Archive for அறிவிப்பு

Swasam Subscription Scheme – SSS

சுவாசம் சந்தா திட்டம் – SSS – Swasam Subscription Scheme

தினந்தோறும் புத்தகத் திருவிழா

எப்போது புத்தகம் வாங்கினாலும் 15 முதல் 20% தள்ளுபடி வேண்டுமா?

இன்றே இணைவீர் – சுவாசம் சந்தா திட்டம் – SSS

மேலதிக விவரங்களுக்கு: 8148066645 (ஜி பே எண்ணும் இதுதான்.)

இத்திட்டத்தில் இணைய கூகிள் ஃபார்ம் லின்க் கமெண்ட்டில் தரப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

• இத்திட்டத்தில் சேர நுழைவுக் கட்டணம் ரூ 299. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் இந்தச் சந்தாவைப் புதுப்பிக்கவேண்டும். (இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் இந்த 299 ரூபாய் மதிப்பிற்கும் நீங்கள் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்.)

• நீங்கள் சந்தாதாரர் ஆனதும் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் எங்களிடம் தள்ளுபடியுடன் புத்தகம் வாங்கலாம்.

• 500 ரூபாய் வரை புத்தகம் வாங்கினால் 15% தள்ளுபடி. 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால் 20% தள்ளுபடி.

• சுவாசம் பதிப்பகம் மட்டுமின்றி வேறு எந்தப் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்கினாலும் இந்தத் தள்ளுபடி உங்களுக்குக் கிடைக்கும்.

• 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால், இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மூலம் இந்தியா முழுமைக்கும் இலவசமாக உங்களுக்குப் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். கொரியர் மூலம் புத்தகத்தைப் பெற வேண்டுமென்றால் நீங்கள் கொரியருக்கான பணத்தைத் தரவேண்டும்.

• இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசம் நேரடியாகப் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் நீங்கள் இச்சலுகையைப் பெறலாம்.

• சுவாசத்தின் நேரடிப் புத்தகக் கடைகளிலும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசத்தின் சமூக ஊடகங்கள் அதாவது வாட்ஸப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், திரெட், டிவிட்டர் மூலமும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

• வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் பங்குபெறலாம். புத்தகம் அனுப்புவதற்கான செலவை நீங்கள் ஏற்கவேண்டும்.

• எங்களிடம் கிடைக்காத புத்தகங்கள் இருந்தால், அவற்றை வாங்கித் தர இயன்ற அளவுக்கு முயல்வோம். அப்படி வாங்க முடியாத பட்சத்தில் உங்களிடம் சொல்லிவிடுவோம்.

• சுவாசம் விற்பனை செய்யாத பதிப்பகமே இல்லை என்பதால், இத்திட்டம் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

• புத்தக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் ஏற்ற அருமையான திட்டம் இது. (**பள்ளிப் புத்தகங்களுக்கும் கைடுகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது**.)

• எங்களிடம் கிடைக்கும் ஆங்கிலப் புத்தகங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்பது உங்களுக்குக் கூடுதல் சலுகை.

• எங்களிடம் கிடைக்கும் புத்தகங்களை எங்கள் வலைத்தளம் www.SwasamBookart.comல் பார்க்கலாம். இதில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களும் ஸ்டாக்கில் இருக்கும் என்று சொலல முடியாது. ஆனால் இப்புத்தகங்கள் பதிப்பாளரிடம் ஸ்டாக்கில் இருக்குமானால் நாங்கள் நிச்சயம் உங்களுக்கு வாங்கித் தருவோம்.

இத்திட்டத்தைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இன்றே இதில் இணைவீர்.

கூகிள் ஃபார்ம் லின்க்: https://forms.gle/3RvHUbZ8YVixGhey9

Share

2020

2020ல் என்ன என்ன செய்தேன்?

