Archive for பொது

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02)

ஒரு பதிப்பாளர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். என்ன காரணமென்றால், கருப்பும் வெள்ளையுமான உருவங்களற்ற கோடுகளில் உருவங்கள் நெளிய, காவல்துறை அதிகாரி சொல்கிறார், ‘புலி வாழ்க!’ என்னும் புத்தகத்தை வெளியிட்டதற்காகவும் அதை மறைத்துவைத்து சமையல் புத்தகங்களோடு விற்றதற்காகவும் என்று. பின்பு பதிப்பாளரின் பேட்டி. அதே கருப்பு வெள்ளை உருவங்கள் நெளிய கோடுகளில் பேசுகிறார். ‘நான் சமையல் புத்தகம் விக்கிறவங்க. புளிகளோட நன்மைகள்னு ஒரு டாக்டர் எழுதின புத்தகம் அது. சரி, புது கோணமா இருக்கேன்னு போட்டேன். பாவிப்பய அட்டை போட்ட டிசைனர் தமிழ்ல கோட் அடிச்சவன் போல இருக்கு. புளி வாழ்கன்னு போடறதுக்கு புலி வாழ்கன்னு போட்டான்…’ இன்னும் அவர் என்னவோ சொல்ல வருவதற்குள் தூக்கம் கலைந்து எழுந்தேன். என்ன ஒரு கொடுங்கனவு!

நிஜத்திற்கு வருவோம். நேற்று சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஊரெங்கும் எல்லா இடங்களிலும் வண்டிகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளில் போலிஸ் பாதுகாப்புடன் பெட்ரொல் வழங்கப்பட்டது. ஆயில் அரசியலெல்லாம் இல்லை. லாரி ஸ்டிரைக்! பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள்? பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு! குளோபல் வார்மிங், உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வந்தால் மட்டுமே சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது. இன்று ஒருநாள் இந்நிலை நீடித்தால் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.

கூட்டம் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கேண்டீனிலும் கூட்டமே இல்லை. சாப்பிட ஐட்டங்களும் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். 🙂 அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் நான் ஏன் அத்தனை பரபரப்பாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை! புகைப்படங்கள் எடுக்கக்கூட கை ஒழியவில்லை. அதனால் இன்று புகைப்படங்களுக்கு விடுமுறை. ஆனால் கேமரா கவிஞர் சேதுபதி அருணாசலம் (அவராகவே எல்லாரிடமும் இப்படி எழுதும்படிச் சொல்கிறார்) பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடுவார். அனுப்பினால் வலையேற்றி வைக்கிறேன். புகைப்படங்களின் காப்பிரைட் எனக்குத்தான். 🙂

அருண் வைத்தியநாதன் வந்திருந்தார். நிறைய நேரம் இருந்தார். பேச நேரமில்லை என்பதால் ஒரு ஹலோ, ஒரு எப்படி இருக்கீங்க. இயக்குநர் சுகா வந்தார். அதே ஒரு ஹலோ மட்டுமே. ஜெயஸ்ரீ சென்னை வந்திருப்பதாக கருடன் சொல்லியது. புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை போல. நிறைய சமையல் புத்தகங்கள் கடை பரப்பியிருப்பதை ஜெயஸ்ரீ மனதில் வைத்து, அப்பதிப்பாளர்கள் உய்யச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். இதற்கு முடியும் அல்லது முடியாது மட்டும் பதில் எழுதினால் உசிதம். நாற்பது பக்கங்களுக்கு :கொட்டாவி: எழுதக்கூடாது. ஜெயமோகனே கொஞ்சம் மிரண்டு போயிருப்பதாக அறிந்தேன்.

இனி கிழக்கு. ஒரு வழியாக நேற்று மாலையில் கிழக்கு ஸ்டால் முழு அந்தஸ்து பெற்றது. இன்றும் இன்னும் மேம்படும். ஸ்டால் வரைபடங்கள், குலுக்கல் ப்ரிண்ட் அவுட்டுகள், புதிய வண்ண கேட்டலாக் என முழுமை பெற்றதும்தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்தது. இங்கே புத்துணர்ச்சி என்பது உயிர் என்று பொருள்கொள்ளப்படவேண்டியது. இனி வரவேண்டியவை சில முக்கியமான புத்தகங்கள். அவை இன்று வரும். இந்தியப் பிரிவினை புத்தகத்தைப் பலர் கேட்டுவிட்டுச் சென்றார்கள். மாயவலைக்கு முன்பணம் அனுப்பியிருந்தவர் அன்பாக மிரட்டினார். எல்லாம் இன்று (நாளைக்குள்!) வந்துவிடும்.

பின்பு ஞாநியின் அறிந்தும் அறியாமலும் கிழக்கு ஸ்டாலில் கிடைக்கும். விற்பனை உரிமை NHM உடையது. அது பற்றியும் ஞாநி பற்றியும் மீதி சில வரிகள். ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அனைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுடியவில்லை. 🙂

அவர் கையெழுத்துப் போடுவதைக் கண்ட மணி (தமிழினி டிசைனர்) கொதித்தெழாமல் அமைதியாக, ‘போன தடவை கையெழுத்து கேட்டா கடுமையா திட்டினீங்க, இப்ப மட்டும் எப்படி போடறீங்க’ என்றார். ஞாநி, ‘சொல்லியிருக்கேன். திட்டியிருக்கேன். ஆனா இப்ப நான் கையெழுத்து போடுறது என் புத்தகத்துக்கு மட்டும்தான். இதுலயும் நம்பிக்கையெல்லாம் இல்லை. வெறும் வியாபாரியாக மட்டும், அதுவும் மேக்ஸிமம் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான்’ என்றார். மணியை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.

குமுதம் வெளியிட்டிருக்கும் ஓ பக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அமீர் வெளியிட்டார் என நினைக்கிறேன். ஞாநியுடன் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாத கருத்துகள் இருந்தாலும், அவர் கருத்தை அவர் சொல்கிறார் என்கிற அதே சுதந்திரத்துடன், மற்றவர் கருத்தினையும் அதே சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து அணுகுகிறார் என்கிற பொருள்பட அமீர் பேசினார் என்றறிகிறேன். அமீரின் கருத்துகளில் எனக்கு நிறைய உடன்படாதவை உண்டென்றாலும், இதில் நிச்சயம் உடன்படுகிறேன். ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஞாநியிடம், ஒட்டுமொத்த ஹிந்துத்துவாவாதிகள் மீதுள்ள ஒட்டுமொத்த கோபம், பிராமணர்களில் அடித்தட்டு ஏழைகள் பற்றி அவர் பேசாதது என்பது போன்ற கருத்துவேறுபாடுகள் எனக்கு உண்டென்றாலும், அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்? :))))

பின்குறிப்பு: அவசியமற்ற பின்குறிப்பு என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நான் எழுதுவது மொத்தமுமே அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள். நம்மைப் நாமே புரிந்துகொள்வோமா அடிப்படையில், அவசியமற்ற-வை விட்டுவிட்டு, வெறும் பின்குறிப்பு என்றே போட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று புத்தகக் கண்காட்சி முழுவதும் ஒரு பெரிய வதந்தி, விடுதலைப் புலிகள் புத்தகம் எழுதிய மருதன், கைலாய யாத்திரையும் கைநிறையப் புண்ணியமும் என்கிற புத்தகம் எழுதப்போகிறார் என்று. நாம்தான் கெட்டுப்போய்விட்டோம் என்றாலும், கண்ணெதிரே ஒரு தோழர் சீரழிவதை எப்படிப் பொறுத்துகொள்ளமுடியும் என்று, அவரைப் புத்தகக் கண்காட்சி முழுக்க தேடினேன். நான்காவது வரியில், மூன்றாவது வலது திருப்பத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அங்கிருந்து வெளியே தெரியும் வானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். தோழர்கள் சீனாவை இங்கேயிருந்தே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று தெரியும். கைலாய மலையையும் அப்படிப் பார்த்துப் புத்தகம் எழுதப்போகிறாரா என்றெல்லாம் தோன்றியது. அருகில் ஓர் உடன்பிறப்பும் நின்றிருந்தார். படபடப்புடன் அவரிடம் கேட்டேன்.

‘என்ன தோழர், கைலாய மலையும் கைநிறையப் புண்ணியமும்னு எழுதப்போறீங்களா? பயங்கர ஷாக்கிங்கா இருக்கு.’

உடன்பிறப்பு சொன்னார், ‘பாத்தியா தோழா. ஒரு ஹிந்துத்துவவாதியே அலர்றார் பார்’ என்றார். அவரை முறைத்தேன் அவர் தொடர்ந்தார்.

‘இப்ப என்ன விடுதலைப்புலிகள் புத்தகத்துக்கு பேலன்ஸிங்கா எழுதணும். அவ்ளோதானே? அடிமைப்பூனைகள்னு ஒரு புத்தகம் எழுதிடு’ என்றார் ரொம்ப சீரியஸாக. அவர் நிச்சயம் ஓர் உடன்பிறப்பாகத்தான் இருக்கமுடியும்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01

மழை வர வாய்ப்புண்டு என்று ரமணன் ஊடகங்களில் அறிவித்ததால் நிச்சயம் மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்த பதிப்பாளர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. சொட்டு மழைகூட இல்லை. சென்ற புத்தகக் கண்காட்சியன்று கொட்டிய மழை போலல்லாமல் நேற்று கொஞ்சம் மழை குறைவாகவே இருந்ததால், தரை நடக்க முடியாத அளவு மோசமான நிலையில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல். சென்ற முறை போலல்லாமல் கழிப்பிட வசதிகளைக் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் முன்னேற்றியிருக்கிறார்கள். சென்ற முறை தண்ணீர் லாரி வந்து தண்ணீரை பெரிய டேங்கர்களில் ஏற்றிவிட்டுச் செல்லும். இந்தமுறை அங்கேயே போர் போட்டுவிட்டதால், தண்ணீர் பிரச்சினை இல்லை.

இன்னும் உணவு அரங்கம் முற்றிலும் தயாராகவில்லை. எல்லா பதிப்பாளர்களும் அடுக்கி வைத்து விற்பனைக்குத் ஆயத்தமாகியிருக்கிறார்கள். தொடக்கவிழா ஆறு மணிக்குத் தொடங்கியது என்றாலும் பல வாசகர்கள் மதியம் முதலே உள்ளே வரத் தொடங்கியிருந்தார்கள். சில சில்லறை விற்பனைகளும் நிறைய பதிப்பகங்களில் நடந்தன. தொடக்க நாளன்று நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.

எதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். நல்லி குப்புசாமி செட்டியாரும், பொறிகிழி பெறும் எழுத்தாளர்களும் மேடையில் இருந்தார்கள். யார் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை, விற்பனை அரங்கிற்குள்ளே சென்றுவிட்டேன். திறப்புவிழாவிற்கு கிழக்கு எடிடோரியல் குழு வந்திருந்தது. பாரா தலையில் குல்லோவாடு வினோதமாக வந்திருந்தார். வழக்கம்போல ‘மாவா என் பின்னால் வா’வோடு மல்லுக்காட்டிக்கொண்டிருந்தார். முகில் எதையோ தீவிரவாக யோசித்துக்கொண்டிருந்தார். உடன்பிறப்பும் தோழரும் என்னவோ சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு புகைப்படம் எடுத்துவைத்தேன்.

நிறைய வருடங்களுக்குப் பின்பு க்ரியா பதிப்பகம் ஒரு அரங்கு அமைத்திருக்கிறது. அசத்தலான அரங்குதான். புத்தகங்கள் வெகு குறைவு என்பதால் அழகு வருவது எளிமையானது என்பது ஒருபுறமிருக்க, கொஞ்சம் யோசனையோடு சில செயல்கள் செய்து வைத்திருந்தார்கள். அங்கேயே குடௌன் வைத்துக்கொண்டது. எல்லா பதிப்பாளர்கள் திணறும் விஷயம், புத்தகங்களின் ஸ்டாக் எங்கே வைத்துக்கொள்வது என்பது. க்ரியா பதிப்பகம் ஒரு சிறிய அறை போன்ற வடிவமைப்பை உருவாக்கி, அதனுள்ளே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும், இது ஆச்சரியமான விஷயம்தான்.

