Archive for கல்வி

நீட்: திருமாவளனுடனான பாண்டேவின் நேர்காணல்

பாண்டே உடனான திருமாவளவனின் பேட்டி பார்த்தேன். (MP3 கேட்டேன்!) நீட் பிரச்சினை தொடர்பான பேட்டி. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த பாண்டேவின் குரல் ஏற்படுத்திய ஒரு சலிப்பைத் தொடர்ந்து அவரது குரலையே கொஞ்சம் நாளாகக் கேட்கவில்லை. அச்சலிப்பைத் தாண்டிவர எனக்கு இத்தனை மாதங்கள் ஆகி இருக்கின்றன.

இப்பேட்டி மிக அட்டகாசமான பேட்டி என்றே சொல்லவேண்டும். தெளிவான கேள்விகளை முன்வைத்தார் பாண்டே. சுற்றிச் சுற்றி தன் முடிவுகளுக்கே திருமாவளவனைக் கொண்டு வந்தார். நீட்டை நான்கே கேள்விகளுக்குள் அடக்கினார்.

புள்ளிவிவரங்களின்படி,

1. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எவ்விதப் பங்கமும் வரவில்லை.

2. நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தின்படிப் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்படவில்லை. அதாவது 62% பேர் வென்றிருக்கிறார்கள்.

3. நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு அல்ல, ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் அரசுப் பள்ளியில் படித்துவிட்டு மருத்துவம் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 312 பேர் மட்டுமே.

4. நீட் தேர்வில் பாவப்பட்ட அனிதாவின் இடம் இன்னொரு தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கே சென்றுள்ளது.

இவை அனைத்தையும் திருமாவளவன் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் திருமாவளவன், சமூக நீதிப் பிரச்சினைக்காக நீட்டை எதிர்க்கவே இல்லை என்றொரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். 🙂

நேற்று வந்த புள்ளிவிவரத்தின்படி (உண்மையாக இருக்கும்பட்சத்தில்) நீட் தேர்வால் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் பொய்யாகி இருக்கிறது.

இப்போதைக்கு நீட் எதிர்ப்பாளர்களிடம் இருக்கும் அவர்கள்தரப்பு நியாயங்கள் இவையே:

1. மாநில அரசின் உரிமை பறிபோகிறது. (இதற்கு பாண்டே, கடந்த 20 வருடங்களாகவே கல்வி பொதுப்பட்டியலில்தானே உள்ளது என்றார்.)

2. கோச்சிங் மூலம் சேர்வார்கள். எனவே பணம் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும். (ப்ளஸ் டூவிலும் இதுதான் நடக்கிறது. எதிர்காலத்தில் நீட் தேர்விலும் நாமக்கல் வகையறா மாணவர்கள் இதேபோல் கோச்சிங் மூலம் நிச்சயம் அதிகம் வெல்வார்கள் என்பதும் உண்மைதான். இது ஒரு பிரச்சினைதான். ஆனால் இதை ஒன்றும் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.)

3. நீட் தேர்வை ஒட்டியே மாநிலத்தின் பாடத்திட்டம் அமைக்கப்படும். இதனால் தமிழ்நாட்டின் பண்பாட்டோடு ஒட்டிய பாடப்பகுதிகள் புறக்கணிக்கப்படும். (தமிழ்ப்பண்பாடு புறக்கணிக்கப்படும் என்பதை நான் நிச்சயம் ஏற்கமாட்டேன். இது ஒருக்காலும் நடக்காது என்றே நினைக்கிறேன்.)

