குடியரசு தினம் – 2017
அவன் காட்டை வென்றான்
அவன் காட்டை வென்றான் நாவலைப் படித்தேன். 78 பக்கமே உள்ள குறுநாவல். தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம். தெலுங்கிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். மிகச் சரளமான மொழிபெயர்ப்பு. மிகச் சில வார்த்தைகள் (ரண வாயு, களேபரம் என்று இறந்த உடலைச் சொல்வது போன்றவை) தவிர, வாசிப்பனுவத்தைப் பாழ் செய்யும் அந்நிய வார்த்தைகள் இல்லவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், நாவல் முழுக்க பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மகாபாரதத்தின் மாந்தர்கள் பற்றியும் வந்துகொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் அது இலக்கியப் பெருமை பெறுமா என்பது பெரிய கேள்வி.
அவன் காட்டை வென்றான், கேசவ ரெட்டி, தமிழில்: எத்திராஜுலு, விலை ரூ 25.
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்
மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் இதுவரை மிகவும் அமைதியாக நடந்துகொண்டிருப்பது நல்ல விஷயம்தான். பாராட்டப்படவேண்டியது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு இந்தத் தொடர் போராட்டங்கள் எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக உணர்வு ரீதியாக தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மாணவர்கள் ஒருநாள் போராட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தினால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு தரப்படும்வரை போராட்டம் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் நடத்தும் திடீர் தொடர் உண்ணாவிரதங்கள் போல இது தோற்றமளிக்கிறது. இதுவரை மாணவர்களின் போராட்டம் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்தாலும், இதில் சில விஷமிகள் கலந்துகொண்டு போராட்டத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏதேனும் நடந்தால் அது மாணவர்கள் தலையில்தான் விடியும். எனவே மாணவர்கள் அமைப்புகள் மிகக் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். இது தன்னெழுச்சியான போராட்டம் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை. உள்ளடியாக நிச்சயம் சில அரசியல் நோக்கம் கொண்ட அமைப்புகள் இருந்தே ஆகவேண்டும். இப்படி இருப்பது தவறல்ல, இயல்பானதுதான். ஆனால் மாணவர்களின் முதல் வேலை படிப்பில் கவனம் செலுத்துவது. அரசியல் ஆர்வமும் அரசியல் பங்கெடுப்பும் இரண்டாவது வேலையாக இருக்கலாம். எனவே தொடர் போராட்டங்கள் எல்லாம் சரியானதுதானா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது அரசியல்வாதிகள் தங்கள் தேவைக்கு மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வது புதிதுமல்ல.
இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், 1967ல் மாணவர் போராட்டம் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்த சம்பவத்திலிருந்தே, மாணவர்கள் போராட்டம் பெரிய பிரச்சினையை மட்டுமே கொண்டுவரும் என என் மனதில் பதிந்துவிட்டது. இதை மனதில் வைத்தாவது மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, ஜல்லிக்கட்டுக்கு உணர்வு ரீதியாக தீவிரமான ஆதரவைத் தந்தது போதும் என்று முடிவெடுத்து படிப்புக்குத் திரும்பவேண்டும். நானெல்லாம் படிக்கும்போது ஒருநாள் விடுமுறை கிடைப்பதுதான் ஸ்ட்ரைக்கின் நோக்கம் என்ற புரிதலோடு கல்லூரியில் படித்தவன். இன்று மாணவர்கள் உணர்வோடு தொடர்போராட்டம் நடத்துவது பெரிய ஆச்சரியம் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.
இந்தப் போராட்டத்தின் பின்னணி தனித்தமிழ்நாடு என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தால், போராட்டக்காரர்கள் ஏமாந்து போவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன். ஃபேஸ்புக்கிலும் மாய ஊடகத்திலும் இருக்கும் தமிழகத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு இத்தனை முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஊருக்குள் பெரும்பாலும் இதைப் பற்றிய பேச்சே இல்லை. எனவே தமிழ்நாட்டை மையமாக வைத்து இந்தியாவை எதிர்ப்பவர்கள் வேறு விஷயத்தைத் தேடுவது நல்லது. காவிரி நீர்ப் பிரச்சினை போன்ற மிக ஆதாரமான விஷயத்தில்கூட, வடிவேலு போல ‘லைட்டா வலிக்குது’ என்று தாண்டிப் போனவர்கள் நம் மக்கள். போராட்டம் நடப்பது இவர்களை நம்பியே என்பதுதான் வரமும் சாபமும்!
