பள்ளி முடிந்து ஓடிவரும்
ஆயிரம் குழந்தைகளில்
என் மகளைத் தேடும் போது
அனைவருமே
அவளாகத் தெரிகிறார்கள்
Archive for கவிதை
தாய் (கவிதை)
தாய்
ஆற்று நீரின் மணல் காலில் பட்டதுமே
ஆங்காங்கே முளைத்துக்கொண்டன
நினைவுக் குடைகள்
நீரில் முங்கியதும்
மேலே பரவிய
காற்றுக் குமிழிகள்
உடையும்போதெல்லாம்
அம்மா அம்மா என்றே பரவின
நெளிந்து போன
டிஃபன் பாக்ஸில்
கெட்டியாக பிசைந்து கொடுத்த
மோர் சாத மாவடு வாசத்துடன் காற்றோடு வந்தவள்
‘முங்கும்போது மூக்க பிடிச்சிக்கில’ என்றாள்.
குளிப்பாட்டினாள்
நீரூட்டினாள்
தாமிரபரணியே தாயாக எழுந்து நின்றாள்
நீரோடு கலக்காத கண்ணீர்த் துளிகள்
ஒருவேளை இருந்திருந்தால்
தனித்தனியே தீவுக்கூட்டங்கள்
முளைத்திருக்கக்கூடும்.
கடைசிச் சொட்டு நீர் சொட்டும் வரை
கரையில் காற்று வாங்கி
சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து நின்றிருந்தபோது
‘நல்லா துவட்டுல’ என்று யாரோ ஒரு அம்மை
தன் மகனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள்
கவிதைகள்
அழகோவியம்
பஞ்சு விரல்களில்
கோலம் வரைகிறாள்
கண்ணில் விழும் தலைமுடியை
ஒதுக்கிக் கொண்டே இருக்கும் சிறுமி
முயல் வரைந்து உச் கொட்டி அழிக்கிறாள்
மீன் வரைந்து முகம் சுழிக்கிறாள்
கன்று பாதி உருவாகி வரும்போதே நீரூற்றுகிறாள்
ரோஜாவை வரைந்து பார்க்கிறாள்
சூரியகாந்தியை வரையும்போதே
கோலத்தைக் காலால் எத்திவிட்டு
கண்ணீருடன் வீட்டுக்குள் ஓடும்
அவள் அறிந்திருக்கவில்லை
அவள் கழுத்துக்குப் பின்னே
அவள் வரைந்த
அனைத்து உயிரிகளும்
மலர்களும்
காத்திருந்ததை.
—
சொற்களை விட்டோடியவன்
அட்டைக் கத்தியால்
வானில் சுழித்தபடி
அந்தக் கோட்டி
உதிர்த்த சொற்களைப்
பாதி பேர் கேட்கவில்லை
மீதி பேருக்குப் புரியவில்லை.
வானத்தில்
தன் கத்தியால்
ஒரு கேள்வி இட்டான்.
சொல்ல சொல்ல
சொற்கள் குவிந்துகொண்டே சென்றன
சொற்களின் பீடம் மேலேறி
கேள்வியை முறைத்து நின்றவன்
கீழே நகரும் கூட்டத்தை
வாத்துக் கூட்டம் என்றான்.
சட்டெனப் புரிந்துவிட்டதால்
கல்லால் அடித்தார்கள்.
சொற்களை வாரி எடுத்துக்கொண்டு
காற்றில் மறைந்தான் அவன்.
எல்லோரும் நிம்மதியானார்கள்.
அவனோ
இன்னொருவனோ
வருவான் என
கேள்விக்குறி
தன் மழைக்காலத்துக்காகக்
காத்திருக்கிறது
—
நடைக்கோலம்
நீல வானில்
வெண்ணிற மேகங்கள்.
நடைப்பயிற்சி தொடங்கினேன்.
திக்கற்ற மனம்.
எங்கிருந்தோ தீம் திரனன தவழ்ந்து வந்தது.
நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ.
எதிர்வீட்டு மொட்டைமாடியில்
தவமணி அக்கா மூச்சு வாங்க நடக்க வந்தாள்
என்னத்த, அத்தான் எங்க என்று கேட்க நினைத்து
பயந்து போய் அமைதியாக இருந்தேன்.
