Tag Archive for ஹிந்துத்துவம்

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியல் காலகட்டம்.

இந்த மூன்று காலகட்டங்களிலும் சாவர்க்கரின் பங்களிப்பை ஒரு திரைப்படத்துக்குள் கொண்டு வருவது பெரிய சவால். சாவர்க்கரைப் பற்றி மட்டும் திரைப்படம் எடுத்துவிடமுடியாது என்பது இதில் இன்னொரு பிரச்சினை. சாவர்க்கரால் நிகழ்ந்தவை, சாவர்க்கரால் தூண்டப்பட்டவர்கள் செய்த புரட்சிகள் என எல்லாவற்றையும் காண்பித்தாக வேண்டும். இப்படிக் கம்பி மேல் நடக்கும் வித்தையில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.

படத்தை சாபேகர் சகோதரர்களின் வீரச் செயல்களில் ஆரம்பித்தது நல்ல திரைக்கதை. சாபேகர் சகோதரர்களின் தியாகத்தையும் சாவர்க்கர் சகோதரர்களின் தியாகத்தையும் நான் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அரசின் ஒடுக்குமுறைகளில் சிக்குவது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. அதிலும் சாபேகர் சகோதரர்கள் மூவரும் ஒரே வாரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டதெல்லாம் எப்பேற்பட்ட பலிதானம்!

ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அவசரமாகக் கதையைச் சொல்ல நினைக்காமல், ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக நிதானமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர். ஒரு திரைப்படமாக இது உயர்ந்து நிற்பது இந்த உத்தியால்தான். 2001ல் ஹிந்தியில் வந்த சாவர்க்கர் திரைப்படத்தைச் சில மணித்துளிகள் பார்த்தேன். வெறும் வசனங்களால் ஆன படம் அது. ஆனால் இத்திரைப்படம் காட்சிகளாலும், தீவிரமான ஆழமான சுருக்கமான வசனங்களாலும் ஆனது.

சாவர்க்கரின் குடும்பத்தின் தியாகத்தை எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் வைத்தது சிறப்பு. கணேஷ் சாவர்க்கர் தன் தம்பி விநாயக் (வீர) சாவர்க்கரிடம், என்னை ஒரு முறை தழுவிக்கொண்டு விடை கொடுக்க மாட்டாயா என்று கேட்கும் தொடக்க காட்சியில் உணர்ச்சிவசப்பட்டேன். அண்ணன் தம்பிகளின் இந்த உணர்ச்சிப் போராட்டத்தை, சொற்பமான காட்சிகளில் கடைசி வரை சிறப்பாகக் காண்பிக்கிறார் இயக்குநர்.

இண்டியா ஹவுஸ் என்ற பெயர் தரும் கிளர்ச்சியை, இந்திய சுதந்திரத்தின் ஆயுதப் போராட்டத்தை அறிந்தவர்கள் உணர்வார்கள். சாவர்க்கர் இண்டியா ஹவுஸில் ஷ்யாமாஜியுடன் சந்திக்கும் காட்சியெல்லாம் அபாரம். அங்கே ஆயுதமேந்திப் போராட மண்டையம் ஆச்சார்யா, மதன்லால் திங்ரா என்ற பெரும்படையே இருக்க, அனைவரும் ஒன்று கூடி அங்கேயே பெரும் போராட்டத்துக்கான விதையை விதைக்கிறார்கள். ஆங்கில அரசின் மண்ணிலேயே முதல் அரசியல் கொலை நிகழ்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தயாரிக்கும் கையேட்டைக் கைப்பற்றுகிறார் சாவர்க்கர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் குதிராம் போஸ் குண்டு வீசுகிறார். வரலாற்றின் நெடுக நடந்த இந்த நிகழ்வுகளை எப்படித் திரைக்கதையாக்கினார்கள் என்பது ஆச்சரியம்தான். தொடக்க காட்சி முதல் சார்வக்கர் அந்தமான் செல்லும் இடைவேளை வர துளிகூட தொய்வில்லை. இத்தனை ஆவேசமான திரைக்கதையை நான் எதிர்பார்க்கவில்லை.

இந்திய சுதந்திர ஆயுதப் போராட்டத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு இத்திரைப்படம் வெறும் நேம் டிராப்பிங் அனுபவமாக உறையக் கூடும். ஒவ்வொருவரும் தூக்கிலிடப்படும் காட்சி இரண்டு நொடிகளே வருகின்றன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பெரும் வரலாறு உள்ளது. தூக்கில் தொங்கவிடப்படுபவர்களின் வயது சராசரியாக இருபது. மீசை வளரும் முன்னே ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சாகிறார்கள். இக்காட்சிகள் இந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் மேடை நாடகப் பாணியில் இருந்தாலும் நம்மை அசைத்துப் பார்க்கிறது.

அந்தமானில் சாவர்க்கர் படும் வேதனைகள் இடைவேளைக்குப் பிறகான ஒரு மணி நேரத்தில் காட்டப்படுகின்றன. அங்கே சாவர்க்கர் அடையும் மனரீதியான நெருக்கடிகள் சிறப்பாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அதிலும் ரெஜினால்ட் கிரடாக்கும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் காட்சி அபாரம். ஆனாலும், அந்த நெருக்கடியிலும் சாவர்க்கர் அங்கே இருந்தபடியே சிறைக்குள் ஆற்றிய பெரும் சாதனைகள் சரியாகக் காட்டப்படவில்லை. சிறிய சிறிய காட்சிகளாக அவை நகர்ந்து போகின்றன. இதை இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம். அதேபோல் அந்தமானில் நடந்த கர்வாப்ஸியின் அவசியத்தையும் இன்னும் சிறப்பாகப் படமாக்கி இருக்கலாம். ஆனால் சாவர்க்கர் அந்தமானில் பட்ட கஷ்டங்களை மட்டும் காட்டவேண்டும் என்று அணுகி இருக்கிறார். ஒருநோக்கில் அதிலும் தவறில்லை என்றே சொல்லவேண்டும்.

படத்தின் அடுத்த நகர்வு, காந்திஜி கொலை காலகட்டம். இப்போது சாவர்க்கரின் வீடு, ஆயுதம் ஏந்திப் போராடும் வீரர்களின் உறைவிடம் போல ஆகிறது. கோட்ஸே உட்பட. காந்தி கொல்லப்படுகிறார். சாவர்க்கர் கைதாகிறார். இவையெல்லாம் டாக்குமென்ட்ரி போலச் செல்கிறது. மேடை நாடகப் பாணி என்றாலும், இதையும் சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இயக்குநராகவும் நடிகராகவும் ரந்தீப் ஹூடா செய்திருப்பது மாபெரும் சாதனை. சாவர்க்கரைப் பற்றிய சிறப்பான திரைப்படம் இது. ரந்தீப் ஹூடா சாவர்க்கராகவே மாறி இருக்கிறார். சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை இப்படி ஒரு திரைக்கதையாக மாற்றியதற்காக இவரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதே போல் சாவர்க்கரின் 1857 புத்தகம் எப்படி ஆயுதப் போராட்டக்காரர்களின் கீதையாக மாறியது என்பதைக் காட்சிரீதியாக அட்டகாசமாகப் படமாக்கி இருப்பதையும் பாராட்டவேண்டும்.

இந்தத் திரைப்படத்தின் போதாமைகள் என்ன? இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய சில செய்திகள் அவசர அவசரமாகக் கடந்து போவது. சில நிகழ்வுகள் முன்னும் பின்னும் இருப்பது. சாவர்க்கர் போன்ற ஒரு தலைவரின் படத்தில் இதைத் தவிர்க்க முடியாது.

இப்படத்தின் பெரிய சறுக்கல் எது? காந்தியும் நேருவும் கோகலேவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம். காந்தியை ஒரு கோமாளி போலவும், ஹிந்துக்களை வஞ்சித்தவர் போலவும் காண்பிக்கிறார்கள். இது அரசியல்ரீதியாகவும் நிஜத்திலும் தவறு. இண்டியா ஹவுஸிலும், பின்னர் சாவர்க்கரின் வீட்டிலும், காந்தியும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் வசனங்களில் சாவர்க்கர் பேசுவது, காந்தியின் மீது வன்மத்தைக் கொட்டுவது போல் இருப்பது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. எனக்குத் தெரிந்து நிஜத்தில் சாவர்க்கர் தன்னுடைய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்தில் மகாத்மா காந்திஜி என அவரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். திரைப்படத்தில் கோகலே கோமாளி போல் சிரிப்பது அனாவசியம். நேருவும் அப்படியே. காந்தியைத் தவிர மற்றவர்களைப் பற்றிய காட்சிகள் எல்லாம் ஓரிரு நொடிகளே வருகின்றன என்றாலும் தவிர்த்திருக்கலாம்.

