Archive for பொது

சென்னை வானொலி 81

சென்னை ரேடியோ 81
 
நாங்களெல்லாம் சின்ன வயசில் வானொலி வெறியர்கள். கையில் ஒரு ரேடியோவை வைத்துக்கொண்டு அதன் பட்டனைத் திருகு திருகென்று திருகி திரைப்படப்பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். என் அம்மா தன் இளம் வயதில் இரவு விழித்திருந்து ஃப்ளாஸ்க்கில் காப்பி போட்டு வைத்துக் குடித்துக்கொண்டு விழித்திருந்து பாட்டு கேட்டவர்கள். கர்நாடக சங்கீதம் என்னவென்றே என் அப்பாவுக்குத் தெரியாது என்றாலும் ரேடியோவில் எங்காவது காதில் விழும் ஆலாபனைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியாகத் தலையை ஆட்டி, கையைத் தட்டித் தாளம் போட்டவர்.
 
எத்தனை கஷ்டத்திலும் என் வீட்டில் எப்போதும் ரேடியோவும் டேப் ரிக்கார்டரும் இல்லாமல் இருந்ததில்லை. சங்கராபரணம் வீட்டில் ஓடிய ஓட்டத்தில் கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர்கள் தெலுங்கர்களாகிவிடுவோமோ என்ற அச்சமெல்லாம் வந்ததுண்டு. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் வசனம் தமிழ்நாட்டைவிட எங்கள் வீட்டில் அதிகம் ஒலித்திருக்கும்.
 
இப்பேர்க்கொத்த பரம்பரையில் வந்த ரேடியோ சோழன் எம்எல்ஏவாகிய நானும் இதே ரேஞ்சில் ரேடியோ பைத்தியமாக இருந்தேன். கேசட் வாங்க காசில்லாததால் ரேடியோவே சரணம். திருநெல்வேலியில் இருந்து சென்னை ரேடியோ கேட்க அல்லல்பட்டதெல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. இலங்கை ஒலிபரப்புதான் எங்களைக் காப்பாற்றி உயிருடன் இருக்க வைத்தது. இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலைதான். மதுரைக்குக் குடி பெயர்ந்ததும் கொஞ்சம் சென்னை ரேடியோ கேட்கக் கிடைத்தது. டொய்ங் ட்யூயூ சத்தத்துக்கு நடுவில் சென்னை ஒலிபரப்பின் திரைப்பாடல்களைக் கொஞ்சூண்டு கேட்டோம். என்னவோ சாதித்த மிதப்பு ஒன்று வரும். காலை 8 மணிக்கு, இரவு பத்து மணிக்கு ரேடியோவில் சரியான அலைவரிசை கிடைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். ரேடியோவை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்பி, சரியாக 750 பக்கத்தில் ஒரு அலைவரிசையில் அந்த சிவப்புக் கோட்டு ட்யூனரை நிறுத்தி வைத்து… இதில் சில ட்யூனர்கள் 700ல் நிற்கும், ஆனால் 600க்கான அலைவரிசையை ஒலிபரப்பும். எனவே குத்துமதிப்பாக ஒரு கரெக்‌ஷன் போட்டு அந்த ட்யூனரைத் திருகி, ரேடியோ தலைகீழாக ஓரமாக நிற்க வைத்து – என்னவெல்லாமோ செய்திருக்கிறோம்.
 
ஒரு படப்பாடல், ஒரு பாடல் முடிவின் வார்த்தையில் தொடங்கும் அடுத்த பாடல் என்று என்னவெல்லாமோ மாயாஜாலம் செய்வார்கள். திரைப்படங்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, ஒரு பொருள் வருமாறு சொல்வார்கள். காரில் போகும் பாடல்களாகப் போடுவார்கள். ஆனால் திருநெல்வேலி ரேடியோ ரொம்ப சுத்தபத்தம். இதையெல்லாம் செய்யாது. கடுப்பாக வரும். 85களின் பிற்பகுதியில் மதுரை ரேடியோ வந்ததும், தெளிவாகப் பாடல்கள் கேட்க ஆரம்பித்தோம். சென்னையின் அனைத்து நூதனங்களையும் மதுரை வானொலி செய்தது. காலை 8.20க்குத் துவங்கி 9 மணி வரை திரைப்படப் பாடல்கள். வீட்டில் இருந்து 8.45க்குக் கிளம்பி 9 மணிக்குப் பள்ளி அடையும்வரை தொடர்ச்சியாக எல்லார் வீட்டிலும் பாடல்கள் கேட்கும். கேட்டுக்கொண்டே நடக்கலாம். அற்புதமான உணர்வு அது.
 
சென்னை ஏ எம்-ஐ, சிற்றலையில் கேட்கலாம் என்று கேள்விப்பட்டபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சிற்றலை என்ற ஒன்றை அதுவரை பயன்படுத்தியது கூட இல்லை. சென்னை ஏ எம்மை சிற்றலையில் கேட்டோம். இதை எப்படிச் சரியாகச் சொல்வது என்று தெரியவில்லை. பேண்ட் 2 என்ற நினைவு. பாடல்கள் தெளிவாக இருக்கும். ஆனால் ஆனால் ஆனால், ஐயோ, கொஞ்சம் குறைந்தும் பின்னர் அதிகமாகவும் பின்னர் குறைந்தும் ஒலி கேட்கும். ஒரு மலைமீது நின்றுகொண்டு, ஊருக்குள் ஒலிக்கும் ஸ்பீக்கர் ஒலி காற்றில் உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்பது போல. கண்ணீர் வரும். அதிலும் சென்னையின் கிரிக்கெட் வர்ணனையைக் கேட்கும்போது அவுட் ஆகும்போதோ அல்லது சிக்ஸ் அடிக்கும்போதோ ஒலி உள்ளே போய்விடும். அப்புறம் அந்த ஹிந்திக்காரன் எழவெடுப்பான், என்ன சொல்கிறான் என்பது புரிந்தும் தொலையாது. ஹேண்ட்ஸ்ஃப்ரியும் கிடையாது. பெரிய ரேடியோவை காதுக்குள் திணித்து திணித்து, என்ன கடவுள் இவனெல்லாம், காதைக் கொஞ்சம் பெரியதாகப் படைத்துத் தொலைத்தால்தான் என்ன என்ற விரக்திக்குள் நுழையும்போது டெண்டுல்கர் அவுட் ஆனது புரிந்திருக்கும்.
 
