Tag Archive for நாவல்

ஆக்காண்டி

ஆக்காண்டி – தைரியமான நாவல். முக்கியமான நாவல். சில நாவல்களை எழுத தைரியம் தேவை. இது அந்த வகை நாவல். ஈழப் படைப்புகள் அனைத்தும் தமிழகத் தமிழர்களின் பார்வையில் முன்பெல்லாம் ஒரே வகையினதாகத் தெரிந்துகொண்டிருக்க, வாசு முருகவேலின் நாவல்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு வருகின்றன. ஒற்றைப்படைத் தன்மையிலிருந்து மேலேறி உள்முரண்களையும் அதே சமயம் ஈழக் குரலின் அடிநாதத்தை விட்டுவிடாமலும் இருக்கின்றன. இதனாலேயே அவருக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம்.

அடிப்படைவாதக் குரல்கள் என்று முத்திரை குத்தப்பட்ட குரல்களில் ஒன்று, இஸ்லாமியர்களையும் அதன் பயங்கரவாதத்தையும் நியாயமாக வேறுபடுத்திப் பார்க்கச் சொல்வது. இந்த நிதர்சனம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் குரலின் மீது அடிப்படைவாதக் குரல் என்று முத்திரை குத்தப்பட்டது. இது முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியலுக்கு உகந்ததாகவும் இருந்தது. வாசு முருகவேல் இந்தக் கருத்தாக்கத்தைத் தரவுகளுடன் கூடிய புனைவால் உடைக்கிறார். இதனாலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமும் வருகிறது. அதே சமயம் இவர், முற்போக்காளர்கள் சொல்லும் அடிப்படைவாதக் குழுவில் இருப்பவரும் அல்ல என்பது இவரை முழுவதுமாகக் கை கழுவ முடியாமல் அவர்களைப் படுத்துகிறது.

ஈழத் தமிழ் மக்கள், அங்கே வசிக்கும் இஸ்லாமியத் தமிழ் மக்கள் இருவருக்குமான முரண், பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் நாவல், இவர்கள் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கத்தையும் ஒருங்கே பேசுகிறது. அரசியலில் பகடைகள் எப்படி நேரம் பார்த்து வீசப்படுகின்றன என்பதை இந்த நாவல் தெளிவாக்குகிறது.

வாசு முருகவேலின் நாவல்களில் எனக்கிருக்கும் குறைகள் இந்த நாவலிலும் உண்டு. ஒன்று, புதிர் போலப் பேசிச் செல்வது. இது புரிந்தவர்களுக்குப் பெரிய வாசிப்பனுபத்தைத் தரும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அலுப்பைத் தந்துவிடக் கூடும். அடுத்தது, விரிவாகச் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போவது. இதை ஓர் உத்தியாகவே அவர் நினைவோடு செய்யக் கூடும். ஆனால் இதை அவர் பரிசீலிப்பது நல்லது.

இன்னொரு வகையில் பார்த்தால், எப்படா நாவல் முடியும் என்பதைவிட, நாவல் முடிந்துவிட்டதே என்று நினைப்பதுவும் நல்லதற்குத்தான். நிச்சயம் வாசித்துப் பாருங்கள். அகிலன், தாசன், அவன் தங்கைக்காகவாவது வாசியுங்கள்.

Share

புகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்

சில நாவல்களைப் படிக்கும்போது ஒரு புல்லரிப்பு ஏற்படும். அது சில சமயம் வெகுஜன நாவலாக இருக்கும். சில சமயம் தீவிர இலக்கிய நாவலாக இருக்கும். எதனால் புல்லரிப்பு ஏற்படுகிறது என்பது நாம் என்ன படிக்கிறோம், நம் மனநிலை என்ன, நம் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் பொருத்தது. இன்று சமூக ஊடகங்களில் எந்த ஒரு சீரியஸ் விஷயத்தையும் தொடர்ச்சியாகச் சொல்வதன் மூலம் அதைக் கேலிச் சொல்லாடலாக மாற்றிவிடலாம். எல்லையில் வீரர்கள் என்பதைச் சொல்லலாம். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதைச் சொல்லலாம். இப்படிச் சொல்வதற்கு ஏற்றமாதிரிதான் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்தக் கேலிச் சொல்லாடல் அதன் நிஜமான நோக்கத்துடன் சொல்லப்படுவதில்லை.