இந்தியாவுக்கான சுதந்திரம் பற்றி காந்தியின் அஹிம்சைப் போராட்டப் போராளிகள் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்கு ஆயுதப் போராளிகள் சொல்லப்படவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை. இந்த இரண்டு வழிகளும் சேர்ந்தே நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன என்பதுவும் உண்மை. இந்தியா போன்ற ஒரு நாட்டில் காந்தியைப் போன்ற ஒருவரே மக்கள் தலைவராக இருக்கமுடியும் என்பதும் உண்மை. ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் பெயர்கள் கூட நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டதெல்லாம் அரசியல். அந்தப் பெருங்குறையை இத்திரைப்படம் ஓரளவுக்குக் குறைக்கிறது.

Share

வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை

வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை.

இந்தக் கட்டுரையில் அரவிந்தன் நீலகண்டன், தொண்டன் பத்திரிகையை சந்திரஹாஸ வாளுடன் ஒப்பிடுகிறார். பொதுவாகவே அரவிந்தனின் இது போன்ற ஒப்பீடுகள் மிக ஆழமான ஒன்றாக இருக்கும். வரலாற்றில், புராணத்தில், இந்திய/ஹிந்து மரபில் இருக்கும் ஒன்றுடன் வரலாற்றைப் பிணைப்பது அவரது பாணி. இதன் மூலம் அவர் வெளிக்கொண்டு வர நினைக்கும் வரலாற்றுடனான மரபில் உரையாடலை அவர் தொடர்ந்து தரப்போகும் உதாரணங்களில் நிலைநிறுத்துவார். எனவே இது வெறும் ஒப்பிடுதல் என்கிற வாள் சுழற்றலைத் தாண்டிச் சென்றுவிடும். இந்தக் கட்டுரையும் இப்படியே.

தொண்டன் இதழ் முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை என்பதுவே அரவிந்தன் சொல்லித்தான் நான் அறிந்துகொண்டேன். தொண்டனின் தேவையையும் அருமையையும் திருவிக போன்றவர்களின் கூற்று மூலம் முன்வைப்பதும் நல்ல சாதுர்யமான பாணி. தமிழர் மதம் வேறு ஹிந்து மதம் வேறு என்னும் சமீபக் கூச்சல்களுக்கெல்லாம் முன்பே பதில் சொல்லி வைத்தது போல் அமைகின்றன இக்குறிப்புகள்.

ஹிந்து மதமும் தமிழும் இப்போதுதான் முற்போக்காளர்களாலும் திராவிட அரசியல்காரர்களும் பிரிக்கப்படுகின்றன. சமீப பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட இரண்டும் ஒன்றாகக் கலந்தே கிடந்தன. கே ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாண நாவலர் அல்ல) நடத்தி இருக்கும் இப்பத்திரிகை இதை உரக்கச் சொல்லும் ஆவணமாகத் திகழ்கிறது.

நாம் இந்துக்கள் அல்ல, திராவிடர்கள் என்பவர்களுக்கு தொண்டன் பத்திரிகையில் வந்திருக்கும் ஒரு கட்டுரையை ஹிந்துத்துவத்தின் சாசனம் என்றே அரவிந்தன் நீலகண்டன் குறிக்கிறார். மிக முக்கியமான கட்டுரை அது.

உண்மையில் இன்று வலம் பத்திரிகை செய்ய நினைக்கும் ஒன்றை பல மடங்கு வீரியமாக அன்றே செய்திருக்கிறது தொண்டன் பத்திரிகை. இதனால்தான் வலம் இதழ் மிகவும் பேலன்ஸிங்காக இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள் போலும். திராவிடர்களே அன்றி ஹிந்துக்கள் அல்ல என்பவர்களை தொண்டன் இதழ் இப்படிச் சொல்கிறது – “இனவேற்றுமையைவிட இந்து மத அழிப்பே அவர்கள் ஆர்வம்”. ஆலயப் பிரவேச சட்டத்துக்கு இந்த இதழ் துணை நின்றிருக்கிறது. தலையங்கத்தில் ஆறுமுகநாவலர், ”ஆலயப் பிரவேசத்தைத் தடுக்க முற்படுவோரின் செயல், கொந்தளிப்போடு வரும் கடலை தன் கைத்துடப்பத்தால் பெருக்கித் தள்ளத் துணிந்த கிழவியில் செயலை ஒத்திருப்பதாக” எழுதுகிறார்.

அரவிந்தன் நீலகண்டனின் முக்கியமான கட்டுரை.

எனவே… இதுபோன்ற நல்ல கட்டுரைகளை வாசிக்க வலம் இதழுக்கு சந்தா செலுத்துங்கள். நல்ல இதழ்களை ஆதரியுங்கள்.

Share

மலர்மன்னன் – சில நினைவுகள்

மலர்மன்னன் இறந்துபோவதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் என்னிடம் பேசியிருந்தார். அவர் எழுதி, திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டிருந்த வந்தேமாதரம் நூல்களை விற்பது தொடர்பாகவும் அதை மார்கெட் செய்வது தொடர்பாகவும். இரண்டு நாளில் அவரது மரணச் செய்தி வந்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலர்மன்னன் என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய, அவருடன் பழக்கமெல்லாம் இருந்ததில்லை. இப்போதும்கூட மலர்மன்னனுடன் நெருங்கிப் பழகியவன் என்றெல்லாம் சொல்லமுடியாது. சில வருடங்களுக்கு முன்பு ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் சொன்ன மலர்மன்னனாகத்தான் அவர் எனக்கு பெயரளவில் அறிமுகமானார். அவரைப் பற்றிய எனது மனப்பதிவு அவர் கடும் பிராமண சாதிய ஆதரவாளர் என்பதே. அதே மனப்பதிவோடுதான் அவர் எழுதிய புத்தகங்களை நான் வாசித்தேன். அதே தீர்மானத்தோடுதான் அவர் எழுதிய புத்தகங்களையும் புரிந்துகொண்டேன். நான் எழுதிய புத்தக விமர்சனம் கூட அதே நிலைப்பாட்டில்தான் இருந்தது. அதைத் சரியாகப் புரிந்துகொண்ட மலர்மன்னன் அதற்கு ஒரு பதிலும் எழுதியிருந்தார்.

நான் மலர்மன்னனை முதலில் சந்தித்தது, எனி இந்தியன் பதிப்பகம் சார்பாக கலந்துகொண்ட சென்னை புத்தகக் கண்காட்சியில். உண்மையில் அவரை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை. கையில் ஒரு புத்தகத்துடன் அதை விற்பனைக்கு வைக்கமுடியுமா என்று கேட்டு வந்தார். நான் எனி இந்தியன் உரிமையாளர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னேன். அவரே கோபால் ராஜாராமுடன் பேசுவதாகச் சொன்னார். அவர் சென்ற பிறகு, எனக்கு அருகில் இருந்த விருட்சம் அழகியசிங்கர், அவர் யாரென்று தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். அவர்தான் மலர்மன்னன், கோபால் ராஜாராமுக்கெல்லாம் தெரியும், முன்பு கால் என்று பத்திரிகை நடத்தியிருக்கிறார், தற்போது முண்டா பழங்குடியினர் பற்றி அவர் எழுதியிருக்கும் கண் விழித்த கானகம் என்னும் நாவலை விற்க உங்களிடம் கேட்கிறார் என்றார். நாவலுக்கு பெயர் கண் விழித்த கானகமா, எப்படிங்க யார் வாங்குவா என்றேன். இப்படித்தான் முதன்முதலில் மலர்மன்னனை அறிந்துகொண்டேன். (இன்னும் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. இனி படிப்பேன்.)

அடுத்த அறிமுகம் – காலச்சுவடு நடத்திய கூட்டம் ஒன்றில், அவர் தனது கருத்துகளைக் கடுமையாக முன்வைத்தபோதுதான். ஃபிலிம் சேம்பர் அரங்கில் நடந்த கூட்டத்தில், சல்மா பங்குபெற்ற மேடை ஒன்றில், வழக்கம்போல மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து இயக்கங்களுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. (இதைத் தவறு என்று சொல்லவில்லை, என் கருத்தாக மட்டும் சொல்கிறேன்.) பின் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பிராவஹன் அக்கருத்துக்களை மிகக் கடுமையாக எதிர்த்தார். எழுந்து நின்று சத்தம் போட்டார். அதைவிட உரத்தகுரலில் முதல் வரிசையில் இருந்து ஒரு குரல் வந்தது. அது மலர்மன்னனின் குரல். கண்ணன் மேடையேறி என்னென்னவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தார். ஆனால் மலர்மன்னனும் பிரவாஹனும் ஓயவே இல்லை. எனவே அம்மேடை பாதியில் நிறுத்தப்பட்டது. அம்மேடையில் கிருஷ்ண ஆனந்தும் இருந்ததாக நினைவு. இதைப் பற்றி அடுத்த காலச்சுவடு இதழில் சல்மா, கண்ணன், மலர்மன்னன், பிரவாஹன் எல்லாருமே எழுதியிருந்தார்கள் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் மலர்மன்னன் வெண்ணிற பைஜாமாவில் வருவது வழக்கம்.

