Archive for புத்தகப் பார்வை

Two Tamil novels

ராஜ வனம் – ராம் தங்கம் எழுதிய சிறு நாவல். கிண்டிலில் வாசித்தேன். காடு, அவன் காட்டை வென்றான், கெடைக்காடு, ஆரண்யக், கானகன் போன்ற நாவல்களைப் படிக்காதவர்களுக்கு இந்த நாவல் காட்டைப் பற்றி ஓர் ஆச்சரியத்தைச் சிறிய அளவில் தரக்கூடும். அந்த நாவல்களை வாசித்தவர்களுக்கு இது இன்னும் ஒரு காட்டைப் பற்றி நாவலாகவே மிஞ்சும். காட்டைப் பற்றிய நாவலுக்கு அபாரமான கற்பனையும் யதார்த்தமான காட்டு வாழ்க்கை அனுபவமும் தேவை. இந்த நாவலில் காட்டைப் பற்றிய இடங்கள் கொஞ்சம் தேங்கினாலும், கூறியதே மீண்டும் மீண்டும் கூறுவதாகப் பட்டாலும், பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் கொஞ்சம் மேலெழுந்து வருகின்றன. இன்னும் ஆழமாக விரிவாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை.

வேசடை – ஏக்நாத்தின் சிறு நாவல். ஏற்கெனவே இவர் எழுதிய கெடைகாடு நாவலைப் படித்திருக்கிறேன். அந்த நாவிலிலும் கதை என்று ஒன்று கிடையாது. வட்டாரம், இடங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய விவரணைகளும் அதனூடாகச் செல்லப்படும் சில நிகழ்வுகளுமே கதை. அதே போல் தான் இந்த நாவலும். அந்த நாவலில் இயற்கையான காடு ஒன்றைப் பார்க்க முடிந்தது. இந்த நாவலில் ஒரு சிறிய பற்றுக்கோடாகக் கதை என்ற ஒன்று இருக்கிறது. மற்றபடி பல்வேறு காலங்களில் நிகழும் காலமாற்றம், அதை ஒட்டிய ஒரு கிராமத்து மனிதனின் நினைவுகளுமாகக் கதை நீள்கிறது. கெடைகாடு அளவுக்கு இல்லை என்றாலும், இதை வாசிக்கலாம். இன்னும் ஆழமாக அடர்த்தியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதை மறுக்க முடியாது. நாவலில் வரும் நிகழ்வுகள் எவையுமே புதியதாக இல்லை என்பதும் ஒரு குறை. நெல்லை வட்டார வழக்கு பிடித்தவர்களுக்கு இந்த நாவல் கூடுதலாக ஒட்டிக்கொள்ளக் கூடும்.

Share

சூர்ப்பனகை – சிறுகதைத் தொகுப்பு

கெ.ஆர்.மீராவின் ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு படித்தேன். எனக்கான தொகுப்பல்ல. இத்தனை வெளிப்படையான பெண்ணியம் எனக்கு ஆகாது. ஒரு கதை நம்மோடு கொள்ளும் ஆத்மார்த்தமான உறவை முடிவு செய்வது அதனுள் இருக்கும் அந்தரங்கமான, ஆர்ப்பாட்டமில்லாத கதையின் போக்குதான். வெளிப்படையாக ஆடம்பரமாக அலட்டலாக அது கதையை மீறும்தோறும் அக்கதை பிரசாரக் கதையாகிறது. இந்த ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு முற்றிலுமாக ஆடம்பரமாக, பிரசாரமாக ஆகிவிடவில்லை. அந்தரங்கமாக அமைதியாகவும் இல்லை. இரண்டுக்கும் இடையே இருக்கிறது.

