Archive for பொது
தேவதேவனுக்கு விளக்கு விருது (2007) விழா அழைப்பிதழ்
உயிர்மை ஏழு நாவல்கள் வெளியீட்டமர்வு – டிசம்பர் 2007
* மனுஷய புத்திரன் வரவேற்புரை கூற விழா தொடங்கியது.
* இந்திரா பார்த்தசாரதி தலைமையேற்றார். தமிழனவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ புத்தகத்தை வெளியிட்டு, அதைப் பற்றிப் பேசினார். தான் வார்ஸாவில் வாழ்ந்த காலத்தில் பார்த்த மனிதர்களுக்கும் தற்போது தமிழவன் தன் நாவல் வழியாகக் கண்டடைந்த மனிதர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார். தான் வாழ்ந்த காலத்தில் ராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டில் இருந்த நிலம், தற்போது சுதந்திரத்திற்குப் பின்னான மனநிலையை எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் தொட்டுப் பேசினார்.
* ஜீ.முருகனின் மரம் என்கிற நாவலை வெளியிட்டு திலீப்குமார் பேசினார். இயல்பாகவே திலீப்குமாரின் குரல் மிக மென்மையானது. அதனால் அவர் பேசியது பலருக்கும் கேட்கவில்லை. மரம் நாவலில் வரும் மனிதர்கள் எப்படி பாலிச்சை மிகுந்தவர்களாக தீவிரமாக உள்ளார்கள் என்பதைப் பற்றிப் பேசினார் திலீப்.
* புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘கண்யாவனங்கள்’ என்கிற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டு பேசினார் யுவன் சந்திரசேகர். எப்போதும் சிரிப்பும் நட்புமாக இருக்கும் யுவன் மேடையை பேச ஆரம்பித்த ஐந்தே நிமிடங்கள் வளைத்துக்கொண்டார். நாவல் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொன்ன யுவன் தமிழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கருத்துகளைப் பற்றிப் பேசினார். அழகான இயல்பான தமிழில் அவரது பேச்சு மிகச்சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பை இரண்டாகப் பிரித்துக்கொண்டு (பொதுநீரோட்ட மொழிபெயர்ப்பு, சிற்றிதழ் சார்ந்த மொழிபெயர்ப்பு) அதன் சாதக பாதக அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்நாவல் எப்படி சிறப்பாக, மூல நூல் சொல்ல நினைக்கும் கருத்துகளைச் சிதைக்காமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார். புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நாவலை வாசிக்க விரும்புவர்கள் கன்யாவனத்தில் தொடங்கி, அதன் வழியாக மீஸான் கற்கள், அதன் பின்னர் மஹ்சர் பெருவெளி எனச் செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் ஆபிதினின் இடம் ஒரு முக்கிய நாவல் என்றும் அது கீழ்த்தட்டு மக்களைப் பேசுகிறது என்றும் சொல்லிய யுவன், இந்நாவல் அதற்கு மாறாக ஒரு அராபிய முதலாளி பற்றிப் பேசுகிறது என்றும் சொன்னார். நாவலில் வெக்கையும் தகிப்பும் எப்படி உள்ளும் புறமும் மையச்சரடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
* சி.வி.பாலகிருஷ்ணனின் ‘திசை’ மொழிபெயர்ப்பு நாவலை வெளியிட்டு தமிழவன் பேசினார். 1995க்குப் பின் வந்த தமிழ் நாவலைப் படிக்க வாய்ப்பிருக்கவில்லை என்று ஆரம்பித்த தமிழவன், நாவலின் கட்டுமானம் பற்றிப் பேசினார். கடந்த பத்து வருடங்களில் தமிழர்களின் சிந்தனை, வெளிப்பாடு வரைபடம் நேர் குத்துக்கோடுகளாக ஆகிவிட்டது என்றும் அதற்கு முன்னர் கிடைமட்டமாக இருந்தது என்றும் சொன்னார். கைகளால் காற்றில் வரைந்து காட்டினார்! இந்நாவலில் வரும் திடீர் திடீர் பாத்திரங்கள் அதே மாதிரி காணாமல் போகின்றன, ஆனால் இவையே ஒரு சுவையான விஷயமாக நாவல் நெடுகிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொன்னார். மொழிபெயர்ப்பின் கச்சிதம் பற்றியும் பேசினார்.

* எஸ். செந்தில்குமாரின் ஜீ.சௌந்தர ராஜனின் கதை என்னும் நூலைப் பற்றிப் பேசினார் நாஞ்சில் நாடன். நூலில் தெற்றுப் பார்க்கப் போவதில்லை என்று தொடங்கிய அவர், இந்நூல் இன்னும் பெரியதாக எழுதப்பட்டிருக்கலாம் என்றும் அதற்கான தேவையும் அவகாசமும் இருக்கிறது என்றும் சொன்னார். செந்தில் குமார் புதிய எழுத்தாளர் என்ற போதிலும் அவர் எடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினை இன்றைய நிலையில் கண்டிப்பாக விவாதிக்கப்படவேண்டியது என்பதால் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் சொன்னார்.
* வாமு.கோமுவின் கள்ளி நாவலை வெளியிட்டுப் பேச வந்தார் சாரு நிவேதிதா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி பத்து ஓவர்கள் இங்கிருந்துதான் தொடங்கியது! தமிழவனுடன் 1978 முதல் 1985 வரை தனக்கிருந்த ஆழமான நட்பு, தினம் தினம் கடிதம் என்று தொடங்கிய சாரு, அதை இப்படி முடித்தார். தமிழவன் எழுதிய நாவல் (பெயர் மறந்துவிட்டது, சாவு என்று எதோ வரும்!) ஒன்றைப் பற்றி சாரு கடுமையாக விமர்சிக்க அன்றோடு முடிவுக்கு வந்ததாம் தமிழவனுடனான நட்பு. இதேபோல் யுவன் சந்திரசேகரைப் பற்றியும் பேசினார். ய்வனுடன் மிக ஆழமான நட்பு இருந்ததாகவும் ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட தலை வெடித்துவிடும் என்கிற அளவிற்கு நட்பு இருந்ததாகவும் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் நடைபாதையின் படிகளில் அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசியதாகவும் சொன்ன சாரு, அன்றைக்கு யுவனின் சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டு யுவனை கொண்டாடுவாராம். இந்நிலையில் யுவன் இன்னொரு கையெழுத்துப் பிரதியைத் தந்தாராம். ‘குள்ளச் சித்தன் சரித்திரம்.’ அதைப் படித்துவிட்டு மறுநாள் 15 நிமிடம் காரசாரமாக சாரு யுவனை விமர்சிக்க, அன்றோடு முடிவுக்கு வந்ததாம் யுவனின் நட்பு! அதன் பின்பு டிசம்பருக்கு டிசம்பர் உயிர்மை விழாவில்தான் பார்க்கமுடிகிறதாம். அதேபோல் வாமு கோமுவின் அறிமுகத்தையும் அவரது சிறுகதைகளை தான் கொண்டாடியதையும் சொன்ன சாரு, இந்நாவல் மீண்டும் இயல்புவாதம் என்கிற மூடப்பட்ட பிரதிக்குள் விழுந்துவிட்டது என்றும் சொன்னார். பின் நவீனத்துவமே திறந்த எழுத்து என்றும் அதுவே இன்றைக்குத் தேவை என்றும் பின்நவீனத்துவ மாணவன் என்கிற முறையில் தன்னால் இதுபோன்ற எழுத்துகளைப் படிக்கமுடிவதில்லை என்றும் சொன்ன சாரு, பின் நவீனத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் விளக்கினார். கடைசியில், வாமு. கோமு இன்றோடு பேச்சை நிறுத்திவிடக்கூடாது என்றும் சொல்லி, let us be friends என்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.
* எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலை வெளியிட்டு பேசினார் ஜெயமோகன். தொடங்கும்போதே சாருவிற்கான பதிலாகத் தொடங்கினார். சாருவின் எழுத்தை தான் பொருட்படுத்தியது கிடையாது என்றும் எல்லாரும் எழுதுகிறார்கள், சாருவும் எழுதுகிறார் என்ற அளவில் மட்டுமே நினைத்திருந்ததாகவும் சொன்ன ஜெயமோகன், ‘ஸீரோ டிகிரி’ நாவலைப் படித்த பின்புதான் அதில் ஒரு நாவல் இருக்கிறது என்று அறிந்து, அதை சாருவிற்குக் கடிதமாகவும் அனுப்பியதாகச் சொன்னார். அதன்பின்புதான் சாரு தன்னை நண்பன்¡க நினைத்தார் என்று சொன்னார்! அதேபோல் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில், நடையில் தனக்கு கடுமையான விமர்சனம் இருந்தது என்றும் அதை சொல்லியும் இருக்கிறேன் என்றும் சொன்ன ஜெயமோகன், உப பாண்டவம் படித்தபோது, எஸ். ராமகிருஷ்ணனில் சிறந்த நாவலாசிரியர் இருப்பதை அறிந்தேன் என்றும் சொன்னார். உப பாண்டவம் முக்கியமான நாவல் என்றும் நெடுங்குருதி தமிழின் நல்ல படைப்புகளுள் ஒன்று என்று நம்புவதாகவும் சொன்னார் ஜெயமோகன். அதன்பின் எஸ்.ராமகிருஷ்ணனின் நட்பும் கிடைத்தது என்றும் சொல்லி, இது இயல்பானது என்றார். ஒரு சமயம் ஜெயமோகனை யுவன் சந்திரசேகர் தொலைபேசியில் அழைத்து, அவருடன் சாரு பேசுவதே இல்லை என்றும் ஜெயமோகன் சாருவை அழைத்து இது பற்றிச் சொல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம். ஜெயமோகன் என்ன நடந்தது என்று கேட்டதற்கு, சாரு கோணல் பக்கங்கள் புத்தகத்தைத் தந்தார், அதைப் படித்துவிட்டு கருத்து சொன்னேன், அன்றிலிருந்து சாரு பேசுவதில்லை என்றாராம் யுவன் சந்திரசேகர்! பின்பு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவல் பற்றிப் பேசினார் ஜெயமோகன். யாமம் நாவல் அத்தர் தயாரிக்கும் இஸ்லாமிய குடும்பத்தின் கதை என்றும் அது ஷாஜஹானின் அரண்மனையில் தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், அதன் பின்பு வந்த சென்னை பட்டினம், அது சந்தித்த போர்கள் வழி நீள்கிறது என்றார். Metaphor மூலம் கட்டமைக்கப்படும் metaphysics எனப்படும் மீப்பொருண்மை வாதம் பற்றிய விளக்கிய ஜெயமோகன், அதை இந்நாவல் எப்படி வெற்றிகரமாக கையாண்டிருக்கிறது என்றும் விளக்கினார். இப்பிரபஞ்சத்திற்கு இணையான இன்னொரு பிரபஞ்சத்தை முன்வைக்கிறது இந்நாவல் என்றார். போர்ஹேயின் எழுத்தைப் பின்பற்றியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், அவரது நடையை அப்படியே பின்பற்றாமல் எழுதியிருப்பது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகிறது என்று சொன்ன ஜெயமோகன், இந்நாவலைப் படிக்க சிறந்த வழி, வாசனை மூலம் கண்டடைவது என்றார்.
* விழா இனிதே முடிவடைந்தது.
(குறிப்பு 1: இதிலிருக்கும் விஷயங்கள் அத்தனையும் என் நினைவிலிருந்து எழுதியது. குறிப்புகளும் எடுக்கவில்லை. அதனால் எந்த எழுத்தாளர்களாவது இப்படி பேசவில்லை என்றோ, இந்த வார்த்தையைச் சொல்லவில்லை என்றோ சொல்வார்களானால், அதுவே சரி.
குறிப்பு 2: விழாவில் பார்த்த வலைப்பதிவுலக, இணைய நண்பர்கள் – மதுமிதா, சாபு, அப்துல் ஜப்பார், நிர்மலா. எல்லாருடனும் ஹாய் சொல்ல மட்டுமே நேரம் இருந்தது.)
வெளியீட்டமர்வு நடந்த நாள்: 15.12.007 மாலை 6 மணி
இடம்: புக் பாயிண்ட், (ஸ்பென்ஸர் பிளாசா எதிரில்),சென்னை.
சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்
அவர் எழுதிக்கொடுத்த பன்னிரண்டு பக்கங்களுக்கு மேலான சுதந்திர தின எழுச்சி உரையை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்யும் சக்தி எனக்கு அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் எளிதில் மனப்பாடம் செய்துவிட்டேன். குரல் வேறு கணீரென்று இருக்கும். அதனால் எல்லாரும் என்னை உசுப்பேத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் மனப்பாடம் செய்த பகுதிகளை வீட்டில் சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தேன். வீர உரை வேறு. நானே கப்பலோட்டிய தமிழனாக மாறிவிட்டதுபோன்ற வேகத்தில், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்று ஒப்பித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் அண்ணா வந்தார். முதல் கேள்வி, ‘ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, ‘இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா’ என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். ‘நாராயணா, இவன் சொல்றதக் கேளு’ என்று சொல்லி, என்னைப் பார்த்து, ‘சொல்லுடா!’ என்றார். நான், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.’ அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், ‘தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். என் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது. இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. மடமடவென ஒப்பிக்கும்போது, அந்த வரி வரும்போது ஒரு துணுக்குறலுடன் மெல்லத்தான் சொல்லுவேன்.
ஆகஸ்ட் 15. வகுப்பில் எல்லார் முன்னிலும் தங்கராமு ஐயா என்னைப் பேசச் சொன்னார். சும்மா வீரவசனம் பொங்கி ஓடியது. ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்ற வரி வரும்போது லேசாகச் சிரித்துவிட்டு, முழுதும் பேசி முடித்தேன். தங்கராமு ஐயா, ‘என்ன எடையில பல்லக் காமிக்கிறவன்? ஒழுங்கா பேசமுடியாதா? சுதந்திரம்னா நக்கலா ஒனக்கு?’ என்றார்.
நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்ட்டு (ஓவிய ஆசிரியர்) என்னைக் கூப்பிட்டு, ‘நல்லா பேசறியேப்பா… இதுக்கு முன்னாடி நிறையப் பேசிரிக்கியோ?’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் முதல்ல பேசப்போறேன்’ என்றவுடன், கையில் இருந்த பத்து பைசாவைக் கொடுத்து (1987இல்) ‘வெச்சிக்கோ’ என்றார். உடனடியாக ஓடிப்போய் குச்சி ஐஸ் வாங்கித் தின்றேன். என்னுடன் படித்த நரசிம்மன் என்னையே பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
எல்லாரும் வரிசையாக கலையரங்கத்திற்குச் சென்றோம். பேசப்போகிறவர்களெல்லாம் மேடைக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்கள். நான் ஓரமாக அமர்ந்துகொண்டேன். லேசாக பயம் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பயப்படுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டேன். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். மேடை ஏறினேன். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் என் பார்வையில் பட்டது. எங்கு திரும்பினாலும் வெள்ளை வேட்டியும் நீல அரை டிரவுசரும் பச்சை தாவணியும் கண்ணில் பட, என் நாக்கு எழவே இல்லை. யாராவது ஓடிவந்து ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டாங்களா என்பது போலப் பார்த்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒப்பிக்கத் தொடங்கினேன்.
வகுப்பில், வீட்டில் பேசிய வீர வசனம், உச்ச ஸ்தாதி எதையும் காணோம். கடகடவென ஒப்பித்தேன். ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்கிற வரி வந்தது. அடுத்த வரி வரவில்லை. அந்த வரியிலேயே நின்றுகொண்டிருந்தேன். பால்ராஜ் ஐயா, ‘சரிப்பா, சும்மா கிடைக்கலை. அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற? அதச் சொல்லு மொதல்ல’ என்றார். அவ்வளவுதான். அதைச் சொல்வதையும் நிறுத்திவிட்டேன். கூட்டத்தில் கலகலவென பேச ஆரம்பித்துவிட்டார்கள். பின்னாலிருந்து யாரோ, ‘சரி போ போ’ என்று சொன்னார்கள். கீழிறங்கிவிட்டேன். ஆர்ட்டு தூரத்தில் இருந்து முறைத்தார். நரசிம்மன், ‘இதெல்லாம் தேவையா ஒனக்கு’ என்றான்.
இன்று யோசித்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. [தங்கராமு ஐயா அந்த வருடமே, நான் அவருக்கு பேப்பர் திருத்த கொடுத்த பேனாவைத் திரும்பத் தராமலேயே, மேலே போய்ச்சேர்ந்தார். நரசிம்மன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பால்ராஜ் ஐயா ரிட்டயர் ஆகி பல மாணவர்களுக்கு நன்மை செய்தார்.]
சில தினங்களுக்கு முன்பு சடகோபனின் ‘சிறை அனுபவம்’ என்கிற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். (அகல் வெளியீடு.) அப்போது மீண்டும் இந்த சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் நினைவுக்கு வந்தது. சத்யாகிரஹியான சடகோபன் அவரது அஹிம்சைப் போராட்டத்தின் ஒருபகுதியாகச் சிறைக்குச் சென்றபோது அங்கு அவர் சந்தித்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டு சத்யாகிரஹிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் என்று யோசித்தபோது, ஒரு நெகிழ்வான மனநிலையில் விழுந்தேன்.