கிழக்கு பதிப்பகத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று மட்டும். ஒரு நண்பர் அடியாள் புத்தகம் வாங்கினார். அவரிடம் சென்று, ‘இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குகிறீர்கள், எங்கே இதைப் பற்றிப் படித்தீர்கள்’ என்றேன். ‘என் தொழிலே இதுதான்’ என்றதும் கொஞ்சம் பயந்தேன். அவர் தொடர்ந்து, ‘புத்தகம் படிக்கிறதுதான் என்னோட தொழில்’ என்று சொல்லி என் பயத்தைப் போக்கினார். ‘கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தகங்களை வெளியிடுகிறது’ என்றெல்லாம் பாராட்டிய அவர், ‘எம்.எஸ். புத்தகத்துல… குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, சொல்றேன்… அந்தம்மாவுக்கு நடந்தது 2வது கல்யாணம். அது பத்தி வரவே இல்லை. அது எவ்வளவு முக்கியமான விஷயம்? அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க?’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்!

சில எழுத்தாளர்களையும் இன்று காணமுடிந்தது. சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன். சென்ற முறை எனி இந்தியனுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களையும் படம் பிடித்தேன். இம்முறையும் புகைப்படம் எடுப்பது போரடிக்கிறது என்பதால், எழுத்தாளர்களைப் படம் பிடிக்கப்போவதில்லை. (சில விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு!) பொதுவான புகைப்படங்களை எடுக்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.

From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009

(எடிட்டோரியல் (அன்பான!) மிரட்டல் குழுவும், தொப்பியுடன் அதன் தலைவரும். இடது ஓரத்தில் இருப்பவர் NHMன் விற்பனை பொது மேலாளர். அவர் நீங்கலாக!)

From day1_cbf2009

க்ரியாவின் ஸ்டாக் ரூம்!

From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009

கல்யாண வீடு போல அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அரங்கின் முகப்பு

From day1_cbf2009

என் வாழ்க்கை என் தேசம் அல்லயன்ஸ்!

From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009

Share

கண்காட்சிக்குள் பெய்த மாமழை (சென்னை புத்தகக் கண்காட்சி 2009 தொடக்க முன் தினம்)

புத்தகக் கண்காட்சியின் தொடக்க ஆர்வத்தை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டது திடீர் மழை. முன் தினம் வரை மழையின் அறிகுறியே இல்லாமல் இருக்க, நேற்று திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மழையின் காரணமாகப் பல வேலைகள் தடைப்பட்டன. பல பதிப்பாளர்கள் கடையில் எதையுமே அடுக்கவில்லை. இத்தனை சாகவாசமாய் பதிப்பாளர்கள் நடந்துகொள்ளும் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். இதில் மின்சாரத் தடை வேறு. அதனால் இரவு ஆறு மணி வரையில் அதிக வேலைகளைச் செய்யமுடியவில்லை. கண்காட்சியின் வளாகத்திற்குள் நீர் கொட்டவில்லை என்றாலும், முதல் வரிசைகளில் மட்டும் நீர் கொட்டியது. அதுவும் நடைபாதைகளில் மட்டுமே கொட்டியது என்பதால், பல பதிப்பாளர்களின் உள்ளரங்கம் தப்பித்துக்கொண்டது.


பொத்துக்கொண்டு ஊற்றும் மழை நீர்.

வெளி அரங்க வேலைகள் பாதி முடிந்திருந்த நிலையில், அங்கே உள்ள வேலைகளையும் இம்மழை புரட்டிப் போட்டது. சாமியாவின் மேல் நிறையத் தண்ணீர் தேங்கி நிற்க, கர்ப்பிணிப் பெண்ணின் பெருத்த வயிறு போல, கீழ் நோக்கி வளைந்து நின்றது சாமியானா. புத்தகக் கண்காட்சிக்கு வரும் இடங்களில் அமைக்கப்பட இருக்கும் விளம்பரத் தட்டிகள் இன்றுதான் அமைக்கப்படும் என்பதால், இன்று தொடக்க நாளாக இருந்தாலும், நாளையே புத்தகக் கண்காட்சி அதன் நிறத்தை அடையும் என நினைக்கிறேன்.

நீர் சேர்ந்து குழிந்த சாமியானா!

சென்ற முறை முதல் நாள் மதியமே சாப்பிட ஏதேனும் அங்கே கிடைத்தது. இந்த முறை நேற்று சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றால் சரியான மழை வேறு. ஆனால் அரங்கினுள்ளே டீப்பாயில் டீயும், காப்பியும் கிடைத்தது. அந்த மழைக்கு, அதுவும் சரியான வேலை இருக்கும்போது, சூடாக டீ குடிப்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. (ஆனாலும் மழையில் நனைந்துகொண்டு நாங்கள் சாப்பிடப்போய்விட்டு வந்தோம். வைகுண்ட ஏகாதசி அன்று, ஒரு நல்ல அசைவ உணவகத்தில் சைவச் சாப்பாடு சோறும் காய்கறியுமாக உள்ளே சென்றது. அஹம் பிரம்மாஸ்மி என்பதால் இதெல்லாம் பாவமாகாது என்றே நினைக்கிறேன்.)

இன்று முழுவதும் பதிப்பாளர்களின் அரங்குகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டுவிடும். பெரிய அரங்குகளை எடுத்திருக்கும் பதிப்பகங்கள் இன்றைக்குள் புத்தகங்களை அடுக்கிவிட்டாலும், உள்ளரங்க வேலைப்பாடுகள் எல்லாம் முடிந்து ஆயத்தமாக நாளை ஆகிவிடும் என்று தோன்றுகிறது. கலைஞன் பதிப்பகம் தனது அரங்கை பொருட்காட்சியின் அரங்குபோல, இரண்டு மண்டபத் தூண்கள் எல்லாம் வைத்து வடிவமைத்துள்ளது. சீதை பதிப்பகம் ‘ரூபாய் 1000க்கு வாங்கினால் இன்னொரு 1000 ரூபாய்க்கான புத்தகங்கள் இலவசம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். பெரிய அளவில் பேனர் வைத்து அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! புகைப்படங்களை நாளைமுதல் உள்ளிடுகிறேன். தீம்தரிகிட அரங்கு வழக்கம்போல எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன். பானைகளின் நடுவே தரையில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்த ஞாநியை நேற்று சந்தித்துப் பேசினேன். இந்த முறை எனது வலைப்பதிவில் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.

இன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர் கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற முறை கருணாநிதி வரும் நிமிடம் வரையில் வெளி அரங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கருணாநிதி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசப்போகும் நிலையில், யாரேனும் ஒருவர் வந்து, ‘ஐயா கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க, ரெண்டு நட்டு டைட் பண்ணனும்’ என்று சொல்வார்கள் என்றெல்லாம் கடுமையாக கற்பனை செய்து வைத்திருந்தேன். மழையின் புண்ணியத்தில் கருணாநிதி தப்பித்தார். இந்தமுறை அப்துல் கலாம் எப்படித் தப்பிக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் வெளி அரங்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. மழையின் காரணமாக அந்த வேலை மெல்லவே நடக்கிறது.

சென்ற முறை பபாஸியின் சார்பாக ஏகப்பட்ட இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த முறை அவை இனிதான் முளைக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக பபாஸியின் சார்பில் இந்த முறை விளம்பரங்கள் குறைவு என்று தோன்றுகிறது. நாளை, நாளை மறுநாளைக்குள் இந்த விளம்பர நிலவரங்கள் தெரிந்துவிடும்.

இனி NHM புராணம். கிழக்கு பதிப்பகத்தின் அரங்குகள் பாதி ஆயத்தமான நிலையில், இன்றிரவுக்குள் கிட்டத்தட்ட ஆயத்தமாகிவிடும். நாளை முழுவதுமாக ஆயத்தமாகிவிடும். வரம் வெளியீடுகளில் இந்துமத ஆன்மிக புத்தகங்கள் கிடைக்கும்! நலம் வெளியீடு அரங்கில் உடல்நலம் தொடர்பான புத்தகங்களும், பவிஷ் க்ராஃபிக்ஸ் அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ராடிஜியின் புத்தகங்கள் புக் ஷாப்பர்ஸ் அரங்கில் கிடைக்கும். எந்த எந்த அரங்கு எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட அரங்க வடிவமைப்பு, அரங்க எண்களைத் தனியே உள்ளிடுகிறேன்.

ப்ராடிஜியின் அரங்கில் மாணவர்களுக்கான வினாடி வினா – எழுத்துத் தேர்வு நடத்தலாம் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. இது சாத்தியமாகுமா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும். கிழக்கு அரங்கில் இணைய இணைப்பு கோரியிருக்கிறோம். எப்படியும் கண்காட்சி முடியும் நாளுக்குள் இணைய இணைப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. இருந்தால், அங்கிருந்தே பதிவு உள்ளிடமுடியுமா என்று பார்க்கிறேன். விடுமுறை நாள்களில் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் விடப்போவதில்லை.

NHMன் புத்தகங்கள் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்ல ஓர் எண்ணை அறிவித்திருக்கிறோம். அந்த எண் 9941137700. இதை நீங்கள் தொடர்புகொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லலாம். கருத்து மட்டுமின்றி, உங்கள் புத்தகத் தேவை, நீங்கள் இருக்குமிடங்களில் எங்கே NHMன் புத்தகங்கள் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு வைக்கலாம். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களுக்கான பதிலைத் தருவோம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? அலுவலகத்தை அழைத்தபோது, அலுவலக எண் பிஸியாகவே இருந்தது என்கிற பிரச்சினைகள் எழாது. என்னையோ அல்லது மார்க்கெட் நண்பர்களையோ அழைத்தபோது, அவர்கள் மொபைல் எண் கவரேஜில் இல்லை அல்லது சிவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்கிற பிரச்சினைகள் வராது. நீங்கள் உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் அழைப்பவரின் செலவு குறையும். புத்தகம் பற்றி கருத்துச் சொல்ல நினைப்பவர்கள், ஆனால் அதைத் தெளிவாக எழுத முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். புத்தகம் பற்றிய விமர்சனம் இருந்தால், அதை நேரில் சொல்லத் தயக்கப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். (எனது கவிதைகளே சிறந்தது என்றோ, அதைவிட எனது கதைகளே சிறந்தவை என்றோ, அதைவிட எனது கட்டுரைகளே சிறந்தவை என்றோ என் ரசிகர்கள் யாரும் சொல்லவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்.) இப்படி சில எண்ணத்தோடு இந்த எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

கிழக்கு அரங்கில் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று நபர்களுக்குக் குலுக்கல் முறையில் புத்தகங்கள் பரிசு அளிக்கலாம் என்றிருக்கிறோம். முதல் பரிசு 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், இரண்டாம் பரிசு 200 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், மூன்றாம் பரிசு 100 மதிப்புள்ள புத்தகங்கள்.