ஒரு நாவல் முழுக்க, பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? திரைப்படங்களில் பன்ச் வசனம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு படத்தின் வெற்றிக்கு அது உதவும் என்பதற்காகப் படம் முழுக்க பன்ச்சாக இருந்தால்? பிடிக்காது என்றுதானே நினைக்கிறீர்கள்? உண்மைதான். ஒருவேளை, அதாவது ஒருவேளை அப்படிப் படம் முழுக்க பன்ச்சாக இருந்து, அதுவும் மிகவும் நன்றாக இருந்துவிட்டால்? அது ஒரு கற்பனைத் திரைப்படமாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படி ஒரு கனவு நாவல்தான் புகார் நகரத்துப் பெரு வணிகன்.

உண்மையில் இது ஒரு பழிவாங்கும் படலம் உள்ள நாவல். பழி வாங்கும் படலம் நான்கு வரிகள் என்றால் நாலாயிரம் வரிக்குச் சொல்லப்படுபவை எல்லாம் தமிழனின் பெருமைகளே. கவனியுங்கள். தமிழின் பெருமை அல்ல. அதுவும் இருக்கிறது. ஆனால் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை சொல்லப்படுவது தமிழனின் பெருமைதான். அதுவும் ஆதாரத்தோடு. அதுவும் விளக்கமாக. மிக முக்கியமாக எந்த ஒரு இனத்தின் மீதும் எந்த ஒரு பகுதியின் மீதும் வெறுப்பைத் தூவாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இது கனவு நாவல் என்று புரிகிறதா?

எந்த ஒன்றைப் பற்றியும் விரிவான, மிக மிக மிக விரிவான செய்திகளைப் பட்டியலிட்டே தீருவது என்ற முடிவோடு நாவலை எழுதி இருக்கிறார் பா.பிரபாகரன். இவர் எழுதிய முதல் நூலான ‘குமரிக் கண்டமும் சுமேரியமும்’ ஒரு சூப்பர் ஹிட் புத்தகம். இந்த நூலில் பிரபாகரன் திகைக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில், ‘சாமி போதும்’ என்று அவரை அழைத்து வந்து காலில் விழுந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. படிக்கும் நமக்கு மூச்சு வாங்குகிறது. ஆனால் பிரபாகரன் அசருவதே இல்லை. விட்டால் இன்னும் ஆயிரம் பக்கங்களுக்குத் தமிழர்களின் பெருமைகளை அள்ளித் தெளித்துப் போய்க்கொண்டே இருப்பார் போல.

