைப்படம் 2003 வாக்கில் வயநாடு முத்தங்காவில் நடைபெற்ற ஆதிவாசிகள் மீதான போலீஸ் மற்றும் அரச வன்முறையை மையமாகக் கொண்டது. 5 ஆதிவாசிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் பங்கேற்று ஆணைகள் பிறப்பித்த அதிகாரிகளின் பெயர்களைத் தேடினால் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் சங்கர் ரெட்டி. அவர் மலையாளியா தெலுங்கரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தெலுங்கராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அவர் மகள் ஆந்திராவில் இருப்பதாக ஏதோ ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. தமிழராக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

இன்னொருவர் மலையாளி.

அப்படி இருக்க, இந்தப் படத்தில் அத்தனை கொடூரங்களையும் செய்ய வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் வருவது ஒரு தமிழர் என்று வரும்படி திரைக்கதை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. சேரன் அந்தக் கொடூரமான கதாபாத்திரத்தை இன்னும் கொடூரமாக, நடிக்கவே தெரியாமல் சொதப்பி இருக்கிறார் என்பது தனிப்பட்ட விஷயம். அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தது தமிழர்தான் என்று உறுதி செய்து கொண்டு சேரன் நடித்திருப்பாரா? கடவுளுக்கே வெளிச்சம்.

இந்தப் படத்தில் ஆதிவாசியாக வரும் நடிகர் அசத்திவிட்டார். அவரும் அடிப்படையில் தமிழர்தான் போல. ஆனால் அவர் மீது பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவரது கதாபாத்திரமே மலையாளக் கதாபாத்திரமாகத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட ஆதிவாசி.

இன்னொரு கொடுமை இந்தப் படத்தில் அரங்கேறி இருக்கிறது. ஒன்றல்ல இரண்டு. இந்தப் படத்தில் ஆதிவாசிகளால் கொல்லப்பட்டதாக போலீசால் சித்தரிக்கப்பட்ட ஒரு போலீசின் பெயர் பஷீர். முஸ்லிம். அவர் தொழுவதை எல்லாம் காண்பிக்கிறார்கள். நல்லது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் கே.வி.வினோத். ஒரு தாழ்த்தப்பட்ட காவல் அதிகாரியும் ஆதிவாசிகளுமே இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்டார்கள் என்று அன்று கேரளாவில் பேசியிருக்கிறார்கள் .

அதை ஏன் படத்தில் முஸ்லிமாக மாற்றினார்கள் என்று தெரியவில்லை.

Spoilers alert.

இன்னொரு கொடுமை என்னவென்றால், அரசு தரப்பின்படி இந்த வினோத் என்னும் போலீசும் கேரள வனத்துறை அதிகாரியும் போராட்டக்காரர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் போலிஸைச் சேர்ந்தவரே சக போலீசைக் கொன்று விட்டு அந்தப் பழியை ஆதிவாசிகள் மீது போடுவதாகக் காண்பிக்கிறார்கள். (கொன்றது மத்திய போலிஸா அல்லது வேறு டீமா என்று இன்னொரு முறை பார்த்தால்தான் புரியும்.) படத்தில் காண்பிப்பதற்கு எந்த ஆதாரமும் எங்கேயும் எனக்குக் கிடைக்கவில்லை.

(பல நண்பர்கள், திரைப்படத்தில் வருவது மத்திய போலிஸ்தான் என்று சுட்டிக் காட்டினார்கள்.)

ஒரு படத்தை எடுக்கும்போது ஆதிவாசிகளுக்கு ஆதரவாக எடுப்பது இயக்குநரின் உரிமை. அதில் தவறில்லை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கும் போது கொஞ்சமாவது நியாயம் இருக்க வேண்டும். தலித் கதாபாத்திரத்தை முஸ்லிமாக மாற்றுவது, சக படையினரே போலீசை கொல்வது என்று, எந்த ஆதாரமும் இன்றி அராஜகமாக எடுப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இல்லை.

திரைப்படமாகப் பார்த்தால், ஆதிவாசிகள் வரும் காட்சிகள் அனைத்தும் ஓரளவு பார்க்கும்படியாக இருக்கின்றன. அவர்கள் பேசும் மலையாளமும் நிலமும் அழகு. நாய் மறக்க முடியாதது. அதுவும் கடைசி கிராஃபிக்ஸில் நாய் நெருப்போடு ஓடி வருவது நெகிழ்ச்சி.