மேலதிக விவரங்களை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

பின்குறிப்பு: ‘வைகுண்ட ஏகாதசி’ அன்று மழை வரும் வாய்ப்புண்டு என்று இந்து அறிவியல் (!) சொல்கிறதாம். அதனால் அந்த நாளில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது நம் தவறே அன்றி, தொடக்க நாளில் மழை வரவைத்தது கடவுளின் தவறில்லை என்று ஒரு வியாக்யானத்தை நேற்று நான் கேள்விப்பட்டேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பகிர்தலுக்காக மட்டும் இங்கே. 🙂

Share

கம்பிகளின் வழியே கசியும் வானம் (மாலனின் ’என் ஜன்னலுக்கு வெளியே’ புத்தக வெளியீடு)

என் ஜன்னலுக்கு வெளியே நூலை ஜென்ராம் வெளியிட, சிங்கப்பூர் ’ஒலி’ பண்பலையின் சாமிநாதன் மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். (மகாலிங்கம் பெயரைத் தவறாக எழுதியதற்கு வருந்துகிறேன்.) பத்ரி சேஷாத்ரி புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

மாலனின் பல்வேறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான ‘என் ஜன்னலுக்கு வெளியே’ நூலை வெளியிட்டுப் பேசிய ஜென்ராம், தான் அரசியல் மற்றும் சமூகம் வகைகளில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளை மட்டுமே வாசித்ததாகவும், அதைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகவும் தெரிவித்தார். அடிப்படையில் ஒரு புத்தகத்தை விமர்சிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்ட ஜென்ராம், என் ஜன்னலுக்கு வெளியே புத்தகத்தில் உள்ள பல்வேறு கட்டுரைகளைப் பற்றிய தன் கருத்துகளைச் சொன்னார். தான் எழுதிய கட்டுரைகளில் எப்படி மாலனின் கட்டுரைகள் எப்படி ஒன்றுபடுகிறது அல்லது வேறுபடுகிறது என்பதை ஒப்பிட்டுப் பேசிய அவர், மாற்றுக் கருத்தை முன்வைக்க இன்று ஓர் எழுத்தாளர் இருப்பதே மகிழ்ச்சியான விஷயம் என்றார். சேது சமுத்திரம் பற்றிய மாலனின் கட்டுரை ஒரு வித்தியாசமான கோணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார். மாலனோடு ஒத்துப்போகமுடியாத கருத்துகளையும் சொன்ன ஜென்ராம், விவாதத்தின் மூலம் எதையும் நிறுவிவிடமுடியாது என்றும் அதற்கு உதாரணமாக அசோகமித்திரனின் ‘ரிக்‌ஷா ரிஷ்கா’ கதையைக் குறிப்பிட்டார்.

மாலன் ஏற்புரை வழங்கினார். சிங்கப்பூர் தமிழ்முரசுவில் தான் எப்படி எழுத நேர்ந்தது என்பதைச் சொல்லிய மாலன், சொல்லாத சொல் கட்டுரைத் தொகுப்பில் தொடக்கத்தில் இருக்கும் அறிமுகக் குறிப்பின் பின்னணி, அவை இக்கட்டுரைகளில் இல்லாததன் பின்னணி என்பதையெல்லாம் விவரித்தார். ஜென்ராம் பேசும்போது, சேது சமுத்திரத் திட்டக் கட்டுரையின் மூலம் தனக்கு ஒரு ஹிந்துத்துவ முத்திரை விழுந்துவிடும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த மாலன், இது போன்ற முத்திரைகளைப் பல்லாண்டு காலமாகத் தான் எதிர்கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் தனக்கு எருமைத்தோல் வந்துவிட்டதாகவும் சொன்னார். தான் ஜனகணமன நாவல் எழுதியபோது ஆர்.எஸ்.எஸ். ஆள் என முத்திரை குத்தப்பட்டதாகவும், அப்போது எழுதிய வேறொரு படைப்பை முன்வைத்து நக்ஸல் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் ஒருவர் எப்படி இந்த இரண்டுமாகவும் இருக்கமுடியும் என்று தனக்கு விளங்கவில்லை என்றும் சொன்னார். சமீபத்திய வரலாறான பாரதியின் வரலாற்றைக் கூட நம்மால் இன்னும் சரியாகப் பதிவு செய்யமுடியவில்லை என்றும், மேடைக்கு மேடை மேம்போக்காக, பாரதி யானையால் மிதிபட்டு இறந்தார் என்றும் பேசுகிறார்கள் என்றும் சொன்ன மாலன், இதன் மூலம் பத்தி எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தைச் சொன்னார். இன்னும் சிறிது நேரம் தொடர்ந்த மாலனின் பேச்சை அடுத்து கலந்துரையாடல் தொடங்கியது.

முதல் கேள்வியே அவரது இலக்கிய முகம் சார்ந்ததாக அமைய, அதற்குப் பதில் சொன்ன மாலன் தான் என்னதான் எழுதினாலும் தான் அடிப்படையில் ஒரு வாசகனே என்று சொன்னார். வலைப்பூக்களின் தொடக்க காலத்தில் அதை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான மாலன் தற்போது வலைப்பூக்களைப் பற்றிய ஒரு அவநம்பிக்கை கொண்டிருப்பதாகத் தோன்றுகிறதே என்று நான் கேட்டபோது, தனக்கு இன்னும் வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும், தனது நம்பிக்கையின்மை வலைப்பதிவுகளின் திரட்டி மீதானது மட்டுமே என்றும் குறிப்பிட்டார். சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கேள்விக்கு, அது சுற்றுப் புறச் சூழல் சார்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்றால், அத்திட்டம் தேவையில்லை என்றும், அது செலவு ரீதியாகக் கட்டுப்படி ஆகாது என்றால் அதனால் பயனில்லை என்றும், அது ஹிந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றால் அந்த நம்பிக்கையை ஏன் நிராகரிக்கவேண்டும் என்றும் மூன்று கோணங்களில் பேசினார். ராமன் இருந்தாரா இல்லையா என்றால் கண்ணகி இருந்தாரா இல்லையா என்று தான் எதிர்க்கேள்வி கேட்க விரும்புவதாகவும், கண்ணகிக்கு சிலை வைத்தல் ஒரு நம்பிக்கை என்றால், ராமர் பாலமும் அத்தகைய ஒரு நம்பிக்கையாக ஏன் இருக்கக்கூடாது என்றும் கேட்டார் மாலன். சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதே என்ற கருத்தைச் சொன்ன லக்கிலுக்கின் ஆதாரத்தை மாலன் மறுத்து, முதலில் பண உதவி செய்வதாக இருந்த வங்கி, இத்திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதில்லை என்று பின்வாங்கிவிட்டதை மாலன் குறிப்பிட்டார். பவளப் பாறைகள் 30 கி.மீ. வரை உள்ளதாகவும், அதில் மிகச் சில மீட்டர்களில் உள்ள பவளப் பாறைகள் மட்டுமே அழிய நேரிடும் என்றும் அதனால் பெரிய சுற்றுப் புறச் சூழல் அச்சுறுத்தல் இல்லை லக்கிலுக் சொன்னார். இதனால் மீன்வளம் குறையும் என்று தான் நம்பவில்லை என்றார் லக்கிலுக். மாலன், சுற்றுப்புறச் சூழலா, ஒரு திட்டமா என்றால் தனக்கு சுற்றுப்புறச் சூழலே முக்கியம் என்றார்.

சன் நியூஸில் இருந்தவரை கருணாநிதியை விமர்சித்து எழுதியதில்லை என்றும் ஆனால் சன் நியூஸிலிருந்து விலகியவுடன் கருணாநிதிக்கு எதிரான கட்டுரைகள் (மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவை) எழுதியது பற்றிய மாலன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்வியை நான் கேட்டேன். தான் சன் நியூஸில் இருக்கும்போதே கருணாநிதியைப் பற்றி எழுதியிருப்பதாகவும், தான் எழுதிய கட்டுரைகளைப் பார்த்துவிட்டு அன்றே கருணாநிதி தனது அதிருப்தியைச் சொல்லியிருப்பதாகவும் சொன்னார் மாலன். ஒரு விழாவில் ஸ்டாலின் பேசும்போது, ‘நம்மை விமர்சித்து எழுதும் மாலன்’ என்றுதான் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், சன் நியூஸிலிருந்து விலகியபின்பு அவர் எழுதிய ‘இலவச வண்ணத் தொலைக்காட்சி சரியா’ என்பது பற்றிய கட்டுரை என்றும், மாறன் சகோதரர்கள் பற்றியது அல்ல என்றும் சொன்னார். ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தான் செயல்பட்டதாகவும், அப்போதும் தனது கருத்துகள் தன்னுடனே இருந்ததாகவும் விவரித்தார் மாலன். (என்னால் இக்கருத்தை ஏற்கமுடியவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது, அந்நிறுவனத்தின் கருத்தை ஏற்பதும், ஓர் எழுத்தாளனின் அந்தரங்கக் குரலும் வெவ்வேறானது. குறைந்தபட்சம், அந்நிறுவனத்துக்கு எதிரான கருத்துகள் இருந்து, அதைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளையோ, அந்நிறுவனத்தின் அரசியல் சார்ந்த கருத்துகளையோ ஏற்பது என்பது முற்றிலும் வேறானது. இங்கேதான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு எக்ஸுக்கும், மாலன், ஞாநி போன்ற எழுத்தாளர்களுக்கும் பெரிய வேறுபாடு வருவது. மேலும் இதைப் பற்றி விவரிக்கவேண்டுமானால், மாலன் எழுதிய கட்டுரைகளை முழுவதும் வாசித்தபின்பே முடியும்.)

பதிப்பக உலகத்தில் அந்நாளைய, இன்றைய, எதிர்காலம் பற்றிய கேள்வி வந்தது. அந்நாளில் அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகம் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், அதனால் அசோகமித்திரனிடமே கேட்டதாகவும், மாடிக்கு மாலனை அழைத்துச் சென்ற அசோகமித்திரன், அங்கே ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பித்து, ‘எத்தனை வேணும்’ என்று கேட்டதாகவும் குறிப்பிட்ட மாலன், இன்று அந்நிலை மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டார். மௌனியின் முதல் சிறுகதைப் புத்தகம் வர அவர் எவ்வளவு பாடுபடவேண்டியிருந்தது என்று சொன்ன அவர், இன்று பெரும்பாலான பதிப்பகங்கள் ‘நூலக ஆர்டரை’ நம்பி இல்லை என்றார். புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் பற்றி நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைய புத்தகக் கண்காட்சிகளில் முன்பு போல் சமையல் புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களும் அதிகம் விற்பதில்லை என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். கிழக்கு, தமிழினி போன்ற பதிப்பகங்களினால், நாவல் சிறுகதை கவிதை என்பதை மீறி இப்போது பல வகைப்பாடுகளில் புத்தகங்கள் கிடைப்பதைப் பற்றிச் சிலாகித்தார். இங்கே சில கருத்துக்களைச் சொல்லி, மாலனின் சந்தோஷத்தைக் கெடுத்து ஒரு குரூர சந்தோஷத்தை நான் அடையவேண்டியிருக்கிறது. 🙂

மாலன் அசோகமித்திரனின் வீட்டில் பார்த்த ‘வாழ்விலே ஒருமுறை’ என்பதைப் போன்ற இலக்கியப் புத்தகங்களின் நிலை இன்றும் அப்படியே உள்ளது என்பதுதான் உண்மை. கொஞ்சம் முன்னேறி இருக்கலாம். ஆனால் அன்று அசோகமித்திரன் வீட்டில் இருந்த நிலையே அந்நியமானது என்கிற அளவிற்கு இலக்கியப் புத்தகங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துவிடவில்லை. அன்று இலக்கியப் புத்தகத்தையும், இன்று வெகுஜன புத்தகத்தையும் மனதில் வைத்து மாலன் எடை போடுகிறாரோ என்றும் தோன்றுகிறது. ‘இன்னும் பத்து வயதில் என் அக்காவை விட பெரியவனாகிவிடுவேன்’ என்கிற ஒரு சிறுவனின் நம்பிக்கைக்குச் சமமானதுதான், புத்தகக் கண்காட்சியில் விற்கும் இலக்கியப் புத்தகங்களின் விற்பனையும். இலக்கியப் புத்தகங்களின் விற்பனை எந்த வேகத்தில் அதிகரிக்கிறதோ, அதைவிட அதிகமான வேகத்தில் ஜோதிட, சமையல் புத்தகங்களின் விற்பனையும் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக இலக்கியப் புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது என்பதில் மட்டுமே நாம் மகிழ்ச்சி கொள்ளமுடியும். அதேபோல், பதிப்பகம் மற்றும் நூலக ஆர்டர் சார்ந்தது. கிழக்கு, ஆனந்தவிகடன் மற்றும் சில பெரிய எழுத்தாளர்களைக் கையில் வைத்திருக்கும் ஒரு சில பதிப்பகங்கள் இன்றைய நிலையில் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆர்டரை நம்பியே இருக்கின்றன. இதை எப்படி விளக்கலாம் என்றால், பெரிய பதிப்பகங்கள், நூலக ஆர்டர் நம்பி இல்லை என்றாலும் கூட, நூலக ஆர்டரை ஒதுக்குவதில்லை; அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கின்றன. அப்படியானால், மற்ற சிறிய பதிப்பகங்களின் நிலையை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். அதனால் நூலக ஆர்டர் விஷயத்தில் இன்னும் பல விஷயங்களை நாம் நிச்சயம் செய்யவேண்டியிருக்கிறது. காலச்சுவடு இதழில் கண்ணன் சொன்னதுபோல, ‘எடைக்கு எடை போடுவதைவிடக் கொடுமையாக புத்தகங்கள் நூலகத்தில் வாங்கப்படுவதைப்’ பற்றி நிச்சயம் யோசிக்கவேண்டும்.