இத்தொகுப்பில் ‘லி’ என்னும் எழுத்து அச்சாகாமல் ‘-’ என்று அச்சாகி இருக்கிறது. ஒரு பதிப்பகம் பதிப்பிக்கும் புத்தகங்களில் இதுபோன்ற எதிர்பாராத பிழைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பதிப்பாளனாகப் பல சம்பவங்களை இதுபோன்று பார்த்திருக்கிறேன். எனவேதான் எழுத்துப் பிழைகளைப் பற்றி நான் என் விமர்சனங்களில் எழுதுவதே இல்லை. இதைச் சொல்வது வேறொரு காரணத்துக்காக.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சாதேவி’ ஆரம் வெளியீடாக வெளிவந்தது. அதில் முதல் கதையில் மட்டும் பி என்ற எழுத்தைக் காணவில்லை. மற்ற கதைகளில் பிரச்சினை இல்லை. திஸ்கி எழுத்துருவில் பழைய எழுத்துரு ஒன்றை வேறொரு எழுத்துக்கு மாற்றும்போது நிகழ்ந்த விபரீதம் இது. முன்பெல்லாம் ‘ஆ’ என்ற எழுத்தில் பிரச்சினை வரும். 2000களில் தமிழ் எழுத வந்தவர்களுக்கு நினைவிருக்கும். ஆபாசமாகப் பேசினான் என்பது பாசமாகப் பேசினான் என்று வந்துவிடும். இதற்காக நான் என்ன செய்வேன் என்றால், ஆ என்ற எழுத்தை மட்டும் %% என்று ரீப்ளேஸ் செய்துவிட்டு, எழுத்துரு மாற்றிவிட்டு, பின்னர் %% என்பதையெல்லாம் ஆ என்று மாற்றுவேன்.

சாதேவி தொகுப்பில் பி என்ற எழுத்து இல்லை, அதற்குப் பதிலாக ப என்று இருப்பதாக ஆனந்த் அழைத்துச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை ப்ரூஃப் பார்த்தும் பி இல்லையா? மை காட்! நான் ப்ரூஃப் பார்த்தது யூனிகோடில். பி சுழித்துக்கொண்டு போனது வேறொரு எழுத்துருவில்.

‘சூர்ப்பனகை’க்கும் இப்படித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும். அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள்.

அனந்த் என்றதும் நினைவுகள் அவரைச் சுற்றுகின்றன. நான் கிழக்கில் இருந்தபோது மூன்றாவது எம்.டியாகச் சில காலம் வந்தவர் அனந்த். அமெரிக்கவாசி. சார் என்று அழைக்கவே கூடாது, அனந்த் என்றே அழைக்கவேண்டும் என்றார். அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. எல்லாவற்றிலும் ஓர் அமெரிக்க ஒழுங்கை எதிர்பார்த்தார். அதனாலேயே மறுநாளில் அனைவருக்கும் அவர் பிடிக்காமல் போனார்.

ஆனால் பழக பழகத்தான் தெரிந்தது அவர் மனசுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது என்று. இதனாலேயே கூட அவருக்குப் பிரச்சினைகள். அவரால் பிறருக்கும்.

நான் கிழக்கில் இருந்து விலகி சுவாசம் தொடங்கியபோது என்னை அழைத்து அத்தனை அன்பாகப் பேசினார். என்ன என்னவோ அறிவுரைகள் சொன்னார். வாட்ஸப்பில் நீள நீள கட்டுரைகளை அனுப்பினார். முதலீடு தொடர்பான லின்க்குகளை அனுப்பினார்.

ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அவருடனான தொடர்பு குறைந்துபோனது. ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலம் சரியின்றி இறந்து போன செய்தியைக் கேட்டபோது உண்மையிலேயே வருந்தினேன். இதை எழுதும்போது கூட ஏதோ ஒரு சோகம் பரவத்தான் செய்கிறது. நல்ல மனிதர். தன்னை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத, சில பிடிவாதங்களில் தேங்கிவிட்ட மனிதர்களை எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

நேரமிருப்பவர்கள் சூர்ப்பனகை சிறுகதைத் தொகுப்பையும், நேரமே இல்லாவிட்டாலும் சாதேவி தொகுப்பையும் வாங்கவும்.

