Tag Archive for புத்தக விமர்சனம்

ஆக்காண்டி

ஆக்காண்டி – தைரியமான நாவல். முக்கியமான நாவல். சில நாவல்களை எழுத தைரியம் தேவை. இது அந்த வகை நாவல். ஈழப் படைப்புகள் அனைத்தும் தமிழகத் தமிழர்களின் பார்வையில் முன்பெல்லாம் ஒரே வகையினதாகத் தெரிந்துகொண்டிருக்க, வாசு முருகவேலின் நாவல்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு வருகின்றன. ஒற்றைப்படைத் தன்மையிலிருந்து மேலேறி உள்முரண்களையும் அதே சமயம் ஈழக் குரலின் அடிநாதத்தை விட்டுவிடாமலும் இருக்கின்றன. இதனாலேயே அவருக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம்.

அடிப்படைவாதக் குரல்கள் என்று முத்திரை குத்தப்பட்ட குரல்களில் ஒன்று, இஸ்லாமியர்களையும் அதன் பயங்கரவாதத்தையும் நியாயமாக வேறுபடுத்திப் பார்க்கச் சொல்வது. இந்த நிதர்சனம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் குரலின் மீது அடிப்படைவாதக் குரல் என்று முத்திரை குத்தப்பட்டது. இது முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியலுக்கு உகந்ததாகவும் இருந்தது. வாசு முருகவேல் இந்தக் கருத்தாக்கத்தைத் தரவுகளுடன் கூடிய புனைவால் உடைக்கிறார். இதனாலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமும் வருகிறது. அதே சமயம் இவர், முற்போக்காளர்கள் சொல்லும் அடிப்படைவாதக் குழுவில் இருப்பவரும் அல்ல என்பது இவரை முழுவதுமாகக் கை கழுவ முடியாமல் அவர்களைப் படுத்துகிறது.

ஈழத் தமிழ் மக்கள், அங்கே வசிக்கும் இஸ்லாமியத் தமிழ் மக்கள் இருவருக்குமான முரண், பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் நாவல், இவர்கள் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கத்தையும் ஒருங்கே பேசுகிறது. அரசியலில் பகடைகள் எப்படி நேரம் பார்த்து வீசப்படுகின்றன என்பதை இந்த நாவல் தெளிவாக்குகிறது.

வாசு முருகவேலின் நாவல்களில் எனக்கிருக்கும் குறைகள் இந்த நாவலிலும் உண்டு. ஒன்று, புதிர் போலப் பேசிச் செல்வது. இது புரிந்தவர்களுக்குப் பெரிய வாசிப்பனுபத்தைத் தரும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அலுப்பைத் தந்துவிடக் கூடும். அடுத்தது, விரிவாகச் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போவது. இதை ஓர் உத்தியாகவே அவர் நினைவோடு செய்யக் கூடும். ஆனால் இதை அவர் பரிசீலிப்பது நல்லது.

இன்னொரு வகையில் பார்த்தால், எப்படா நாவல் முடியும் என்பதைவிட, நாவல் முடிந்துவிட்டதே என்று நினைப்பதுவும் நல்லதற்குத்தான். நிச்சயம் வாசித்துப் பாருங்கள். அகிலன், தாசன், அவன் தங்கைக்காகவாவது வாசியுங்கள்.

Share

மணிக்கொடி சினிமா – புத்தகம்

மணிக்கொடி சினிமா | Buy Tamil & English Books Online | CommonFolks
மணிக்கொடி சினிமா, பதிகம் பதிப்பகம், கடற்கரய், விலை ரூ 125, போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 9445901234

மணிக்கொடி சினிமா – ஆய்வுப் புத்தகமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமான புத்தகம். கடற்கரய்-யின் நீண்ட கட்டுரையும், அது தொடர்பான மணிக்கொடி காலத்து திரைப்படக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 1935களின் சினிமாவுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இன்றுவரை நாம் அதையேதான் செய்துகொண்டிருக்கிறோம்.

