Archive for புத்தகக் கண்காட்சி

பதிப்பாளர் குரல் :-)

சில பதிப்பாளர்களின் மீதான குறைகளை வாசகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அது உண்மையாக இருக்குபட்சத்தில் அதை பதிப்பாளர்கள் திருத்திக் கொள்ளவேண்டியது பதிப்பாளரின் கடமை.

அதேபோல் பதிப்பாளர்கள் வாசகர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். இங்கே இருப்பவை எனக்குத் தனிப்பட்டுத் தோன்றியவை.

* தள்ளுபடி 10% மட்டுமே. கூடுதலாகக் கேட்டுப் பார்ப்பது ஒரு வகை, போராடுவது ஒருவகை. ஒரு வாடிக்கையாளர் போராட ஆரம்பித்தால் பத்து வாடிக்கையாளருக்கு பில் போடமுடியாமல் போகலாம்.

* ஏழு வருஷத்துக்கு முன்னாடி வந்தப்ப எனக்கு கூட டிஸ்கவுண்ட் கொடுத்தாங்க என்று ஒருவர் சொல்வதை பில்லிங் கவுண்ட்டரில் இருப்பவரால் புரிந்துகொள்ளவே முடியாமல் போகலாம் என்பதைக் கொஞ்சம் எதிர்பார்த்திருங்கள்.

* சரியாக பில்லிங் கவுண்ட்டர் அருகில் வந்ததும் போனை எடுத்துப் பேசிக்கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு பில் போட்டால்தான் அடுத்தவருக்கு பில் போடமுடியும். ‘நீங்க போடுங்க பணம் தர்றேன்’ என்று சொல்லிவிட்டு போன் பேசுவதைவிட, பணத்தை செலுத்திப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு, அடுத்த அரங்குக்குள் நுழைவதற்கு முன்பு ஓரமாக நின்று மணிக்கணக்கில் பேசுவது நல்லது, உதவிகரமானது.

* உடன் வந்திருக்கும் நண்பரிடம் நீங்கள் தேர்ந்தெடுத்த புத்தகத்தின் அருமை பெருமைகளை புத்தகம் பில் போட்டபின்பு சொல்லலாம். பில் கவுண்ட்டரில் நின்றுகொண்டு அத்தனையும் சொல்லும்போது பின்னால் பில் போடக் காத்திருக்கும் வாசகர்களுக்கு இடையூறாகலாம்.

* பில் போட்டு முடித்ததும் பணத்தை தாங்கள் கொண்டு வந்திருக்கும் அனைத்துப் பைகளிலும் தேடாதீர்கள். முதலிலேயே தோராயமாக பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு ரூபாய் மிச்சம் தரவில்லை என்றால், இப்படி ஒவ்வொரு பில்லுக்கும் ஒரு ரூபாய்னா, ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் அப்படியானால் ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியிலும் எத்தனை கோடி ஊழல் என்று அங்கே நின்று சுஜாதா போல வாதிடாதீர்கள். சரியான சில்லறை வேண்டுமென்றால் சரியான சில்லறையைக் கையில் வைத்திருப்பது நல்லது. எளிய உபாயமும் கூட.

* பெரிய பை கொடுத்தா ஈஸியா கொண்டு போக உதவியா இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பெரிய பெரிய துணிக்கடைகள்கூட 2000 ரூபாய்க்கு மேல்தான் பெரிய பை தருகிறார்கள். புத்தக விற்பனையாளர்களைப் பற்றிக் கொஞ்சம் கருணையுடன் யோசித்துப் பாருங்கள்.

* பில் போடும் முன்னரே கொஞ்சம் தூரத்தில் ஒரு எழுத்தாளரைப் பார்த்துவிட்டு புத்தகம் கையெழுத்து வாங்கும் ஆர்வத்தில் அப்படியே ஓடிவிடாதீர்கள். நீங்கள் வந்து பில் போடுவீர்கள் என்ற நம்பிக்கையில்லாமல் இல்லை. ஆனால் அதுவரை உங்களையே பார்த்துக்கொண்டிருப்பது கடினம்.

* கி.ராஜநாராயணன் போன்ற மூத்த எழுத்தாளரைப் பார்த்து, போகன் சங்கர்தான நீங்க, நிறைய படிச்சிருக்கேன் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். எழுத்தாளருக்கு அடுத்தபடியாக, ஒரு பதிப்பாளருக்கே இதன் அபத்தமும் கஷ்டமும் அதிகம் புரியும்.

* பத்து கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த கிரெடிட் கார்டுக்கு எந்த பின் நம்பர் என்பதை பதினோரு முறை கிரெடிட் கார்ட் மெஷினில் போடாதிருப்பது பெரிய உதவி. ஒவ்வொரு கார்டுக்கும் இப்படிக் கணக்குப் போட்டால் நிஜமாக எனக்கே தலை சுற்றுகிறது.

* கிரெடிட் கார்ட் வேலை செய்யவில்லை என்றால் ப்ளான் பி வைத்திருங்கள். இப்பதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பக்கத்து கடைல போட்டேன் என்ற உங்கள் நிலைப்பாடு நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு பில் கவுண்ட்டரில் இருக்கும் எளியர் என்ன செய்யமுடியும்! கிரெடிட் கார்ட் மிஷின் ஓகே என்று சொன்னால் மட்டுமே அவர் புத்தகத்தைத் தரமுடியும்.

* அமெரிக்கன் கார்ட் கிரெடிட் கார்ட் மிஷின்களில் வேலை செய்யவில்லை என்றால், ஏன் எதற்கு எப்படி என்று பில் கவுண்ட்டரில் இருப்பவரிடம் பல விதமான அறிவுசார் கேள்விகளை எழுப்புவது உளவியல் ரீதியிலான தாக்குதல் என்பதை உணருங்கள்.

* எந்நேரத்திலும் கிரெடிட் கார்ட் மிஷின் வேலை செய்யாமல் போகும் சகல சாத்தியமும் உண்டு. ‘என்னங்க இவ்ளோ பெரிய புக் ஃபேர் நடத்துறீங்க, கிரெடிட் கார்ட் மிஷின் கூட இல்லையா’ என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தீர்வு இல்லை. தேவைப்பட்டால் இருக்கட்டும் என்று பணம் வைத்திருங்கள்.

* புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் ஆயிரம் குறைகள் உண்டு. அதைப் பொறுத்துக்கொண்டு நீங்கள் புத்தகம் வருகிறீர்கள் என்பது உண்மை. அதற்காக தமிழ் உலகும் பதிப்பாளர் உலகும் கடமைப்பட்டிருக்கிறது. இதன் எதிர்முனையும் உண்மை. பதிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ் உலகும் கடமைப்பட்டிருக்கிறது. இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

* புத்தகக் கண்காட்சி அரங்கில் முக்குக்கு முக்கு குடிநீர் வைத்திருக்கிறார்கள். கூட்டம் அதிகம் இருக்கும்போது அங்கு நீர் இல்லாமல் போவது இயல்புதான். இதை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது சரிதான். அதே சமயம், நீங்களும் கையில் தேவையான குடிநீருடன் வருவது உங்களுக்கு உதவலாம்.

* புத்தகக் கண்காட்சியில் நண்பர்களுடன் அரட்டை என்பதும் ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அதை அரங்குக்குள் புத்தகத்தோடு சேர்ந்து நின்றுகொண்டுதான் செய்யவேண்டும் என்பதில்லை என்பதையும் நினைவில் வைக்கலாம்.

* ஒரு புத்தகம் எங்கே இருக்கிறது என்று அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொரு அரங்கில் கேட்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஒருவேளை அவர் தெரியவில்லை என்றாலோ, அல்லது எந்தப் பதிப்பகம் என்று தவறாகச் சொன்னாலோ மீண்டும் தேடி வந்து ‘இதுகூட ஒழுங்கா சொல்லமாட்டீங்களா’ என்று சொல்லாமல் இருக்கலாம்.

* புரோட்டா செய்வது எப்படி என்ற புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை முதல் அரங்கில் இருந்து கடைசி அரங்கு வரை எல்லோரிடமும் கேட்காதீர்கள். க்ரியா கீழைக்காற்று அரங்குகளில் இக்கேள்வியைக் கேட்பது குறித்து கொஞ்சம் யோசித்துக்கொள்ளுங்கள்.

* புத்தகக் கண்காட்சியில் நான்கைந்து செல்ஃபி எடுத்துக்கொள்வது நல்லது. நாப்பது ஐம்பது செல்ஃபி எடுக்காதீர்கள், ப்ளீஸ்.

