Archive for பொது

காலில் விழுதல்

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒருமுறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட அரசர் போல பேசிக்கொண்டிருந்த அவர் உள்ளே சென்றதும் ஸ்வாமியைக் கண்டதும் யாதுமற்றோர் ஆண்டியாகப் பொத்தென காலில் விழுந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் காலில் விழுந்தேன். அரவிந்தன் அவர் உடல் முழுக்க மண்ணில் பாவ காலில் விழுந்தார். நான் ஸ்டைலாக வேறு வழியில்லாமல் காலில் விழுவது போல விழுந்தேன். காலில் விழுவது என்றாலே ஒருவித அலர்ஜி. 90களில் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏற்பட்ட எரிச்சலால் இருக்கலாம். யார் காலில் யார் விழுவது என்ற விவஸ்தை இல்லாமல் ஜெயலலிதா காலில் எல்லாரும் விழுவது குறித்து பெரிய எரிச்சல் இருந்தது. அதைத் தொடர்ந்து காலில் விழுவதே கேவலம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது. அரவிந்தன் ஸ்வாமிஜி காலில் விழுந்ததும், எனக்கு அவர் காலில் விழவேண்டும் என்ற ஒரு நெருக்கடி உண்டாகி, அதைத் தவிர்க்க முடியாமல்தான் ஸ்வாமிஜி காலில் விழுந்தேன். ஸ்வாமிஜி காலில்தானே விழுந்தோம் என்று மனதை எவ்வளவு தேற்றிக்கொண்டாலும் இப்படி காலில் விழும்படி ஆகிவிட்டதே என்று மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அரவிந்தனிடம் என்ன இப்படி திடீர்னு விழுந்திட்டீங்க, எனக்கும் வேற வழியில்லாம விழவேண்டியதாப் போச்சு என்றேன். எனக்கு விழணும் விழுந்தேன், உங்களுக்கு வேண்டாம்னா விழவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இன்னும் எதாவது கேட்டால், இங்கன பாத்துக்கிடுங்க என்று ஆரம்பித்துவிடுவார் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

22ம் வயதில் எனக்குப் பூணூல் போட்டார்கள். வயதானவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும். அம்மா சொல்ல சொல்ல நானும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருந்தேன். என் அக்காவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் 4 வயதுதான் வித்தியாசம் இருக்கும். ரொம்ப அழகா இருக்காங்கள்ல என்று மரியாதையுடன் அந்த அக்காவை நண்பர்களுடன் சைட் அடித்திருக்கிறேன். எதிர்பாராத ஒரு நொடியில் என் அம்மா அவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்லிவிட்டார். இந்த அம்மாவைக் கொலை செய்தால்தான் என்ற என்று தோன்றிவிட்டது. அந்த அக்கா சென்றதும் என் அம்மாவை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன். என் திருமணத்துக்கு முன்பாக என் அம்மாவிடம் நானே யார் கால்ல விழணுமோ அவங்க கால்ல விழுவேன், நீ சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

இணையக் குழுமம் ஒன்றில் இப்படி காலில் விழுவது பற்றிப் பேச்சு வந்தபோது, காலில் விழுவது தேவையற்ற செயல் என்று சொன்னபோது, அடித்துத் துவைத்துக் காயப் போட்டுவிட்டார்கள். சொந்தக்காரர்கள் காலில் திருமணத்தில் விழுவது வேறு, கண்ட கண்ட மேடைகளில் இப்படி அரசியல்வாதிகள் காலில், குரு என்று சொல்லி மாஸ்டர்கள் காலில் விழுவதையெல்லாம் என்னால் சகிக்கமுடியவில்லை என்று சொன்ன நினைவு. ஆனால் காலில் விழுவதே இந்திய மரபு என்று தீர்ப்படித்துவிட்டார்கள். என்ன இந்திய மரபோ! இந்த இந்திய மரபில் ஏதோ ஒரு வகையில் அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே தோன்றுகிறது. முதலிரவில் கணவன் காலில் மனைவி விழவேண்டும். மனைவி கணவன் காலில் விழவா முதலிரவில் காத்துக்கொண்டிருப்பார்கள்? ஆனால், அத்தை மாமா சொல்லி அனுப்பினாங்க என்று சொல்லி, நான் எத்தனையோ மறுத்தும், 19 வயதுப் பெண் அப்படித்தான் காலில் விழுந்தாள். இந்தச் சடங்கும் நல்லதுக்குத்தான். அதற்குப்பின் நான் எத்தனையோ தடவை கெஞ்சியும் அவள் சொன்ன பதில், நான் என்ன லூஸா உங்க கால்ல விழுறதுக்கு என்பதுதான். வரலக்ஷ்மி விரதத்தில் மட்டும் வேறு வழியில்லை, மனைவி கணவன் காலில் விழுந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்தப் பண்டிகை வருடத்துக்கு ஒருமுறைதான் வந்து தொலைக்கிறது.

தினமும் மனைவி கணவன் காலில் விழுந்தால் குடும்பத்துக்கு நல்லது என்று எனக்குத் தூரத்து உறவான ஒரு அக்காவின் மாமியார் சொல்லிவிட்டார். அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கும்போது அந்த அக்கா தன் கணவனின் காலில் விழுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்பலேர்ந்து இதெல்லாம் என்றேன். மாமியார் சொல்லியிருக்காங்க, குடும்பத்துக்கு நல்லதாம் என்றார். ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தேன். இரவு நெடுநேரம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்படியே தூங்கப் போய்விட்டோம். திடீரென்று அந்த அக்கா ஏன்றீ ஏன்றீ என்று தன் கணவனை பதட்டத்துடன் அழைத்தார். அந்த அண்ணன் ரெண்டு ரூம் தள்ளி ஓரிடத்தில் படுத்திருந்தார். தூங்க ஆரம்பித்திருந்தார். தூக்க கலக்கத்துடன் என்ன என்றார். ஒரு நிமிஷம் இங்க வாங்க, கால்ல விழ மறந்துட்டேன், காலை காமிச்சுட்டுப் போங்க என்றார். அவர் புலம்பிக்கொண்டே எழுந்து வந்து காலைக் காண்பித்தார். அக்கா உடலை கொஞ்சம் கூட நகட்டாமல் படுத்தமேனிக்கு தன் கணவனின் காலை லேசாகத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு தேங்க்ஸ்றீ என்றார். நான் தலையில் அடித்துக்கொண்டேன்.

இத்தனை காலில் விழுதலும் வேறு மாதிரியானது.

நேற்று நாதஸ்வரம் நாடகத்தில் வேறு ஒரு மாதிரியாகக் காலில் விழுந்தார்கள். 4 வாரங்களாக செம அறுவையாகப் போய்க்கொண்டிருந்த நாடகத்தில், இனிமே இந்த எழவைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று புதுக்கதையை நுழைத்து கொன்றெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராமல் உணர்ச்சி மயமான கட்டம் நீண்ட நாள்களுக்குப் பிறகு. நான் முதலிலேயே இந்தக் காட்சியை எதிர்பார்த்தேன். ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு சின்ன பெண்ணின் காலில் விழுகிறது, அவள் வீட்டை விட்டு ஓடிப் போய்விடக்கூடாது என்பதற்காக.