அதற்குப் பின்பு மலர்மன்னனைப் பற்றி நான் கேள்விப்பட்டவை எல்லாம் நல்லதாக இல்லை என்பதே உண்மை. அவையெல்லாம் உண்மையா புரட்டா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அதை எனக்குச் சொன்ன நண்பர்கள் நிச்சயம் பொய் சொல்பவர்களோ புரட்டாளர்கலோ அல்ல என்பது உறுதி. அதுமட்டுமல்லாமல், அவர்களே மலர்மன்னன் மேல் மிகுந்த மரியாதை உடையவர்களாகத்தான் இருந்தார்கள், அத்தனைக்குப் பிறகும்.

இந்த அடிப்படையில்தான், கிழக்கு வெளியிட்ட திமுக உருவானது ஏன் என்ற, மலர்மன்னன் எழுதிய நூலை வாசித்தேன். இத்தனை மனச்சாய்வுக்குப் பிறகும், அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. திமுகவை எதிர்க்க, மலர்மன்னனின் சாய்வு மிகச் சரியாகப் பொருந்திப் போய்விட்டதும், அதோடு என் அரசியல் சாய்பு பொருந்திப் போய்விட்டதும் காரணம் என யூகிக்கிறேன். அதைவிட எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மலர்மன்னனின் எழுத்து நடை. மிகத் தெளிவானது, குழப்பமில்லாதது. சில இடங்களில் நக்கலுடன் கூடியதும்கூட. இது அவரது புத்தகத்தை மிக விரைவாக வாசிக்க வைத்தது. மலர்மன்னனின் புத்தகங்களெல்லாம் விற்பனை ஆகுமா என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. ஆனால் அவரது புத்தகம் ஓரளவு நன்றாகவே விற்பனை ஆனது, ஆகிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது.

காந்தியைப் பற்றிய தீவிர ஹிந்துவின் பார்வையாக (நான் அதை ஹிந்துத்துவாவின் பார்வை என ஏற்கவில்லை) மலர்மன்னன் எழுதிய கட்டுரைகள், அதன் சாய்வை மையமாக வைத்தே மிக முக்கியமானவையாகின்றன. நவகாளி பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட மலர்மன்னின் கட்டுரை மிக அசத்தலாக இருந்தது. இதை அப்போதே பலருடன் பகிர்ந்துகொண்டேன்.  அதேபோல் காந்தியையும் கோட்சேவைப் பற்றிய பதிவும் முக்கியமானது. (இதை இன்று தேடியபோது டோண்டுவின் பதிவில் கிடைத்தது. டோண்டுவுடன் எனக்குப் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை ஹாய் சொல்லியிருக்கிறேன். அவரும் மறைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.)  மலர்மன்னன் காந்தியை மோகன் தாஸ் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார். இன்றைய ஹிந்து இஸ்லாம் பிரச்சினைக்கு காந்தியே காரணம் என்று நம்பியிருக்கவேண்டும்.

இப்படி மலர்மன்னன் பற்றிய என் புரிதல் இருந்த நேரத்தில், மலர்மன்னனின் ஆர்ய சமாஜம் கிழக்கு வெளியீடாக வெளிவந்தது. மலர்மன்னனுக்காகவே அந்த நூலை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அதற்கு ஒரு மதிப்புரை போல ஒன்றை எழுதினேன். மலர்மன்னன் அதற்குப் பதில் எழுதியிருந்தார். வழக்கம்போல என் பார்வை, மலர்மன்னன் ஒரு பிராமண ஆதரவாளர் என்பதை மையமிட்டதாக இருந்தது. அதை அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில் திராவிட இயக்க நூற்றாண்டு வந்தது. இதை ஒட்டி மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் கொண்டு வர கிழக்கு பதிப்பகம் முடிவு செய்திருந்தது. ஒரு புத்தகம் ஒரு தலித்தின் பார்வையில் இருந்து, இன்னொரு புத்தகம் ஒரு திமுக ஆதரவாளரிடமிருந்து. இன்னொரு புத்தகம் ஹிந்துத்துவப் பார்வையிலிருந்து. ஹிந்துத்துவப் பார்வையில் இருந்து வரவேண்டிய புத்தகத்தை மலர்மன்னன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று பத்ரியிடம் சொன்னேன். எனது தனிப்பட்ட ஆசை, அது பிராமணப் பார்வையிலிருந்தும் வரவேண்டும் என்பதே. ஆனால் இதை நான் மலர்மன்னனிடம் சொல்லவில்லை. மலர்மன்னனுடன் பணி புரிவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதே ஒரு பொதுக்கருத்தாக இருந்தது. அதைமீறி அவர் அப்புத்தகத்தை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அவருடன் பேசுவது, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். அப்போதுதான் அவரிடம் நான் தனிப்பட்டமுறையில் முதன்முறையாகப் பேசினேன்.

நான் அவர் புத்தகங்களுக்கு எழுதிய விமர்சனங்களை நினைவு கூர்ந்தார். நம்ம, நாம என்றே பேசினார். ஒரு ஜி வட்டம் உருவாகிவிட்டதை உணர்ந்தேன். அவர் எழுதி ஏற்கெனவே வெளிவந்த திமுக உருவானது ஏன் புத்தக எடிட்டிங்கில் அவருக்கு சில மனக்குறைகள் இருந்தன. அவற்றைச் சொன்னார். இம்முறை அப்படி நேராமல் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். இந்தப் புத்தகம் குறித்து பத்ரியைச் சந்தித்துப் பேச வந்தார்.

அவர் பத்ரியைச் சந்திக்கவந்தபோது அது மலர்மன்னன்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்த தாடி மட்டும் இல்லை என்றால் நிச்சயம் குழம்பியிருப்பேன். வெறும் காவி வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். மேலே ஒரு காவித் துண்டு. என்ன ஜி இப்படி என்றேன். எல்லாத்தையும் விட்டாச்சு, சந்நியாசம் வாங்கிட்டேன், உங்களுக்குத் தெரியாதா என்றார். கையில் இருந்த வாட்ச்சைக் காட்டி, ஒரு நண்பர் அன்பா கொடுத்தார்ன்றதால இதை கட்டிக்கிட்டு இருக்கேன், சந்நியாசிக்கு எதுக்கு வாட்ச் சென்றார். திராவிட இயக்கத்தை எக்ஸ்போஸ் செய்யணும் ஜி என்றேன். அப்படி முன்முடிவோடல்லாம் எழுதவேண்டியதில்லை என்றார். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. எனக்கு இருந்த பயம், மற்ற பார்வைகளில் இருந்து வெளிவரும் புத்தகங்கள் மிகவும் சரியான பார்வையோடு இருந்து, ஹிந்துத்துவக் கண்ணோட்டத்தில் வரும் மலர்மன்னனின் புத்தகமும் திராவிட இயக்கத்துக்கு ஏதோ ஒரு வகையில் ஆதரவு அளித்துவிட்டால் என்னாவது என்பதுதான். மலர்மன்னனின் அந்த பதில் எனக்கு அப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்துவிட்டது. என்ன என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் முதல் மீட்டிங்கிலேயே முடிவுசெய்துவிட்டார். இரண்டே நாள்களில் வேலையையும் ஆரம்பித்துவிட்டார்.

அதற்குப் பின்பு அவர் என்னிடம் தனியாகப் பேசியபோது என் பயம் முற்றிலும் அகன்றது என்றே சொல்லவேண்டும். திராவிட இயக்கமே ஒரு ஃபேக் என்றார். புத்தகம் பெயரே இப்படி வெச்சிரலாம் ஜி என்றேன். சிரித்துக்கொண்டார். என்ன பிரசன்னா, புத்தகம் வந்தா கடுமையா எதிர்ப்பாங்களா என்றார். எதுத்தா அதுக்கும் பதில் எழுதிடலாம் என்றார். என்ன என்ன எதிர்ப்புகள் வருமோ அதற்கெல்லாம் இப்போதே சேர்த்து புத்தகத்தில் எழுதிடுங்க ஜி என்றேன். ஓ அப்படி சொல்றீங்களா என்றார்.

முதல் அத்தியாத்தை எனக்கும் பத்ரிக்கும் அனுப்பினார். அடுத்தடுத்து அத்தியாயங்கள் வந்துகொண்டே இருந்தன. ஐந்து அத்தியாயங்கள் வரை படித்துக் கருத்துச் சொன்னேன். பின்னர் படிக்கவில்லை. விட்டுவிட்டேன். புத்தகமாக வந்ததும் படித்துக்கொள்கிறேன் ஜி என்றேன். நீங்க படிச்சு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் என்றார். என்னால் படிக்க முடியாமலேயே போனது. சோம்பேறித்தனமன்றி வேறு காரணங்கள் இல்லை. ஸாரி மலர்மன்னன் ஜி. 🙁

திராவிட இயக்கத்தை ஒட்டி கிழக்கு கொண்டு வர நினைத்த புத்தகங்களில் வெளிவந்தது இந்த ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. மற்ற புத்தகங்களை எழுத ஒப்புக்கொண்டவர்கள் அல்லது அதைப் பற்றிப் பேசியவர்கள் யாருமே அதை முழுமூச்சாகக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு புத்தகமாக வெளிவருவதன் அவசியம் பற்றியோ, அது தரப்போகும் நீண்ட காலத் தாக்கம் பற்றியோ தெளிவாகப் புரிந்துகொண்டவர் மலர்மன்னன் மட்டுமே.