* பத்து ஸ்டால் கடந்து நடக்கும்போது கால் வலி வந்தால் உட்கார அங்கே இடம் கிடையாது. வெளியே சென்றுதான் உட்காரவேண்டும். எனவே நன்றாக நடக்க முடியும் என்ற உறுதியுடன் உள்ள நண்பரை மட்டும் அழைத்துக்கொண்டு வாருங்கள். இல்லையென்றால் புத்தகக் கண்காட்சி அனுபவமே எரிச்சல் மிக்கதாக ஆகிப் போகும்.

* செல்ஃபோனை தொலைப்பவர்கள், கடைசியாக பில் போட்ட அரங்கில் தேடுவது இயல்பு. ஆனால் அங்கேயே நின்று எங்கே செல்ஃபோன் என்று போராடுவதில் ஒரு பயனும் இல்லை. உங்கள் செல்ஃபோன் உங்கள் உரிமை, உங்கள் செல்ஃபோனை பத்திரமாக வைத்திருப்பது உங்கள் கடமை.

* இதில் எதையுமே நீங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வந்து புத்தகம் வாங்குங்கள். அதுதான் அடிப்படைத் தேவை.

Share

ஒய் எம் சி ஏ – சென்னை புத்தகக் கண்காட்சி 2017

நேற்று ஒய் எம் சி ஏ வளாகத்தில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கூட்டமே இல்லை. கடும் வெக்கை. ஜனவரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிதான் சென்னைக்கானது என்ற எண்ணம் சென்னைவாசிகளுக்கு அழுத்தமாக உள்ளது போலும். உண்மையில் சென்னைக்கு ஒரு புத்தகக் கண்காட்சி எல்லாம் காணவே காணாது. இந்தப் புத்தகக் கண்காட்சி இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் வலுப்பெறும் என்று நம்பலாம். இந்தமுறையே இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஓரளவு வரவேற்பு உள்ளது. விளம்பரமும் நன்றாகவே செய்திருந்தார்கள்.
 
கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் பொன்னியின் செல்வன் செட் 55% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கண்காட்சி முழுவதும் விதவிதமாகப் பொன்னியின் செல்வன்கள் கண்ணில்பட்டன. ஒரு கடையின் தனித்துவத்தைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு விற்பனையாளராக, வேறு வழியில்லை என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். புத்தக விற்பனை ஒட்டுமொத்தமாக உயராத வரை இந்நிலையே தொடரும்.
 
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கண்ணில் பட்டது. சடங்கு போல அவர்களிடம், டின்.என்.ஷேசனின் தன்வரலாறு இருக்கா என்று கேட்டேன். கிட்டத்தட்ட பல வருடங்களாக அவர்களிடம் இதைக் கேட்பது என் கடமை. அவர்களும், ஒண்ணே ஒண்ணு இருந்தது, இப்ப இல்லை என்பார்கள். இப்போதும் அதே பதிலைச் சொன்னார்கள். ஆனால் ஸ்டாலின் உள்ளே இருந்த ஒரு வாசகர், ஒண்ணு இங்க பார்த்தனே என்றார். வேறு யாரும் அதை எடுத்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில் அவரிடம், அதைக் கொஞ்சம் நீங்களே எடுங்களேன் என்றேன். அவரே தேடி எடுத்துத் தந்தார். பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல உணர்ந்தேன். சின்ன புத்தகக் கண்காட்சிகளில் இதைப் போன்ற பொக்கிஷங்கள் சிக்கும்.
 
நூல்வனம் ஸ்டாலில் பெரிய புத்தகம் ஒன்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பல புத்தகஙக்ளின் அட்டைகளில் என்ன என்னவோ ஆட்டம் போட்டிருந்தார்கள். குழந்தைகளைக் கவரும் நூல் வடிவமைப்பு. மணிகண்டன் ஸ்டாலில் இல்லாததால், என் மகன் பல புத்தகங்களை லவட்டி… சே… வாங்கி வந்தான். அரங்கில் இருந்த முத்து கணேஷ் அவர் பங்குக்கு அவரது பதிப்பகத்தின் (ஆரம் வெளியீடு) புத்தகம் ஒன்றையும் தந்தார். அங்கே ராம்கி நின்றிருந்தார். ‘என்னங்க இது, கமல் அரசியலுக்கு வந்தா ஜெயலலிதா ஆகிடலாம்னு போட்டிருக்கீங்க. மனசாட்சியே இல்லையா?’ என்று கேட்டேன். என்னவோ சொன்னார். நான் பதிலுக்கு, ‘வரட்டும். வரணும்னுதான் பிரார்த்தனை. அப்பதானே தெரியும்’ என்றேன்.
 
விருட்சம் ஸ்டாலில் கே.என்.சிவராமனும் யுவ கிருஷ்ணாவும் இருந்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னால் கவனம் இதழ்த் தொகுப்பை நமக்கு சிவராமன் வாங்கித் தருவார் என்று எனக்கு நிஜமாகவே தெரியாது. வாங்கித் தந்தார். 🙂 கவனம் என்ற இதழ் ஞானக்கூத்தனால் வெளியிடப்பட்டது. ஏழு இதழ் வெளி வந்திருக்கும் போல. ஏழு இதழ்களையும் அப்படியே ஸ்கேன் செய்து அச்சிட்டு நூலாக்கி இருக்கிறார்கள். ஸ்கேன் மூலம் அதே நூலை அப்படியே அச்சிடுவதில் உள்ள அனுகூலங்கள், மீண்டும் தட்டச்சு செய்யவேண்டியதில்லை, பிழைத் திருத்தம் செய்யவேண்டியதில்லை. பழைய நூல் என்றால் அதன் வாசிப்பு வாசனை அப்படியே கைக்கூடும். தடை செய்யப்பட்ட துக்ளக் இப்படி வந்திருந்தது. இப்போது கவனம். அதுபோக நகுலன் தொகுத்த குருக்ஷேத்திரம். அசோகமித்திரன் செய்த பிழைத் திருத்தங்களுடன் அப்படியே குருக்ஷேத்திரம் வெளிவந்துள்ளது சுவாரஸ்யம். இந்த இரண்டு நூல்களும் ஸ்கேனிங் செய்யப்பட்டு அப்படியே வந்திருக்கின்றன. கச்சிதமான ஸ்கேனிங்கும் கச்சிதமான லே அவுட்டும் இல்லையென்றால் இப்படிப்பட்ட நூல்கள் பல்லை இழித்துவிடும். கவனம் நன்றாகவே உள்ளது. கண்காட்சிக்குச் செல்பவர்கள் சிவராமனிடம் ஹாய் சொல்லி கவனம் பெற வாழ்த்துகள்.
 
வனவாசி என்ற நூலையும் பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். தன்னிடம் உள்ள நூலை அனுப்புவதாக பத்து முறை சொன்ன நண்பர் ஒருவர் (நண்பா!) பதினோராவது முறை, அனுப்பிட்டேனே இல்லையா என்றார். வேறு வழியின்றி ஆங்கிலத்திலேயே முக்கால்வாசி படித்து முடித்துவிட்டேன். சென்ற ஜனவரி புத்தகக் கண்காட்சியில் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. புதினம் புக்ஸின் கதிரேசன் ஃபேஸ்புக்கில் முக்கியமான புத்தகங்களை தினமும் அட்டையுடன் போடுவார். நேற்று வனவாசி கண்ணில் கட்டது. உடனே அதை வாங்கவேண்டும் என்று அவர் கடைக்குச் சென்றேன். விடியல் பதிப்பகம் வெளியிட்டது. இருந்தாலும் புதினம் புக்ஸின் கதிரேசனிடம் வாங்கினேன். எத்தனையோ வருடங்கள் தேடிக்கொண்டிருந்த இரண்டு புத்தகங்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.
 
என் மகனும் மகளும் அந்தப் புத்தகம் இந்தப் புத்தகம் என்று என்னவெல்லாமோ வாங்கிக்கொண்டிருந்தார்கள். விக்ரமாதித்தன் கதைகள் முழுத் தொகுப்பு, 400 ரூ விலையுள்ள நூல் 200 ரூபாய்க்கு என்று சொல்லவும், அந்நூலைப் பார்த்தேன். மிக மோசமான தாளில் அச்சிடப்பட்ட நூல். 400 பக்கம் இருக்கலாம். 200 ரூ என்பதே அதிகம். அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நியூ புக் லேண்ட்ஸ் கடைக்குச் சென்று நர்மதா வெளியிட்ட விக்கிரமாதித்தன் கதைகள் நூலை வாங்கினேன். நல்ல தரமான தாளில் அச்சிடப்பட்ட அழகான நூல். அங்கே ஸ்ரீனிவாசனுடன் பேசிக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களில் இணைய வழி தமிழ்ப் புத்தகக் கடைகளின் வரலாற்றையே அவர் சொன்னார். இத்துறையில் அதிக அனுபவம் உள்ளவர். புத்தகம் பற்றித் தெரிந்தவர் ஸ்ரீனிவாசன். அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். நிறைய நாஸ்டால்ஜியா. புத்தகக் கடைகளின் விற்பனை தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது என்பது மறுக்கவே முடியாத உண்மை. அமேசான் போன்ற தளங்கள் வாசகர்களுக்குத் தரும் அனுபவம் வேறு, விற்பனையாளர்களுக்குத் தரும் அனுபவம் வேறு. அமேசான் மூலமும் விற்பதன் மூலம் இதைக் கொஞ்சம் சரிக்கட்டலாம் என்றாலும் முழுவதும் முடியாது. மேலும் நீண்டகால நோக்கில் அமேசான் செய்யப்போவது என்ன என்பதையும் யோசிக்கத்தான் வேண்டும். ஸ்ரீனிவாசன் இதைப் பற்றி சரியாகவே சொன்னார். யோசனையாகவே இருந்தது. நன்றாக விற்கும் ஒரு சந்தையில் அமேசானின் வரவு என்பது வேறு. புத்தக விற்பனையில் அமேசானின் வரவு என்பது வேறுதான்.
 