நாஸ்டால்ஜியா கொட்டமிடும் நேரத்தில் இப்போதும் தஞ்சம் புகுவது ரேடியோவிடத்தில்தான். எல்லா ஏ எம் சானல்களும் இணையத்தில் கிடைப்பதில்லை. சென்னை மட்டும் கிடைக்கிறது. (சிம்பிள் ரேடியோ ஆப்.) திருநெல்வேலி மதுரை வானொலி ஏ எம் சானல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். முன்பு திருநெல்வேலியில் இருக்கும்போது திருநெல்வேலியைவிட திருவனந்தபுரம் ஏ எம் துல்லியமாகக் கேட்கும். கடும் கோபமாக வரும். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைத்துத்தான் நேரம் தெரிந்துகொள்வோம். மதுரையில் பாட்டு போட்டால் 8.20. பொங்கும் பூம்புனல் என்றால் 7 என நினைவு. இலங்கை ஒலிபரப்பை நிறுத்தினால் 10. பின்னர் எதோ நேர கரெக்‌ஷன் போட்டு 10.30 என்றான நினைவு. வானொலியுடனேயே வளர்ந்தோம். அயர்ன் கடைக்காரர் வானொலியில் என்ன வருகிறதோ அதைக் கேட்டுக்கொண்டு அயர்ன் செய்வார். தெருவில் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்பவரின் தலைக்குப் பக்கத்தில் ரேடியோ இருக்கும். ரேடியோவின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு குரலுக்கும் பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள். ராஜிவ்காந்தி கொலையை அறிவித்த செல்வராஜின் (பெயர் சரியா?) குரல் இன்னும் நினைவிருக்கிறது. என்னென்ன நினைவுகள்.
 
இன்று சென்னை வானொலி 81ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறதாம். அனைத்து ஏ எம் சானல்களையும் இணையத்தில், ஆப்பில் கிடைக்க வைக்காவிட்டால் சீக்கிரம் மூடுவிழாதான். அப்படி மூடு விழா நடக்காமல் 100ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க வாழ்த்துகள்.
Share

சூழல் பேணல்

நான் காந்தி நிகேதன் பள்ளியில் (கல்லுப்பட்டி) படித்துக்கொண்டிருந்தபோது தினமும் பள்ளியைச் சுத்தம் செய்யவேண்டும். பள்ளி என்றால் வகுப்பறைகளை மட்டும் அல்ல, பள்ளியைச் சுற்றியுள்ள இடங்கள், மண் தரை எல்லாம். அங்கே நின்றிருக்கும் மரங்களில் இருந்து விழும் இலைகள், காக்கை எச்சம் என எல்லாவற்றையும் தினமும் சுத்தம் செய்யவேண்டும். அன்றெல்லாம் கடும் எரிச்சல் தந்த பணி அது. அந்தப் பள்ளியில் படித்ததற்காக ரொம்ப வருத்தமும் எரிச்சலும் பட்டேன். (இன்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்த நினைவு அப்படியே உள்ளது. நான் படித்ததிலேயே மிக மோசமான பள்ளி அதுதான்.) அப்போதெல்லாம் அக்காங்களும் ஐயாக்களும் (ஆசிரியர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும்) காந்தி எப்படி தன் வாழிடப் பகுதிகளைத் தானே சுத்தம் செய்தார், எப்படிக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தார் என்றெல்லாம் விளக்கி, தங்கள் இடத்தைத் தாங்களே சுத்தம் செய்யவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்கள். பள்ளி காந்தியத்தை பிரம்படியில் போதித்தது. சரியான உணவு இல்லாமல், மிகவும் ஏழ்மை நிலையில் மயங்கிச் சரியும் மாணவர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்தது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்றே அன்று நினைத்தேன். வயது அப்போது 12 இருக்கலாம்.
 
பிற்பாடு, ஒரு மாணவன் தன் பள்ளியைச் சுத்தம் செய்வது அத்தனை பெரிய மோசமான காரியமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அத்தனை கெடுபிடியில் அதைச் செய்திருக்கக்கூடாது என்று இன்றும் தோன்றுகிறது.
 
 
இன்று இந்தச் செய்தியைப் பார்க்கிறேன். இனி பள்ளிகளில் இப்படிச் சுத்தம் செய்யச் சொன்னால் பெற்றோர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது புரிகிறது. ஆசிரியர்களின் கைகளில் இருந்த பள்ளிகள் இன்று மாணவர்களின் கைகளில் உள்ளது. ஆசிரியர்களின் வேலை ஒழுங்காகப் படிப்பு மட்டும் சொல்லித் தருவது என்பதோடு சுருங்கிவிட்டது. அதற்கு மேல் கண்டித்தால் எந்த வடிவிலும் பிரச்சினைகள் எழலாம். ஆசிரியர்கள் கவனமாக இருப்பது நல்லது, அவசியமும் கூட.
Share

வெள்ளம்

10632752_754840337909529_2357361909193283785_n
Photo credit: Viveka Vivek, Nellai Maanagaram facebook group

நெல்லையில் 1992ம் ஆண்டு வந்த வெள்ளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து எழுந்த நாஸ்டால்ஜியாவை அடக்கமுடியவில்லை. இந்த நாஸ்டால்ஜியா குழிக்குள் விழுந்துவிடக்கூடாது என்று எத்தனை ஒத்திப் போட்டாலும் முடியவில்லை என்பதால், இதை எழுதித் தொலைக்கிறேன்.

எனக்கு 8 அல்லது 9 வயது ஆகும்போது தாமிரபரணியில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது நாங்கள் சேரன்மகாதேவியில் இருந்தோம். சேரன்மகாதேவி ராமர் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடும் குளிரில் புயலில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெள்ள நீர் முழங்காலில் மோதிக்கொண்டிருக்க வெள்ளத்தின் வீச்சைப் பார்த்தது பேரனுபவமாக இருந்தது. தினமும் குளித்துக் கும்மாளமிடும் நதி பற்றிய பயம் ஏற்பட்டது அக்கணத்தில்தான்.

