அமீரக நான்காம் ஆண்டுவிழா அறிவிப்பு


வருகிற மே மாதம் முதல்வாரம் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் நான்காமாண்டு நிறைவுவிழா நடைபெறவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இந்த விழாவின்போது கணினியில் தமிழ் தொடர்பான செயல்முறைவிளக்கம்,குறுந்தகட்டில் தமிழ் மென்பொருட்களின் இலவச வினியோகம், கவியரங்கு, நூல் வெளியீடு ஆகியவை முக்கிய நிகழ்வாக இடம் பெறப் போகின்றன.

அமீரகத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளும் இந்த

விழாவில் குறைந்தது 500 பேராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த விழாவின்போது வெளியிடுவதற்காக ஆண்டுவிழா மலர் தயாரிக்கும் வேலைகளிலும் நாங்கள் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்..இதற்காக தமிழறிஞர்கள்,ஆன்றோர் பெருமக்களிடமிருந்து ஆக்கங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.

1000 பிரதிகள் அச்சிடப்படும் இந்த் ஆண்டு விழா மலரில் உங்களது ஆக்கமும் இடம் பெற வேண்டுமென்றால் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள்ளாக உங்களது படைப்புகளை எனக்கு அனுப்பித் தரும்படி மிக அன்புடன் வேண்டுகிறேன். ஆண்டு விழா மலர் படைப்பு என தலைப்பிட்டு அனுப்பினால் மிக நன்றியுடையவனாவேன்.

அமீரகத் தமிழிணைய நண்பர்களின் ஆண்டு விழா மலரைச் சிறப்பிக்கும் வண்ணம் உங்கள் ஆக்கங்களை அனுப்பித தருமாறு மீண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.

மிக்க அன்புடன்,

ஆசிப் மீரான்

(அமீரகத்தமிழிணைய நண்பர்களின் மலர் குழுவினருக்காக)

நண்பர்கள் இந்த அறிவிப்பை அவர்கள் வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ள ஆசிஃப் மீரான் சார்பாக வேண்டுகொள் வைக்கிறேன்.

நன்றி.

Share

தொகுப்பு – கவிதை

காற்றில் ஆடும் சிறிய வேப்பஞ்செடியின் பாத்தியில்

மீந்திருக்கும் சிறுநீர் வாடை

காற்றோடு கலந்தடிக்கும்போது

வேப்பஞ்செடிக்காக விசனப்பட்டு

அம்மா சத்தமாய் வெய்வாள், என்

மௌனச்சிரிப்பு காற்றில் கலக்கும்

தொடர் ஏச்சுக்குப் பயந்து

ஓடும் என் கால் சத்தம் கேட்டுப்

பரபரப்படையும் அணில்

திசை தெரியாமல் மரம்தேடி

செடிகளில் மோதிச் செல்ல, கோபிக்காமல்

சிரித்து ஆடிய செடிகள்

என்னைப்போலவே குழந்தைமை தொலைத்து இன்று மரங்களாய்.

வெள்ளையை மறைத்துக் கரும்புகை பீடித்துச்

சவாலாய் நிற்கும் வீட்டின் சமையலறைப் பின்சுவரில்

மாங்காய்க்கொட்டைக் கிறுக்கல்களில்

ஒருவன் கெட்டவார்த்தை சொல்ல

மற்றவன் கலவிப் படம் வரைய

பெயர் சொல்லாமல் என் காதல் சொன்னேன்

பதிலாய் எவனோ வக்கிரம் சொன்னான்

மறுபதில் இப்போதெழுத

பள்ளியில்லை; சுவரில்லை

படிக்க அவனில்லை; புரிய அவளில்லை

மேலும், அந்த நான் இல்லை

ஞாபகங்கள் உந்தித்தள்ள

வழியில் வீழ்ந்துகிடக்கும் காய்ந்த சருகுகளில் கண்கள் குத்தி

மெல்ல நடக்கின்றேன்

கைவிட்டுப் போன என் வீடு

வெளிச்சுவரில் புதிய கரிக்குச்சிப் படங்களோடும்

உட்புறச்சுவர்களில் மோதும் அந்தரங்க நினைவுகளோடும்

இன்னும் அங்கே இருக்கிறதாம்

இந்தக் கவிதை அமீரக அண்டுவிழா மலரிலும் வெளியாகியிருக்கிறது. ஆசிஃப்மீரானுக்கு நன்றி பல.

Share

பரணிக் கவிதை – 2

செவி வழி நிலம்

இது ஐ ஆர் எட்டுடே

அது ஐ ஆர் இருபதுடே

நல்ல சம்சாரிக்கு

புல்ல பாத்தாலே வித்தியாசம் தெரியுமுல்லா

அங் ங் ங் ங்க ஓடுதுல்லா…

அது பொது ஓட

ஓடைக்கடுத்தாப்ல உங்கப்பன் வயலு

கொழுந்துனா மலையடில

கோவணத்தக் கட்டிட்டு

கல்லுப்பொறுக்கி வெளயாண்டோம்

பஞ்சம் தாங்காம போயிட்டான்

மறுமாசமே வித்துட்டேல்லா?

