Tag Archive for திரைப்படம்

அதே கண்கள்

அதே கண்கள் – முகில் நண்பர். தூத்துக்குடிக்காரர். எனவே கிட்டத்தட்ட திருநெல்வேலிக்காரர். 🙂 ஸ்க்ரிட்ப் கன்சல்டண்ட்டாக இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார். தனிப்பட்ட வகைப் பழக்கத்தில் முகிலின் பலம் என்று நான் நினைப்பது – அவரது ஹ்யூமர். தன் பலத்தைத் திரைப்படத்தில் கொண்டு வருவது ஒரு கலை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதே கண்கள் படத்தில் முகிலுக்கு இந்த இரண்டும் சரியாக வாய்த்திருக்கின்றன. இந்த அணிக்கு என் வாழ்த்துகள்.

அதே கண்கள் – த்ரில்லர் வகை திரைப்படம். ஆஹோ ஒஹோ என்று புகழ்த்தக்க ஒரு படமல்ல. அதே சமயம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்க ஒரு படமும் அல்ல. தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.

அதே சமயம் ஏன் இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கவில்லை என்று யோசித்தால் –

* நடிகர்கள் தேர்வு முதல் சொதப்பல். கலையரசனால் ஒரு அளவுக்கு மேல் படத்தைத் தூக்கிக்கொண்டு போகமுடியவில்லை. மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். ஆனால் முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்க இவரால் முடியவில்லை.

* படத்தில் ஏமாற்றும் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு அமெச்சூர் ரகம். நகைக்கடையில் அவர் அவமானப்படுத்தப்படும் ஒரு காட்சியில் மட்டும் அத்தனை யதார்த்தம். மிடுக்குடன் வரவேண்டிய மற்ற காட்சிகளில் எல்லாம் ரொம்ப சுமாராகவே நடித்திருந்தார். ஒரு பலமான நடிகை நடித்திருக்கவேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போல.

* மிகவும் கணிக்கத்தக்க கதை மற்றும் திரைக்கதை. அதிலும் யார் கொலைகாரர் என்ற தெரிந்த பின்பும் நீளும் திரைக்கதை.

* பார்வையற்றவர்கள் தொடர்பாக வரும் கதைக்குள் வருவதற்கு, ஹீரோவுக்கு பார்வை இல்லாமல் இருப்பதும், மீண்டும் பார்வை வருவதும் என அலைபாயும் முதல் அரை மணி நேரக் காட்சிகள்.

* மிக மோசமான இசை, ஒளிப்பதிவு.

* மிக நீளமான ஒரே மாதிரியான காட்சிகள்.

இந்த அத்தனை அலுப்பையும் தன்னந்தனியாளாகப் போக்குகிறார் பால சரவணன். இவர் வந்ததும்தான் இறுக்கம் தளர்ந்தது. ஏன் அத்தனை நேரம் இறுக்கமாக இருந்தோம் என்பது பதிலற்ற கேள்வி! பால சரவணனின் மேனரிஸத்துக்கேற்ற வசனங்கள். இந்த வசனங்களில் முகிலின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று படம் பார்க்கும்போது தோன்றியது. இங்கேயும் இத்திரைப்படம் பரவலாக பாஸிட்டிவ் பாராட்டுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. திரைத்துறையில் முகில் வெற்றி பெறவும் அழுத்தமான தடம் பதிக்கவும் வாழ்த்துகள்.

Share

2014 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

2013ல் நான் வழங்கிய விருதுகளை, தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒவ்வொரு தமிழன் வரை அனைவரும் ஏற்றுக்கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. அந்த வரிசையில் 2014 – திரைப்பட விருதுகள் இங்கே. 

உண்மையில் எல்லா விருதையும் லிங்காவுக்கும் கோச்சடையானுக்கும் கொடுப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால் அநியாயமாக கீழே உள்ள பட்டியலை இட்டுள்ளேன். பார்த்து வளர்ச்சி பெறுக. 

 

சிறந்த திரைப்படம்: ஜிகர்தண்டா

சிறந்த நடிகர்: ரஜினிகாந்த் (லிங்கா) (Cool friends!)