அந்தப் புத்தகம் எழுதுவதற்குப் பல புத்தகங்களின் நகல்கள் வேண்டுமென்று மலர்மன்னன் கேட்டார். பெரும்பாலான புத்தகங்களைத் தந்துதவியவர் ம.வெங்கடேசன். அரிதான புத்தகங்களெல்லாம் வெங்கடேசனிடமிருந்தன. வெங்கடேசன் ஒரு புத்தகக் களஞ்சியம். வெங்கடேசன் பற்றி ஒரே ஒருமுறை மலர்மன்னனிடம் சொன்னேன். வெங்கடேசனைத் தெரியும் என்றார். மலர்மன்னனின் நன்றிக்குறிப்பில் வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன். புத்தகம் வெளிவரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று அப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் புத்தகம் வெளிவரும்போது வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லமுடியாமல் போய்விட்டது. மலர்மன்னனே சேர்த்திருக்கவேண்டும் என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் நான் வாங்கித் தந்த பெரும்பாலான புத்தகங்கள் வெங்கடேசன் தந்தவை என்று மலர்மன்னனுக்குத் தெரியாது. புத்தகம் வெளிவந்ததும் இது பற்றிச் சொன்னேன். அப்படியா, நீங்க மொதல்லயே சொல்லிருக்கலாமே என்றார். ஆமா ஜி, என் தப்புதான் என்றேன். இப்ப என்ன பண்றது என்றார். அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்றேன். சரி என்றார். வெங்கடேசனுக்கு இது எதுவுமே தெரியாது. தன் பெயர் வரவேண்டும் என்றெல்லாம் நினைக்கக்கூடிய மனிதர் அல்ல வெங்கடேசன். ஆனால் எனக்குத்தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. குற்ற உணர்ச்சியுடனேதான் வெங்கடேசனுக்கு திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அதிலும் மலர்மன்னன் இறந்த செய்திகேட்டபோது மிகவும் நொந்துபோய்விட்டேன். 🙁

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் என்ற பெயரைவிட திராவிட இயக்கம் பொய்யும் புரட்டும் என்ற ரேஞ்சுக்குத்தான் பெயர் வைக்க மலர்மன்னன் விரும்பினார். பத்ரி அதை ஏற்கவில்லை என நினைக்கிறேன். நான் ஏற்கவில்லை என்றும் அவரிடம் சொன்னேன். புனைவும் உண்மையும்னா கொஞ்சம் மெல்ல தடவிக்கொடுக்கிற மாதிரி இருக்காது என்று கேட்டார். அதெல்லாம் சரியா வரும் ஜி என்றார். பத்ரியிடம் முடிவை விட்டுவிட்டார். கடந்த முறை இருந்த கசப்பனுவங்கள் எல்லாம் அவருக்கு மறைந்திருந்தது. மிக எளிமையான மனிதராக, ஒரு எடிட்டிங்கின் தேவையெல்லாம் புரிந்து நடந்துகொண்டார். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. காந்தியைப் பற்றி அவர் புத்தகம் எழுதினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். அது நடக்காமல் போய்விட்டது.

சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வந்திருந்தார். அவரது வந்தே மாதரம் புத்தகத்தையும் விற்பனைக்கு வைத்திருந்தோம். ரொம்ப நன்றி பிரசன்னா என்றார். நான் விற்பனையில் படு மும்மரமாக இருந்தேன். அவர் சொல்வதையெல்லாம் மனதால் வாங்கிக்கொள்ளாமல் சரி சரி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன என்னவோ சொன்னார். அவருடன் வந்திருந்த ஒரு சகோதரியை அறிமுகப்படுத்தினார். அவரைப் பற்றியும் என்னவோ சொன்னார். என்னவென்று இப்போது நினைவுக்கு வரவில்லை. யாரோ ஓர் இசை ஆளுமையின் பேத்தி என்ற நினைவு. அந்தப் பெண்மணி, மலர்மன்னனின் ஆதரவில்தான் தன் வாழ்க்கையே நடக்கிறது என்றும், மலர்மன்னன் அடைக்கலம் தந்தார் என்றும் சொன்னார். அடைக்கலம் என்ற வார்த்தையைக் கடுமையாக மறுத்தார் மலர்மன்னன். எனக்கு நீ உதவி செய்றம்மா என்று அவர் சொல்ல, அதை அவர் மறுக்க, அவர்கள் இருவரும் அங்கேயே விவாதிக்கத் தொடங்கினார்கள். 

இறந்து போவதற்கு இரண்டு தினங்கள் முன்பு பேசும்போது, நான் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தைப் படித்துவிட்டேனா எனக் கேட்டார். படிச்சுக்கிட்டே இருக்கேன் என்றேன். எதாவது விமர்சனம் வந்தா சொல்லுங்க என்றார். புத்தகம் பற்றி அவருக்கு வரும் விமர்சனங்களையெல்லாம் எங்களுக்கு அனுப்பி வைப்பார். அவர் எழுத்து புத்தகமாக வருவதில் பெரிய ஆர்வம் அவருக்கு இருந்தது. 

மோடியின் குஜராத் புத்தகத்தைக் கொடுக்க கடந்த வாரம் பிஜேபியின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே செயல்வீரர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. மோடியின் குஜராத் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி பொன் ராதாகிருஷ்ணன் சொன்னார். அப்போது அங்கே இருந்த இல. கணேசன், ‘கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இன்னொரு முக்கியமான புத்தகம் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும். நான் படித்துவிட்டேன். நம் பார்வையில் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை எழுதியவர் மலர்மன்னன். அந்தப் புத்தகத்தையும் அனைவரும் படிக்கவேண்டும்’ என்றார். இதைப் பற்றி மலர்மன்னனிடம் சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

மலர்மன்னனின் இழப்பு ஹிந்த்துத்துவ நோக்கில் பெரிய இழப்பு. அவர் பிராமணவாதி என்பது என் முன்முடிவு. அவரோட பேசிய (பழகிய அல்ல) நாள்களில், அந்த முன்முடிவு தவறு என்று சொல்லும்படியாக எதுவும் நடந்துவிடவில்லை. அதேபோல் அது சரியானது என்னும்படியாகவும் எதுவும் நடந்துவிடவில்லை என்பதே அதைவிட முக்கியமானது. ஆனால் சந்தேகமே இல்லாமல் நல்ல ஹிந்துத்துவவாதி. ஒரு சாதியவாதி எப்படி நல்ல ஹிந்துத்துவவாதியாக இருக்கமுடியும் என்ற குழப்பங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவருக்குள் அந்த முரண் இருக்கவே இல்லை. ஒருவேளை என் முன்முடிவு தவறாகவும், அவர் சாதியவாதியாக இல்லாத ஒரு நிஜ ஹிந்துவாக இருந்திருக்கக்கூடும். எப்படி இருந்தாலும், என் கருத்துகளை என் கருத்துகள் என்று மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஜி என்று அவரை விளிக்கும் ஒரு மனிதரை அவர் உடனே விரும்பினார். அவர் ஹிந்துக்களின் மீதும் ஹிந்துத்துவத்தின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். கிறித்துவ மதமாற்றமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் அவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கின. சித்தர்களைப் பற்றிய பெரிய ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது. அவர் வீட்டருகில் இருக்கும் ஒரு சித்தரின் சமாதிக்கு என்னை வருமாறு அழைத்திருக்கிறார். ஒரு நல்ல மனிதர். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

Share

ஆரிய சமாஜம் நூல் மதிப்புரையும் மலர்மன்னன் பதிலும்

நான் 14- ஜூன்-2010ல் எழுதிய ‘ஆரிய சமாஜம்’ நூலின் மதிப்புரையும், அதற்கு 5-ஜூலை-2010ல் மலர்மன்னன் எழுதிய பதிலும் இங்கே – சேமிப்புக்காக.

மலர்மன்னன் முன்பு எழுதியிருந்த ‘திமுக தோன்றியது ஏன்?’ புத்தகத்தைப் படித்தபோது, அவ்ர் மேலிருந்த சில முன் அனுமானங்கள் உடைந்தன. என்றாலும், அவர் மேல் நான் கொண்டிருந்த முன் அனுமானங்களில் சிலவற்றை இன்னும் ஆழப்படுத்துவது போலவும் சில விஷயங்கள் அப்புத்தகத்தில் இருந்தன. குறிப்பாக பிராமண சார்புடைய பார்வை. எந்த ஒரு பார்வையும் நிச்சயம் தேவை என்னும் ஜனநாயக அடிப்படையிலும், பிராமணப் பார்வை என்பதே இன்று ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாகிவிட்ட நிலையில், அவர் எவ்வித சங்கடமும் இன்றி அதனை முன்வைப்பதும் அப்புத்தகத்தை முக்கியமானதாக்கியது என்று நினைத்தேன். (பிராமணச் சார்பு என்பதை அவர் மறுக்கக்கூடும்.)

