Tag Archive for தியாகராஜன் குமாரராஜா

சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி

சூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது.

முக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு, என்னதான் ஸ்பாய்லர்ஸ் இல்லாமல் எழுத நினைத்தாலும் அது சாத்தியமாகாமல் போகலாம். எனவே, ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

தமிழின் திரையில் இதுபோன்ற மாயங்கள் நிகழ்வது அபூர்வம். அப்படி நிகழும்போது, அதை முதல் காட்சியில் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இப்படம் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியின் கலை பூர்வமானதாகவும், இயக்குநர் நினைத்து நினைத்து வாழ்ந்து செதுக்கி இருப்பதாகவும் அமைவது இப்படத்தில் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் அழுத்தமாக மிக அழுத்தமாக நகர்வதோடு, பெரிய அதிர்ச்சியையும் கொண்டு வருகிறது. அதிர்ச்சி என்றால், ஒவ்வொன்று ஒவ்வொரு வகையிலான அதிர்ச்சி. கடைசி அரை மணி நேரம் வரை, இது போன்ற காட்சிகளைத் திரைப்படம் முழுக்க உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை இது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தமிழ்ப் படத்தில், தாம் எப்பேற்படத்த படத்தில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, அனைவரும் சிறப்பாக நடிப்பதெல்லாம் எப்போதாவது நிகழும் ஒன்று. அது இப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

பின்னணி இசை, உச்சம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் முழுக்க தக்க வைத்திருக்கும் ஒரு மெல்லிய பதற்றம் அசாதாரணமானது. தேவையற்ற இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் முக்கியமானது.

படத்தின் ஒவ்வொரு வசனங்களும் மிகக் கூர்மையானவை. எத்தனை முறை யோசித்து இப்படி எழுதி இருப்பார்கள் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சியாக்கமும் டோனும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகிப் பொருந்திப் போகின்றன.

படம் முழுக்க அசைவ வசனங்கள்தான். முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை. எனவே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்.

புதிய அலை இயக்குநர்களின் படம் என்பதாலேயே ஹிந்து மதம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற அச்சத்தோடுதான் போனேன். ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது கிறித்துவ மதம். மிகத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே இதில் வரும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல, கற்பனையாக மட்டுமே என்று காட்டுகிறார்கள். அடுத்து, ஒரு வசனத்தில் மிகத் தெளிவாக இது கிறித்துவ மதம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பின்பு கிறித்துவ மதத்தின் மதப்பிரசார முறைகளை, இதுவரை எந்தப் படமும் செய்ய துணியாத அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் காட்டுகிறார்கள். அதிலும் மருத்துவமனையிலும் பிரசாரமா என்ற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். கடைசிக் காட்சியில் வரும் வசனம், மிகத் தெளிவாக, ஜீசஸ் பெயரையும் கிறித்துவ மதத்தின் பெயரையும் குறிப்பிடுகிறது. என்ன ஒரு தெளிவு! அனைவரையும் குழப்பி, சென்சாரைக் குழப்பி, இப்படிச் சொல்லியும் வைப்பதெல்லாம், பின்நவீனத்துவத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும்.

பல காட்சிகள் உறைய வைப்பவை. தன் கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் முன் கணவன் வந்திறங்கும் காட்சி, அந்தப் பையன் தண்ணீரில் தன் கையைத் தேய்த்து தேய்த்துக் கழுவும் காட்சி, தன் குழந்தை முன்பு பெண்ணாகிப் போன ஆண் அழும் காட்சி, அனைத்து காவல்நிலையக் காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையில் கதறும் காட்சி, ஃபஹத் ஃபாஸில் சார் சார் என்று சந்தோஷத்துடன் இறுதியில் கத்தும் காட்சி, சம்ந்தாவின் அலட்டல் இல்லாத நடிப்பு, மயக்கம் தெளிந்து உணர்வுபெற்ற பையன் அம்மாவிடம் சொல்லும் முதல் வசனம் – ஒவ்வொன்றும் அட்டகாசம். அதிலும் விஜய் சேதுபதி வழுக்கைத் தலையுடன் காவலதிகாரியைத் தாக்க வரும் காட்சி – தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

இத்தனையோடு ஏமாற்றமே இப்படத்தில் இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. அவை – லாஜிக் தொடர்பானவை. அனைத்துக் கதைகளின் பின்னேயும் ஒரு சிறிய நம்பிக்கையின்மை இருக்கிறது. இப்படி நடக்கமுடியுமா, இப்படிச் செய்வார்களா என்று யோசிக்கிறோம். இது ஒரு பலவீனம். இதை ஏற்றுக்கொண்டு விட்டால் பொக்கிஷத்தின் கதவுகள் திறந்துவிடும். அடுத்த குறை, யதார்த்தங்கள் நிகழ்த்தும் பெரிய விஷயங்கள். பொதுவாகவே புதிய அலை இயக்குநர்களுக்கு இந்தத் தத்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருப்பதைப் பார்க்கிறேன். இப்படத்திலும் இது உள்ளது. மூன்றாவது குறை, தத்துவ அறிவியல் ரீதியான குழப்பத்தைத் திரைப்படத்தில் காட்ட நினைத்தது. இது குறை என்பது எந்த நோக்கில் என்றால், அதுவரை பறந்த படத்தின் வேகம் தொடர்ச்சியான இந்த இரண்டு காட்சிகளில் எதிர்கொள்ளும் தடையின் காரணமாகச் சொல்கிறேன். மிஷ்கினின் அறிவுக்கண் திறக்கும் காட்சியும், ஏலியன் காட்சிகளும் பெரிய தடையைக் கொடுக்கின்றன. அதேசமயம் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியத்துவமும் கொண்டவை. இன்னொரு குறை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு பயணங்களின் தொடர் காட்சிகள். இதுபோன்ற படங்கள், ‘நேரம்’ தொடங்கி நிறைய வந்துவிட்டன. 

தமிழில் எப்போதாவது நிகழும் அபூர்வம் இப்படம். இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே, சாதிவெறி நாட்டுப் பற்று தொடர்பான விஷயங்கள், ஃபஹத் சமந்தா தொடர்பான உறவுச் சிக்கலெல்லாம் புரியும். நியாயமான விமர்சகர் இப்படத்தை இரண்டு முறையாவது பார்க்கவேண்டிய அவசியத்தை, அதிலும் மிகச் சிறந்த திரையரங்கில் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்வார். நான் உணர்கிறேன். தவறவிடாதீர்கள். குழந்தைகளுடன் செல்லாமல் தனியாகச் செல்லுங்கள்.

– ஹரன் பிரசன்னா

Share