கொரோனா என்ற ஒரு பெரிய அச்சுறுத்தல் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஒன்றுமே செய்யவில்லை. தினம் தினம் படம், தாய விளையாட்டு, சீட்டாட்டம், நல்ல உணவு இப்படியே போயின நாள்கள். ஒரு வரி கூட படிக்க மனம் வரவில்லை. இழுத்துப் பிடித்து வைத்து ஒரு நாவல் எழுதினேன். நான் எதிர்பாராத அளவுக்கு அது பேசப்பட்டது. மாயப் பெரு நதி மறக்க முடியாத நாவல்.

சில குறுங்கதைகளையும் மூன்று சிறுகதைகளையும் எழுதினேன். பன்னிரண்டு வலம் இதழ்கள் வெளியாகின. தடம் பதிப்பகம் சார்பாக சில புத்தகங்களைக் கொண்டு வர முடிந்தது. நரசிம்மனின் சிறகு முளைத்தது, நெல்லை கணேஷின் பாரதி என் காதலன், எஸ்.ஜி.சூர்யாவின் பாஜக வடகிழக்கை வென்றது எப்படி, எனது மாயப் பெரு நதி மற்றும் நடுநிலைமை அற்றவனின் சில தமிழ்சினிமா குறிப்புகள்.

வேலை சார்ந்து ஏப்ரல் முதல் ஜுன் மாதங்களில் கிழக்கில் என்ன செய்யப் போகிறோம், கிழக்கு என்ன செய்யப் போகிறது என்ற குழப்பமே எஞ்சி இருந்தது. ஜூலையில் மீண்டும் வேலைக்கு வந்து, எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து ஓரளவுக்கு விற்பனையைத் தொடங்க முடிந்தது. இந்த டிசம்பரில் ஏதோ கொஞ்சம் விற்பனை பரவாயில்லை என்ற இடத்துக்கு வந்திருக்கிறோம்.

ஜனவரியில் புத்தகக் கண்காட்சி இருக்காது என்பதே என் எண்ணம். ஆனால் புத்தகக் கண்காட்சியை நடத்திவிட பெரிய முயற்சிகள் நடக்கின்றன. நல்லதுதான், நடக்கட்டும். எல்லாப் பதிப்பாளர்களுமே விற்பனைச் சிக்கலில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு மெகா சீரியலுக்கு வசனம் எழுதத் தொடங்கினேன். மெகா சீரியலைக் குறித்து செய்த கிண்டல்கள், நக்கல்கள் எல்லாம் என் அம்மா உருவில் எனக்கெதிராகவே நின்று என்னை கேலி செய்கின்றன.

மகா நடிகன் என்றொரு சத்யராஜ் படம். அதில் சத்யராஜ் பெரிய நடிகர். ஏகப்பட்ட பந்தா செய்வார். ஒரு துணை நடிகை நடிக்க வருவார். சத்யராஜ் அந்த நடிகையை, டிவி நடிகைதான என்று கிண்டலாகப் பேசுவார். எரிச்சலாகும் அந்த நடிகை சத்யராஜைப் பார்த்துச் சொல்வார், ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க, நீங்களும் ஒருநாள் டிவிக்குத்தான் வரணும் என்று. இதை இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

கொரோனா தந்த பயத்தையும் எதிர்கால வாழ்க்கைக் குழப்பத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 2020 ஓரளவுக்கு நல்ல வருடமே. ஆனால் கொரோனா இந்த 2020 நினைவுகளே வேண்டாம் என்றே சொல்கிறது. 2021 வளமான ஆண்டாக இருக்கட்டும். அனுபவத்திலும் செழிப்பிலும்.

சென்ற மார்கழியில் பெருமாள் கோவிலுக்குச் சென்ற வண்ணம் இருந்தேன். இந்த மார்கழியில் கோவில் பக்கம் கூடப் போகவில்லை. வைகுண்ட ஏகாதஸிக்குக் கூட. 🙁 இப்படி ஒரு ஆண்டு இனி வேண்டாம்.மாயப் பெரு நதி நாவலும், சூரரைப் போற்று மற்றும் கணவர் பெயர் ரணசிங்கம் திரைப்பட விமர்சனங்களும் அதிக அளவில் பேசப்பட்டதில் 2020க்கு நன்றி.