அதன் பின்னர் நான் கண்ட வெள்ளம் 1992ல். மிகப் பெரிய வெள்ளம். நாங்கள் டவுணில் சிவா தெருவில் இருந்தோம். அங்கேயே தெருவில் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இப்போது நினைத்தாலும் மிரட்சியாக உள்ளது. எல்லார் வீட்டிலும் பாலுக்கு காசு வாங்கி, நான்கைந்து பேர் சேர்ந்து நீரில் நடந்து சென்று (நீந்தில்லா போனோம் என்று சொல்லிக்கொள்வோம்), சந்திப் பிள்ளையார் முக்கு அருகில் இருக்கும் பால் பூத்தில் பால் வாங்கி வருவோம். பால்காரர் குமார் அண்ணனும் வெள்ள நீரில் நின்றுதான் விற்பனை செய்துகொண்டிருந்தார். காப்பி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்று நினைக்கும் நெல்லை மக்களுக்கு குமார் அண்ணன் தான் நெல்லையப்பராகக் காட்சி தந்தார். “இவ்ளோ வெள்ளத்திலயும் நமக்காக பால் விக்கானேய்யா நம்ம குமாரு.” 

இரண்டு நாளாக மின்சாரம் இல்லை. புயல். மதியம் 3 மணிக்கெல்லாம் இரவு 7 மணி போன்ற வானம். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கடும் குளிர்க்காற்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் ரவை உப்புமா அக்கா செய்துதர சூடாக உண்டோம். இப்போதும் எப்போதாவது மழை வந்து வானம் இருட்டினால் என் மனம் இதே சூடான உப்புமாவைத் தேடுகிறது. மனமும் நாக்கும் ஒரே புள்ளியில் சந்தித்துவிடும் கணங்கள் அப்படியே மனத்தில் பதிந்துவிடுகின்றன.

மெல்ல மழை நின்றது. வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீடு உடைமைகளை இழந்துவிட்டார்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மருத்துவத்தை அரசு வழங்கியது. எனவே எங்களுக்கு விடுமுறை. வெள்ளம் மெல்ல வடியட்டும் என்றே பிரார்த்தனை செய்துகொண்டோம்.

அப்போதுதான் தேவர் மகனும் பாண்டியனும் வெளியாகியிருந்தது. அப்போதெல்லாம் நான் கமல் ரசிகனாக இருந்தேன். ரஜினி சார் என்னை மன்னிக்க, ப்ளீஸ். ஆனால் ராஜா வெறியன். ராஜா எந்தப் பாட்டு போட்டாலும் ஹிட்டான காலம் அது. அவர் டியூன் போடும் முன்னரே சில பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பிய நாள்கள். (அப்போதுதான் ரஹ்மான் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவன்லாம் எங்க சின்னப்பய என்று சொல்லிவிட்டுத்தான் ராஜா பாடலையே கேட்பேன்.) போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா பாடலும் ஏற்படுத்திய அவசரத்தில் அந்த இரண்டு படத்தையும் முதல் நாளே பார்க்கத் துடித்த நினைவுகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன.

தேவர் மகன் திரைப்படத்திலும் ஒரு வெள்ளம் உண்டு. அட்டகாசமான ஒளிப்பதிவு, தரமான பின்னணி இசை என அந்த வெள்ளம் தமிழ்நாட்டில் எல்லோரையும் மூழ்கடித்தது என்றாலும், திருநெல்வேலிக்காரர்கள் அதை கொஞ்சம் தனிப்பட்டமுறையில் எதிர்கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த நெல்லை மக்கள் மீண்டும் அந்த வெள்ளைத்தையும் அதன் பாதிப்பையும் திரையில் பார்த்தபோது எதோ தங்கள் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் வந்தது போல ஆதங்கப்பட்டார்கள். தேவர் மகன் படத்தை எப்போது நினைத்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு மழைக்காலச் சூழல்தான். அந்த அளவு அந்த மழையும் வெள்ளமும் மனத்தில் தங்கிக் கொண்டது.

பாண்டியன் திரைப்படத்தை பேரின்பவிலாஸில் போட்டிருந்தார்கள். அங்கேயெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்தது, எனவே அங்கு படத்துக்குப் போகக்கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஜங்க்‌ஷனில் கவிதா ஷாப்பிங் செண்டரின் முதல் மாடி மூழ்கியதும் சுலோச்சனா முதலியார் பாலம் மூழ்கியதும் நெல்லையையே புரட்டிப் போட்டிருந்தது. வெள்ளம் வடிந்துவிட்டாலும் அங்கெல்லாம் போக வீட்டில் தடை. ஒருவழியாக சம்மதம் வாங்கி பேரின்பவிலாஸ் போனேன். தியேட்டரின் கவுண்ட்டர் தரையெல்லாம் வெள்ளத்தின் கசடுகள். கொஞ்சம் அச்சமாக இருந்தது. பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெள்ளம் வந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது.  பாண்டியனா கொக்கா கொக்காவைப் பார்த்தபின்னர் வெள்ளம் வந்தால் நல்லது என்று தோன்றியது. மாட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த திருமலை என்ற நண்பன், ‘என்னல வெள்ளத்தப்ப படத்துக்கு வந்திருக்க, அதுவும் சாயங்கால ஷோவுக்கு? பாத்துக்கோல’ என்று வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை, நிம்மதியாக பாண்டியன் பார்த்தேன். பாண்டியனா கொக்கா கொக்கா பாடலை இப்போது கேட்டாலும் இந்த நினைவுகள் மேலெழும். ராஜாவின் எந்த ஒரு பாட்டுக்கும் இப்படி நினைவுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இந்த வெள்ளத்தைப் பார்க்கப் போன மளிகைக்கடைச் செட்டியாரின் பையன் திரும்பி வரவில்லை என்று டவுணே அலோலப்பட்டது. செட்டியாரின் பையனும் இன்னொரு பையனும் வெள்ளத்தைப் பார்க்க சைக்கிளில் போயிருக்கிறார்கள். சைக்கிளில் டபுள்ஸ் ஏறி உட்காரும்போது அந்தப் பையன் தவறி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அதன்பின் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இதுதான் கேள்விப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதைச் சொல்லிச் சொல்லி இதை நானே நேரில் பார்த்தது போன்ற ஒரு நிலைக்கு உள்ளாகிப் போனேன். அவன் சைக்கிளில் பின்னால் ஏறும்போது கீழே விழுவது என மனக்கண்ணில் ஓடத் தொடங்கி, கொஞ்சம் மிரண்டுவிட்டேன். 

