Archive for அஞ்சலி

பிரபஞ்சனுக்கு அஞ்சலி

பிரபஞ்சனுக்கு அஞ்சலி. வானம் வசப்படும் படித்த நாள்கள் நினைவுக்கு வருகின்றன. அவரது ஆர்ம்ப கால நாவல்கள் தந்த ஏமாற்றமெல்லாம் கொஞ்சநஞ்சமல்ல. அப்படியான நாவல்களுக்கும் வானம் வசப்படும் நாவலுக்கும் இடையே பெரிய பயணம் இருந்ததை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தொடர்ந்து அவர் எழுதிய பண்டைத் தமிழ் சார்ந்த உரைநடைகள் மிகவும் நன்றாக இருந்தன – படிக்க. கருத்து சார்ந்து அவர் மிகத் தெளிவாக இடதுசாரி முற்போக்கு மனப்பான்மையுடனேயே இருந்தார். மற்ற பெரும்பாலான இலக்கியவாதிகளையும் போல.

எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட மாத்தா ஹரி நாவலை அவர் வெளியிடவேண்டும் என்று அவரை அழைக்க நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நானும் சென்றிருந்தேன். என்னவெல்லாமோ பேசினார். நீண்ட நேரம் நடந்த சந்திப்பு அது. மேடையில் எழுத்தாளர்களுக்குப் பேச வராது என்பதை உடைத்தவர் அவர். மிகத் தெளிவாகவும் சுவையுடனும் பேசும் எழுத்தாளர். நேர்ப்பேச்சிலும் அப்படியே பேசினார். மற்ற எழுத்தாளர்களைப் பற்றிய காஸிப்புகளுக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. அவர் சொன்னதில் இன்னும் குறிப்பாக நினைவில் நிற்பது, “… வலது காலில் விழுந்து கிடக்கிறார் அவர், இடது காலில் இவர், தமிழே என் காலுக்குக் கீழே” என்று அந்த அரசியல்வாதி சொன்னதாகச் சொன்னதுதான். அவர் சொன்ன எழுத்தாளர்களின் பெயரையும் அரசியல்வாதியின் பெயரையும் இங்கே சொல்ல விரும்பவில்லை. நானும் கொஞ்சம் மறந்துவிட்டேன்!

மாத்தா ஹரி நாவலை வெளியிட்டுப் பேசும்போது பாண்டிச்சேரியில் ஒரு தேவாலயத்தில் இரண்டு சாதியினர் தனித்தனியாக அமர நேர்ந்த வரலாற்றுக் குறிப்பை அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை மையமாக வைத்துச் சிறப்பாகப் பேசினார்.

பிரபஞ்சனுக்கு அஞ்சலி.

Share

வாஜ்பாயி – அஞ்சலி

நன்றி வாஜ்பாயி

கச்சத் தீவு பிரச்சினையில் அன்றைய மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் கண்டித்த முதல் தலைவர் வாஜ்பாயி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் புகழுரை தீட்டியிருக்கிறது. கொள்கையளவில் வேறுபட்டவர் என்றாலும் அனைவர் உள்ளங்களிலும் அங்கீகரிக்கத்தக்க ஒரு தலைவர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார் வாஜ்பாயி. இத்தனைக்கும் கடந்த பதினைந்து வருடங்களாக அவர் அரசியல் வெளியில் முற்றிலுமாக இல்லை.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை எது, எது அந்த மக்களின், இனத்தின் உணர்வுசார்ந்த உண்மையான பிரச்சினை என்பதையெல்லாம் வாஜ்பாயி அறிந்திருந்தார். மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் அவர் கலந்துகொண்டது இன்று வரை அனைவரையும் நினைவுகூர வைக்கிறது.

காங்கிரஸ் எத்தனையோ மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. ஆனால், எவ்வளவோ நெருக்கடியை ஜெயலலிதா உருவாக்கியபோதும், தன் வாழ்நாளில் தான் சந்தித்திருந்தாத சிறுமைகளைச் சந்திக்கவேண்டி வந்தபோதும், வாஜ்பாயி தமிழ்நாட்டில் திமுக அரசைக் கலைக்க மறுத்தார்.

1994ல் காஷ்மீர் பிரச்சினையை ஒட்டிய ஒரு தீர்மானத்தை ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வரவிருக்கிறது என்ற செய்தி இந்தியாவுக்குக் கிடைத்தது. இந்தியாவின் நிலையை ஐநாடில் உறுதிபட எடுத்துரைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் வாஜ்பாயி தலைமையில் ஒரு குழுவை ஜெனீவாவுக்கு அனுப்பினார். தனக்குத் தரப்பட்ட மிகப்பெரிய பொறுப்பைச் சாதித்தார் வாஜ்பாயி. தீர்மானம் வந்தால், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலை உறுதியாகிவிடும் என்று பயந்துபோன பாகிஸ்தான் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவே இல்லை.

பொக்ரான் அணுகுண்டுச் சோதனை அனைத்து உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. இத்தனை பரந்து விரிந்த நாட்டில் ஒரு ரகசியத்தைக் காப்பாற்றி இத்தனை பெரிய நிகழ்வைச் சாதித்துவிட முடியும் என்று இந்தியாவின் சாதாரண மக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் பெரியண்ணன் நாடும்கூட நம்பியிருக்கவில்லை. அப்படி ரகசியமாக புத்தர் சிரித்தபோது உலக நாடுகள் ஆச்சரியத்தில் வாய்பிளந்தன. ஒவ்வொரு இந்தியன் உள்ளத்தில் எதோ ஒரு பெருமிதம். இதன் தொடர்ச்சியாக இந்தியா எதிர்கொள்ளப் போகும் பொருளாதாரத் தடைகளை எல்லாம் மீறி அனைவர் உள்ளத்திலும் என்னவோ தாங்களே சாதித்து விட்டது போன்ற உணர்ச்சி.