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை என்று சொன்னேன் இல்லையா? அது மிகைப்படுத்திச் சொன்னது அல்ல. சும்மா நானாக என் கற்பனையில் ஒரு உதாரணம் சொல்கிறேன். கப்பலில் பயணித்தார்கள். காற்று அடித்தது. திசையைப் பார்த்தார்கள். கப்பலோடி யோசித்தான். இந்த நான்கு வரிகளைச் சொல்ல வேண்டும் என்றால் பிரபாகரன் என்ன செய்கிறார் தெரியுமா? கப்பல் என்றால் அதில் எத்தனை வகை, என்ன என்ன வகை, ஒவ்வொன்றின் பெயர் என்ன என்று சொல்கிறார். பயணம் என்றால் எப்படிப்பட்ட பயணம் என்று ஒரு விளக்கம். காற்று என்றால் எத்தனை வகையான காற்று, எத்தனை வகையான திசை என்றெல்லாம் ஒரு பட்டியல். திசை என்றால் எத்தனை திசை என்று பட்டியல். கப்பலோடி என்றால், எத்தனை வகையான கப்பலோடிகள், ஒவ்வொருவரின் பெயர் என்ன, அவர்களுக்கு என்ன என்ன வேலை இப்படியான பட்டியல். நான் சொன்னது 1% கூட இல்லை! இப்போது யோசித்துப் பாருங்கள். நானூறு பக்க நாவலில் எத்தனை விளக்கங்கள் இருக்கும் என்று. எத்தனை பட்டியல் இருக்கும் என்று. கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியாவையே கையில் தந்துவிட்டார் பிரபாகரன். சேலை என்றாலும் பட்டியல், உணவு என்றாலும் பட்டியல், முலைக்கச்சை என்றால்கூட பட்டியல்தான். அவர் என்ன என்ன பட்டியல் இட்டிருக்கிறார் என்பதைத் தனியே தொகுத்தால் அவையே இருநூறு பக்கங்கள் வரும்.

ஈழம், சீனா என்றெல்லாம் செல்லும் நாவல், சீனாவைக் கொஞ்சம் நெருக்கமாகவே காட்டுகிறது. அதுவும் அந்தக் கால சீனா, அவர்களின் வணிகம், அவர்களின் வாழ்க்கை முறை என்று கொஞ்சம் விரிவாகவே சொல்கிறது. பட்டியலும் விளக்கமும் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, சீனர்களுக்கும் உண்டு!

தவறவிட்டுவிடக் கூடாத நாவல். தமிழர்களின் பெருமைக்கு மகுடம் தந்திருக்கிறார் பிரபாகரன். அதிலும் எந்த ஒரு மொழியையும் இகழாமல், இந்தியாவை வெறுக்காமல், நிஜமான தமிழ் உணர்வுடன் கூடிய நாவல் இது. இதற்காகவே இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்படவேண்டும். அத்தனை முக்கியமான நாவல் இது. Dont miss it.

ஆன்லைனில் அச்சுப் புத்தகமும், இபுத்தகமும் கிடைக்கும். அமேஸான், ஃப்ளிப்கார்ட், டயல் ஃபார் புக்ஸில் தேடிப் பாருங்கள்.

Share

கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்

வாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180

மிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.

பொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.

இந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.

கொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.

ஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.

மிக ரசிக்கத்தக்க நாவல்.

இந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.

அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்.
-தமிழ்நதி

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

பேட்டை – சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்

பேட்டை: சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்

தமிழ்ப் பிரபா எழுதி இருக்கும் நாவல், காலச்சுவடு வெளியீடு. நாவலின் முக்கியமான பலம், இதன் அசல் தன்மை. தன் வாழ்க்கையில் இருந்து மனிதர்களையும் கதைகளையும் எடுத்துக்கொண்டதால் நாவலாசிரியரின் நெஞ்சிலிருந்து உணர்வுபூர்வமாக முகிழ்ந்த நாவலாகிறது. இது ஒரு வகையில் பலம், சிறிய வகையில் பலவீனமும்கூட. ஆனால் அந்த பலவீனத்தைத் தாண்டி நாவலின் அசல் தன்மை, இந்த சுய சரிதைச் சாயலாம் கூடுதல் கனம் கொள்கிறது.

சென்னைத் தமிழ் இத்தனை சிறப்பாகக் கையாளப்பட்ட இன்னொரு நாவல் இருக்குமா என்பது சந்தேகமே. சென்னைத் தமிழோடு அதன் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கே உரிய தனித்துவத்தையும் பெறுவது நாவலின் மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனியே மெனக்கெட்டு விவரிக்காமல் கதை மற்றும் நிகழ்வுகளின் போக்கிலேயே அவை அவற்றுக்குரிய உச்சத்தைப் பெறும் வகையில் நாவல் எழுதப்பட்டுள்ளது.