அடுத்து வாரிசு அரசியல் பற்றிய கேள்வியைக் கேட்டார் லக்கிலுக். ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதிலும் வாரிசு அரசியல் இருக்கும்போது, மக்கள் அதை அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக ஊடகங்கள் மட்டுமே அலட்டிக்கொள்கின்றன என்றும், மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பின்னரே ஒரு வாரிசு கூட அரசியலில் நிலைக்கமுடியும் என்றும், யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரம் எனப் பார்க்கலாமா என்றும் கேட்டார். லக்கிலுக். இதற்கு ஜென்ராம், மாலன் இருவருமே பதிலளித்தனர். ஜென்ராம், உட்கட்சி விவகாரம் என்றாலும், அதை பார்த்து கருத்துச் சொல்ல விமர்சிக்க தனக்கு உரிமை இருக்கிறது என்றும், ஓர் உட்கட்சி முடிவிலேயே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவரின் கட்சியை அடிப்படையாகவைத்தே தான் அவரைத் தேர்ந்தெடுப்பதால், உட்கட்சி விவகாரம் பற்றிய விமர்சனம் தேவையாகிறது என்றார். மாலன், உட்கட்சிகளில் நடக்கும் வன்முறை விமர்சனத்துக்குரியது என்றால் அவர்களின் அரசியலும் விமர்சனத்துக்குரியது என்றார். ஜென்ராம், ஜெயலலிதாவோ கருணாநிதியோ உட்கட்சியைக் கூட்டி முடிவெடுக்கிறார்கள் என்றால் அது, அவர்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் காதலால் அல்ல, மாறாக, அரசியல் சட்டத்தின் தேவையைக் கருதி மட்டுமே என்று விளக்கினார். மக்கள் மன்றம் என்பதே போலியானது என்றும், மக்கள் மன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், ஜெயலலிதா ஊழலற்றவர் என்று தொடங்கி, மோடி வரையில், நாளை அத்வானி வென்றால் அவர் வரையில் அவரவருக்கு வேண்டிய வகையில் இதை ஏற்கவேண்டியிருக்கும் என்றும், இது சரியானது அல்ல என்பதால் மக்கள் மன்றம் போலியானது என்றும் நான் சொன்னேன். மக்கள் மன்றம் போலியானது என்றால் ஜனநாயகமே போலியானதா என்பது போன்ற கேள்வியை லக்கிலுக் கேட்க முனைந்தார். ஆனால் அதற்குள் வேறு வேறு கேள்விகளில் இக்கேள்வி சிதைந்து போனது.

உண்மையில் மக்கள் மன்றம் என்கிற கருத்துவாக்கம் போலியானது என்றே நான் நம்புகிறேன். மக்கள் மன்றம் என்கிற கருத்துருவாக்கம் உள்ளீடற்றது. அங்கே எளிய சமன்பாடுகள் மூலம் நிறுவப்பட்ட நிரலி சிந்திப்பது இல்லை. ரத்தமும் சதையுமுமான மக்கள் சிந்திக்கிறார்கள். இதைக் கொஞ்சம் யதார்த்தமாக்கினால் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை என்று சொல்லிவிடலாம். இந்திய மக்கள் மன்றம் என்பது, அறிவாளிகளாலும், சிந்தனையாளர்களாலும் நிரம்பியது என்று நான் நம்பவில்லை. கட்சி அடிப்படையிலும், தனிநபர் அரசியல் அடிப்படையிலுமே இன்றைய மக்கள் மன்றம் பெரும்பாலும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது. அதனால்தான் பெரும் ஊழலில் சிக்கித் தவித்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சிக்கு வருவதும், பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஓர் அரசியல்வாதி டெபாசிட் இழப்பதும் நடக்கின்றன. நாம் மக்கள் மன்றம் என்கிற கருத்தை ஒற்றைப் பரிமாணத்தோடு ஏற்க முனைந்தோமானால், இவற்றை எல்லாமே ஏற்கவேண்டியிருக்கும். இது சாத்தியமற்றது. அதனால் மக்கள் மன்றம் என்கிற கருத்தை முன்வைக்கும் அரசியல்வாதிகள் எல்லாமே, தங்களுக்கு வேறு பதில் இல்லாத நிலையில் இதைக் கையில் எடுக்கிறார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். வாரிசு அரசியல் விமர்சனத்தைத் தகர்க்க கருணாநிதியும், ஊழல் குற்றச்சாட்டைத் தகர்க்க ஜெயலலிதாவும் இந்த மக்கள் மன்றம் என்கிற கருத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தின் மீது வைத்திருக்கும் ‘நம்பிக்கை’ நாம் அறிந்ததே! மக்கள் மன்றத்தின் வழியாக ஜனநாயகத்தை நாம் அடைந்தோமானால், ஜனநாயகத்தை நான் ஏற்கிறேன். மக்கள் மன்றம் வலுவில்லாதபோது, அதன் வழியாக உருவாகும் ஜனநாயகம் எப்படி வலுவானதாக இருக்கும் என்றால், இருக்கும் மோசமான வழிகளில் தீமைகள் குறைந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவதுபோல, (இங்கே ஜெயலலிதாவும் கருணாநிதியின் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) மக்கள்மன்ற ஜனநாயகத்தைவிடச் சிறந்த மாற்று ஒன்று இன்று நம்மிடம் இல்லையாததலால் அதை ஏற்கவேண்டியிருக்கிறது என்று கொள்ளலாம்.

ஸ்டாலின் திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் அவரை வாரிசு அரசியலின் வெளிப்பாடு என்று இன்று சொல்லமாட்டேன். ஆனால், மாலன் எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் சொன்னதுபோல, வாரிசு அரசியல் என்பது வாரிசுகள் அரசியலுக்குள் வருவதில் இல்லை, மாறாக, அவர்கள் எப்படி அரசியலுக்குள் வருகிறார்கள் என்பதில் இருக்கிறது. வாரிசு அரசியலை முன்வைத்து ஒருவர் வந்தாலும், அவர் தாக்குப் பிடிப்பது அவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பு, திறமை போன்றவற்றால்தானே என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதுவும் ஏற்கமுடியாததே. வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கும்போது, மற்றவர்களின் தலைமைப்பண்பைப் பற்றியும் திறமையைப் பற்றியும் அறியமுடியாமல் போய்விடுகிறது. இதை மாலன் தெளிவாகச் சொன்னார். அதனால் ஸ்டாலின் இன்று வாரிசு அரசியலுக்காகக் கேள்வி கேட்கப்படமுடியாதவர்; ஆனால் அதுவே கனிமொழிக்கோ, தயாநிதி மாறனுக்கோ எப்படி பொருந்தும் என்று யோசிக்கலாம். அதேபோல், வாரிசு அரசியலுக்கு கருணாநிதியை மட்டுமே குறை சொல்வதும் சரியல்ல. காங்கிரஸ், பாமக, தேமுதிக, சமக என யாருக்குமே வாரிசு அரசியல் பற்றிக் குறை சொல்லத் தகுதி இல்லை என்பதே உண்மை.

இந்த வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளோடு நேற்றைய மொட்டைமாடிக் கூட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று ஒரு ஐம்பது பேர் கலந்துகொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் திங்கள் கிழமை வேலை நாள், விளம்பரங்கள் இல்லை, அப்படியும் ஐம்பது பேர். மெல்ல மெல்ல எப்படியும் நூறு பேர் வருவார்கள் என்கிற இலக்கை மொட்டைமாடிக் கூட்டம் அடைந்துவிட்டால், பல்வேறு விஷயங்களைச் சோதித்துப் பார்த்து, பத்ரியையும் பாராவையும் சோதிக்கலாம். அது விரைவில் நடக்கும் என்றே தோன்றுகிறது!

பின்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சியில் ரொம்ப பிசியாக இருப்பதால் பதிவு கொஞ்சம் சிறியதாகிவிட்டது.

Share

பொது நூலகத்துறை – அகமும் புறமும்

காலச்சுவடு ஜனவரி 2009 இதழில் கண்ணன் பொது நூலகத்துறையில் நிலவும் அக்கறையின்மையைக் குறிப்பிட்டு ஒரு பத்தி எழுதியுள்ளார். கனிமொழி காலச்சுவடு விவகாரம் வெடிக்கவில்லை என்றால் இந்தப் பத்தி சாத்தியமாயிருக்குமா என்பது ’கண்ணனுக்கே’ வெளிச்சம். எது எப்படி இருந்தாலும், கண்ணன் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானவை. ஆயிரம் புத்தகங்கள் நூலகத்துறைக்கு எடுக்கிறோம் என்கிற அறிவிப்பெல்லாம் வந்துவிடுகிறது. வாக்கு வாங்க மக்களை ஏமாற்றுவதுபோல பதிப்பாளர்களையும் இந்த அரசு ஏமாற்ற நினைக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த அரசு என்பது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்றாலும், எந்த அரசு ஆண்டாலும் இக்கதியே நிலவுகிறது. ஜெயலலிதாவிற்கு பொது நூலகத்துறை என்று ஒன்று இருக்கிறது என்பது தெரியும் என்று நம்பியே தொடர்ந்து எழுதுகிறேன்!

ஒவ்வொரு ஆண்டும் பொது நூலகத்துறைக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்கென ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் எந்தப் புத்தகங்களை நூலகங்களுக்குத் தேர்வு செய்வது என்று முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். முதலில் 600 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 2007 முதல் 1000 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மிக எளிமையானதாகவும், தேவையானதாகவும் தோன்றும் இத்திட்டத்தை இந்த அரசுகள் எப்படி வைத்திருக்கின்றன என்று பார்க்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பதிப்பாளர்கள் புத்தகங்களை தேர்வுக்கு வேண்டி சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவிப்பு வரும். வருடத்தில் பத்து நாள்கள் மட்டும் விழித்திருந்தால் போதும் என நினைக்கும் பபாஸி இதைப் பற்றி செய்தி எல்லாம் எல்லா பதிப்பாளர்களுக்கும் அனுப்பாது. பதிப்பாளர்தான் கவனமாக இருந்து இதைத் தெரிந்துகொண்டு, புத்தகங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு புத்தகத்தைப் பதிவு செய்ய 50 ரூபாய் டிடி எடுக்கவேண்டும். ஒரு புத்தகத்தின் இரண்டு படிகளையும் தரவேண்டும். பரிசீலனைக்குப் பின்னர் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

320 பக்கங்கள் வரைக்குமான புத்தகங்கள் ஆயிரமும், அதற்கு மேல் பக்கங்கள் உள்ள புத்தகங்களை ஒரு குத்துமதிப்பாகவும் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு புத்தகத்திற்கு என்ன விலை கொடுப்பது என்பதை அரசே தீர்மானிக்கும். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலை இது. 16 பக்கங்கள் கொண்ட ஒரு டெமி சைஸ் புத்தகத்திற்கு ரூபாய் 3.90 என நினைக்கிறேன். இதில் என்ன கொடுமை என்றால், பதிப்பாளர் எந்த விதமான தாளை அச்சுக்குப் பயன்படுத்தி இருக்கிறார், எந்த விதமான அட்டையை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நல்ல தாளில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும், நியூஸ் ரீலில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும் ஒரே விலை 3.90தான். இதனால் சில பதிப்பாளர்கள் நூலக ஆர்டர் கிடைத்ததும் அச்சிடும் புத்தகங்களை சாதாரண தாளில் அச்சடித்து செலவைக் குறைத்துக்கொள்கிறார்கள்.

