Tag Archive for மகாபாரதம்

Mahabharatham – Kumbakonam edition – Announcement

தமிழில் மஹாபாரதம் என்றாலே அது கும்பகோணப் பதிப்பு வெளியிட்ட மஹாபாரதம்தான். அசாதாரணமான உழைப்பில், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பில் வந்த புத்தகம் அது. அத்தகைய மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில் இல்லை.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவரே சரி பார்ப்பது, பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் வெளியிடப்பட்டது.

குறைந்தது நூறு பேர் முன்பதிவு செய்தால், இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு நான்கைந்து மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன். 

விலை ரூ.5,000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்புத்தகம் விலை மதிப்பற்ற பொக்கிஷம்.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் வெங்கட்ராமணனைத் தொடர்புகொள்ள: 098946 61259. மின்னஞ்சல்: venkat.srichakra6@gmail.com

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரைப் பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தை வெளியிடுவார். எவ்வளவு பணம், எப்படிச் செலுத்தவேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share

பல கதைகளில் ஒரு விதை

சன் டிவியில் மகாபாரதம் இன்று முதல் தொடராக வரத் தொடங்கியிருக்கிறது. பிரபஞ்சன் கதையாக்கம் என்றதும் ஒரு ஹிந்துவாகவும், உயர் இலக்கியப் பிரதி ஒன்றின் வாசகனாகவும் கடும் வருத்தம் மேலிட்டது. என்னதான் மகாபாரதத்தை ஒருவர் வெறும் இலக்கியப் பிரதியாக மட்டுமே அடைய நினைத்தாலும், ஹிந்து மத வெறுப்பாளர் ஒருவரின் பார்வையில் எப்படி சரியான நியாயமான மகாபாரதத்தைக் கொண்டுவர இயலும் என எனக்குத் தெரியவில்லை. பிரபஞ்சனின் ஹிந்துமதக் கருத்துகள் நானறிந்தவரை, கடும் சாய்வைக் கொண்டவை, ஹிந்து மதத்துக்கு எதிரானவை.  எனவே அவர், இந்த மகாபாரதத்தைத் தனது இலக்கிய முற்போக்குத்துவத்தை நிரூபிக்கக் கிடைத்த இன்னொரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளாதிருக்கவேண்டும். அதேபோல் மகாபாரதம் என்னும் தூய இலக்கியப் பிரதியும் வேதவியாசரின் தூய்மையும் பிரபஞ்சனின் மனத்துக்குள் ஒளிந்துகிடக்கும் நியாய ஹிந்துமதத்தை வெளிக்கொண்டு வராதவாறும் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இன்றைய நிலையில் இதுவரை அவர் காத்து கடத்திக் கொண்டுவந்த முற்போக்கும் முகம் என்னாவது! பல ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த ஒரு கொள்கையை ஒரே நாளில் உண்மையின் பொருட்டாகத் துறக்கவும் ஒரு நேர்மைத் துணிவு வேண்டும்.

sun tv mahabaratham

சன் டிவி மகாபாரதத்தின் இயக்கம் சுரேஷ் கண்ணா என்பது இரண்டாவது அதிர்ச்சி. கிருஷ்ணனை பாஷாவாக்காமல் இருக்கவேண்டும். (நேற்றைய தி ஹிந்து பேட்டியில், தனக்கு கிருஷ்ணர், பாண்டவ, கௌரவர் என்கிற பெயர்களைத் தவிர ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.)

முதல் வாரம் பார்த்தேன். ஒரே ஒரு வாரத்தை மட்டும் பார்த்துவிட்டு கருத்துச் சொல்வது அநியாயம் என்றாலும், ஒரு வாரத்துக்கான கருத்தாக மட்டும் இதைத் தெரிவிக்கலாம். என்னதான் சிலர் கழுவேற்றுவார்கள் என்றாலும், கட்டற்ற இணையவெளி தந்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது எப்படிச் சரியாகும்!

மகாபாரத்தின் முதல் வாரத்தில் வசனங்கள் (வேட்டை பெருமாள்) காற்றில் அலைகின்றன. யார் யாரோ என்ன என்னவோ பேசுகிறார்கள். அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தத்துவம் பேசினால் தாங்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கதையாக்கத்தோடு பிரஞ்சன் நின்றது, சுரேஷ் கிருஷ்ணா தி ஹிந்து பேட்டியில் சொல்வது போல், கிருஷ்ண பகவானின் டைரக்‌ஷனாகவே இருக்கவேண்டும்.

