Tag Archive for பாலா

தாரை தப்பட்டை – முழுக்க தப்பு

தாரை தப்பட்டை திரைப்படம் பாலாவின் வழக்கமான கொடூரத் திரைப்படமாகத்தான் இருந்தது. இதுவரை வந்த கொடூரத் திரைப்படங்களில் அதை ஒட்டி கொஞ்சம் கதையும் கொஞ்சம் திரைக்கதையும் இருந்தன. இதில் கொடூரம் மட்டுமே உள்ளது.

மிக முக்கியமான குறையாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, படத்தின் பல காட்சிகள் எவ்வித உயிருமின்றி தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் பாணியில் இருந்தன. இது படத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.

சிவாஜி கணேசன் என்ற ஒரு சிறந்த நடிகன் தன் மிகை நடிப்பை நம்பி காலமாற்றத்தைப் பொருட்படுத்தாமல் அதற்குள்ளேயே சிக்கி மடிந்து போனது போல பாலா தன் திரைப்படம் என்ற ஒரு பிம்பத்துக்குள் பலவாறாகக் சிக்கிக்கொண்டுவிட்டார். அவன் இவன் என்ற திரைப்படம் தமிழ்த் திரைப்படக் குப்பைகளில் ஒன்று. நல்ல படங்கள் இயக்கும் இயக்குநர்களின் தோல்விப் படங்கள்கூட ஒரு எல்லைக்கு மேலே பொருட்படுத்தத்தக்கக் கூடிய படமாக இருக்கவேண்டும். ஆனால் தமிழில் இப்படி நிகழ்வதில்லை. தமிழின் இரண்டு மிகச் சிறந்த திரைப்படங்களைத் தந்த பாலு மகேந்திரா சில குப்பைகளைக் கொடுத்திருக்கிறார். மகேந்திரனும் இப்படியே. ஆனால் இவற்றையெல்லாம்விட பாலாவின் அவன் இவன் படு மட்டமானது.

விளிம்பு நிலை/புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய படத்தை எடுப்பதாகத் தொடங்கிய பாலா, எப்படி பாரதிராஜா கிராமங்களைக் காட்டுவதாகத் தொடங்கி ஒரு கட்டத்தில் அவரே கிராமங்களை உருவாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தாரோ அப்படி பாலாவின் விளிம்பு நிலை மனிதர்கள் உருவாகி வர ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் யதார்த்த சமூகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ‘என் பிரா சைஸை நீயே பார்த்துக்கோ’ ஓர் உதாரணம்.

மணிரத்னம் மிகப்பெரிய பிரச்சினையை மையமாகக் கொண்டு காதல் படங்களை எடுப்பதைப் போல பாலாவும் தாரை தப்பட்டை என்று பெயர் வைத்துவிட்டு அதில் என்னென்னவோ காண்பிக்கிறார். ஏன் எதற்கு என்ற திரைக்கதை பற்றிய எவ்வித முதிர்ச்சியும் இப்படத்தில் இல்லை.

நடிகர்களை அதீதமாக மிகை நடிப்புச் செய்யச் சொல்லி பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்தே கலவரப்படுத்துவது பாலாவின் பாணி. அவன் இவன் திரைப்படத்துக்கு அடுத்து வந்ததாலேயே பரதேசி பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலும், பரதேசி திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களிலேயே நான் அடைந்த குமட்டல் இன்றும் நினைவில் உள்ளது. அதேபோலவே இப்படத்திலும் முதல் காட்சியிலேயே ஜி.எம். குமார் அந்த கொடுமையைத் தொடங்கி வைக்கிறார். அவர் இசைக்கும் கருவி என்ன? படத்தின் பெயருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. தப்பட்டை என்றால் பறை என்று விக்கி சொல்கிறது. ஜி.எம்.குமாரோ தவிலை அதை அவர் சிவாஜி கணேசன் போல வாசிக்கிறார். சரக்கு கேட்கிறார். பின்பு ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் பாடுகிறார். கம்பீரமான குரலில். இவர் யார்? சகலகலா வல்லவரா? இவர் ஏன் புகழ்பெறவில்லை? என்ன நடந்தது? ஏன் குடித்துக்கொண்டே இருக்கிறார்? ஒன்றும் விளங்கவில்லை. ஜி.எம். குமார் போன்ற எவ்வித முகபாவங்களும் இன்றி நடிப்பையே கொலையாக்கும் நடிகர்களை பாலா தள்ளி வைக்கவேண்டும். தன்னால் யாரையும் நடிக்க வைக்கமுடியும் என்பதே இயக்குநரின் தோல்வியின் முதல்படியாக இருக்கும்.