எத்தனையோ தேடியும் செட்டியார் பையனைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவர் வீட்டு முன்னர் பந்தல் போட்டிருந்தார்கள். யார் யாரோ துக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான்காம் நாள் வழக்கம்போல காலையில் செட்டியார் கடையைத் திறந்து வியாபாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், இவ்ளோதானா பாசம் என்று ஏமாற்றமாகவும் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பையன் வந்து நிற்பான் என்று ஏனோ உறுதியாக நம்பினேன்.

ஒரு சில நாள்களில் இதை மறந்துபோனேன். ஒரு நாள் செட்டியாரின் கடை மூடி இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, அன்று அந்தப் பையனின் பதினாறாம் நாள் காரியமாம். நான் பட்ட ஏமாற்றம் சொல்லி முடியாது. எப்படி அப்படி அவன் வரமாட்டான் என்று நம்பி காரியம் செய்கிறார் இந்தச் செட்டியார் என்று கோபமாக வந்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பையன் வரவே இல்லை.

வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அன்று கற்றிருக்கிறேன். அது என்னவென்றே தெரியாமல்.

குறிப்பு: விவேகா விவேக் என்பவர் நெல்லை மாநகரம் என்ற ஃபேஸ்புக் குழுவில் இப்படி திருநெல்வேலி போட்டோவாகப் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். பார்வையிட: https://www.facebook.com/groups/nellaimaanagaram/

Share

ப்ரீ கே ஜி சேர்க்கலாம் வாங்க

நான் என் பையனை ப்ரீகேஜி சேர்த்தபோது எனக்குத் தேவையாகத் தோன்றியவற்றை இங்கே பதிகிறேன். இப்போது இதே அடிப்படையில்தான் என் மகளுக்கும் பள்ளியைத் தேடி இருக்கிறேன்.

* வீட்டிலிருந்து அதிகபட்சம் 2 கிமீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளி.

* நார்மலான கட்டணம். (வருடத்துக்கு அதிகபட்சம் 10,000. இதுவே மிக அதிகம்தான்! ஆனாலும் இப்படி ஆகிவிட்டது.) மிக அதிகக் கட்டணம் கொடுத்து எக்காரணம் கொண்டு ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கத் தேவையில்லை. 6ம் வகுப்பிலிருந்து நல்ல அரசுப் பள்ளி (ஆங்கில வழிக் கல்வி) போதும்.

* தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி – இந்த மூன்றுக்கும் இணையான முக்கியத்துவம் வேண்டும்.

* ஓரளவு நல்ல பள்ளி போதும். அந்த வட்டாரத்திலேயே சிறப்பான பள்ளி தேவையில்லை. ஏனென்றால்,

* அந்த வட்ட்டாரத்திலேயே மிக நல்ல பள்ளி என்றால் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துவார்கள் என்பது என் மனப்பதிவு. எனவே வேண்டாம்.

* குழந்தைகள் என்றால் ஒழுக்கம் இல்லாமலும் சேட்டை செய்துகொண்டும்தான் இருப்பார்கள். அவர்களை அதற்காகத் தண்டிக்க கூடாது. சேட்டை எல்லை மீறும்போது மிகக் குறைவாகத் தண்டிக்கலாம்.

* ஹோம்வொர்க் செய்யாமல் ஒரு பையன் வருவது இயல்பு. அதற்கு பெரிய தண்டனை எல்லாம் கூடாது.

* பொய் சொல்வது குழந்தைகளின் உரிமை. அதற்காக கடுப்பாகக் கூடாது.

* 70 மார்க் வாங்கினாலும் போதும், ஏன் 90 வாங்கவில்லை என்று படுத்தக்கூடாது.

* குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரையாவது சனி ஞாயிறு விடுமுறை அளிக்கவேண்டும். உண்மையில் 9ம் வகுப்பு வரையில் சனி ஞாயிறு விடுமுறை கொடுத்தாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

* அதிகம் ஹோம் வொர்க் கொடுத்து கையை உடைக்கக் கூடாது.

* புரிந்துகொண்டு படிப்பது நல்லதுதான். முக்கியமானதும் தேவையானதும் கூட. ஆனால் மனனம் செய்ய பள்ளி வற்புறுத்தவேண்டும். மனனம் என்பது ஒரு கிஃப்ட். அதை சிறந்த முறையில் குழந்தைகளுக்கு வசப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

* பெற்றோர்களை வரச் சொல்லி துன்புறுத்தக்கூடாது. பரிட்சை முடியும்போது பேப்பர் திருத்தித் தரும் நாள் மட்டும் வரச் சொன்னால் போதும். அதுவும் அப்பாவோ அம்மாவோ வந்தால் போதும் என்றிருக்கவேண்டும். இரண்டு பேரும் வரவேண்டும் என்று படுத்தக்கூடாது.

* எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பள்ளியில் விளையாட அனுமதிக்கவேண்டும். 6ம் வகுப்புக்குப் பிறகு ஒழுக்கத்தைப் போதித்தால் போதும்.

* எப்போதும் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்லாமல், பள்ளியில் உள்ள நூலகத்தை உண்மையாக பயன்படுத்தச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தவேண்டும்.

* கடவுள் வழிபாடு மிக முக்கியம். தினமும் பள்ளியில் வழிபாடு நடக்கவேண்டும்.

* இந்தியா குறித்த பெருமிதம் மிக முக்கியம். அதனை மாணவர்களுக்குத் தவறாமல் ஊட்டவேண்டும்.

* கடைசியாக எனக்கே எனக்கான ஒன்று – அது ஹிந்துப் பள்ளியாக இருக்கவேண்டும்.

இப்படித்தான் மகளையும் சேர்க்கப் போகிறேன். நாளை என் மகளுக்கு இண்டர்வியூ. வயசு 2.5 ஆகுது.

ஏ பி சி டி
உங்கப்பந்தாடி
வந்தா வாடி
வராட்டி போடி

என்று அழகாகச் சொல்லுவாள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Share

2013 துக்ளக் ஆண்டுவிழாவில் சோ

”வேண்டுமென்று ஒரு ஜாதியைக் குறி வைத்து, அவர்களுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அது தவறுதான். அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தச் சமூகத்தில், ஹரிஜன சமுதாய மக்கள், காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறைத்துவிடமுடியாது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, நம் அருகிலேயே வரக்கூடாது என்ற நிலையில் முன்பு வைத்திருந்தோம். அதனால் அப்பிரிவினருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகச் சில இடங்களில், சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் அம்மாதிரியான ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, ஒரு சமுதாயத்துக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவது என்பது நல்லதுமல்ல, நியாயமுமல்ல. இவ்விஷயத்தில், ராமதாஸ் கூரிய கருத்தை ஏதோ நான் வரவேற்றது போல் இங்கு பேசியவர் குறிப்பிட்டார். ஆனால், நான் அவ்வாறு வரவேற்கவில்லை.”