பொதுவாக, ஒரு பதிப்பாளர் எந்த நூலை சமர்ப்பிக்கிறாரோ அதே நூலின் தரத்தில் நூலகத்திற்கான புத்தகங்களின் தரத்தையும் வைத்திருக்கவேண்டும். ஆனால் இப்படி நிகழ்கிறதா என்று நூலகத்துறை சோதனை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. பத்தாண்டுகளாக ஒரே விலையை வைத்திருக்கும் அரசு, அதில் என்ன செய்து செலவைக் குறைக்கலாம் என பதிப்பாளர்கள்.

நூல்களை சமர்ப்பித்துவிட்டால், உடனே நூலகத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்துவிடாது. 2007ல் வந்த புத்தகங்களை 2008 பிப்ரவரியில் தேர்வுக்குச் சமர்ப்பித்தார்கள் பதிப்பாளர்கள். இதுவரை புத்தகங்களின் தேர்வு வெளியிடப்படவில்லை! இதுவாவது பரவாயில்லை. 2006ல் வெளியான புத்தகங்களின் தேர்வு 2008ன் பாதியில்தான் வெளியானது. இதுபோக, 2004 அல்லது 2005ல் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அடுத்த வருடம் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்களாம். இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நடக்கும்.

இந்தக் கூத்து முடிந்தால் அடுத்த கூத்து தொடங்கும். ஆயிரம் புத்தகங்களை அரசு தேர்ந்தெடுக்கும். அதை எல்லா நூலகங்களுக்கும் (தமிழகம் முழுவதும் 30 நூலகங்களுக்கு அனுப்பச் சொல்லுவார்கள்) அனுப்ப ஒரு மாத கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்படும். எல்லா பதிப்பாளர்களும் ஒரே நேரத்தில் அச்சுக்கூடங்களை நெருக்க, ஒரு மாதத்துக்குள் அனுப்ப முடியுமா முடியாதா என்ற நெருக்குதலில்தான் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த கால அவகாசத்தை மூன்று மாத காலம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே. ஒரு நூலகத்திற்கு நான்கு புத்தகங்கள் (ஒவ்வொரு புத்தகமும் அதிகபட்சமாக 40 பிரதிகள்) கொண்ட ஒரு பார்சலை அனுப்ப கிட்டத்தட்ட 400 ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி 30 நூலகங்களுக்கு அனுப்பவேண்டும். இந்தச் செலவை அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்பது யாருக்குமே தெரியாது. இதுபோக வண்டிச் செலவு, பேக்கிங் செலவு என பல உண்டு. இவை எல்லாமே அந்த 3.90ல் அடங்கவேண்டும்.

அடுத்த கூத்து தொடங்கும். புத்தகம் கிடைத்ததும் பணம் கிடைக்காது. நினைத்த நேரத்தில் நூலகங்கள் பணம் அனுப்பும். ஏன் அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது. கேட்டால் அனுப்புவோம் என்பார்கள். இப்படியாக 2007ல் பதிப்பாளர் அச்சடித்த புத்தகங்கள், 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்டு (இது விரைவு என்று பொருள்!) 2010ல் பணம் வந்துவிடும்.

திடீரென்று ஒரு நூலகர் பதிப்பாளரை அழைப்பார். அவர் அனுப்பியதில் சில பிரதிகள் இல்லை என்றும் உடனே அனுப்பவும் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிடுவார். பதிப்பாளர் சிரமேற்கொண்டு இதை அனுப்பிவைக்கவேண்டும். அப்படி மிஸ்ஸாக சான்ஸே இல்லையே என்று பதிப்பாளர் யோசித்தால், அவர் புத்தகம் அனுப்பாத வரை பணம் வராது.

இதெல்லாம் நடைமுறை கஷ்டங்கள் என்றால், அரசு அமைக்கும் குழு எப்படி புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர். குழு புத்தகத்தைப் படித்து அதைத் தேர்வு செய்யவேண்டும் என்பது விதி. குழு உறுப்பினர்கள் இந்த விதியையாவது படித்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் முன்னட்டையைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதுதான் நடைமுறை என்கிறார்கள். அட்டைப்படத்தில் ஏதேனும் கடவுளின் படமோ, மத சம்பந்தமான படமோ இருந்துவிட்டால் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அறிவுஜீவிகளின் வழியே நூலகத்திற்கான அறிவுக்கண்கள் திறக்கவேண்டும்!

நூலகம் என்பதையும் அதன் வழியே நிகழவேண்டிய அறிவுப் புரட்சியையும் பற்றிக் கொஞ்சமாவது உணர்ந்தவர்கள் இருந்தால், நூலகத்திற்கான புத்தகத் தேர்வு பற்றி சிந்திப்பார்கள். எல்லாவற்றையும் வாக்கு அரசியலாகவும், சிபாரிசு அரசியலாகவும் நினைக்கும் இந்த அரசுகள் நூலகத்துறையையும் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன. ஒரு பதிப்பாளர் அவரது புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, பணம் கொடுக்கவேண்டி வந்ததாகச் சொன்னார். உண்மையா பொய்யா எனத் தெரியாது.

பாரதியின் எழுத்துகளைத் தேடி, அதைக் காலவரிசையாகத் தொகுப்பதையே தன் வாழ்நாள் கடமையாக நினைத்துச் செயல்படும் சீனி விசுவநாதனின் புத்தகம், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பாகம் 6 என நினைக்கிறேன், அரசால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தக் கிழவர் பேருந்தைப் பிடித்து, அலையாய் அலைந்து, மனு கொடுத்து….

மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ’நிமிர வைக்கும் நெல்லை’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் நூலகத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர் அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்தார். ஏன் தன் புத்தகம் தேர்வு செய்யப்படவில்லை என்று காரணம் கேட்டும், எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதன் விளக்கம் கேட்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு என்ன ஆனது என்பது தெரியாது. ஆனால் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ‘நிமிர வைக்கும் நெல்லை’ புத்தகத்திற்கு நூலக ஆர்டர் கிடைத்தது. அப்போது அரசு சார்பில் வாய்மொழியாக ‘இப்படி ஏன் தன் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைக்கவில்லை என்று கேட்டுவரும் பதிப்பாளர்களின் புத்தகங்க்ளுக்கு ஆர்டர் கொடுத்து பிரச்சினையைத் தீர்த்துவிடுங்கள்’ என்று சொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.

இந்தப் புண்ணியத்தில், பாரதியின் காலவரிசைப்படுத்தபட்ட புத்தகத்திற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்தது! (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என்றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம்!)

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு விருது வழங்கப்படும். தமிழினியின் வெளியீடாக வந்த ‘தேவதேவன் கவிதைகள்’ புத்தகத்திற்கு விருது கிடைத்தது. அப்புத்தகம் நூலகத்துறையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்தப் புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது என்றாவது பார்த்தால் நல்லது! மீண்டும் அலைச்சல், மனு. பின்னர் நூலக ஆர்டர். இப்படி இருக்கிறது நூலகத்துறையின் செயல்பாடு.

சில புத்தகங்களின் முதல் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது. இரண்டாம் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நூலக வாசகர்களின் கொடுமையை நினைத்துப் பாருங்கள்.

பதிப்பாளர்கள் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்க அறிவுறுத்தி, வாசகர்களிடையே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை அதிகமாக அருளுரை வழங்கலாம். ஆனால் நூலகத்துறைக்குப் புத்தகங்களை எடுப்பது என்பது, பதிப்பாளர்களுக்கு போடப்படும் பிச்சை அல்ல. அது அரசின் கடமை. இதில் ஜனநாயகத்தன்மை என்பது எள்ளளவும் இல்லை என்பது அதைவிடப் பெரிய மோசடி. எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்கிற விவரங்கள் பதிப்பக வாரியாக பொதுவில் வெளியிடப்படவேண்டும். எந்த எந்த புத்தகங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற குறிப்பு தயாராக இருக்கவேண்டும். ஏதேனும் பதிப்பாளர் அதை அறிய விரும்பினால், அதுகுறித்து மேல் வழக்கு நடத்த விரும்பினால் அதற்கான வழி தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பதிப்பகமும் எத்தனை புத்தகங்கள் ஆர்டர் பெறுகின்றன, அவை எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன என்பது பொதுவில் வைக்கப்பட்டுவிட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதுவரை இது நிகழவில்லை. ஒரு பதிப்பாளருக்கு இந்த விவரம் வேண்டுமென்றால் தகவலறியும் உரிமைச்சட்டத்தில்தான் இதைத் தெரிந்துகொள்ளமுடியும். கவிதைப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை என்று லதா ராமகிருஷ்ணன் வார்த்தை இதழில் எழுதினார். அவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இது தெரிந்திருக்காது. அதனால் எந்தப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை பொதுவிலேயே வெளியிட அரசு ஆவன செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களுக்கான தொகை, அப்புத்தகத்தின் தரத்தின் அடிப்படையில் அமையவேண்டும். என்ன தாள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்ன அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் புத்தகத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதேபோல் ஒட்டுமொத்த புத்தகங்களையும் பதிப்பாளர்கள் தங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் சமர்ப்பிக்க வழி செய்யப்படவேண்டும். அங்கிருந்து மற்ற நூலகங்களுக்குப் புத்தகங்களை அனுப்புவதை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு என்பது பணம் கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிடும் அமைப்பு இல்லை என்பதை உணரவேண்டும்.

ஒரு வருடத்திற்கான புத்தகங்களைத் தேர்வுக்குச் சமர்ப்பித்ததும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் அறிவிக்கப்படவேண்டும். ஒரு வருடத்தில் தோராயமாக 10,000 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படலாம். உதவிக்குழு ஒன்று அமைத்து இதில் 3000 புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, அவற்றில் இருந்து தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை மேல்மட்டக்குழு தேர்ந்தெடுக்கலாம். (இப்போதும் இப்படித்தான் இருக்கிறது, ஆனால் நடப்பதில்லை!) தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிப்பாளருக்குப் பணம் அனுப்ப உத்தரவிடவேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்தச் சொல்லி அரசு உத்தரவிடவேண்டும்.

எப்போது ஆர்டர் வரும், எப்போது பணம் வரும் என்று பதிப்பாளர்களைப் பிச்சைக்காரர்களைப் போல் அரசு வைத்திருப்பது மோசமானது. நூலகமும், புத்தகமும் நாட்டிற்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த அரசு இப்படி மெத்தனமாக நடந்துகொள்ளாது.