Share

ஆக்காண்டி

ஆக்காண்டி – தைரியமான நாவல். முக்கியமான நாவல். சில நாவல்களை எழுத தைரியம் தேவை. இது அந்த வகை நாவல். ஈழப் படைப்புகள் அனைத்தும் தமிழகத் தமிழர்களின் பார்வையில் முன்பெல்லாம் ஒரே வகையினதாகத் தெரிந்துகொண்டிருக்க, வாசு முருகவேலின் நாவல்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு வருகின்றன. ஒற்றைப்படைத் தன்மையிலிருந்து மேலேறி உள்முரண்களையும் அதே சமயம் ஈழக் குரலின் அடிநாதத்தை விட்டுவிடாமலும் இருக்கின்றன. இதனாலேயே அவருக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம்.

அடிப்படைவாதக் குரல்கள் என்று முத்திரை குத்தப்பட்ட குரல்களில் ஒன்று, இஸ்லாமியர்களையும் அதன் பயங்கரவாதத்தையும் நியாயமாக வேறுபடுத்திப் பார்க்கச் சொல்வது. இந்த நிதர்சனம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் குரலின் மீது அடிப்படைவாதக் குரல் என்று முத்திரை குத்தப்பட்டது. இது முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியலுக்கு உகந்ததாகவும் இருந்தது. வாசு முருகவேல் இந்தக் கருத்தாக்கத்தைத் தரவுகளுடன் கூடிய புனைவால் உடைக்கிறார். இதனாலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமும் வருகிறது. அதே சமயம் இவர், முற்போக்காளர்கள் சொல்லும் அடிப்படைவாதக் குழுவில் இருப்பவரும் அல்ல என்பது இவரை முழுவதுமாகக் கை கழுவ முடியாமல் அவர்களைப் படுத்துகிறது.

ஈழத் தமிழ் மக்கள், அங்கே வசிக்கும் இஸ்லாமியத் தமிழ் மக்கள் இருவருக்குமான முரண், பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் நாவல், இவர்கள் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கத்தையும் ஒருங்கே பேசுகிறது. அரசியலில் பகடைகள் எப்படி நேரம் பார்த்து வீசப்படுகின்றன என்பதை இந்த நாவல் தெளிவாக்குகிறது.

வாசு முருகவேலின் நாவல்களில் எனக்கிருக்கும் குறைகள் இந்த நாவலிலும் உண்டு. ஒன்று, புதிர் போலப் பேசிச் செல்வது. இது புரிந்தவர்களுக்குப் பெரிய வாசிப்பனுபத்தைத் தரும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அலுப்பைத் தந்துவிடக் கூடும். அடுத்தது, விரிவாகச் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போவது. இதை ஓர் உத்தியாகவே அவர் நினைவோடு செய்யக் கூடும். ஆனால் இதை அவர் பரிசீலிப்பது நல்லது.

இன்னொரு வகையில் பார்த்தால், எப்படா நாவல் முடியும் என்பதைவிட, நாவல் முடிந்துவிட்டதே என்று நினைப்பதுவும் நல்லதற்குத்தான். நிச்சயம் வாசித்துப் பாருங்கள். அகிலன், தாசன், அவன் தங்கைக்காகவாவது வாசியுங்கள்.

Share

சூர்ப்பனகை

கெ.ஆர்.மீராவின் ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு படித்தேன். எனக்கான தொகுப்பல்ல. இத்தனை வெளிப்படையான பெண்ணியம் எனக்கு ஆகாது. ஒரு கதை நம்மோடு கொள்ளும் ஆத்மார்த்தமான உறவை முடிவு செய்வது அதனுள் இருக்கும் அந்தரங்கமான, ஆர்ப்பாட்டமில்லாத கதையின் போக்குதான். வெளிப்படையாக ஆடம்பரமாக அலட்டலாக அது கதையை மீறும்தோறும் அக்கதை பிரசாரக் கதையாகிறது. இந்த ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு முற்றிலுமாக ஆடம்பரமாக, பிரசாரமாக ஆகிவிடவில்லை. அந்தரங்கமாக அமைதியாகவும் இல்லை. இரண்டுக்கும் இடையே இருக்கிறது.