இது போக திருமாவளவன் குறிப்பிட்ட ஒரு விஷயம், சி பி எஸ் சி பாடத்திட்டத்தை ஒட்டியே இனி மாநிலப் பாடத்திட்டமும் உருவாக்கப்படும் என்று சொன்னது. நீட் தேர்வால் இந்நிலை வரும் என்றார். ஆனால் உண்மையில் இப்போதே அப்படித்தான் உள்ளது. இதற்கு முன்பும் அப்படித்தான் இருந்தது. எப்போதுமே மாநிலப் பாடத்திட்டம் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பாடத்திட்டத்தை மேம்படுத்தும்போதும் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிக் கொஞ்சம் சேர்த்தும் கொஞ்சம் நீக்கியும் ஒரு பாடத்திட்டத்தை வரையறுப்பார்கள். மாநிலப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை பாடத்திட்டத்தின் தரம் உயர்த்த, ஒரு வகுப்புப் பாடத்தை அதற்கு முந்தைய வகுப்புக்குக் கொண்டுபோவார்கள். அதாவது 8ம் வகுப்பில் உள்ள பாடத்தில் சிலவற்றை 7ம் வகுப்புக்குக் கொண்டு போவார்கள். இப்படித்தான் இவர்களது பாடத்திட்ட வரையறை – என் பார்வையில் – இருந்துள்ளது. எனவே இனி மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிச் செல்வார்கள் என்பது ஒரு கற்பனையே. ஏனென்றால் ஏற்கெனவே அப்படித்தான் உள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்திலும் புத்தகத்திலும் பெரிய குறைகள் எல்லாம் இல்லை. (இந்த சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது வந்த முதல் புத்தகத்தில் குறைகள் இருந்தன, அவை பின்னர் களையப்பட்டன.) பாடங்களை+ நடத்தும் விதத்தில்தான் பள்ளிகள் மேம்படவேண்டும். 9ம் வகுப்பை ஏறக்கட்டிவிட்டு பத்தாம் வகுப்பு நடத்துவது, பதினோராம் வகுப்புப் பாடத்தை தூக்கி எறிந்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பள்ளி நடத்துவது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை என்கிற ஒன்றை ஒழித்துக்கட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, ஒழுங்காகப் பாடத்தை நடத்தி, புரிய வைத்து அதன்படிக் கேள்விகள் கேட்டுத் தேர்வு நடத்தினாலே போதும்.

அத்துடன் வெறும் நீட் தேர்வு மூலம் வரும் மதிப்பெண்கள் மட்டுமே என்றில்லாமல், பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் கட் ஆஃபில் சேர்ப்பதும் நல்லது. என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இந்த கட் ஆஃபில் குறைந்த அளவிலாவது ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களைச் சேர்ப்பது. இல்லையென்றால் ஆங்கிலம் மற்றும் தமிழைக் கடனுக்கெனப் படிப்பார்கள். இப்படித்தான் நான் படிக்கும் காலத்திலேயே இருந்தது. இதையும் மாற்றவேண்டும்.

திருமாவளவன் தன் நிலைக்கேற்ற பதிலைப் பொறுமையாகச் சொன்னார். பொய், தேவையற்ற காட்டுக்கத்தல், எதையாவது சொல்லிவிட்டுப் போவது போன்ற வீரமணித்தனங்கள் எல்லாம் இல்லாமல் கேள்விகளின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு கையாண்டது பாராட்டத்தக்கது. நிச்சயம் பார்க்கவேண்டிய நேர்காணல்.

Share

பட்டம் – தினமலர்

வாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.

http://m.dinamalar.com/detail.php?id=1626970

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.

பட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…!

இன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.

* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.

* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.

* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.

* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.

* தொடரும்… கூடவே கூடாது.

* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.

* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.

* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.

* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.

* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.

* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.

* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது! மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.

* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்!

பள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.

வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.

இது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.

Share

டியூஷன் 3

கடைசியில் கொஞ்சம் சோகமாக முடியப்போகும் இந்த நிகழ்வை எழுதாமல் விட்டுவிடலாம் என்றாலும் மனம் கேட்கவில்லை. எனவே இது ஒரு க்ளிஷேவாக முடியப்போகும் பதிவுதான். திரையில் நாம் பார்க்கும் ஒரு க்ளிஷே காட்சியை எத்தனை இயல்பாக புறந்தள்ளிவிட்டுப் போனாலும், அதே காட்சி நம் கண்முன் நிகழும்போது அதை எதிர்கொள்வதில் நமக்குப் பல சவால்கள் இருக்கவே செய்கின்றன.