மீதமிருந்த, ஆழமாகிப் போன, மலர்மன்னன் பற்றிய எனது முன் தீர்மானங்களை ‘ஆரியசமாஜம்’ புத்தகம் அடியோடு உடைத்துப் போட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. மலர்மன்னன் இப்புத்தகத்தை எப்படி எழுதினார் என்னும் கேள்வி என் மனத்துள் இன்னும் உழன்றபடியேதான் உள்ளது. தன் மனத்தில் இருந்த பிராமணச் சார்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, புதிய மனிதனாக, தயானந்தரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு இப்புத்தகத்தை எழுதினாரா அல்லது பிராமணச் சார்பு ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகத்தை எழுதும்போது தன் சாயல் வரக்கூடாது என நினைத்து இப்படி எழுதினாரா எனத் தெரியவில்லை. எப்படி எழுதியிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே, பாராட்டத்தக்கதே.

ஹிந்துத்துவம் எனப்து ஜாதியின் கைகளில் சிக்கி சீரழிந்துவிட்ட/கொண்டிருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஹிந்துத்துவம் என்பது ஜாதியில்லாமல் இயங்கமுடியாதோ என்கிற மிகப் பெரிய உள்மனச் சிக்கலில் நான் விழுந்த நிலையில், இப்புத்தகத்தைப் படித்தது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசமளித்தது என்றே சொல்லவேண்டும்.

ஜாதியின் அத்தனை காரண காரியங்களையும் உடைக்கிறது தயானந்தரின் முழக்கங்கள். 200 வருடங்களுக்கு முன்பாகவே, ஹிந்துத்துவம் என்பது எப்படி இருக்கலாம் என்று இன்று சிந்திப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் அன்றே சரியான தீர்க்கமான வழியைச் சொல்லிச் சென்றிருக்கிறார் தயானந்தர். அவர் அன்று அப்படிச் சொன்னதை, மேல் சாதியினரான பிராமணர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை, இன்றைய பிராமணர்களை வைத்தே அறிந்துகொண்டுவிட முடியும். ஆனால் அதனை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், வேத முறையிலான வாழ்க்கை முறையை முன்வைத்திருக்கிறார் தயானந்தர். அதோடு, வேதங்களில் ஜாதிய முறைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். வேதங்களில் ஜாதி இருப்பதாகச் சொல்லப்படும் ஆதாரங்களுக்கெல்லாம் சரியான பொருளைச் சொல்லி, ஜாதி என்பதை அடியோடு மறுத்திருக்கிறார் தயானந்தர்.

வருணம் பற்றிப் பேசும்போது, பிறப்பால் வருணம் நிர்ணயிக்கப்படுவதை அடியோடு எதிர்த்திருக்கிறார். ஒரு பிராமணன் பிறப்பால் பிராமணனாவதிலலை என்றும், தங்களுடைய செயலாலே ஆகிறார்கள் என்றும், அப்படி எந்த ஒரு வருணத்தவரும் பிராமணராக முடியும் என்று மிக ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் தயானந்தர். 

பூணூல் அணிவது எல்லோருக்குமான சடங்கு என்றும், சந்தியாவந்தனம் என்பதும் தனிப்பட்ட சொத்தல்ல, அதுவும் பொதுவானது என்று எடுத்துரைத்திருக்கிறார் தயானந்தர்.

பிராமணன் சடங்குகள் செய்விப்பது கடமையல்ல, ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தாங்களே சடங்குகளைச் செய்துகொள்ளலாம், வேத கால ஹிந்து முறையில் அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்கிறார் தயானந்தர்.

எத்தனையோ பிராமணரல்லாத ரிஷிகள் நல்வாழ்வு வந்து பிராமணரைப் போல் உயர்ந்ததையெல்லாம் இப்புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இப்படி ஒரு புத்தகத்தைப் படிப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் இன்றைய நிலையில் இப்படி ஒரு நிலையை ஹிந்துமதம் கொண்டிருக்குமானால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை.

உயர் குணங்களோடு, ஜாதியற்ற சிந்தனையோடு உடல் ரீதியான பலமும் தேவை என்பதை தயானந்தர் சொல்லியிருக்கிறார். இதனைத்தான் பல ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களுக்குத் தேவையான வகையில், சில சமயம் வன்முறை கூட சரி என்னும் அர்த்தத்தில் சொல்வதைக் கேட்கிறேன். 

தயானந்தர் உருவ வழிபாட்டை முற்றிலும் கைவிடச் சொல்லுகிறார். இந்த நிலைப்பாட்டில் ஆசிரியர் மலர்மன்னன் பிறழ்வது தெரிகிறது. தயானந்தரைப் பற்றி எழுதும்போது இதனைச் சொல்லியாக வேண்டிய ஆசிரியர், சில இடங்களில் உருவ வழிப்பாட்டைக் கைவிட்டால் என்னென்ன ஊறுகள் நேரும் என்பதைச் சொல்லிச் செல்கிறார். குறிப்பாக, ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தயானந்தரும் சந்தித்துக்கொண்டிருக்காத போது, இவர்கள் சந்தித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று அவர் சொல்வது ஒரு எடுத்துக்காட்டு. ராம கிருஷ்ண பரமஹம்ஸர் உருவ வழிபாட்டைக் கைவிட்டிருக்க மாட்டார் என்று சொல்லும் மலர்மன்னன், தயானந்தரும் தன் கருத்தில் உறுதியாக இருந்திருப்பார் என்று சொல்வதற்குப் பதிலாக, சில ஞானிகளுக்கு தயானந்தர் விலக்கு அளித்திருக்கக்கூடும் என்கிற யூகத்துக்குத் தாவி விடுகிறார். இது போன்ற மலர்மன்னன் கொஞ்சம் தத்தளிக்கும் இடம், 1857 குறித்து தயானந்தர் பேசாதது பற்றியும், மனு தர்மத்தை தயானந்தர் ஏற்றுக்கொள்வது பற்றியும் எழுதும்போதும்.

மனுதர்மம் பற்றிய தனியான ஒரு அத்தியாயம் கடைசியாக வருகிறது. புத்தகத்தின் பின்னட்டையில், மனுதர்மத்தில் காலத்துக்கு ஏற்றதை மட்டுமே ஏற்றார் என்று பொருள்பட வருகிறது. ஆனால் புத்தகத்தினுள்ளே, தயானந்தர் மனுதர்மத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார் என்ற பொருள்பட, மலர்மன்னன், கிட்டத்தட்ட வாதாடிச் செல்கிறார். 

மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே முன்வைத்து இதனை மலர்மன்னன் அணுகியிருப்பது சரியானதல்ல. ஒரு பிராமணன் தவறு செய்தால் அவனுக்கு அதிகத் தண்டனையும், பிராமணரல்லாத மற்ற வருணத்தவர் தவறு செய்தால், பிராமணனுக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையும் தரப்படுவதை சுட்டிக்காட்டும் மலர்மன்னன், பிராமணரல்லாத வருணத்தவர் பிராமணர்களைத் திருமணம் செய்துகொள்ளும்போது மனு தர்மம் சொல்லும் சட்டங்களைப் பற்றிப் பேசவே இல்லை. பிராமணனுக்கு அதிக தண்டனை தரும் சட்டங்களைவிட மிகவும் முக்கியமான்வையும், சர்ச்சைக்குரியவையும் எதுவென்றால், பிராமணனுக்கு அதிக சலுகைகள் தரும் சட்டங்களும், பிராமணனை ஒரு பீடத்தின் மேல் அமர்த்தி வைக்கும் சட்டங்களுமே ஆகும். அதைப் பற்றி தயானந்தரின் கருத்தென்ன என்பதை மலர்மன்னன் விளக்கவில்லை.

அதேபோல, தயானந்தர் பெண் விடுதலையைப் பற்றிப் பேசுவதைச் சிலாகிக்கிறார். ஆனால் மனு தர்மமோ என்றென்றும் பெண் ஆணைச் சார்ந்தே நடக்கவேண்டும் என்று சொல்கிறது. 