இந்த உணர்ச்சியின் உளவியல் முக்கியமானது. தொடர்ச்சியாக மிக பலவீனமான பிரதமர்களையே கண்டுவிட்ட இந்தியா, தன்னளவில் மிகவும் தன்னம்பிக்கையுள்ள, தேசத்தின் மீது பெரும் அபிமானமுள்ள, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் அக்கறையுள்ள ஒரு தலைவனைக் கண்டுகொண்டது என்ற உணர்ச்சிதான் அதன் உண்மையான காரணம்.

கார்கில் போரை வாஜ்பாயி அரசு கையாண்ட விதம் மிக முக்கியமானது. லாகூர் பயணத்துக்குப்பின் இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு பாகிஸ்தான் செய்த அநியாயத்துக்கு வாஜ்பாயி தக்க பதிலடி கொடுத்தார். சமாதானம் என்றால் சமாதானம், போர் என்றால் போர் என இந்தியா எதற்கும் தயார் என்ற செய்தி கார்கில் வெற்றி வழியே உலகிற்குச் சொல்லப்பட்டது.

நாற்கரச் சாலைத் திட்டம் இந்தியாவை சாலை வழியே ஒருங்கிணைத்தது. இன்றும் இச்சாலைகளில் பயணம் செய்பவர்கள் வாஜ்பாயி பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்கலாம். தொலை நோக்கு என்பது ஒரு அரசியல் தலைவரின் அடிப்படைத் தேவை. இது இல்லாத சமயங்களில்தான் இந்தியா தள்ளாடுகிறது. இந்தியாவின் இத்தள்ளாட்டத்தைப் போக்கிய பாரதத் தாயின் பிதாமகன் வாஜ்பாயி.

ஒப்பற்ற ஒரு தலைவரை, ஒரு மாபெரும் நிகழ்வை நாம் இழந்திருக்கிறோம். வாஜ்பாயி தனக்களிக்கப்பட்ட வாழ்வை மிக அர்த்தம் மிகுந்ததாக்கியிருக்கிறார். கட்சி ரீதியாகவும் சரி, ஒரு தலைவர் என்ற நிலையில் இந்தியாவுக்காகவும் சரி, அவர் செய்துவிட்டுச் சென்றிருக்கும் சாதனைகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. வாஜ்பாயி என்ற அந்த சாதனையாளருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி: குங்குமம் இதழ்

Share

கருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு

கருணாநிதியின் மறைவை ஒட்டிப் பல ஹிந்து ஆதரவாளர்களும் ஹிந்துத்துவ ஆதரவாளர்களும் தொடர்ச்சியாகத் தங்களது விதவிதமான கருத்துக்களையும் விதவிதமான கோணங்களையும் நிலைப்பாடுகளையும் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் கருணாநிதியை இத்தனை நாள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பதையும் இப்போது விதவிதமாக எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப் பார்க்கிறார்கள் என்பதையும் ஒப்புநோக்கும்போது பெரிய அதிர்ச்சியும் அதைவிடப் பெரிய ஆச்சரியமும் ஒருங்கே உண்டாகிறது.

பொதுவாகவே நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திப்பவர்களே – என்னையும் சேர்த்து. அது ஜெயலலிதா மரணம் என்றாலும் கருணாநிதியின் மரணம் என்றாலும் நாம் அவர்களது பழைய வரலாற்று நிலைப்பாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, நம் கண்ணெதிரே நிகழும் மனிதன் ஒருவனின் மரணத்தை மட்டுமே சிந்திக்கத் தலைப்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு அரசியல் நிலைப்பாடுள்ள, அரசியலில் சாதித்த மனிதனின் மரணம் என்பது நாம் எப்போதும் காணும் ஒரு சாதாரண மனிதனின் மரணத்துடன் ஒப்பிடத் தகுந்தது அல்ல.

எந்த ஒரு மரணமும் வருத்தப்பட வேண்டியதுதான். எந்த ஒரு மனிதனின் மரணமும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த அஞ்சலியின் பின்னால் ஒளிந்துகொண்டு நாம் புதிய புதிய கருத்துக்களை அந்த அரசியல்வாதியின் மீது ஏற்றி வைப்பது சரியானதல்ல. நம் வீட்டோடு இருக்கும் ஒருவரின் மரணத்தை ஒட்டி அவர் தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே செய்த தீமைகளை மறப்பது வேறு. அவர் கொடுத்த பல துன்பங்களை மறப்பது வேறு. ஆனால் ஒரு சமுதாயத்திற்கு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்த அரசியல்வாதியை நாம் இப்படி அணுகிவிட முடியாது. அணுகக்கூடாது.

இன்று சமூக வலைத்தளங்களில்நாம் செய்வதெல்லாம் என்ன என்று கவனித்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. தனிப்பட்ட ஆன்மீக ஹிந்துக்கள் மட்டுமே இப்படி யோசித்தால் கூட அதில் உள்ள உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்துகொண்டு விட முடியும். ஆனால் நல்ல அரசியல் முதிர்ச்சி பெற்ற ஹிந்துத்துவ ஆதரவாளர்கள்கூட, இத்திக்கில் இதயத்தால் மட்டும் யோசிப்பது அதிர்ச்சியாக உள்ளது.

விதவிதமான கற்பனைகளை கருணாநிதியின் மீது ஏற்றி வைக்கப் படாதபாடு படுகிறார்கள். அவர் ஹிந்துக்களின் ஆதரவாளர் என்கிறார் ஒருவர். அவர் பிராமணர்களுக்குத் தீமை பெரிதாகச் செய்யவில்லை என்கிறார் இன்னொருவர். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டால் கருணாநிதி எவ்வளவோ மேல் என்கிறார் வேறொருவர். பொதுப்புத்தி ஒன்றைச் சிந்தித்து, அதே வழியில் நாமும் சிந்திப்பது என்பது ஒரு பழக்கம். ஒரு வகையில் நோய். இந்த நோய் பீடிக்கப்பட்டு, இப்படி யோசிக்கத் துவங்குகிறார்கள். ஒரு புதிய கருத்தை திடீரென அடைந்து, அதை ஒட்டி இவர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். தொடர்ச்சியாக, தாங்கள் நினைத்த கருத்துக்கு வலுச்சேர்க்கும் மேலதிகக் கருத்துக்களை எழுதி எழுதிச் சேர்கிறார்கள். இதுதான் பிரச்சினை.