இன்னும் நிறைய படித்திருக்கலாம். எழுதி இருக்கலாம். ஆனால் ஜூலை வரை கொரோனா மன நெருக்கடி. பின்பு நேரமில்லை. எப்போதும் இப்படி நேரமில்லை என்று சொல்லும்படியே இறைவன் வைத்திருக்கட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

படித்த புத்தகங்கள்:

புகார் நகரத்துப் பெருவணிகன், பிரபாரகன்

ராமோஜியம், இரா. முருகன்

வீரப்பன் வேட்டை, விஜய்குமார்

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் (கிழக்கு, ம.வெங்கடேசன், விரைவில் வெளியாகும்)

ஒரு இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து, வேலூர் இப்ராஹிம்

புதிய கல்விக் கொள்கை – ரங்கராஜ் பாண்டே

கடலுக்கு அப்பால், ப.சிங்காரம்

Alchemist (Tamil)

Who killed Sastri – Vivek Agnihotri

1984 – India’s guilty secret – Pav Singh

RSS 360 – Ratan Sharda

Our Moon has blood clots – Rahul Pandita

பார்த்த திரைப்படங்கள்:

சூரரைப் போற்று

கணவர் பெயர் ரணசிங்கம்

Samskara (Ka)

Kaanoru Heggadati (Ka)

Hamsa Geete (Ka)

Kaadu (Ka)

Phaniyamma (Ka)

Face to Face (Ka)

Neuron (Ka)

Geetha (Ka)

Sankashtakara Ganapathi (Ka)

Pathinettam padi (Ma)

Love Mocktail (Ka)

D/O Parvathamma

வானம் கொட்டட்டும்

Section 375 (Hi)

Law (Ka)

Striker (Ka)

Ottam (Ma)

Jack & Daniel (Ma)

Mundina Nildana (Ka)

Ayushmanbhava (Ka)

C U Soon (Ma)

Kannad Kothilla (Ka)

Paapam Cheyyadavar Kalleriyatte (Ma)

Sufiyum Sujathayum (Ma)

Alidu Uluduvaru (Ka)

பெண் க்வின்

Aakala Ratri (Ka)

Eeda (Ma)

Nalpathiyonnu (Ma)

Anjaam Pathira (Ma)

Forensic (Ma)

Kappela (Ma)

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

சுட்டுப் பிடிக்க உத்தரவு

ஆர்.கே.நகர்

செத்தும் ஆயிரம் பொன்

சைக்கோ

Chola (Ma)

பொன்மகள் வந்தாள்

99 (Ka)

Kapata Nataka Patradari (Ka)

Parasite

Android Kunjappan 5.25

தாராள பிரபு

வி1 மர்டர் கேஸ்

Kettiyolanu ente Malaka (Ma)

Shikara (Hi)

Trance (Ma)

பாரம்

திரௌபதி

Nanna prakara (Ka)

Knock Knock

Vettah (Ma)

Ayyappanum Koshiyum (Ma)

Avane Sriman Narayana (Ka)

Virus (Ma)

Thallana (Ka)

Before the Rains

Hero

Driving Lisence (Ma)

Puss in the Boots

Dia (Ka)

Porinji Mariyam Jose (Ma)

Helen (Ma)

Padmavat

பக்ரீத்

Jallikkattu (Ma)

Ea.Ma.Yu (Ma)

Gantumoote (Ka)

அருவம்

தர்பார்

Share

Mathippurai.com and Andhimazai book review contest

அந்திமழையின் அதிரடி விமர்சனப் போட்டி! (தலைப்பு இப்படித்தான் வைப்போம். க்யாரே செட்டிங்கா என்று கேட்பவர்கள் அன்புடன் ப்ளாக் செய்யப்படுவார்கள்.)