அவளே வானத்தைக் கைகாட்டி
இருபது நாளாச்சு என்றாள்.
கீழ் வீட்டுக்காரன் மொட்டை மாடிக்கு வரும்போதெல்லாம்
அந்த அத்தானைப் பார்த்துப் புன்னகைப்பான்.
அவன் போயும் இருபது நாளிருக்குமா?
அத்தானுக்குத் தெரியாது.
வானத்தைப் பார்த்தேன்.
எதிரெதிர் மேகத்திரளில்
அத்தானும் கீழ்வீட்டுக்காரனும்
ஒருவரை ஒருவர்
புன்னகைத்துக் கொண்டார்கள்.
விலங்குச் சாலை (கவிதை)
விலங்குச் சாலை
தார் ரோட்டில்
சாலையோடு சாலையாக
அப்பிக் கிடக்கும்
நாயொன்றின் தோல் மீது
வண்டி ஏறி இறங்குகையில்
துணுக்குறும் மனத்துக்குள்ளே,
கொல்லாமல் விட்ட
மனிதர்களின் முகங்கள்
வேட்டையாடாமல் விட்ட
அழகிகளின் உடல்கள்
கண் மூடிக் கொண்ட
கடவுள்களின் சாத்தான் குணங்கள்
மண் மூடிக் கிடந்த
மிருகங்களின் விழிப்புகள்.
சாலைக்குக் குறுக்கே ஓடும் நாய்க்குட்டிகளே
இது விலங்குகள் விரையும் சாலை.
கவிதை
விடியல்
பெரும் புழுதியில்
சூறைக் காற்றில்
ஒரு மல்லிகை மொட்டு
இலக்கற்று
பறந்துகொண்டிருந்த போது
பேரலையில்
பெரு வெள்ளத்தில்
ஒரு மரக்கலம்
திசையற்று
தடுமாறிக் கொண்டிருந்தபோது
பெரும் பிரளயத்தில்
பேரச்சத்தில்
அமைதியற்று
உயிரொன்று
அல்லாடிக் கொண்டிருந்தபோது
கொடு நெருப்பு
தன் விருப்பென
அனைத்தையும்
அணைத்துக் கொண்டபோது
கிழக்கே
வானம்
விடியத் தொடங்கியது
எப்போதும் ஒரு காலையைப் போல.
கவிதை
சிறுமியின் சைக்கிள்
சுவரின் ஓரத்தில்
காற்றில்லாமல்
சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்
தன் சின்ன சைக்கிளுக்கு
வாய் வைத்து
காற்றடித்துப் பார்க்கிறாள்
சிறுமி.
மெல்ல சிணுங்கும் சைக்கிளை
ஒரு தட்டு தட்டுகிறாள்.
சைக்கிள் அமைதியாகிறது.
வீட்டைத் தாண்டிக் கடந்து போகும்
குப்பை வண்டிக்காரன்
சிறுமியைப் பார்த்துச் சிரிக்க,
பயத்துடன் சைக்கிளைக்
கட்டிக் கொள்கிறாள் அவள்.
கவிதை
கடும் புழுக்கத்தில்
சிக்னலில்
வரிசையாக வண்டிகள் காத்திருக்க
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்
வேனிலிருந்து
வந்து விழுகின்றன
இரண்டு சாக்லெட் தாள்கள்
சட்டென
எங்கிருந்தோ பறந்து வரும்
இரண்டு பட்டாம் பூச்சிகளைப் போல.
சிக்னல் திறக்கவும்
வேன் மிதந்து மிதந்து செல்கிறது
ஒரு நத்தையைப் போல.
நெரிசல் தந்த கடுப்பில்
ஹாரன் சத்தத்தில்
புருவம் உயர்த்தி கண்கள் இடுக்கி
நகர்ந்து செல்லும்
கூட்டத்தின் எரிச்சலில்
அந்த வேனுக்குள்
சாரல்
அடிக்கத் தொடங்கி இருந்தது.
மீட்பின் துளி
கால்சுவட்டில்
தேங்கும்
நீரில்
மிதக்கும்
வானத்தில்
பறக்கும்
பறவையின்
காலில்
உலவும்
உலகின்
பிடியில்
சிக்கிக்
கிடக்கும்
எண்ணத்தை
மீட்க
வருக
வருகவே
ஒரு
துளி