என்னுடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் பஜ்ஜி சாப்பிடுவது, கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது என்ற கடமை ஆற்றச் சென்றார்கள். டயல் ஃபார் புக்ஸ் ஸ்டாலில் சிறிது நேரம் நின்றிருந்தேன். டி.கே. புக்ஸின் ரங்கநாதன் டில்லியில் இருந்து வந்திருந்தார். ஹாய் சொல்லிக்கொண்டோம். பிக் பாஸுக்கு நேரம் ஆகவும் ஓலா புக் செய்து குடும்பத்துடன் கிளம்பி வந்தோம். ஓவியாவைப் பார்க்க கமல் ஒரு சாக்கு என்ற என் மனைவியின் குரலை வழக்கம்போல் பொருட்படுத்தவில்லை. வீட்டுக்கு வந்து டிவியை உயிர்ப்பிக்கவும் பிக் பாஸ் தொடங்கவும் சரியாக இருந்தது.

Jpeg

Jpeg

Jpeg

Jpeg

Jpeg

Jpeg

Share

சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடர்பாக

பாம்புகள் உலவும் வெளியில் பாம்புகளுக்கு மத்தியில் புத்தகங்களை வாசகர்கள் வாங்குகிறார்கள் என்று மட்டும் சொல்லாத ஒரு கட்டுரையை நேற்று தினமலரில் வாசித்து அதிர்ந்தேன். சென்னை புத்தகக் கண்காட்சி பல இன்னல்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது. சில குறைகள் உள்ளன என்பதும் உண்மையே. ஆனால் ஒட்டுமொத்தமாக புத்தகக் கண்காட்சியைப் புறக்கணிக்கும் அளவுக்கோ, வாசகர்கள் பயந்து பின்வாங்கும் அளவுக்கோ குறைகள் எவையுமே இல்லை என்பதே உண்மை.

புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மாபெரும் கூட்டு முயற்சி. நிச்சயம் சில சுணக்கங்கள், சில பின்னடைவுகள் இருக்கவே செய்யும். இவையெல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் மெருகேறிக்கொண்டேதான் வருகிறது.

இம்முறை தீவுத்திடலில் நடத்தப்பட ஒரே காரணம், கடந்த டிசம்பரில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பின்விளைவுகளே. ஜூனில் வெயில் கடுமையாகவே இருக்கும். அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது. எதிர்பாராத மழை வேறு. இத்தனைக்கும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளில், நீர் ஒழுகியது என்னவோ பதினைந்து அரங்குகளுக்கும் கீழாகவே இருக்கும். மற்ற அரங்குகளில் பெரிய பாதிப்பு இல்லை. இத்தனை செய்ததே பெரிய விஷயம். ஆனால் நாம் குறைகளை மட்டுமே சொல்லப் பழகிவிட்டோம். குறைகள் சொல்லப்படவேண்டியது நிச்சயம் தேவைதான், ஆனால் புத்தகக் கண்காட்சியில் குறைகள் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற வகையில் எழுதுவது அர்த்தமற்றது.

புத்தகக் கண்காட்சிக்கு வருகிறவர்கள் நிச்சயம் வேர்வையில் நனைந்தே செல்கிறார்கள். இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. அதேசமயம் இத்தனை வேர்வையிலும் எத்தனை பேர் புத்தகம் வாங்குகிறார்கள் என்பதே நாம் பார்க்கவேண்டியது. கடும் வெயில் காரணமாக எல்லா வரிசைகளிலும் அதிக மின்விசிறிகளை நிர்வாகம் வைத்தது. அதன் பிறகு கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் ஜூனில் வேர்க்கவே செய்யும். வேர்வையில் புத்தகம் வாங்குவது ஒரு அனுபவம்தான், ஒரு பெருமைதான் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

வருகின்றவர்களுக்கு அருந்த நீர் வைக்கப்பட்டுள்ளது. கையிலேயே வாசகர்கள் நீரை சுமந்துகொண்டு வருவது நல்லது. குறைந்தபட்சம் நீர் பிடிக்க வாட்டர் கேனாவது கொண்டு வருவது நல்லது. திரைப்படத்துக்குப் போகும்போது, தொடர்வண்டியில் ஊருக்குச் செல்லும்போது நாம் நீர் கொண்டு போகிறோம். புத்தகக் கண்காட்சிக்கும் கையில் நீர் கொண்டு செல்லலாம், தவறில்லை.

மிகவும் தூரம் என்பது ஒரு பிரச்சினை. சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் எங்கே புத்தகக் கண்காட்சி வைத்தாலும் ஏதேனும் ஒரு பகுதி மக்களுக்கு நிச்சயம் வெகுதூரமாகவே இருக்கும். நந்தனத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தபோது தாம்பரத்தில் இருந்து ஒருவர் எப்படி வருவார் என்றோ வியாசர்பாடியில் இருந்து ஒருவர் எப்படி வருவார் என்றோ நாம் கேட்கவில்லை. ஆனால் தீவுத்திடலில் வைக்கவும் தென்சென்னைக்காரர்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி வருகிறது. இதே தீவுத்திடலில்தான் பொருட்காட்சி நடக்கிறது. பெருங்கூட்டம் கூடுகிறது. அப்போது எப்படி வருகிறார்கள்? இப்போது ஏன் அங்கலாய்ப்பு? புத்தகம் வாசிப்பது என்பது நம் பண்பாட்டோடு ஒன்றி வரவில்லை என்பதுதான் காரணம். புத்தகம் வாசிப்பது என்பது எதோ யாருக்கோ செய்யும் சேவை என்னும் மனப்பான்மையே காரணம். புத்தகம் வாசிப்பது கடமைக்காக அல்ல, ரசனைக்காக. இப்படி எண்ணம் உள்ளவர்கள் நிச்சயம் குறைகளை மட்டுமே அங்கலாய்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். புத்தகம் இருக்கும் இடம் தேடி புத்தகத்தைக் கண்டடைந்து வாசித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அதோடு, பழக்கமான ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு புத்தகக் கண்காட்சியை மாற்றும்போது எழும் பொதுப்புத்தி சார்ந்த பிரச்சினைகளும் ஒரு காரணம். காயிதே மில்லத் கல்லூரியில் இருந்து செய்ண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு மாற்றியபோதும், பின்னர் அங்கிருந்து நந்தனம் வொய் எம் சி ஏவுக்கு மாற்றியபோதும் இதே முணுமுணுப்புகள் இருந்தன. இப்போது நந்தனத்தில் இருந்து தீவுத்திடலுக்கு வரவும் அதேபோல் வருத்தப்படுகிறார்கள். இதுவும் பழகும்.

நந்தம்பாக்கத்தில் ஏன் வைக்கவில்லை என்று ஒரு கேள்வி. நந்தம்பாக்கத்தில் வைத்தால் ஏற்படும் செலவுகளை ஒரு பதிப்பாளரால் சமாளிக்கமுடியாது. நந்தம்பாக்கத்தில் நடத்தும் அளவுக்கு நம் வாசகர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கும் சமயத்தில் அதுவும் நடக்கத்தான் போகிறது.

தீவுத்திடலில் புத்தகக் கண்காட்சிக்கு அதன் அருகில் உள்ள சில முக்கிய இடங்களில் இருந்து இலவச ஆட்டோ சேவையும் வழங்கப்பட்டது. தியேட்டருக்குச் செல்லும்போது தியேட்டர் முன்பாக பேருந்து நிறுத்தம் இல்லையே என்று நாம் நொந்துகொள்வதில்லை. தியேட்டரில் டிக்கட் கிடைக்குமா என்பதிலேயே கவனமாக இருக்கிறோம். ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது நமக்கு ஆயிரம் வசதிக்குறைபாடுகள் கண்ணுக்குப் படுகின்றன.