மதிப்புரை.காம் என்றொரு வலைத்தளம் நடத்திக்கொண்டிருந்தோம். நோக்கம், புத்தகங்களுக்கு நல்ல விமர்சனம் வரவைக்கவேண்டும் என்ற எண்ணம்தான். இன்றைய நிலையில் அதிகம் விற்கும் நாளிதழ்களில், பத்திரிகைகளில் ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் வருவது அத்தனை எளிதானதல்ல. அதேசமயம் அது அத்தனை கடினமானதுமல்ல. பத்திரிகைகளின் நோக்கம் சார்ந்து தேவை பொருத்து விமர்சனங்களுக்கான புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும். பல விடுபடல்களை மீறி ஒரு புத்தகத்தின் விமர்சனம் வெளியாகவேண்டும். இதில் பத்திரிகைகளின் இடப்பற்றாக்குறை, வருமானம் தரும் பகுதி எதுவோ அதன் தேவை என்பதையெல்லாம் பொருத்தே புத்தக விமர்சனங்கள் வெளியிடப்படும். இந்தப் பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்கு ஓரளவு ரீச் இருக்கும். அதேசமயம் இந்த விமர்சனங்கள் எல்லாம் புத்தக அறிமுகங்கள் என்ற அளவிலானவை மட்டுமே.

காலச்சுவடு, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் புத்தக விமர்சனங்கள் கொஞ்சம் தீவிரமானவை. புத்தகத்தை ஆராய்பவை. இவற்றை விமர்னங்கள் எனலாம். இப்பத்திரிகைகளுக்கு அல்லது பத்திரிகை ஆசிரியர்களுக்கு அல்லது விமர்சனத்தை எழுதும் ஐயோபாவம் எழுத்தாளருக்கு உரிய சாய்வுகளுடனேயே எந்தப் புத்தகத்தின் விமர்சனம் வரவேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

இவற்றையெல்லாம் மீறிப் பார்த்தால், ஒரு புத்தகத்துக்கு நியாயம் செய்யும் விமர்சனங்கள் வருவதில்லை என்பதே உண்மை. இதில் எல்லாருக்கும் பங்குண்டு. எனவே குற்றங்களை நாம் நமது என்று பேசுவதே நியாயமானது.

மதிப்புரை.காம் என்ற தளம் தொடங்கப்பட்டது, ஆன்லைனில் எப்படி புத்தக விமர்சனங்களைக் கொண்டு செல்வது, அதன் மூலம் அக்குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனையை அதிகப்படுத்துவது என்ற நோக்கில்தான். இதன்படி புத்தக வாசிப்பாளர்களுக்குப் புத்தகம் இலவசமாகத் தரப்படும். அவர்கள் அப்புத்தகத்துக்கு விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டும். புத்தகத்தை நிராகரித்தும்கூட எழுதலாம். விமர்சகர்களின் சுதந்திரத்தில் எவ்விதக் குறுக்கீடும் இருக்காது. இதுதான் திட்டம்.

