நரி வேட்ட (M) – தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று கூவும் நடிகர்கள் மலையாளத்துப் பக்கமோ தெலுங்குப் பக்கமோ சென்று விட்டால் வாலைச் சுருட்டிக்கொண்டு நடிப்பது கூட பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களின் உயிருக்கு உயிரான தமிழர்களுக்கு எதிராக நடிக்கவும் தயங்குவதில்லை. ஏற்கெனவே சோமசுந்தரம் சட்டாம்பி என்னும் மலையாளத் திரைப்படத்தில், தமிழர்களைக் கழுத்தறுப்பவர்களாகக் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த முறை சேரன்.
தமிழர்கள் மலையாளக் கதாபாத்திரம் ஏற்று வில்லனாக நடிப்பதில் பிரச்சினை இல்லை. இந்தப் படத்தில் சேரன் தமிழராகவே நடித்திருக்கிறார். நாம் மலையாளிகளை நல்ல விதமாகக் காண்பிப்பதில்லை. எனவே மலையாளிகள் தமிழர்களை நல்லவிதமாக காண்பிக்கிறார்களா என்று கேட்க நமக்குத் தகுதி இல்லை. ஆனால் சேரன் போன்றவர்கள் எப்படி இது போன்ற படத்தில் நடிக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியம். பணம் பத்தும் செய்யும்.
இதை விட கொடுமை என்னவென்றால், இந்தத் திரைப்படம் 2003 வாக்கில் வயநாடு முத்தங்காவில் நடைபெற்ற ஆதிவாசிகள் மீதான போலீஸ் மற்றும் அரச வன்முறையை மையமாகக் கொண்டது. 5 ஆதிவாசிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் பங்கேற்று ஆணைகள் பிறப்பித்த அதிகாரிகளின் பெயர்களைத் தேடினால் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் சங்கர் ரெட்டி. அவர் மலையாளியா தெலுங்கரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தெலுங்கராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அவர் மகள் ஆந்திராவில் இருப்பதாக ஏதோ ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. தமிழராக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
இன்னொருவர் மலையாளி.
அப்படி இருக்க, இந்தப் படத்தில் அத்தனை கொடூரங்களையும் செய்ய வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் வருவது ஒரு தமிழர் என்று வரும்படி திரைக்கதை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. சேரன் அந்தக் கொடூரமான கதாபாத்திரத்தை இன்னும் கொடூரமாக, நடிக்கவே தெரியாமல் சொதப்பி இருக்கிறார் என்பது தனிப்பட்ட விஷயம். அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தது தமிழர்தான் என்று உறுதி செய்து கொண்டு சேரன் நடித்திருப்பாரா? கடவுளுக்கே வெளிச்சம்.
இந்தப் படத்தில் ஆதிவாசியாக வரும் நடிகர் அசத்திவிட்டார். அவரும் அடிப்படையில் தமிழர்தான் போல. ஆனால் அவர் மீது பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவரது கதாபாத்திரமே மலையாளக் கதாபாத்திரமாகத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட ஆதிவாசி.
இன்னொரு கொடுமை இந்தப் படத்தில் அரங்கேறி இருக்கிறது. ஒன்றல்ல இரண்டு. இந்தப் படத்தில் ஆதிவாசிகளால் கொல்லப்பட்டதாக போலீசால் சித்தரிக்கப்பட்ட ஒரு போலீசின் பெயர் பஷீர். முஸ்லிம். அவர் தொழுவதை எல்லாம் காண்பிக்கிறார்கள். நல்லது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் கே.வி.வினோத். ஒரு தாழ்த்தப்பட்ட காவல் அதிகாரியும் ஆதிவாசிகளுமே இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்டார்கள் என்று அன்று கேரளாவில் பேசியிருக்கிறார்கள் .
அதை ஏன் படத்தில் முஸ்லிமாக மாற்றினார்கள் என்று தெரியவில்லை.
Spoilers alert.
இன்னொரு கொடுமை என்னவென்றால், அரசு தரப்பின்படி இந்த வினோத் என்னும் போலீசும் கேரள வனத்துறை அதிகாரியும் போராட்டக்காரர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் போலிஸைச் சேர்ந்தவரே சக போலீசைக் கொன்று விட்டு அந்தப் பழியை ஆதிவாசிகள் மீது போடுவதாகக் காண்பிக்கிறார்கள். (கொன்றது மத்திய போலிஸா அல்லது வேறு டீமா என்று இன்னொரு முறை பார்த்தால்தான் புரியும்.) படத்தில் காண்பிப்பதற்கு எந்த ஆதாரமும் எங்கேயும் எனக்குக் கிடைக்கவில்லை.
(பல நண்பர்கள், திரைப்படத்தில் வருவது மத்திய போலிஸ்தான் என்று சுட்டிக் காட்டினார்கள்.)
ஒரு படத்தை எடுக்கும்போது ஆதிவாசிகளுக்கு ஆதரவாக எடுப்பது இயக்குநரின் உரிமை. அதில் தவறில்லை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கும் போது கொஞ்சமாவது நியாயம் இருக்க வேண்டும். தலித் கதாபாத்திரத்தை முஸ்லிமாக மாற்றுவது, சக படையினரே போலீசை கொல்வது என்று, எந்த ஆதாரமும் இன்றி அராஜகமாக எடுப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இல்லை.
திரைப்படமாகப் பார்த்தால், ஆதிவாசிகள் வரும் காட்சிகள் அனைத்தும் ஓரளவு பார்க்கும்படியாக இருக்கின்றன. அவர்கள் பேசும் மலையாளமும் நிலமும் அழகு. நாய் மறக்க முடியாதது. அதுவும் கடைசி கிராஃபிக்ஸில் நாய் நெருப்போடு ஓடி வருவது நெகிழ்ச்சி.
ஆனால் கதைக்குள் வருவதற்கு முன்பாக டொவினோவின் காதல் காட்சிகளை முக்கால் மணி நேரம் காண்பிக்கிறார்கள். கடும் எரிச்சலைக் கிளப்பும் காதல். அதே போல் இறுதிக் காட்சிகள் எல்லாம் மிகவும் தட்டையாக இருக்கின்றன.
பொறுமை இருந்தால், ஆதிவாசிகளுக்காக ஒரு முறை பார்த்து வைக்கலாம்.