சிறையில் அவருக்குத் தரப்பட்ட உணவின் தரம், வேலையின் கடுமை, பட்ட கஷ்டங்கள், சத்யாகிரஹிகள் அல்லாத பிற கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்த சிறிய நூல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சிறையை எமலோகத்தில் இருக்கும் நரகத்துடன் ஒப்பிடுகிறார் சடகோபன். இன்று சிறை எந்த நிலையில் இருக்கும்? நிச்சயம் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவின் நிலைமைகள் பல இடங்களில் கேள்வி கேட்கப்பட்டாலும், சுதந்திரம் என்கிற ஒன்றை அனுபவிக்கும்போது அதன் மேன்மை புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்
.
தலைமுறை
என் தாத்தாவிற்கு தனது எழுபதாவது வயதில் சம்பாதித்து எங்களைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தம் இருந்தது. அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். தனது கடைசிக்கால ஆசிரியப்பணியில் இரண்டு ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். மீண்டும் சம்பாதிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது அவர் உடனே தேர்ந்தெடுத்தது தனிப்பயிற்சியாகத்தான் இருக்கமுடியும். ஒன்றிரண்டு மாதங்களிலேயே நிறைய மாணவர்கள் அவரிடம் தனிப்பயிற்சிக்குச் சேர்ந்தனர். அவர் ஆங்கிலம் நடத்தும் பாணியே அலாதியானது. தனிப்பயிற்சிக்கு வந்த மாணவர்கள் பலருக்கு ஆங்கிலம் என்றாலே என்ன என்று தெரியாது. அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கு என் தாத்தா மேற்கொண்ட முயற்சிகளைச் சொல்லி மாளாது. சளைக்காமல் மீண்டும் மீண்டும் சொல்லித்தருவார். அதுவரை இல்லாத வழக்கமாக காலை நான்கரைக்கும் தனிப்பயிற்சிக்கு வரவேண்டும் என்று சொன்னார். தனிப்பயிற்சிக்கு வந்த மாணவர்களுக்கெல்லாம் ஆச்சரியமும் எரிச்சலும் ஒருசேர எழுந்தது. மாணவர்கள் வீட்டில் அதிசயித்துப்போனார்கள். இதுவரை அந்தப் பகுதியில் – அப்போது மதுரையில் இருந்தோம் – யாரும் காலை நான்கரைக்குத் தனிப்பயிற்சி சொல்லித்தந்ததில்லை. நான்கரைக்குத் தனிப்பயிற்சி ஆரம்பிக்கும். தாத்தா மூன்றரைக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஒரு கா·பியோ டீயோ சாப்பிட்டுவிட்டு, தனிப்பயிற்சி நடக்கும் இடத்தைத் தூற்று, மேஜை விளக்கு வைத்து, நான்கு மணிக்குத் தயாராகிவிடுவார். நான்கரைக்கு வரவேண்டிய பையன்கள் ஐந்துமணிக்குத்தான் வரத் தொடங்குவார்கள். ஆனாலும் என் தாத்தா எல்லா நாளிலும் சரியாக நான்கு மணிக்கே தயாராகிவிடுவார். இது எங்கள் தூக்கத்திற்கும் இடஞ்சலாகத்தான் இருக்கும். ஆனாலும் தாத்தாவை எதிர்த்து ஒன்றும் பேசிவிடமுடியாது. தாத்தா முடிவெடுத்துவிட்டால் அதை மாற்ற யாராலும் முடியாது. சரியோ தவறோ அவர் நினைத்ததை அவர் செய்துகொண்டே இருப்பார். உறுதியுடன் செய்வார். இறுதிவரை செய்வார்.
எங்கேனும் ஊருக்குச் செல்லவேண்டுமென்றால் புகைவண்டியின் நேரத்தைக் கேட்டுக்கொள்வார். வண்டி வரும் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே அங்கிருக்கவேண்டும் என்பது அவர் கொள்கை. ஒருமணி நேரமாவது தாமதமாக வரவேண்டும் என்பது வண்டியின் கொள்கை. அவருடன் ஊருக்குச் செல்லும் தினங்களில் இரண்டு மணிநேரம் புகைவண்டி நிலையத்தில் தவித்துக்கிடப்போம் நேரம் போகாமல். சில சமயம் எரிச்சலில் நான் கத்தியிருக்கிறேன். ஆனாலும் அவர் மசிய மாட்டார். ஒரு மணிநேரத்திற்கு முன்பு போயே ஆகவேண்டும்.
அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரது துணியையும் என் பாட்டியின் துணியையும் அவரே தன் கைப்படத் துவைப்பார். அவர் நடை தளர்ந்து போகும்வரை, கிட்டத்தட்ட 65 ஆண்டுகள், அதாவது அவரது எழுபத்தி எட்டாவது வயது வரை இதைச் செய்தார். துவைப்பது என்றால் வாஷிங் மெஷின் துவைத்தல் அல்ல. பளீரென்ற வெண்மைக்குச் சான்று என்றால் என் தாத்தாவின் வேட்டி, சட்டைகளைத்தான் சுட்டமுடியும். அப்படி ஒரு வெண்மை. ஒரு நாள் அணிந்த துணியை மறுநாள் அணியமாட்டார். ஒரு சிறிய பொட்டாக அழுக்குப் பட்டுவிட்டாலும் அதைத் துவைக்கும்வரை அவருக்கு ஆறாது. கடைசி காலங்களில் அவர் இதையே எங்களிடமும் எதிர்பார்க்க, எங்களால் அப்படிச் செய்யமுடியாமல் போனது. துணிகளைச் சேர்த்தெடுத்து, வாஷிங் மெஷினில் போட்டு, காலரை ஒரு கசக்குக் கசக்குவதே எங்களுக்குத் தெரிந்த துவைக்கும் முறை. இதைத் தாத்தாவால் ஏற்கமுடியவில்லை. ஆனாலும் அவருக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.
தாத்தாவின் குணநலன்கள் எனக்குக் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னிடமில்லை. அவரைப் போல் என்னால் விஷயத்தை முழுமையாக அணுகமுடியவில்லை. (புத்தகம் படிக்கும் விஷயத்தையும் எழுதும் விஷயத்தையும் தவிர!) நானும் சில வருடங்கள் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். ஐந்து மணிக்கு தனிப்பயிற்சி சென்றால் நான்கு அம்பத்தைந்துக்குத்தான் நான் தயாராவேன். தாமதம் இருக்காது. ஆனால் ஏதேனும் சிறு தடங்கல் ஏற்பட்டால் தாமதாகிவிடும் அபாயம் உண்டு. நெருக்கிப் பிடித்துத்தான் தயாராவேன். ஐந்து மணிக்குப் பேருந்து என்றால் நான்கே முக்காலுக்குத்தான் பேருந்து நிலையத்தில் இருப்பதை விரும்புவேன். போகும் வழியில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அந்தப் பேருந்தைப் பிடிக்கமுடியாமல் போய்விடும்.
நான் மிக இரசித்துச் செய்யும் விஷயத்தில் கூட என்னால் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படமுடியவில்லை என்றே நினைக்கிறேன். வயது ஒரு காரணமாக இருக்கலாம். என் தாத்தா என் வயதில் இப்படி இருக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும். அவர் என் வயதில் மிக அதிகமான பொறுப்புடனும் அதிக அர்ப்பணிப்பு உணர்வுடனும்தான் இருந்தார் என்று அவர் உட்பட பலர் சொல்லியிருக்கிறார்கள்.
இது என் தவறு மட்டும்தானா அல்லது இந்தத் தலைமுறையின், அதாவது என் தலைமுறையின் தவறா எனத் தெரியவில்லை. எல்லா விஷயங்களும் கைக்கெட்டும் தொலைவில் இருப்பதால் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோமோ என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் மேலிடும். தாத்தாவிற்குக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருந்தது. அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வை அவர் அளிக்காதிருந்தால் ஒன்றிரண்டு பையன்கள் தனிப்பயிற்சியிலிருந்து விலகும் அபாயம் இருந்தது. அது குடும்பத்தில் வரவு செலவில் உதைக்கும் நிலை இருந்தது. அதனால் அவருக்கு அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் இருந்ததோ என்றும் யோசிக்கிறேன்.
அதை ஒன்றை மட்டுமே காரணமாகச் சொல்லிவிடமுடியாது. அர்ப்பணிப்பு உணர்வு என்பது பிறப்பிலேயே இருக்கும் ஒன்று என்று நினைக்கிறேன். என்னிடமிருக்கும் அலமாரியை ஒருநாள் சுத்தம் செய்வேன். அதன்பின் அதை எப்போதும் சுத்தமாகவே வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தேவையற்ற காகிதங்களைச் சேர விடக்கூடாது என்றும் நினைத்துக்கொள்வேன். ஆனால் என்னால் அதில் வெற்றி பெற முடிந்ததே இல்லை. ஒருவகை சோம்பேறித்தனமும் அலட்சிய மனப்பான்மையும் தலைதூக்க, என் அலமாரி பழைய நிலைக்கே திரும்பும். இப்படி ஒரு அலட்சியத்தையும் சோம்பேறித்தனத்தையும் என் தாத்தாவிடம் பார்த்ததில்லை.