மனத்தைக் கவர்ந்தவை இரண்டு முக்கிய விஷயங்கள். 1935களில் எழுதப்பட்ட விமர்சனங்களின் நடை இன்றும் மிக இலகுவாகப் படிக்கும்படி இருக்கிறது. அந்தக் காலத்துக்கே உரிய சில வார்த்தைப் பயன்பாடுகளைத் தாண்டி எவ்வித நெருடலும் இல்லாமல் வாசிக்க முடிகிறது. அதிலும் கலாரஸிகன் என்பவர் எழுதி இருக்கும் விமர்சனம் நேற்று எழுதியது போல் இருக்கிறது. சஞ்சயன் என்பவர் எழுதி இருக்கும் விமர்சனங்களில் சில அந்தக்கால பிரத்யேக வார்த்தைகளைப் பார்க்க முடிகிறது. அன்றும் இன்றைப் போலவே தமிழ் சினிமாவைத் திட்டித் தீர்த்து இருக்கிறார்கள்.

“இதுவரையில் நாம் கண்ட தமிழ்ப்படங்களில் ஏதாவது ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், ஏதோ தனித்தனியாக நான்கைந்து கதைகள் பார்த்ததாகத் தோன்றும்.”

“இதுவரையில் ஹாஸ்யப் படம் என்றால் ஆபாசம் நிறைந்த கதைகள், விரசமான சம்பாஷணைகள்தான் என்று என்னும்படி இருந்தது.” (அம்மாஞ்சி பட விமர்சனம்.)

“முதல்முதலில் தமிழ்ப் பேசும்படம் ஆரம்பித்தபோதே, நமது வேத காலத்தில் ஆரம்பிக்கவில்லையென்றாலும், புராண இதிகாஸ காலங்களிலேயிருந்து ஆரம்பித்தது.” 🙂

இப்படி சில நறுக்குத் தெறிப்புகள். அதுவும் 1935களில்! நூறு வருடமாக ஒரே வட்டத்துக்குள்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் போல.

அச்சுத கன்யா-வின் கதை கொஞ்சம் ஆச்சரியம். பறையர் பெண்ணை ஒரு பிராமணன் காதலிக்கும் கதை. இருவரும் திருமணம் செய்துகொண்டு புரட்சி எல்லாம் நடக்கவில்லை என்றாலும், 90 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு படம் வந்திருக்கிறது. எந்த மொழி என்று தெரியவில்லை. இந்த நூலின் பெரிய குறை, எந்தப் படம் தமிழ்ப்படம் எந்தப் படம் வேற்று மொழிப் படம் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இயக்குநர், நடிகர்களின் பெயரை வைத்தே யூகிக்க வேண்டி இருக்கிறது.

கோடீஸ்வரன் என்ற (தமிழ்ப்படமா என்று தெரியவில்லை) ஒரு திரைப்படத்தின் கதை, திடீரென ஒரு பெண் நடிகையாக, அவளை காதலிக்கும் ஒருத்தன் குதிரை ரேஸில் ஜெயித்துப் பெரிய பணக்காரனாகி அவளைக் கை பிடிக்கப் போகும் நேரத்தில், ஹீரோவின் அம்மா அந்த நடிகையிடம் தற்செயலாகச் சொல்கிறாள், தன் பையனை ஒரு நடிகைக்கு எந்நாளும் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன், குடும்பப் பெண்ணுக்குத்தான் கட்டி வைப்பேன் என்று. மனம் உடைந்து போகும் நடிகை ஹீரோவின் வாழ்க்கையை விட்டு விலக, ஹீரோ தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைக்க, மருத்துவர்கள் வந்து அவனைக் காப்பாற்ற முயல, அப்போதுதான் தெரிகிறது அவன் இன்னும் விஷமே குடிக்கவில்லை என்று. சுபம்.

இன்றளவும் இதே கதையைத்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்? கடைந்த பத்து வருடப் பாய்ச்சல் தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்காவிட்டால், 90% தமிழ் சினிமாக்கள் 90 வருடங்களாக ஒரே போலவேதான் யோசித்துக்கொண்டு இருந்திருக்கின்றன என்று சொல்லிவிடலாம்.