ஆண்டாள் குறித்து வைரமுத்து – விவகாரம்
ஆண்டாள் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரை மோசமானது. திடீர் இலக்கிய ஞானத்தால் ஏற்பட்ட சறுக்கல். மதங்கள் பற்றியும் ஹிந்து மதம் பற்றியும் வைரமுத்து எழுதி இருப்பது எல்லாமே அபத்தம். இதை மிக எளிதாகவே ஹிந்து நண்பர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். ஜடாயு தமிழிந்துவில் (தமிழ் தி ஹிந்து அல்ல) இதுபற்றி கட்டுரை எழுதி இருக்கிறார்.
ஆனால் கோபம் கொண்டு வைரமுத்துவை வசை பாடுவது, வைரமுத்து சொன்னதிலும் தரம் தாழ்ந்து போவதோடு, வைரமுத்து சொன்னதே பரவாயில்லை என்கிற எண்ணத்தைக் கொண்டு வரும். கடுமையாக எதிர்கொள்வதற்கும் கேவலமாக எதிர்கொள்வதற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதவரை, அடுத்தவர்கள் நம்மீது செலுத்தும் வசையைக் குறை சொல்ல நமக்கு தார்மிகத் தகுதி இல்லை.
ஒருவர் ஒன்றை உளறினால் பதிலுக்கு அவருக்கு உரைக்கவேண்டும் என்ற நோக்கில் அவரது தாயை வசைபாடும் போக்கு ஆபாசமானது. பெண்ணை வசைபாடும் ஆண் மனப்பான்மையை முதலில் கைவிடுவதே நாம் அடிப்படையில் கற்றுக் கொள்ளவேண்டியது.
இப்படிக் கேவலமாகப் பேசி பதிலடி தருவதும் ஒரு தரப்பு என்று சிலர் சொல்லக்கூடும். அதைப் புரிந்துகொள்கிறேன், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற மதங்கள் பற்றி ஒரு நாளும் வைரமுத்து இப்படிப் பேசிவிடத் துணிய மாட்டார் என்பது உண்மைதான். அந்த இடத்தை அடையவே இப்படியான எதிர்வினை என்பதும் புரிகிறது. இப்படித்தான் அடைய முடியுமானால் அந்த இடத்தை அடையவும் வேண்டுமா என்ன.
(ஜனவரி 10)
—
வைரமுத்து ஆண்டாள் பிரச்சினை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் பாரதி ராஜா. இது கிட்டத்தட்ட கொலை மிரட்டல். ஜாதிய ரீதியிலான தாக்குதல். திராவிட இயக்கங்கள் கற்றுக்கொடுத்த, பிராமணர் தமிழர் இல்லை என்கிற சித்தாந்தப்படி காரணமும் கற்பித்தாகிவிட்டது. வெளங்கிரும். ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டதாகப் பொய் சொல்லும் பாரதிராஜா இன்னொரு படம் எடுத்தால் போதும், கத்தி அருவா சுத்தியல் டைம்பாம் எல்லாத்தையும்விட படுபயங்கரமான ஆயுதமா இருக்குமே. ராஜா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் செஞ்சிரலாமே… செய்வாரா செய்வாரா?
(ஜனவரி 12)
—–
நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.
இன்று தேவைக்காக இதை ஆதரிப்போர், இப்படியும் ஒரு தரப்பு இருந்தால்தான் புத்தி வரும் என்போரெல்லாம், பின்னாளில் ஹிந்து மதம் மற்றும் ஹிந்த்துத்துவ ஆதரவாளர்களுக்கு நேரப்போகும் அத்தனை மரியாதையின்மைக்கும் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.