துக்ளக் ஆண்டுவிழாவில் சோ.

 

 

(இனி நான் சேமிக்க விரும்பும் பகுதிகளை இங்கே வெளியிட முடிவு செய்திருக்கிறேன். ஃபேஸ்புக், டிவிட்டரில் தேடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுவதால் இத் தாமத முடிவு.)

Share

கல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும்

கல்கியின் இதழ் பார்த்தேன். வடிவமைப்பு மாறி இருக்கிறது. சட்டென அது கல்கி என்றே தோன்றவில்லை. கல்கிதான் இது என்று நம்பிக் கையில் எடுக்கக்கூட மனம் வரவில்லை. 1998ல் கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்தபோது நான் முதலில் வாங்கியது கல்கி இதழையே. காரணம் சுஜாதா. அப்போது கல்கியில் வரிசையாக சில சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து வாசித்தேன். இடையில் துபாய் செல்லவேண்டி வந்தது. அங்கே சென்றது கல்கி வாசிப்பதை நிறுத்தினேன். அவ்வப்போது வாசித்ததும் உண்டு. இங்கே வந்தபின்பும் அவ்வப்போது வாசிப்பேன். இப்போது கடந்த ஒரு வருடமாக மீண்டும் வாசிக்கிறேன். கல்கியில் வரும் அனைத்தையும் வாசிக்கிறேன் என்று சொல்லிவிடமுடியாது. எனக்குத் தேவையானவற்றை மட்டுமே வாசிப்பேன். எப்படியாவது பாஜகவைக் குறை சொல்லி தனது இந்துத்துவ எதிர்ப்பு முத்திரையை வலிந்து காண்பித்துக்கொள்ளும் அசட்டுத் தலையங்கங்கள் 1998லேயே எனக்குப் பிடிக்காது. கல்கியெல்லாம் அப்பவே அப்படீன்னாலும் நாங்களும் அப்பவே அப்படித்தான். இப்போதும் அதே அசட்டுத்தனம் தொடர்கிறதுதான் என்றாலும், சில கேள்வி பதில்களில் கொஞ்சம் தைரியத்தைப் பார்க்க முடிந்தது.

 

புதிய வடிவமைப்பில் பெரிய அதிர்ச்சி தலையங்கத்தில் கல்கியின் பிள்ளையார் காணாமல் போனதுதான். பிள்ளையாரை நீக்க ஒரே காரணம் அதன் முற்போக்குவாதமாகவே இருக்கும் என்று மட்டுமே யோசிக்கமுடிகிறது. இந்த ஜல்லியைவிட்டு வேறு காரணங்கள் இருக்குமானால் அதை கல்கி அதன் வாசகர்களுக்குச் சொல்வது நல்லது. சொல்லவேண்டியது கல்கியின் கடமை அது இது என்றெல்லாம் அளக்க விரும்பவில்லை. கல்கி விளக்கம் தராவிட்டால், அதை செக்யூலர் ஜல்லி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று மட்டும் நினைக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டே, ஆனால் காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கை விட்டிருக்கமாட்டார்களே என்று யோசித்துக்கொண்டே தேடிப் பார்த்தால், அங்கே காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கு, தலையங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிள்ளையாருடன் உள்ளது! பிள்ளையாருக்கு ஏன் இந்த இடப்பெயர்ச்சி எனத் தெரியவில்லை.

ஆனந்தவிகடனின் இதழ் வடிவம் மாற்றம் பெற்ற போதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இப்படி இதழ் வடிவம் மாற்றம் பெறுவதை ரசிக்கும், எடை போடும் ஆற்றல் எனக்கு இல்லாமல் இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கல்கியின் இதழ்வடிவ மாற்றம் ரசிக்கும்படியாக இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கழுதை போலவும் இல்லாமல் பழக்கப்பட்ட பழைய குதிரை போலவும் இல்லாமல் ரெண்டுக்கெட்டானாக உள்ளது. எழுத்துருக்களையெல்லாம் மாற்றியிருப்பார்கள் போல. ஒன்றுமே ஒட்டவில்லை. படிக்கவும் ஓடவில்லை. நீண்ட ஜடையுடன் தழைய தழைய புடைவை கட்டிக்கொண்டு மல்லிகை மணக்க கட்டிக்கொள்ளும் மனைவி, திடீரென்று குட்டைப் பாவாடையில் கிராப் வெட்டிக்கொண்டு கட்டிக்கொண்டால் என்ன தோன்றும்? சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா? கிளர்ச்சி அடைவதா அதிர்ச்சி அடைவதா என்ற அப்பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். :))

கல்கியில் அம்ஷன் குமார் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறார் போல. இந்த வார கல்கியில் அவரது மூன்றாம் வாரப் படைப்பைப் பார்த்தேன். புத்தகக் கண்காட்சி சமயத்தில் கல்கியை வாசிக்காமல் விட்டதால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. அவற்றைத் தேடிப் படிக்கவேண்டும். முதல் இரண்டு அத்தியாயங்களில் என்ன படங்களைப் பற்றிப் பேசினார் என்று பார்க்கவேண்டும். இந்த வாரம் அம்ஷன் குமார் அறிமுகப்படுத்தியிருக்கும் படம் – செபரேஷன். ஆஸ்கர் விருது பெற்ற ஒரே திரைப்படம் என்ற தலைப்பில் அக்கட்டுரை வந்திருந்தது. கடல் திரைப்படம் பற்றிய பாராட்டுப்பத்திரம் உள்ளது. வழக்கம்போல் ஓ போடுகிறார் ஞாநி. படித்துப் பாருங்கள். 🙂

Share

பள்ளியைக் காப்பாற்றுவோம்

ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்ட பறவையைப் போல MLWA பள்ளிக்குள் புகுந்தேன் என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அதற்கு முன்புவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியை ஒரு சிறையைப் போலவே உணர்ந்தேன். ஒரு போலிஸுக்கும் திருடனுக்குமான உறவும் அணுகுமுறையையுமே அதுவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் காண்பித்தார்கள். அப்பள்ளியைவிட்டு MLWA பள்ளிக்குச் செல்லும்வரை, பள்ளி என்பது சுதந்திரம் மிகுந்த இடம் என்பதுவும், பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 13 வயதில் 8ம் வகுப்பில் MLWA பள்ளியில் சேர்ந்தபின்புதான் என் பள்ளி நாள்களின் வசந்த காலங்கள் ஆரம்பித்தன.