உறங்கும்போது விரிக்கும் விரிப்பில் ஒரு சிறு சுருக்கம்கூட இல்லாதவாறு நான்கு முனைகளையும் இழுத்து இழுத்து விடுவார் என் தாத்தா. நான் ஒருநாள் கூட இதைச் செய்ததில்லை. ஆனால் என் சித்தியின் பையன் இதைச் செய்கிறான். அவனை அறியாமலேயே செய்கிறான். அப்படியானால் (perfection) கனகச்சிதத்தை எதிர்பார்ப்பது பிறப்பிலேயே நிறுவப்படுவதா?
இதே அர்ப்பணிப்பு உணர்வையும் கனகச்சிதத்தையும் நம்முடைய முன்தலைமுறையில் அதிகம் பேரிடம் காணமுடிகிறது என்றே உணர்கிறேன். என் வயதையொத்த பல நண்பர்களும் கொஞ்சம் சீனியர்களும் உள்ளிட்ட நம் தலைமுறையில் பெரும்பாலானவர்கள் என்னையொத்தே இருப்பதைக் காண்கிறேன். ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு உள்ள இடைவெளியில் அர்ப்பணிப்பு உணர்வும் கனகச்சிதத்தை நோக்கிய நகர்தலும் அடிபட்டுப்போனதா? அல்லது தனிமனிதன் சார்ந்த விஷயமா? நம் தலைமுறைகளில் பலர் இன்னும் அதே கனகச்சிதத்தன்மையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும்தான் இருக்கிறார்களா?
எனக்கென்னவோ இல்லை என்றுதான் படுகிறது.
கடந்த தலைமுறையில் உள்ள நமது முன்னோர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வும் செயலாற்றும் தீவிரமும் நம் தலைமுறையில் குறைந்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். நினைத்த மாத்திரத்தில் எல்லாம் கிடைக்கும் வாழ்க்கையும் வறுமையைக் கொஞ்சம் கடந்துவிட்ட வாழ்க்கை முறையும் இந்த அர்ப்பணிப்பு உணர்வைக் குறைத்து நம்மனதுள் அலட்சியத்தன்மையை வளர்த்துவிட்டது என்றேதான் நினைக்கிறேன். இதில் பணத்தின் அருமையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு ரூபாயின் மதிப்பு நமக்குத் தெரிவதே இல்லை. இன்றும் என் அம்மா ஒரு ரூபாயைப் பெரிதாக நினைக்கிறாள் என்று எனக்குத் தெரியும். எனக்கும் அவளுக்குமான இடைவெளி இந்த ஒரு ரூபாயால் மிகப்பெரியதாவதைப் பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் எனக்கும் அந்தப் பொறுப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் வருமா இல்லை என் வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டிருக்குமா என்கிற என் கவலையே எனக்கு இப்போது முதன்மையானதாக இருக்கிறது.
இதை எழுதவேண்டுமென்று மூன்று மாதங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.
எல்லை
துபாயிலிருந்து மஸ்கட்டிற்குச் சாலைவழியே செல்லும் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். நானும் என்னுடன் ஒரு குஜராத்தியும் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்கின்றனவா என்று மீண்டும் ஒருமுறை பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டு Lab-ல் எங்களுடன் வேலைபார்க்கும் சக நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டுக் கிளம்பத்தயாரானோம். என் மேலாளர் என்னை அவர் அறைக்கு அழைத்தார்.
என்னுடன் வரும் குஜராத்தியின் மீது எப்போதும் ஒரு கவனம் வேண்டுமென்றும் அவன் வேலையை ஒழுங்காகச் செய்யமாட்டான்; நீதான் அறிவுறுத்த வேண்டும் என்று சொன்னார். குஜராத்திக்கு சாதாரண வேலை நேரத்தில் வேலை செய்யவே பிடிக்காது. எந்தவொரு வேலையையும் இழுத்து இழுத்து, அதிக வேலை நேரத்தில் (Over Time) முடிப்பதே அவனது இஷ்டம், கொள்கை எல்லாம். அதிகவேலை நேரமில்லாத சம்பளத்தை அவன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
முன்பொருமுறை வேலை குறைவாக இருந்த சமயத்தில் சக நண்பர்கள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொருத்தருடைய சர்வீஸ் எத்தனை வருடம் என்ற கேள்வி வந்தது. எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். குஜராத்தியின் முறை வரும்போது “ஆறு வருடம்” என்றான். இதைக்கேட்ட பாகிஸ்தானி இடைமறித்து, “கமான். எப்படி ஆறு வருஷம் ஆகும்? 9 வருஷம் இல்லையா? ஆறுவருஷம் சர்வீஸ், மூணு வருஷம் OT” என்றான்.
மேலாளர் “குஜராத்தி எப்போதும் அதிக வேலைநேரத்திலேயே கண்ணாக இருப்பான்; நேரத்தில் வேலையை முடிக்கமாட்டான்; கவனம்” என்று சொன்னார். “சரி” என்றேன். ஏதோ யோசித்தவர் “எல்லா குஜராத்திகளுமே இப்படித்தான்” என்றார்.
அலுவலகத் திட்டம் படி எங்கள் வேலை தொடங்கியதென்னவோ நிஜம்தான். ஆனால் அலுவலகத்திலிருந்து என்னை காரில் அள்ளிக்கொண்டு புறப்பட்ட குஜராத்தி எனது அறையில் விட்டுவிட்டு காத்திருக்குமாறு சொல்லிவிட்டுப் போய்விட்டான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து வந்தான். அன்றைய கணக்கின்படி வேலை ஆரம்பிக்காமலேயே மூன்று மணிநேரம் அதிகவேலை நேரம் சேர்த்தாகிவிட்டது. மீட்டர் ஓட ஆரம்பித்தாகிவிட்டது. அதே அளவு அதிகவேலைநேரம் எனக்கும் வரும்! “மன்மதலீலை” மேலாளர் நிலைமை எனக்கு. ஒன்றும் சொல்ல இயலவில்லை.
ஒருவழியாகப் பயணம் தொடங்கியது.
குஜராத்தி அவனது இன்னல்களை, அவன் வாழ்வில் பட்ட கஷ்டங்களை, பணியைத் தெய்வமாக மதிக்கும் அவனது பழக்கத்தை, ஒரு வேலையை எத்தனைச் சீக்கிரம் முடியுமோ அத்தனைச் சீக்கிரம் முடிப்பதே அவனது இலட்சியம் என்பதை எத்தனையாவது முறையாகவோ என்னிடம் சொன்னான். நான் வேலைக்குச் சேர்ந்த பொழுதில் அவன் முதல்முறை இதைச் சொன்னபோது அவன் பக்கம் நியாயம் இருக்கிறதென நினைத்தேன். அவன் சொல்லும் லாகவமும் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கொருதடவை தெய்வத்தைத் துணைக்கழைத்து ‘தான் தவறு செய்தால் ஸ்வாமி நாராயண் சும்மா விடமாட்டார்’ என்றெல்லாம் சொல்லும்போது கேட்பவர் யாருமே அவன் பக்கம் சாய்வார்கள். ஆனால் எனக்குப் பழகிவிட்டது. அவனது முழுமுதல் நோக்கமே “மீட்டரை” ஓட்டுவதே!
துபாய்-ஹட்டா எல்லையில் பலப்பல புதுவிதிகள். நாங்கள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டோம். வெயில் கருணையில்லாமல் 50 டிகிரி செல்ஷியஷில் காய்ந்தது. பாலைவன அனல்காற்றில் மூக்கு எரிந்தது. ஆனால் அதைப் பற்றிய பிரக்ஞையோ கவலையோ குஜராத்திக்கு இருக்கவில்லை. அவனது மீட்டர் ஓடிக்கொண்டிருக்கிறதே!
ஆங்கிலம் என்றாலே எத்தனைக் கிலோ என்று கேட்கும் அராபிகளின் கூட்டத்தில் எங்கள் வேலைக்கான உபகரணங்களைக் (Instruments for Stack emission) காட்டி அவர்களைப் புரியவைப்பதற்குள் குஜராத்திக்கு இன்னொரு ஒரு மணிநேரம் மீட்டர் ஏறிவிட்டிருந்தது. அதே ஒருமணிநேரம் எனது மீட்டரிலும் ஏறும். புகைபோக்கிக்குள் இருக்கும் வாயுவின் திசைவேகத்தைக் காண உதவும் பிடாட் ட்யூபின் [pitot tube] வடிவம் கிட்டத்தட்ட ஒரு ஆயுதம் மாதிரி நீளமான கம்பி போல இருக்கும். அராபிகள் எங்களைச் சந்தேகப்பிரிவில் வைப்பதற்கு அது ஒன்று மட்டுமே
போதுமானதாக இருந்தது.