இத்தொகுப்பில் ‘லி’ என்னும் எழுத்து அச்சாகாமல் ‘-’ என்று அச்சாகி இருக்கிறது. ஒரு பதிப்பகம் பதிப்பிக்கும் புத்தகங்களில் இதுபோன்ற எதிர்பாராத பிழைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பதிப்பாளனாகப் பல சம்பவங்களை இதுபோன்று பார்த்திருக்கிறேன். எனவேதான் எழுத்துப் பிழைகளைப் பற்றி நான் என் விமர்சனங்களில் எழுதுவதே இல்லை. இதைச் சொல்வது வேறொரு காரணத்துக்காக.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சாதேவி’ ஆரம் வெளியீடாக வெளிவந்தது. அதில் முதல் கதையில் மட்டும் பி என்ற எழுத்தைக் காணவில்லை. மற்ற கதைகளில் பிரச்சினை இல்லை. திஸ்கி எழுத்துருவில் பழைய எழுத்துரு ஒன்றை வேறொரு எழுத்துக்கு மாற்றும்போது நிகழ்ந்த விபரீதம் இது. முன்பெல்லாம் ‘ஆ’ என்ற எழுத்தில் பிரச்சினை வரும். 2000களில் தமிழ் எழுத வந்தவர்களுக்கு நினைவிருக்கும். ஆபாசமாகப் பேசினான் என்பது பாசமாகப் பேசினான் என்று வந்துவிடும். இதற்காக நான் என்ன செய்வேன் என்றால், ஆ என்ற எழுத்தை மட்டும் %% என்று ரீப்ளேஸ் செய்துவிட்டு, எழுத்துரு மாற்றிவிட்டு, பின்னர் %% என்பதையெல்லாம் ஆ என்று மாற்றுவேன்.

சாதேவி தொகுப்பில் பி என்ற எழுத்து இல்லை, அதற்குப் பதிலாக ப என்று இருப்பதாக ஆனந்த் அழைத்துச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை ப்ரூஃப் பார்த்தும் பி இல்லையா? மை காட்! நான் ப்ரூஃப் பார்த்தது யூனிகோடில். பி சுழித்துக்கொண்டு போனது வேறொரு எழுத்துருவில்.

‘சூர்ப்பனகை’க்கும் இப்படித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும். அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள்.

அனந்த் என்றதும் நினைவுகள் அவரைச் சுற்றுகின்றன. நான் கிழக்கில் இருந்தபோது மூன்றாவது எம்.டியாகச் சில காலம் வந்தவர் அனந்த். அமெரிக்கவாசி. சார் என்று அழைக்கவே கூடாது, அனந்த் என்றே அழைக்கவேண்டும் என்றார். அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. எல்லாவற்றிலும் ஓர் அமெரிக்க ஒழுங்கை எதிர்பார்த்தார். அதனாலேயே மறுநாளில் அனைவருக்கும் அவர் பிடிக்காமல் போனார்.

ஆனால் பழக பழகத்தான் தெரிந்தது அவர் மனசுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது என்று. இதனாலேயே கூட அவருக்குப் பிரச்சினைகள். அவரால் பிறருக்கும்.

நான் கிழக்கில் இருந்து விலகி சுவாசம் தொடங்கியபோது என்னை அழைத்து அத்தனை அன்பாகப் பேசினார். என்ன என்னவோ அறிவுரைகள் சொன்னார். வாட்ஸப்பில் நீள நீள கட்டுரைகளை அனுப்பினார். முதலீடு தொடர்பான லின்க்குகளை அனுப்பினார்.

ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அவருடனான தொடர்பு குறைந்துபோனது. ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலம் சரியின்றி இறந்து போன செய்தியைக் கேட்டபோது உண்மையிலேயே வருந்தினேன். இதை எழுதும்போது கூட ஏதோ ஒரு சோகம் பரவத்தான் செய்கிறது. நல்ல மனிதர். தன்னை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத, சில பிடிவாதங்களில் தேங்கிவிட்ட மனிதர்களை எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

நேரமிருப்பவர்கள் சூர்ப்பனகை சிறுகதைத் தொகுப்பையும், நேரமே இல்லாவிட்டாலும் சாதேவி தொகுப்பையும் வாங்கவும்.