சென்னையின் சேரிகளில் இருக்கும் கிறித்துவ தாழ்த்தப்பட்டவர்களின் கதைகளை இத்தனை அருகில் நான் வாசித்ததில்லை. அவர்கள் மதத்தில் கிறித்துவர்களாகவும் பண்பாட்டில் கிறித்துவ மற்றும் ஹிந்துக்களாகவும் வாழ்கிறார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொள்ளும் கிறித்துவர்களின் பண்பாடு ஒரு சான்று. மதத்தைப் பரப்ப நினைக்கும் சபைகளை இத்தனை உடைத்துப் போட்டு எழுதியது ஆச்சரியம்தான். அதனால் இது ஹிந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பதும் இல்லை. சேரிகளின் வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வெளிப்படையாகப் பேசும் நாவல். கூடவே ஹிந்து மதத்துக்காரர்களின் பிரச்சினைகளையும் சேரி வாழ் மக்களின் பார்வையில் நாவன் முன்வைக்கவும் செய்கிறது.

இடையில் ரூபன் நாவல் எழுதுவதாகச் சொல்லும் அத்தியாயங்கள் மட்டுமே நிலையில்லாமல் அலைபாய்கின்றன. சௌமியனின் ஆவி இறங்கிவிட்ட பின்பு ரூபனைச் சுற்றி நாவல் வேகம் கொள்கிறது. ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா, குணசீலன், இவாஞ்சலின் என பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கின்றன.

வட சென்னைக்கே உரிய பல குணங்களை நாவல் தொட்டுச் செல்கிறது. சுவரில் படம் வரைவது, கேரம் விளையாட்டு எனப் பல விஷயங்கள் நாவலில் வெறுமனே களம் என்கிற அளவில் இல்லாமல், கதையோடும் கதாபாத்திரங்களோடும் இடம்பெறுகின்றன.

பேட்டை, நல்ல முயற்சி.

Share

வெண்முகில் நகரம்

ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு நாவல்களின் ஒட்டுமொத்த சித்திரம் எவ்வகையிலும் எதனுடனும் நிகரற்றது. என்னால் இதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இதை ஒரு மனிதன் எழுதினான் என்பதே காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாக நிச்சயம் நிலைகொள்ளும். எழுதிச் செல்லும் இறையின் கைகளே கருவியைத் தேர்ந்தெடுக்கின்றன என்று தத்துவத்தின் வழியே ஜெயமோகன் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுவார்.

இதை எத்தனை பேர் உணர்ந்துகொண்டு படிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் படிக்கவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்நாவலைப் படித்துமுடித்த இந்நேரத்தில் இந்நாவல் தந்த நிறைவும் ஆச்சரியமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உள்ளமெல்லாம் வெண்முகில் நகரத்தில் பாத்திரங்கள் நிறைத்திருக்கின்றன.

சாத்யகியும் பூர்சிவரஸ்ஸும் கொண்ட எழுச்சி மிக்க சித்திரம் நான் கொஞ்சம் எதிர்பார்க்காதது. அதுவும் இறுதியில் அவர்களை சந்திக்க வைத்ததெல்லாம் நான் கொஞ்சம் கூட யோசிக்காதது. களத்தில் இரண்டு பேரும் முட்டிக்கொண்டு சாத்யகியால் கொல்லப்படப்போகும் பூர்சிவரஸ், முன்னர் ஒருமுறை சாத்யகியைக் கட்டித் தழுவியிருக்கிறான் என்பதே, சந்தேகமே அன்றி அசையச்செய்யும் உருவாக்கமே. இவையேதான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்றாலும், யாரென்றே தெரியாமல் போயிருக்கவேண்டிய இருவர் வரலாற்றின் சித்திரத்தில் இப்படி நிற்கும் காட்சி தரும் நிறைவை, ஒரு வகை அதிர்ச்சியை என்னால் சொல்ல முடியவில்லை.