மேலும், மனு தர்மத்தில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் பாட பேதங்கள் என்கிறார் மலர்மன்னன். அதாவது, எவையெல்லாம் பிரச்சினைக்குரியவையோ அவையெல்லாமே பாட பேதங்கள் என்று சொல்லிக்கொண்டுவிட ஏதுவாக இப்படிச் சொல்கிறாரோ என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தயானந்தர் சொல்லியிருக்கும் எல்லாக் கருத்துகளுக்கும் சரியான விளக்கம் அளித்துவிட வேண்டும் என்கிற மலர்மன்னனின் தவிப்பு, சில இடங்களில் யூகங்களுக்குத் தள்ளிவிடுகிறது. 1857 பற்றிய யூகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருப்பார் என்கிற யூகம் போலவே, யாகங்களின் மூலம் காற்றில் புகையைக் கலப்பதால் நன்மை பயக்கலாம் என்னும் யூகம். இப்படி யூகங்களுக்குச் செல்வதை விட, இப்படித்தான் தயானந்தரின் வாழ்வில் நடந்தது, இப்ப்படித்தான் தயானந்தர் சொன்னார் என்று சொல்லி விட்டுவிடுவது நல்லது. (ஆனாலும் அதனை தன் வாதப்படி எடுத்துச் சொல்லும் எல்லா உரிமைகளும் மலர்மன்னனுக்கு உள்ளது. என்ன ஒன்று, அதனைப் படிக்கும்போது லேசான புன்னகை இதழோரத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!)

தயானந்தரின் இறப்புக்குக் காரணமாக அமைபவர் ஓர் இஸ்லாமியர். தயானந்தர், ஹிந்து மதத்தின் சடங்காச்சாரங்களைத் தீவிரமாக எதிர்த்தது போலவே, பிற மத ஆக்கிரமிப்பையும் எதிர்த்திருக்கிறார். எனவே ஒரு முஸ்லிம் அவரைக் கொல்ல எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அதே போலவே, தங்கள் ஆதாரங்களெல்லாம் பறிபோகிறதே என்று வேறு அதிகார வர்க்கத்தினர் சிலர் கூட, ஒரு முஸ்லிமின் தயவோடு தயானந்தரைக் கொல்ல முயன்றிருக்கக்கூடும் என்ற ஒரு தியரியும் உள்ளது. ராஜ புத்திர அரசர்கள் கூட அவரைக் கொல்ல முயன்றார்கள் என்று நிரூபிக்கப்படாத கூற்றும் உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னொரு எண்ணம் தோன்றியது. யூத் ஃபார் தர்மா என்ற தயானந்த சரஸ்வதியின் அமைப்பு (இந்த தயானந்தர் வேறு, ஆரிய சமாஜத்தின் தயானந்தர் வேறு) ஒன்றின் கூட்டத்தில் பேசிய அரவிந்தன் நீலகண்டன், கூட்டத்தினரின் கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் சொன்னார். பிராமணரைத் தவிர எல்லா வருணங்களும் அழிந்துவிட்ட நிலையில், பிராமண வருணம் ஏன் அழியவில்லை என்றால், இன்று மற்ற எல்லா வருணத்தவரைப் போல எந்த ஒரு வருணத்தாரும் எந்த ஒரு வருணத்தாரின் வேலையையும் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது. அதாவது ஒரு சூத்திர வருணத்தவன் வைசிய வருணத்தவனின் வேலையையும், வைசிய வருணத்தவன் மற்ற வருணத்தின் வேலையையும் செய்ய முடியும். பிராமண வருணத்தவன் கூட இதே போல் மற்ற வருணத்தின் வேலையைச் செய்ய இயலும். ஆனால் பிராமண வருணத்தாரின் தொழிலாகக் கருதப்படுவதை மற்ற வருணத்தாரால் செய்யமுடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாறி, மற்ற எந்த வருணமும் பிராமணனின் தொழிலாகக் கருதப்படுவதைச் செய்யலாம் என்னும் நிலை தோன்றினால், எல்லா வருணங்களும் தம்மளவில் ஒன்று கரையும் நிலை வரலாம் என்றார். இது தயானந்தர் அன்றே சொன்னதன் சாரம்தான் என்று தோன்றுகிறது.

இப்புத்தகத்தை மிகவும் சிறப்பாக, மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மலர்மன்னன். எங்கே எதனைச் சொல்கிறோம், எந்த விஷ்யத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அழுத்திச் சொல்கிறோம் என்பதிலெல்லாம் ஒரு தேர்ந்த எழுத்தாளராக வெளிப்பட்டிருக்கிறார் அவர். அதேபோல் ஒரு புத்தகமாக வருவதற்காக அவர் பல விஷயங்களைத் தேடியதோடு மட்டுமில்லாமல், அதனைச் சரியாகத் தொகுத்து அளித்திருக்கிறார். இன்னும் தொடர்ந்து மலர்மன்னன் பல்வேறு புத்தகங்களை தனது தனித்துவத்தோடு எழுதவேண்டும். அது தமிழ்ச்சூழலில் ஒரு புதிய திறப்பாக நிச்சயம் அமையும்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-419-9.html 

மலர்மன்னனின் பதில்:

அன்புள்ள ஸ்ரீ ஹரன் பிரஸன்னா,

ஆரிய சமாஜம் நூலுக்கு நீங்கள் எழுதியுள்ள விமர்சனத்தை நண்பர்கள் அனுப்பித் தந்தமையால் வாசிக்கக் கிடைத்தது.

நூலாசிரியன் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கும்படியான விமர்சனம் எழுதும் உங்கள் சாமர்த்தியத்தை முதலில் மெச்சுகிறேன்.

1. நீங்கள் பிராமணச் சார்பாகப் பார்ப்பதை நான் நியாயத்தின் சார்பாகப் பார்க்கிறேன். ஆகையால் எனது பார்வையை பகிரங்கப்படுத்துவதில் எனக்குச் சங்கடம் ஏதும் ஏற்படுவதில்லை. 

2. 1857-ல் அது குறித்து சுவாமி தயானந்தரிடமிருந்து எதிர்ரவினை ஏதும் வராமை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்ஸர்-தயானந்தர் நிலைப்பாடுகள், மனுஸ்மிருதி பற்றறிய அவரது கருத்து, முதலானவை குறித்துச் சரியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே எனது கருத்துகளை நிறுவியுள்ளேன். ஆகவே அவை யூகங்கள் என்கிற வட்டத்துக்குள் அடங்காது என நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வாதங்கள் எனக்கொள்வது சரியாக இருக்கலாம்.

3. ‘ம’ எனப் பிரபலமடைந்த மகேந்திரநாத் குப்தா, ‘Gospel of Sri Ramakrishna’ என்ற தலைப்பில் பரமஹம்சரின் சொற்ப கால அன்றாட நிககழ்வுகளைப் பதிவு செய்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது அமுத மொழிகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளாக சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இதில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்த்ததாகவும் அவரது சமாதி நிலை கண்டு வியந்து போற்றிச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் இருவருக்குமிடையே உருவ வழிபாடு குறித்து ஸம்வாதம் ஏதும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை. 

நான் பல்லாண்டுகளுக்கு முன் ‘ம’ வை ஆங்கிலத்தில் வாசித்திருந்தபோதிலும் ஆரிய சமாஜம்நூலை எழுதுகையில் இது எனது நினைவில் இல்லை. யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய தயானந்த ஜோதியிலிருந்து வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பயன் படுத்தியதால் அவற்றின் அடிப்படையில் இருவரிடையே சந்திப்பு நிகழ வாய்ப்பின்றி தயானந்தர் வங்காளத்தைவிட்டுச் சென்றுவிட்டார் என எழுதிவிட்டேன்.. 

பின்னர் ‘அமுத மொழிகளை’ வாங்கிப் படித்தபொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணரை தயானந்தர் பார்த்த விவரம் கவனத்திற்கு வந்தது. உடனே ஸ்ரீ பத்ரியுடன் தொடர்பு கொண்டு, புத்தகத்தில் இத்தகவலைச் சேர்த்துவிட வேண்டுமென்று சொன்னேன். அதற்குள் புத்தகம் அச்சாகிவிட்டபடியால் கால கடந்துவிட்டது, அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

உண்மையில் சுவாமி தயானந்தர்-ஸ்ரீ ராம கிருஷ்ணர் இடையே சந்திப்போ, வாதப் பிரதி வாதங்களோ நிகழவில்லைதானே. சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த பரமஹம்சரைக் கண்டு, இது ஓர் அசாதாரன நிலை என்று தயானந்தர் போற்றிச் சென்றதாக மட்டுமே தகவல் உள்ளது.. ஆகையால் ஒருவகையில் எனது பதிவில் பெரிய முரண் இல்லை. எனக் கொள்ளலாம். உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத சுவாமி விவேகானந்தரையே தம்மை குருவாக ஏற்குமாறு செய்தவராயிற்றே,, கடவுளைப் பல உருவங்களாகவே பார்த்துப் பரவசமடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர்! இந்த அடிப்படையில், ராமகிருஷ்ணர் விக்கிரகங்களை வெறும் விக்கிரகங்களாக அல்லாமல் கடவுள்களாகவே பார்த்து சல்லாபிப்பவர் எனபதைக் கண்டுகொண்ட தயானந்தருக்கு ராமகிருஷ்ணரின் உருவவழிபாட்டில் என்ன பிரச்சினை இருந்திருக்கக் கூடும்?