ஒன்றரை வருடத்துக்கு முன்பு அந்த இரட்டையர்களை அவர்களது அம்மா என் மனைவியிடம் டியூஷனுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். இரட்டையர்களுக்கு 13 வயது. மூத்தவன் 9ம் வகுப்பு படிக்கவேண்டிய பையன், வீட்டிலிருந்தபடியே நேரடியாக பத்தாம் வகுப்பு படித்தான். இளையவன் 8ம் வகுப்பு. (இந்த ஒரு வருட வகுப்பு வித்தியாசம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.) மூத்த பையன் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான். அவன் 8ம் வகுப்புப் படித்தபோது அவனுடன் படித்த மாணவர்கள் இவனை மிகவும் ஓட்டியதில் நொந்துபோய் பள்ளிக்கே செல்லமாட்டேன் என்று கூறிவிட்டான் என்று முதலில் சொன்னார்கள். கொஞ்சம் நானாக யூகித்ததில் பிரச்சினை கொஞ்சம் தீவிரம் என்றே எனக்குப் பட்டது. அவனை பாத்ரூமில் வைத்து உடன் படித்த சிறுவர்கள் செய்த கேலியால் மனம் நொந்திருப்பான் என்றே நினைக்கிறேன். அவனது அம்மா மெல்ல மெல்ல ஒவ்வொன்றாகச் சொல்ல சொல்ல, எனக்கு உருவான சித்திரம் இது. தன் மகனை எப்படி கேலி செய்யலாம் என்று கேள்வி கேட்கச் சென்ற அவனது அம்மா, பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்ப்பதற்கு முன்பாக, தன் மகனைக் கேலி செய்த பையனைப் பார்த்து திட்டியிருக்கிறார். கேலி செய்த பையனின் தந்தை, தன் மகன் செய்தது தவறே என்றாலும், எப்படி இன்னொரு பெண் நேரடியாக தன் பையனைத் திட்டலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டார். தான் செய்தது தவறுதான் என்று இந்த அம்மா ஒப்புக்கொண்டும் தலைமை ஆசிரியர் கடும் கோபமடைந்துவிட்டார் போல. ஒருவழியாக தலைமை ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினாலும், இந்தப் பையன் இனி அந்தப் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.

வேறு பள்ளியில் சேர்த்துப் பார்த்திருக்கிறார்கள். பள்ளியைப் பற்றிய ஒவ்வாமை மனதில் குடிபுகுந்துவிட்டால், பள்ளி என்றாலே பையன் பயந்துவிட்டான். வேறு வழியின்றி வீட்டில் வைத்தே சொல்லிக் கொடுத்தார்கள். அப்பா நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். அம்மாவும் நன்கு படித்தவரே. நல்ல வசதி, எனவே இதை எளிதாக எதிர்கொண்டார்கள். இரட்டையர்களில் இளையவன் எப்போதும்போல் பள்ளிக்குச் செல்ல, மூத்தவன் வீட்டிலிருந்தே படித்தான்.

இந்த சமயத்தில்தான் என் மனைவியிடம் இந்தப் பையனை டியூஷன் சேர்த்தார்கள். ஹிந்திக்கு மட்டும் முதலில் வந்தான். பையன் கொஞ்சம் பயந்தவன் என்பதால், அவன் டியூஷன் படிக்கும்போது அந்தப் பையனின் அம்மாவும் வீட்டுக்கு வருவார்கள். காலை 11 மணிக்கு டியூஷன். பையன் படித்துக்கொண்டிருக்கும்போது, இந்த அம்மா என் ஒன்றரை வயது மகளைத் தூக்கிக்கொண்டு கொஞ்சப் போய்விடுவார். ஒரு மாதத்தில் அந்தப் பையன் டியூஷனில் கொஞ்சம் சகஜமாகவும், இனி அவன் மட்டும் வரட்டும் என்று என் மனைவி சொல்லிவிட்டாள். அந்தப் பையனும் அதற்குச் சம்மதிக்கவும், அந்த அம்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியாவது தன் பையன் ஒரு வீட்டில் படிக்கவாவது ஒப்புக்கொண்டானே என்று.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் படித்தான். ஹிந்தியோடு, சமூக அறிவியல், தமிழும் (தனியாக) சேர்த்துப் படித்தான். காலை மாலை இருவேளையும் டியூஷனுக்கு வருவான். கணிதமும் அறிவியலும் அவனது அப்பாவும் அம்மாவும் சொல்லித் தந்தார்கள். கடந்த வாரம் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினான்.