வளைகுடாவின் பல அரசுடைமை கம்பெனிகளில் காவலாளிகளாகப் [security] பெரும்பாலும் அராபியர்கள்தான் இருப்பார்கள். மருந்துக்கும் ஆங்கிலம் தெரியாது. “மலையாளம் கூடத் தெரியாது!” என்பதும் இங்கே சொல்லப்படவேண்டியதே.
அராபிகளுக்குப் புரியவைக்க “ஹவா காட்சிங் (காற்றுப் பிடிக்க!)” என்று குஜராத்தி சொல்லியதும் கிட்டத்தட்ட அலறினார்கள். அராபி தெரியாதா என்று அவர்கள் கேட்க, “நான் அராபிதான் பேசினேன்” என்று சொல்ல வாயெடுத்த குஜராத்தியை ஓரம்கட்டிவிட்டு, “மா·பி அராபி, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று பதிலுக்குக் கேட்டேன். அவர்கள் “மா·பி இங்கிலீஷ்” என்றார்கள். குஜராத்தியின் மீட்டர் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒருவழியாக எல்லையைக் கடந்தோம்.
குஜராத்தி ஆரம்பித்தான். அராபிகள் எல்லாருமே முட்டாள்கள் என்றான். நான் ஆமோதித்தேன். இந்தியர்களே புத்திசாலிகள் என்றான். ஆமோதித்தேன். இந்தியர்கள் இல்லாமல் இந்தப் பாலைவனம் சொர்க்கபூமியாக மாறியிருக்குமா என்றான். பாகிஸ்தானிகளையும், இலங்கைக்காரர்களையும், பங்களாதேசிகளையும் பிலிப்பைன்ஸையும் விட்டுவிட்டாயே என்றேன். ஏதோ போனால் போகட்டும் என்று எனக்காக ஒப்புக்கொண்டான். “ஸ்ரீலங்கா தமிழ்-தமிழ் சேம்-சேம் சானல்?” என்றான். சிரித்தேன்.
வண்டி 130கி.மீ. வேகத்தில் எகிறிக்கொண்டிருந்தது. எல்லையிலிருந்து சோஹாரை 35 நிமிடத்தில்
அடைந்துவிட்டிருந்தோம். குஜராத்தியின் வண்டி ஒடிக்கும்வேகம் எனக்குப் புதுமையாக இருந்தது. மீட்டரில் ஒரு அரைமணி நேரத்தை எப்படிக் குறைக்க அவனுக்கு மனம் வந்தது என்பது பிடிபடவேயில்லை. அப்போதுதான் தெரிந்தது, சோஹாரில் ஒரு குஜராத்தியின் கடையில் மதிய உணவு அருந்த வருவதாக நேரம் குறித்துவைத்திருக்கிறான் என்று. குஜராத்திகளின் கணக்கு மற்றவர்களின் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும் என்று பாகிஸ்தானி சொன்ன நினைவு வந்தது.
குஜராத்தி எந்தவொரு வேகமும் இல்லாமல் மெதுவாக உணவை இரசித்து உண்டான். ரெஸ்டாரண்ட் உரிமையாளருடன் அரைமணி நேரம் குஜராத்தியில் பேசிக்கொண்டிருந்தான். கடையின் சிப்பந்தி ஒருவர் தமிழர். அவரும் நானும் கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். அவர் எனக்காக சிறிதுநேரம் ஜெயா டிவி வைத்தார். குஜராத்தியின்
மீட்டரும் எனது மீட்டரும் ஒரு மணிநேரத்தை மேலும் ஏற்றிக்கொண்டது.
சோஹாரிலிருந்து மஸ்கட் கிளம்பினோம். இடையில் இரண்டு இடங்களில் காரை நிறுத்திச் சிறிது தூங்கினான் குஜராத்தி. மஸ்கட் கேரி·போர் [carre four] சென்று அங்கு ஒரு அரை மணிநேரம் கழித்தோம். ஒருவழியாக நாங்கள் சேரவேண்டிய நிஸ்வாவை (மஸ்கட்டிலிருந்து 184 கி.மீ.) அடைந்தபோது எங்கள் மீட்டரில் கிட்டத்தட்ட 10 மணிநேரம் ஏறிவிட்டிருந்தது. குஜராத்தி மிகவும் சந்தோஷப்பட்டான். ஸ்வாமி நாராயண்-க்கு நன்றி சொல்லிக்கொண்டான்.
நாங்கள் வேலைக்குச் சென்றிருந்த கம்பெனி ஒதுக்கியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இளைப்பாறினோம். மறுநாள் காலையில் வேலைக்குத் தயாரானோம். காலையில் 8.00 மணிக்கு கம்பெனியில் இருக்கவேண்டும். அதில் மீட்டரில் ஏற்ற ஒன்றும் வாய்ப்பில்லை என்று குஜராத்திக்குத் தெரியும். 7.30க்கெல்லாம் தயாராகி ஒரு சேட்டன் கடையில் புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டுவிட்டு காரில் கிளம்பினோம். காரை இயக்கினான் குஜராத்தி. திடீரென்று ஏதோ நினைத்தவன், ஒரு நிமிடம் ஒரு ·போன் செய்துவிட்டு வருகிறேன் என்று சாவியை காரிலேயே வைத்துவிட்டுக் கீழே இறங்கிப் போனான். மூன்று நிமிடங்கள் பேசியிருப்பான். காருக்குள் இருக்கும் என்னை சைகையால் அழைத்தான். காரை விட்டு இறங்கி வந்து நானும் பேசினேன். மேலாளரிடம் எங்கள் பயணத்தைப் பற்றிச் சொல்வதற்காக அவரை அழைத்திருக்கிறான் குஜராத்தி. பேசி முடித்துவிட்டு மீண்டும் காருக்குள் ஏறச் செல்லும்போது காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.
இறங்கும்போது கண்ணாடிகளை ஏற்றிவிட்டு வெளியிலிருந்து திறக்கமுடியாதவாறு நான் அடைத்திருக்கிறேன். வண்டியின் சாவி காருக்குள். குஜராத்தி செம டென்ஷன் ஆகிவிட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் அரைமணி நேரத்தில் கம்பெனியில் இருக்கவேண்டும். புலம்பிக்கொண்டே குஜராத்தி அங்குமிங்கும் ஓடினான். டீக்கடைச் சேட்டன் போலீஸ¤க்குச் சொல்வதே நல்லது என்றான்.
நான் தொலைபேசியில் மஸ்கட்டில் இருக்கும் அத்தைப் பையனைக் கூப்பிட்டேன். போலீஸ¤க்குப் போ என்றான். அது எனக்குத் தெரியும் என்று சொல்லி ·போனைத் துண்டித்தேன். துண்டிக்கும்போது “கல்லுப்பட்டிக்காரங்க கிட்ட கேட்டா இப்படித்தான், ஒண்ணத்துக்கும் ஆவாத பதிலே வரும்” என்றேன்.
அதற்குள் குஜராத்தி ஒரு ஓமானியைக் கூட்டிக்கொண்டு வந்தான். ஓமானி கையில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவரும், நெம்புக் கம்பியும் வைத்திருந்தான். இரண்டு நிமிடங்களில் கதவைத் திறந்தான். ஸ்க்ரூ ட்ரைவரை வைத்துக் கதவை லேசாக நெம்பிக்கொண்டு, கம்பியை உள்ளே நுழைத்து லாக்கை எடுத்துவிட்டான். கதவு திறந்துகொண்டது. எனக்கும் குஜராத்திக்கும் உயிர் வந்தது. அவனுக்கு ஐந்து ரியால் கொடுத்தோம். நிஜச்சாவி இருந்தால் கூட இத்தனைச் சீக்கிரம் திறந்திருக்க முடியாது என்று அவனை வாழ்த்தினேன். குஜராத்தி “இப்ப பேசு” என்றான். ஓமானியிடம் திரும்பி நன்றி சொல்லி அவனை அணைத்துக்கொண்டான்.
மீண்டும் அத்தைப் பையனைக் கூப்பிட்டேன். கதவைத் திறந்த விஷயத்தைச் சொன்னேன். போலீஸ¤க்குப் போவதே நேரான வழியென்றும் அதைத்தான் தான் சொன்னதாகவும் சொன்னான். இப்படி பல ஓமானிகள் ஐந்து நிமிடத்தில் திறந்துவிடுவதாகவும் மீண்டும் காரை அதே இடத்தில் நிறுத்தவேண்டாம் என்றும் சொன்னான். கடைசியாக “ஓமானிகள் என்ன வேணா செய்வாங்க” என்றான்.