நம்மை ஆளும் கழக அரசுகளுக்கு தற்போது வரும் தமிழ்ப்புத்தகங்கள் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் இன்னும் அண்ணாவிடமிருந்தும், கல்கியிடமிருந்தும், மு.வரதராசனாரிடமிருந்தும், இவை நீங்கலாக நெடுநல்வாடை, பதினென்கீழ்கணக்கு நூல்களின் பிடியில் இருந்து வெளிவந்தபாடில்லை. தனியார் நூலகம் தொடங்க விரும்பும் ஒருவருக்கு அரசு பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல் பார்த்தேன். அவை புத்தகங்களின் பட்டியல் அல்ல. அரசியலின் பட்டியல். எல்லாம் சங்ககால நூல்கள், கண்ணதாசனின் நூல்கள், கல்கியின் நூல்கள், அண்ணாவின் நூல்கள், நெஞ்சுக்கு நீதியின்றி சில நூல்கள். 1970ஐத் தாண்டவில்லையே என நினைத்தால், சரியாகத் தாண்டியிருக்கிறார்கள். வைரமுத்துவின் நூல்கள், கொடுமையிலும் கொடுமையாக பா.விஜய்யின் நூல்கள். எங்கே போனார்கள் மற்றக் கவிஞர்கள்? எங்கே போயின மற்ற நூல்கள்? பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி? சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம்!’

Share

செங்குதிரையும் இருட்பாம்பும் (நாள் 5)

செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட முத்துராமன் பெற்றுக்கொண்டார். இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை ப்ரவாஹன் வெளியிட கணேசன் பெற்றுக்கொண்டார்.

முகில் எழுதிய செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட்டுப் பேசினார். வரலாற்றில் தனக்கு அதிக அறிவு இல்லை என்பதால் இந்த நூலை வெளியிட்டு எப்படி பேசுவது என்று யோசித்ததாகவும் அதற்கான சில ஆயத்த முயற்சிகளைச் செய்ததாகவும் பிரகாஷ் கூறினார். இணையத்தில் செங்கிஸ்கான் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகவும், செங்கிஸ்கான் குறித்த ஆவணப் படம் ஒன்றைப் பார்த்ததாகவும், அதன் பின்னரே இந்த நூலில் அவரால் எளிதில் அவரைப் பொருத்திக்கொள்ளமுடிந்தது என்றும் பிரகாஷ் சொன்னார். செங்கிஸ்கானின் போர்த்தந்திரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பிரகாஷ், செங்கிஸ்கானின் வெற்றிக்கான முறைகளாக பத்துக் கட்டளைகளைக் குறிப்பிட்டுச் சொன்னார். பொதுவாக கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்களின் நடை, பா.ராகவனின் பாதிப்பில் இருக்கும் என்றும், ஆனால் இப்புத்தகத்தின் நடை அதிலிருந்து விலகி இருப்பதை தன்னால் கவனிக்கமுடிந்தது என்றும் குறிப்பிட்டார். முகிலின் உழைப்பைப் பற்றிப் பாராட்டிய பிரகாஷ், இந்நூல் மிக எளிமையான முறையில், மிக அழகாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது என்றும், இதற்காக உழைத்த முகிலைப் பாராட்டியும் பேசினார்.

குணசேகரன் எழுதிய இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை வெளியிட்டு ப்ரவாஹன் பேசினார். ப்ரவாஹன் (ஆய்வாளர், Sishri.org) சிறந்த பேச்சாளர் என்பதை நான் அறிவேன். அதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் வண்ணம் மிகச் சிறப்பாகப் பேசினார். ஒரு இண்டலெக்சுவல் தன்மையோடு, நூலை மிக ஆழமாக விமர்சனம் செய்தார். இருளர்கள் போன்ற ஒரு சமூகத்தைப் பற்றிய ஒரு நூல் நிச்சயம் தேவை என்கிற நிலையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சியையும் அந்நூலின் ஆசிரியர் குணசேக்ரனின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்நூலில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற ஒரு மானுடவியல் சார்ந்த புத்தகத்தை வெளியிடும்போது, பதிப்புக்குழு இன்னும் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், புத்தகத்தின் துறைசார்ந்த ஒருவரிடம் கொடுத்து புத்தகம் பற்றிய கருத்துகளைப் பெறவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிலையில் ஒரு கருத்து ஒரு புத்தகத்தில் வந்துவிட்டாலே அது உண்மை என்று நம்பப்படுகிறது; அதனால் இதுபோன்ற புத்தகங்களில் அதிகம் கவனத்தோடு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆரியப் படையெப்டுப்புப் பற்றிப் பேசிய ப்ரவாஹன், அது இப்புத்தகத்தில் தவறாகக் கையாளப்பட்டுள்ளது என்று சொன்னார். தஸ்யுக்கள் எனப்படுபவர்கள் இருளர்களாக இருக்கமுடியாது என்று குறிப்பிட்டார். பல்வேறு நிலங்களில் அலைந்து திரிந்தவர்கள் என்று சொல்லப்படும் இருளர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்ததாக நூலாசிரியர் எழுதியிருப்பதும் சரியல்ல என்றார். அதேபோல் இருளர்கள் கடல்கன்னிகளை வழிபடும் மரபு ஒன்று உள்ளது என்றும், அதுபற்றி இப்புத்தகத்தில் குறிப்புகள் இல்லை என்றும் அது விடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. இருளர்கள் பற்றிய கேள்விகள் தொடங்கின. தரவுகள் இல்லை என்று சொல்லி மறுத்துப் பேசிய ப்ரவாஹன் அதற்கான தரவுகளைத் தராமல் யூகத்தில் மட்டுமே பேசியதாகவும், ஆனால் அந்த யூகம் ஓர் ஆசிரியருக்கு மறுக்கப்படுவது ஏன் என்றும் லக்கிலுக் கேட்டார். பதிலளித்த ப்ரவாஹன், ஒரு நூல் எழுதப்படும்போது ஒரு கருத்தைச் சொல்ல முற்படும்போது அதற்கான தரவுகளோடு எழுதவேண்டும் என்று தான் சொன்னதாகவும், தான் பேசும்போது கூட ஒரே ஒரு கருத்தை மட்டுமே (கடல் கன்னிகள் சார்ந்தது) யூகத்தின் அடிப்படையில் சொன்னதாகவும், அதையும் தான் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாகவும் சொன்னார். மேலும், தரவுகளோடு ஒப்பிடவேண்டிய, தரவுகளைக் கேட்கவேண்டிய விஷயங்களைக் கூட, ஆசிரியரின் குறைகளாகச் சொல்லாமல், அதை பதிப்புக்குழுவின் குறைகளாகவே முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். ஆரியப் படையெடுப்பு என்பது நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா அல்லது ஆரியப் படையெடுப்பு நடந்ததற்கான காரணங்களை மறுப்பதன்மூலமே அது நடக்கவில்லை என்கிறீர்களா, தஸ்யுக்கள் என்பவர் யாராக இருக்கமுடியும் என்ற கேள்விகளைக் கேட்டேன். ஆரியப்படையெப்பு பற்றி மிக நீண்ட விளக்கங்களைத் தரமுடியும் என்றும், அதற்கான தரவுகளைத் தான் தயாராக இருப்பதாகச் சொன்ன ப்ரவாஹன், தஸ்யுக்கள் என்பவர்கள் நிஷகாதர்களாகவே இருக்கமுடியும் என்று குறிப்பிட்டார். மூவேந்தர்கள் திராவிடர்களா என்பன போன்ற கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார். மானுடவியல் ஆய்வுமூலம் வெளியாகும் கருத்துகளைக் கொண்டு இனம் பற்றிய முடிவுக்கு வரலாமா என்பது பற்றிய கேள்விக்கு, மானுடவியலில் நடந்த பல்வேறு ஆயுவுகளை வெளியிடாமல் இந்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் அது வெளிக்கொண்டுவரும் முடிவுகள் அதுவரை இருந்த கருத்தியல்களை உடைக்கும் என்பதால் இப்படி ஒரு நிலை என்பதாகவும் கனடா வெங்கட் குறிப்பிட்டார். (நான் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. இது பற்றிய நீண்ட விவாதம் நிகழ்ந்தது. கல்வெட்டாய்வாளர் இராமசந்திரன் தனது கருத்துகளைச் சொன்னார். தொல்லியல் ஆய்வு, பாப்ரி மசூதி, இந்திரா காந்தி என நீண்ட இந்த விவாதத்தை ஒலிப்பதிவாகக் கேட்டுக்கொள்ளவும். வெங்கட்ரமணன் மிகச் சிறப்பாகப் பேசினார். ) இருளர்கள் புத்தகத்தை இருளர்கள் பார்த்தார்களா, எப்படி உணர்ந்தார்கள் என்று கேட்டபோது, இருளர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்புத்தகத்தின் மூலமாகவே சாதிச் சான்றிதழ் பெற முடிந்தது என்றும், இருளர் இனத்தைச் சேர்ந்த இன்னொருவர் இப்புத்தகத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டியதாகவும் (இன்னும் ஒரு கருத்தைச் சொன்னார் குணசேகரன். மறந்துவிட்டது.) சொன்னார்.

செங்கிஸ்கானின் கேள்விகள் தொடங்கின. செங்கிஸ்கான், பின்பு நெப்போலியன், பின்பு ஹிட்லர் என வரிசைப்படுத்திக்கொண்டால், செங்கிஸ்கானின் முக்கியத்துவம் என்ன, அவர் ஏன் போற்றப்படவேண்டும், அவரது போர்முறைகள் என்ன என்ற பத்ரியின் கேள்விக்கு முகில் விரிவாகப் பதிலளித்தார். போர்முறைகளே செங்கிஸ்கானின் மிக முக்கியமான பங்கு என்றும், சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றாக்கியது, வென்ற இனக்குழுக்களில் இருந்தே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து செங்கிஸ்கானின் தாய் வளர்த்தது போன்ற முறைகளைக் குறிப்பிட்ட முகில், இந்த தந்திரமுறைகளே செங்கிஸ்கானை முக்கியமானவராக்குகிறது என்றார். செங்கிஸ்கான் என்கிற பெயர் ஏன் வந்தது என்ற கேள்விக்கு செங்கிஸ்கான் என்பது நீல ஓநாய்களின் தலைவன் என்ற பொருள் என்று சொன்னார் முகில். அப்போது குறுக்கிட்ட அதிஷா (ஆதிஷா அல்ல!), செங்கிஸ்கான் என்றால் இடியோடு தொடர்புடைய பெயர் என்றும், இடியால் வென்றதால் அப்பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு என்றும், மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்னர் சவுதி வெற்றிக்குப் பின்னர் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் செங்கிஸ்கானுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்றார் முகில். கான் என்பது அரசன் என்ற பொருளில் வழங்கப்படுவதாகச் சொன்னார். செங்கிஸ்கான் என்ற பெயரே, ஜிங்கிஸ்கான் என்பதுபோன்ற பல்வேறு உச்சரிப்பில் அழைக்கப்படுவதாக விவரித்தார்.

நேற்றைய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு தோழர் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இந்தக் கேள்வியைக் கேட்க சொன்னார். ‘ஆஞ்சநேயர் இருளரா?’

நான் எதாவது இப்படி கேட்கப்போக, அதற்கான தரவுகள் இருக்கின்றன என்று ப்ரவாஹன் ஆரம்பித்துவிட்டால் என்னாகும் என எனக்கு வந்த பயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டேன்.

(இந்தக் கூட்டத்தில் பேசியவை, கேள்விகளின் மீதான கலந்துரையாடல் போன்றவற்றை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன். அதனால் தவறுகள் இருக்கலாம். எனவே பத்ரி பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஒலித்துண்டைக் கேட்பது மட்டுமே மிகச் சரியானதாக இருக்கும்.)

அனைத்து தோழர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் ஹனுமந்த ஜெயந்தி வாழ்ந்த்துகள்!!!