18 வயதில் பாலகுமாரன் நாவல்களை ஒன்றுவிடாமல் படித்துத் தீர்த்துக்கொண்டிருந்தேன். மொட்டைமாடியில் அவள் தலை வழியாக நைட்டியைக் கழற்றினாள் போன்ற வரிகள் எல்லாம் வாழ்நாளுக்கும் துரத்தி அடிக்கும். பதின்ம வயதுகளில் பாலகுமாரனைப் படிக்காமல் விட்டவர்கள் நிச்சயம் எதையோ இழந்தவர்கள்தான். அவரது நாவல் ஒன்றிலும் பழுத்த பிராமணர் ஒருவர் இப்படித்தான் தடால் என்று யார் காலிலோ விழுவார். நாவல் பெயர் நினைவில்லை. அந்த வரியைப் படித்தபோது உடலெங்கும் அதிர்வு பரவியது நினைவுக்கு வந்தது. வேர்கள்.

என் அத்தைக்கு 16 வயதில் திருமணம். என் தாத்தாவுக்கு அப்போது 60 வயது. கல்யாணத்தில் காப்பி வர லேட்டாகிவிட்டது. என் மாமாவின் அக்கா காப்பிக்காக பிரச்சினை செய்து, தன் தம்பியை தாலி கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பெரிய களேபரம் ஆகிவிட்டது. என் தாத்தா தன் கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு கடும் கோபத்தோடு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என் மாமாவின் அக்கா காலில் விழுந்துவிட்டார். எப்படியோ கல்யாணம் ஆகவேண்டும் என்பதற்காக. நான் இதனைப் பார்த்த நினைவில்லை. ஆனால் என் அம்மா உணர்ச்சி வேகத்தோடு தன் மாமனார் காலில் விழுந்ததை விவரித்தது, நான் கூடவே நின்று பார்த்த உணர்வை உண்டாக்கிவிட்டது. ’அத்தனை பேரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. உங்க தாத்தா, நல்ல கனமான உடம்பு. அங்காரக்ஷதை நெத்தில தீர்க்கமா இருக்கும். கோஜன (கோபிக்கட்டி) முத்திரை எல்லாம் பார்த்தாலே பெரிய மனுஷன்னு கும்பிடத் தோணும். ஹெ எம்மா வேற இருந்திருக்காரா ஊர்ல நல்ல மரியாதை. நல்ல படிப்பு. ஆனா முன்கோபி. கோபம் வந்துட்டா என்ன செய்யறோம்னே இல்லை. உங்க பாட்டிக்கு கோவில்தான் கட்டணும். இப்படி ஒரு மனுஷன் கூட் வாழறதே தவம் மாதிரிதான். ஊர் மொத்தமும் கல்யாணத்துக்கு காத்துக்கிட்டு இருக்கு. இவளானா காப்பி வல்லைன்னு குதிக்கிறா. அப்பல்லாம் ஏது ஃபோன்? பால் லேட்டுன்னா என்ன பண்றது? இவ காப்பி இல்லைன்னா கல்யாணம் இல்லைங்கிறா. எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. உங்கப்பா நான் காப்பி வாங்கிட்டு வரேன்னு ஓடறார். இவ பால் வந்து எனக்கு இங்க காப்பி போட்டாகணும்ன்றா. பார்த்தார் உங்க தாத்தா. சபைல அவ முன்னாடி வந்து நின்னார். தோள்ல இருந்த துண்டை எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டார். எப்படியோ கல்யாணத்தை பண்ணுங்கன்னு சொல்லி கை கூப்பிக்கிட்டு பொத்துன்னு சபை முன்னாடி அவ கால்ல விழுந்துட்டார். பஞ்சகச்சை கட்டிக்கிட்டு ஒரு பிராமணன் இப்படி கால்ல விழுறதைப் பாத்துட்டு எல்லாரும் பதறிட்டாங்க. எனக்கானா அழுகை ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம். அவ அருகதை என்ன இவர் தகுதி என்ன. அவ வயசு என்ன இவர் வயசு என்ன. ஆனா கல்யாணம் ஒழுங்கா நடக்கணுமே. அப்புறம் அவ தன் தம்பியை தாலி கட்ட விட்டா. அந்த பிராமணர் கால்ல விழுந்த சாபம் சும்மா விடுமான்னு ஊரே பேசிக்கிட்டு இருந்தது.’

இது நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு எங்கள் தூரத்து சொந்தத்தில் இன்னொரு கல்யாணம் நடந்தது. அங்கேயும் எதோ பிரச்சினை. வீட்டு மாப்பிள்ளையை புது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வீட்டு மாப்பிள்ளை ஆட ஆரம்பித்துவிட்டார். சண்டை பெரிதாகி பெரிதாகி ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையின் தாய் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த புது மாப்பிள்ளை சட்டென முன்னே வந்து, என்னவோ அம்மா தப்பு பண்ணிட்டாங்க, மன்னிச்சுக்கோங்க என்று சொல்லி, கல்யாண வேஷ்டி சட்டையுடன் சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிட்டார். அந்தக் கல்யாணத்துக்கு என் அண்ணாவும் சென்றிந்தார். காலில் விழுந்த கூத்து முடிந்ததும், அந்த மாப்பிள்ளையின் தாய்மாமா என் அண்ணாவைக் காண்பித்துச் சொன்னாராம். இதோ நிக்கிறானே இவன் தாத்தா ஊரே மெச்சின பெரிய மனுஷன். அவரே தன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணுமேன்னு கால்ல விழுந்திருக்கார். நாமல்லாம் எம்மாத்திரம் என்றாராம். 30 வருடங்கள் கழித்து என் தாத்தாவின் செயல் ஒரு மண்டபத்தில் பேசப்பட்டதில் என் அண்ணாவுக்கு இனம் புரியாத சந்தோஷம், பெருமை. எனக்கும் அப்படியே.

என் தாத்தா காலில் விழுந்து 35 வருடம் கழித்து, என் மாமாவின் அக்கா மகனுக்கு கல்யாணம் நடக்க இருந்தது. கல்யாணத்துக்கு 1 மாதம் முன்பு என் மாமாவின் அக்காவின் கணவர் இறந்துவிட்டார். துக்க்கத்துக்கு வந்த என் மாமா தன் அக்காவைப் பற்றி எங்களிடம் சொன்னது, ஒரு பெரிய மனுஷனை காலில் விழ வெச்சா இப்படித்தான் ஆகும் என்றார்.

Share

செக்யூலரிசம் ஓர் எளிய அறிமுகம்

http://www.tamilhindu.com/2010/05/secularism-an-simple-introduction/

* ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமியரை வெட்டுவது போலக் காட்டுவார்கள். அடுத்த காட்சியிலேயே ஒரு ஹிந்துவை வெட்டுவது போல் காட்டினால் அதுதான் செக்யூலரிசம்.

* அதே சினிமாவிலோ வேறொரு சினிமாவிலோ, ஹிந்து கடவுள்களைத் தொடர்ந்து நிந்திப்பார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போல காட்சி வைக்கமாட்டார்கள். இது பாதி செக்யூலரிசம். அதே சினிமாவில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களைப் பாராட்டி காட்சி வைப்பார்கள். இது முக்கால் செக்யூலரிசம். அதே படத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போலக் காட்சி அமைத்து, அதை ஹீரோ எதிர்த்து வீராவேச வசனம் பேசி, திட்டியவரைத் திருத்துவது போலவும் காட்சி அமைப்பார்கள். இதுதான் முழு செக்யூலரிசம்.

* ஹிந்துக் கடவுளர்களைப் பற்றி அரசியல் மேடைகளில் கடுமையாக முழங்குவார்கள். ஐயப்பன் எப்படி பிறந்தார் என்பார்கள். ஆனால் இஸ்லாமிய, கிறித்துவ கடவுளர்கள் பற்றிக் கேள்வி கேட்கமாட்டார்கள். அதுவே செக்யூலரிசம்.