குஜராத்தியிடம் என் அத்தைப்பையன் சொன்னதைச் சொன்னேன். “ஆஹாம்! தமிழ் புத்திசாலிகள்” என்று சொல்லிவிட்டு “இனிமேல் காரை அங்கே நிறுத்தக்கூடாது” என்றான். காலை நேரத்தில் வந்து உதவிவிட்டுப் போன ஓமானிக்கு இது தேவைதான்.
ஐந்து நாள்கள் வேலை. மலையாளிகள் என்றாலே மோசம் என்று தினமும் இரண்டு முறையாவது சொல்வான் குஜராத்தி. அந்தக் கம்பெனியில் இருக்கும் இரண்டு மலையாளிகள் மிக நல்லவர்களாக இருந்தார்கள் என்பதைக் குஜராத்தியால் ஏற்கவே முடியவில்லை. மலையாளிகளை நம்பவேமுடியாது, முன்னாடி ஒன்று பேசி பின்னால் ஒன்று பேசுவார்கள் என்றான். குஜராத்திகளை நம்பாதே என்று என் மேலாளர் மலையாளி சொன்னது நினைவுக்கு வந்தது. குஜராத்தி “தமிழர்கள் அச்சா” என்றான். எல்லாவற்றையும் ஆமோதித்துக்கொண்டே இருந்தேன். அவனிமிருந்து தப்பிக்க அதுவே வழி. இல்லையென்றால் கையிலிருக்கும் நாவல்களைப் படிக்க நேரமிருக்காது. அதுபோக ஒன்றிரண்டு கவிதைகளாவது எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
ஐந்து நாள் வேலையை முடித்துக்கொண்டு மஸ்கட்டில் அத்தைப்பையனைச் சந்தித்துவிட்டு மீண்டும் துபாய் திரும்பினோம். குஜராத்தி அதிகவேலை நேரம் எத்தனை என்று கணக்கிடச் சொன்னான். ஐந்து நாள்களில் 44 மணிநேரம் அதிக வேலை நேரம் வந்திருந்தது. இன்னும் ஒரு ஆறு மணி நேரம் கூட்டவேண்டும் என்றான் குஜராத்தி.
மேலாளர் பற்றிப் பேச்சுத் திரும்பியது. மீண்டும் மலையாளிகள் புராணம் ஆரம்பித்தான். தமிழர்களை வாயார வாழ்த்தினான். நேரம் கிடைக்கும்போது மலையாளிகளிடத்தில் “தமிழர்கள் ரூட்[rude]. கர்வம் அதிகமிக்கவர்கள்” என்று அவன் சொன்ன விஷயங்கள் என் காதுக்குப் பலமுறை எட்டியிருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவன் சொல்வதை ஆமோதிக்கத் தயங்கவில்லை. இல்லையென்றால் பெரிய பெரிய கதைகளை ஆரம்பித்துவிடுவான். என்னால் பொறுக்க இயலாது.
மீண்டும் ஹட்டா – துபாய் எல்லையை அடைந்தோம். விசா எக்ஸிட் அடிக்க வரிசையில் நின்றிருந்தோம். எங்கள் வரிசையில் எங்களுக்குப் பின் நின்றிருந்த ஒரு அமெரிக்கன் வரிசையைப் புறக்கணித்துவிட்டு, முன்னுக்கு வந்து, எக்ஸிட் வாங்கிப்போனான். காத்திருந்த குஜராத்தி புலம்பத் தொடங்கிவிட்டான். இந்த அநியாயத்தை அராபிகள் கேட்பதே இல்லை; ஐரோப்பியர்கள் என்றால் அவர்களுக்குத் தனிச்சலுகைதான் என்றான். அடுத்த வரியாக, ஐரோப்பியர்களுக்குத் தங்கள் மனதில் தங்களைப் பற்றி எப்போதுமே உயர்ந்த எண்ணம்தான், எல்லா ஐரோப்பியர்களுமே இப்படித்தான் என்றான். நான் ஆமாம் என்றேன்.
நாங்கள் வேலைக்காகக் கொண்டு போயிருந்த உபகரணங்களைச் சோதிக்க ஆரம்பித்தான் அராபி ஒருவன். நிறையக் கேள்விகள் கேட்டான். எல்லாமே அராபியில் இருந்தன. எங்களால் பதில் அளிக்கவே முடியவில்லை. குஜராத்தி சிரித்துச் சிரித்து மழுப்பினான். அப்போது குஜராத்தியைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லத் தொடங்கும்போதெல்லாம் அராபி “மா·பி இங்கிலீஷ்” என்று சொல்லி என்னை ஒரேடியாக நிராகரித்தான். ஒரு நிலைக்கு மேல் குஜராத்திக்குக் கோபம் வந்துவிட்டது. கொஞ்சம் சூடாகிவிட்டான். ஆங்கிலத்தில் அவன் படபடக்க ஆரம்பிக்க, அந்தக் கட்டத்தில் இருந்த மற்ற அராபிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். எல்லோரும் சேர்ந்து குஜராத்தியை வறுத்தெடுத்து, கடைசித் தீர்ப்பாக “எல்லா இந்தியர்களுமே இப்படித்தான். பொறுமையில்லாதவர்கள். மேலும் இந்தியர்கள் கரப்பான்பூச்சிகள்” என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு மேல் எங்களால் ஒன்றும் பேச இயலவில்லை. அமைதியாக இருந்துவிட்டு, பல விளக்கங்களுக்குப் பின் விசா – எக்ஸிட் வாங்கிக்கொண்டு காரைக் கிளப்பினோம்.
எனது எண்ணம் முழுவதும்
* யார் யார் எப்படி? இப்படி ஒரு இனத்தை வரையறுக்க இயலுமா?
* பொதுவான ஒரு கருத்து எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொருந்துமா? எல்லாத் தனிமனிதர்களும் அவரவர்கள் அளவில் வேறல்லவா? பின் எப்படிப் பொதுப்படுத்த?
* ஒரு ஐரோப்பியன் போல் குணமுள்ள தமிழனோ ஒரு குஜராத்தி போல் குணமுள்ள மலையாளியோ இருந்தே தீர்வார்கள் அல்லவா?
* ஒரு இந்தியன் போன்ற அமெரிக்கனின் பொறுமைக்கு என்ன பெயர்? ஒரு அமெரிக்கத்தனம் கொண்ட இந்தியத் தன்னுணர்வுக்கு என்ன பெயர்?
என்பதிலேயே இருந்தது.
குஜராத்தி வண்டியை ஓரமாக நிழலில் நிறுத்திவிட்டு, “ஹே ஸ்வாமி நாராயண்” என்று மறக்காமல் சொல்லிவிட்டு, அரை மணி நேரம் தூங்கப்போவதாக என்னிடம் சொன்னான். அவனது மீட்டர் ஓடத்தொடங்கியது. அந்த மீட்டரில் எனக்கும் பங்குண்டு.
துபாய் – மஸ்கட்டின் எல்லை என்று சொல்லப்படும் ஒன்றை இன்னும் சிறிது நேரத்தில் கடப்போம்.
நையாண்டி
அச்சுதானந்தனும் ஏ.கே.ஆண்டனியும் ஏ.வி.பி.பரதனும் ரமேஷ் சென்னிதாலாவும் அடிக்கடி நம் வீட்டு வரவேற்பரைக்கு வந்துபோவார்கள். அவர்களைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களைத் தேடிப்பிடித்து நடிக்கவைக்கிறார்கள். அவர்களது ஒப்பனையும் நடிப்பும் மிமிக்கிரியும் அசலான தலைவர்களை அப்படியே கண்முன்நிறுத்தும்.
ஆரம்பத்தில் மலையாளத் தொலைக்காட்சிகளைப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. நம்பவே இயலாத ஒன்று என் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நான் நம்பினேன்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் ராமதாஸ¤ம் வைகோவும் இப்படி வேற்று மனிதர்கள் வாயிலாக நம் வீட்டுக்கு வந்துபோவதை என்னால் எப்படி நினைத்துப்பார்க்க முடியும்? அப்படியொரு சூழலில் வளர்ந்த தமிழனாதலால் இதுபோன்ற அரசியல் தலைவர்கள் மீதான நையாண்டிக்காட்சிகள் பெரும் அதிசயமாகத்தான் தோன்றின.
ஆசியாநெட்டில் ஒளிபரப்பாகும் நையாண்டிக் காட்சிகளில் ஏ.கே.ஆண்டனியும் கருணாகரனும் அச்சுதாநந்தனும் தனித்தனியே காரசாரமாக திட்டிக்கொள்கிறார்கள். ரமேஷ் சென்னிதாலா ஏ.கே.ஆண்டனியையும் கருணாகரனையும் சமாதானப்படுத்த கேரளம் வருகிறார். ரமேஷ் சென்னிதாலா முன்னர் கருணாகரனும் ஏ.கே.ஆணடனியும் பரஸ்பரம் மீண்டும் திட்டிக்கொள்ளத் தொடங்க செய்யும் வழியறியாது ஓட்டமெடுக்கிறார் ரமேஷ் சென்னிதாலா. அன்றைய தினத்தின் மாலையில் ஒரு வீட்டின் மாடியில் அச்சுதானந்தனும் ஏ.கே.ஆண்டனியும் மிக நெருங்கிய நண்பர்களாக, உல்லாசமாகப் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் பொழுதைக் கழிக்கிறார்கள். “எண்டே எல்லாம் எல்லாம் அல்லே” என்று பாடிக்கொண்டு சைக்கிளில் போகும்போது முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.