இந்தப் பையனின் சிறப்பு, இதுவரை நான் எந்தப் பையனிடத்தும் காணாதது. ஒரு மணி நேரம் படி என்றால், அதில் ஒரு நொடி கூட வீண் செய்யாமல், பராக்கு பார்க்காமல், ஏமாற்றாமல் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பான். எனக்கோ ஆச்சரியமாக இருக்கும். பதினைந்து வயதில் இப்படி ஒரு காந்தியா என்று. ஒரு தடவை கூட அவன் ஏமாற்றி நான் பார்த்ததில்லை. ஸ்வீப்பிங் வரியாக இதனை எழுதவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். ஒரு நிமிடம் அவன் படிப்பது கேட்கவில்லை என்றால், நான் வீட்டுக்குள் இருந்தவாறே, ‘என்னப்பா தம்பி தண்ணி குடிக்கிறயா’ என்று கேட்பேன். வராண்டாவில் படித்துக்கொண்டிருக்கும் அந்தப் பையன் எழுந்து வந்து பணிவாக ‘ஆமாம் அங்கிள்’ என்பான். அப்படி ஒரு பையன். என் பையனை பத்து நிமிடம் படிக்கச் சொன்னால் ஐந்து நிமிடம் ஏமாற்றி இருப்பான், ஐந்து நிமிடம் எப்படி ஏமாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருப்பான். இதுதான் சிறுவர்களின் இயல்பு. ஆனால் இந்தப் பையன் ஓர் அதிசயம். ஒரு நாள் இரண்டு நாள் என்றில்லை, எல்லா நாளும் இப்படியே.

கடந்த வாரம் ஒவ்வொரு தேர்வு முடியவும் போன் செய்து என் மனைவியிடம் எப்படி தேர்வு எழுதினான் என்று சொல்லுவான். அவன் அம்மா கூடவே சென்று அவன் தேர்வு எழுதும் வரை உடன் இருந்து கூட்டிக்கொண்டு வருவார். இரட்டையர்கள் இருவருக்கும் கிரிக்கெட் என்றால் பைத்தியம். பிராக்டிஸ் செய்கிறார்கள்.

இன்று காலை வந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்தது. அவன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள், அங்கே நேற்று அந்த அம்மா மரணமடைந்துவிட்டார். 

இதைக் கேட்டதிலிருந்து எனக்கு எதுவுமே ஓடவில்லை. இந்த இரண்டு சிறுவர்களும் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே நினைப்பாக இருக்கிறது. இரட்டையர்களில் மூத்தவனுக்கு நேரெதிர் இளையவன். படு விவரம், படு சுட்டி. ஆனால் பணிவு மட்டும் அப்படியே அண்ணனைப் போல. இந்த இரண்டு சிறுவர்களை நினைக்கும்போதே பக்கென்று இருக்கிறது. அவர்களால் தாங்கமுடியாத துக்கம் இது. அந்த மூத்த பையன் பத்தாம் வகுப்பில் வாங்கப்போகும் மதிப்பெண்களைப் பார்க்காமல் போய்விட்டாரே என்றெண்ணும்போதே மிகவும் வருத்தம் மேலோங்குகிறது. அந்தப் பையனுக்காக அப்படி அலைந்தார் அந்த அம்மா. எப்படியும் இந்தப் பையன் நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், அதில் ஐயமில்லை. ஒரு பையன் பதினைந்து வயதில் தாயை இழப்பதென்பதெல்லாம் கொடுமை.

இரண்டு மகன்களை நினைத்து அலையும் அந்த அம்மாவின் ஆன்மா அமைதியடையட்டும். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

21.5.2015 அப்டேட்:  இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. இந்தப் பையன் 398 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். அவன் அம்மா சொல்லித் தந்த அறிவியலில் 98 மதிப்பெண்கள்.

டியூஷன் 1 | டியூஷன் 2

Share

டியூஷன் (2)

முதல் பகுதியை வாசிக்க இங்கே செல்லவும்.