கருணாநிதி ஹிந்து ஆதரவாளர் என்று சொல்ல உண்மையில் ஒருவர் கூச வேண்டும். கருணாநிதி பிராமணர்களுக்கு அத்தனை தீமை செய்யவில்லை என்று எழுத ஒருவர் நாண வேண்டும்.

கருணாநிதி இறந்த சமயத்தில் நான் இதைச் சொல்வது அவரை அவமதிப்பது செய்வதற்காக அல்ல. மாறாக அவர் இத்தனை நாள் என்ன அரசியல் செய்தாரோ அதை மீண்டும் நினைவுறுத்தும் விதமாக மட்டுமே. அதுவும் கூட கருணாநிதியைப் பாராட்ட திடீரெனத் தலைப்பட்டிருக்கும் இந்துத்துவ மக்களுக்காகத்தான்.

கருணாநிதி நல்ல தந்தை நல்ல மகன் என்றெல்லாம் யோசிக்கத் தலைப்படுகிறார்கள். கருணாநிதி மரியாதை நிமித்தம் சந்தித்த இந்துத் தலைவர்களை ஒட்டி யோசிக்கிறார்கள். ஏன் அதை அவர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை என்கிற பிரச்சினை இத்தனை நாள் அவர்களுக்குள் இருந்தது. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி அதை மறந்துவிட்டு அவர் ஹிந்து ஆன்மிகத் தலைவர்களைச் சந்தித்ததையே பெரும் பேராக எண்ணிப் பூரிப்பது தேவையற்ற செயல். உண்மையில் கருணாநிதியின் சந்திப்பில் எப்பொருளும் நமக்கு இல்லை.

என்றும் கருணாநிதி தன்னை ஹிந்து எதிர்ப்பாளராகவும் இந்துத்துவ வெறுப்பாளராகவும் பிராமணக் காழ்ப்பாளராகவும் மட்டுமே தன் அரசியலை வடிவமைத்துள்ளார். இந்தச் சமயத்தில் நாம் இதையெல்லாம் மறந்து விட வேண்டியதில்லை. ஜெயலலிதாவை எதிர்க்க கருணாநிதியை நம்மவராக்கத் தேவையே இல்லை. கருணாநிதி எதிர்ப்பும் ஜெயலலிதா எதிர்ப்பும் – கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்துவிட்ட நிலையில் – ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை.

இதன் இன்னொரு பக்கத்தையும் சொல்ல வேண்டி உள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு கருணாநிதி இறந்த இச்சமயத்தில் அவர் மீது அவதூறுகளைப் பரப்புவது சரியல்ல. என் நோக்கம் அதுவல்ல. சில மிகத் தரக்குறைவான பதிவுகளைப் பார்க்கிறேன். அது தேவையற்றது. நம் எதிர்ப்பு கருத்துக்களோடுதான், தனிப்பட்ட வகையில் அல்ல. நாம் கருணாநிதியைப் பற்றி விமர்சிக்க இன்னும் நமக்குக் காலம் உள்ளது. இதற்கு முன்னரும் காலம் இருந்தது. எனவே கருணாநிதி மறைந்திருக்கும் செய்தியால் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாடி இருக்கும் இந்நேரத்தில் நாம் நம் தீவிரமான விமர்சனங்களைச் சொல்ல வேண்டியதில்லை. ஹிந்துத்துவர்கள் அவரைப் பாராட்ட துவங்கியிருப்பது தேவையற்ற செயல். நான் இதைப்பற்றி இந்நேரத்தில் எழுத நினைத்தது ஒரே ஒரு காரணுத்துக்காகத்தான்.

நான் மதிக்கும் இந்துத்துவ சுய சிந்தனை உள்ள சிந்தனையாளர்கள் கூட எழுத ஆரம்பித்திருப்பது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது என்பது மட்டுமே அதற்கான காரணம். உதாரணமாக பி.ஆர்.மகாதேவன்.

