Tag Archive for அதே கண்கள்

அதே கண்கள்

அதே கண்கள் – முகில் நண்பர். தூத்துக்குடிக்காரர். எனவே கிட்டத்தட்ட திருநெல்வேலிக்காரர். 🙂 ஸ்க்ரிட்ப் கன்சல்டண்ட்டாக இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார். தனிப்பட்ட வகைப் பழக்கத்தில் முகிலின் பலம் என்று நான் நினைப்பது – அவரது ஹ்யூமர். தன் பலத்தைத் திரைப்படத்தில் கொண்டு வருவது ஒரு கலை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதே கண்கள் படத்தில் முகிலுக்கு இந்த இரண்டும் சரியாக வாய்த்திருக்கின்றன. இந்த அணிக்கு என் வாழ்த்துகள்.

அதே கண்கள் – த்ரில்லர் வகை திரைப்படம். ஆஹோ ஒஹோ என்று புகழ்த்தக்க ஒரு படமல்ல. அதே சமயம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்க ஒரு படமும் அல்ல. தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.

அதே சமயம் ஏன் இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கவில்லை என்று யோசித்தால் –

* நடிகர்கள் தேர்வு முதல் சொதப்பல். கலையரசனால் ஒரு அளவுக்கு மேல் படத்தைத் தூக்கிக்கொண்டு போகமுடியவில்லை. மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். ஆனால் முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்க இவரால் முடியவில்லை.

* படத்தில் ஏமாற்றும் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு அமெச்சூர் ரகம். நகைக்கடையில் அவர் அவமானப்படுத்தப்படும் ஒரு காட்சியில் மட்டும் அத்தனை யதார்த்தம். மிடுக்குடன் வரவேண்டிய மற்ற காட்சிகளில் எல்லாம் ரொம்ப சுமாராகவே நடித்திருந்தார். ஒரு பலமான நடிகை நடித்திருக்கவேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போல.

* மிகவும் கணிக்கத்தக்க கதை மற்றும் திரைக்கதை. அதிலும் யார் கொலைகாரர் என்ற தெரிந்த பின்பும் நீளும் திரைக்கதை.

* பார்வையற்றவர்கள் தொடர்பாக வரும் கதைக்குள் வருவதற்கு, ஹீரோவுக்கு பார்வை இல்லாமல் இருப்பதும், மீண்டும் பார்வை வருவதும் என அலைபாயும் முதல் அரை மணி நேரக் காட்சிகள்.

* மிக மோசமான இசை, ஒளிப்பதிவு.

* மிக நீளமான ஒரே மாதிரியான காட்சிகள்.

இந்த அத்தனை அலுப்பையும் தன்னந்தனியாளாகப் போக்குகிறார் பால சரவணன். இவர் வந்ததும்தான் இறுக்கம் தளர்ந்தது. ஏன் அத்தனை நேரம் இறுக்கமாக இருந்தோம் என்பது பதிலற்ற கேள்வி! பால சரவணனின் மேனரிஸத்துக்கேற்ற வசனங்கள். இந்த வசனங்களில் முகிலின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று படம் பார்க்கும்போது தோன்றியது. இங்கேயும் இத்திரைப்படம் பரவலாக பாஸிட்டிவ் பாராட்டுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. திரைத்துறையில் முகில் வெற்றி பெறவும் அழுத்தமான தடம் பதிக்கவும் வாழ்த்துகள்.

Share