Share

Mathippurai.com and Andhimazai book review contest

அந்திமழையின் அதிரடி விமர்சனப் போட்டி! (தலைப்பு இப்படித்தான் வைப்போம். க்யாரே செட்டிங்கா என்று கேட்பவர்கள் அன்புடன் ப்ளாக் செய்யப்படுவார்கள்.)

மதிப்புரை.காம் என்றொரு வலைத்தளம் நடத்திக்கொண்டிருந்தோம். நோக்கம், புத்தகங்களுக்கு நல்ல விமர்சனம் வரவைக்கவேண்டும் என்ற எண்ணம்தான். இன்றைய நிலையில் அதிகம் விற்கும் நாளிதழ்களில், பத்திரிகைகளில் ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் வருவது அத்தனை எளிதானதல்ல. அதேசமயம் அது அத்தனை கடினமானதுமல்ல. பத்திரிகைகளின் நோக்கம் சார்ந்து தேவை பொருத்து விமர்சனங்களுக்கான புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும். பல விடுபடல்களை மீறி ஒரு புத்தகத்தின் விமர்சனம் வெளியாகவேண்டும். இதில் பத்திரிகைகளின் இடப்பற்றாக்குறை, வருமானம் தரும் பகுதி எதுவோ அதன் தேவை என்பதையெல்லாம் பொருத்தே புத்தக விமர்சனங்கள் வெளியிடப்படும். இந்தப் பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்கு ஓரளவு ரீச் இருக்கும். அதேசமயம் இந்த விமர்சனங்கள் எல்லாம் புத்தக அறிமுகங்கள் என்ற அளவிலானவை மட்டுமே.

காலச்சுவடு, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் புத்தக விமர்சனங்கள் கொஞ்சம் தீவிரமானவை. புத்தகத்தை ஆராய்பவை. இவற்றை விமர்னங்கள் எனலாம். இப்பத்திரிகைகளுக்கு அல்லது பத்திரிகை ஆசிரியர்களுக்கு அல்லது விமர்சனத்தை எழுதும் ஐயோபாவம் எழுத்தாளருக்கு உரிய சாய்வுகளுடனேயே எந்தப் புத்தகத்தின் விமர்சனம் வரவேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

இவற்றையெல்லாம் மீறிப் பார்த்தால், ஒரு புத்தகத்துக்கு நியாயம் செய்யும் விமர்சனங்கள் வருவதில்லை என்பதே உண்மை. இதில் எல்லாருக்கும் பங்குண்டு. எனவே குற்றங்களை நாம் நமது என்று பேசுவதே நியாயமானது.

மதிப்புரை.காம் என்ற தளம் தொடங்கப்பட்டது, ஆன்லைனில் எப்படி புத்தக விமர்சனங்களைக் கொண்டு செல்வது, அதன் மூலம் அக்குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனையை அதிகப்படுத்துவது என்ற நோக்கில்தான். இதன்படி புத்தக வாசிப்பாளர்களுக்குப் புத்தகம் இலவசமாகத் தரப்படும். அவர்கள் அப்புத்தகத்துக்கு விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டும். புத்தகத்தை நிராகரித்தும்கூட எழுதலாம். விமர்சகர்களின் சுதந்திரத்தில் எவ்விதக் குறுக்கீடும் இருக்காது. இதுதான் திட்டம்.