புத்தகக் கண்காட்சி நூறு சதவீதம் நிறைகளோடு செயல்படுகிறது என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் பல விதங்களில் முன்னேற்றம் தேவை. அதே சமயம் புத்தகக் கண்காட்சிக்கே வரமுடியாதபடிக்கான அடிப்படைத் தேவைகளே இல்லை என்பது அநியாயமான வாதம். சென்னையில் கொஞ்சம் தூரம் உள்ள எந்த ஒரு இடத்துக்கும் செல்லும்போது உள்ள அதே பொதுவான வசதிக்குறைவுகள் மட்டுமே புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுவதிலும் உள்ளன. தனியாக வேறு குறைகள் இல்லை. புத்தகம் வாங்க சிறந்த இடம் புத்தகக் கண்காட்சியே. இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நிச்சயம் வாருங்கள். இந்தியாவிலேயே வாசகர்கள் அதிக அளவு புத்தகங்களை நேரடியாக பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கும் பெரிய புத்தகக் கண்காட்சி இது. இதைத் தவறவிடாதீர்கள். அதோடு, புத்தகக் கண்காட்சி என்பது மார்க்கெட்டுக்குப் போய் கத்தரிக்காய் வாங்கி வரும் ஒரு அனுபவம் அல்ல. புத்தகக் கண்காட்சியில் நீங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஒரு புத்தகத்தைக் கண்டடையலாம். உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு எழுத்தாளரை சந்தித்து உரையாட நேரலாம். யாருக்காகவோ யாரோ எழுதிய ஒரு வரி உங்களுக்காக அங்கே காத்திருக்கலாம். இந்த அனுபவங்களுக்கு முன்பு குறைகள் ஒரு பொருட்டே அல்ல என்பது சரிதானே?

Share

இங்கே எதற்காக – புத்தக விமர்சனம்

ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிடுவது எத்தனை கடினமானது என்பது எல்லாருக்குமே தெரியும். அதுவும் மாற்றுத் திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே வணிகத் திரைப்படங்கள் வெளிவருவதே அத்தனை கடினம் என்னும் நிலையில், மாற்றுத் திரைப்படங்கள் மட்டுமே எடுப்பேன் என்றொரு இயக்குநர் உறுதியாக இருந்தால் அவர் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை இயக்குநர் ஜெயபாரதியின் ‘இங்கே எதற்காக’ நூலைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

inge etharkaakaஇங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், ரூ 150

முன்பு தூர்தர்ஷனில் மதியம் மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் ஜெயபாரதியின் ‘உச்சிவெயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அப்போது எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கலாம். அப்போதே இதுபோன்ற ‘மெல்ல நகரும் இருட்டுக்குள் யாரோ ஒருவர் சத்தம் குறைவாகப் பேசும் படங்களை’ (படமெடுக்க பணம் கேட்டு ஜெயபாரதி செல்லும்போது இப்படித்தான் நடிகை ராதிகா சொல்கிறார்) விரும்பிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. மொழி தெரியாமல் சப்-டைட்டில்களை மெல்ல கூட்டி வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு மலையாள, கன்னடப் படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் கருப்பு வெள்ளை படம். (இதுதான் தமிழின் கடைசி கருப்பு வெள்ளை படமாம்.) ஜெயபாரதி என்ற பெயரைக் கேட்கவும் ஜெயபாரதி என்ற நடிகை நடித்தது என்றுதான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். நான் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக மங்கலாக சில காட்சிகள் நினைவிலுள்ளன. தலைவாசல் விஜய் (அப்போது அவர் வெறும் விஜய் மட்டுமே. தலைவாசல் வெளியாகியிருக்கவில்லை) ராணுவத்திலிருந்து திரும்ப வந்தவர் போன்ற நினைவு. அந்த ராணுவ உடையில் க்ளோஸப் காட்சியில் என்னவோ பேசுவார். யாரோ ஒரு முதியவர் காணாமல் போய்விடுவார். அவரை காரில் தேடுதேடென்று தேடுவார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்திருந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருந்தேன். ‘இதுக்கெல்லாம் அவார்ட்னு கொடுத்து… நம்ம டிடிக்குன்னு படம் கிடைக்குதே’ என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. இந்தப் படம் ஏன் முக்கியமான படம் என்றெல்லாம் அன்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்றும் நான் இது மிக முக்கியமான படம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாற்றுத் திரைப்படங்களின் இலக்கணமாக ஜெயபாரதியின் திரைப்படங்களைச் சொல்லவும் இல்லை. நிச்சயம் ஜெயபாரதியின் படங்களில் அவற்றுக்கே உரிய குறைகள் உள்ளன. ஆனால் இந்த இயக்குநர் ஏன் எதற்காக இது போன்ற படங்களை எடுக்கிறார், எப்படி இத்தனை கஷ்டத்துக்குள்ளாகி ஒரு படத்தை எடுக்கத் தோன்றுகிறது என்று நிச்சயம் யோசிக்கிறேன். மாற்றுத் திரைப்படங்களின் உச்சம் இல்லை என்றாலும், ஜெயபாரதியின் திரைப்படங்கள் நிச்சயம் மாற்றுத் திரைப்படங்கள்தான். மகேந்திரனின் திரைப்படங்கள்கூட இந்த அளவு மாற்றுத் திரைப்படங்கள் அல்ல என்றுகூடச் சொல்லலாம். மகேந்திரன் மாற்றுத் திரைப்படங்களுக்கும் வணிகத் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு பாதையைக் கண்டுகொண்டார். கொஞ்சம் முயன்றால் ஜெயபாரதியும் அந்தப் பாதையைக் கண்டுகொண்டிருக்கலாம். ஏனென்றால் சில குறைந்தபட்ச சமசரங்களுக்கு மகேந்திரன் போலவே ஜெயபாரதியும் ஆயத்தமாகவே இருந்திருக்கவேண்டும். அதற்கான தடயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனாலும் ஏனோ ஜெயபாரதி அதைச் செய்யவில்லை.

ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். எடிட்டிங், தொடர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிக்கோர்ப்பு என எல்லாவற்றிலும் ஏனோதானோவென்று இருந்தது. ஜெயபாரதியின் திரைப்படமும் அப்படித்தான் இருந்ததாக நினைவு. குடிசை திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ருத்ரையாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, உச்சிவெயில், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் – இவை எல்லாமே ஒரே ரகம். பணம் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.

எவ்வித ஈகோவுமின்றி யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு படம் தயாரித்திருக்கிறார் ஜெயபாரதி. ஆனால் பணம் தந்தவர் நேர்மையற்றவர் என்று தெரிந்தால் அத்தோடு விலகிவிடுகிறார். (என்று புத்தகத்தில் சொல்கிறார்.) அப்படித்தான் 24சி வேதபுரம் முதல்வீதி திரைப்படத்தை இவர் நிறுத்துகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்காக இவர் எடுக்கும் படம் தேநீர், அந்த கம்யூனிஸ்ட் தயாரிப்பாளர் செம்மலர்ச்செல்வனின் லீலைகளில் நின்றுபோகிறது. பணம் வந்தால் கம்யூனிஸ்ட்டுகள் கள்குடித்த குரங்கைப் போல் ஆடுவார்கள் என்று தோழர் வி.பி. சிந்தன் சொன்னதை அனுபவத்தில் புரிந்துகொண்டு அப்படத்தைக் கைவிடுகிறார். பின்னர் அதுவரை எடுத்த படம் சண்முகம் என்பவரால் (பிற்பாடு இவர் தராசு ஷ்யாம் என்று புகழ்பெறுகிறார்) ஊமை ஜனங்கள் என்று பெயர்மாற்றப்பட்டு வேறு கதையில் இது நுழைக்கப்பட்டு வெளிவந்து படுதோல்வி அடைகிறது.

மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லாமல், நடிக்க வந்த நடிகை போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று உடன் நடிக்க வந்த அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைக்கும் அனுபவமெல்லாம் இவருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இவரைச் செலுத்துகிறது. எப்படியோ அடுத்த அடுத்த படங்களை எடுக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே சில சமயங்களில் பத்துவருடங்கள்கூட கடக்கின்றன. ஆனாலும் யாரேனும் ஒருவர் வந்து படம் எடுக்கவேண்டும் என்றால் படம் எடுக்கிறார்.