Share

Idamum valamum asaivuru siru sudar

பி.ஆர்.மகாதேவன் எழுதிய முக்கியமான நாவல் (Auto fiction) ‘இடமும் வலமும் அசைவுறு சிறுசுடர்’. இளமைக் காலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பமும், சித்தாந்தக் குழப்பமும் அதனால் ஏற்படும் அடையாளச் சிக்கலையும் தெளிவாகச் சொல்லும் ஒரு நாவல். இடதுசாரிகள் நீக்கமற நிறைந்திருக்கும் இலக்கியச் சூழலை இப்படிக் குழப்பமான இளைஞன் எப்படி எதிர்கொள்வான்? அவன் நம்பிச் செல்லும் இடமும் அவனைத் துரத்தினால் அவன் எந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்துவான்? எதையுமே எதிர்த்துக் கேள்வி கேட்டுப் பழகும் வயதில் அவன் எல்லாவற்றையும் எப்படி எதிர்கொண்டான்? நம்பிக்கைத் துரோகத்தின் நிழல்கள் அவனை எப்படித் துரத்தின? எல்லாவற்றையும் எப்படி எதிர்க்கேள்விகள் கேட்கத் துவங்கினான்? அத்தனையையும் இந்த நாவல் சிறப்பாகச் சொல்கிறது.

Share

ஒரு தமிழ்ப் புத்தகம்

ஒரு தமிழ்ப் புத்தகம். 40 பக்கங்கள் படித்தேன். முக்கியமான எழுத்தாளர். பதிப்பகக்காரர் நண்பர். அவர் வருத்தப்படக்கூடாது என்பதற்காகக் கிசுகிசு போலச் சொல்கிறேன். அந்தக் காலக் கதை என்றால், எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்ததோ அதை ஒட்டிய ஒரு பேச்சுவழக்கு நம் மனதில் பதிவாகி இருக்கிறது. புராண காலம் என்றால் ஒரு பேச்சு வழக்கு, அரசர் காலம் என்றால் அதற்கு ஒரு பேச்சு வழக்கு என நமக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கிறது. அதை மாற்றுவதில் தவறில்லை. சரியான ஆதாரத்தோடு சரியான பின்பலத்தோடு மாற்றினால் பரவாயில்லை. அதை ஒரே அடியாக மாற்றுகிறேன் என்பதும், அதற்கும் தாண்டி போவதும் நிச்சயம் நம்மைப் புத்தகத்திலிருந்து அந்நியமாக்கிவிடும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. அதிலும் குறிப்பாக, கடவுள் ‘இப்ப பாருடா’ என்று சொல்லிவிட்டு ‘வில்லனை’ அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவலிமை எனக்கில்லை.

Share

Swasam Subscription Scheme – SSS

சுவாசம் சந்தா திட்டம் – SSS – Swasam Subscription Scheme

தினந்தோறும் புத்தகத் திருவிழா

எப்போது புத்தகம் வாங்கினாலும் 15 முதல் 20% தள்ளுபடி வேண்டுமா?

இன்றே இணைவீர் – சுவாசம் சந்தா திட்டம் – SSS

மேலதிக விவரங்களுக்கு: 8148066645 (ஜி பே எண்ணும் இதுதான்.)

இத்திட்டத்தில் இணைய கூகிள் ஃபார்ம் லின்க் கமெண்ட்டில் தரப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

• இத்திட்டத்தில் சேர நுழைவுக் கட்டணம் ரூ 299. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் இந்தச் சந்தாவைப் புதுப்பிக்கவேண்டும். (இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் இந்த 299 ரூபாய் மதிப்பிற்கும் நீங்கள் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்.)