* அல்லா, நபி, ஏசு பற்றி ஏதேனும் கேள்விகளை ஹிந்துத்துவவாதிகள் எழுப்பினால், ‘இது காலம் காலமாகச் சொல்லப்படும் மோசடி’ என்று பதில் சொல்லவேண்டும். இதெல்லாம் பிற்போக்குக் கூச்சல் என்று சொல்லவேண்டும். மத நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்லவேண்டும். இதுவும் செக்யூலரிசமே.

* கருப்புச்சட்டைக்கு ஆதரவான நடிகர் என்று சொல்லிக்கொண்டு, படத்தில் நல்ல விஷயங்களைச் செய்பவர்களை கிறித்துவ ஊழியர்களாகக் காட்டவேண்டும். வில்லன்களை ஹிந்துக்களாகக் காட்டவேண்டும். இது செக்யூலரிசத்தின் இன்னொரு விளக்கம்.

*ஹிந்து மதத்தைச் சாடும் திரைப்படம் வந்தால் ஹிந்துத்துவவாதிகள் அதனைத் தடை செய்யப் போராடும்போது, நீங்கள் கலைக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராடவேண்டும். இது பாதி செக்யூலரிசம். அதுவே மற்ற மதங்களைச் சாடும் படம் வந்தால், கலையையும் அடிப்படை உரிமையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மத நம்பிக்கையாளர்களின் மனம் புண்படுகிறதே என்று அவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும். இது முழு செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். பிராமணர்களைத் திட்டும் பிராமணரல்லாதவரை விடக் கடுமையாக, பிராமணர்களைத் திட்டுவார். இது செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். உலகெங்கும் இருக்கும் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பார். தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடும்போது, நினைவாக பிராமணர்களை ஒதுக்கிவிடுவார். இதுதான் செக்யூலரிசம்.

* தீர்க்கமுடியாத பிரச்சினை வந்தால், இது பிராமணியத்தின் சதி என்றோ ஹிந்து மதத்தின் சதி என்றோ சொல்லிவிட்டால், நீங்கள் செக்யூலர்.

* மிகப் பெரிய இலக்கியவாதியாக இருப்பார். உலகெங்குமுள்ள நல்ல எழுத்துகளை, புராணங்களைத் தேடிப் படிப்பார். ஹிந்து மத சாஸ்திரங்களை மட்டும் நிந்திப்பார். இந்தப் பிழைக்கத் தெரிந்த வழியின் பெயரும் செக்யூலரிசமே.

* ஊர் ஊராகக் கோவிலுக்குப் போவார்கள். வீட்டில் உள்ள நஞ்சு குஞ்செல்லாம் சாமி கும்பிடும். ஆனால் அவர் பெரிய பகுத்தறிவாளராகத் தன்னைக் காண்பித்துக்கொள்வார். பெரியாரிஸ்டுகளைவிட அதிகமாகப் பெரியாரை மேற்கோள் காண்பிப்பார். இது செக்யூலரிசத்தின் முக்கிய பாடங்களுள் ஒன்றே.

* புராதன ஹிந்துப் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்திருப்பார். ஆனால் பேசுவதெல்லாம் ’பகுத்தறிவுத்தனமாக’ இருக்கும். மறக்காமல், தனது திருமணத்தையோ, மகள் கல்யாணத்தையோ, ஜாதி பார்த்து, மதம் பார்த்து, குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து நடத்திக்கொள்வார். இவரே நம் நாட்டின் சிறந்த செக்யூலர். மற்ற செக்யூலர்களும் இந்த செக்யூலரைப் பார்த்துத் தலையாட்டும்.

* கடவுளே இல்லை என்பார். நோன்புக் கஞ்சி குடிப்பார். ‘நான் பிழைத்தது எல்லாம் வல்ல இயற்கையின் சக்தி’ என்று சொல்லிவிட்டு, இயற்கையை வழிபடுவர்களைக் கிண்டல் செய்வார். இவரும் செக்யூலரே.

* புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்.

* ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.

* தமிழுணர்வையும் தமிழனைப் பற்றியும் மேடையாக மேடையாக முழங்கவேண்டும். ஊரில் உள்ள வடமொழிப் பெயர்களையெல்லாம் மாற்றித் தரவேண்டும். உங்கள் பெயரை மாற்றக்கூடாது. இது தமிழுணர்வுதானே என நினைப்பீர்கள். தமிழுணர்விலிருந்து பக்தி வழியாக ஹிந்து மதத்துக்கு வந்து அதனை சாடிவிட்டால், நீங்கள் செக்யூலர்தான்.

* சங்ககாலத் தமிழனுக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு பக்கம் சொல்லவேண்டும். ஆனால் அவன் சிந்தித்த ஹிந்து மத பக்தியை இகழவேண்டும். இதை முக்கியமான வேலையாகச் செய்யக்கூடாது. எப்போதெல்லாம் பொழுது போகவில்லையோ அப்போதெல்லாம் செய்யவேண்டும். இது செக்யூலரிஸத்தின் பிற்சேர்க்கைகளில் ஒன்று.

* ஊரிலுள்ள எல்லாக் கோவிலுக்கும் செல்லவேண்டும். ஏனென்றால் ஒரு செக்யூலரின் மனைவி நிச்சயம் கடவுள் பக்தி உள்ளவராகத்தான் இருப்பார். ஆனாலும் அசரக்கூடாது. கோவிலுக்குச் செல்வதே அங்கிருக்கும் சிலைகளைப் பார்க்கத்தான் என்ற பாவத்துடன் செல்லவேண்டும். என்னே தமிழனின் கைவண்ணம் என்று பேட்டியும் கொடுக்க உங்களுக்கு வக்கிருக்குமானால், உங்களுக்கு செக்யூலர் மாலைதான். (காலையில் சாப்பிடும்போது இட்லிக்கு உங்களுக்குப் பிடித்த வெங்காய சட்னிக்கு பதிலாக தனக்குப் பிடித்த தேங்காய் சட்னி செய்துவிட்ட மனைவியை கண்டமேனிக்குத் திட்டியதை சுத்தமாக மறந்துவிட்டு, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் மனைவியின் கடவுள் நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்து, அடுத்தவர் சுந்தந்திரத்தை மனதில் வைத்து கோவிலுக்குச் சென்றேன் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இதுவும் செக்யூலர் இமேஜையேதான் தரும்.)

விதி 1: இத்தனை விதிகளில் பாதியைக் கடைப்பிடித்தால், நீங்கள் முற்போக்காளர். நான் மிகவும் போராடி இந்த இடத்துக்குத்தான் வந்துகொண்டிருக்கிறேன்.

விதி 2: முழுவதையும் கடைப்பிடித்தால்… கங்கிராட்ஸ். தமிழகத்தின் முதல்வராகவே உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

Share

பபாஸி தேர்தல் – இது எங்க ஏரியா!