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவதே இல்லை என்றால், இன்னும் சிலர் எப்போதும் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு நொடியும் அவர்கள் கவனம் பிள்ளைகளின் படிப்பின் மீதே இருக்கிறது. இது அந்தக் குழந்தைகளுக்குத் தரும் மன நெருக்கடியை வார்த்தைகளில் சொல்லமுடியாது. என் அண்ணா பையன் ஒரு தடவை தன் அம்மாவிடம், ‘எப்பவாவது நல்லா சாப்பிட்டியா என்ன படம் பாத்தன்னு கேக்கியா, எப்பவும் படிப்பு படிப்பு படிப்புத்தானா’ என்று கேட்டதாக என் அண்ணி சொன்னார். இத்தனைக்கும் இந்தப் பையனுக்கு பெரிய நெருக்கடியெல்லாம் தரப்படவில்லை. அப்படி இருந்தும் படி படி என்று சொல்வது ஒரு பையனுக்கு எரிச்சலைத்தான் தருகிறது. அதையே எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால் அதை எதிர்க்கமுடியாத குழந்தைகள் பெரிய சோர்வை நோக்கியே செல்கின்றன. 

1ம் வகுப்பு படிக்க ஒரு தாய் தன் மகளைச் சேர்க்க வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என் மனைவியிடம் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 1ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு டியூஷன் எதற்கு என்பது முதல் கேள்வி. இரண்டாவது, அந்தக் குழந்தையைச் சேர்க்க ஒரு மணி நேரம் என்ன பேசத் தேவை இருக்கிறது என்பது. சேர்த்த சமயம் அவர் சொன்னது, அவரது மகள் ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்பது அவரது கனவாம், அவரே ஐ ஏ எஸ் ஆக இன்னும் முயன்றுகொண்டுதான் இருக்கிறாராம், அவரது சிறிய வயதில் அவர் ஒழுங்காகப் படிக்காமல் விட்டதால் இப்போது திணறுகிறாராம், அத்தவறை அவரது மகள் செய்துவிடக்கூடாதாம். எப்போதும் படிப்பு மட்டுமே அவளது கவனமாக இருக்கவேண்டுமாம். அந்தக் குழந்தையின் வயது 6. முதன்முதலாக அந்தக் குழந்தை டியூஷனுக்கு வந்தபோது, நான் உள்ளே நுழைந்தவுடன் என் மனைவியிடம் ‘என்ன ஒரு பெரிய கொசு ஒண்ணு உக்காந்திருக்கு’ என்று கேட்டேன். உருவத்தில் கொஞ்சம் பெரிய கொசு போலத்தான் அக்குழந்தை இருந்தது. பள்ளி விட்டு வந்த உடனே அந்தத் தாய் அவரது போதனையைத் தொடங்கிவிடுவார். டியூஷனுக்கு வரும்போதெல்லாம் அரை மணி நேரம் என் மனைவியிடம் பேசுவார். அதைப் படிக்கணும், இதைப் படிக்கணும், யார்கூடயும் பேசவிடாதீங்க, விளையாடக்கூடாது, சிரிக்கக்கூடாது, ஒழுக்கம் முக்கியம், தூங்கினா தண்டனை தாங்க, என்று இப்படி நிறைய சொல்லுவார். சில நாள்கள் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு எனக்குப் பொறுமை போய்விட்டது. ஒரு கட்டத்தில் என் மனைவிக்கு இதைக் கேட்க கேட்க ரத்தக் கொதிப்பே வர ஆரம்பித்துவிட்டது. தினம் வார்த்தை மாறாமல் இதையே ஒருவரால் எப்படிச் சொல்லமுடிகிறது என்றெல்ல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.