நான் பி.ஆர். மகாதேவன் எழுதியிருக்கும் ஒரு நூலுக்கு மிக முன்னர் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறேன். அந்த நூலில் குறிப்பிட்டவை இன்றளவும் செல்லுபடியாகக்கூடியவையே. அதன் அடிப்படை இப்படி இருந்தது – பிஆர் மகாதேவன் சுயமாக சிந்திக்கத் தெரிந்த மிகச் சிலரில் ஒருவர். என் கணிப்பு இன்றளவும் அதுவேதான். நான் அதில் எள்ளளவும் மாறுபாடு கொள்ளவில்லை. அதேசமயம் மகாதேவனின் நிலைப்பாடுகள் மிகவும் சிக்கலானவை. பல கண்ணிகளில் காலூன்றி ஒரு விருட்சம் போல எழுபவை. அதனாலேயே அதில் அடிப்படைக் குழப்பங்கள் அதிகம். பல விஷயங்களைப் பல நிலைப்பாடுகளிலிருந்து ஒரே கட்டுரையில் சொல்ல முயல்வதால் கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதைத் தீர்மானமாக அணுகுவது மிகக் கடினம். மகாதேவனின் பாணி இது. பி.ஆர். மகாதேவன் மிக முக்கியமான ஹிந்துத்துவ சிந்தனையாளர், மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கருணாநிதி குறித்து அவர் எழுதியிருக்கும் அஞ்சலிக் குறிப்பு போன்ற ஒன்றை தமிழ்ஹிந்து வலைத்தளம் வெளியிட்டு இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. கருணாநிதி குறித்த மாயையை உருவாக்கி, அதை ‘அவர் நல்லவர் அல்ல ஆனால் நம்மவர்தான் (ஹிந்துதான்)’ என்ற ஒரு கருத்தை முன்வைத்து ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்குகிறார். இதை வாசிப்பவர்கள் அதன் சட்டென ஒரு கருத்துக்காக ஆராதிக்கலாம். ஆனால் இதன் பின்னே உள்ள பொருள் உண்மையில் ஒன்றும் இல்லை. நல்லவர்தான் ஆனால் ஹிந்து என்று சொல்ல வருவதன் மூலம் நாம் தமிழ்ஹிந்து தளத்தில் என்ன சாதிக்கப் போகிறோம் என்று யோசித்திருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, அந்தக் கட்டுரை இரண்டு முக்கியமான தவறுகளைச் செய்கிறது என்றே நினைக்கிறேன். (இப்போதைக்கு என்னால் இதை உறுதி செய்யமுடியவில்லை என்றாலும் கூட.) மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை கருணாநிதியால் நிறுவப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஒரு நண்பர் கூறினார். இது கருணாநிதி வைத்தது அல்ல என்று குறிப்பிட்டார் அவர். இரண்டாவது அந்த நண்பர் குறிப்பிட்டது, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் அடிப்படை எண்ணத்தை விதைத்தது ரானடே என்பதுதான். ஆனால் அந்தப் பெருமையும் கருணாநிதிக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒட்டுமொத்த கட்டுரையின் அடிப்படையுமே இந்த இரண்டு விஷயங்களில்தான் நிலைகொண்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களுமே சரிதானா என்ற சந்தேகம் உள்ள நிலையில் அந்தக் கட்டுரை கட்டியெழுப்பும் கருத்துக்கள் ஆட்டம் காணுகின்றன.

ஒருவரின் மரணத்தின் போது அவரது நல்லதை மட்டுமே பேசுவது நம் மரபு. ஆனால் நாமாகவே நல்லதை அவர் மேல் கட்டி வைக்கத் தேவையில்லை. இதை புரிந்து கொண்டாலே போதும். இதுவே இக் கட்டுரையின் நோக்கமும் கூட. இந்த நேரத்தில் இதை எழுத நேர்ந்ததும் ஹிந்து நண்பர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே.

கல்வெட்டாய்வாளர் ராமசந்திரன் அவர்கள் தரும் ஒரு குறிப்பு: மயிலை சமஸ்கிருதக்கல்லூரிக்கு எதிரிலுள்ள திருவள்ளுவர் சிலை1966ஆம் ஆண்டில் முதலமைச்சர் பக்தவத்சலம்,குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நிறுவப்பட்டது. வைகாசி அனுட நாள் திருவள்ளுவர் திருநாள் என அறிவித்து(அருகிலுள்ள திருவள்ளுவர் கோயிலில்600 ஆண்டுகளாகப்பின்பற்றப்படும் நாள் என்பதால்) அரசாணை வெளியிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி நிறுவப்பட்டசிலை. கடற்கரையில் நின்ற வண்ணம் உள்ளசிலை1968ஆம் ஆண்டில் சிவாஜிகணேசனை மாதிரியாக வைத்து உலகத்தமிழ் ஆய்வுமாநாட்டையொட்டி அண்ணாவால் நிறுவப்பட்டது. வள்ளுவர்கோட்டத்திலுள்ளசிலை கருணாநிதியாரின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டதென எண்ணுகிறேன்.

Share

பாலகுமாரன் – அஞ்சலி

பாலகுமாரன் – அஞ்சலி
 
பாலகுமாரன் எழுத்தைப் படித்தே நான் புத்தக வாசிப்புக்குள் வந்தேன். இளமையில் பாலகுமாரன் எழுத்தைப் படிப்பது ஒரு அனுபவம். ஒரு பெண்ணைக் காதலிப்பது போல, ஒரு பெண்ணின் உடல் தரும் கிளர்ச்சி போல, பாலகுமாரனின் எழுத்தை வாசிப்பதும் பெரிய கிறக்கத்தைத் தந்தது. தத்துவம் என்கிற பெயரில் பாலகுமாரன் சொன்னவை பாதி புரிந்தும் பாதி புரியாமல் இருந்தாலும் பாலகுமாரன் எழுத்தே ஒரு விஷயத்தின் பல்வேறு கோணங்களை யோசிக்கக் கற்றுத் தந்தது. தோல்வியை ஏற்றுக்கொள்ள, பழகிக்கொள்ள அரைகுறை புரிதலைத் தந்தது. பின்பு அதிலிருந்து மேலேறிச் செல்ல உதவியது. பாலகுமாரனின் பிற்கால எழுத்துகள் முழுவதும் ஆன்மிகமாகவிட்ட போது, மிக எளிதாக பாலகுமாரனைத் துண்டித்துக்கொள்ளவும் முடிந்தது. ஆனால் வாசித்த காலங்களில் உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர் பாலகுமாரனே என்ற எண்ணம் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருந்தது.
 
பெண்களைப் பற்றி பாலகுமாரன் எழுதியவை எல்லாமே ஆண் பார்வையாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு அந்த எழுத்து தரும் பரவசம் அளவற்றது. பெண்மையை உயர்த்தும் ஆண்மை என்பது தரும் கிறக்கம் அது. அதில் உண்மை இல்லாமல் இருந்திருக்கலாம், முழுக்க நாடகப் பாணியிலானதாக இருக்கலாம். ஆனால் அது மிக நெருக்கமாக இருந்தது. பெரும் ஈர்ப்பைத் தந்தது.
 