ஜி.எம்.குமாரின் ஒவ்வாத (வராத) நடிப்பைப் பிடித்துக்கொண்டு அடுத்து தொடர்கிறார் வரலட்சுமி. அப்படி ஒரு ஓவர் ஆக்டிங். இவரும் சரக்கு கேட்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் குமட்டலை உண்டு பண்ணுகிறது. இன்னொருவருடன் திருமணம் என்றதும் அப்படியே நடைப்பிணமாக மாறுகிறாராம். சகிக்கவில்லை. ஆ ஓ ஊ என்று கத்தினால் நடிப்பு என்ற, தங்கர் பச்சான் கதாபாத்திரங்களின் இலக்கியப் பிரதியை பாலா கைவிடுவது நல்லது.

சசிக்குமாரும் வரலட்சுமிக்கும் காதலாம். ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டுமாம். இது என்ன ரொம்ப புதுமையானதா? பார்த்தால் புரியாதா? இடையிடையே செண்ட்மெண்ட் காட்சிகளை வைத்து அதற்கு இளையராஜா மிகப் பிரமாதமான பின்னணி இசையைப் போட்டு, ஆனால் அங்கே காட்சிகளோ கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.

தேவையற்ற காட்சிகள்தான் ஒட்டுமொத்த படமும். பாலா 10,000 அடி படங்கள் எடுத்துவிட்டு தேவையற்றதை வெட்டிவிடுவார் என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அப்படி வெட்டிப்போட்டதை தவறாக வெளியிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு திரைக்கதை என்றால் சுவாரஸ்யம் வேண்டாமா? அரிசியை ஊற வைத்து உளுந்தை ஊற வைத்து ஆட்டி எடுத்து ஒன்றாக்கி உப்பு போடும் தினசரி வேலையா என்ன திரைக்கதை? இந்தப் படம் அப்படித்தான் இருக்கிறது. அடுத்து என்ன என்று யோசிக்கவே வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது அப்படியே நடக்கும். நாம் அதை ஏற்கெனவே சிவாஜி கணேசன்  காலத்திலேயே பார்த்திருப்போம்.

அந்தமான் போகிறார்கள். என்ன நடக்கும்? ஆட்டக்காரிகளை படுக்கக் கூப்பிடுவார்கள். அதேதான் நடந்தது. ஹீரோவுக்குப் பசி. ஹீரோயின் என்ன செய்வாள்? நடு ரோட்டில் ஆடி பிச்சையெடுத்து ஆடி உருக வைக்கும் பின்னணி இசையில் மாமாவுக்காக அம்மணமாகூட ஆடுவேன் என்று சொல்கிறாள். ஹீரோயினுக்கு உடல்நிலை சரியில்லை. ஹீரோ கண் விழித்துப் பார்த்துக்கொள்கிறான். இதெல்லாம் ஏன் அந்தமானில்? எப்படி அந்தமானில் இருந்து திரும்பி வந்தார்கள்? சட்டென்று ஒரு காட்சியில் தஞ்சைக்கு வந்துவிட்டார்கள். இதை முதல் காட்சியிலேயே காண்பித்திருக்கலாமே. (தஞ்சையின் படித்துறை அழகு.)