திருதராஷ்டிரன் முன்னர் பாண்டவ கௌரவர்கள் கிருஷ்ணன் முன்னிலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி, உணர்ச்சிமயத்தின் உச்சம்.

முதற்கனல் தொடங்கி மழைப்பாடல் பிரயாகை எனப் பல்வேறு நாவல்களில் வரும் காட்சிகள் இந்நாவலில் சிறிய நீட்சியென பேசப்படுவதும், அன்றைய நிகழ்வுகள் இன்றைய புராணமாக எப்படி மையத்தைத் தாண்டிய அல்லது மையத்தை முற்றிலுமே இழந்துவிட்ட காவியமாக நிலைபெறுகிறது என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பார்ப்பதும் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. ஏதோ நாம் காலத்தில் மகாபாரதத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது போல.

என்னளவில் பிரயாகையில் கொஞ்சம் நலிந்திருந்த நகைச்சுவை சார்ந்த பகுதிகள் இந்நாவலில் – மிக்குறைந்த அளவே வந்தாலும் – மிகக் கச்சிதமாக உள்ளன. அதிலும் த்ரௌபதி ‘ஆறாவது இளவரசனைப் பார்க்கிறேன் எனக்குத்தான்’ என்று சொல்லும் இடத்தில் – ஜெயமோகன் எழுதுவது போல – வெடித்துச் சிரித்துவிட்டேன்.

கிருஷ்ணரும் பலராமரும் வருவதற்காக ஏற்பாடு செய்யும் நூற்றுவனின் அத்தியாயம் முழுக்க நல்ல நகைச்சுவை. இதுவும் ஒரு காவியத்தின் முக்கியமான சுவையே என்று ஜெயமோகன் முன்பிருந்தே சொல்லி வருவதை நினைத்துக்கொண்டேன்.

பல வகைகளில் அடுத்து வரப்போகும் களங்களுக்கான காட்சிகளை மிக ஆழமாகத் திறந்து வைத்திருக்கிறது வெண்முகில் நகரம். பால்ஹிக நாட்டையும், சிபி நாட்டையும் விவிரித்த விதமெல்லாம் அட்டகாசம். படைப்பூக்கத்தில் உச்சத்தில் இப்படி ஒருவரால் தொடர்ந்து நிற்கமுடியும் என்பதே அசரடிக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் ஜெயமோகனை இளையராஜாவோடு ஒப்பிட்டுக்கொள்கிறேன். ஏனென்றே தெரியவில்லை. ஆனால் இப்படி அடிக்கடி ஆகிவிடுகிறது.

ஜெயமோகன் இதை எழுதும் காலத்தில் நான் அதை வாசிக்க நேர்ந்த அந்த இறைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. வேறென்ன என்று சொல்லத் தெரியவில்லை.

Share

Thooppukkaari – Malarvathi’s Novel

தலித் நாவல்களை தலித்துகள் எழுதுவதுதான் அழுத்தம் நிறைந்ததாகவும் உணர்வுபூர்வமான வலியைப் பதிவு செய்வதாகவும் இருக்கும் என்றும், தலித்துகள் அல்லாத ஓர் எழுத்தாளர்கூட சிறப்பான முறையில் தலித் நாவலைப் படைக்கமுடியும் என்றும் இரண்டு கட்சிகள் எப்போதுமே உண்டு. இந்த முறை தலித் அல்லாத, ஆனால் தலித்தின் வாழ்க்கையை நெருக்கமாக உணர்ந்து வாழ்ந்த வலியை அனுபவித்த ஒரு படைப்பாளி, அதிலும் ஒரு பெண் இந்த நாவலை எழுதியிருப்பது இந்நூலுக்கு அதிக்கப்படியான முக்கியத்துவத்தை அளிக்கிறது. நாவலின் முதலும் கடைசியுமான ஒரே முக்கியத்துவம் இது மட்டும்தான் என்பதுதான் சோகம்.