================




================



Share

சேவை அமைப்புகளும் ஒரு ஞாயிற்றுக் கிழமையும்

இந்தியா சுடர் என்னும் சேவை அமைப்பு இந்தியாவெங்கும் உள்ள கிராமங்களில் நிறைய சேவைகளை முன்னின்று செய்துவருகிறது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருதல், மாணவர்களுக்கு தனிப்பட்ட மனப்பயிற்சி வகுப்புகள் அமைத்தல், பள்ளிகளில் நூலகங்கள் உருவாக்குதல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அமைத்தல் எனப் பல்வேறு செயல்பாடுகளைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தியா சுடர் ஏற்கெனவே கிழக்கு, ப்ராடிஜி உள்ளிட்ட பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை வாங்கி, பள்ளி நூலகங்களுக்கு வழங்கியிருக்கிறது. இன்று, சென்னையில் உள்ள அனாதை (இந்த வார்த்தையைத் தவிர்க்கவே விரும்புகிறேன். வேறு எந்த வார்த்தை சரியான வார்த்தை எனத் தெரிந்தால், அதனைப் பயன்படுத்துவேன்) அமைப்புகள் பலவற்றைச் சேர்ந்த குழந்தைகளுக்கென பிரத்யேகமாக சில போட்டிகளை நடத்தினார்கள். இந்தியா சுடருன் இணைந்து, ட்ரீம்ஸ் இண்டியா, ஹெல்பிங் மைண்ட்ஸ் உள்ளிட்ட சேவை அமைப்புகளும் இதில் கலந்துகொண்டன. திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, மொழிபெயர்ப்புப் போட்டி, வினாடி வினா போட்டி எனப் பலப் போட்டிகள் நடந்தன.

கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் – என் கனவு’ என்னும் போட்டி நடத்தப்பட்டது.

இந்திய வரலாறு புத்தகத்தைப் படித்த திரு. டி.ஆர். சந்தான கிருஷ்ணன், இந்தப் புத்தகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். அதற்குத் தன்னால் ஆன முயற்சியைச் செய்வதாகச் சொல்லி, இன்னும் சில ஆர்வர்லர்களுடன் சேர்ந்து, இந்தப் புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்குக் கொடுக்க முன்வந்தார். இதனை ஒரு போட்டியின் வழியாகச் செயல்படுத்தினால், மாணவர்களை அது ஊக்குவிப்பதோடு, புத்தகத்தின் மதிப்பும் – அது ஒரு பரிசு என்ற அளவில் – கூடும் என்று கருதி, ‘இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் – என் கனவு’ என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்த விரும்பினார். அதனை கிழக்கு பதிப்பகம் செயல்படுத்துகிறது. இது குறித்த மேலதிக விவரங்களுக்கு: bookstokids.blogspot.com

இந்த இரண்டையும் ஒன்றாகச் செயல்படுத்த முடிவெடுத்து, இந்தியா சுடருடன் இணைந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி இன்று நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ‘இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு’ நூலின் முதல் பாகம் பரிசளிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தபின்பு, அப்புத்தகமும் இந்த மாணவர்களுக்கு தரப்படும்.

வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள், அவர்கள் எழுதிய கட்டுரைகள் bookstokids.blogspot.com வலைத்தளத்தில் பதிப்பிக்கப்படும்.

இந்தத் தலைப்பை முதலிலேயே கொடுக்காமல், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு அறிவித்தோம். சில மாணவர்கள் மிகச் சிறப்பாக எழுதினார்கள் என்றே சொல்லவேண்டும். எல்லா மாணவர்களுக்குள்ளும் ஒற்றுமை என்னும் உணர்வு வேரூன்றியிருப்பதைப் பார்க்கமுடிந்தது. எல்லாரும் சொல்லி வைத்தாற்போல் வறுமையைப் பற்றிப் பேசினார்கள். சில மாணவர்கள் கணினித் துறையில் இந்தியா உலகை ஆளவேண்டும் என்று எழுதினார்கள். லஞ்சம் ஒழியவேண்டும் என்று மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அது எப்படி என்றுதான் தெரியவில்லை. இந்தியா ஒரு வல்லரசு ஆவதில் மாணவர்களுக்குப் பெரும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கமுடிந்தது.

சில மாணவர்கள் வித்தியாசமாகவும் எழுதியிருந்தார்கள்.

ஒரு மாணவர் அப்துல்கலாம் பிரதமராகவேண்டும் என்று எழுதியிருந்தார்.

ஒரு மாணவர் இனி அமெரிக்கா இந்தியாவை ஆளமுடியாது என்றும், ஆளக்கூடாது என்றும் எழுதியிருந்தார்.

ஒரு மாணவர் சுற்றுப்புறச் சூழல் தூய்மை பற்றி எழுதியிருந்தார். அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது அவர் எண்ணம்.

இரண்டு மாணவர்கள் விடுமுறை விண்ணப்பம் எழுதியிருந்தார்கள்.

வித்தியாசமான நாளாக இன்று கழிந்தது.

இந்தியா சுடரைப் பற்றி ஆசிரியர் சண்முக வடிவு சொல்லும் கருத்துகளைக் கேளுங்கள்.

கட்டுரைப் போட்டியில் பங்குபெற்ற மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்களைக் காண்பிக்கும் வீடியோ:

இது போல, கிழக்கு பதிப்பகத்தின் மூலம் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்குப் புத்தகங்களை பரிசளிக்க விரும்புகிறவர்கள் haranprasanna at nhm.in என்னும் முகவரிக்கு மடல் அனுப்பலாம். பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க வேறு ஏதேனும் கருத்துகள் இருந்தாலும் சொல்லவும்.

இது போக, இன்று ஒரு ஆசிரியர் – கரூர் என நினைக்கிறேன் – பேசினார். அவரை வீடியோ எடுத்தேன். ஏதோ ஒரு கணத்தில் அது அழிந்துவிட்டது. 🙁 அதனை எப்படியும் நாளை மீட்டெடுத்துவிடுவேன். அதனைத் தனிப்பதிவாகப் போடுகிறேன். இன்றைய ஹைலைட்டே அந்த அரசு தலைமை ஆசிரியரின் பேசுத்தான். அது அழிந்தது பெரிய வருத்தமாகிவிட்டது. 🙁

Share

கொஞ்சம் மெண்ட்டல் ப்ளாக்

நீண்ட நாள்களாக எதுவுமே எழுதவில்லை. கொஞ்சம் மெண்டல் ப்ளாக். 🙂

நேற்று வந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்யக்கூடாது என்று நினைத்துக்கொண்டே ஞாபகமாக க்ளிக் செய்தேன். உடனே ‘தமிழ்க் கவிதைகள் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுவிட்டது’ என்றார்கள். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எப்போதெல்லாம் ஃபீட் பர்னரில் கவிதைகள் வருமோ அப்போதெல்லாம் எனக்குக் கவிதைகள் வருமாம். சரி, என்ன பெரிய என்று இருந்துவிட்டேன்.

இன்றே ஒரு கவிதை வந்தது.

இன்று சம்பள நாள் என்பது கவிதைத்தலைப்பு. மங்களகரமாகத் தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று மேற்கொண்டு படித்தேன்.

பால்காரனுக்கு இவ்வளவு…
பள்ளிக் கட்டணம் இவ்வளவு…
மளிகை சாமானுக்கு இவ்வளவு…
வீட்டு வாடகைக்கு இவ்வளவு…
தீபாவளி செலவுக்கு இவ்வளவு…
என வரிசையாய்
கணக்கு போட்டபடி
அலுவலகம் வந்து சேர்ந்தேன்…

மாலைக்குள் அத்தனை வேலையையும்
முடித்து விட்டு சம்பளத்திற்காகக்
காத்திருந்தேன்..!
அழைத்துச் சொன்னார் முதலாளி
இம்மாதம் சம்பளமில்லை
அடுத்த மாதம் பார்க்கலாமென்று.

என்னுடைய அத்தனை
கணக்குகளும்
இந்தியனின் எண்கணிதக்
கண்டுபிடிப்பில் வந்து நின்றன..!

ஏமாற்றத்தோடு
வீடு திரும்பினேன்…
சிரித்தபடி வரவேற்ற
என் இல்லாள்
விபரமறிந்ததும்
வாடி நின்றாள்..!