இத்தனை நாள் அடிப்படைப் பண்பிலிருந்து விலகுவது, நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் பெரிய குழி. உடனடி மிரட்டல்களுக்கு இது பயன்பட்டாலும் நமக்கு எதிரான ஆயுதமாகவே இது நீண்ட நாள் நோக்கில் பயன்படுத்தப்படும்.
இதை எதிர்த்தாகவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் ஹிந்துத்துவரின் தேவை. அப்போதுதான் நாளை இதை வாய்ப்பாகச் சொல்பவர்களுக்கு, எங்கள் தரப்பிலேயே மிக அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை மறுபடியாகச் சொல்லமுடியும்.
*
இந்த ஜீயர் உண்ணாவிரதம் இருக்கும்வரை சிலர் ஆஃபர் அறிவித்ததுதான் நேற்றைய உச்சகட்ட அதிர்ச்சி. ஆனால் மனிதர்கள் இப்படித்தான். பதிலுக்கு நாமும் பல விஷயங்களைச் சொல்லமுடியும். ஆனால் அது தரமற்றது. ஒரு ஜீயர் என்றில்லை, ஒரு மனிதன் உண்ணாவிரதம் இருப்பது எதற்காக என்றுகூட யோசிக்கத் தோன்றாமல் இப்படிப் பிதற்றுவதெல்லாம் எளிது. அரசியல் உண்ணாவிரதத்தையும் அழிச்சாட்டிய உண்ணாவிரதத்தையும் ஐந்து மணி நேர உண்ணாவிரத்தையும் பார்த்துப் பழகியவர்களுக்கு இது ஆஃபர் காலமாகத்தான் தோன்றும். ஆனால் இந்த ஆன்மிக உண்ணாவிரதம் ஒரு தாயாருக்காக. இந்த உண்ணாவிரதத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் நிச்சயம் என்னால் எள்ளி நகையாடிப் புறந்தள்ள இயலாது.
இந்த ஜீயர் பற்றி எனக்கு அதிக தகவல்களெல்லாம் தெரியாது. நான் சொல்வது, இவரது இன்றைய நிலைப்பாட்டை ஒட்டி மட்டுமே.
*
வைரமுத்து பிராமணர்களுக்கு எதிரானவர் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அல்லது அந்தத் திக்கில் நான் யோசித்ததில்லை. ஏனென்றால் வைரமுத்துவே தன் சாதியினரின் ஆதரவாளர் என்ற எண்ணம் இருப்பதால். இந்த ஜீயரின் உண்ணாவிரதம் நிச்சயம் வைரமுத்துவை அசைத்துப் பார்க்கும் என்றே நினைக்கிறேன். ஒருவேளை, நான்கைந்து நாள் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கிறேன். பார்க்கலாம்.
(ஜனவரி 18)
ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்
காலம் 50வது இதழ்
காலம் 50 வது இதழ். ஒரு சிற்றிதழ், அதிலும் தீவிரமான சிற்றிதழ், 50வது இதழ் என்னும் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்வது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. யாரோ ஒருவரின் அர்ப்பணிப்பும் தியாகமும் இன்றி இச்சாதனை சாத்தியமே இல்லை. இந்த ஒருவருக்குப் பின்னால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் நிச்சயம் உதவி இருப்பார்கள். அவர்களும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவர்களே. செல்வம் என்ற பெயரே எனக்கு காலம் செல்வம் என்றுதான் பரிட்சயம். காலம் இதழைத் தொடர்ந்து கொண்டு வரும் காலம் செல்வம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
காலம் இதழ் 50 – நிச்சயம் வாசிக்கவேண்டிய இதழ். 176 பக்கங்களில் 150 ரூபாய்க்கு வெளியாகி இருக்கும் இந்த இதழைத் தவற விட்டுவிடாதீர்கள்.