• நீங்கள் சந்தாதாரர் ஆனதும் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் எங்களிடம் தள்ளுபடியுடன் புத்தகம் வாங்கலாம்.

• 500 ரூபாய் வரை புத்தகம் வாங்கினால் 15% தள்ளுபடி. 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால் 20% தள்ளுபடி.

• சுவாசம் பதிப்பகம் மட்டுமின்றி வேறு எந்தப் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்கினாலும் இந்தத் தள்ளுபடி உங்களுக்குக் கிடைக்கும்.

• 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால், இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மூலம் இந்தியா முழுமைக்கும் இலவசமாக உங்களுக்குப் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். கொரியர் மூலம் புத்தகத்தைப் பெற வேண்டுமென்றால் நீங்கள் கொரியருக்கான பணத்தைத் தரவேண்டும்.

• இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசம் நேரடியாகப் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் நீங்கள் இச்சலுகையைப் பெறலாம்.

• சுவாசத்தின் நேரடிப் புத்தகக் கடைகளிலும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசத்தின் சமூக ஊடகங்கள் அதாவது வாட்ஸப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், திரெட், டிவிட்டர் மூலமும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

• வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் பங்குபெறலாம். புத்தகம் அனுப்புவதற்கான செலவை நீங்கள் ஏற்கவேண்டும்.

• எங்களிடம் கிடைக்காத புத்தகங்கள் இருந்தால், அவற்றை வாங்கித் தர இயன்ற அளவுக்கு முயல்வோம். அப்படி வாங்க முடியாத பட்சத்தில் உங்களிடம் சொல்லிவிடுவோம்.

• சுவாசம் விற்பனை செய்யாத பதிப்பகமே இல்லை என்பதால், இத்திட்டம் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

• புத்தக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் ஏற்ற அருமையான திட்டம் இது. (**பள்ளிப் புத்தகங்களுக்கும் கைடுகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது**.)

• எங்களிடம் கிடைக்கும் ஆங்கிலப் புத்தகங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்பது உங்களுக்குக் கூடுதல் சலுகை.

• எங்களிடம் கிடைக்கும் புத்தகங்களை எங்கள் வலைத்தளம் www.SwasamBookart.comல் பார்க்கலாம். இதில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களும் ஸ்டாக்கில் இருக்கும் என்று சொலல முடியாது. ஆனால் இப்புத்தகங்கள் பதிப்பாளரிடம் ஸ்டாக்கில் இருக்குமானால் நாங்கள் நிச்சயம் உங்களுக்கு வாங்கித் தருவோம்.

இத்திட்டத்தைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இன்றே இதில் இணைவீர்.

கூகிள் ஃபார்ம் லின்க்: https://forms.gle/3RvHUbZ8YVixGhey9

Share

பிரபல கொலை வழக்குகள் – பாகம் 2

பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பாகம் வாசித்தேன். சிறிய நூல். இரண்டு மணி நேரத்தில் வாசித்துவிடலாம். இதற்கேற்ற இலகுவான நடை. எடுத்தால் கீழே வைக்க முடியாது என்னும் அளவுக்கான வேகம். அந்தக் கால வழக்குகள் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. சட்டம் கடுமையான பின்பு, கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பம் பயன்படத் தொடங்கிய பின்பு, மிகப் பெரிய அளவில் குற்றங்கள் குறைந்துள்ளன என்று புரிந்துகொள்ளலாம். கூடவே கல்வியும், ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியும், எதற்கெடுத்தாலும் கொல் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் நம்மைப் பக்குவப்படுத்தி இருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில் வழக்குகள் நடைபெற்றாலும், இந்தியர்களுக்கு மட்டுமே தண்டனை என்கிற நிலை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய உயர்நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டுவிட்டால் லண்டனில் பிரிவி கவுன்ஸிலில் மேல் முறையீடுக்குப் போகவேண்டுமாம். பணம் இருந்தவர்கள் போயிருக்கிறார்கள். அங்கே தண்டனையைக் குறைத்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.