பள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லாமல் இருந்தது. முதல் ஒரு மாதத்தை ஒரு சந்தேகத்துடனேதான் கழித்தேன். போக போகத்தான் தெரிந்தது, MLWA பள்ளியில் அதிகம் யாரும் அடிப்பதில்லை என்று. அடிப்பதே இல்லை என்ற நிலை இல்லை. ஆனால் அஞ்சி நடுங்கவேண்டிய திருடனின் பயம் அப்பள்ளியில் இல்லை. MLWA என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி தந்த சுதந்திரம் மட்டுமே.

எத்தனை எத்தனை ஆசிரியர்கள். 

கிருஷ்ணன் என்றொரு ஆசிரியர் இருந்தார். சமூக அறிவியல் ஆசிரியர். ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு, ஹாவ் என்று ஏப்பம் விட்டு, கழுத்தை மேலிருந்து கீழாகத் தடவிக்கொண்டு, இந்திய நில அமைப்பைப் பற்றி வேதம் போலச் சொல்வது இன்னும் நினைவில் இருக்கிறது. புவியியலை மனப்பாடம் செய்யாமல், மனக்கண் மூலம் இந்தியாவை நினைவில் நிறுத்திப் படிக்கமுடியும் என்று தெரிந்ததே கிருஷ்ணன் சார் பாடம் எடுத்த விதத்தில்தான். அவர் வரலாற்றைச் சொல்லிக்கொடுத்த விதம் அலாதி. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அவரிடம் படித்திருந்தால் நான் கடந்த கால இந்திய வரலாற்றில் நிபுணன் ஆகியிருப்பேன்.

ஜான் என்றொரு சார். கணிதம் எடுப்பவர். சிலபஸை முடிப்பது, அதை மீண்டும் ரிவைஸ் செய்வது என அவர் செய்த மாயங்கள் என்றென்றும் நினைவில் நிற்கும். அவரைப் போல இன்னொருவர் மேத்ஸ் எடுக்க முடியாது என்றும், அவரே கணிதத்தின் கடைசிப் புள்ளி என்றும் அன்று நாங்கள் நம்பினோம். 

நார்மன் சார் – அன்பைத் தவிர எதுவுமே அறியாதவர். சிரில் மேரி டீச்சர் – அறிவியலை சொல்லித் தர அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. நாங்கள்தான் எதையுமே புரிந்துகொள்ளக்கூடாது என்று விறைப்பாக இருந்தோம். 

லக்ஷ்மணன் ஐயா – இன்று தமிழில் தெரியும் கொஞ்ச நஞ்ச இலக்கணமும் இந்த லக்ஷ்மணன் ஐயா இட்ட பிச்சைதான். அவர் இல்லை என்றால் தமிழில் ஒன்றுமே தெரியாமல் போயிருந்திருக்கும். 

கணேசன் ஐயா – இவர் வகுப்பறைக்குள் வந்தாலே நாங்கள் ஓ வென்று கூவுவோம். கிட்டத்தட்ட ரஜினியின் ஓப்பனிங் எண்ட்ரியை ஒத்தது இது. இவர் மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோ.

தர்மராஜ் சார் – இவர்தான் ஹெச் எம். இவர் வந்து நின்றாலே, பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவோம். இவரிடம் அவ்வளவு பயம். 

இந்தப் பள்ளிகளின் நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒட்டுமொத்த நாஸ்டால்ஜியாவுக்குள் சிக்கி வெளியே வர இயலாமல் போய்விடும்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு என்னை பழைய நண்பர் ஒருவர் அழைத்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நொடி அது. ஆனால் அம்மகிழ்ச்சி ஒரு நொடி மட்டுமே நீடிக்கும் என நினைக்கவில்லை. MLWA பள்ளியை மூடப் போகிறார்கள் என்றார் அவர். 

கஷ்டப்பட்ட ஏழைகள் அதிகம் படிக்கும் பள்ளி. சில வருடங்களுக்கு முன்பாக வேறொரு மேனேஜ்மெண்ட் கையில் போயிருக்கிறது. புதிய நிர்வாகம் என்று அறிகிறேன். பள்ளியை மூடிவிட்டு, நல்ல விலைக்குச் செல்லும் அந்த இடத்தை விற்று, காம்ப்ளக்ஸ் போன்ற ஒன்றைக் கட்டுவது அதன் நோக்கம் போல. இதை செய்துமுடிக்க நிர்வாகம் முதலில் செய்தது, புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்தியது. இப்படி நிறுத்தியதுமே இப்பள்ளியை மூடப் போகிறார்களாம் என்ற பேச்சு அப்பகுதி முழுவதும் பரவிவிடும். அவர்கள் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது.

நான் MLWAல் படித்தபோது, 1200 பேர் படித்ததாக என் நினைவு சொல்கிறது. ஆண்டு 1990. இப்போது 200 பேர் படிப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. கண்முன்னே இப்படி ஒரு பள்ளி சீரழிக்கப்படுவது கடும் மனவருத்தத்தை அளிக்கிறது. பாரம்பரியம் மிக்க ஒரு பள்ளி, வெறும் லாப நோக்கத்திற்காக இடிக்கப்படுவது ஏனென்று தெரியவில்லை. இப்பள்ளியைச் சீரமைக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. வெளிப்படையாக அங்கிருக்கும் ஆசிரியர்கள் பேசமுடியாத ஒரு நிலையும் உள்ளது.

தற்போது இப்பள்ளியை மீட்டெடுக்கும் ஒரு முயற்சிக்கு ஓரளவு ஆதரவு கிட்டியுள்ளது. இவர்கள் இப்பள்ளியைக் காப்பாற்றுவார்கள் என்று அப்பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள், அப்பள்ளியில் படித்த என்னைப் போன்ற அலுமினி மாணவர்கள் நம்புகிறார்கள். இது நடக்கவேண்டும்.