இத்திட்டம் தோல்வி அடைந்தது. காரணங்கள் என்ன? புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொண்ட விமர்சகர்கள் ஒன்றிரண்டு முறை ஆர்வத்தில் எழுதினார்கள். பின்னர் தொடர்ச்சியாக அவர்களால் எழுதமுடியவில்லை. இது முதல் காரணம். இதனால் தொடர்ச்சியாக எழுதும் ஒன்றிரண்டு நபர்களின் விமர்சனங்கள் மட்டுமே வெளிவரத் துவங்கின. இரண்டாவது பிரச்சினை – இப்படிப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிப்பகங்கள் பெரிய அளவில் முன்வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஒரு பத்திரிகைக்குப் புத்தகங்கள் அனுப்பி எப்போது விமர்சனம் வரும் என்று தேவுடு காத்திருப்பது கிட்டத்தட்ட எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொதுவான அனுபவமே. அதனால் பதிப்பகங்கள் பெரிய அளவில் இதற்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால், மதிப்புரை.காம் போன்ற ஒரு தளத்தில் ஆன்லைனில் விமர்சனம் வருவதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். அதாவது புத்தகம் பற்றிய பேச்சு இருக்கும், ஆனால் அது விற்பனையாக மாறாது. இது உண்மைதான். எனவே பதிப்பகங்கள் புத்தகங்களை இலவசமாகத் தருவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் மீண்டும் பதிப்பாளரிடம் புத்தகத்தை இலவசமாகக் கேட்பது குறித்த ஒரு குற்ற உணர்வு உருவாகத் துவங்கிவிட்டது! மூன்றாவது, விமர்சகர்கள் வாங்கிய புத்தகத்துக்கு விமர்சனங்கள் அனுப்பவில்லை. தொடர்ச்சியாகக் கேட்டாலும் அவர்கள் உண்மையில் மனத்தளவில் விமர்சனம் எழுதவேண்டும் என்றும் நினைத்தாலும் அதைச் செய்து முடிக்கமுடியாத சூழல். இது எல்லோருக்கும் நேர்வது. ஆனால் இதனால் சில சுணக்கங்கள் நேர்ந்தன. பதிப்பாளர்களிடம் மீண்டும் புத்தகம் கேட்கமுடியாத சூழல் இதனாலும் உருவானது. நான்காவதாக, அனாமதேய புத்தகங்கள் என்னும் சொல்லும் அளவுக்கான புத்தகங்கள் விமர்சனத்துக்கு வந்தன. அவற்றைப் படிக்கவோ விமர்சனம் செய்யவோ யாரும் விரும்பவில்லை. ஆனால் அப்பதிப்பாளர்களிடம், எழுத்தாளர்களிடம் அப்புத்தகங்களை அனுப்பாதீர்கள் என்றும் சொல்லும் நிலை உருவானது. இதனால் சில சங்கடங்கள் நேர்ந்தன. ஐந்தாவதாக, நீண்ட புத்தக விமர்சனங்களைப் படிக்க அதிகம் யாரும் தயாராக இல்லை. ஆறாவதாக, இலவசமாகப் புத்தகத்தையும் கொடுத்து, அதை அனுப்பவும் கொரியர் செலவு செய்து – எங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை.

இந்த உண்மைகளின் முன்னே இயல்பாகவே மண்டியிட நேர்ந்தது. இப்படித்தான் நடக்கும் என்று தெரியும். ஆனாலும் மதிப்புரை.காமில் பல முக்கிய விமர்சனங்கள் வெளியாகின. இது தொடர்ந்திருந்தால் மிக முக்கியமான விமர்சனத் தளமாக அது தொடர்ந்திருக்கும். இப்போதும்கூட இப்படி ஒரு தளத்தை, பதிப்பாளர்களின் உதவியுடன் யாரேனும் முயன்று பார்க்கலாம்.

அந்திமழை.காம் புத்தக விமர்சனத்துக்கென்று ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. அதற்குள் விமர்சனங்களை அனுப்பவேண்டும். மதிப்புரை.காமில் பங்குகொண்ட நண்பர்கள், புத்தக ஆர்வலர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதிகம் இதனை நண்பர்களுடன் பகிருங்கள்.

முதல் பரிசு – ரூ.10000
இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]
மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.