இத்திட்டம் தோல்வி அடைந்தது. காரணங்கள் என்ன? புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொண்ட விமர்சகர்கள் ஒன்றிரண்டு முறை ஆர்வத்தில் எழுதினார்கள். பின்னர் தொடர்ச்சியாக அவர்களால் எழுதமுடியவில்லை. இது முதல் காரணம். இதனால் தொடர்ச்சியாக எழுதும் ஒன்றிரண்டு நபர்களின் விமர்சனங்கள் மட்டுமே வெளிவரத் துவங்கின. இரண்டாவது பிரச்சினை – இப்படிப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிப்பகங்கள் பெரிய அளவில் முன்வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஒரு பத்திரிகைக்குப் புத்தகங்கள் அனுப்பி எப்போது விமர்சனம் வரும் என்று தேவுடு காத்திருப்பது கிட்டத்தட்ட எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொதுவான அனுபவமே. அதனால் பதிப்பகங்கள் பெரிய அளவில் இதற்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால், மதிப்புரை.காம் போன்ற ஒரு தளத்தில் ஆன்லைனில் விமர்சனம் வருவதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். அதாவது புத்தகம் பற்றிய பேச்சு இருக்கும், ஆனால் அது விற்பனையாக மாறாது. இது உண்மைதான். எனவே பதிப்பகங்கள் புத்தகங்களை இலவசமாகத் தருவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் மீண்டும் பதிப்பாளரிடம் புத்தகத்தை இலவசமாகக் கேட்பது குறித்த ஒரு குற்ற உணர்வு உருவாகத் துவங்கிவிட்டது! மூன்றாவது, விமர்சகர்கள் வாங்கிய புத்தகத்துக்கு விமர்சனங்கள் அனுப்பவில்லை. தொடர்ச்சியாகக் கேட்டாலும் அவர்கள் உண்மையில் மனத்தளவில் விமர்சனம் எழுதவேண்டும் என்றும் நினைத்தாலும் அதைச் செய்து முடிக்கமுடியாத சூழல். இது எல்லோருக்கும் நேர்வது. ஆனால் இதனால் சில சுணக்கங்கள் நேர்ந்தன. பதிப்பாளர்களிடம் மீண்டும் புத்தகம் கேட்கமுடியாத சூழல் இதனாலும் உருவானது. நான்காவதாக, அனாமதேய புத்தகங்கள் என்னும் சொல்லும் அளவுக்கான புத்தகங்கள் விமர்சனத்துக்கு வந்தன. அவற்றைப் படிக்கவோ விமர்சனம் செய்யவோ யாரும் விரும்பவில்லை. ஆனால் அப்பதிப்பாளர்களிடம், எழுத்தாளர்களிடம் அப்புத்தகங்களை அனுப்பாதீர்கள் என்றும் சொல்லும் நிலை உருவானது. இதனால் சில சங்கடங்கள் நேர்ந்தன. ஐந்தாவதாக, நீண்ட புத்தக விமர்சனங்களைப் படிக்க அதிகம் யாரும் தயாராக இல்லை. ஆறாவதாக, இலவசமாகப் புத்தகத்தையும் கொடுத்து, அதை அனுப்பவும் கொரியர் செலவு செய்து – எங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை.

இந்த உண்மைகளின் முன்னே இயல்பாகவே மண்டியிட நேர்ந்தது. இப்படித்தான் நடக்கும் என்று தெரியும். ஆனாலும் மதிப்புரை.காமில் பல முக்கிய விமர்சனங்கள் வெளியாகின. இது தொடர்ந்திருந்தால் மிக முக்கியமான விமர்சனத் தளமாக அது தொடர்ந்திருக்கும். இப்போதும்கூட இப்படி ஒரு தளத்தை, பதிப்பாளர்களின் உதவியுடன் யாரேனும் முயன்று பார்க்கலாம்.

அந்திமழை.காம் புத்தக விமர்சனத்துக்கென்று ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. அதற்குள் விமர்சனங்களை அனுப்பவேண்டும். மதிப்புரை.காமில் பங்குகொண்ட நண்பர்கள், புத்தக ஆர்வலர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதிகம் இதனை நண்பர்களுடன் பகிருங்கள்.

முதல் பரிசு – ரூ.10000
இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]
மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.

அந்திமழை விமர்சனப் போட்டி அறிவிப்பு இங்கே: http://andhimazhai.com/news/view/andhimazhai-zhakart-contest-2852018.html

Share

பட்டம் – தினமலர்

வாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.

http://m.dinamalar.com/detail.php?id=1626970

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.

பட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…!

இன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.

* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.

* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.

* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.

* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.

* தொடரும்… கூடவே கூடாது.

* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.

* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.

* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.

* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.

* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.

* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.

* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது! மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.

* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்!

பள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.

வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.

இது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.