எனைப் பார்த்து ஓடி வந்த
என் நான்கு வயது மகன்
வெற்றுக் காகிதத்தைக் காட்டி
சிரித்தபடி கேட்டான்
‘அப்பா..! இதோ என் சம்பளம்…
உன் சம்பளம் எங்கே..?’

அவனுடைய சம்பளத்தைப் பார்த்தேன்
அந்த வெற்றுக் காகிதம்
எனைப் பார்த்து சிரித்தது..!

உடனே அன்சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.

இந்த மாதிரி கவிதைகளையெல்லாம் படித்து, எழுதித்தான் வளர்ந்தோம் என்பது உண்மைதான். நான் இதுபோன்று கவிதைகள் எழுதியபோது, அதனை வாசித்தவர்கள் எப்படி தவித்திருப்பார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. பாவம் அவர்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் என்னைத் தொடர்ந்து வந்து மிரட்டுகிறது போலும். இப்படி கவிதை எழுதுபவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல கவிதைகள் எழுதிவிடமுடியும் என்பதும் உண்மைதான். இந்தக் கவிதையை எழுதியவர் சீக்கிரமே மிக நல்ல கவிதைகள் எழுதத் தொடங்கிவிடுவார் என்று நம்புவோம்.

(பின்குறிப்பு: மெண்டல் ப்ளாக்கைத் தடுக்கு இனி இது போன்ற டைரிக் குறிப்புகள் அடிக்கடி வரும்!)

Share

நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2009

From neyveli book fair 2009

* கோட்டை போன்ற செட்டுடன் வாசகர்களை அழைத்தது நெய்வேலி புத்தகக் கண்காட்சி. கோட்டையில் உச்சியில் இந்தியக் கொடி கம்பீரமாகப் பறக்கிறது. இது இயக்குநர் சங்கரின் செட்டு போன்று இருக்கிறதா, டீ.ராஜேந்தர் போட்ட செட் போன்று இருக்கிறதா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே (பாராதான் நடுவர்!) நடைபெற்றது எனக் கேள்விப்பட்டேன். ஆனால் எதற்கு இத்தனை செலவு என்றுதான் புரியவில்லை.

From neyveli book fair 2009

* பத்து நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இன்றோடு நிறைவுபெறுகிறது. தினம் ஒன்றுக்கு சில குறும்படங்களைத் திரையிட்டு, அதற்கு மாணவர்களை விமர்சனம் எழுதச் சொல்லி, அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கினார்கள்.


* பரிசுகளை ப்ராடிஜி வழங்கியது. (இது பிராண்ட் பில்டிங் டைம்!)

* சிறப்பு விருந்தினராக பத்ரி சேஷாத்ரியும், பரிசுகளை வழங்கவும் சிறப்புரை ஆற்றவும் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டார்கள்.

* எழுத்தாளர் ஷோபா சக்தி பார்வையாளராக வந்திருந்தார்.

* விழா ‘கனவு கீர்த்தனை’ என்னும் குறும்படத்துடன் தொடங்கியது. மிகச் சிறப்பான குறும்படம் என்று சொல்லம்முடியாவிட்டாலும், எந்நாளும் செல்லுபடியாகக்கூடிய பாரம்பரிய செண்டிமெண்ட்டான இந்தியத் தாத்தா- யூ.எஸ். பேத்தி கலாசார வேறுபாட்டை உணர்வுபூர்வமாகக் காட்டியது.

From neyveli book fair 2009

* அடுத்ததாக லீனா மணிமேகலையின் ’தேவதைகள்’ குறும்படம் திரையிடப்பட்டது. ஒப்பாரி வைக்கும்/மரணத்துக்கு நடனமாடும் ஒரு பெண், கடலில் சிப்பிகள் எடுத்து மாலை கோர்த்து வாழ்க்கையை நடத்தும் பெண், சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண் என மூன்று பெண்களின் வாழ்க்கையை யதார்த்தமாக மிக அருகில் இருந்து காண்பித்தது இக்குறும்படம். பின்பு மேடையில் பேசிய அனைவருமே இக்குறும்படம் தந்த அதிர்வைப் பற்றிப் பேசினார்கள். இக்குறும்படத்துக்குப் பின்னே ஏதேனும் அரசியல் இருக்குமோ என்கிற எண்ணத்துடனே பார்த்தேன். எனக்குத் தெரிந்து எவ்வித அரசியலும் இல்லை. பெண்ணியப் பிரதி என்கிற வகையில் இக்குறும்படம் மிக முக்கியமானதே. சிறப்பாகவும் இருந்தது. செயற்கையாக நடந்த சில காட்சிகளைக்கூட மிகவும் யதார்த்தமாக மாற்றியதில் லீனா மணிமேகலையின் சாமர்த்தியம் தெரிந்தது.

From neyveli book fair 2009
From neyveli book fair 2009
From neyveli book fair 2009

* பத்ரி, லீனா மணிமேகலை உள்ளிட்டவர்கள் பேசினார்கள். போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

* ஷோபா சக்தியை மேடைக்கு அழைத்துப் பேசச்சொன்னார்கள். அவர் தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்கு நன்றி சொன்னார்.

* ‘நான் இரண்டு நிமிடங்கள் பேசலாமா’ என அனுமதி வாங்கிக்கொண்டு, சாமிநாதன் என்கிற உள்ளூர் எழுத்தாளர் பேசினார். நாடகங்கள் நடத்திய அவர் சில குறும்படங்கள் எடுத்ததாகவும், நிலவுக்கு எத்தனை பேர் போனாலும் ஆம்ஸ்டிராங்கின் பெயர் நிலைத்திருப்பது போல எத்தனை குறும்பட விழா நடத்தினாலும் நெய்வேலியில் முதல் குறும்படம் எடுத்த தனது பெயர் நிலைத்திருக்கும் என்றும், இதுவரை நான்கு வருடங்கள் குறும்படப் போட்டியில் வெல்லவில்லை என்றாலும் தொடர்ந்து முயல்வேன் என்றும் பேசிவிட்டுச் சென்றார்! அரங்கம் கொஞ்சம் கலகலப்பாகியது!

* மீண்டும் கண்மணி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இரண்டாவது பெண் குழந்தையைக் கலைக்கச் சொல்லும் குடும்பத்தை மீறி ஒரு பெண் தனது பெண் குழந்தையை வளர்க்க முடிவெடுக்கும் ஒரு கதை. எவ்வித காரணமும் இல்லாமல் எப்படி அந்தப் பெண் திடீரென்று பெண் குழந்தையைக் கலைக்காமல் இருக்க முடிவெடுக்கிறாள் என்றெல்லாம் சரியாகச் சொல்லாமல் மிக மேம்போக்காக இருந்தது இக்குறும்படம்.

* இத்துடன் கூட்டம் இனிதே முடிவு பெற்றது.

* மிகவும் முயற்சி எடுத்து ஒரு புத்தகக் கண்காட்சியை ஒட்டிப் பல நிகழ்வுகளையும் சேர்த்துச் செய்ய நினைக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

From neyveli book fair 2009

* திடீரென்று ஷோபா சக்தியை மேடைக்கு அழைத்து அவரை நெளியச் செய்தது போன்ற சிலவற்றைத் தவிர்க்கவேண்டும், அல்லது முதலிலேயே அவரிடம் சொல்லி அவரையும் ஆயத்தப்படுத்தியிருக்கவேண்டும். இதெல்லாம் மிகமிகச் சிறிய குறையே.