ஜி.எம். குமாரை சசிக்குமார் திட்டுகிறார். அடுத்த காட்சியில் ஆஸ்திரேலியாகாரர்கள் பாட அழைக்கிறார்கள். அவர் யாழ் போன்ற கருவியை மீட்டுகிறார். அடுத்த காட்சியில் உங்கப்பன் ஜெயிச்சிட்டான் என்று சொல்லி செத்துப்போகிறார். இதில் ஆஸ்திரேலியாகாரர் மொழி தெரியாமலேயே இவர் பாடிய வரிகளை சொல்கிறார். இசை இணைக்கிறதாம். இசை எப்படி மொழியை இணைத்தது? இப்படி படம் முழுக்க கொடுமைகள் வந்தால் எப்படி சகித்துக்கொள்வது? இதில் பணத்துக்கும் மயங்கமாட்டாராம். கோவக்காரராம். பாராட்டை பதில்-சன்மானமாக திரும்பக் கொடுப்பாராம். ஏனென்றால் கலைஞராம். மீம்களில் வருமே, ஐ டி க்ளையண்ட்டுகள் தங்களை சிங்கம் போல நினைத்துக்கொள்ள, மற்றவர்கள் பார்வையில் பூனை போலத் தென்படுவார்களே, அதைப் போல. ஜி.எம்.குமாரை மிகப்பெரிய சமரசமற்ற கோபக்கார திறமையான கலைஞனாகக் காட்ட பாலா எத்தனிக்கிறார். நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு குடிகாரனின் கோபமும் உளறலும் மட்டுமே. எல்லாரும் அவரை திறமைக்காரண்டா என்கிறார்கள். என்ன திறமை? அதை மறைத்து வைத்துவிட்டார்கள்.

ஒரு செட்டியாருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு பிராமண ப்ரோக்கர் வேலை பார்க்கிறார். (ஆனால் கிறித்துவ டீன் மட்டும் போப்பே தப்பு செய்தாலும் தொப்பியைக் கழற்றிவிட்டு குட்டுபவர்!) என்னென்னவோ சொல்கிறார். வில்லனின் கொடூரத்தைக் காண்பிக்க ஆறு பெண்களுக்கு மொட்டை. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. என்ன எடுக்கிறோம், என்ன சொல்லப்போகிறோம் என்று எந்த இலக்குமின்றி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பாலாவின் திரைப்படங்கள் திரையில் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரைக் காண்பிக்க முயல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் மேல் மரியாதையைக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அது செய்வதில்லை. பொதுப்புத்தியில் இருக்கும் இகழ்ச்சியை வெறுப்போடு இணைக்கிறது. ஆட்டக்காரிங்கன்னா அவுசாரிங்களா என்கிறார். இப்படத்தில் அவர்கள் அத்தனை பேரும் ஆபாசமாகவே ஆடுகிறார்கள். ஆபாசமாகவே பேசிக்கொள்கிறார்கள். மாமனாருடன் சேர்ந்து குடிக்கிறார். ஆனால் வசனம் மட்டும் மரியாதையைக் கேட்கிறது. ஆட்டம் ஆபாசமாக இருந்தாலும் அவர்களைத் தொட உரிமையில்லை என்பது நியாயம். ஆனால் அதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவாகச் சொல்ல பாலாவால் முடியவில்லை.

பாலாவின் நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கே அவரது ஒவ்வொரு படத்தை சீரழிக்கிறது. அது நடிகர்களின் பிரச்சினையல்ல, ஒவ்வொரு நடிகருக்குள்ளும் இருந்துகொண்டு நடிக்கும் பாலாவின் பிரச்சினை. இதைத் தீர்க்காத வரை நல்ல படத்தை பாலாவால் இனி கொடுக்கமுடியாது.

பாலாவின் நகைச்சுவைக் காட்சிகளின் கொடுமை இப்படத்திலும் தொடர்கிறது. லொடுக்கு பாண்டி, சரோஜாதேவி சோப்பு டப்பா என்ற கொடுமைகளின் வரிசையில் இப்படத்திலும் ஒரு காட்சி. புது ஆட்டக்காரியைத் தேடிச்செல்லும் காட்சி. நேரத்தை இழுக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நல்ல படம் என்று எதையுமே பேசமுடியாது என்பதை பாலா புரிந்துகொள்ளவேண்டும்.

கதையை சவசவ என்று இழுத்துவிட்டு கடைசியில் தன் பிராண்டான கொடூரத்துக்குத் தாவுகிறார். ஹீரோ மிருகம் போல தாக்கி எல்லோரையும் கொல்வதும், ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்துவிட்டு அவளைக் கொன்றுவிடுவதும் என கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத காட்சிகள். ஹீரோ மிருகம் போல மாறி அடிக்கும் காட்சிகளின் விஷுவல்கள்கூட பழைய பாலா படங்களைப் பார்ப்பதைப் போலவே உள்ளது.

இதில் சசிக்குமார் மிகையாக நடிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பாவம் அவர் உழைப்பு. பாலா ஹீரோக்களின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போவது இது முதல்முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல.

