பாடலும் படமாக்கலும்
நடிகை ஷோபனா சொல்கிறார், யமுனை ஆற்றிலே ஒரு எளிய பாடல் (பாஸிட்டிவாகவே சொல்கிறார்), ஒரு பாடலை மீளக் கேட்கும்போது அதன் காட்சிகள் மனத்தில் மீள்துலக்கம் பெறுவதால்தான் அப்பாடல்கள் பிடித்துப் போகின்றன என்று. இது அடிப்படையிலேயே தவறு. எத்தனையோ பாடல்களை நான் உருகி உருகி கேட்டிருக்கிறேன், அவற்றை நான் காட்சிகளாகப் பார்த்ததே இல்லை! தீர்த்தக் கரைதனிலே செண்பகப் புஷ்பங்களே என்றொரு பாடல். படம் தைப் பொங்கல். அந்தப் பாடலை நான் பல நூறு தடவை உருகி உருகிக் கேட்டிருக்கிறேன். ஒருதடவை அந்தப் பாடலின் கொடுங்காட்சிகளைக் காண நேர்ந்தது. ஆனாலும் அதை மறந்துவிட்டுப் பாடலை அதே நெகிழ்ச்சியுடன் இன்றுவரை கேட்க முடிகிறது. இப்படி எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம். வான்மதியே ஓ வான்மதியே பாடல் வெளியான சில நாள்களிலேயே மனதில் பெரிய பிரளயத்தை உண்டாக்கிய பாடல். படத்தை சில மாதங்கள் கழித்தே பார்த்தேன். இப்போதும் காட்சிகள் பெரும்பாலும் நினைவில்லை; நினைவிலிருக்கும் காட்சிகளும் உருப்படியானதாக இல்லை. இருந்தாலும் அந்தப் பாடல் தரும் ஒரு வலி, இந்த நொடி வரை அப்படியே இருக்கிறது.
அப்படியானால் ஒரு பாடலை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம்? பெரும்பாலும் பாடல்கள் நம் நினைவுகளோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. சிறப்பான பாடல்கள் நம் நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கின்றனவே ஒழிய, அவை காட்சிப்படுத்தப்பட்ட விதத்தை அல்ல. என்னுள்ளே என்னுள்ளே பாடல் உடனடியாகப் பதின்மத்தைக் கொண்டு வருகிறது. வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா பாடலை நினைக்கும்போது என் அம்மா நினைவுக்கு வருகிறாள். குண்டுமல்லி குண்டுமல்லி பாடலை நினைத்தாலேயே என் திருமணக் காலம் நினைவுக்கு வருகிறது. முஸ்தபா முஸ்தபா கேட்டால் என் கல்லூரியில் என் வகுப்பறையில் ஒரு மழைக்காலத்தில் சக நண்பர்களுடன் அமர்ந்திருப்பது நினைவுக்கு வருகிறது. ஒரு நல்ல பாடல் நம் வாழ்க்கையோடு ஒன்றிப் போவது இப்படித்தான். அவை எடுக்கப்பட்ட விதத்தால் நினைவுகூரப்படுவது வெகு அபூர்வமாகவே. ஒரு பாடல் நன்றாக எடுக்கப்பட்டிருந்தால் அதன் கிரெடிட் இயக்குநருக்கு. ஆனால் ஒரு பாடல் அதன் இனிமைக்காக மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுமானால் அதன் கிரெடிட் இசையமையாளர்களுக்கே. மிக மோசமான அதே சமயம் நம் நினைவைக் கிளறும் பாடல்களும் இருக்கக்கூடும். அவை சீக்கிரமே நம்மைவிட்டு விலகிவிடும். மிக இனிமையான பாடல்கள் நம் வாழ்க்கை முழுக்க உடன் வரும். இதனால்தான் எம் எஸ் வி, கே வி எம், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் போன்றவர்கள் மாஸ்டர்கள் ஆகிறார்கள்.