மொத்தத்தில், பிரபஞ்சனுக்கு மகாபாரதம் பழகவும் நமக்குப் பிரபஞ்சன் பழகவும் நாளாகலாம். ஆனால் பிரபஞ்சனின் குடும்பப் பெண்ணிய நாவல்களின் தரம் வந்து என்னைப் பயமுறுத்துவதை நான் மறைக்க விரும்பவில்லை. அவரது உயிர்மை, காலச்சுவடு போன்ற கட்டுரைகளே கொஞ்சம் நம்பிக்கையைத் தருகின்றன. அந்தக் கட்டுரைகளின் அரசியலை நான் ஏற்காதபோதும், அவை விவாதத்துக்கு உகந்தவை என்றே நினைக்கிறேன். மகாபாரதத்தைப் பொருத்தவரை,  அவரது கருத்துச் சுமையுடன் எப்படி மகாபாரதத்தை அணுகப்போகிறார் என்பதைக் காண ஆவலாக (பயந்தும்) இருக்கிறேன். ஆறேழு வாரங்கள் பார்க்கலாம் என்றிருக்கிறேன். சன் டிவியில் பேசிய பிரபஞ்சன், தமிழில் மகாபாரதத்தை எடுப்பதால் தமிழ்த்தன்மையுடன் இருக்கும் என்றார். மகாபாரதம் ஏன் தமிழ்த்தன்மையுடன் இருக்கவேண்டும் எனப் புரியவில்லை. இதுவரை வந்த மகாபாரதங்கள் சந்தனுவில் இருந்து ஆரம்பித்ததில்லை என்று என்னவோ சொன்னார். நான் பார்த்த சோப்ராவின் மகாபாரதம் சந்தனுவின் பிறப்பில் இருந்து தொடங்கியதாகவே நினைவு.

chopra mahabarathபடமாக்கலின் தரத்தைப் பற்றிச் சொன்னால் – மிகக் கொடுமையாக இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இது முதல் ஒரு வாரத்தை மட்டும் பார்த்துவிட்டுச் சொல்வது. ஏற்கெனவே சோப்ராவின் மகாபாரதம் ஒரு பென்ச் மார்க் ஆகிவிட்ட நிலையில், இந்த மகாபாரதத்தை அதனோடு ஒப்பிடுவது தவிர்க்க இயலாதது. அதன் பிரம்மாண்டம் இதில் இல்லை. அதில் இருந்த அமைதியும் பொறுமையும் இதில் இல்லை. இனி வரும் வாரங்களில் சுரேஷ் கண்ணா விழித்துக்கொள்வது நல்லது.

நடிகர்களையெல்லாம் பார்த்தால் முதலில் சிரிப்பு வந்துவிடுகிறது. ஏனென்றே தெரியவில்லை. அவர்கள் வசனம் பேசும் விதம் நம்மை மிரட்டுகிறது. எத்தனை செயற்கையாக நடிக்கமுடியுமோ அத்தனை செயற்கையாக நடிக்கிறார்கள். அதிலும் ஒரு முனிவர் வீராவேசமாக நடந்துவந்த காட்சியில், என் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு நான் வெளியே ஓடிவிட நினைத்தேன். ஒரு திரைப்படத்தில் மிகக்குறிப்பிட்ட பாத்திரங்களைக் கையாண்ட ஒரு திரைப்பட இயக்குநருக்கு இந்த மகாபாரதத்தில் வரும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் பெரிய சவாலாக விளங்குவார்கள். எந்த கதாபாத்திரத்தையும் ஒதுக்கவோ குறைவாக மதிப்பிடவோ முடியாது என்பதே மகாபாரதத்தின் ஆகப் பெரிய சவால்.

ஒட்டுமொத்த மகாபாரதத்தின் பிரம்மாண்டத்துக்குள் சிக்கிக்கொண்டுவிட்டால், எழுத்தாளரும் சரி, இயக்குநரும் சரி, அதன் உள்ளே கொட்டிக்கிடக்கும் பல நுண்மைகள் தரும் பிரம்மாண்டத்தைக் கைவிட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளே ஒளிந்துகிடக்கும் நுண்மைகளின் பிரம்மாண்டம் வழியே மகாபாரத்தை நோக்கினால், ஒரு கலைடாஸ்கோப் தரும் எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற தத்த்துவப் பின்னணியில் அவர்கள் மகாபாரதத்தைக் காண்பார்கள். சுரேஷ் கண்ணாவோ பிரபஞ்சனோ இந்த தரிசனத்தை அடைவார்கள் என நான் நம்பவில்லை. குறைந்தபட்சம் மகாபாரதம் என்னும் பிரம்மாண்டத்தைக் கேவலப்படுத்தாமலாவது இருக்க அவர்கள் நினைத்தால் அவர்களைக் கிருஷ்ணன் காப்பான்.

சோப்ராவின் மகாபாரதம் தமிழில் வந்தபோது அதன் எழுத்துப் பாடல் இப்படி வரும். ஒரு கதைக்குள் பல கதை. பல கதைகளில் ஒரு விதை. இந்த ஒரு விதையையும் பல கதைகளையும் ஒரே போல் பிடித்துக்கொள்வதுதான் சவால்.

Share