Share

துகிலுரிதல்

எனக்கு அப்போது 13 வயது இருக்கலாம். மதுரையில் அழகரடியில் ஒரு சின்ன வீட்டில் இருந்தோம். வீட்டில் டிவி கிடையாது. எங்கள் காம்பவுண்ட்டில் இருந்த சந்திராக்கா வீட்டில் மட்டுமே டிவி உண்டு. அவர்களின் சௌகரியத்தைப் பற்றியெல்லாம் என்றுமே யோசித்ததில்லை. சனிக்கிழமை தூர்தர்ஷனில் வரும் ஹிந்திப் படங்களிலிருந்து ஞாயிறு வரும் கார்ட்டூன் வரை முக்கியமற்ற நிகழ்ச்சிகளைக்கூட அவர்கள் வீட்டில்தான் பார்ப்போம். அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி பிடிக்காது என்பதே கிடையாது. அவர்கள் எதைப் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுத்தால்தான் உண்டு. தண்ணீர் பிடிக்கும்போது அவர்களோடு குடுமிப்பிடி சண்டை நடக்கும்; ஒரு ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி, தன்மானம் விட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்று டிவி பார்க்க வைத்துவிடும். அதெல்லாம் பொற்காலம்தான், சந்தேகமே இல்லை.

அப்போதுதான் சோப்ராவின் மகாபாரதம் தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. ஞாயிறன்று காலையிலேயே தினமலரை வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்துவிடுவோம். ஹிந்தியில் ஆயுஷ்மான் பவ என்பதைத் தவிர ஒன்றும் புரியாது. நாங்கள் நண்பர்கள் கிண்டலாக தோ புத்ர பவ என்று சொல்லிக்கொள்வோம். அவ்வளவுதான் எங்கள் ஹிந்தி. பாஞ்சாலியின் துகிலை உரியும் காட்சி அன்று. 13 வயதுக்கேயான குறுகுறுப்புடன் டிவி பெட்டி முன்பு உட்கார்ந்திருந்தேன். சுற்றி பொன்னம்மாக்கா, ஈஸ்வரியக்கா, நாகரத்னமக்கா என பெரியதும் சிறியதுமாக ஏகப்பட்ட அக்காக்கள் கூட்டம். என் தாத்தா, பாட்டி, அம்மா, அக்கா எனப் பெரிய கும்பலே அந்த 100 சதுர அடி வீட்டில் குழுமி இருந்தது. இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ஹிந்தித் தொடரைப் பார்க்க அன்று எப்படியும் 25 பேர் இருந்திருப்போம்.

துகிலுரியும் காட்சி என் வயதில் நான் எதிர்பார்த்ததைப் போல இல்லை. எங்கள் வயதொத்தவர்களெல்லாம் நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டோம். சிரிப்புடன் எங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்தேன். அத்தனை அக்காக்கள் கண்களிலும் கண்ணீர் துளிர்த்து நின்றது. என்னால் நம்பவே முடியவில்லை. மெல்ல என் தாத்தாவைப் பார்த்தேன். இரும்பு மனிதர் அவர். அவரது கண்களும் சற்றுக் கலங்கி இருந்தது. நான் என்னைப் பற்றியே கேவலம் கொண்டேன். ஆனால் எனக்கு எவ்வித கண்ணீரும் எத்தனை முயன்றும் துளிர்க்கவில்லை. பாஞ்சாலியை என் தாயாகவோ என் தங்கையாகவோ யாராகவுமோ என்னால் அன்று யோசிக்கவே முடியவில்லை. ஆனால் அன்று அதனைப் பார்த்த அத்தனை நாற்பது வயதுக்காரர்களின் முகபாவங்களும் இன்னும் என் கண்முன்னே அப்படியே நிற்கிறது.