ஒரு மேனேஜ்மெண்ட் பள்ளியை இப்படி நினைத்தால் மூடிவிடலாம் என்ற அளவில் மட்டுமே நம் சட்டங்கள் இருக்கின்றன என்பதே வேதனை அளிக்கிறது. பள்ளி என்பது வெறும் பள்ளியல்ல என்ற கிளிஷேக்கள் இவர்கள் முன் எடுபடாது என்றாலும், இந்த கிளிஷேக்களைச் சொல்லாமல் சில சமயம் உணர்வுகளைச் சொல்லிவிடமுடிவதில்லை. பள்ளி என்பது வெறும் பள்ளி மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி உருவாக்கும் மாணவர்களின் நினைவுகளில் அப்பள்ளி வாழும்தோறும், தொடர்ந்து நல்ல மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒரு பள்ளி தந்துகொண்டிருக்கும் காலம்தோறும் அது ஒரு சமூகத் தொகுப்பாக மாறுகிறது. இப்படிப்பட்ட பள்ளியை இடிக்க எப்படி புதிய நிர்வாகம் முடிவெடுத்தது என்று தெரியவில்லை. உலகுக்கு அன்பை போதிக்கும் பள்ளியை இடிப்பது, மனிதர்களின் உணர்வுகளைக் கொல்வதற்கும் எனவே மனிதர்களைக் கொல்வதற்கும் ஒப்பானது என்பதை மறந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

மால்கள் கட்டவும், காம்பளக்ஸ் கட்டவும் பணம் மட்டும் இருந்தால் போதும். எந்த இடத்திலும் கட்டிக்கொள்ளலாம். அல்லது தேவையான இடத்தில் கட்டிக்கொண்டுவிடலாம். ஆனால் ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஓரிடத்தில் இருக்கும் பள்ளியை இடிப்பது என்பது இத்தனை எளிதானதல்ல. அப்பள்ளியில் படிக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கஷ்டப்பட்ட ஏழை மாணவர்கள் எங்கே செல்வார்கள், என்ன ஆவர்கள் என்பதெல்லாம் ஒரு பெரிய சமுதாயப் பிரச்சினை. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், எப்படி பள்ளியை மூட முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பள்ளியும் ஒரு விற்பனைப் பண்டமே என்னும் அர்ப்பணிப்பற்ற ஒரு கணக்கே இதன் காரணமாக இருக்கவேண்டும்.

கடந்த வாரங்களில் புதிய தலைமுறை இதழில், இப்பள்ளியின் மீட்சி குறித்து வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, பள்ளியின் மறுகட்டுமானத்துக்கு பலரும் பணம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பணத்தைவிட, அனைவரின் ஆதரவின் மூலம் பள்ளியை இடிக்காமல், மூடாமல் இருக்கச் செய்வதே உடனடி அவசியம். 

இப்பள்ளியை மீட்க அரசு ஆவண செய்யவேண்டும். செய்யும் என்று நம்புகிறேன். 

நண்பர்கள் கவனத்துக்கு – இப்பதிவை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லுங்கள். ஃபேஸ்புக் மூலமும் டிவிட்டர் மூலமும் பலரைச் சென்றடைந்தால் நல்லது. நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி.

தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். இப்பள்ளியின் நினைவுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. ஆசிரியர்களின் பங்களிப்பு அபரிதமானது. இப்பள்ளியைக் காக்கவேண்டும்.

இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/mlwaschoolmadurai

Share

ஓம் சாந்தி ஓம்

சுருக்கமாகப் படிக்க விரும்புகிறவர்கள் மஞ்சளடிக்கப்பட்ட பகுதிகளைப் படித்தால் போதும்.

இப்படி ஒரு தளம் இருக்கிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்துப் படிக்க ஆரம்பித்ததில், எழுதவே எரிச்சல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் தந்த பழக்கத்தில் யாராவது மூன்றாவது வரியை எழுதினாலே ஏன் இத்தனை இழுவையாக நீளமாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதுவே புத்தகமாகப் படிக்கும்போது ஒன்றும் தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் செய்துவைத்த இன்னொரு விஷயம் உடனடி அறச்சீற்றம். இப்போது நினைத்துப் பார்த்தால் இந்த அறச்சீற்றங்களுக்கெல்லாம் எதாவது பொருளிருக்கிறதா என்றே தெரியவில்லை. நாமும் அரசியல் சமுதாயம் தொடர்பான ஒரு நிகழ்வுக்கு நம் உடனடி அறச்சீற்றத்தைப் பதிந்து வைத்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வகையிலும் இது எதையும் சாதிக்கப்போவதில்லை என்னும் கருத்து உறுதிப்படுகிறது. பதினைந்து நிமிடப் புகழ் என்று சுஜாதா சொன்னபோது அன்று சுருக்கென்றிருந்தது. இப்போது சுஜாதா மீது கடுப்பாக இருக்கிறது, 15 நிமிடம் அதிகம் சார்.

தொடர்ந்து சில வருடங்களாக அவ்வப்போது சில குழுக்களில் இருந்திருக்கிறேன். அங்கே எழுதுவதும் படிப்பதும் இன்னொரு அடிக்டானது. நான் இருந்தவை எல்லாமே ஹிந்துத்துவம் தொடர்பான சிறிய அரட்டைக் குழுக்கள். என் வாழ்க்கையில் இது போன்ற ஆக்கபூர்வமான குழுமங்களை நான் படித்ததே இல்லை. எத்தனை எத்தனை கருத்துகள். எல்லாக் குழுமங்களுக்கும் போல இக்குழுமங்களுக்கும் வீழ்ச்சி வந்தது. தொடக்கத்தில் கருத்தை அறிதல் என்பது தொடங்கி பின்பு அது நட்பாகி பின்பு நீ அப்படிப் பேசலாமா என்றும் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை என்பதிலும் முடிந்தது. என்னதான் குழும நட்பென்றாலும் எல்லாமே முடிவில் முகமிலி நட்பே என்பதை இக்குழுமங்களும் உறுதி செய்தன. ஆனாலும் இக்குழுமங்கள் எனக்குத் தனிப்பட்ட அளவில் செய்த சாதனைகள் அதிகம். அதற்காக மரத்தடி போல ராகாகி போல அங்கிருக்கும் நண்பர்கள் மெல்ல மறைந்து குழுமப் பெயர் மட்டும் முன்வருவதுபோல இக்குழுமப் பெயர்களும் முன்வந்துவிட்டன.