வெளியில் பகையுடனும் உள்ளுக்குள் பெரும் நட்புடனும் இருக்கிறார்கள் என்று சித்தரிக்கும் அந்தக் காட்சியின் நகைச்சுவையின் பின்னே ஒரு விமர்சனத்தை வைக்கிறார்களே என்று கேரள அரசியல்வாதிகள் யாரும் யோசிப்பதில்லை. இன்று வரை அந்த “சினிமாலா” நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அச்சுதானந்தனோ ஆண்டனியோ கருணாகரனோ நையாண்டி செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த சினிமாலா நிகழ்ச்சி வெற்றிவிழாவில் பேசிய கேரள அரசியல்வாதிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சி தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியென்றும் ஆரம்பத்தில் காணும்போது சிறிய அதிர்ச்சி
இருந்ததாகவும் பின்னர் பழகிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல. தமிழில் முன்பு நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக வைத்து ஆடியோ கேசட்டுகள் வந்ததுபோல இப்போதும் கேரளத்தில் அரசியல் நையாண்டியை வைத்து ஆடியோ கேசட்டுகள் வருகின்றன. இன்று கேட்டுக்கொண்டிருந்த ஆடியோ கேசட் ஒன்றில் இதேபோல கேரளத்தில் முன்னணி அரசியல்வாதிகள் யாவரும் நையாண்டி செய்யப்பட்டிருந்தனர்.
நையாண்டியை நகைச்சுவையின் அடிப்படையில் மட்டுமே அணுகவேண்டும் என்கிற தெளிவு எத்தனை தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்குமென்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் விமர்சிக்காத வகையில் (இது பற்றிக் கடைசியில்) இதுபோன்ற நையாண்டி நிகழ்ச்சிகளில் தவறேதும் இருப்பதாகப் புலப்படவில்லை.
ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் மணிரத்னத்தையும் வைரமுத்துவையும் இதுபோல நையாண்டிக்குள்ளாக்குபவர்கள் அதைக் கொஞ்சம் விரித்தெடுத்து தமிழகத்தின் அரசியல் தலைவர்களூக்கும் முடிந்தால் இலக்கியவாதிகளுக்கும் பரப்பவேண்டும்.
தமிழக அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் நையாண்டி, நகைச்சுவைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். எத்தனைத்தூரம் தீவிர இலக்கியவாதியாக ஒருவர் செயல்பட்டாலும் இலக்கியம் தவிர்த்த பிற வேளைகளில் அவர் ஓர் மனிதரே. அவருக்கும் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வுகள் இருக்கக்கூடும். அதைத் தொடும் நையாண்டிகளை அவர்கள் எதிர்க்கக்கூடாது. இதுவே அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
அரசியல்வாதிகள் ஒருவித பணபலத்திற்கும் பதவிபலத்திற்கும் உட்பட்டு, நையாண்டியாகக்கூட தங்கள் மீது விமர்சனங்கள் வரக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது தமிழக அரசியல்வாதிகள் தங்கள் முன்னிறுத்துக்கொள்ளும் போக்கு.
நையாண்டிகளை முன்வைக்கும் படைப்பாளிகளும் நையாண்டி தனிப்பட்ட தாக்காக மாறாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். கேரளத்தின் நகைச்சுவை ஆடியோ கேசட் ஒன்றில் ஒரு தமிழக அரசியல்வாதி “ஆனை போல தடி” என்று விமர்சிக்கப்பட்டதாகவும் அப்படி விமர்சித்தவர் ஒரு ஷ¥ட்டிங் சமயம் தமிழ்நாடு வந்தபோது “நன்கு” கவனிக்கப்பட்டதாகவும் அறிந்தேன். நையாண்டிகளை அவரவர்களின் துறையோடும் துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோடும் வைத்துக்கொள்வதுதான் சரி.
உடல்வாகைக் கேவலமாகச் சித்தரிக்க முயலும் இவை போன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதும் கவனத்திற்கொள்ளவேண்டியதே.
துக்ளக்கில் “சத்யா” எழுதும் நையாண்டிக்கட்டுரைகளில் சில ஆழமான நகைச்சுவை உணர்வைக்கொண்டதாக இருக்கும்.
குழுமங்களிலும் வலைகளிலும் இவைபோன்ற நையாண்டிக்கட்டுரைகள் வருவதில்லை. குழுமங்களிலும் வலைகளிலும் எழுதும்போது இந்த நையாண்டியை இலக்கியவாதிகளுக்கும் சேர்த்தே எழுதலாம். எழுதும்போது கவனத்தில் வைக்கவேண்டியது சுயவிருப்பு வெறுப்பை எழுத்தில் கொட்டாதிருப்பது, தனிப்பட்ட தாக்குதலைச் செய்யாமல் இருப்பது போன்றவையே.
யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையோ அப்படி யாரும் நையாண்டிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஏனென்றால் நையாண்டியும் ஒருவகை விமர்சனம்தான். நையாண்டிகள் எந்தவொரு வக்கிரத்தையும் அடிப்படையாகக் கொள்ளாதிருக்கும் பட்சத்தில் அவை வரவேற்கப்படவேண்டியவையே.
நையாண்டிக்கட்டுரைகள் அடிப்படையில் நகைச்சுவை உணர்வை முன்வைத்தாலும் அவை நையாண்டி செய்யப்படுவர் எப்படி மக்கள் மன்றத்தில் அறியப்படுகிறார் என்கிற அறிதலையும் முன்வைக்கின்றன. ஆரம்பத்தில் நையாண்டியை மட்டும் கணக்கில் கொள்ளும் வாசகர்கள்/பார்வையாளர்கள் அந்த நகைச்சுவைக்குப் பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நகைச்சுவைக்கு ஏன் இந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அவர்களுக்கு அங்கே ஒரு விடை கிடைக்கிறது. அந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் அப்படித்தான் அறியப்பட்டிருக்கிறார். அந்த அரசியல்வாதி/இலக்கியவாதி/நடிகர் தன் மனதில்
தங்களைப் பற்றிய வேறு ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் அறியப்பட்டதற்கும் அறியப்பட விரும்புவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளலாம். இங்கேதான் நையாண்டி நிகழ்ச்சிகளின் வெற்றி இருக்கிறது. இப்படி ஒரு அரசியல்வாதியோ இலக்கியவாதியோ தன்னை அறிந்துகொள்ள இதுதான் வழியா என்றால் இதுவும் ஒரு வழி.
நையாண்டிக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள் தமிழகத்தில் இன்னும் பரவலாக்கப்படவேண்டும். அதற்கான சகிப்புத்தன்மை அரசியல்வாதிகளிடமும் இலக்கியவாதிகளிடமும் உடனே தோன்றிவிடாது. அதை நையாண்டிக்கட்டுரையாளகளும் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்களுமே ஏற்படுத்தவேண்டும்.
இணையத்தில் ஆரம்பத்தில் ஒருசில கட்டுரைகள் இப்படி எழுதப்பட்டிருந்தாலும் (பொய்யப்பன் செய்திகள்) பின்பு அவை நின்றுபோய்விட்டன. பின்னர் எழுதப்பட்ட ஒன்றிரண்டு ஸ்கிட்டுகளும் அந்த அந்தக் குழுமத்தின் உறுப்பினர்களை மையமாக வைத்து மட்டும் எழுதப்பட்ட “சீசன் ஸ்கிட்டுகளாக” அமைந்துவிட்டன. இன்றிருக்கும் நையாண்டிக்கட்டுரைகளின் வெறுமையைத் தீர்க்க குழுமத்திற்கு ஒருவர் முன்வருதல் அவசியம்.
அவை நகைச்சுவைப் பூர்வமாக கருத்தை முன்வைப்பதற்கும் அதிலிருந்து ஒரு சேரிய விவாதம் தொடங்குவதற்கும் வழிவகுக்கும்.
கும்பகோணம் தீ விபத்து – பெருத்த சோகம்
இன்று ஒரு சோகமான நாள். கும்பகோணத்தில் பள்ளியொன்றில் குழந்தைகள் தீக்கிரையாக்கியிருக்கின்றன. தொலைக்காட்சியில் கருகிய நிலையில் குழந்தைகளைப் பார்த்தும் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களைப் பார்த்தும் மனது வெம்பிப்போனது.