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்ததைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களிலும் நாவலாசிரியர் மலர்வதியின் பெயரும், நாவல் பெயரும் அடிபடத்துவங்கியதும், அனைவரும் இந்நூலைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். 2011ல் வெளியான நூல் நல்ல கவனம் பெற்றது 2013ல்தான்.

வாழவே வழியில்லாத நிலையில் ஒரு ’நாடாத்தி’ (கனகம்), மலம் அள்ளும் துப்புரவு வேலைக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் போராட்டங்களே கதை. அந்தப் பெண்ணை எல்லாருமே தூப்புக்காரி என்றே அழைக்கிறார்கள். அந்தப் பெண்ணின் மகள் (பூவரசி), மரியாதையற்ற இத்தொழில் இருந்து வெளிவந்தாரா என்பதுதான் கதையின் உச்சம். நூல் முழுக்க நாகர்கோவில் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. படிக்க ஆரம்பித்த உடனேயே சட்டெனத் தடுமாற வைக்கும் வட்டார வழக்கு. பல சொற்கள் பலருக்கும் புரியாமல் போகும் வாய்ப்பு அதிகம். வட்டாரச் சொற்களுக்கான பொருளடைவு நாவல் முடிந்தபின்பு கொடுக்கப்பட்டுள்ளது. அது கொடுக்கப்பட்டிருப்பதே நாவல் முடிந்தபின்புதான் பலருக்கும் தெரிந்திருக்கும். அதை முதல் பக்கங்களிலேயே கொடுத்திருக்கலாம். 

மலர்வதியின் இரண்டாவது நாவல் இது. இன்னும் நாவல் வடிவம் மலர்வதிக்குக் கைக்கூடவில்லை என்பது தெரிகிறது. நாவல் என்பது வெறும் கதை சொல்லல் அல்ல. ஆவணப் பதிவு மட்டும் அல்ல.

இந்நாவலில், கதையோடு தொடர்ந்து இடையிடையே வரும் தத்துவங்கள் கதையோடு சம்பந்தப்படாமலோ அல்லது மிகச் சம்பிரதாயமாகவோ சொல்லப்படுகின்றன.  நாவலை மையமாக வைத்து வாசிகன் யோசிக்க வாய்ப்பளிக்காமல், அனைத்தையும் நாவலாசிரியரே சொல்லிவிடுவதால் அவை பெரும்பாலும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கதையும் பெரும்பாலும் யூகிக்கத்தக்கதாகவே இருக்கிறது. அதிலும் கதையின் உச்சத்தில் வரும் இறுதிப் பக்கங்கள் முழுக்க முழுக்க நாடகத்தனமாகவும், வலிந்து திணிக்கப்பட்ட முற்ப்போக்குத்தனம் கொண்டதாகவும் உள்ளன.

நாடார் பெண் ஒருவர் தலித் வாழ்க்கை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்ததுடன் தூப்புக்காரியாகிறார். இப்பின்னணியில் நாவலை வாசிக்கவேண்டி உள்ளதால், இந்நாவல் பெரும்பாலும் பொருளாதார அடுக்கோடு சம்பந்தட்ட ஒன்றாகவே தோற்றம் கொள்கிறது. அதோடு ஏன் ஒரு நாடார் பெண் மலம் அள்ளப் போனார் என்பது பற்றிய ஆழமான குறிப்புகள் இல்லை. என்னதான் வறுமை என்றாலும், தலித் அல்லாத ஒருவர் இவ்வேலைக்குச் செல்வாரா என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது. ஒரு மருத்துவமனையில் துப்புரவு வேலை என்பதை ஏற்கமுடிகிறது. ஆனால் நாவல் முழுக்க வரும் மலம் பற்றிய விவரிப்புகள், ஏன் அந்த மருத்துவமனையில் அப்படி உள்ளது என்ற ஐயங்களை ஏற்படுத்துவதோடு, இந்த வேலையை எப்படி ஒரு நாடார் பெண் ஏற்றுக்கொண்டார் என்றும் யோசிக்க வைக்கிறது.