இப்படி வளர்ப்பதுதான் சரி என்று என் மனைவி நினைத்துவிடுவாளோ என்று நான் அஞ்சும் அளவுக்கு ஆகிப்போனது அந்தத் தாயின் தொடர் அறிவுரைகள்/கேள்விகள். அந்தக் குழந்தையிடம் கேட்டேன். ”விளையாடுவியா?” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” “டிவி?” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் மெல்ல பேச ஆரம்பித்தோம். அந்தக் குழந்தை தனது துக்கங்களை அதன் மொழியில் சொல்லத் தொடங்கியது. விளையாடாததும், எப்போதும் தன் அம்மா தன்னைப் படிக்கச் சொல்லிக் கண்டிப்பதும் அந்தக் குழந்தைக்கு பெரிய மன நெருக்கடியைத் தந்திருந்தது. அதை விளக்கமாக அந்தக் குழந்தையின் அம்மாவிடம் என் மனைவி சொன்னாள். அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. “அவளுக்கு எப்பவும் விளையாடணும், டிவி பார்க்கணும், வேற வேலை இல்லை. நீங்க ஃபிரண்ட்லியா இருக்கதால உங்களை ஏய்க்கறா” என்று ஒரே வரியில் நாங்கள் சொன்னதை புறந்தள்ளிவிட்டார்.

எங்கள் வீட்டுக்கு வரும்போது நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் நன்றாகப் பேசுவதால் எங்களுடன் சிரிக்க ஆரம்பித்தது. அதையும் ஒரு குற்றச்சாட்டாக அந்த அம்மா சொன்னார். ”கண்டிஷனா இருங்க மிஸ்.” உடனே என் மனைவி, இது எங்க ஸ்டைல், இப்படித்தான் நாங்க பாடம் எடுப்போம், இருப்போம். உங்க பொண்ணு மார்க் குறைஞ்சா மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டாள். உடனே அவர், அதுக்கில்ல, அவளை ஐ ஏ எஸ் ஆக்கணும், அதுதான் என்றார். சலித்துப் போய்விட்டது. கடைசி வரை அந்த அம்மா மாறவே இல்லை. அந்தப் பெண்ணுக்கு விளையாட்டும் சக குழந்தைகளிடம் பேசுவது சேட்டை செய்வது என்பதெல்லாம் எங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டுமே கிடைத்தது. அதிலும் அந்த அம்மா, “நல்லா மூணு மணி நேரம் வெச்சி அனுப்புங்க” என்பார். எந்தக் குழந்தையும் ஒரு மணி நேரத்துக்கு மேல் படிக்க முடியாது. படிக்க என்ன இருக்கிறது என்பது அடுத்த கேள்வி! ஆனால் அந்தக் குழந்தையை மூன்று மணி நேரம் படிக்க வைக்கவேண்டுமாம். ஜஸ்ட் 1ம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கு நேர்வதைப் பாருங்கள்.

என் மனைவி மிகத் தீர்மானமாகச் சொன்னாள். “உங்க பொண்ணு பாடத்தை படிக்க வைப்போம். ரொம்ப கெட்டிக்காரி. ஒரு மணி நேரமே அதிகம். எப்பவும் முதல் ரேங்க்தான். அப்புறம் என்ன? மீதி நேரம் விளையாடத்தான் செய்வாள்.” இப்படிச் சொல்லியும் அந்த அம்மா மீண்டும் மீண்டும் அவர் கருத்துகளைப் புகுத்திக்கொண்டே இருந்தார். ஏன் டியூஷனை மாற்றவில்லை என்று யோசித்தேன். அவரது கணவரே காரணம். இதையெல்லாம் அந்த அம்மா அவரது கணவரிடம் சொல்லி இருப்பார் போல. கணவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. தன் மகள் சிரித்து விளையாடட்டும் என்று சொல்லி, என்ன ஆனாலும் டியூஷனை மட்டும் மாற்றக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார். அந்த அம்மாவுக்கு டியூஷனை மாற்றும் எண்ணமில்லை. ஆனால் எப்படியாவது தான் விரும்பும் டியூஷன் டீச்சராக என் மனைவியை மாற்றிவிட எண்ணம். அது நடக்கவில்லை. நாங்கள் இப்போது வீடு மாற்றிக்கொண்டு வந்துவிட்டோம்.

எங்கள் வீட்டுக்கு வரும்போது சிரித்துக்கொண்டும் என்னுடனும் என் மகளுடனும் விளையாடிக்கொண்டிருந்த அந்த பெரிய கொசு போன்ற குழந்தையை இப்போது எந்த டீச்சர் கசக்கி எறிந்திருக்கிறாரோ என்று தெரியவில்லை.