ஹரிகிருஷ்ணன் (இனி ஹரியண்ணா) எழுதி கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது – பாரதியாரின் பாஞ்சாலி சபதம்: விளக்கவுரையுடன். ஹரியண்ணா இதை பத்து வருடங்களுக்கு முன்பு மரத்தடி யாஹூ குழுமத்தில் எழுதினார். வழக்கம்போல எங்களது உற்சாகமின்மை காரணமாக பாதியில் நின்றது. ஒருநாள் அத்தனை பேரும் திடீர் உற்சாகம் கொள்ள மீண்டும் தொடங்கியது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் மீண்டும் தடைப்பட்டது. அப்போதே அதைப் புத்தகமாகக் கொண்டுவரவேண்டும் என்று நானும் ஆசிஃப்பும் பேசிக்கொண்டோம். நான் அப்போது துபாயில் இருந்தேன்.

இப்போது ஹரியண்ணாவுடன் வேறு என்னவோ பேசப்போக, பேச்சு இப்பக்கம் திரும்பியது. அவர் மீதமிருக்கும் பகுதிகளை முடித்துக்கொண்டு வர ஒப்புக்கொண்டு உடனே அதைச் செய்தும்கொடுத்தார். கிழக்கு பதிப்பகம் சார்பாக வருவதால், அதை நானே ப்ரூஃப் பார்க்க எடுத்துக்கொண்டேன் – வேறு யாரையும் எடுக்கவிடாமல் நானே ஓடிப்போய் கிட்டத்தட்டப் பிடுங்கிக்கொண்டேன். 🙂

வியாசரின் காலம்கடந்து நிற்கும் காவியத்தன்மையை அதே தரத்துடன், சில இடங்களில் விஞ்சியும் பாரதி படைத்திருக்கிறான். சந்தேகமின்றி மஹாகவி அவன். அதனை மிக அழகாக விளக்கியிருக்கிறார் ஹரியண்ணா. மேற்கொண்டு பலவற்றை அவரே முன்னுரையில் சொல்லுவார். முன்னுரை வரவும் பகிர்ந்துகொள்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், ஹரியண்ணாவின் இந்த விளக்கவுரை காலம் கடந்து நிறகப்போகும் ஒரு படைப்பு. புரியும் படிச் சொன்னால் – சான்ஸே இல்லை.

முழுக்கப் படித்தபோது பாரதியார் துகிலுரிதலைப் பற்றி எழுதும் காட்சிகளில் என்னையறியாமல் ஒரு புளகமும், கண்களில் கண்ணீர் துளிர்ப்பும் ஏற்பட்டன. என்னைச் சுற்றி நின்ற பொன்னம்மாக்காக்கள் நினைவுக்கு வந்தார்கள். என் தாத்தா நினைவுக்கு வந்தார். நான் இன்று பாஞ்சாலியை யாராக நினைக்கிறேன்? அக்காவாகவா? மனைவியாகவா? மகளாகவா? தெரியவில்லை. ஆனால் கண்ணீர் துளிர்த்தது உண்மை.

எனக்கு 7 வயது ஆகும்போது சேரன்மகாதேவியில் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதன் முதல் ஆண்டுவிழாவில் திரௌபதி வேடம் போட்டு நடித்த ஐந்து வயதுப் பெண் நினைவுக்கு வந்தாள். அன்று அவள் நடித்ததை அந்த ஊரே பேசியது. இதற்கெல்லாம் பின்னால் உள்ள அந்த வியாசனை நினைத்துக்கொண்டேன். என் கண்ணிலும் நீர் வர வைத்த பாரதியாரை நினைத்துக்கொண்டேன். இதைப் படிக்கும் ஒரு வாய்ப்பு தந்த அந்த இறையையும் ஹரியண்ணாவையும் நினைத்துக்கொண்டேன். அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்.

Share

Mahabharatham – Kumbakonam edition – Announcement

தமிழில் மஹாபாரதம் என்றாலே அது கும்பகோணப் பதிப்பு வெளியிட்ட மஹாபாரதம்தான். அசாதாரணமான உழைப்பில், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பில் வந்த புத்தகம் அது. அத்தகைய மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில் இல்லை.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவரே சரி பார்ப்பது, பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் வெளியிடப்பட்டது.