அந்திமழை விமர்சனப் போட்டி அறிவிப்பு இங்கே: http://andhimazhai.com/news/view/andhimazhai-zhakart-contest-2852018.html

Share

சொன்னால் நம்பமாட்டீர்கள் – புத்தகப் பார்வை

சொன்னால் நம்பமாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, ரூ 160, சந்தியா பதிப்பகம், 200 பக்கங்கள்

மிக சுவாரஸ்யமான புத்தகம். சின்ன அண்ணாமலை சுதந்திரப் போராட்டங்களில் பங்குகொண்டு பலமுறை சிறை சென்றவர். ராஜாஜியுடன் நட்பு பாராட்டியவர். கல்கியுடன் நெருக்கமான நட்புடையவர். சிறந்த பேச்சாளர். இவரது நகைச்சுவை உணர்வே இவரது பலம். காந்தியை தன் தலைவராகக் கொண்ட இவர் தீவிர காங்கிரஸ்காரர். மேடைகளில் ஈவெராவை எதிர்த்து தீவிரமாகப் பேசியவர். இவரும் ம.பொ.சியும் 60களில் பல மேடைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தீவிரமாக எதிர்த்து வந்தார்கள்.

சின்ன அண்ணாமலை தன் வாழ்க்கையின் சுவையான குறிப்புகளை எளிய தமிழில் நகைச்சுவை ததும்பும் வார்த்தைகளில் எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். புத்தகம் நெடுக பல்வேறு குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள், சிவாஜி கணேசன், எம்ஜியார் போன்ற நடிகர்கள் பற்றிய சில நினைவுகள், காந்திஜி பற்றிய சில தெறிப்புகள் எனப் பலவகையான பதிவுகள் இதில் உள்ளன. குறிப்பாக, ராஜாஜி – காமராஜ் பற்றி இவர் எழுதியிருப்பதன் வாயிலாக நமக்கு உருவாகி வரும் ஒரு சித்திரம் மிகவும் முக்கியமானது.

படிப்பவர்கள் மென்நகை புரியும்வண்ணம் பல வரிகள் இந்நூலில் காணப்படுகின்றன. அண்ணாத்துரை முதல் பலர் அரசியல் எதிர்த்துருவங்களில் இருந்தபோதும் இவரது பேச்சில் உள்ள நகைச்சுவையைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது இந்நூலில் பதிவாகியுள்ளது.

சில இடங்களில் சின்ன அண்ணாமலை செய்யும் விளையாட்டுத்தனமான செய்கைகள் இவரைப் பற்றிய வினோதமான சித்திரத்தைத் தருகின்றன. குறிப்பாக தாராசிங் – கிங்காங் குத்துச் சண்டையில் அதிக வசூல் வரவேண்டும் எனபதற்காக, போட்டிக்கு சில நாள் முன்பாக இவர் சொல்லி வைத்து ஏற்பாடு செய்யும் போலிச் சண்டை. இப்படியும் செய்வார்களா என்று படிப்பவர்களை அசர வைக்கிறது. ஆனால் உண்மையில் அப்படி நடந்திருக்கிறது. அதைச் செய்தவரே அதைப் பதிவு செய்திருக்கிறார்.

காங்கிரஸைக் காப்பாற்ற சிவாஜி கணேசனின் ரசிகர்கள் காங்கிரஸுக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி, காங்கிரஸுக்காக இவர் செய்த காரியங்களைப் பட்டியலிட முடியாது. ஆனால் ராஜாஜி காங்கிரஸில் இருப்பதை விரும்பாத காமராஜர், ராஜாஜி முதல்வர் ஆனதும், திமுகவின் எதிர்ப்பிரசாரத்துக்கு எதிராக எதையும் செய்யாமலிருப்பதை இவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் காமராஜர் மீது மாறாத அன்பும் மரியாதையும் உடையவர். ஆனாலும் காங்கிரஸைக் காப்பாற்ற ராஜாஜிக்கு ஆதரவாக மபொசியுடன் இணைந்து காமராஜுக்கு எதிராகப் போகிறார். பின்னாளில் அதே மபொசியும் ராஜாஜியும் திமுகவுடன் இணைந்து காங்கிரஸை தமிழ்நாட்டில் பலவீனமடையச் செய்த முரணையும் பதிவு செய்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது பட்டப்பகலில் இவரை சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிறையைத் தகர்த்து இவரை விடுவித்ததை விலாவாரியாக எழுதி இருக்கிறார். இதுபோன்று பட்டப்பகலில் சிறை உடைக்கப்பட்டு கைதி ஒருவர் சுதந்திரப் போராட்டத்தில் விடுவிக்கப்பட்டதே இல்லை என்று குறிப்பிடுகிறார். காந்திஜியின் ஹரிஜன் இதழை தமிழில் கொண்டு வருகிறார். தமிழ்ப்பண்ணை என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி பல தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுகிறார். மபொசியின் விற்காத புத்தகம் ஒன்றை மொத்தமாக வாங்கி அட்டையை மாற்றி நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டு விற்றுக் காண்பிக்கிறார். வ.உ.சி பற்றிய அதே புத்தகத்தை மபொசியை வைத்து விரிவாக எழுத வைத்து அதிக விலையில் மீண்டும் வெளியிடுகிறார்.