சிறந்த நடிகை: யாருமில்லை

சிறந்த புதுமுகம்: துல்கர் சல்மான் (வாயைமூடிப் பேசவும்)

சிறந்த இயக்குநர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த கதை: ரஞ்சித் (மெட்ராஸ்)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: லிங்கா

சிறந்த வில்லன்: William Orendorff (லிங்கா)

சிறந்த நகைச்சுவை நடிகர்: சூரி (பல படங்கள்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): அனிருத் (வேலையில்லா பட்டதாரி, கத்தி)

சிறந்த ஒளிப்பதிவு: ரத்னவேலு (லிங்கா)

சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகை: ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயண் (மெட்ராஸ்)

சிறந்த பாடகர்: ஏ.ஆர். ரஹ்மான் (இந்தியனே, கோச்சடையான்)

சிறந்த பாடகி: சின்மயி (இதயம் நழுவி நழுவி, கோச்சடையான்)

சிறந்த பாடல்: இதயம் நழுவி நழுவி (கோச்சடையான்)

சிறந்த குத்துப்பாட்டு: மஸ்காரா போட்டு (சலீம்)

சிறந்த பாடலாசிரியர்: கானா பாலா (மெட்ராஸ்)

சிறந்த வசனம்: கே.எஸ். ரவிக்குமார் (கோச்சடையான்)

சிறந்த புதிய முயற்சி: கோச்சடையான்

சிறந்த ஓவர் ஆக்டிங்: துளசி (பண்ணையாரும் பத்மினியும்)

சிறந்த அண்டர் ஆக்டிங்: விஜய் ஆண்டனி (சலீம்)

சிறந்த காணாமல் போன நடிகர்: சிம்பு

நன்றாக வந்திருக்கவேண்டியவை: சதுரங்க வேட்டை, ஆடாம ஜெயிச்சோமடா.

பார்க்க முடியாதவை: மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று காளைகளும், பண்ணையாரும் பத்மினியும், மஞ்சப்பை, சைவம், அஞ்சான்.

Share

2013 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

என் பட்டியல் இது:

 

விருதுகள்

சிறந்த திரைப்படம் – மதயானைக் கூட்டம்

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – சூது கவ்வும்

சிறந்த இயக்குநர் – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த திரைக்கதை – விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வசனம் – நலன் குமாரசாமி (சூது கவ்வும்)

சிறந்த கதை – கடல் (ஜெயமோகன்)

சிறந்த பின்னணி இசை – இளையராஜா (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

சிறந்த ஒளிப்பதிவு – செழியன் (பரதேசி)

சிறந்த படத்தொகுப்பு – கிஷோர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த கலை இயக்கம் – லால்குடி ந‌. இளையராஜா (விஸ்வரூபம்)

சிறந்த நடன இயக்கம் – பண்டிட் பிர்ஜு மஹாராஜ் (விஸ்வரூபம்)

சிறந்த பாடல் இசை – ஏ.ஆர். ரஹ்மான் (மரியான், கடல்)

சிறந்த பாடல் ஆசிரியர் – ஏகாதசி (மதயானைக் கூட்டம்)

சிறந்த நடிகர் – பாலு மகேந்திரா (தலைமுறைகள்)

சிறந்த நடிகை – ஷெல்லி கிஷோர் (தங்கமீன்கள்)

சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)

சிறந்த குணச்சித்திர‌ நடிகை – விஜி சந்திரசேகர் (மதயானைக் கூட்டம்)

சிறந்த வில்லன் நடிகர் – ராகுல் போஸ் (விஸ்வரூபம்)

சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (என்றென்றும் புன்னகை)

Share

மதயானைக் கூட்டம்

சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம், சுப்ரமணியபுரம், காதல் போன்றவை. அந்த வகையில் இன்னொரு திரைப்படம், அதுவும் வம்சம், விருமாண்டி படங்களின் பலவீனங்கள் இல்லாமல் சிறப்பான ஒரு திரைப்படமாக ‘மதயானைக் கூட்டம்’ உருவாகியிருக்கிறது.


ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள்ளான உணர்ச்சிகள், அவர்களின் வாரிசுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ நகர்ப்புற எலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சொன்னது என்றால், மதயானைக் கூட்டம் அதே பிரச்சினைகளை கிராமத்தையும் ரத்தமும் சதையுமான மனிதர்களை முன்வைத்துப் பேசுகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் செய்யத் தவறிய நுணுக்கங்களோடு.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதையைச் சொல்லத் தொடங்கும் விதமும் அக்கதை மெல்ல நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமும் அழகு. திரையெங்கும் உண்மையான மனிதர்களை உலவவிட்டது போன்ற நடிகர்களின் கச்சிதமான தேர்வு, நடிப்பு. நல்ல பின்னணி இசை (ரகுநந்தன்). காட்சிக்கேற்ற பாடல்கள். மிகத் திறமையான பாடல் வரிகள் (ஏகாதசி). மனதை அள்ளும் ஒளிப்பதிவு. அதிலும் காட்சிகளின் மாறும் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் என எல்லாவற்றிலும் மதயானைக் கூட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது.