குறைந்தது நூறு பேர் முன்பதிவு செய்தால், இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு நான்கைந்து மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன். 

விலை ரூ.5,000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்புத்தகம் விலை மதிப்பற்ற பொக்கிஷம்.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் வெங்கட்ராமணனைத் தொடர்புகொள்ள: 098946 61259. மின்னஞ்சல்: venkat.srichakra6@gmail.com

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரைப் பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தை வெளியிடுவார். எவ்வளவு பணம், எப்படிச் செலுத்தவேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share

க்ரியா, சிக்ஸ்த் சென்ஸ், சவுக்கு வெளியீடு புத்தகங்களை ஆன்லைனில்/ஃபோன் மூலம் வாங்க

 

இனி (சும்மா இருக்கும் என் வலைத்தளத்தில்) என்.எச்.எம் ஆன்லைன் பற்றி அப்டேட் செய்யலாம் என்றிருக்கிறேன். விளம்பரமாக வருகிறது என்று நினைக்கும் நண்பர்களை கொஞ்சம் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவ்வப்போது எதாவது எழுதினாலும் எழுதுவேன். 🙂

அஞ்ஞாடி நாவலை ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/100-00-0000-208-0.html

க்ரியாவின் தற்கால தமிழ் அகராதிகுட்டி இளவரசன் உள்ளிட்ட முக்கியமான புத்தகங்களை வெளியிட்டிருக்கும் க்ரியாவின் முக்கிய புத்தகங்களை என்.எச்.எம் ஆன்லைனில் வாங்கலாம்.

சிக்ஸ்த் சென்ஸ் புத்தகங்களையும் ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/home.php?cat=378

இந்தப் புத்தகத்தை வாங்கதீங்க’ விற்பனையில் சாதனை படைத்த புத்தகம் என்கிறது சிக்ஸ்த் சென்ஸ். அந்தப் புத்தகம் வெளியான புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகமே அதிகம் விற்ற புத்தகம்! அதையும் ஆன்லைனில் வாங்கலாம். நீயா நானா கோபிநாத்தின் ‘நேர் நேர் தேமா’புத்தகமும் கிடைக்கிறது. சுப வீரபாண்டியனின் புத்தகங்களும் கிடைக்கின்றன.

சவுக்கு வெளியிட்டிருக்கும் ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ புத்தகத்தையும் ஆன்லைனில் வாங்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 | 9445 97 97 97

திநகர் ராமேஸ்வரம் தெருவில் (ரங்கநாதன் தெரு அருகில் உள்ளது) உள்ள டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் மேலே உள்ள புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

புத்தகக் கடை இருக்குமிடம்:

 

 

இந்தச் சேவை இனி தொடரும்!

Share

எனது முதல் புத்தகம் – நிழல்கள் கவிதைத்தொகுப்பு

நண்பர்கள் அனைவருக்கும்.

என்னுடைய கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருக்கிறேன். இதுவரை நான் பல்வேறு யாஹூ குழுமங்களிலும், எனது வலைப்பதிவிலும் இதழ்களிலும் எழுதியவற்றை ‘நிழல்கள்’ என்னும் பெயரில் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன்.


இந்தக் கவிதையை மரத்தடி யாஹூ இணையக் குழுமத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் கவிதைத் தொகுப்பு வருவதற்கு உதவிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், அட்டைப்பட வடிவமைப்பில் உதவிய மணிகண்டன், அச்சிட உதவிய பத்ரி, கிழக்கு பதிப்பக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

நியூ ஹொரைஸன் வலைத்தளத்தில் இதுவரை கவிதைப்புத்தகத்தை விற்பனைக்கு வைத்ததில்லை. நான் கேட்டுக்கொண்டதற்காக, அதனை நியூ ஹொரைஸன் மீடியாவின் வலைத்தளம் மூலம் விற்பனை செய்ய அனுமதி தந்த பத்ரிக்கு் நன்றி.

Share