தூப்புக்காரிக்கு வரும் கஷ்டங்கள் அனைத்துமே நாடகத்தன்மை கொண்டதாகவே அமைகின்றன. இடையிடையே அவருக்குக் கிடைக்கும் மனித உதவிகளும்கூட, அடுத்தடுத்து இயற்கையாகவே தகர்ந்துவிடுவது, நாவலில் சோகத்தை வலிந்து ஊட்டுவதாகத் தோற்றம் தருகின்றது. அதேசமயம், படித்து முன்னேறினால் இத்தொழில் இருந்து விடுபட்டு வாழ்வில் முன்னேறலாம் என்ற நம்பிக்கையைச் சொல்வதில் மலர்வதி பின்வாங்கவில்லை. இது நம்பிக்கை தரக்கூடியதுதான். 

தூப்புக்காரியாக வேலை செய்தாலும், தன் மகளுக்கு வரும் மாப்பிள்ளை நிச்சயம் சக்கிலியராகவோ வேற்று சாதி ஆணாகவோ இருக்கக்கூடாது என்று கனகம் எண்ணுவதும், அதையே படித்த மகள் பூவரசி எண்ணுவதும் அப்படியே நாவலில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் யதார்த்தம். வழக்கம்போல, மேல் சாதி ஆண் தன் மனத்தைத் திறந்து காட்டாதவனாகவும், சாக்கடை சுத்தம் செய்யும் சக்கிலியரோ (மாரி) பல துன்பங்களுக்குப் பின்பும் தூய்மையான அன்பைச் செலுத்துபவராகவும் வருகிறார். இதில் நமக்கு முக்கியமாகத் தோன்றுவது, பூவரசியின் எண்ணங்களே. 

கற்பு, ஒழுக்கம் போன்றவற்றுக்கு எந்த தனிப்பட்ட அர்த்தமும் இல்லை என்பதை இந்நாவலில் இரண்டு இடங்களில் பார்க்கமுடிகிறது. ஒன்று, சக்கிலியராக வரும் மாரியின் தொடர்புகள். இன்னொன்று, பூவரசி மனோ உடலுறவு. ஏன் திடீரென்று மாரி இறந்துபோகிறார், அதற்குப் பின்பு ஏன் நாவல் எவ்வித யதார்த்தமும் இல்லாமல் (அதற்கு முன்பும் பெரிய அளவில் யதார்த்தம் இருந்துவிடவில்லை என்பது வேறு விஷயம்) அலைபாய்ந்து போகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. நாவல் என்பதற்கு ஒரு தொடக்கம், ஒரு முற்போக்கு முடிவு, நடுவில் கதை என்பன போன்றவை தேவை என்ற கற்பிதங்கள் கலைந்துபோன இச்சூழலில் இந்நாவல் அதே பழைய பாதையில் பயணிக்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். இந்தக் கற்பிதங்களில் இருந்து விடுபட்டு, மொழி நடையில் கூடுதல் கவனம் செலுத்தி, ஒரு நல்ல எடிட்டர் மூலம் நாவல் நன்கு எடிட் செய்யப்படுமானால், அடுத்த நாவலில் மலர்வதி அதிகம் மிளிரக்கூடும்.

இதற்குமுன்பு கிறித்துவ மதம் தொடர்பான மூன்று கட்டுரைத் தொகுதிகள் எழுதியிருக்கும் மேரி புளோரா என்னும் மலர்வதிதான் இந்நாவலின் நூலாசிரியர். தோழர் பொன்னீலனும் மேலாண்மை பொன்னுசாமியும் இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் ‘தூப்புக்காரி’ நாவலை வாசித்தால், இந்நூல் வேறொரு வகையில் ஆவணமாகும்.

தூப்புக்காரி, அனல் வெளியீடு, மலர்வதி, விலை ரூ 75, பக் 136.

ஆனலைனில் வாங்க இங்கே செல்லவும்.

Share