Tag Archive for மம்மூட்டி

ப்ரமயுகம் – மலையாளம்

ப்ரமயுகம் (M) – பிரமை என்றால் கற்பனை என்றும் பைத்தியக்காரத்தனம் என்றும் பொருள் கொள்ளலாம் போல. படமும் அப்படித்தான் இருக்கிறது. சாதி குறியீட்டுடன் பார்த்தால் அதிகாரத்தை அடையும் வெறி என்று கொள்ளலாம். ஆனால் குறியீடுகளுடன் ஒரு படத்தைப் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது. நேரடியான சாதிப் படங்களே என் தேர்வு.

இந்தப் படத்தை மம்மூட்டிக்காக நிச்சயம் பார்க்கலாம். மிரட்டல் என்னும் வார்த்தை எல்லாம் குறைவு. கண்களிலேயே நடிக்கிறார். வெறித்தனமான சிரிப்பு ஒன்று போதும். அதிலும் அந்தத் தொடக்கக் காட்சி, மறக்கவே முடியாது. விதேயன் திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். தனது 72ம் வயதில், அன்றைய விதேயன் போல அத்தனை சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் கதை ஒழுங்காக அமைந்திருந்தால் நிச்சயம் சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கும். இப்போதும் விருது கிடைக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அதே போல் பின்னணி இசை. அருமை. ஒளிப்பதிவும் அட்டகாசம். ஆனால் கதை?

கறுப்பு வெள்ளை திரைப்படம். படம் முழுக்க நான்கே பேர். அதிலும் பெரும்பாலும் மூன்று பேர்தான். படம் முழுக்க பார்க்க வைத்ததே பெரிய விஷயம். என்ன பிரச்சினை என்றால், இதைத்தாண்டி ஒன்றுமே இல்லை.

மிக பலவீனமான கதை. மம்மூட்டிக்காக எவ்வளவு நேரம் ஒரே விஷயத்தை இரண்டு மணி நேரம் பார்ப்பது? ஒரு பரபரப்பும் இல்லை, ஒரு பயமும் இல்லை. sick திரைப்பட வகை என்பதைச் சிறப்பாகக் கொண்டு வந்தவர்கள், கதையிலும் திரைக்கதையிலும் கோட்டை விட்டுவிட்டார்கள். மெல்ல நகரும் மலையாளப் பாணி இன்னொரு எரிச்சல். அதிலும் மம்மூட்டி கதாபாத்திரத்தின் மறைவுக்குப் பிறகு, உலகத்துக்கே தெரிந்த முடிவை இன்ச் இன்சாகக் காட்டி இன்னும் சாகடித்துவிட்டார்கள்.

தம்பட் (ஹிந்தி), குமாரி (மலையாளம்) திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கும். குமாரி திரைப்படமும் இத்திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே வகை.

மற்றபடி ஆஹோ ஓஹோ என்று புகழ ஒன்றுமே இல்லை. தூக்கம் கெட்டுத் தலைவலி வந்ததே மிச்சம். ஃபேஸ்புக்கில் புகழ்ந்தவர்களின் பேச்சைக் கேட்டு தியேட்டர் வரை போயிருக்க வேண்டாம். ப்ச்.

Share