உணவுக்கும் உடலுக்கும் பெண்ணுக்குமான சித்திரங்களை பாலகுமாரன் வரைந்து தள்ளினார். எல்லாவற்றின் அடிநாதமும் ஒன்றேதான் என இன்று யோசிக்கும்போது புரிகிறது. ஆனால் அன்றைய வாசிப்பில் ஒவ்வொன்றும் ஒரு தினுசாக இருந்தது. கண்ணீர் மல்கவே சில பக்கங்களை வாசிக்கவேண்டி இருக்கும். எத்தனை எத்தனை நாவல்கள்! ஒவ்வொரு வியாழக்கிழமையும் (என நினைக்கிறேன்) நாவல் டைம் அல்லது மேகலா வருவதற்காக அதிகாலையே பத்திரிகைக் கடையில் காத்து நின்றிருக்கிறேன். அன்புள்ள அப்பா, செந்தூரச் சொந்தம், திருப்பூந்துருத்தி, கடலோரக் குருவிகள், என்றென்றும் அன்புடன், கண்ணாடி கோபுரங்கள் என்று எத்தனையோ நாவல்களை மாத நாவல்களாக வாங்கியும் நூலகத்திலும் வாசித்துத் தள்ளினேன்.
 
அந்திமழை இதழுக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலை மீண்டும் வாசித்தபோது என் இளமையின் அந்தரங்க நிமிடங்களை நானே திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு சந்தோஷமான திடுக்கிடலை உணர்ந்தேன். நமக்கு நிறைய வாசித்துவிட்ட உணர்வு பெருகும்போது பாலகுமாரன் தேங்கிவிட்டதாகத் தோன்றியதும் தோன்றுவதும் உண்மைதான். ஆனால் அந்த எழுத்துத்தான் என்னை அப்படிப் பிடித்துக்கொண்டது என்பதும் நிஜம்தான். யோசித்துப் பார்த்தால் பாலகுமாரன் ஒரு குறிப்பிட்ட வயதுக்காக எழுதி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த வயதொத்தவர்களைப் பிடித்துக்கொள்ளும் பூதம் போன்ற எழுத்து அது. இன்று சாகவாசமாக அதை விமர்சிக்கலாம். அது எளிது. ஆனால் அன்றைய தேதியில் அந்த பாலகுமாரன் தந்த கிளர்ச்சியை, அனுபவத்தை, தத்துவம் மீதான புருவ உயர்த்தலை எல்லாம் மறக்கவே முடியாது. என்றென்றும் நினைவில் இருப்பார் பாலகுமாரன்.
 
திரைத் துறையிலும் பாலகுமாரன் ஒரு வசனகர்த்தாவாக சாதனை செய்தார் என்பதே என் எண்ணம். இளையராஜா மற்றும் கமலுக்கு இணையாக அவர் குணாவிலும் என்றென்றும் தெரிவார் என்றே நம்புகிறேன்.
 
ஓம் ஷாந்தி.
Share

மகாராஷ்ட்ரா – சிவப்புத் தொப்பி!

கம்யூனிஸ்ட்டுகள் ரொம்ப ஆர்ப்பரிக்கிறார்கள். எப்படா புரட்சி வரும்னு காத்துக்கிட்டு இருந்தவங்க சிவப்புத் தொப்பியைப் பார்த்ததும், இனி இந்தியாவில் எங்கும் சிவப்பே என்று ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இரிக்கி.

வெளிப்படையாக சிவப்பின் எரிச்சலைச் சொல்ல முடியவில்லை என்று ஒரு சிவப்பாளர். (ஐ மீன் காம்ரேட். நோ கேஸ்ட் ப்ளீஸ்.)

தமிழ்நாட்டுல இல்லாத என்னவோ ஒண்ணு இருக்குன்னு ஆன்மிக_அரசியல்வாதி ஒருவர்.

உண்மையான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பங்கிருந்தால் அதில் என்னவோ இருக்கு என்பதே நம் நிலைப்பாடு. மெல்ல வெளிய வரும்.

புரட்சி இப்படி கொப்பளிக்கும்போது இப்படியெல்லாம் பேசலாமா என்று கம்யூனிஸ்ட்டுகளுக்கு உறவாக ஒட்டுமொத்த தேசமே வரும் – பேச மட்டும். ஓட்டுக்கு வராது. அது நமக்கே.

இத்தனை பெரிய போராட்டத்துக்குப் பிறகும் அங்கே காங்கிரஸோ பிஜேபியோ சிவ சேனையோ வெல்லும்.  இப்படி இருக்கும்வரை நாம் பதற்றப்பட ஒன்றுமில்லை.

விவசாயிகளின் நலனுக்குத் தேவையான நியாயமானவற்றை – அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாகவே இருந்தாலும் – அரசு செய்யட்டும். இதில் வெற்றி தோல்வியெல்லாம் இல்லை. சிங்கூரை நினைத்துக்கொள்வோம்.

Share

அப்பா

அப்பா

அப்பாவின் 11வது ஆண்டு நினைவு நாள் (திதி) இன்று. கிருஷ்ண பக்ஷம் பால்குண மாதம் பிரதமை திதி. அப்பாவின் மரணம் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். நிறைய நாளாகவே முடியாமல்தான் இருந்தார். சென்னையில் என்னுடன் இருந்தவர் வம்படியாக திருநெல்வேலிக்கு என் அண்ணா வீட்டுக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரை நெல்லைக்கு ட்ரைனில் அழைத்துக் கொண்டு சென்றபோதே ரொம்பவும் பலகீனமாகவே இருந்தார். முகமே களையின்றித்தான் இருந்தது. அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் வைகுண்ட பிராப்தி அடைந்தார். அப்பாவின் மரணம் எனக்குப் பெரிய வேதனையைத் தரும் விஷயமாக இருந்தது. இன்னொரு பக்கம் விடுதலையாகவும் இருந்தது. அப்பாவின் சிகிச்சைக்கு அளவுக்கு மீறிப் பணம் செலவழித்திருந்தோம். இனியும் தாங்கமுடியுமா என்ற கேள்வி வந்தது. படுத்த படுக்கையாகிவிட்டால் யார் எப்படி கவனித்துக்கொள்வது என்று யோசனை செய்யத் தொடங்கி இருந்தோம். எத்தனை நாள் இப்படி சமாளிக்கமுடியும் என்று யோசிக்கத் துவங்கிய இரண்டாம் நாளில் அப்பா இறைவனடி சேர்ந்துவிட்டார் யாருக்கும் எக்குழப்பத்தையும் வைக்காமல்.