மலேசியாவில் தன் நகைச்சுவை உணர்வால் தப்பிப்பது, எழுத்தாளர் நாடோடியாக நடித்து கடைசியில் தானே ஏமாந்து போவது, வீரபாண்டிய கட்டபொம்மன், திருடாதே, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் இவரது பங்களிப்பு, அண்ணாத்துரையுடன் ரயிலில் பயணம் செய்யும்போது நடக்கும் பேச்சுகள், ஈவெரா முன்னிலையிலேயே அவரை விமர்சிப்பது என பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்துநேசன் பற்றிய ஒரு கட்டுரையில் ‘அஞ்சலிக்கு அது இருக்கா’ என்பது தொடங்கி அதை ராஜாஜி எதிர்கொண்ட விதம் வரை, தொடர்ச்சியாக எல்லா மஞ்சள் பத்திரிகைகளும் ஒழிக்கப்பட்டது வரை வரும் கட்டுரை ரசனைக்குத் தீனி இடும் ஒன்று.  சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டது, அறுபதுகளின் அரசியல் பங்களிப்பு, அறுபதுகளின் திரைப்படங்கள் எனத் தொடர்ச்சியாக வரும் விவரங்கள் சலிப்பில்லாத தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்று சொல்லி பல விஷயங்களைப் பதிவு செய்யும், காவி கதர் உடை அணிந்து வாழ்ந்த ஒரு தேசப் பற்றாளரின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அது இத்தனை சுவாரஸ்யமாக இன்றும் விரைவாகப் படிக்கும் தமிழில் இருக்கும் என்பதை படித்தால் நம்பிவிடுவீர்கள்.

Share

கெடை காடு

ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவல் படித்தேன். முன்பே வாங்கி வைத்திருந்த நாவல். அப்போது காவ்யா வெளியீடாக வந்தது. தற்போது டிஸ்கவரி வெளியீடாக வந்திருக்கிறது.

100-00-0002-258-9_b-01

நாவலின் சிறப்பு, கதை என்று எதுவுமில்லை. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு மாடுகளைப் பத்திக்கொண்டு போய் குள்ராட்டி என்னும் மலைக்காட்டுக்குச் சென்று அங்கே தங்கி இருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதனூடாகச் சொல்லப்படும் பல்வேறு நினைவுகள், சிறு கதைகள், நிகழ்வுகள் இதுதான் நாவல்.

இதனால் ஒட்டுமொத்த நாவலும் விவரணைகளாகவே இடம்பெறுகின்றன. காட்டையும் ஊரையும் அதன்வழியே கோனார்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஏக்நாத். இதில் இன்னும் சிறப்பு என்பது, நாவலின் விவரணைகளில் பயன்படுத்தப்படும் தமிழும் வார்த்தைகளும்தான். அப்படியே மண் மனம் கமழ, காட்டு மணம் கமழ மிகப் பிரமாதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பேச்சு வழக்கில் நெல்லை வட்டார வழக்கு சுத்தமாகக் கையாளப்பட்டுள்ளது. வட்டார வழக்கின் பயன்பாட்டை தேவைக்காக மட்டும் பயன்படுத்தி இருப்பது அழகு. இல்லையென்றால் முழுமையாக நாவலில் உட்புகமுடியாமல் போயிருக்கலாம். இவ்வழக்குக்கு ஈடாக கதை சொல்லியின் நடை அமர்க்களப்படுத்துகிறது.