ஆனால் கதைக்குள் வருவதற்கு முன்பாக டொவினோவின் காதல் காட்சிகளை முக்கால் மணி நேரம் காண்பிக்கிறார்கள். கடும் எரிச்சலைக் கிளப்பும் காதல். அதே போல் இறுதிக் காட்சிகள் எல்லாம் மிகவும் தட்டையாக இருக்கின்றன.

பொறுமை இருந்தால், ஆதிவாசிகளுக்காக ஒரு முறை பார்த்து வைக்கலாம்.

Share

The Kerala Story

கேரளா ஸ்டோரி (M) – பார்த்திருக்கக் கூடாது. ஒரு திரைப்படமாக இதில் நிறைய சமரசங்களும், தொழில்நுட்ப ரீதியாகப் போதாமைகளும், நம்ப முடியாத கணங்களும் உள்ளன. ஆனால் இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல என்பதுதான் பதற்றத்தைத் தருகிறது. பிரசாரத் திரைப்படம்தான். முழுக்க கற்பனை அல்ல என்பதுதான் இப்படத்தை முக்கியத்துவம் பெற வைக்கிறது. (பின்குறிப்பு: இது வயது வந்தவர்களுக்கான திரைப்படம். Zee5ல் கிடைக்கிறது.)

Share

ப்ரமயுகம் – மலையாளம்

ப்ரமயுகம் (M) – பிரமை என்றால் கற்பனை என்றும் பைத்தியக்காரத்தனம் என்றும் பொருள் கொள்ளலாம் போல. படமும் அப்படித்தான் இருக்கிறது. சாதி குறியீட்டுடன் பார்த்தால் அதிகாரத்தை அடையும் வெறி என்று கொள்ளலாம். ஆனால் குறியீடுகளுடன் ஒரு படத்தைப் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது. நேரடியான சாதிப் படங்களே என் தேர்வு.

இந்தப் படத்தை மம்மூட்டிக்காக நிச்சயம் பார்க்கலாம். மிரட்டல் என்னும் வார்த்தை எல்லாம் குறைவு. கண்களிலேயே நடிக்கிறார். வெறித்தனமான சிரிப்பு ஒன்று போதும். அதிலும் அந்தத் தொடக்கக் காட்சி, மறக்கவே முடியாது. விதேயன் திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். தனது 72ம் வயதில், அன்றைய விதேயன் போல அத்தனை சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் கதை ஒழுங்காக அமைந்திருந்தால் நிச்சயம் சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கும். இப்போதும் விருது கிடைக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அதே போல் பின்னணி இசை. அருமை. ஒளிப்பதிவும் அட்டகாசம். ஆனால் கதை?

கறுப்பு வெள்ளை திரைப்படம். படம் முழுக்க நான்கே பேர். அதிலும் பெரும்பாலும் மூன்று பேர்தான். படம் முழுக்க பார்க்க வைத்ததே பெரிய விஷயம். என்ன பிரச்சினை என்றால், இதைத்தாண்டி ஒன்றுமே இல்லை.

மிக பலவீனமான கதை. மம்மூட்டிக்காக எவ்வளவு நேரம் ஒரே விஷயத்தை இரண்டு மணி நேரம் பார்ப்பது? ஒரு பரபரப்பும் இல்லை, ஒரு பயமும் இல்லை. sick திரைப்பட வகை என்பதைச் சிறப்பாகக் கொண்டு வந்தவர்கள், கதையிலும் திரைக்கதையிலும் கோட்டை விட்டுவிட்டார்கள். மெல்ல நகரும் மலையாளப் பாணி இன்னொரு எரிச்சல். அதிலும் மம்மூட்டி கதாபாத்திரத்தின் மறைவுக்குப் பிறகு, உலகத்துக்கே தெரிந்த முடிவை இன்ச் இன்சாகக் காட்டி இன்னும் சாகடித்துவிட்டார்கள்.

தம்பட் (ஹிந்தி), குமாரி (மலையாளம்) திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கும். குமாரி திரைப்படமும் இத்திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே வகை.

மற்றபடி ஆஹோ ஓஹோ என்று புகழ ஒன்றுமே இல்லை. தூக்கம் கெட்டுத் தலைவலி வந்ததே மிச்சம். ஃபேஸ்புக்கில் புகழ்ந்தவர்களின் பேச்சைக் கேட்டு தியேட்டர் வரை போயிருக்க வேண்டாம். ப்ச்.

Share