இதற்கிடையில் கே.பாலசந்தர் நடிக்கவும் அழைக்கிறார்.  படம் இயக்கிக்கொண்டிருப்பதால் இவரால் நடிக்கச் செல்லமுடியவில்லை. ருத்ரையா இயக்கத்தில் நடிக்கச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார். இதற்கெல்லாம் பிற்பாடு ‘கிராமத்து அத்தியாயம் படத்தில் நன்றாக நடித்ததால், ’அந்த’ நடிகருக்கு இவர் போட்டியாகிவிடுவாரோ என்று அஞ்சியே இவர் தூக்கப்பட்டார்’ என்று இவருக்குச் சொல்லப்படுகிறது. அதை இவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த ஒரு படத்துக்குப் பிறகு ருத்ரையாவும் ஓரம்கட்டப்படுகிறார். இதுதான் சினிமா உலகம் என்று இவருக்கு இவர் நண்பர் சொல்கிறார். முற்போக்களரான ருத்ரையா தனது அடுத்த படம் வராததற்கு ஜெயபாரதியின் வயிற்றெரிச்சலே காரணம் என்று சொன்னதாகவும் இவர் கேள்விப்படுகிறார்.

இப்படி புத்தகம் முழுக்க பல சிதறல்கள். இதன்வழியே நாம் திரையுலகின் ஜொலிக்கும் வெள்ளித்திரைக்குப் பின்னே நடக்கும் அவலங்களை ஏமாற்றங்களை துரோகங்களை துல்லியமாகக் காணமுடியும். சில நண்பர்கள் இதுபோன்ற துரோகங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாமா செய்வார்கள், இவர் ஏமாற்றத்தில் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் ஜெயபாரதியின் புத்தகம் முகத்தில் அறைந்து உண்மையைச் சொல்கிறது. எடுத்தவுடனேயே தான் சொல்வதெல்லாம் உண்மை என்று இறைவன் மீது சத்தியம் செய்துவிட்டுத்தான் ஜெயபாரதி தொடங்குகிறார். ஜெயபாரதி பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.

* ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கச் சென்று அவர் ஷூட்டிங்கில் ஓய்வில் இருக்கும்போது ‘நான் தினமணிக் கதிரில் இருந்து வருகிறேன்’ என்று சொல்லவும் அவர் பதிலுக்கு ‘ஸோ வாட்’ என்று கேட்க, இவருக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அந்த நடிகை – ஜெயலலிதா.

* சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறைகள்’ பட ஷூட்டிங்கில் கஷ்டப்படும் மகனுக்கு தாய் பணம் கொடுத்தனுப்பும் காட்சி. கை நிறைய சில்லறைகளாக அந்தத் தாய் (பண்டரிபாய்) கொண்டு வந்து மகனாக நடிக்கும் சிவாஜியிடம் கொடுக்க, சிவாஜி சில்லறைகளையெல்லாம் தொட்டு நடிக்கமாட்டேன், பணமாகக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

* குடிசை திரைப்படத்துக்கு இசையமைக்க விரும்பி இளையராஜாவே முன்வருகிறார். ஆனால் ஏற்கெனவே காமேஷ் (கமலா காமேஷின் கணவர்) இசையமைக்க ஜெயபாரதி ஒப்புக்கொண்டுவிட்டதால் இது நிறைவேறாமல் போகிறது.

* குடிசை திரைப்படத்தை எடுப்பதற்குள் ஜெயபாரதி படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மாயாஜாலக் காட்சி நடத்தி பணம் சேகரித்து ஷூட்டிங் நடத்துகிறார். ’சுராங்கனி’ புகழ் மனோகர் கச்சேரி நடத்தி பணம் திரட்டிக் கொடுக்கிறார். சிவகுமார் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி 2,000 ரூ தருகிறார். மிருணாள் சென்னை வைத்து தமிழில் படம் எடுக்க விரும்பும் விநியோகஸ்தரை, அப்பணத்தை குடிசை திரைப்படத்துக்குத் தரும்படி மிருணாள் சென்னே சொல்கிறார்.

* ஜெயபாரதியின் முதல் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. பாடல்களைச் சேர்ப்பதால் கோபப்பட்ட கமல் அதிலிருந்து விலகுகிறார். பிற்காலத்தில் ரஜினியை நடிக்கவும் ஜெயபாரதி கேட்கிறார். ‘சலிப்படையும்போது உங்களிடம் வருகிறேன்’ என்று சொல்கிறார் ரஜினி.

*Crowd funding மூலம் பணம் சேர்த்தே திரைப்படம் எடுக்கிறார் ஜெயபாரதி. சிலர் தருகிறார்கள். பலர் தருவதில்லை. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உச்சிவெயில் படத்துக்கு பத்தாயிரம் நன்கொடை தருகிறார்.

நான் சில விஷயங்களையே சொல்லியிருக்கிறேன். இப்படி புத்தகமெங்கும் அறிந்த மனிதர்களின் அறியாத முகங்களும் அறியாத முகங்களின் அசரடிக்கும் குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அம்பிகா நடித்தால் இயக்குகிறேன் என்று சொன்ன மனிதரையும், உச்சிவெயில் படத்தில் ஹீரோவான தனக்கு எத்தனை பாடல்கள் என்று கேட்ட குப்புசாமித் தாத்தாவையும் மறக்கமுடியாது நம்மால்.

கமலையும் ரஜினியையும் நடிக்க கேட்ட இவர் ஏன் இவர் மம்முட்டியையோ மோகன்லாலையோ கேட்கவில்லை என்ற கேள்வி இப்புத்தகம் முழுவதும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலும் ஸ்ரீவித்யா ‘நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பேன்’ என்று சொன்னதைப் படித்தபோது இந்நினைவு அதிகமாகியது. அதைத்தான் வைரமுத்து ஜெயபாரதியிடம் ‘இங்கே எதற்காக?’ என்று கேட்டிருக்கிறார் போலும்.

உண்மையில் தமிழ்த் திரையுலகில் வரும் திரைப்படங்களைப் பார்த்தும் யாருக்காக இன்னும் இதுபோன்ற திரைப்படங்களை ஜெயபாரதி இயக்குகிறார் என்று எனக்கு இன்னும் பிடிபட்டபாடில்லை. நண்பா நண்பா, புத்ரன், குருக்ஷேத்திரமெல்லாம் வந்ததும்கூட யாருக்கும் தெரியாது. சி.சு.செல்லப்பா புத்தகக் கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்றதாகச் சொல்வார்கள். படத்தை முடிக்க ஒவ்வொரு கல்லூரியாக பணம் கேட்டு ஜெயபாரதி ஏறி இறங்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது

குருக்ஷேத்திரம் படம் வெளிவருவது போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் பட்டபாட்டைவிட பெரியதாக இருக்கிறது. திடீரென வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தால்தான் படத்தை விற்கமுடியும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட (இவர் ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது கோபத்தில் தேவடியா பசங்களா என்று கத்தியவர்) வேறுவழியின்றி அதற்கும் ஒப்புக்கொள்கிறார். முதலில் இவர்தான் ஜெயபாரதி தெரியாத வடிவேலு, இவர் யாரென்று தெரிந்துகொள்ளவும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது ‘சந்திரசேகருக்கே தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கும் ஒரு படத்துல வாங்கிக் கொடுங்கண்ணே’ என்று கேட்கிறார். விவேக்கும் இவரை அழைத்து ‘மாற்றுத் திரைப்படம்’ வேண்டுமென்று கேட்டு ஒரு படம் நடிக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றியடையாமல் அது பிற்பாடு ஒய்.ஜி. மகேந்திரா நடித்து ‘புத்ரன்’ என்ற திரைப்படமாக வெளிவருகிறது. (இப்படி ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது!) விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுக்குள்ளேயும்தான் எத்தனை கனவுகள்!

நூல் முழுக்க தினுசு தினுசான தயாரிப்பாளர்கள். ஹோட்டல் தொழில் நடத்தும் ஒருவர். தன்னைவிட இயக்குநருக்குப் புகழா என்று மருகும் ஒருவர். அம்பிகா ஹீரோயின் என்றால் படம் தயாரிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். படம் தயாரிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் கிடைத்ததையெல்லாம் தின்று பெண்களுடன் ஆட்டம்போடும் ஒருவர். இதற்கிடையில்தான் நாம் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம். நினைக்கவே அயற்சியாகத்தான் உள்ளது.

திரைப்படம் பற்றி தெரிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது மிக முக்கியம். இது மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வணிகத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களும் இதேபோலவோ இதைவிட அவமானப்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்துதான் மேலே வரவேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நிலையைக் காலம் காலமாகவே நம் திரையுலக அமைப்பு கைக்கொண்டுள்ளது. இந்நிலை அத்தனை சீக்கிரத்தில் மாறாது. ஒரு புகழ்முகம் தனக்குப் பின்னே ஒளித்துக்கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை நாம் தரிசிக்க நேரும்போது ஏற்படும் மனவலியை எப்படிச் சொல்வது? அந்த மனவலியை இப்புத்தகம் எனக்குக் காட்டியது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html

Share

மாதிரிக்கு ஒரு புத்தகக் கண்காட்சி – எஸ்.ஆர்.வி பள்ளி, திருச்சி

திருச்சியில் உள்ள எஸ் ஆர் வி பள்ளியில் சென்ற மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் முதன்முறையாக நாங்கள் பங்கேற்றோம். இது அப்பள்ளி நடத்தும் 9வது வருடப் புத்தகக் கண்காட்சி. பொதுவாக கிழக்கு சார்பில் கிழக்கு புத்தகங்களை மட்டுமே அங்கே விற்பனைக்கு வைப்போம். மற்ற பதிப்பகங்கள் அவர்களது புத்தகங்களை காட்சிக்கு வைப்பார்கள். இந்தமுறை அப்படி அல்லாமல் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் அனைத்துப் பதிப்பகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனைக்குக் காட்சிப் படுத்தியிருந்தோம். 