திரைக்கதையை மிகச் செறிவாக மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். ஒரு எதிர்பாராத சாவும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கொலைகளும் நம்மை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. இந்த சாவுக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான விதம் தனியே சொல்லப்படவேண்டியது. பொதுவாகவே இயக்குநர்கள் நுணுக்கமான காட்சிகளில் அத்தனை கவனம் செலுத்துவதில்லை. கதை நிகழும் இடம், அதோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்கள் பேச்சு வழக்கு, அவர்களது பாரம்பரியம் என எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்துப் பதிவு செய்வது மிக முக்கியமானது. பார்வையாளர்கள் இதன் எல்லா நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் இந்த நுணுக்கங்கள் தரும் ஒட்டுமொத்த மனப்பதிவு அபாரமானது. அதையே மதயானைக் கூட்டம் சாதித்திருக்கிறது.


நம்மிடம் கதை இல்லை, எல்லாக் கதைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்று சொல்வதெல்லாம் ஹம்பக் என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது. எத்தனையோ கதைகளை நம் மண்ணோடு பொருத்தி மீண்டும் மிக அழகாக எடுக்கலாம் என்பதற்கு மதயானைக் கூட்டம் இன்னொரு உதாரணம். அந்த வகையில் இது முக்கியமான படம்.


ஒரு சில குறைகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்னும் அளவுக்கு திரைப்படம் சிறந்து விளங்குகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படத்துக்கு இசை ரகுநந்தன். இளம் படைப்பாளிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது.


இப்படத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வீரச் சந்தானம் (அவள் பெயர் தமிழரசி), வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்) வரிசையில் இப்படத்தில் வேல ராமமூர்த்தி. விருதும் பெற்றுவிடுவார்.
பாடலாசிரியர் ஏகாதசி இதற்குமுன் என்ன என்ன பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்படத்தில் பாடல்களை மிகச் சிறப்பாக, படத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறார்.


இப்படம் தேவர்களின் ஜாதிப் பெருமையைப் பேசுகிறது என்று மேம்போக்கான விமர்சனங்கள் எழக்கூடும். நம் வாழ்க்கையைப் பேசவேண்டுமென்றால், அதற்குரிய சில குணங்களை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அதை மட்டுமே இந்தப் படம் செய்திருக்கிறதே ஒழிய, வலிந்த ஜாதிப் புகழ் மாலைகள் இல்லை. மிகத் தெளிவாக இப்படம் ஒரே ஜாதிக்குள், அதாவது தேவர்களுக்குள் நிகழும் மோதலையே காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர்களே அவர்களைப் பற்றிய மிதமிஞ்சிய புகழுரைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களே அவர்களைப் பற்றிய இகழ்ச்சியையும் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறி மோதிக் கொள்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளாகிக் கழுத்தை அறுத்துக் கொள்கிறார்கள்.


மிகச் சாதாரணமான கதையை, அதற்குரிய களத்தில், அக்களத்துக்குரிய விவரணைகளோடு வைத்து, நம் படத்தை நாம் திரையில் பார்க்கிறோம் என்கிற பெருமிதத்தைக் கொண்டு வந்திருக்கிறது மதயானைக் கூட்டம். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருப்பதால், படத்தோடு எளிதில் ஒன்றிவிட முடிகிறது. ஆடுகளத்தில் வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறந்த இயக்குநர் விருது நிச்சயம். இயக்குநர் விக்ரம் சுகுமாரனும், தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்

Share

பரதேசி பற்றி நாலு வரி

 

* தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் பிரச்சினையை பிரதிபலிக்கவேண்டிய படம், கிறித்துவ மதமாற்றத்தைச் சொல்லும் படமாக வந்ததில், ஓர் ஹிந்துத்துவ ஆவணமாக ஆகிப் போனதில், வருந்தவா மகிழவா எனத் தெரியவில்லை.

* டேனியலுக்கு இப்பேற்பட்ட துரோகத்தை, அநியாயத்தை பாலா செய்திருக்கவேண்டாம்.

*முதல் பாதியில் நடிப்பு அதீதம். இசை அதீதம். பார்க்க சகிக்கவில்லை. முதல் பாதியில் படத்தில் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியோ வெறும் தொகுப்பாகப் போய்விட்டது. 

* நாஞ்சில் நாடனுக்கும் செழியனுக்கும் அந்த மூதாட்டிக்கும் (என்ன ஒரு யதார்த்தம்) வாழ்த்துகள்.

Share