ஏப்ரல் முதல் நெருக்கத் தொடங்கிய வேலைகளுக்கு மத்தியில் நான் உருப்படியாகச் செய்தது புத்தகங்கள் படிப்பதையே. டயல் ஃபார் புக்ஸ் எனக்குப் படிக்க புத்தகங்களை அள்ளித் தந்தது. 🙂 படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதக்கூடாது என்றும் ஒரு முடிவெடுத்தேன். படிக்கும்போதே இதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ன எழுதப்போகிறோம் என்னும் டிவிட்டர் ஃபேஸ்புக் ப்ளாக்கிய வியாதியில் இருந்து மீள்வது முக்கியமானதாகப் பட்டதால் இம்முடிவு. நல்ல பலன் தந்தது. புத்தக ரசனை என்பதே முக்கியம் என்ற உள்ளுணர்வு மீண்டு வந்தது. இப்படி எத்தனையோ மாற்றங்கள்.

மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இன்னும் எழுதுவேன் போல. எதையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த தளத்தில் வாரம் ஒன்றாவது எதாவது எழுதலாம் என்ற நினைவு. இப்படி ஒரு தளம் வைத்துக்கொண்டு எதுவும் எழுதாமல் இருப்பதும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவருதல் முக்கியமாகப் பட்டுவிடுகிறது. ராஜாவின் பாடல்கள் சிடியை தேடித் தேடி வாங்கியதிலிருந்து வெளிவந்ததுதான் தொடக்கம். உலகத் திரைப்படங்களுக்கு அடிக்ட் ஆனபோது அவற்றைப் பார்ப்பதையே 2 வருடங்களுக்கு முன்னால் நிப்பாட்டினேன். பெரிய அளவில் பர்ஸ் தப்பித்தது. பின்பு மலையாளப் படங்கள் வெறி. வெறி என்றாலும் நல்ல மலையாளப் படங்களே. இதில் கொஞ்சம் அடக்கி வாசித்ததால் பர்ஸ் ஓரளவு தப்பித்தது. யூ டியூபின் இலவசப் பணியும் மகத்தானதே. நேர்மை அறச்சீற்ற கனவாண்கள் என்னை மன்னிக்க.

சொல்வனத்தில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கவிஞானசூனியங்களின் புலம்பல்கள் இணையம் முழுக்க பிரசித்தமாக இருப்பதால் இது பற்றி நான் தனியே சொல்லவேண்டியதில்லை. சொல்லவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுமட்டுமே, கவிஞானசூனியங்கள் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம்.

புலம்பல்கள் தொடரும்.

கடவுளின் உரையாடல்

பனி விழும் இரவல்ல
வேர்வையின் துளிகள்
உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை
எப்போதும் புரிந்திராத மொழியென
ஒரு திடுக்கிடல்
சிதறி விழும்
எவர்சில்வர் டம்ப்ளர்கள்
எழுப்பும் ஒலியென ஒரு மயக்கம்
குழந்தையின் வீறிடல் என்ற உறுதி
இரண்டாம் சாமத்தில்
விடாது குரலெழுப்பும் சேவலும் சேர்ந்தபோது
வேலுடன் சேவலுடன் கொடியுடன்
ஆழ்நிலை மயக்க உலகில்
கடவுள் தெளிவாகப் பேசினான்
என் குற்றங்களைப் பட்டியலிட்டான்
நான் புரண்டு புரண்டு படுத்தேன்
காதுக்கருகில் வந்து அவன் சொல்லிக்கொண்டே போன
முடிவற்ற பட்டியலில்
அச்ச வேர்வைகள் பெருக பெருக
அவனுக்குக் களியாட்டம்
சைகையில் அவனை அடக்கமுடியவில்லை
மிரட்டலுக்கும் மசியவில்லை
மெல்ல விசும்பலும்
பிறகு கதறலுமென
காற்றில் வீசப்பட்ட என்னுடலில்
ஊழித் தாண்டவம்
காறித் துப்பினேன்
அதையும் குற்றப் பட்டியலாக்கினான் அவன்
ஒரே ஒரு கேள்வி கேட்க மன்றாடினேன்
காலில் விழுந்து புரண்டழுததும்
மெல்லப் புன்னகைத்தான்
நீயெல்லாம் கடவுளா என்றேன்
விடியத் தொடங்கியது வானம்.

தனிமையின் மொழி

ஓவியம் என்றேன்
காற்றில் எழுதுகிறாயா என்றான்
நிழல்!
நீரின் பரப்பிலா?
தேவதை வருவாள்!
வேசியைச் சொல்கிறாயா?
நற்சொல் சொல் என்றால்
கெட்ட வார்த்தை வருமோ என்றொரு அச்சம்
கேள்வி ஏதுமின்றி
மௌனம் காத்தேன்
எதாவது பேசேன் என்றான்
மீண்டும் எதாவது பேசேன்
மீண்டும் மீண்டும்
காமம் பின்காத்திருக்க
காதலொடு பெண்ணிடம்
ஓர் ஆண் கொள்ளும் அதே கெஞ்சல்
நானேதான் எனச் சொல்லிவிடுவானோ என்று
நீ யார் எனக் கேட்கவே இல்லை.

உலகம் அமிழும் ஓவியம்

புறாக்கூண்டுக்குள் இருந்து
புறாவை விரட்டிவிட்டு
கழுகை அடைத்து வைக்கும்
மனநிலையை எப்படி எதிர்கொள்வது
மண்ணுள்ளிப் பாம்புக்காக
கோடாரியைத் தேடியலையும்
ஒரு சித்திரத்தை
காகிதத்தில் வரைந்து
மெல்ல மெல்ல உயிர் பெருக்க
காகிதம் அமிழ்ந்து
அறை மூழ்கி
ஊர் தாண்டி
உலகம் அடங்காமல்
வெளியில் திமிறியபோது
தன்னை அவ்வோவியம்
தழுவிக்கொள்ள
சிறகை அடித்தபடி
பறக்காமல் நிலைபெற்றுவிட்ட
இன்னொரு ஓவியமாகக்
காத்துக் கிடக்கிறது
விரட்டிவிடப்பட்ட புறா.

ஹரன்பிரசன்னா

Share