4. நமது கலாசாரம் கோயில் கலாசாரமாக ஆழ வேரோடிவிட்ட பிறகு, நம் கலைகள் யாவும் உருவ வழிபாட்டைச் சார்ந்தே உருவாகிவிட்டபிறகு (ராமாயணமும் பாரதமும் இல்லை யென்றால் நமக்கு ரசிக்கத் தெருக்கூத்தே இல்லை என்று தெருக்கூத்துப் பிரியரான அண்ணா ஒருமுறை என்னிடம் மனம் திறந்து சொன்னதுண்டு!), பல்வேறு தொழில்களும் கோயில் நடை முறைகளைச் சார்ந்து உருவாகிப் பல்லாயிரம் மக்களின் ஜீவாதாரமாகிவிட்ட பிறகு, மேலும் மிகவும் முக்கியமாக மிகப் பெரும்பாலான மக்ககளுக்கு உருவ வழிபாடுகளின் மூலமாகவே தெய்வ நம்பிக்கையும் அதன் பயனாக ஆறுதலும் திட சித்தமும் முற்றிலும் கிடைக்கிற சாத்தியக் கூறு உள்ளபோது, உருவ வழிபாட்டிற்கு முற்றிலுமாக முழுக்குப் போடுவது சரியல்ல என்பதே எனது கருத்து. ஆரிய சமாஜத்துடன் எனக்குப் பல் ஆண்டுகளாகத் தொடர்பு சென்னையில் மட்டுமல்ல, வேறு நகரங்களிலும் உள்ளது. இன்று அதில் உள்ள பலர் உருவ வழிபாட்டைக் கைவிட மனமின்றி இருப்பதை அறிவேன். மேலும் சுவாமி தயானந்தரே ஹிந்து சமயம் பல்வேறு கோட்பாடுகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களால் கட்ட மைக்கப்படுள்ளது என்று கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளேன். எனவே, என் குல தெய்வமான கொல்லூர் மூகாம்பிகையை என் அன்னையாகவே அறிந்துள்ள எனக்கு இந்த விஷயத்தில் தவிப்போ தத்தளிப்போ இல்லை. உருவ வழிபாட்டில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறும் முறைகேடுகள், பல தெய்வ வழிபாடு மக்களிடையே ஏற்படுத்தும் பேத உணர்வு முதலான பிரத்தியட்ச நிலவரங்கள்தாம் தயானந்தரை உருவ வழிபாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கச் செய்திருக்க வேண்டும்.. மனோ ரீதியாக பல தெய்வ நம்பிக்கையிலும் வழிபாட்டிலும் உள்ள பிற நன்மைகளையும் அறிந்துள்ளேன். 

5. சாதாரண எழுத்தாளர்களே தங்கள் எழுத்தில் முன்னுக்குப் பின் முரணாக எதேனும் எழுதிவிடுவோமோ என்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கையில், மனுவைப் போன்ற பேரறிஞர் முன்னுக்குப் பின் முரணாக விதிமுறைகளை எழுதுவாரா என்று யோசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் உலகில் உள்ள அறிஞர்கள் பலரும் மனுஸ்மிருதியில் பல இடைச் செருகல்கள் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் உள்ள 2685 வாக்குகளில் 1214 வாக்குகளே அசலானவை என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியிருப்பதைப் பதிவு செய்துள்ள ளேன். பெண்கள் விஷயத்தில் மனுவில் முரண்பாடு ஏதும் இல்லை. ‘புத்ரேண துஹிதா ஸமா’ (மகன்-மகள் இருவரும் சரிசமானவர்களே) என்று சொல்லியிருக்கும் மனு, எல்லா நிலையிலும் ஆண்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துப்பட அறிவுறுத்தியிருப்பதைப் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என அவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

6. புரோகிதர்களாக இருந்து எல்லாச் சடங்குகளையும் செய்து வைக்க ஆரிய சமாஜத்தில் ஊழியர்கள் இருப்பதை எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இவர்கள் மந்திரங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் அவற்றின் பொருளையும் உடனுக்குடன் எடுத்துக் கூறுகிறார்கள். இந்த ஊழியர்கள் ஜாதியின் அடிப்படையில் பிராமணர்கள் அல்லவாயினும் வர்ண அடிப்படையில் பிராமணர்களாக உள்ளனர். எனவே பிராமண வர்ணத்தின் பணியை பிற வர்ணத்தவர் மேற்கொள்ள முன்வராததால் அதில் மட்டும் பிற வர்ண நுழைவு நிகழவில்லை எனக் கருதத் தேவையில்லை. 

7. கும்ப மேளா போன்ற பல லட்சம் மக்கள் கூடுவதால் வரும் கழிவுகளை அகற்ற சுகாதார அதிகாரிகள் ஆறுகளையே பயன்படுத்தி வந்ததால் திருவிழாக்களின் போதெல்லாம் கலாரா பரவுவது இயல்பாக இருந்தது. தயானந்தர் ஆங்கிலேயே அதிகாரிகளைச் சந்தித்துக் கழிவுகளை ஆற்றில் எறியாமல் எரித்துவிடுமாறு அறிவுரை கூறினார். அதனால் எழும் புகைமண்டலத்திற்கு மாற்றாக மூலிகைச் சுள்ளிகளைத் தீயில் இட்டால் காற்று தூய்மையடையும் என்றும் கூறினார். ஆங்கிலேய அதிகாரிகள் எளிதில் புரிந்துகொண்டு சம்மதிக்க வேண்டும் என்பதற்காகவே சமயச் சடங்கு போன்ற வேள்வியை நடத்தலாம் எனக் கூறுவதை அவர் தவிர்த்திருக்கக் கூடும்.. இந்த விளக்கத்தை நான் தெரிவிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் வேள்வித் தீயின் பயன் குறித்தும் ஓர் அனுமானம் போன்ற தொனி வந்துவிட்டிருக்கலாம். 

8. மனுஸ்மிருதியின் மூலப் பிரதியை எடுத்து வைத்துகொண்டு, வரிக்குவரி ஆராய்ந்து, எவையெல்லாம் அசல், எவையெல்லாம் இடைச் செருகல் என ஆதாரப் பூர்வமாக எழுத விருப்பம்தான். அதில் இறங்கிவிட்டால் பிறகு வேறு எந்த வேலையிலும்  ஈடுபட முடியாது. நானோ, இன்றளவும் முழுக்க முழுக்க எழுத்தின் மூலம் வரும் வருமானத்தையே நம்பியிருப்பவன். ஆகையால் யாராவது குறைந்த பட்சம் ஆறுமாத கால அவகாசம் தந்து ஸ்பான்ஸர் செய்தாலன்றி அந்த வேலையைக் கையில் எடுக்க இயலாது! நீங்கள் என்னிடம் மேலும் எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளமையால் இதனைக் குறிப்பிடுகிறேன்.

9. பண்டிதர்களும் புரோகிதர்களும் தங்கள் பிழைப்பைக் காத்துக் கொள்வதற்காக தயானந்தரைக் கொன்றுபோட முகமதிய நர்த்தகியையும் முகமதிய வைத்தியரையும் பயன்படுத்திக் கொண்டதை எனது நூலில் தெளிவாகவே பதிவு செய்துள்ளேன். எனவே முழுப்பழியையும் முகமதியர்மீது நான் சுமத்திவிடவில்லை!

இவ்வளவு விரிவான விளக்கம் தரக் காரணம், குறைகளுக்கு சமாதானம் சொல்லவேண்டும் என்கிற கவலை அல்ல. உங்களைப் போல் இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை மனநிறைவளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எழுதலானேன்.

அன்புடன்,

மலர்மன்னன் 
ஜூலை 05, 2010 

 

Share

பசுவதை பற்றிய ஆவணப்படம்

பசுவதை தடையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். ஆலயம் தொழுவோர் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர்கள் பத்ரி (பத்ரி சேஷாத்ரி அல்ல) மற்றும் ராதா ராஜன்.

ஆலயம் தொழுவோர் சங்கத்தின் சார்பாக முதலில் பலர் பேசினார்கள். ஆலயத்தின் பல்வேறு சொத்துகள் இன்று அரசால் எப்படி கபளீகரம் செய்யப்படுகின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஹிந்து ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை ஹிந்து அமைப்புகளிடம் கொடுப்பதே ஒரே வழி என்றெல்லாம் சொன்னார்கள். ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் எல்லாமே தர்மத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் அதனை சரியான முறையில் செய்ய ஹிந்து அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார்கள். அரசு செய்யும் தவறுகளைத் திருத்துவதைவிட ஹிந்து அமைப்புகளிடம் ஹிந்து ஆலயங்கள் வருவதே முக்கியமானது என்பதே இச்சங்கத்தின் நோக்கம் என்பது புரிந்தது. இதில் தவறு காண இடமில்லை. ஏனென்றால் எல்லா அரசுகளுமே ஆலயங்களின் சொத்துக்களைத் தங்கள் பினாமி சொத்துகளாகத்தான் பாவிக்கின்றன. ஆனால் ஹிந்து அமைப்புகள் வசம் வரும் ஆலயங்களில் பராமரிக்கப்படும் முறைகள் எவ்வகையிலும் சாதி ஏற்றத்தாழ்வு சாராததாக இருக்கும் உறுதியை ஹிந்து அமைப்புகள் வழங்கவேண்டும். அரசு தரப்பில் நடக்கும் குறைகளை எதிர்கொள்ளவாவது முடியும். தனிப்பட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளின் கைகளில் வரும் ஆலயங்களில் நடக்கும் அத்துமீறல்களை எதிர்கொள்வது நிச்சயம் சவாலான ஒன்றே.