* நானும் பத்ரியும் ஒரு மணி நேரம் நெய்வேலி புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தோம். பலர் பத்ரியிடம் பேசினார்கள். ஒருவர் ஜெஃப்ரி ஆர்ச்சரின் புத்தகங்கள் எப்படி விற்பனை ஆகின்றன என்று கேட்டார். இன்னொருவர் ‘உங்களை டிவியில் பார்த்தேனே’ என்றார். கிழக்கு புத்தக அரங்கில் சிறிது நேரம் நின்றிருந்தோம். கூட்டம் வரத் தொடங்கியிருந்தது. விதிகள் புத்தகங்கள், பிராபகரன் புத்தகங்கள் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டே இருந்ததைப் பார்க்க முடிந்தது.

* இரண்டு மணிக்கு சென்னைக்கு வண்டியேறினோம். ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்தேன். மகன் கேரம்போர்டு விளையாடலாமா என்றான். என் மனைவி காஃபி கொடுத்தாள். சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தது. (இந்தக் குறிப்பு எதற்கென்றால், என்றேனும் எனது இக்குறிப்புகளையெல்லாம் சேர்த்தெடுத்து ‘பாஸ்கரதாஸின் குறிப்புகள்’ போல புத்தகமாக வெளியிட்டால், மிகவும் உதவியாக இருக்கும். அதற்காகத்தான்.)

* நெய்வேலி புத்தகக் கண்காட்சி பற்றி வலைப்பதிவுலகில் ஒன்றுமே இல்லையா என்கிற அவப்பெயரை நீக்குவதற்காகவே இப்பதிவு எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க வலைப்பதிவர் ஒற்றுமை, ஓங்குக வலைப்பதிவுகளின் புகழ். எனவே இப்பதிவைப் படிப்பவர்கள் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளுமாறு இறைஞ்சுகின்றேன்.

* புத்தகக் கண்காட்சியில் நான் ஒரு புத்தகம் கூட வாங்காமல் வந்தது நல்ல சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. மீண்டும் அடுத்த புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்!

(படங்களைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.)

Share

சிறுமை கண்டு சீறுவாய் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் (கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்)

அ.கி. வேங்கட சுப்ரமணியன் (ஐ.ஏ.எஸ். ஓய்வு) தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசினார். எவ்வித தடங்கலுமின்றி எளிமையான தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து பேசினார். இந்தியாவில் சட்டங்களுக்குக் குறைவே இல்லை என்றும், ஆனால் பெரும்பாலான சட்டங்கள் பயன்படுத்தப்படாமலும், செயல்படுத்தப்படாமலும் வெறுமனே கிடக்கின்றன என்றும், ஒரு சட்டத்தை உயிரோடு வைத்திருக்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது என்றும் தெரிவித்தார். அ.கி. வேங்கிட சுப்ரமணியனின் பேச்சு வெறும் ’பேச்சு வகை’ சார்ந்ததல்ல. களப்பணியில் இருக்கும், பாஸிட்டிவ் திங்கிங்க் உள்ள, நாட்டை நம்மால் திருத்தவும் நேராக்கவும் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் ஒருவனின் உள்ளப் பேச்சு.

”சமூக சம்ச்சீரின்மைக்கும், சமூகக் குறைபாடுகளுக்கும் பொறுப்பேற்கவேண்டிய அரசு, தனது செயல்களை வெளிப்படையாகச் செய்யவும், செய்த செயல்களுக்குப் பொறுப்பேற்கவும் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. கேள்வி கேட்டால் நாளை நம்மை என்ன செய்வார்களோ என்கிற பயம் இருந்தால், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் இந்த பயம் அவசியமற்றது. நாம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்பதன் மூலம், பல்வேறு செயல்களை வெளிக்கொண்டுவர முடியும். கேள்விகள் கேட்பது செய்திகளை அறிந்துகொள்ள மட்டுமே என்ற அளவில் நின்றுவிடாமல், அடுத்த அந்த பதில்களை வைத்துக்கொண்டு என்ன செயலைச் செய்யப் போகிறோம் என்று முடிவெடுத்துக்கொள்வது நல்லது.

“நாம் நம் பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறோமா? நாம் செலுத்தும் வரியில் ஒரு பகுதி இப்பள்ளிகளுக்குச் செல்லுகிறது. அப்படியிருக்கும்போது நம் பகுதியில் உள்ள பள்ளிகள் எப்படிச் செயல்படுகின்றன என்று நாம் ஒருபோதும் சிந்திப்பதில்லை? திருநெல்வேலியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அறிந்த ஒரு செய்தி இது. கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் பணம், மக்கள் பணிக்காக ஒதுக்கப்பட்டது, செலவழிக்கப்படவே இல்லை. ஆனால் அந்த ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் பல இருக்கின்றன. அதேபோல், திருநெல்வேலியில் வசூலிக்கப்படாத தொகை 12 கோடி ரூபாய். இதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட செய்தி. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, அந்தப் பணத்தை எப்படி திறம்பட செயல்படுத்துவது என்று சில யோசனைகளைச் சொன்னோம்.

“திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஒரு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு 2002லிருந்து சம்பளமே வழங்கப்படவில்லை. இதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட செய்திதான். அப்படியானால் எப்படி அவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்? தூத்துக்குடி வேப்பலோடை பகுதியில் தொடர்ந்து லாரிகள் மணல் அள்ளிக்கொண்டிருந்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, லாரி அள்ளுவதற்கான முறைமைகள் பெறப்பட்டன. அந்த ஊர் மக்கள் அடுத்தமுறை லாரி வந்தபோது அதை தடுத்து நிறுத்தினார்கள். முறைமையின்படி அந்த லாரி மணல் அள்ள முடியாது என்று போராடினார்கள். இதனால் மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது. ஆனால், வேறு ஊரின் வழியாகச் சென்று மணல் அள்ளத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊரையும் நாம் விழிக்கச் செய்யவேண்டியிருக்கிறது. ஒருவர் பெறும் தகவல் என்பது அவருக்கு மட்டுமானது என்று நின்றுவிடாமல், அதனை எல்லோருக்குமானதாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு வரவேண்டும்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சர்வ ரோக நிவாரணி அல்ல. இது உங்களுக்குத் தகவலை மட்டுமே வழங்கும். பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறுகிறேன் என்பதைவிட, நம் வாழிடத்தில் இருக்கும் பள்ளிகள், நியாய விலைக்கடைகள், மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது என்பதற்கான தகவல்களைப் பெறத் தொடங்கினாலே போதும், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொது ஆர்வலர்கள், சமூகப் பணியாளர்கள் இன்னும் கையிலெடுத்துக்கொள்ளவில்லை. தனிமனிதர்களைவிட இவர்கள் கையில் இச்சட்டம் செல்வது அதிகப் பயனைத் தரும். இச்சட்டம் அரசியல்வாதிகளால் கொண்டுவரப்படவில்லை. மாறாக, சமூக நல ஆர்வலர்களால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை தொடர்ந்து உயிரோடு வைத்திருப்பது நம் கையில் உள்ளது.”

பின்பு கேள்வி நேரம் துவங்கியது. முதல் கேள்வியைக் கேட்டவர், பயமின்மை என்பது யதார்த்ததில் சரியாக வராது என்று கூறினார். ஆனால் அதை அகிவே ஏற்கவில்லை. கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு தகவல் இல்லை என்று அரசு பதில் சொல்லமுடியுமா என்று கேட்டேன். உண்மையில் தகவல் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம் என்று சொன்னார். அவர் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனில் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தால் எத்தனை கிலோமீட்டர் பயணம் குறையும், அதனால் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் அடையும் லாபம் எவ்வளவு போன்ற கேள்விகள் என நினைக்கிறேன். அவற்றிற்குத் தங்களிடம் பதில் இல்லை என்று பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தெரிவித்துவிட்டதாகச் சொன்னார். இன்னும் நிறைய பேர் கேள்விகளைக் கேட்டார்கள்.