நாவலின் காலம் 70கள் என்று கொள்ளுமாறு பல குறிப்புகள் உள்ளன. இன்று வாசிக்கும்போது காட்டில் வசிப்பது குறித்த ஏக்கத்தைக் கொண்டு வருவதில் இந்நாவல் வெற்றி பெறுகிறது என்றே சொல்லவெண்டும். (இந்த இடத்தில் தேவையில்லை என்றாலும் ஒன்று – நாவலில் ஓரிடத்தில் அனைவரும் சிவாஜி எம்ஜியார் பாடல்களைப் பாடும் இடம். அதுவும் எதோ ஒரு ஏக்கத்தைத் தந்த ஒன்றே.)

சில குறைகள் என்று பார்த்தால் – நாவல் வெறும் கதை சொல்லல் என்ற போக்குக்கு மேல் எழவே இல்லை. நாவலின் பின்னணியாக எவ்வித அரசியல் வரலாற்றுப் பின்னணியும் வரவில்லை. இப்படி நிச்சயம் வரத்தான் வேண்டுமா என்பது ஒரு பக்கம். இப்படி வராததால் நாவல் மிக மிக நேர்க்கோட்டுப் பாதையில் வெறும் நிகழ்வுகளைப் பட்டியலிடும் ஒன்றாகக் குறுகிப் போய்விடுகிறது. இன்னொரு குறை என்றால், வாசகர்களை ஊகிக்கவிடாமல் அதை நாவலாசிரியரே சொல்வது. இதனால் ஒரு வைரமுத்துத்தனம் நாவலில் வந்துவிடுகிறது. கெடைக்குப் போய்விட்டு நாள்கழித்து வரும் மகனுக்கு அம்மா கோழி அடித்துக் குழம்பு வைக்கிறாள் என்பதே போதுமானது. பல நாள் நல்ல சாப்பாடு சாப்பிடாதவனுக்கு எந்த ஒரு தாயும் செய்வது இதைத்தான் என்பது யாருக்கும் புரியும். தாயுள்ளம் இதை ஏற்கெனவே அறிந்திருந்தது என்று எழுதுவது ஒரு திணிப்பு. இதை வாசகனே புரிந்துகொள்ளும்போது வரும் ஒரு இன்பத்தை இவ்வரிகள் குலைக்கின்றன. இதைப் போன்ற பயன்பாடு நாவல் முழுக்க பல இடங்களில் வருகிறது. உச்சிமகாளியின் காதல் முயற்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கெடையை மேய்த்துக்கொண்டு காட்டைப் பற்றிய சித்திரங்களில் ஊர் பற்றிய நிகழ்வுகள் அதிகம் சொல்லப்படுவதும் ஒரு வகையில் சலிப்பே. கோனார்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த சித்திரம் நாவலில் உருவாகி வந்தாலும், மற்ற சாதிகளைப் பற்றிய விரிவான பதிவோ அவர்களுடனான உறவின் எல்லைகளோ சொல்லப்படவில்லை. எல்லா சாதியும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பது போன்ற சித்திரம் ஒன்று மட்டும் எப்படியோ மேலோட்டமாக உருவாகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாவல் நம்மைக் காட்டுக்குள் கொண்டு செல்கிறது என்பது உண்மைதான். காட்டைப் பற்றிய ஏக்கம் எல்லா நவீன மனங்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை இந்நாவல் சரியாகப் பிடித்துவிடுகிறது. அந்தக் காட்டைப் பற்றிய விவரணைகளில் நாவலாசிரியர் சொல்லும் பல விஷயங்கள், எத்தனை தூரம் இவர் காட்டைப் படித்திருக்கிறார் என்பதைப் புரியவைக்கிறது. காட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு எழுதுவது அல்ல, காட்டிலேயே வாழ்ந்து எழுதுவது. அவ்வகையில் இந்நாவல் ஒரு முக்கியமான பதிவுதான்.

நாவலை வாங்க: http://www.nhm.in/shop/1000000022589.html

Share