Share

விண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா (நாள் 4)

நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை ஜே.எஸ். ராகவன் வெளியிட ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டார். விண்வெளி புத்தகத்தை பத்ரி வெளியிட முரளி கண்ணன் பெற்றுக்கொண்டார்

ராமதுரை எழுதிய விண்வெளி புத்தகத்தை வெளியிட்டு பத்ரி பேசினார். தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்கள் மிகக் குறைவு என்கிற நிலையில், ராமதுரை எழுதும் அறிவியல் புத்தகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். பெ.ந. அப்புசாமி போன்ற ஒன்றிரண்டு அறிவியல் கட்டுரையாளர்கள் மட்டுமே கண்ணுக்குத் தென்படுகிற நிலையில், கிழக்கு பதிப்பகம் ராமதுரையைக் கண்டறிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மிக எளிய தமிழில், யாருக்கும் புரியும் வண்ணம் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை மிகவும் சிலாகித்த அவர், ராமதுரை பயன்படுத்தும் உவமைகள் அப்படியே மனதுக்குள் தங்கிவிடுவதைப் பற்றிச் சொன்னார். பூமியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சுற்றும் ஒரு பொருளின் எடை என்பது முக்கியமற்றதாகிறது என்பதை விளக்க ராமதுரை கையாண்டிருக்கும் உவமை, ‘சுற்றுப்பாதையில் ஒரு அம்மிக் கல் சுற்றினாலும், ஒரு கரண்டி சுற்றினாலும் இரண்டு ஒரே வேகத்தில் சுற்றும்’ என்பதாகும் என்று எடுத்துக்காட்டிய பத்ரி, அந்த உவமை எப்படி ஒரு விஷயத்தை எளிமையாக விளக்குகிறது என்பதைப் புகழ்ந்தார். விண்வெளி மட்டுமன்றி, ப்ராடிஜி வெளியீடு மூலமாக மாணவர்களுக்கான அறிவியல் புத்தகங்களை ராமதுரை எழுதும் விதத்தையும் சிலாகித்தார். ஓர் அறிவியல் தாத்தாவைத் தான் கண்டறிந்திருப்பது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என்றும் தானும் அறிவியல் கட்டுரைகள் எழுதும் வகையில் ராமதுரையே தனது முன்னோடி என்றும் பத்ரி குறிப்பிட்டார்.

இரா. முருகன் எழுதிய நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை வெளியிட்டு ஜே.எஸ். ராகவன் பேசினார். தன்னால் நகைச்சுவையாக மட்டுமே பேசமுடியும் என்றும், வோல்ட்டேர் அல்லது சூஃபியிசம் போன்ற ஆழமான கருத்துகளைப் பேசமுடியாது என்றும், அப்படி யாரேனும் எதிர்பார்த்து வந்திருந்தால் அவர்கள் ஏமாற்றம் அடையவேண்டியிருக்கும் என்றும் ஆரம்பித்திலேயே குறிப்பிட்டார். தொடர்ந்து ந்கைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த ஜே.எஸ்.ராகவன், புத்தகத்தில் இருந்து எந்தவொரு கேரக்டர் பற்றியும் தான் விளக்கப்போவதில்லை என்றும், அது தன் வாழ்க்கையில் எப்படி தன்னை பாதித்தது என்பதை முன்வைத்து, தன் வாழ்க்கையில் உள்ள கேரக்டர்கள் பற்றி மட்டுமே பேசப்போவதாக நான்கைந்து முறை சொன்னார். இரா. முருகனின் எழுத்து சுயிங்கம் அல்ல, பாதாம் அல்வா என்றெல்லாம் குறிப்பிட்டார். சும்மா இரா முருகன் என்பதுதான் இரா முருகனின் சுருக்கம் என்று சொல்லி பட்டிமன்ற நினைவுகளை மீட்டினார். அவர் பேசப் பேச நிறைய நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிய பட்டை அடித்துக்கொண்டு தனது நிறத்தை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டிய ராம்கியும் அப்போது ஏன் சிரித்தார் என்பது புரியாத புதிர். ஜே.எஸ். ராகவன் புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சமும், தன் வாழ்க்கையில் அது எப்படி நினைவுகளைக் கிளறுகிறது என்பது பற்றி நிறையவும் பேசினார். இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இவர் பேசியிருந்தால், அது வரலாற்றின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக இருந்திருக்கும். மயிலாப்பூர் டைமிஸில் தொடர்ந்து 7 வருடங்கள் எழுதுவதாகக் குறிப்பிட்டபோது, அவரது வாசகர்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. சும்மா இரா முருகனின் நாஸ்டால்ஜியா நினைவுகளின் தொகுப்பு எந்த ஊரை மையமாகக் கொண்டது என்கிற விவரிப்பு இல்லை, அது சிவகங்கையாக இருக்கலாம் என்றார் ஜே.எஸ். ராகவன். ஆர்.கே. நாராயண் மால்குடி (மல்லேஸ்வரம் மற்றும் லால்குடியின் இணைப்பு) என்ற ஒரு கற்பனையூரை உருவாக்கியதுபோல, இரா. முருகனும் ஓர் ஊரை நம் கண்முன் கொண்டுவந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். முன்னுரையில் கிரேஸி மோகன், ‘சுஜாதாவின் ஆவி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இரா. முருகனுக்குள் வந்துவிட்டது’ என்று எழுதியிருப்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஒவ்வொருவருக்கும் ஓர் எழுத்துப் பாணி உண்டென்றும், அது இரா. முருகனுக்கும் உள்ளது என்றும் குறிப்பிட்டு இரா. முருகனை வாழ்த்தினார்.

ஜே.எஸ். ராகவனைப் பற்றிப் பேசிய பா.ராகவன், இன்று நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதும் ஒரே எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் மட்டுமே என்று புகழ்ந்தார்.

கலந்துரையாடல் தொடங்கியது. தமிழில் ஏன் அறிவியல் கட்டுரைகள் வளரவில்லை என்று கேட்டதற்கு, கிழக்கு பதிப்பகம் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று ராமதுரை குறிப்பிட்டார். அறிவியல் கட்டுரைகளில் சில தொழில்நுட்ப, அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதா இல்லை தமிழ்ப்படுத்துவதா என்று கேட்கப்பட்டதற்கு, தமிழில் சாத்தியமில்லை என்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஆனால் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது என்கிற அரசுமுடிவு சரியானதுதான் என்றும் குறிப்பிட்டார். இரா. முருகன், தான் என்னதான் தமிழில் எழுதினாலும் கல்கி உள்ளிட்ட இதழ்களில் அதை ஆங்கிலத்திலேயே எழுதுவதாகவும், காரணமாக மக்களுக்குப் புரியாது என்று சொல்வதாகவும் குறிப்பிட்டார். சுஜாதா எழுதும்போது ஆரம்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான ஆங்கில வார்த்தையை அதனருகில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுவிட்டு, அக்கட்டுரை முழுக்கத் தமிழிலேயே பயன்படுத்துவார் என்று சிலாகித்தார். ‘நீங்களும் ஏன் அதைச் செய்யக்கூடாது’ என்று நான் கேட்டதற்கு, கல்கி அதை அனுமதிப்பதில்லை என்றார். நாவல், கட்டுரை, அறிவியல் கட்டுரை என்று 3 தளங்கில் எழுதும்போது, ஒன்றிலிருந்து இன்னொன்று எப்படி மாறமுடிகிறது என்று பாரா இரா. முருகனைக் கேட்டார். தன்னுடைய நான்காவது தளமாக திரைக்கதை எழுதுவதைக் குறிப்பிட்டுவிட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதில் சிக்கல் இல்லை என்றும், ஒன்று எழுதி போரடிக்கத் தொடங்கும்போது அடுத்த வகையை எழுதத் தொடங்குவதாக இரா. முருகன் பதில் சொன்னார். தன்னால் அது இயலவில்லை என்று பாரா குறிப்பிட்டார்.

விண்வெளி ஆராய்ச்சியைப் பற்றி பழங்காலத் தமிழர்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்று நான் கேட்டேன். விண்வெளி ஆராய்ச்சியே உலகின் முதல் அறிவியல் சிந்தனை என்று குறிப்பிட்ட ராமதுரை, பழங்கால மக்களுக்கு மின்சாரம் இல்லாததால் இரவில் அவர்கள் வானத்தையே நோக்கிக்கொண்டிருந்தார்கள் என்றும் அதன் மூலம் தங்கள் அனுபங்களைக் குறித்து வைத்தார்கள் என்றும், அனுபவத்தின் மூலம் என்பதால் அதில் தவறுகள் குறைவு என்றும் ராமதுரை குறிப்பிட்டார். என்று மழை வரும் என்று சொல்கிறார்களோ அன்று மழை வருவதில்லையே, ஏன் இந்தக் குழப்பம் என்ற லக்கிலுக்கின் கேள்விக்கு, தானும் அதுகுறித்து ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்ட ராமதுரை, சாட்டிலைட் தரும் தகவல்களுக்கும், அது அறிவிக்கப்படும் நேரத்திற்கும் உள்ள இடையே உள்ள கால அளவு அதிகம் இருப்பது ஒரு காரணம் என்றார். ஜே.எஸ். ராகவன் ஒரு நகைச்சுவை சொன்னார். மற்ற எல்லா நாடுகளிலும் இப்படித்தானே இருக்கிறது என்று சொன்ன எ.எ. பாலாவின் கேள்விக்கு, இந்தியாவில் மட்டுமே அப்படி இருப்பதாக ராமதுரை சொன்னார். தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய கேள்விக்கு, அது தமிழில் தோற்றுவிட்டது என்று ராமதுரை குறிப்பிட, இரா. முருகன் அது தற்போது கொஞ்சம் வேரூன்றி வருகிறது என்று குறிப்பிட்டு, மரத்தடி யாஹூ குழுமம் நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் வந்த அறிவியல் புனைகதைகளை சிலாகித்து, அதில் முக்கியமாக சேவியரின் ஏலி ஏலி கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.

மர்மயோகி வருமா வராதா என்று நாயகன் பாணியில் மிரட்டலான கேள்வியைக் கேட்டு இரா. முருகனை பாரா மிரட்டினார். ‘மருதநாயம்தானே’ என்று தொடங்கிய இரா. முருகன் பின்பு மர்ம யோகி என்று மாற்றிக்கொண்டார். மருத நாயகம்தான் மர்மயோகியா என்கிற சந்தேகம் இனி யாருக்கும் இருக்காது என்று நம்பலாம்.

இரா. முருகனிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க நினைத்திருந்தேன். நேரமாகிவிட்டதால் கேட்கமுடியாமல் போய்விட்டது. நாவலுக்கும் தொடர்கதைக்குமுள்ள வித்தியாசங்கள் (மூன்றுவிரல், விஸ்வரூபம், அரசூர் வம்சம் இவை மூன்றுமே தொடர் வடிவில் வந்தவை), ஆரம்பகாலத்தில் உள்ள எழுத்துக்கும் தற்போதுள்ள எழுத்துக்குமான வித்தியாசங்கள் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். வார்த்தை இதழில் வந்த கட்டுரைகள், நெ.40 ரெட்டைத் தெருவில் உள்ள கட்டுரைகள் உட்பட, இரா. முருகனின் எழுத்தில் இருந்த ஒரு சீரியஸ் தன்மை மெல்ல குறைகிறது என்பது என் அனுமானம். முக்கியமாக, ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதை அவர் விரைவில் இழக்கிறார் என்பது என் கணிப்பு. வாராவாரம் எழுதுவதால் நேரும் பிரச்சினையாக இருக்கலாம். அவரது நகைச்சுவை என்பது கிரேஸி, ஜே.எஸ்.ராகவன் போன்றவர்களின் வெகுஜ ரசனைக்குரியதாகவும் இல்லை, சீரிய தளத்தில் எழுதப்படும் ஆழமானதாகவும் இல்லை, இரண்டுக்கும் இடையில் தத்தளிக்கிறது என்பது என் கருத்து. இதை முதலில் அவர் தாண்டவேண்டும் அல்லது கைவிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். குட்டப்பன் கார்னர் ஷோப் கட்டுரைகளில் ஒன்றில்கூட இரா. முருகனின் முத்திரை இல்லை என்பது ஒரு வருத்தமான விஷயம். குட்டப்பன் கார்னர் ஷோப் என்பது பெயராகிவிட்டால், ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரையில் குட்டப்பனைக் காணவில்லை என்றால், அந்தப் பெயரின் பொருள்தான் என்ன? இது ஒரு மிகச்சிறிய கேள்வி மட்டுமே. ஜே.எஸ்.ராகவனும் கிரேஸி மோகனும் தேடும் வெளியில் இரா. முருகன் இல்லை. அவரது இடம் இன்னும் மேலானது என்பதை யார் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, இரா.முருகன் நிச்சயம் அறிவார். அந்த இடத்திலேயே அவர் இருந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இரா.முருகனின் தேவை. இதற்கான இடத்தை இதழ்கள் தர மறுத்தால், அவர் அதை தன் வலைத்தளத்திலாவது நிறுவவேண்டும்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ராமதுரை அறிவியல் தாத்தாவைப் பற்றி எழுதவேண்டும். பத்ரியும் ஜே.எஸ். ராகவனும் பேசிக்கொண்டிருக்க, தன் கைப்பையைத் திறந்து, வெற்றிலையை எடுத்து, அதை பின்னும் முன்னும் நன்கு துடைத்து, சுண்ணாம்பு தடவி, நான்காக எட்டாக மடித்து வாய்க்குள் வைத்து, மெல்லத் தொடங்கினார். வெற்றிலைத் தாத்தாவின் அறிவியல் உணவு ரசனையின் உச்சம்.