அகிவே குடிமக்கள் முரசு என்றொரு மாத இதழை நடத்திவருகிறார். அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறும் தகவல்களை அவற்றில் வெளியிடவும் செய்கிறார். குடிமக்கள் முரசு-வில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பை (வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு) கிழக்கு பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் எழுதிய மக்களாகிய நாம், கட்சி ஆட்சி மீட்சி புத்தகங்களை nhm.in/shopல் ஆன்லைனில் வாங்கலாம். நான் குடிமக்கள் முரசுவுக்கு சந்தாதாரராக நினைத்துள்ளேன். அதன் முகவரி: உந்துநர் அறக்கட்டளை, எண் 8, 4-வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை 600 020, தொலைபேசி: 2446-5601. விருப்பப்பட்டவர்கள் நேரடியாக சந்தா செலுத்திக்கொள்ளலாம்.

இந்தக் கூட்டம் சொன்னது என்ன? மக்கள் செயல்படவேண்டும் என்பதே. அரசியல்வாதிகளின் எல்லா ஊழலுக்கும் நாம் பழகிப்போய்விட்டோம். ஒரு செயலுக்கான முறைமைகளைக் கண்டறிந்து, அதன்படி செயல்பட நாம் நம்மை வழக்கப்படுத்திக்கொள்வதும், நம் அரசை செயல்பட வைக்க இயன்றவரை முயல்வதுமான விழிப்புணர்வே இன்றையத் தேவை. ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் செய்தியைப் பெற்றுப் போராடுவதைவிட, எப்பகுதியில் பிரச்சினை உள்ளதோ, அப்பகுதி மக்கள் தத்தம் கோரிக்கைகளுக்காகப் போராடுவது நல்ல பலனளிக்கிறது என்று அனுபவத்தில் கண்டதைப் பதிவு செய்கிறார் அகிவே. இதுவே இக்கூட்டம் சொல்லும் செய்தி.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் பயன்படுத்துவது என்கிற நோக்கிலேயே இதுவரை இச்சட்டமும் அதன் பயன்பாடுகளும் அணுகப்பட்டிருக்கின்றன. இச்சட்டத்தை வரைவு செய்யுமுன்பு, இதனைச் செயல்படுத்த போதுமான பணியாளர்கள் நம்மிடம் உள்ளார்களா என்பது பற்றிய ஆய்வு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. அரசு பணியாளர்கள் பெரும்பாலானவர்கள் லஞ்சம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால், அவர்களைக் கஷ்டத்துக்குள்ளாக்கும் எந்த ஒரு செயலும் நம்மை மகிழ்விக்கவே செய்கிறது. இச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவந்த பின்பு, அரசு அலுவலர்கள் அடையும் இன்னல்கள் பற்றியும் யோசிக்கவேண்டும். நிச்சயம் இச்சட்டம் பயனுள்ளது என்பது பற்றி சந்தேகம் இல்லை. ஆனால் இச்சட்டத்தின்படி எக்கேள்விகளையும் கேட்கலாம் என்பதும், 30 நாள்களுக்குள் பதில் சொல்லவேண்டும் என்பதும், எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பதும், அரசு அலுவலர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் கிறுக்குத்தனமானவை என்று ஓர் அரசு ஊழியர் சொன்னார். தகவல் இல்லை என்று பதில் சொன்னால், இதற்கான ஆணையம் அந்த பதிலை ஏற்பதில்லை என்றும், அது தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாகவே செயல்பட்டு, அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் ஆணைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் வருத்தப்பட்டார். கேள்விகளுக்கான வரைமுறைகளை உருவாக்கவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். திருநெல்வேலியில் எத்தனை வீடுகள் இத்தனை சதுர அடிக்கு மேற்பட்டவை என்று ஒருவர் பொத்தாம் பொதுவாகக் கேள்வி கேட்டால், அதற்கு 30 நாள்களுக்குள் எப்படி பதில் சொல்லமுடியும்? கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாகக் கணினி மயமாக்கப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பு உள்ள தகவல்களைத் தேடித்தான் தரமுடியும். அந்த வேலைகளை யார் செய்யப்போகிறார்கள்? இந்தச் சட்டத்தின் தேவை கருதி எத்தனை பேர் புதியதாக வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்? – இவையெல்லாம் அரசு ஊழியர்களின் கேள்விகள். நமக்கு அரசு ஊழியர்களைப் பிடிக்காது என்பதாலேயே அவர்களின் கேள்விகள் நியாயமற்றவை என்று சொல்லிவிடமுடியாது. அரசு ஊழியர் ஒருவரின் துணையோடு சில கேள்விகளை, இச்சட்டத்தின் அடிப்படையில், தகவல் ஆணையரிடம் கேட்டுள்ளேன். 30 நாள்களுக்குள் என்ன பதில் கிடைக்கிறது என்று பார்க்கலாம். இதேபோல் இன்னும் நிறையக் கேள்விகள் கேட்கப்படவேண்டியிருக்கின்றன. அவற்றைப் பொதுவில் வைப்பதே முதல் நோக்கம்.

பின்குறிப்பு: சீமான், விவேக், தா.பாண்டியன், கருணாநிதி உள்ளிட்ட பலரின் இயற்பெயர், தாய்மொழி என்ன, சோனியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாரா, அர்ஜூன் சம்பத் ஏன் பாஜகவில் இருந்து ஏன் விலகினார் என்றெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்போகிறேன் என்று சொல்லி, என்னை அசரச் செய்த நண்பரின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன!

Share

தாய்மொழியும் தாய்நாட்டின் மொழியும்

சம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு எழுந்த நேரத்தில், கடந்த புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் ‘பத்து நாளில் சம்ஸ்கிருதம் பேசும்’ ஒரு கோர்ஸைப் பற்றிய பிட் நோட்டிஸ் பார்த்தேன். பத்து நாளில் சம்ஸ்கிருதம் எப்படி பேசமுடியும் என்கிற எண்ணம் வந்தாலும், சேர்ந்துவிட்டேன்.

தி.நகர் சாரதா வித்யாலயாவில் நடந்த வகுப்புக்கு முதல்நாள் சென்றபோது என்னுடன் வந்த நண்பனிடம் ‘பத்து பேர் இருந்தா அதிகம்’ என்று சொல்லிக்கொண்டு போனேன். அங்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்களுக்கும் மேல். நடக்கமுடியாமல் தள்ளாடி நடந்துவந்த வயதான மனிதரிலிருந்து, தமிழே இன்னும் சரியாகப் பேசத் தெரியாத சிறுவர் வரை. ‘படத சம்ஸ்கிருதம்’ என்று பாடலோடு தொடங்கிய வகுப்பில், ஆசிரியர் எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்?’ என்றார்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸ்ம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத்தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒரு உள்ளார்ந்த மொழியாக சம்ஸ்கிருதத்தை நிறுவவே இப்படி ஒரு முயற்சி என்பது புரிந்தது. ஹிந்தி தெரியாமல் இருந்தால் நல்லது என்று ஏற்கெனவே முரளி சொல்லியிருந்தார். அதன் காரணமும் அங்கே விளங்கத் தொடங்கியது. பத்து நாள்களும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஆங்கில, தமிழ் வார்த்தைகள் பத்தைத் தாண்டியிருந்தால் அதிசயம். பத்தாவது நாளில் எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேச முயற்சித்தார்கள்.