மரிய சேவியர் அடிகளாரின் பேட்டி முக்கியமான ஒன்று. என் கொள்கைச் சாய்வுகளில் வைத்துப் பார்த்தால், என் நண்பர்கள் இதில் கற்கவேண்டியது அதிகம் உள்ளது என்றே சொல்வேன். கிறித்துவம் எப்படி மக்களுடன் இயங்கி கலையினூடாக மக்களைத் தன் வசமாக்குகிறது என்பதை இதில் பார்க்கலாம். என் கொள்கைக்கு எதிர்ச்சார்பு கொண்டவர்கள் இக்கருத்தை நிச்சயம் எதிர்ப்பார்கள். அவர்களுக்கும் இப்பேட்டி ஒரு பொக்கிஷமே.
ஐயர் ஒரு அரிய வகை மனிதர் கட்டுரை – பத்மநாப ஐயருக்கு செய்யப்பட்டிருக்கும் மரியாதை.
தீரன் நௌஷாத்தின் கட்டுரை பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசுகிறது. பலருக்கு இக்குறிப்புகள் பின்னாட்களில் உதவலாம். 🙂
காயா – ஷோபா சக்தியின் சிறுகதை. இன்றைய காலங்களில் மிகக் காத்திரமான சிறுகதைகளில் எழுதுபவர்களில் முதன்மையானவர் ஷோபா சக்தி. அக்கதைகளின் வரிசையில் உள்ள கதை அல்ல இது. இது வேறு ஒரு வகையான கதை. இக்கதையை வாசித்ததும் எனக்கு மனரீதியாக ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அன்று இரவு முழுவதும் இக்கதை என் நினைவில் சுற்றிக்கொண்டே இருந்தது. மிக தொந்தரவு செய்யும் கதை. இத்தொகுப்பின் சிறந்த படைப்பு இது என்பதே என் தனிப்பட்ட ரசனை.
நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு கேப்டன் ஆன வரலாறு என்ற ஒரு சிறுகதையை அசோகமித்திரன் அவரது நினைவிடுக்குகளில் இருந்து தேடி எழுதி இருக்கிறார்.
அமெரிக்க கடற்படையில் அன்னபூரணி அம்மாள் என்னும் கட்டுரை, அன்னபூரணி என்னும் கப்பலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை. 1930ல் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்ட கப்பல் இது. மிக முக்கியமான கட்டுரை.
பொன்னையா கருணாகரமூர்த்தியின் Donner Wetter கதை, இரண்டு மனிதர்களின் அனுபவங்களை அவர்களுக்கிடையேயான கிண்டல்களைப் படம்பிடிக்கிறது. கதை முழுக்க ஒரு மெல்லிய புன்னகையும் இரு மனிதர்களின் ஈகோவும் பிணைந்து வருகின்றன.
திரைப்பட விழாக்கள் – அன்றும் இன்றும் என்ற கட்டுரை சொர்ணவேல் எழுதியது. பல தகவல்களைத் தரும் முக்கியமான கட்டுரை.
நாஞ்சில் நாடனின் ‘கூற்றம் குதித்தல்’ கட்டுரை வழக்கம்போல நாஞ்சில் நாடனின் தமிழ்த்திறமையை பறைசாற்றுவது.
சிறில் அலெக்ஸின் தீண்டுமை கட்டுரை, தொடுதல் பற்றிய அறிவியல் உண்மைகளை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. மிக நல்ல கட்டுரை.
இவை போக இன்னும் சில கதைகளும் (எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழவன்) கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் கதைகளும் பல கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.
காலம் 50 வது இதழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கு எண் 635 மற்றும் அந்திமழை அரங்கு எண் 299லும் கிடைக்கிறது.