நரசம்மா கொலை வழக்கில், எப்படிச் செய்திருந்தால் கிராமணி தப்பித்திருக்கலாம் என்று நூலாசிரியர் எஸ்பி சொக்கலிங்கம் சொல்லும் இறுதி வரியை ரசித்தேன்! சூலூர் சுப்பாராவ் வழக்கில் திருப்பத்துக்கு மேல் திருப்பம். வழக்கைச் சொன்னதோடு அந்தக் காலத்தில் இந்த வழக்குகளைப் பற்றி எப்படிப் பேசிக்கொண்டார்கள் என்பதையும் தந்திருப்பது சிறப்பு. ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு நமக்கு நன்கு பரிச்சயமானவையே என்றாலும், நாவரசு வழக்கை படித்தபோது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி என்றால், வழக்கு நடந்தபோது இவ்வழக்கு தமிழ்நாட்டை உலுக்கியதில் ஆச்சரியமில்லை.

பில்லா ரங்கா வழக்கு – படிக்கும்போதே ஒரு பதற்றத்தை வரவழைத்தது. இந்தியா முழுக்க இவ்வழக்கு பேசப்பட்டதில் விந்தையில்லை.

கொலை வழக்கில் கொல்லப்பட்ட உடல் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று நான் யோசித்ததே இல்லை. இப்புத்தகத்தில் அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.

இந்நூல் முழுக்கவே பல கொலைகளும் பாலியல் அத்துமீறல்களும் விவரிக்கப்பட்டுள்ளன. படிக்கும்போது படபடப்பு இல்லாமல் படிக்க முடியாது. அதற்கேற்ற நடை, அதற்கேற்ற வேகம், தேவையான தகவல்களை மட்டும் தந்தால் போதும் என்கிற தெளிவு இப்புத்தகம் முழுக்க சீராகக் கையாளப்பட்டுள்ளது.

எஸ்பி சொக்கலிங்கத்திடம் சில வருடங்கள் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாவை உலுக்கிய பாலியல் வழக்குகள் என்றே ஒரு புத்தகம் கொண்டு வரலாம் என்றேன். பாலியல் வழக்குகள் என்பதில் சொக்கலிங்கம் அவர்களுக்கு உடன்பாடில்லையோ என்று எனக்குத் தோன்றியது. இப்போதும் இந்தியாவை (தமிழ்நாட்டை) உலுக்கிய பாலியல் வழக்குகள் என்று ஒரு புத்தகம் வருமானால், அது முக்கியமான புத்தகமாகவே இருக்கும்.

பின்னட்டை வாசகம்:

மதுரை நாயக்கரின் வீட்டின் புறக்கடையில் உள்ள வடிகாலில் அடைப்பு. சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடியை அகற்றிவிட்டு உள்ளே பார்த்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் இடது கை விரல்களும் குழந்தையின் தலையும் தெரிந்தது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஈச்ச இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பார்சல் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஏற்றப்பட்டது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு பெண்ணின் சடலம்.
சென்னை மந்தைவெளியில் பேருந்தின் கடைசி இருக்கையின் அடியில் ஒரு வெள்ளை நிற பாலித்தீன் பை கண்டெடுக்கப்பட்டது. உள்ளே ரத்தக்கறையுடன் தலையில்லாத உடல்.

நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் பத்து படுகொலைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த நொடியில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட நொடி வரை நடந்தவை அனைத்தையும்
படு துல்லியமாக, முழு ஆதாரங்களுடன் விறுவிறுப்பான மொழி நடையில் ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரியச் செய்கிறார் எஸ்.பி. சொக்கலிங்கம். எழுத்தாளராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் இருப்பதால் சட்டங்கள், நீதி மன்ற விசாரணைகள் தொடர்பான நுட்பமான விவரங்களையும் கவனமாகப் பதிவு செய்கிறார்.

வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பகுதி இது. பத்து த்ரில்லர் படங்களை ஒரே நேரத்தில் பார்க்கத் தயாராகுங்கள்.

Share