சம்ஸ்கிருதத்தில் பேசுவது என்றால், சம்ஸ்கிருத விற்பன்னராகப் பேசுவது அல்ல. இதன் அடிப்படையையும் மிகத் தெளிவாக திட்டமிட்டிருந்தது சம்ஸ்கிருத பாரதி. ஒரே விகுதியோடு முடியும் வார்த்தைகள் (கஜ:, வ்ருக்ஷ:, புத்ர:, ராம: என்பது போல) என்று எடுத்துக்கொண்டு, அவற்றோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அவை எப்படி மாறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு (ராமன் + இன் = ராமனின்  ராம: + அஸ்ய = ராமஸ்ய என்பதைப் போல) எளிமையாக நடத்தினார்கள். Present tense, Past tense, Future tense மட்டுமே சொல்லித்தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு கதை சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து எளிமையான வாக்கியங்கள் சொல்லச் சொன்னார்கள். இதை வைத்துக்கொண்டு எளிமையான பேச்சை நிகழ்த்தினார்கள். இதன் வழியே, சம்ஸ்கிருதம் கற்பது கடினமானதல்ல என்கிற எண்ணத்தை மெல்ல வளர்த்தெடுத்தார்கள்.

சிறுவர்களின் வேகம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. பதினைந்து வயது சிறுவனின் நினைவாற்றலை எட்டிப்பிடிப்பது எனக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. காரணம், நான் எந்த ஒரு சம்ஸ்கிருத வார்த்தையையும் அதோடு தொடர்புடைய பொருளின் வழியாகவே அடைய முயன்றேன். ஆனால் சிறுவர்களோ சம்ஸ்கிருத வார்த்தையை அவ்வார்த்தை மட்டுமானதாகவே கண்டடைந்தார்கள்.

சம்ஸ்கிருதம் படிப்பதைத் தவிர்த்து இவ்வகுப்புகள் பல நல்ல நினைவுளைக் கொண்டுவந்து சேர்த்தன. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாணவனாக வகுப்பில் அமர்வது என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நியூ ஹொரைசன் மீடியாவின் ப்ராடிஜி பதிப்பகத்தின் சார்பாக, பள்ளிகளில் சூடாகும் பூமி (Global warming) பற்றிய வினாடி வினா எழுத்துத் தேர்வு நடத்தியபோது பல பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், எவ்வித தன்முனைப்பும் இன்றி, ஆசிரியரே எல்லாமும் என்கிற எண்ணத்தோடு அவர்களோடு பேசியதையும் பெரும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி இந்த சம்ஸ்கிருத வகுப்பில் அடித்துச்செல்லப்பட்டதாக உணர்ந்தேன்.

இவை போக, சக ‘மாணவ நண்பர்கள்’ தந்த அனுபவங்கள். என் பக்கத்து நண்பருக்கு வயது 60தான் இருக்கும். ‘வாக்கிங்க்குக்கு வாக்கிங்கும் ஆச்சு, சம்ஸ்கிருதமும் ஆச்சு பாருங்க’ என்றார். இன்னொருவர், ‘இப்படி தமிழும் சொல்லாம இங்லீஷும் சொல்லாம சொல்லித் தந்தா என்ன புரியறதுன்றீங்க? நான் சொல்லிட்டேன். நேரா சொல்லிட்டேன். கேப்பாங்களான்னு தெரியலை’ என்றார்.

பத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன். பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை கதைகள் சொன்னார்கள். அனுபவக் கதைகள் சொன்னார்கள். சிறிய நாடகங்கள் நடத்தினார்கள். எல்லாமே சிறந்தவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு எல்கேஜி, யூகேஜி மாணவர்களாக அவர்களைக் கற்பனை செய்துகொண்டால், அவர்களின் நிகழ்ச்சிகள் அற்புதமானவை என்றே சொல்லவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அஹம் ஏகம் ஹாஸ்ய கதாம் உக்தவான்! (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன்!)

சம்ஸ்கிருதத்தின் பெருமைகளையும், அது எவ்வாறு இந்தியாவோடு தொடர்புகொண்டுள்ளது என்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிக் கதை சம்ஸ்கிருதத்தில் சொன்னார்கள். இந்தக் கதைகளின் போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் அடைந்த குதூகுலம் இப்போதும் நினைவிலிருக்கிறது. இதன் வழியே கொஞ்சம் யோசித்தால் எப்படி ரஜினி, ஜாக்கிசான் போன்றவர்கள் குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் கவர்கிறார்கள் என்பதைக் கண்டடையலாம் என நினைத்துக்கொண்டேன்.

ஒரு பதினைந்து வயது மாணவன் இதுபோன்ற வகுப்பினால், இந்தியப் பற்றையும், புராணக் கதைகளின் பரீட்சியத்தையும் பெறமுடியும். பின்னாளில் இவற்றை அவன் கைவிட நேர்ந்தாலும், இதைத் தெரிந்துகொண்டு புறக்கணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். புராணக் கதைகள் சொல்லப்பட்டபோது, பல கதைகளை என்றோ கேட்ட நினைப்பிலேயே கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இக்கதைகள் எல்லாம் எப்படி நம் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்கிற சோகம் எழுந்தது. கதை சொல்லும் நேரத்தை நம் தொலைக்காட்சிகள் எந்த அளவு திருடிக்கொண்டுவிட்டன என்பதும் புரிந்தது. நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், என் கணிசமான நேரத்தை என் மகனோடு செலவழிக்கவே விரும்புவேன். அதில் கதை சொல்லலும் அடங்கும். கதை என்றால் நானாக உருவாக்கிய கதைகள். புலியும் ஆடும் மாடும் மயிலும் குரங்கும் டைனசோரும் உலவும் கதைகள். இந்த சம்ஸ்கிருத வகுப்புகள் விளைவாக, இனி என் மகனுக்கு புராணக் கதைகளையும், மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகளையும் கண்ணன் கதைகளையும் சொல்லலாம் என்றிருக்கிறேன். இவ்வகுப்பில் சொல்லப்பட்ட இரண்டு கண்ணன் கதைகளை என் மகனுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த குதூகலம் வார்த்தையில் சொல்லமுடியாதது. முதல்வேலையாக எனி இந்தியனில் சில புத்தகங்களை ஆர்டர் செய்தேன்.

சம்ஸ்கிருதம் சொல்லித்தந்த ஆசிரியர் ஒருவர் இப்படிச் சொன்னார். “உங்கள் தாய் மொழி என்ன? சம்ஸ்கிருதமா? இல்லை. தமிழ். உங்கள் தாய்மொழி? மலையாளம். உங்களது? துளு. ஒரு சம்ஸ்கிருதம் சொல்லித்தரும் ஆசிரியர் எப்படி சம்ஸ்கிருதத்தை தாய்மொழியல்ல என்று சொல்லமுடியும் என்று யோசிக்கிறீர்களா? இப்போது சொல்கிறேன். சம்ஸ்கிருதமும் உங்கள் தாய்மொழிதான். உங்கள் தாய் உங்களுக்குச் சொல்லித் தரும் தாய்மொழி தமிழாகவோ, மலையாளமாகவோ இருக்கட்டும். உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்.” எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?

ஸம்ஸ்க்ருத பாரதியின் தொலைபேசி எண்: 044-28272632. மின்னஞ்சல் முகவரி: samskritabharatichn@yahoo.com. இதைத் தொடர்புகொள்வதன் மூலம் அடுத்த சம்ஸ்கிருத வகுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.

நன்றி: தமிழ் ஹிந்து வலைத்தளம் (தமிழ் ஹிந்துவில் வந்த இந்தக் கட்டுரையை விஜயபாரதம் தனது இதழில் பிரசுரித்திருந்தது.)

Share