Share

மொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3)


ஒபாமா ப்ராக் புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட அரவிந்தன் பெற்றுக்கொண்டார். ஆயில்ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட தமிழ் சுஜாதா பெற்றுக்கொண்டார்.

ஆர். முத்துக்குமார் எழுதிய ஒபாமா பராக் புத்தகத்தைப் பற்றி சந்திரமௌலி பேசினார். ஒபாமாவின் வெற்றிக்கான உழைப்பு, அமெரிக்காவின் தேர்தல் முறை என்பதைப் பற்றி ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். ஒபாமாவின் வெற்றி, அவர் கருப்பர் என்பதற்காகக் கிடைத்த வெற்றியல்ல என்றார். அவர் தன்னை கருப்பர் என முன்வைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒபாமாவைப் பற்றிய பல்வேறு புத்தகங்களின் எஸென்ஸ் இந்தப் புத்தகம் எனக் குறிப்பிடும் வகையில், ஒபாமா பற்றி இல்லாத தகவல்களே இப்புத்தகத்தில் இல்லை என்று பாராட்டினார். புத்தகத்தின் குறைகளையும் குறிப்பிட்டார். புத்தகத்தில் உள்ள சில எழுத்துப் பிழைகளையும், ஃபார்மட்டிங் பிழைகளையும் குறிப்பிட்டார். இன்னும் நல்ல எடிட்டிங் இருந்திருக்கவேண்டும் என்றும் சொன்னார். கிழக்கு வெளியிட்டிருக்கும் மற்ற புத்தகங்களின் தரத்தில் இருந்து, எடிட்டிங்கை மையமகா வைத்து, இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றார். ஆனால் இத்தகைய சிறிய குறைகள், புத்தகத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் இக்குறைகள் களையப்படவேண்டியவை மட்டுமெ என்றும் குறிப்பிட்டார். பதிலளித்த பத்ரி, சந்திரமௌலி குறிப்பிட்ட பல பிழைகள் ஏற்கெனவே களையப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். உண்மையில் சந்திரமௌலி போன்றவர்கள் முன்வைக்கும் இக்குறைகள் நிச்சயம் பதிப்புக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உருப்படாதது நாராயணனும் பா.ராகவனும், ஒரு சிறிய மாற்றம் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார்கள். முதலில் பன்னிரண்டு நிமிடங்கள் (அது என்ன பன்னிரண்டு நிமிடக் கணக்கு எனத் தெரியவில்லை) நாராயணன் பேசுவார், பின்பு நாராயணனும் ராகவனும் கலந்துரையாடுவார்கள். பின்பு எல்லாரும் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல். இதுதான் விஷயம். நாராயணன் பேசியது, பின்பு அவர் பதில் சொன்னது எல்லாம் சேர்த்தால் 90 நிமிடங்கள் வருமென்றால், அதில் அவர் பேசிய நிமிடங்கள் 50 இருக்கலாம். மீதி 40 நிமிடங்கள் பேச ஆயத்தமாவது, மூச்சு இழுத்து விட்டுக்கொள்வது, ஆள்காட்டி விரலால் மூக்கின் கீழே நெருடிக்கொள்வது, தொண்டையைக் கனைத்துக்கொள்வது என்பது போன்ற கமல்தோஷத்தில் செலவழிந்தன. ஆனால் பேசிய நிமிடங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார். எண்ணெய் அரசியலோடு, உலக அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஆர்வம், அறிவு என்னை வியக்க வைத்தது. பொது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியான அணுகுமுறையில் பதில் சொன்னார். ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றியதாக அவருடைய பேச்சு அமையாமல், ஒரு ஒட்டுமொத்த, அமெரிக்கா சார்ந்த/சம்பந்தப்பட்ட அரசியலை முன் வைத்ததாக அமைந்தது. புத்தகத்தில் குறை சொல்லவேண்டியது சம்பிரதாயம் என்றவர் புத்தகத்தில் உள்ள ஒருசில குறைகளைச் சொன்னார். புத்தகத்தில் உள்ள ஓர் அச்சுத்தவறைச் சொன்னவர், புத்தகத்தின் போதாமையாகச் சொன்னது, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு என்பதைப் பற்றி.

பின்பு எல்லோரும் பங்குபெறும் கலந்துரையாடல் ஆரம்பித்தது. பத்ரியின் முதல் கேள்வியே, நாராயணன் சொன்ன, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு, இந்தியா எப்படி அதை எதிர்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியது. பத்ரி கேட்ட இரண்டு நிமிடக் கேள்விக்கு, பாரா 20 நிமிடங்கள் பதில் அளித்தார். (பாராவிற்குப் பேசத் தெரியாது என்று ஏற்கெனவே நாம் அளித்த செய்தி நினைவில் இருக்கலாம்.) ஆரம்பிக்கும்போது, ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றி, ரிப்பன் பக்கோடாவைக் கொறித்துக்கொண்டே ஆரம்பிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி, தனக்கும் தமுஎச-விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருள் பற்றிய விவாதத்தில், சில விஷயங்கள் இன்று பரிசோதனை முயற்சியில் இருந்தாலும், இன்னும் ஒரு 50 வருடங்களுக்காகவது பெட்ரோலின் தேவை இருந்தே தீரும் என்றார். ஏகப்பட்ட கேள்விகள் இந்த எண்ணெய் அரசியலைப் பற்றி எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் பாரா, நாராயணன், பத்ரி ஆகியோர் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அணு சக்தி என்பது பெட்ரோலுக்கு முழுமாற்றாகமுடியுமா என்ற கேள்விக்கு, அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றார் நாராயணன்.

சத்யா (எம்.டி, நியூ ஹொரைசன் மீடியா), நம்நாட்டில் ஏகப்பட்ட சூரிய சக்தி இருக்க, அதற்கு இதுவரை எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இப்போதாவது இதில் கவனம் செலுத்துவோமா, அது சரியாக வருமா என்றார். அதில் இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போது அதில் இந்திய அரசின் கவனம் குவிந்திருக்கிறது என்றும் நாராயணன் சொன்னார். ஆனால், அணு ஆயுதத்தில் நம் கவனம் இருக்குமளவிற்கு சூரிய சக்தியில் நம் கவனம் இதுவரை இருக்கவில்லை என்றும், தற்போது இருக்கும் கவனமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதுதான் என்றும் சத்யா சொன்னார்.

எண்ணெய் அரசியலின் மீதான கேள்விகள் மிக நீண்டு கொண்டிருக்க, கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லிவிடும் அபாய முடிவிற்கு முத்துக்குமார் சென்ற நேரத்தில், அவரிடம் நான் கேள்வியைத் துவக்கி வைத்தேன். ஏற்கெனவே இரண்டு ஒபாமா புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆர்.முத்துக்குமார் எழுதியிருக்கும் புத்தகத்தின் தேவை என்ன, அது மற்ற புத்தகங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது என் கேள்வி. அதை தான் எழுதிய ஒரு காரணத்திற்காகவே அனைவரும் வாங்கவேண்டும் என்று சொல்லி, பேச்சுக்கலையில் திராவிடப் பாரம்பரத்தியின் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து, மற்ற புத்தகங்கள் ஒபாமாவைப் பற்றி மட்டும் சொல்லிநிற்க, தனது புத்தகம் ஒபாமாவோடு அமெரிக்காவின் அரசியலையும், தேர்தல் முறையையும் முன் வைக்கிறது என்றார். தொடர்ந்து பதிலளித்த பாரா, ஒரு வாழ்க்கை வரலாறு என்பது அவர் பிறந்தார், வென்றார், இறந்தார் என்று சொல்வதல்ல; மாறாக, எந்த முறையில், எந்த இடத்தில் ஒருவரின் வெற்றியும், முக்கியத்துவமும் இருக்கிறது, அதன் பின்னணி என்ன என்பனவற்றை விளக்குவதிலேயே இருக்கிறது, அதை இப்புத்தகம் தெளிவாகச் செய்திருக்கிறது என்று அப்புத்தகத்தின் எடிட்டர் என்கிற முறையில் பதில் சொன்னார். தொடர்ந்து ஒபாமா பற்றிய விவாதங்கள் களைகட்டின. ஒபாமா வென்றதுக்குக் காரணம், கருப்பர்கள் வெறித்தனமாக வருக்கு வாக்களித்ததே என்றார் லக்கிலுக். அது மட்டுமே காரணமல்ல என்று விளக்கினார் பத்ரி. ஸ்ரீகாந்த் இது தொடர்பான தனது கருத்துகளையும் சொன்னார். ஸ்ரீகாந்த் ஒபாமாவை அண்ணன் ஒபாமா என்றார். வைகோ சந்தித்தது ஒபாமாவையா, ஸ்ரீகாந்தையா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துவிட்டது. அமெரிக்கா எந்த நாட்டில் தனக்கு லாபம் வருகிறதோ அங்கு மட்டுமே உதவி என்ற போர்வையில் உள்ளே செல்லும் என்று கிட்டத்தட்ட அனைவரும் சொன்ன நிலையில், அதற்கும் சில எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா அழித்த நாடுகளும் உண்டு, அமெரிக்காவால் வாழ்ந்த நாடுகளும் உண்டு என்றார் ஸ்ரீகாந்து. உதாரணமாக ஜப்பான் என்றார். லாபத்திற்காக மட்டுமே அமெரிக்கா ஒரு நாட்டிற்காகச் செல்லும் என்றால், வியட்நாமை எந்த வகையில் சேர்ப்பது என்றார் சத்யா. ஒரு சில விலக்குகள் நீங்கலாக, அமெரிக்காவின் குணம் அதுவே என்றார் பாரா. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவியது தனது குற்ற உணர்விற்காக என்றார் பத்ரி. ஒபாமா மீது நிறைய எதிர்பார்ப்பு எல்லாருக்குமே உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும், அமெரிக்காவின் இன்றைய நிலையை மேம்படுத்தினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி என்று ஒபாமாவின் தம்பி நம்பிக்கையாகச் சொன்னதோடு கூட்டம் முடிவடைந்தது.

ஒபாமாவின் வெற்றிக்கு அவர் பையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் படமே காரணம் என்ற செய்தி உண்மைதானா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு ஏன் அனைவரும் அப்படி சிரித்தார்கள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு: நேசமுடன் வெங்கடேஷ் பின்நவீனத்துவப் பாணி கேள்வி (அது கேள்வியாக இல்லாமல் பதிலாகவும் இருக்கலாம்!) ஒன்றை எழுப்பினார். அதைப் பற்றி தனியாக ரூம் போட்டு யோசிக்க உத்தேசித்திருக்கிறேன்.

Share