அப்பா ரொம்ப குழந்தை மனம் கொண்டவர். அப்பாவி. யாரும் அவரை ஒரு நொடியில் ஏமாற்றிவிடலாம். அசட்டுக் கோபம் கொள்பவர். கோபம் கொண்டு எதாவது சொல்லிவிட்டு, திட்டு வாங்கியவர் வருத்தப்படுவதைவிட நூறு மடங்கு அதிகம் வருத்தப்படுபவர். அம்மாவின் சொல்லை மீறி எதையும் செய்யத் தெரியாதவர். தாத்தா முன் நின்று பேசவே அப்பாவுக்கு 60 வயது தேவைப்பட்டது. குடும்பத்தில் உள்ள எல்லோர் மீதும் பாசமாக இருப்பவர். அப்பாவுக்கு ஊர் உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்கள் மட்டுமே.

கடைசி காலத்தில் என்னுடன் இருந்த நேரத்தில் நான் அவருடன் ஓவராக விளையாடிக்கொண்டிருப்பேன். எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருந்தார். குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம். அண்ணாவின் இரண்டாவது மகனுக்கு அரவிந்த் வாசன் என்று பெயர். அதில் உள்ள வாசன், என் அப்பாவின் நினைவாக அவனுக்கு வைக்கப்பட்டது. இதனால் அரவிந்த் மேல் கொஞ்சம் அதிகப் பாசம்.

என் சின்ன வயதில் அப்பாவுக்குத் தெரியாமல் அப்பா சேமித்து வைத்திருந்த டப்பாவில் இருந்து காசை எடுத்துக்கொண்டு போய் கல்லூர்ப் பிள்ளை கடையில் சாப்பிடுவேன். அந்த ரோஸ் நிற டப்பாவில் ஐந்து ரூபாய் காயின்களாகப் போட்டு வைத்திருப்பார். அந்த டப்பாவைத் தூக்கக்கூட முடியாது. அதிலிருந்து பத்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் பூரி வடை என சாப்பிட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்துவிடுவேன். கடையின் முதலாளி என்னிடம், ‘இது மாதிரி நிறைய காயின் வெச்சிருக்கியா’ என்று கேட்டபோது சுதாரித்துக்கொண்டு, பத்து ரூபாயைத் திருடி அதைப் பணமாக மாற்றி மீண்டும் அக்கடைக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒருநாள் தற்செயலாக அப்பா சிரித்துக்கொண்டே, ‘நீ காயின் எடுக்கறன்னு எனக்குத் தெரியாதா என்ன’ என்றார். எனக்கு பக்கென்றிருந்தது. அத்தனை ஏமாளி இல்லை போல என்பதைவிட, ரொம்ப விவரமானவர் என்ற எண்ணமும், அவன் எடுத்துக்கட்டும் என்ற எண்ணமும் இருப்பது அதிகம் நெகிழச் செய்தது. இது தெரியவும் இனி பணமே எடுக்கக்கூடாது – என்று சினிமா ரேஞ்சில் எல்லாம் யோசிக்காமல் பதினைந்து ரூபாயாக எடுக்க ஆரம்பித்தேன் – குற்ற உணர்வில்லாமல். (என் அக்கா ஒரு தடவை ஐந்து ரூபாயை மட்டும் திருடி மாட்டிக்கொண்டு செமயாக அடி வாங்கினார், அவர் திருடத் தேர்ந்தெடுத்ததும் சரியாக என் அப்பாவைத்தான். இதை இங்கே சொல்வது எப்போதுமே அப்பா திருடப்படுபவராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே.)

அடிக்கடி என்னிடம் சொல்வார், ‘நீ சின்ன வயசுல நடு ராத்திரில அழுவ, அந்த நேரத்துல கடைக்குப் போய் நிப்பிள் வாங்கிட்டு வருவேன், இப்ப இதையெல்லாம் ஒனக்கு சொல்ல வேண்டி இருக்கு’ என்பார். ஏன் முதல்லயே நிப்பிளை தயாரா வெச்சிக்கலை, ஒரு குழந்தை அழும்னு உனக்கு தெரிய வேண்டாமா என்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். 🙂 ஆனாலும் என் நினைவில் அப்பா நிப்பிள் வாங்க இரவில் கடைக்குச் செல்வது ஒரு காட்சி போலவே பதிந்துவிட்டது. என் வீட்டில் அத்தனை பேரும் இதைச் சொல்வார்கள்.

அப்பா அவரது சின்ன வயசில் ரொம்ப நோஞ்சானாக இருந்தார் என்பார்கள். பால கண்டம் என்று என்னவோ சொன்னார்களாம். அதனால் அப்பாவை (அப்போது அவர் குழந்தை) படுக்க வைத்து அவரைச் சுற்றி ஏகப்பட்ட உணவு சமைத்து வைத்து எல்லாம் ஒனக்குத்தான் என்று சொல்லி ஒரு சடங்கு செய்ததாகச் சொல்வார்கள். அப்பா கடைசி காலம் வரையில் அதிகம் எதிர்ப்பு சக்தி இல்லாதவராகவே இருந்தார் என்பதே என் மனப்பதிவு.