IMG-20141127-WA0000

புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த பள்ளி நிர்வாகம் தந்த ஒத்துழைப்பு அபாரமானது. அப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும்.

புத்தக வாசிப்பை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று பலரும் யோசிக்கிறோம். ஒரு கையறு நிலையில்தான் நாம் உறைந்துவிடுகிறோம். எங்கே சென்றாலும் அவ்வாசல் மூடப்பட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இன்றைய நிலையில் புத்தக வாசிப்பை மேம்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளெல்லாம் தடைப்படுகின்றன. எங்கோ தவறு செய்கிறோம், அது எது என்று கண்டறியவோ, அப்படியே கண்டறிந்தாலும் அதை சரி செய்யவோ இயலாத நிலை ஒன்றை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

எல்லோருக்குமே தெரியும், மாணவர்களிடம் இருந்து புத்தக வாசிப்பைத் தொடங்கவேண்டும் என்பது. பதில் நம்மிடையே இருக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்த வழிகள் தெரியவில்லை. ஏனென்றால் அதைச் செய்யும் பொறுமையும் பக்குவமும் இல்லை. அதைச் செய்யவேண்டிய ஆசிரியர்களே புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றித் தெரியாதவர்களாக இருப்பது பெரிய சோகம். அதையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றித் தெரிந்து அதை முன்னெடுக்க நினைத்தால், அடுத்த தடை பெற்றோர்கள் வழியே வருகிறது. பக்கத்துவீட்டு மாணவனோ சொந்தக்காரப் பையனோ அதிகம் மதிப்பெண் பெற்றால், அதைவிட அதிக மதிப்பெண்ணைத் தன் மகன் பெறவேண்டும் என்ற அழுத்தத்தை பெற்றோர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படி பாடப் புத்தகத்தைப் படிக்காமல் வேறு புத்தகங்களைப் படிப்பதால் என்ன பயன் என்று அவர்கள் மிகத் தெளிவாகவே கேள்வி எழுப்புகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இக்குரலை நீங்கள் தொடர்ந்து கேட்கமுடியும். இதைமீறி ஆசிரியர்களால் என்ன செய்துவிடமுடியும்? இப்படி பல இடங்களில் மோதிய பந்து கடைசியில் தஞ்சமடையும் இடம், புத்தக வாசிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளாம் என்னும் இடமே.

IMG_20141128_121119

எஸ் ஆர் வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் தன் தொடர் முயற்சியின் காரணமாக, மாதிரி ஒன்றை நமக்கு உருவாக்கிக் காண்பித்துள்ளார். அதை அப்படியே பின்பற்றினாலே, மேலே சொன்ன அத்தனை தடைகளையும் நாம் உடைத்து, மாணவர்களை புத்தக வாசிப்பாளர்களாக மாற்றும் பெரிய சாதனையை சுலபமாகச் செய்யமுடியும். ஒரு பள்ளி தொடர்ந்து 20 ஆண்டுகளில் அதன் மாணவர்களில் பாதி பேரையாவது புத்தக வாசிப்பாளர்களாக மாற்றுமானால், அப்பள்ளி மிகப்பெரிய சமூக சாதனை செய்திருக்கிறது என்றே அர்த்தம். படிக்க சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையில் இது அசுர சாதனை. ஒவ்வொரு பள்ளியும் இதில் பத்தில் ஒரு பங்கைச் செய்தாலே போதும், அடுத்த பத்து ஆண்டுகளில் வரும் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் பெரிய அளவில் ஊக்கம் பெறும். அடுத்த இருபது ஆண்டுகளில் அது ஒரு இயக்கமாகும். அத்தலைமுறை பெற்றோர்களாகும்போது, ஆசிரியர்களும் அவர்களும் இணைந்தே இதைப் பெரிய அளவில் – அவர்கள் அறியாமலேயே – முன்னெடுத்துச் செல்வார்கள். இத்தகைய பெரிய சாதனையை அமைதியாகச் செய்திருக்கிறது எஸ் ஆர் வி பள்ளி.

இந்தக் கண்காட்சிக்கு முன்னர் நான் துளசிதாசன் அவர்களை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். கண்காட்சியின் வெற்றி பற்றி ஐயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இது சாத்தியமாகுமா என்ற சிறிய சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால் துளசிதான் மிக நம்பிக்கையுடன் பேசினார். துளசிதானின் மிகப்பெரிய பலம் அவரது அபாரமான புத்தக வாசிப்பு. வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருப்பதாகச் சொன்னார். துளசிதாசன் வயதொத்தவர்கள் இளமையில் ஒரு வேகத்தில் புத்தகம் வாசிக்கத் துவங்கி, ஒரு நிலையில் தேங்கிவிட்டிருப்பார்கள். ஆனால் இவர் இன்றுவரை தொடர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். எனவே எப்புத்தகங்களை மாணவர்களுக்கு பள்ளி வயதில் படிக்கத் தரவேண்டும், எவற்றைப் படிக்கத் தரக்கூடாது என்பதில் தீர்மானமான கருத்துகள் கொண்டிருக்கிறார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது அவர்களே தேடிப் படிக்கவேண்டிய நூல்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார். இவையே ஒரு நல்ல புத்தக கண்காட்சி இயக்கத்தை உருவாக்க அவருக்கு மூலதனமாக இருந்திருக்கவேண்டும். ஆம், அவர் உருவாக்கி இருப்பது நிச்சயம் ஒரு இயக்கம்தான்.

பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களையும் பெற்றோர்களையும் வரவைக்க மிக எளிமையான வழியைப் பின்பற்றுகிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர் ஆசிரியர் தினம், புத்தகக் கண்காட்சியை ஒட்டி வைக்கப்படுகிறது. இதனால் எல்லாப் பெற்றோரும் நிச்சயம் பள்ளிக்கு வந்தே தீரவேண்டும். இதுவரை நாங்கள் எத்தனையோ பள்ளிகளில் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறோம். அங்கே பெற்றோர்கள் வரவு குறைவாகவே இருக்கும். ஏனென்றால் பெற்றோர்களுக்குப் பல வேலைகள். அதற்கிடையில் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க அவர்களுக்கு நேரமில்லை. அதை, இந்தப் பெற்றோர் ஆசிரியர் தினத்தின் மூலம் எஸ் ஆர் வி பள்ளி எளிதாகத் தாண்டிவிட்டது.

புத்தகக் கண்காட்சியின் முன்பிருந்தே, அதைப் பற்றி தொடர்ந்து மாணவர்களிடம் பேசுவது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதைப் பற்றிய செய்திகளை அனுப்புவது, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்புவது என எல்லா வழிகளிலும் புத்தகக் கண்காட்சி பற்றிய ஆர்வம் மாணவர்களிடையேயும் பெற்றவர்களிடையேயும் வளர்க்கப்படுகிறது. பள்ளியில் நடைபெறும் தினசரி வழிபாட்டின்போதும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் சேரும்போது ஒவ்வொரு வருடமும் அவருக்கு ஓர் உண்டியில் தரப்படுகிறது. அம்மாணவர் அந்த உண்டியலை அவர் வீட்டில் ஒரு நூலகம் உருவாக்கப் பயன்படுத்தவேண்டும். வீட்டுக்கு ஒரு நூலகம் என்ற பெயரில் இதை எஸ் ஆர் வி பள்ளி பிரபலப்படுத்தியுள்ளது. புத்தகக் கண்காட்சி வரை சேமிக்கப்படும் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து மாணவர்கள் புத்தகம் வாங்குகிறார்கள். பல மாணவர்கள் தங்கள் உண்டியிலில் இருந்த சில்லறையை எண்ணிக்கொண்டு வந்து எங்களிடம் தந்து புத்தகம் வாங்கியபோது, தனிப்பட்ட முறையில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர்கள் வரிசையில் நின்று புத்தகம் வாங்குகிறார்கள். நான்கு நாள்கள் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வகுப்பின் மாணவர்களை ஆசிரியர்கள் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கிறார்கள். மாணவர்கள் தங்களிடையே, “நான் சச்சின் வாங்கிட்டேன், நீ எங்க வாங்கிருக்க?”, “நான் பஞ்ச தந்திரக் கதை வாங்கிருக்கேன்” என்று பேசிக்கொண்டே புத்தகம் வாங்குவதைப் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

IMG_20141129_113517

மாணவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை மறுநாள் வகுப்பாசிரியரிடம் தரவேண்டும். எந்த மாணவர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறாரோ அவருக்குப் பாராட்டு உண்டு. அதேபோல் பெற்றோர்கள் வாங்கியிருக்கும் புத்தகங்களை வீட்டில் அடுக்கி, அதைப் புகைப்படம் எடுத்து, வீட்டுக்கு ஒரு நூலகம் என்று பெயரிட்டு வகுப்பாசிரியர்களிடம் தரச்சொல்லியும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். 