பின்னர் பசுவதை பற்றிய, கேரளாவுக்கு இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைப் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. பசு என்றாலே அது எருமை எல்லாவற்றையும் சேர்த்தே குறிக்கும் என்று சொல்லப்பட்டது. இதிலிருந்தே எனது குழப்பம் தொடங்கிவிட்டது. பசுவதை பற்றிய ஒரு தெளிவின்மை எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது. எனவே இதுகுறித்த குழப்பம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த ஆவணப்படம் அந்தக் குழப்பத்தைப் பன்மடங்கு கூட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

பசுவதைத் தடை என்பதை ஹிந்து அமைப்புகள் இன்னும் தெளிவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒட்டுமொத்த பசுக்கொலை தடை என்று தொடங்கினால் அது வெற்றி பெறும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த பசுவதைத் தடை என்பது, பல்வேறு சாதிகளின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடும் என்பதால் இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட, மாட்டிறைச்சியை உண்ணும் உணவுப் பழக்கம் உடைய சாதிகளின் பங்கேற்பில்லாமல் இப்பசுவதை எதிர்ப்பை மேலே கொண்டு போகவே முடியாது. எத்தனையோ தலித்துகள் இன்றும் பசுவதையை ஏற்பதில்லை. உண்மையில் பசுவதை எதிர்ப்பு அவர்கள் மூலம் அவர்களில் இருந்தே தொடங்கவேண்டும். அம்பேத்கர், தலித்துகள் இறந்த பசுக்களின் தோலை உரிப்பதிலிருந்தும், அவற்றின் இறைச்சியை உண்பதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என நண்பர் ஒருவர் சொன்னார். இங்கிருந்தே நாம் தொடங்கவேண்டும். பசுவதை (அதாவது பசுவைக் கொல்லுதல்) என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதை அம்பேத்கர் ஏற்காததன் சூட்சுமம், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் பற்றிய அவரது பார்வையில் உள்ளது. இதே பார்வையே நேருவுக்கும் இருந்திருக்கவேண்டும்.

ஆவணப்படத்தைப் பற்றிய ராதா ராஜன் நேரு மீது குற்றம் சாட்டும் தொனியில்தான் பேசினார். அவரது குற்றம் சாட்டுதல் அவரது பார்வையிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு பெரிய இயக்க முன்னெடுப்பு ஒருவரது அல்லது சிலரது தனிப்பட்ட பார்வையில் ஏற்படும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு நடக்கமுடியாது என்பதே உண்மை. எனவேதான் காந்தி பசுவதைத் தடை என்பது தனிப்பட்ட மனிதரின் மனங்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும் என்றார் போல. சட்டத்தின் மூலமாக இதனைச் செய்யமுடியாது. செய்தால் அது ஹிந்து மதத்தில் சாதி ரீதியான பிளவை இன்னும் ஆழமாக்கும். 

அது மட்டுமல்ல. நேரம் பார்த்துக் காத்திருக்கும் கிறித்துவ மதம் பரப்பும் குழுக்களுக்கு பந்தி விரிப்பது போல் ஆகிவிடும். நேரு அரசின் போது பசுவதைத் தடைச் சட்டம் வருவதை அரசில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் வரவேற்றார்கள். ஆனால் நேரு பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒரு குழுவை நியமித்து அதன் கருத்துகளைக் கேட்டார். அக்கருத்துகளையும் செயல்படுத்தவில்லை. இந்திராவின் ஆட்சிகாலத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் குறித்து ஒரு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கோல்வல்கரும் இருந்தார். இது பற்றிய மேலதிகத் தகவல்களைப் படிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தின்படி, இக்குழுவின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. வாஜ்பாய் அரசிலும் இன்னொரு குழுவிடம் கருத்துக் கேட்கப்பட்டதாம். அக்குழுவின் கருத்துகளும் வெளியிடப்படவில்லை போல. வாஜ்பாயும் நேரு போல் அம்பேத்கர் போல் சிந்தித்திருக்கவேண்டும். 

பசுவதைத் தடைச் சட்டம் என்பது, உயிர்க்கொல்லாமை என்பதை ஒட்டி சிந்திக்கக்கூடிய ஆளவுக்கு மேம்போக்கானதல்ல. நிச்சயம் ஆழமானது. இந்தியாவில் சிறிய சிறிய குழுக்களாக இருந்தாலும் பல்வேறு நுண்மைகளுடன் வேர்கொண்டிருக்கும் பல்வேறு சாதிகளின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டியது. அதைக் கணக்கில் கொள்ளாமல் நாம் பேசமுடியாது. அந்த சாதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக பசுவதைத் தடையை மேலே கொண்டு போகவும் முடியாது. இந்த ஆவணப்படம் வெளியீட்டின்போதே இச்சாதிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் பசுவதை தடை பற்றிய மன மாற்றத்தை நோக்கி நாம் முன்னேற முடியும். பசுவதை எக்காரணம் கொண்டும் ஏற்காத என்னைப் போன்றவர்கள்கூட, ஹிந்து தர்மத்துக்குள் இருக்கும் பல சாதிகளின் கண்ணோட்டங்களைப் பார்க்க யோசிக்கும்போது, அந்த அந்த சாதிகளின், அதுவும் பசுக்கொலை ஒரு பெரிய தவறல்ல என்று நினைக்கும் சாதிகளின் ஆதரவைப் பெறுவது எத்தனை சிக்கலானது என்று புரிந்துகொள்ளலாம். இவர்களை நோக்கியே நாம் பசுக்கொலையைப் பேசவேண்டும்.

முஸ்லிமகள் சில இடங்களில் பசுக்கொலையை ஹிந்துக்களுக்கு எதிரான சிம்பலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பதிலுக்கு பன்றி இறைச்சி நல்லது என்பதுபோன்ற ஹிந்துக்குரலையும் கேட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் விட, பசுவதை என்பது ஹிந்துக்களுக்குள்ளான பெரிய பிரச்சினையே அன்றி ஹிந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல என்று ராதா ராஜன் சொன்னார். இது சரியானதே. எப்போது அது ஹிந்துக்களின் தோல்வியாகிறதோ, அப்போது நாம் அனைத்து ஹிந்துக்களிடமும் அதாவது அனைத்து சாதிகளிடமும் இருந்து நம் பேச்சைத் தொடங்கவேண்டும். அதற்கு முதலில் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேசவேண்டும். இல்லையென்றால், ‘எங்களைக் காப்பாத்தவே நாதியில்லை. இதில் மாடுகளைக் காப்பாத்துறது அதைவிட முக்கியமா போச்சா?’ என்ற குமுறலுக்கு பதில் இல்லாமல் ஓடி ஒளியவேண்டியிருக்கும்.

ஆவணப் படம் தொடர்பாகச் சொல்லவேண்டுமானால், இந்த ஆவணப்படம் மனதை உலுக்கக்கூடியதாக, உயிரை அறுக்கக்கூடியதாக இல்லை. சாதாரணமாக நாம் பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட, வண்டிகளில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லப்படும் மாடுகளையே காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய அரங்கத்தில் பலர் இதனைப் பற்றிப் பேசி, அதற்குப் பிறகு பார்க்கும்போதுகூட ஒரு மெல்லிய பாவம் மட்டுமே தோன்றுகிறது. நாம் மனமும் மூளையும் மழுங்கடிக்கப்பட்டுவிட்ட என்னைப் போன்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால் அதை உடைக்கிற உளியின் சக்தியும் அதற்கு இணையான, அதைவிட அதிகமான வலு கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வலு இந்த ஆவணப்படத்தில் இல்லை. ப்ரீச்சிங் டூ தி கன்வர்டட் வகைக்கு மட்டுமே சில உச் உச் த்ஸொ த்ஸொ வரும். மற்றவர்கள் இதனை எளிதாகப் பத்தோடு பதினொன்றாகக் கடப்பார்கள். இப்படிச் சொல்வதால், இந்த ஆவணப் படத்தின் பின்னாலுள்ள உழைப்பை, தியாகத்தை நான் கண்டுகொள்ளவில்லை என்பது அர்த்தமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் என் கோடி வணக்கங்கள். ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று மட்டுமே சொல்லவருகிறேன். 

மற்ற சாதிகளின் கருத்துக்களோடு, இது மக்களுக்கான இயக்கம் என்று சொல்ல வைக்கிற வகையிலான ஆவணப்படமே பசுவதைத் தடை குறித்த முக்கியமான ஆவணப்படமாகத் திகழமுடியும். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம். ஆவணப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

Share