அப்பாவுக்கு எதை எப்போது எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாது. சரியான வார்த்தைகளைச் சொல்லவும் தெரியாது. ஒருதடவை வளைகாப்பு வீட்டுக்குப் போய்விட்டு காப்பரிசியுடன் வந்தவர், வீட்டுக்கு வந்ததும் வளைகாப்பு வீட்டில் வாய்க்கரிசி கொடுத்தாங்க என்று சொல்லி வீட்டில் வாங்கிக் கட்டிக்கொண்டார். அனந்த விரதப் பண்டிகைக்குக் கயிறு கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியைப் பற்றி என் தாத்தாவுக்கு இப்படி கடிதம் எழுதினார், “குடும்பத்துடன் அனைவரும் கயிறு மாட்டிக்கொண்டோம்’ என்று. பக்கத்து வீட்டு மாமி என்னவோ பேசவந்தவர், ‘பொழுதே போகலை வீட்டில்’ என்று சொன்னதற்கு என் அப்பா, ‘அப்ப குதிங்கோ’ என்றார். அந்த மாமிக்கு எப்படி ரீயாக்ட் செய்வதென்றே தெரியவில்லை. ஒரு தடவை என் அண்ணியிடம், ‘தலை வலிக்குது, கடுகை தேச்சிப் போடு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அண்ணி எத்தனை தடவை சொல்லியும், இதை உரைச்சி போட முடியாதா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். கொஞ்சம் நேரம் கழித்துத்தான் பிடிபட்டது அவர் சுக்கை நினைத்துக்கொண்டு கடுகைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது. (கன்னடத்தில் சார்சிவ என்றால் கடுகு, சுண்ட்டி என்றால் சுக்கு.) இப்படி பல நிகழ்ச்சிகள். இன்றும் வீட்டில் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்.

அப்பாவுடன் பழகியவர்கள் அப்பாவை எப்படி மதித்தார்கள் என்பது குறித்த சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் இதை மீறி அப்பாவுடன் அன்பாகவே இருந்தார்கள். அப்பாவை எப்போதும் மட்டம் தட்டும் ஒரு கூட்டம் ஒன்றும் உண்டு. ஆனாலும் அப்பா அவர்கள் எல்லோரிடமும் அன்பாக இருந்தார். ஏனென்றால் அப்பாவுக்கு மற்றவரை மட்டம் தட்டத் தெரியாது. அன்பாக இருக்க மட்டுமே தெரியும். மற்றவர்கள் சொல்வதை நம்ப மட்டுமே தெரியும். ஏன் ஒருத்தன் பொய் சொல்லவேண்டும் என்று மட்டுமே யோசிக்கத் தெரியும். எல்லாம் இழந்து நின்ற போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரிந்துகொள்ளத் தெரியும். அதையும் விளக்கிச் சொல்ல அம்மா வேண்டும். இன்னும் நினைவிருக்கிறது, அப்பா நான்கு பேருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம். அப்பாவைத் தவிர மற்றவர்கள் யாரென்று நினைவில்லை. எப்போதோ எடுத்த போட்டோ. அதில் அப்பா ஒரு ஓரத்தில் கீழே விழுந்துவிடும் வாக்கில் பாதி தொடையில் உட்கார்ந்திருப்பார். அப்போது அந்த சின்ன வயதிலேயே நான் யோசித்திருக்கிறேன், ஏன் அப்பாவுக்கு நல்ல இடம் கொடுத்து அவர்கள் புகைப்படம் எடுக்கவில்லை என. ஆனால் அந்த நான்குபேரில் அப்பாதான் அதிகம் சிரித்துக்கொண்டிருப்பார். அப்பா இப்படியே உருவானவர். இதனால் அவர் இழந்தது கொஞ்சம் பணமாக இருக்கலாம். ஆனால் அன்பில் அவர் வென்றார். இன்று என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் அப்பாவின் மீது பெரிய மரியாதையும் அன்பும் இருக்கிறது. இதுதான் அப்பாவின் சொத்து.

கடைசியாக ஒரே ஒரு வார்த்தை, இத்தனை தூரம் நான் அப்பா அப்பா என்று சொன்னது, என் அப்பா, வளர்ப்பு அப்பா, சொந்தத்தில் பெரியப்பா. இந்த தியாகத்தை எந்நாளும் வார்த்தைகளில் விளக்கமுடியாது. ஒவ்வொரு விஷுவின் போதும் (வேப்பம்பூ பச்சடி சாப்பிடச் சொல்லி உயிரை எடுப்பார்) ஆடிப் பூரத்தின் போதும் (அன்றுதான் பிறந்த நாள்) அப்பாவின் நினைவு தானாக வரும். மறக்கமுடியாத மனிதர் என்பதில் எந்தப் பொருளும் இல்லை, மறக்கக்கூடாத மனிதர் என்பதே சரியானது.

Share

உரிமையின் அரசியல்

உரிமையின் அரசியல்

ஒருவருக்கு எதற்கும் உரிமை இருக்கிறது. அடுத்தவரை துன்புறுத்தாவரை அவருக்கு இருக்கும் யாரும் உரிமையை மறுக்கவே முடியாது. வைரமுத்து ஆண்டாளைப் பற்றி மட்டும் ஏன் எழுதினார், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் பற்றி எழுத தைரியம் இல்லையே என்று கேட்டால், ஹிந்துக்களைப் பற்றி மட்டும் தேர்ந்து எழுத வைரமுத்துவுக்கு உரிமை இருக்கிறது என்கிறார்கள். யார் மறுத்தது? நிச்சயம் வைரமுத்துவுக்கு அந்த உரிமை இருக்கவே செய்கிறது.

பொதுவாக ஹிந்து மதத்தை மட்டும் தேர்ந்தெடுத்துச் சாத்துகிறவர்களை ஏன் கேள்வி கேட்கிறோம் என்பதற்கு என்னுடைய வரையறைகள் இவை. அதாவது இந்த வரையறைகளுக்குள் இருந்தால், ஒருவர் நிச்சயம் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசலாம். திட்டலாம். இந்த வரையறைக்குள் இல்லாமல் போகும்போது கேள்வி கேட்கிறோம்.