இளையராஜாவுக்கு செய்யப்பட்ட துரோகம் கொஞ்சம் நஞ்சமல்ல. அட்டகாசமான பாடல்களையெல்லாம் கூறுகெடுத்து கொத்துக்கறி போட்டுக் கெடுத்திருக்கிறார்கள். மிகச்சாதாரண இயக்குநர் கூட இதைவிட ஒழுங்காக எடுத்திருப்பார். பாருருவாயா பாடலைப் பார்த்தால் கதறத் தோன்றுகிறது. இதில் நல்ல பாடல் ஒன்று வரவில்லை. ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேவைப் பார்க்கமுடியவில்லை. ராஜாவின் பின்னணி இசை பலவித மாயங்களை நிகழ்த்துகிறது. காட்சிகள் ஈடுகொடுக்கமுடியாமல் திணறுகின்றன. உண்மையில் ராஜா காட்சிகளுக்குத்தான் இசையமைத்திருப்பார். ஆனாலும், அவன் தன் தரத்தில் இருந்து கீழே இறங்கவில்லை.

இந்தப் படத்தில் ஒரு பெண்கூட நல்லவராக ஏன் இல்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நினைப்பு இப்படத்தை ஒரு சிக்-மூவியாக என் மனத்தில் பதியச் செய்துவிட்டது. ஏன் பெண்கள் மேல் இத்தனை வெறுப்பு, வன்மம்? யோசிக்க யோசிக்க எரிச்சலே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆறு பெண்களுக்கு மொட்டை போடும் காட்சியும், செட்டியார் முன்னிலையில் வரிசையாகப் பெண்கள் வரும் காட்சியும். இவையெல்லாம் கலையல்ல. குரூரத்தின்  கலை என்பது நீங்கள் எதைப் படமாக எடுக்கிறீர்கள், எந்தக் களத்தில் எடுக்கிறீர்கள் என்பதில் உள்ளது. வெற்றுக் குரூரம் கலையாகாது.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த ஒரே காட்சி, அண்ணனும் தங்கையும் ஆடும் தெரு டான்ஸ்தான். அது ஒன்று மட்டுமே யதார்த்தத்துக்கு அருகில் உள்ளது. வரலட்சுமியின் ஆட்டமும் யதார்த்தத்துக்கு அருகில் இருந்தாலும், மற்ற காட்சிகளில் அவர் செய்யும் மிகை நடிப்பு இதையும் சேர்த்துக் கெடுத்துவிட்டது.

ஒரே விதமான கதாபாத்திரங்களைப் படைப்பது, பார்வையாளர்களை திடுக்கிட வைப்பதற்காகவே கொடூரமாக எதையாவது செய்வது, தரமற்ற நகைச்சுவைக் காட்சிகளை வைப்பது, நடிகர்களை ஏனோ தானோவென்று ஓவர் ஆக்டிங் செய்யவைப்பது, திரைக்கதையெல்லாம் தேவையில்லை என்று தன் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பது – இவற்றையெல்லாம் கைவிடவில்லையென்றால் பாலாவின் திரைப்படங்கள் இனி தேறப்போவதில்லை.

பின்குறிப்பு: மகராசி இலவசமா அரிசி கொடுக்கிறதால என்ற ஒரு வரி வருகிறது. அதிமுகக்காரர்கள் இதைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. பாலா போன்ற இயக்குநர்கள் செய்யக்கூடாத ஒன்று இது.

Share

பரதேசி பற்றி நாலு வரி

 

* தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் பிரச்சினையை பிரதிபலிக்கவேண்டிய படம், கிறித்துவ மதமாற்றத்தைச் சொல்லும் படமாக வந்ததில், ஓர் ஹிந்துத்துவ ஆவணமாக ஆகிப் போனதில், வருந்தவா மகிழவா எனத் தெரியவில்லை.

* டேனியலுக்கு இப்பேற்பட்ட துரோகத்தை, அநியாயத்தை பாலா செய்திருக்கவேண்டாம்.

*முதல் பாதியில் நடிப்பு அதீதம். இசை அதீதம். பார்க்க சகிக்கவில்லை. முதல் பாதியில் படத்தில் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியோ வெறும் தொகுப்பாகப் போய்விட்டது. 

* நாஞ்சில் நாடனுக்கும் செழியனுக்கும் அந்த மூதாட்டிக்கும் (என்ன ஒரு யதார்த்தம்) வாழ்த்துகள்.

Share