வாங்கிய புத்தகங்களை மாணவர்கள் படிப்பது பற்றியும் அதைத் தொடர்ந்து உரையாடுவது பற்றியும் ஆசிரியர்கள் கவனம் கொள்கிறார்கள். அடிக்கடி ஏதேனும் ஒரு முக்கியஸ்தர் அப்பள்ளிக்கு வந்து விரிவுரை ஆற்றுவது வழக்கமாகவே உள்ளது. இப்படி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்த எஸ் ஆர் வி பள்ளியும், அதன் முதல்வர் துளசிதாசனும் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகள் அசரடிக்கின்றன.

மயிலாப்பூரில் மயிலாப்பூர் திருவிழாவில் தெருவில் நாங்கள் புத்தகக் கண்காட்சி நடத்தியிருக்கிறோம். எதிர்பாராத பலர் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். கோவில் அர்ச்சகர் ஒருவர் ஒவ்வொரு நாளும் வரும் காணிக்கையை எடுத்துக்கொண்டு வந்து அவருக்குத் தேவையான புத்தகத்தை வாங்கிச் செல்வார். அவர் தரும் காணிக்கையில் விபூதி ஒட்டியிருக்கும். ரூபாய் தாள்கள் கசங்கி குங்குமத்தோடு வரும். அன்று நான் அடைந்த அதே மகிழ்ச்சியை எஸ் ஆர் வி பள்ளியில் மாணவர்கள் புத்தகம் வாங்கும்போதும் அடைந்தேன். 

IMG_20141127_125442

இன்றைய நிலையில் இப்படி செயல்படும் முதல்வர்களையும், அதை அனுமதித்து சிறப்பாக முன்னெடுக்கும் பள்ளி நிர்வாகத்தையும் பார்ப்பது அரிது. உண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் இதை ஒவ்வொரு வருடமும் செய்யமுடியும். பள்ளி முதல்வர்கள் திடத்துடன் இருந்தால், இதை வழக்கமாக்கிவிடலாம். இதனால் மாணவர்கள் பெறப்போகும் அனுகூலங்கள் சொல்லி மாளாது. அத்தோடு ஒரு சமூக மாற்றத்துக்கான வித்து ஊன்றப்படும். ஆனால் இப்படிச் செய்யும் ஆசிரியர்களும் பள்ளிகளும் மிகக்குறைவே என்ற உண்மை முகத்தில் அறைகிறது. இதைப் படிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, இதைப் போன்ற புத்தகக் கண்காட்சி நடத்துவதைப் பற்றி ஆலோசனை அளிக்கலாம். எங்கே இருந்தாவது ஒரு மாற்றத்தை நாம் தொடங்கியாகவேண்டும். புத்தக வாசிப்பு அதிகமாகாமல் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் தீவிரமாகச் செய்துவிடமுடியாது என்று நான் நம்புகிறேன். நாம் செய்யப்போகும் எந்த ஒரு செயலுக்கும் நம் புத்தக வாசிப்பு நமக்குப் பின்புலமாக இருந்து பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் என் மனமார்ந்த நன்றியை எஸ் ஆர் வி பள்ளிக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

Share

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

 

 

விலை: 180

Dial for books: 94459 01234 | 9445 97 97 97

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

 

கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. கம்யூனிஸ்ட்டுகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.

லெனின், ஸ்டாலின், மாஓ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? புக்காரினுடம் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா? வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

பொதுவாகவே கம்யூனிஸம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், கம்யூனிஸம் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே கம்யூனிஸத்துக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

கம்யூனிஸத்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி கம்யூனிஸ்ட்டுகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் கம்யூனிஸம் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலகத் தோழர்கள்.

லெனின் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் போட்டி, ஸ்டாலினைப் பார்த்து லெனினே அதிர்ந்து போவது, ஏன் லெனின் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

கம்யூனிஸ்ட்டுகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் கம்யூனிஸ்ட்டுகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் மாஓவின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். மாஓ புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக கம்யூனிஸ்ட்டுகள் ஸ்டாலினையும் மாஓவையும் தலைவர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் சிவப்பு மயம்.

இந்திய கம்யூனிஸ்ட்டு நேர்மையாளர்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடையும் அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. சே குவேராவைப் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! மாஓவின் அத்தியாயமோ கிளுகிளு. பௌத்த மடலாயங்களுக்கு, சீன கலாசாரத்துக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. கம்யூனிஸ்ட்டுகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் கம்யூனிஸம் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. ஜெயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில்ஜெயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது அரவிந்தனின் நீலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் அரவிந்தன் நீலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் கம்யூனிஸம் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸம் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். கம்யூனிஸத்தின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (கிழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, அரவிந்தன் நீலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. வினவு-ல் ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி கம்யூனிஸ்ட்டுகள் ‘பின் தொடரும் நிழலின் குரலை’ கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு கட்சி மேடைகளில் பேசும் விடலைகளுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச கம்யூனிஸ்ட்டுகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் தோழரென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.

வந்தே மாதரம்.:))))))

(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்கில் கிடைக்கும். கிழக்கு அரங்கு F 7)

Share

தள்ளுபடி அதிரடி

இந்தப் பதிவை நான் சீரியஸாகத்தான் எழுதுகிறேன் என்றாலும் கடைசியில் இது மார்க்கெட்டிங் பதிவாகவும் எஞ்சும் அபாயம் உள்ளது என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

அதிரடித் தள்ளுபடி என்று கிழக்கு பதிப்பகம் சில புத்தகங்களை கிட்டத்தட்ட 80% தள்ளுபடியில் விற்பனை செய்தது, செய்துவருகிறது. இது முதலில் அறிவிக்கப்பட்டபோது சந்தோஷத்துடன் வாங்கிச் சென்ற வாசகர்கள் ஒருபுறம், இது எழுத்தாளர்களை அவமானப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டவர்கள் ஒருபுறம். வாசகர்கள் இப்படிப் பழகிவிட்டால் புதிய புத்தகங்கள் வரும்போது இனி அதனை வாங்கமாட்டார்கள் என்று கருத்துச் சொன்னவர்கள் ஒருபுறம்.

பொதுவாக ஒரு புத்தகத்தை 1200 அச்சடிப்பது என்பது மரபு. (இப்படி இல்லாமல் குறைத்து, மிகக்குறைத்து, அல்லது நன்றாக விற்பனையாகும் புத்தகங்களை மிக அதிகரித்தும் அச்சடிக்கப்படுகின்றன. அவை பிரச்சினையற்றவை. எனவே, அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேசவில்லை.) அப்படி அச்சடிக்கும் புத்தகங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி விற்பனை ஆகவில்லை என்றால் அவை தேங்கத் தொடங்கும். 3 வருடங்களில் விற்கவில்லை என்றால் அதுவே சுமையாகவும் ஆகலாம். பொதுவாக 100 புத்தகங்கள் அச்சிட்டால், அதில் சூப்பர் ஹிட் புத்தகங்கள் அதிகபட்சம் 5 வரலாம். ஹிட் புத்தகங்கள் 10 வரலாம். மோசமில்லை என்னும் ரகத்தில் இன்னொரு 20 வரலாம். மீதி 65 புத்தகங்கள் இப்படித் தேங்கிப் போகும் அபாயம் கொண்டவைதான். (இந்த எண்ணிக்கைக்கும் புத்தகங்களின் தரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.)

இந்தப் புத்தகங்களை என்ன செய்வது? அதிலும் 1500 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் வரை அச்சிட்ட பதிப்பகங்கள் என்ன செய்ய இயலும்? இவற்றை பத்திரமாக வைத்திருக்க புத்தகக் கிடங்குக்கு ஆகும் செலவு, அவற்றைக் கையாளும் பாதுகாக்கும் பணியாளார்களின் சமபங்களங்கள் எல்லாவற்றையும் எப்படி நிர்வகிப்பது?

இந்தப் பிரச்சினை புத்தகத் தொழிலில் மட்டும் இருப்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு. ஆனால் அவ்வப்போது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்ற ஒன்றைப் போட்டு காலி பண்ணிவிடுவார்கள். புத்தகம் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் இப்பழக்கம் இல்லை என்பதால், அதனை கிழக்கு செய்தபோது நிறைய கேள்விகள் எழுந்தன.