பாத்துவாடே.. நெருஞ்சி கெடக்கும்

இன்னைக்கு நம்ம வரப்பு பச்சயா நிக்கி

ஆளப் பாத்துச் சிரிக்கி

காத்துள்ளபோதே தூத்துக்கோன்னான்

இப்பமே பாத்துக்கடே

பரணிக் கவிதை – 1

Share

பரணிக் கவிதை – 1

ஏட்டி

ஏட்டி!

நிம்மதியாக் கெடந்து நாளாச்சுட்டி

மனசத் தொறந்து சொல்ல

மறுகுதேன் முடியல

களத்துமேட்டுல சொல்லலாம்னா

கௌவிங்க இருக்குறாளுவோ

கெணத்துமேட்டுல சொல்லலாம்னா

கொமரிங்க குளிக்குறாளுவோ

நடுசாமத்துலச் சொல்ல வந்தா

நாய் கெடந்து கொலைக்குதுட்டி

ஆத்தாக்காரி முழிச்சிக்குறா

எழவெடுத்தவ

ஆயிரத்தெட்டு கேக்கா

கருக்கலில சொல்லவந்தா

அண்ணங்காரன்

மானமே வெளுக்கல

மசுரப்புடுங்கப் போறியாலங்கான்

கிராமத்துல பொறந்தவன் நா

கவிதயா சொல்ல முடியும்?

தேனெடுக்கேன் தெனமும்

தேனீக்க கொட்டுதுட்டி

வலிக்கல

ஓன் நெனப்பு நெதமும்

நெஞ்சில கொட்டுதுட்டி

தாங்கல

கேக்காம வெதச்சிட்டேன்

மரமா ஒசந்துட்டு

தூரப் போட முடியல

உசுரோட ஒட்டிகிட்டு

ஆத்துக்குள்ள குளிக்கயில

அயிர மீனு கடிக்கயில

கால் ஒதற மனசு வல்ல

ஒன்ன கடிச்ச மீனோ?

தொறந்து சொன்னாத்தானா?

சிரிக்கி

என் கண்ணப்பாத்தா புரியல?

இங்கிட்டு இம்புட்டுக் கிடக்கு

மனசுல அம்புட்டு இருக்கு

அங்கிட்டு எப்படியோ?

நெசமா சொல்லுதேன்ட்டி

நிம்மதியா கிடந்து நாளாச்சு

Share

CuSO4 கவிதை


தாதுகள் நீக்கப்பட்ட

மீத்தூய் நீரால் நன்கு கழுவி

நன்கு உலர்த்தப்பட்ட

ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்

10 கிராம் தாமிரசல்பேட்டை

துல்லியமாக நிறையிட்டு

குடுவைக்குள் இடுங்கள்.

1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து

தூய கண்ணாடிக்குச்சியால் கலக்குங்கள்

இப்போது நீங்கள்

1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்

நிபுணனாகி இருக்கிறீர்கள்

ஊடுருவிச் செல்லும் ஒளியில்

நீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்

குடுவைக்குள் செயற்கை கடல்

துள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி

நீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்

தரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென

பிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்

பெருமை பட்டுக்கொள்ளுங்கள்…

நீங்கள் வேதியியல் உலகக்காரர்.


 
Share

பரிகசிப்பு – கவிதை


கேட்டுக்கேட்டு

பார்த்துப் பார்த்து

பழகிப் பழகி

ஒவ்வொன்றாகப் பதித்துக்கொண்டு

சுயம்பு உருவாகிறது

மனதுள், பிம்பமாய்.

சில நிகழ்ந்த கணங்களில்

அணிச்சையாக

தானே வரைந்துகொள்கிறது

ஓர் அருவ ஓவியம், உள்ளுக்குள்.

எதிர்பாராமல் இடறி

கையுதறும் நேரம்

பதறாமல், எதிராளி

சிரித்த நொடியில்,

பொருந்தாத ஓவியப் பிம்பத்தை

கேள்விகளில்லாமல் நெட்டித்தள்ளி

பெரிய பரிகசிப்போடு

உள்வந்தமரும்

இன்னொரு ஓவியம்

தன்னை நிஜமென அறிவித்து.

Share

இரண்டாம் கவனம் – கவிதை

கவனம் ஈர்க்கிறது

முன்னெப்போதோ ஒரு கணத்தில்

மலர்ந்துவிட்ட பூ,

நிறமிழந்து

மணமிழந்து

தேனீக்களின் கவனமிழந்து

காம்பறுத்து

சிதறிய சருகுகளாய்

மென்காற்றிலாடி

கீழே விழும்போதும்.

Share

பெயர் சூட்டிக்கொள்ளும் பறவை – கவிதை

வானத்தில் சுழன்றடிக்கிறது

பெயர் தெரியாத பறவையொன்று

மற்றவையோடு

அதிக வித்தியாசங்களில்லை

அமர்ந்திருத்தலில்

தலைசாய்த்தலில்

இமைத்தலில்

ஓயாமல் இறக்கைகள் அடித்தலில்

வானம் அளத்தலில்

பெண்துணைத்தேடலில்

புதுச்சட்டைச் சகிதம்

தேர் காணப் போகும்போது

“சொத்”தெனப் பொதுப்பதிவு செய்து

பெயர் சூட்டிக்கொள்கிறது

“எச்சமிட்ட பறவை”.

Share