அதிமுக இன்று (10-12-2016)
அதிமுக தற்போதைக்கு உடையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எதிர்பார்த்ததுதான். அடுத்த நான்கரை வருடங்களை யாரும் வீணாக்க விரும்பமாட்டார்கள். எம்ஜியார் இறந்தபோது ஜெயலலிதா இருந்த நிலையைவிட ஒப்பீட்டளவில் கம்பீரமான நிலையிலேயே இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட் – கரிஷ்மா. சினிமா புகழ். இது இன்று சசிகலாவுக்குக் கிடையாது. அன்று ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய மைனஸ் என்று எதுவும் கிடையாது. இன்று சசிகலாவுக்கு ஏகப்பட்ட சுமைகள். இதையும் மீறி அவரை மக்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதே சசிகலாவின் முன்னே உள்ள மிகப்பெரிய சவால். ஆனால் மக்கள் இதையெல்லாம் எளிதில் கடந்து செல்வார்கள் என்பதே எரிச்சலூட்டும் முகத்திலறையும் உண்மை. அடுத்த தேர்தல் வரை சசிகலாவுக்குப் பிரச்சினை இல்லை. உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்றாலும் பெரிய கவலை இல்லை. சட்டமன்றத் தேர்தலே முதல் இலக்கு. எம்ஜியார் இறந்தபோது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருக்குமே ஜெயலலிதா ஒரு பொருட்டில்லை. தானே தலைமையேற்க சரியான ஆள் என்று எண்ண பலர் இருந்தார்கள். இன்று சசிகலாவுக்கு இப்பிரச்சினை இல்லவே இல்லை. அடிமையில் மோகம் கொண்ட அமைச்சர்கள் அடுத்த தலைமைக்குத் தயாராக இருக்கிறார்களே ஒழிய, தானே தலைவர் என்றறிவிக்கும் அளவுக்கு தைரியமாக இல்லை. கட்சியை உடைத்துக்கொண்டு போனாலும் சில வருடங்களில் அரசியலில் காலி ஆகிவிடுவோம் என்று தெரிந்திருக்கிறது. அதையும் மீறி கட்சியை உடைக்கும் தேவை திமுகவுக்கு இருக்கிறது.
நம் மக்களின் இன்னொரு பிரச்சினை, ஒரு தடவை ஓர் அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தேர்தலில் வாக்களித்துவிட்டால், அவருக்குத் தண்டனை வழங்கிவிட்டதாக மானசீகமாக முடிவெடுத்துவிடுவார்கள். சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை விரும்பாத மக்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மிக மோசமாகத் தோற்கடித்துவிட்டால், அதற்கடுத்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கோபத்தை மறந்துவிடுவார்கள். இது சசிகலாவுக்கு இருக்கும் இன்னுமொரு சாதகம்.
இதையும் மீறி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலைச் சந்தித்தால் தோற்கும் வாய்ப்புகளே அதிகம். தோற்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். நான்கரை ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அரசியல் அதிகாரமும் பணமும் இந்த நான்கரை ஆண்டுகளில் எப்படி வேண்டுமானாலும் செயல்படச் சொல்லும். இதை மீறி, தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்கெனவே அதிமுக வென்றிருக்கும் வேளையில், மூன்றாவது முறையாக வெல்வது அத்தனை எளிதல்ல. ஜெயலலிதாவின் கரிஷ்மா என்றும் சசிகலாவுக்குக் கைக்கூடப் போவதுமில்லை. ஜெயலலிதா இருந்தபோது தள்ளி வைத்திருந்த நிலையிலேயே சசிகலாவின் குடும்பத்தினர் உருவாக்கிய பிரச்சினைகள் நமக்குத் தெரியும். இன்று ஜெயலலிதா இல்லாத நிலையில், சசிகலாவின் தலைமை உருவாகி வரும் சூழலில், இவர்கள் மிக வெளிப்படையாகவே அதிகார வட்டங்களை உருவாக்குவார்கள். இது 1996 அளவுக்குக் கூட அதிமுகவைக் கொண்டு செல்லும் வாய்ப்பு உண்டு. கூடவே தமிழ்த் தேசியவாதிகளின் பங்களிப்பும் சேர்ந்துகொண்டால், நிலைமையை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியான திமுகவின் நிலையையும் பார்க்கவேண்டும். கருணாநிதியில் அதிகாரம் இல்லாத அரசியல் அந்நேரம் உருவாகி இருக்கும். வாரிசுச் சண்டைகள் எல்லாம் ஓய்ந்து ஸ்டாலின் நிச்சயம் முக்கியத்துவம் பெற்றிருப்பார். இப்போதே கிட்டத்தட்ட அப்படித்தான். சரியான கூட்டணியுடன் ஸ்டாலின் வெல்லும் வாய்ப்புகளே அதிகம். அந்த வாய்ப்பை உறுதி செய்யவேண்டியதே இன்றைய திமுகவின் முக்கிய வேலையாக இருக்கவேண்டும். பாஜக புழைக்கடை வழியாக வருகிறது, நூலேணியில் இறங்கி வருகிறது என்றெல்லாம் கதை பேசிக்கொண்டிருந்தால், சசிகலாவிடமும் தோற்க வேண்டிய அவல நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதிமுகவை உடைப்பது குறித்து அதிமுகவினரை விட திமுகவினர் பதற்றமடைகிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்கக்கூடாது என்று திமுகவினர் பதறுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திமுககூட அதிமுகவை உடைக்கக்கூடாது என்று நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது எதிரணியை உடைப்பதையும் உள்ளடக்கியதுதான் அரசியல். மற்ற கட்சிகளைவிட நல்லாட்சியைத் தருவோம் என்பதே ஒரு முக்கியக் கட்சியின் முதன்மை நோக்கமாக இருக்கும். இதன் பின்னணியில் நல்லது செய்வதை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்சியை உடைப்பதும் அந்த வெற்றிடத்தில் ஆட்சியைப் பிடிப்பதும் அரசியல்தான். இந்த அரசியலை எத்தனை வெளிப்படையாக மேற்கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது. பணத்தின் மூலம் இதைச் செய்வதுதான் பிரச்சினைக்குரியதே ஒழிய, அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு செய்வது பெரிய பாவமல்ல. இதற்காக திமுகவினர் பதறுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தைப் பற்றி யோசிப்பது நல்லது. இதைச் சொல்வது ஏனென்றால் இது பாஜகவுக்கும் பொருந்தும். 🙂 ஆனால், பொன் இராதாகிருஷ்ணனும் தமிழிசையும் எத்தனை நல்லவர்கள் என்றால், ஒரு ஃபோன் போட்டு, இப்படி அதிமுக தத்தளிக்கும்போது அதை உடைக்கும் அரசியல் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு உடனே ஏற்றுக்கொண்டு இன்னும் அமைதியாகிவிடுவார்கள். அத்தனை நல்லவர்களைப் பார்த்து பின்வாசல் அவதூறுகளைப் பரப்பாதீர்கள். மீறினால் நரகம் நிச்சயம். 🙂
சுஜாதா (சிறுகதை) – சும்மா வெளாட்டுக்கு
சுஜாதா (சிறுகதை)
சுஜாதா போர்வையை விலக்கிக் கண்களைக் கூசிக்கொண்டே பார்த்தபோது விடிந்திருந்தது. மெத்தையின் இன்னொரு ஓரத்தில் கலைந்து கிடந்த ஷ்யாமை மீண்டும் கட்டிக்கொண்டாள். இன்னும் அவன் உடம்பு சூடாக இருப்பதை நினைத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள்.
அவனை உலுப்பி, “இன்னும் எத்தன நாள் இப்படி?” என்றாள் சுஜாதா. திரும்பிப் படுத்தான் ஷ்யாம். வீட்டின் சுவர்களில் இருந்த பளபளப்பில் காலை நேரத்தில் கலைந்திருந்த உடையில் அவள் தேவதை போல் இருந்தாள். ஷ்யாமின் கண்கள் அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தன. “உன்னைத்தாண்டா கேட்கறேன்” என்றாள் சுஜாதா.
பதினாறு வயதுப் பெண்ணின் உடல் என்றால் அவளைப் பார்க்கும் யாரும் நம்பமாட்டார்கள். வாழ்க்கை முழுக்க வறுமையில் வளர்ந்த ஷ்யாமிடம், இப்படி இரவுகளில் செண்ட் மணக்க மணக்க ஒரு பெண் ‘நின்னு விளையாடுவா’ என்று யாராவது சொல்லி இருந்தால் சிரித்திருப்பான். தன் கையை அனிச்சையாய் முகர்ந்து பார்த்தான். சுஜாதாவின் வாசனை.