* ஹிந்து மதம் என்றில்லாமல் கிறித்துவ இஸ்லாம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மதங்களையும் அம்மதங்களின் போதாமைக்கும் அராஜகங்களுக்கும் விமர்சிப்பது, கேள்வி கேட்பது. இது ஒரு உச்சகட்ட நிலை. இந்நிலையை மிகச் சிலரிடம் மட்டுமே காணமுடியும். இப்படி இருப்பவர்கள் ஹிந்து மதத்தையும் நிச்சயம் கேள்வி கேட்கலாம்.

* இரண்டாவது வகை, எம்மதத்தின் பிரச்சினைகளுக்குள்ளும் புகாமல் இருப்பது. இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை.

* மூன்றாவது வகை, நான் ஹிந்து என்று அறிவித்துக்கொண்டு, எனக்கு ஹிந்து மதத்தின் மீதான விமர்சனங்களே முக்கியம் என்று சொல்வது. இவர்களை மற்ற ஹிந்து மத மற்றும் ஹிந்துத்துவ ஆதராவளர்கள் ஏற்பார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏற்கிறேன்.

* நான்காவது, ஹிந்து மதத்தின் சீர்திருத்தவாதியாக தன்னை நினைத்துக்கொண்டு கருத்துச் சொல்வது.

இப்படி இல்லாமல் ஹிந்து மதத்தை ஊறுகாய் போல மட்டும் தொட்டுக்கொண்டு பேசும்போது நிச்சயம் கேள்விகளை எழுப்பத்தான் செய்வார்கள். இந்த கேள்விகளை எழுப்பும்போது உரிமை பற்றிப் பேசி நழுவப் பார்ப்பது இன்னுமொரு எஸ்கேப்பிஸம்.

உண்மையில் யாரும் யாருடைய உரிமையையும் கேள்வி எழுப்புவதில்லை. ஒருவர் முட்டாளாக இருப்பதற்கு, சிறிய சிறிய அளவில் பொய் சொல்வதற்கு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதற்கு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழ்வதற்கு, கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதற்கு என்று ஏகப்பட்ட உரிமைகள் உள்ளன. இவை அனைத்தும் உரிமைகளே.

அப்படி இருந்தும் ஏன் கேள்வி கேட்கிறோம்? ஏனென்றால் உங்கள் கருத்தின் பின்னால் நீங்கள் உருவாக்க நினைக்கும் அரசியலை வெளிப்படுத்த. உங்களை எக்ஸ்போஸ் செய்ய. உங்களை உங்களுக்கே உணர்த்த. இந்த கேள்விகளுக்கு நியாயமான பதில் இல்லை என்றால், ஹிந்து மதத்தை விமர்சிப்பதும் கேள்வி கேட்பதும் எளிதானதாக இருக்கிறது, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் பற்றிப் பேச அச்சமாக இருக்கிறது என்ற உண்மையை மட்டுமாவது சொல்லிவிட்டு விமர்சியுங்கள்.

இல்லையென்றால், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் பற்றிப் பேசும்போதெல்லாம், கூடவே ஹிந்து மதத்தைப் பற்றியும் பேசி, ஊருக்கு ஏற்ப நீங்கள் எழுதவேண்டியது தவிர்க்கமுடியாததாகிவிடும். ஆனால் ஹிந்து மதத்தைப் பற்றி எழுதும்போது எக்கவலையும் இல்லாமல் எழுத முடியும் என்பதை உங்கள் ஆழ்மனம் உணர்ந்திருக்கும். இதை உணர்ந்திருந்தால் நீங்கள் ஹிப்போகிரைட் மட்டுமே, குறைந்த பட்சம் வெளிப்படையாக உங்களது இயலாமையை வெளியே சொல்லாதவரை.

எனவே மிகத் தெளிவாக உங்கள் தரப்பைச் சொல்லிவிடுவது நல்லது. அதைவிட்டுவிட்டு உரிமை பஜனையைக் கையில் எடுத்தால் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான், இரட்டை நாக்கு வெளியே தெரிகிறது, ஒன்றையும் மறைத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.

Share

ஞாநி – அஞ்சலி

ஞாநியின் மரணம் பேரதிர்ச்சி. நேற்று முன் தினம் கிழக்கு அரங்குக்கு மிகுந்த புன்னகையுடன் வந்தார். நான் ஓடிச் சென்று அவரிடம் பேசினேன். பத்ரியைப் பற்றி சில வார்த்தைகள் கிண்டலுடன் பேசினார். நானும் என்னவோ சொல்ல சத்தம் போட்டுச் சிரித்தார். உளவு ஊழல் அரசியல் புத்தகம் வாங்கினார்.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் ஞாநி அரங்குக்கு வந்தால் என்னை வந்து பார்ப்பதை ஓர் அன்புக் கடமை என்றே செய்துகொண்டிருந்தார். ஞாநியின் அன்பு ஆச்சரியத்துக்கு உரியது. பத்து வருடங்களுக்கு முன்பே புத்தக அரங்கில் வந்து, ‘இன்னைக்கு அட்டெண்ட்ஸ் போட்டாச்சு, ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதிடுங்க’ என்று சொல்லிவிட்டுப் போவார்.

அரங்கங்களில் அமர்ந்து அரட்டை என்று ஆரம்பித்தால், பல்வேறு தகவல்களைச் சொல்வார். அவை எங்கேயும் வெளிவந்திராத தகவல்களாக, அவர் பங்குபெற்ற விஷயங்களாக இருக்கும்.

இரண்டு நாள் முன்னர் பார்க்கும்போது உடல் கொஞ்சம் தேறியே இருந்தார். இனி பிரச்சினையில்லை என்றே நினைத்தேன். அவரும் அதையே சொன்னார்.

ஞாநியின் நினைவுகள் என்னவெல்லாமோ மேலெழுகின்றன.

ஞாநி – கண்ணீருடன் விடைகொடுக்கிறேன். அவரது கருத்தியல், ஹிந்துத்துவ ஹிந்து பிராமண எதிர்ப்பு என எல்லாவற்றையும் தாண்டி, ஐ லவ் ஞாநி.

Share