ஏற்கனவே ஒரு தீக்கிரையான சம்பவம் திருவரங்கத்தில் நடந்தபின்பும் எத்தனைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறி. எத்தனையோ சத்துணவுக்கூடங்கள் இன்னும் கூரை வேய்ந்த கூடத்தில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. நிறைய திரையரங்குகளிலும் கூரை போட்ட ஸ்டால்கள் இருக்கின்றன. இறந்த பின்பு அஞ்சலியுடன் தலைக்கு ஓர் இலட்சம் என அறிவிக்கும் அரசு உயிருடன் இருக்கும் மனிதர்களின் பாதுகாப்புப் பற்றி ஆலோசிக்குமா?
நான் படித்த பள்ளிகளெல்லாம் விஸ்தாரமான அறைகளுடன் இருந்தன. அவையெல்லாம் பெரும்பாலும் அரசு பள்ளிகள். மெட்ரிகுலேசன் பள்ளிகள் வந்தபின்பே பெரிய வீட்டைப் பிடித்து அதில் பள்ளியை ஓட்டும் நிலை ஆரம்பமானது. பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசு ஒரு பள்ளிக்கான அடிப்படை வசதிகளில், அதன் பராமரிப்பில் தீவிரம் காட்டியே ஆகவேண்டும்.
இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலியும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.
God is with us…
நேற்று கேள்விப்பட்ட விஷயமொன்று.
பெண்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது, ஒரு குழுவாகப் பார்க்குமிடத்துப் போதாது என்றாலும் சில தனிப்பட்ட பெண்களின் சுயப்பிரக்ஞை ஆச்சரியமளிப்பதாகவும் சந்தோஷமேற்படுத்துவதாகவும் உள்ளது.
எங்கள் ராயர் ஜாதியில் (எனக்கு ஜாதி நம்பிக்கையில்லை யென்றாலும் நான் என்ன ஜாதியென்று சில சமயங்களில் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைச் சொல்லும்போது கல்யாண்ஜியின் நல்ல கவிதையொன்று நினைவு வருகிறது.) நல்ல மாப்பிள்ளைகள் அமைவது கஷ்டமென்பார்கள். சிலர் ஆசிரியர்களாக இருக்கலாம். வேறு சிலர் அரசாங்கப்பணிகளில். பெரும்பாலானோர் என்னவோ சமையல் தொழிலில் மற்றும் கோவில் பூஜைகளில்தான். இன்றுவரை இந்த நிலைமை அதிகம் மாறியதாகத் தெரியவில்லை.இப்படி சமையலோ, கோவில் பூஜையோ அல்லாத நல்ல மாப்பிள்ளையொருவர் என் நண்பரின் அண்ணனாகிப்போனார்.
நண்பர் மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்கவர். ஒரு வகையில் எனக்கு இருப்பதாக நான் நினைத்துக்கொள்ளும் இலக்கிய ஆர்வம் கூட அவரிடமிருந்து எனக்கு வந்ததுதானோ என நான் யோசிப்பதுண்டு. நண்பரின் மீது நான் வைத்திருந்த “மாதிரி” (Model) என்ற பிம்பம் அவரது சில தவறான முடிவுகளால் உடைந்தது, இத்தனைக்கும் அந்த முடிவுகளின் போதே அது தவறென்று நான் சொல்லியும் அவர் ஏற்காததால் அந்தப் பிம்பம் உடைந்ததென்றே நினைக்கிறேன். அது ஒருபுறமிருக்கட்டும்.
நிஜமாகவே இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பதால் என் கடுமையான குற்றச்சாட்டு மற்றும் அவர் மீதான தனி நபர் விமர்சனம் எல்லாவற்றையும் ஒரு சிரித்த புன்முகத்தோடு எடுத்துக்கொள்பவர். நிஜ இலக்கியவாதிகள் சண்டையிட்ட மறுநாளே பூங்கொத்துக் கொடுத்துக்கொள்வர் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. 🙂 அப்படி அற்றவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாகத்தான் இருக்கமுடியும் என்பதும் இன்னொரு அ.மு.ந. 🙂
நண்பரின் அண்ணனுக்குக்காகப் பெண் பார்க்கப்போனார்கள். நண்பரின் அண்ணா நான் மேலே சொன்ன சமையல் மற்றும் பூஜைப்பணியில் இல்லாததால் பெண் தகைவதில் அத்தனைச் சிரமமிருக்காதென்பதே நண்பரின் குடும்ப நம்பிக்கையாக இருந்தது. எனது தனிப்பட்ட நம்பிக்கையும் அதுவாகத்தான் இருந்தது.
நேற்று நண்பரிடமிருந்து “God is with us!” என்று ஒரு தலைப்பிட்டுக் கடிதம் வந்தது. ஸ்பேம் மெயிலோ என்ற சந்தேகத்துடனேதான் திறந்தேன். பிரித்துப் படிக்காமல் போயிருந்தால் நல்லதொரு நிகழ்ச்சியினைப் படிக்காமற் போயிருப்பேன்.
“அன்பார்ந்த ஹரி, (என்னை என் சொந்தக்காரர்கள் ஹரி என்றேயழைப்பார்கள்)
நேற்றுப் பெண் பார்க்கப் போயிருந்தோம். எல்லாருக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. அண்ணா உடனே பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டான். அவன் முகத்தில் வெட்கமும் சந்தோஷமும் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. என் மாமா பெண்ணும் பையனும் தனியாகப் பேசட்டும் என்று சொன்னார். அண்ணா “எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லை, எனக்குப்பிடித்திருக்கிறது” என்றான். ஆனால் பெண் பேசவேண்டுமென்று சொன்னாள். எல்லாரும் கொஞ்சம் ஆச்சரியப்படும்போதே தீர்மானமாகப் பெண் எல்லார் முன்னிலையும் பேசத்தொடங்கினாள்.
“எனக்கு ஹிந்துமத நம்பிக்கைகளிலே நம்பிக்கையில்லை. நான் எந்த ஹிந்துக் கடவுள்களையும் தொழமாட்டேன். கோவில்களுக்கு வரமாட்டேன். பூஜை, புனஸ்கார வகையறாக்கள் ஆகவே ஆகாது.”
அண்ணா கொஞ்சம் அரண்டுவிட்டான் என்றேதான் சொல்லவேண்டும். “ஏன்” என்றான்.
“எனக்குப் பிடிக்கலை”
“அப்ப யாரைத்தான் கும்பிடுவீங்க?”
“ஜீஸஸ். எனக்குக் கிறிஸ்தவத்துலதான் நம்பிக்கை. I like Jesus!”
“ஓ”
அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அண்ணா இதைக் கேட்ட பின்பு ஒரேடியாக மறுத்துவிட்டான். அங்கேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நிலைமை இரசாபாசமாவதற்குள் வீடு வந்துவிட்டோம்.
நல்லவேளை! அந்தப் பெண் தைரியமாக இப்போதே சொன்னாள். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? Thank God!.
உன் வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்….. ”
என்று தொடர்ந்தது அக்கடிதம்.
என் நண்பரின் அண்ணாவின் மறுப்பில் எனக்குப் பேதமில்லை. அவர் துணைவி எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பது அவர் உரிமை. என் நண்பர் God is with us” என்று தலைப்பிட்டிருந்ததையும் புரிந்துகொள்ளமுடிந்தது. நண்பரின் அண்ணாவின் அன்றைய மனநிலை எப்படி இருந்திருக்குமென்பதையும் சில நிமிடங்கள் யோசித்தேந்தான். ஆனால் அதையெல்லாம் மீறி வியப்பில் ஆழ்த்தியது அந்தப் பெண்ணின் உறுதியும் தெளிவும்.
சமையற்காரர்கள் மற்றும் கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு மத்தியில் ஓர் அரசாங்கப் பணி மாப்பிள்ளைக்காக அந்தப் பெண்ணை எத்தனைச் சொல்லிச் சொல்லித் தயார்ப்படுத்தியிருப்பார்கள்? அத்தனையும் தூள் தூள்!
ஆடைக்குறைப்புப் புதுமைப் பெண்களுக்கு மத்தியில் நிஜத்திலேயே ஒரு புதுமைப்பெண். அண்ணாவின் திருமணம் நிச்சயமாகாமற் போனதே என்ற நண்பரின் வருத்தத்தில் கூட என்னைப் பங்குகொள்ள வைக்கமுடியாமற் செய்தது அந்த முகம் தெரியாத பெண்ணின் துணிவும் தெளிவும்.
வாழ்க வளமுடன்.
(இந்த உள்ளிடுகையைத் தொடர்ந்து நான் வலைப்பதிவிற்கென்றே தனியாக எழுதுவதில்லையென்ற, உலகைப் பீடித்திருந்த பெருநோய் அகன்றது!)