“போதும், கேட்டதுக்கு பதில் சொல்லுடா.”
அவளை இழுத்துத் தன் மேல் போட்டுக்கொண்டான். பஞ்சுப் பொதி போல இருந்தாள். “இல்ல. எனக்கு இப்ப 22 வயசுதான் ஆகுது. நீ ராணி மாதிரி வளர்ந்திருக்க. உன்னை இப்படி வெச்சு பார்த்துக்கறதெல்லாம் கனவுல கூட நடக்காது.”
“ஸ்டாப் இட் இடியட். இதையே எத்தனை தடவை சொல்லுவ. நைட்ல நீ சொல்றதை நான் கேக்கறேன். பகல்ல இனிமே நான் சொல்றதை நீ கேக்கற. இன்னைக்கு நைட் கோயம்பேட்ல எட்டு மணிக்கு ரெடியா இரு. பெங்களூரு போறோம். குட்பை சென்னை. குட்பை மம்மி டாடி. நம்ம உலகம். நம்ம வாழ்க்கை. நம்ம உடல்” என்று சொல்லிக் கண்ணடித்தவளின் உறுதி கண்டு ஷ்யாமுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவளுக்கு பயமே கிடையாதா? எப்படிச் சமாளிப்பாள்? இவளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம். பயம் வயிற்றில் சுழன்றது.
சுஜாதா ஷ்யாமின் கையைப் பிடித்தபோது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்த காஃபி ஷாப்பில் மணி எட்டைக் காண்பித்தது. அவள் அவன் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டான். கை வியர்த்திருந்தது.
“பயப்படாதடா பொறுக்கி. எதுக்கு பயப்படணுமோ அதுல பயம் இல்லை. இப்ப என்ன” என்றாள். ஷ்யாம் மையமாகச் சிரித்தான்.
பெங்களூரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொண்டார்கள். ஷ்யாம் கையில் ஒன்றுமே கொண்டு வரவில்லை. எதுவும் கொண்டுவரக்கூடாது என்று சுஜாதா சொல்லி இருந்தாள். சுஜாதாவிடம் ஒரு ஹேண்ட் பேக்கும், ஒரு பெரிய சூட் கேஸும் இருந்தது. பக்கத்தில் இருந்த ஷ்யாம் கையைப் பிடித்து இழுத்து அந்தப் பெட்டியின் மேல் வைத்து, “இது சூட் கேஸ் இல்லை, சூட் கேஷ். 2 கோடி ஹாட் கேஷ். இனி கவலையே இல்லை” என்று ரகசியமாக அவன் காதில் மட்டும் விழுமாறு சொன்னாள். பின்னால் உட்கார்ந்திருந்த இன்னொரு ஜோடி இவர்களைக் கவனிக்காமல் தெருவில் ஓடிக்கொண்டிருந்த ஆங்கில செய்தி சானல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தது.
“ரெண்டு கோடின்னா இந்தப் பெட்டிக்குள்ள அடங்கிடுமா?” என்று அப்பாவியாகக் கேட்ட ஷ்யாமின் கன்னங்களில் யாரும் அறியாமல் உரசிக்கொண்டே சிரித்தாள் சுஜாதா. “இந்த அப்பாவித்தனம்தாண்டா என்னை சாச்சிடுச்சு.”
தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை எடுத்து அவன் கைகளில் கட்டிவிட்டாள்.
“மறக்கமுடியாத இந்த நாளோட கிஃப்ட் ஒனக்கு. சோனி ப்ராண்ட். 40,000 ரூபாய். உன் கைல ஸோ க்யூட்.”
அவன் வாட்ச்சைப் பார்த்தான். November 8, Tuesday, 8.05 PM என்று காட்டிக்கொண்டிருந்தது.