உண்மையில் கிழக்கு பதிப்பகம் இது போன்ற புத்தகங்களை இந்த விலையில் மகிழ்ச்சியோடு விற்கவில்லை. இதனை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு புத்தகத்தை 1200 கூட விற்கமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான சரியான வழிமுறைகளை எந்தப் பதிப்பகமும் இன்னும் எட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. இதுபோக, ப்ரைடுக்காகவும், மன மகிழ்ச்சிக்காவும் கொண்டு வரப்படும் புத்தகங்கள். அவையும் விற்கவில்லை என்றால் புத்தகக் கிடங்கில் தேங்கவே தொடங்கும். வேறு வழியின்றித்தான் இதனைச் செய்யவேண்டியிருக்கிறது.

இதைச் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளாகச் சொல்லப்படுபவை, உண்மையில் கிழக்கை மற்றும் இதுபோன்று இனி வேறு பதிப்பகங்கள் செய்ய முன்வந்தால் அவற்றையும் பாதிக்காது என்றே நான் நம்புகிறேன். இப்படி குறைந்த விலையில் புத்தகம் வாங்கிப் பழகியவர்கள் இனிமேல் புதிய புத்தகங்களை வாங்கமாட்டார்கள் என்று நான் நம்பவில்லை. உண்மையான புத்தக விற்பனை புத்தக விரும்பிகளிடமே முதலில் ஏற்படுகிறது. அவர்கள் இதற்கெல்லாம் காத்திராமல் உடனே வாங்கிவிடுவார்கள் என்பது முதல் பாயிண்ட். இரண்டாவதாக, நாம் எல்லா புத்தகப் படிப்பாளர்களையும் ஏற்கெனவே அடைந்துவிட்டோம் என்னும்போதுதான் இந்த ‘புத்தகம் இனி விற்காது’ என்ற எண்ணமே ஏற்படும். ஆனால் உண்மையில் நாம் பெரும்பாலான புத்தக வாசிபபாளர்களைச் சென்று அடையவே இல்லை. எனவே இந்தத் தள்ளுபடி விற்பனையில் பயன் அடையப்போவது, நாம் ஏற்கெனவே சென்றடைந்திருக்கும் ஒரு சிறிய விகிதத்தில் ஒரு மிகச் சிறிய விகிதம் மட்டுமே. ஏனென்றால்,ஒரு தமிழ்ப் பதிப்பகத்தைத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்டதமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமானது.

அடுத்ததாக எழுத்தாளர்களின் வருத்தம். முதலில் இது நியாயமானது என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இது மனம் சார்ந்த வருத்தம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பதிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை என்பது புரியலாம். புத்தகத்தை எடைக்கு எடை போட்டோ, ரிபிராசஸஸ் செய்ய விலைக்குப் போட்டோ கொன்றுவிடலாம் என்று ஒரு வாதம் வருகிறது. நான் இதனை நிச்சயம் ஏற்கவில்லை. குறைந்த விலையில் கொடுத்தால் வாங்க ஆளிருக்கும்போது ஏன் இதனைச் செய்யவேண்டும்? புத்தகத்தின் விலை தங்கள் பர்ஸைவிட அதிகம் என்னும்போது மட்டும் ஒரு புத்தகத்தை வாங்காமல் செல்பவர் இதனைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கிக்கொண்டால் அது ஓர் எழுத்தாளருக்கு நிச்சயம் மகிழ்ச்சியே ஏற்படுத்தவேண்டும். ஓர் எழுத்தாளர் எழுதுவதே தனது புத்தகம் பரவலாக வாசிக்கப்படத்தானே!

மேலும், இப்படி வாசித்துப் பழகியவர்கள், சில வருடங்களில் ஒரு புத்தக வாசிப்பாளராகவே மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதோடு, இப்படி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் பதிப்பகங்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் கிடைக்கிறது. இதனையெல்லாம் சரியாக விற்காத புத்தகங்களின் மூலம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

ஒரு புத்தகத்தை ஏன் 1200 கூட விற்கமுடியவில்லை? புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு என்பது நிச்சயம் உண்மையே. ஆனால் ஒரு புத்தகத்தின் 1200 படிகளை வாங்கும் வாசிப்பாளர்கள்கூடவா இல்லை? இருக்கிறார்கள். தமிழ்நாடெங்கும் பரவலாக இருக்கிறார்கள். (வெளிநாட்டிலும்தான்!) அவர்களை அடையும் வழி காஸ்ட்லியானதாக இருக்கிறது. டிவியில் விளம்பரங்கள் வரத் தொடங்கினால் மிக எளிதில் ஒரு பதிப்பகம் பிரபலமாகலாம். நிச்சயம் புத்தகங்களும் விற்கும். ஆனால் அந்த டிவி விளம்பரத்துக்குத் தரும் காசுக்கு இணையான லாபத்தை புத்தகங்களில் பார்க்க முடியாது அல்லது வருடங்களாகும்.

டிவி விளம்பரம் என்றில்லை, முன்னணி நாளிதழ்கள், முன்னணி வெகுஜன இதழ்கள் எல்லாவற்றின் விளம்பர ரேட்டும் இதேபோலவே இருக்கின்றன. ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் ஒரு பக்க விளம்பரம் கிட்டத்தட்ட 1.5 லட்சம். இந்த 1.5 லட்ச விளம்பரத் தொகையை ஈடுகட்ட, 100 மதிப்புள்ள புத்தகம் எத்தனை விற்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் விற்றால் பதிப்பகத்துக்கு நிகர வருமானம் (நிகர லாபம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்) 30 ரூபாய்தான் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே விளம்பரத்தில் அத்தனை புத்தகம் விற்குமா? விற்காது. இதுதான் பிரச்சினை.

தள்ளுபடி விற்பனையின் ஒரே மகிழ்ச்சி, தான் வாங்க நினைத்திருக்காத புத்தகங்களையும் கூட வாசகர்கள் வாங்கிச் செல்வது. நெடுநாளாக வாங்க விரும்பி, பணம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வாங்காமல் இருந்த ஒரு புத்தகத்தை வாசகர் கிட்டத்தட்ட நெக்குருகி வாங்கிச் செல்வது. இன்று கிழக்கு முன்னெடுத்திருக்கும் இந்த தள்ளுபடி விற்பனையை நிச்சயம் எல்லாப் பதிப்பகங்களும் முன்னெடுத்தே ஆகவேண்டும். சில வருடங்கள் ஆகலாம். ஆனால் வேறு வழியில்லை. இப்படிச் செய்யாமல், 10 அல்லது 12 வருடங்கள் விற்காமல் ஒரு புத்தகத்தை வைத்துப் பலனில்லை.

இன்னும் ரீ ப்ரிண்ட், டேமேஜ் பற்றியெல்லாம் நான் சொல்லவில்லை. கிழக்கு பதிப்பக விற்பனையில் கிளியரன்ஸும், டேமேஜ் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டேமேஜ் புத்தகங்கள் என்பது – அழுக்கடைந்த புத்தகங்கள், ஒரே ஒரு பக்கம் மட்டும் அல்லது அட்டை குறைபாடுடைய புத்தகங்கள். இவற்றையும் விலைக்குப் போடுவதற்குப் பதிலாக மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இந்த டேமேஜ் புத்தகங்களில் மிக நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்களும் வரலாம். இதைப் பார்த்துவிட்டுத்தான் சில எழுத்தாளர்கள் நமது புத்தகம் சரியாக விற்கவில்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். டேமேஜ் புத்தகங்கள் தனியாகவும், கிளியரன்ஸ் புத்தகங்கள் தனியாகவும்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடைசியாக ஒன்று, ஏற்கெனவே சொன்னதுதான், நல்ல விற்பனை என்பதற்கும் புத்தகத்தின் தரத்துக்கும் தொடர்பில்லை.

பின்குறிப்பு 1: கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல்ஸ் இப்போது திநகர் எல் ஆர் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திநகர் பஸ் நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோவில் எதிரில்.

பின்குறிப்பு 2: இணையத்திலும் தள்ளுபடி விற்பனை கிடைக்கிறது. பார்க்க: https://www.nhm.in/shop/discount/
 
பின்குறிப்பு 3:  என் கவிதைத் தொகுப்பான நிழல்கள் புத்தகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் க்ளியரன்ஸ் சேல்ஸில் கிடைக்காது. எனவே இப்போதே வாங்கிவிடவும். :> வாங்க: https://www.nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2011

சேமிப்புக்காகவும் வசதிக்காகவும் இங்கே பதிகிறேன்.

நன்றி: இட்லிவடை

நாள் 01

நாள் 02

நாள் 03

நாள் 04

நாள் 05

நாள் 06

நாள் 07

நாள் 08

நாள் 09

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

Share