இப்போது ஒரு மாதத்துக்கு முன்பு இன்னொரு பையன் டியூஷனுக்கு சேர்ந்தான். 2ம் வகுப்பு. அந்தப் பையனின் அம்மாவின் கண்டிஷன்: யாருடனும் விளையாடக்கூடாது. தெருவில் விளையாடவே கூடாது. டியூஷன் விட்ட உடன் காத்திருந்து அந்த அம்மா வந்ததும்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும். (அந்தப் பையனின் வீடு பக்கத்து வீடுதான்.) தனியாக வரக்கூடாது. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் இன்னும் என்ன என்ன உண்டோ அத்தனையிலும் தேர்ச்சி பெறவேண்டும். பாடப் புத்தகங்கள் தவிர எதையும் படிக்கக்கூடாது. (நான் காமிக்ஸ் படி என்று அந்தப் பையனிடம் சொல்லி இருந்தேன். மறுநாள் வந்து பையன் சொன்னது, அதெல்லாம் அம்மா படிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.) டிக்ஷ்னரி தேவையற்ற ஒரு பொருள். டீச்சர் சொல்லித் தந்தால் போதுமானது. 

அந்தப் பையனிடம் மெல்ல சொன்னேன். “வீட்டுக்கு போய் அம்மாகிட்ட அங்கிள் சொன்னாங்கன்னு சொல்லுப்பா. தினமும் வெளிய விளையாடு.” மறுநாள் வந்து சொன்னான், நான் சொன்னேன் அங்கிள், எங்க அம்மா திட்டறாங்க என்றான். யாரை என்று கேட்கவில்லை. மறுநாள் அந்த அம்மா வந்தபோது அந்தப் பையன் ஓடி வந்து என்னிடம், அங்கிள் நீங்களே எங்க அம்மாகிட்ட சொல்லுங்க என்றான். என் மனைவியைச் சொல்லச் சொன்னேன். பாச்சா பலிக்கவில்லை. “தம்பி உன் அதிர்ஷ்டம் அவ்ளோதான்” என்று சொல்லிவிட்டேன். 🙁 

நேற்றிலிருந்து டியூஷனையும் நிறுத்திவிட்டார்கள். காரணம், என் மனைவி சொன்ன பழைய கண்டிஷன்களே. விளையாட விடுங்க, நல்லா படிக்கறான், அது போதும், ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம், நல்லா ஜாலியா இருக்கட்டும் – இவைதான் அந்தப் பையன் டியூஷன் நிற்கக் காரணம். இங்கேயும் அந்தப் பையனின் அப்பா, தன் மகன் விளையாடுவதை விரும்புகிறார். ஆனால் அம்மா செம ஸ்ட்ரிக்ட். “தெருவுல கண்டவனோட சேர்ந்தா புள்ள கெட்டுடுவான். அவனுக்கு உடம்புக்கும் முடியலை, விளையாண்டா எதாவது ஆயிடும். இத்யாதி இத்யாதி.”

இப்படி நிறைய பெற்றோர்கள். ஒரு இரட்டையர்கள் டியூஷன் வருகிறார்கள். அவர்களிடம் நாம் படத்துக்குப் போவோம் என்று அழைத்தேன். இதுவரை தியேட்டரில் சினிமாவே பார்த்ததில்லை என்றார்கள். அவர்கள் வயது 15! நான் அதிர்ந்துவிட்டேன். ஏனென்றால் படம் பார்ப்பது தவறு என்பது அவர்கள் பெற்றோர்கள் சொல்லித் தந்தது. தமிழ்ப்படங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும், தேர்ந்தெடுத்துப் படங்களைக் காட்டியிருக்கலாமே! நான் அந்தப் பெற்றோர்களை அழைத்துப் பேசினேன். படம் மட்டும் வேண்டாம் ப்ளீஸ் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற வகைகளில் இந்தப் பெற்றோர்கள் தங்கள் மகன்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள் என்பதால், இதில் ஏதோ காரணம் உள்ளது என்று நினைத்துக்கொண்டு, நானும் அத்தோடு அதை விட்டுவிட்டேன். 

இந்த ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன்களின் நிலைமையைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. தினமும் அரை மணி நேரம் மேல் படிக்க அவர்களுக்கு ஒன்றும் இல்லை. மீதி நேரத்தில் டிவி பார்க்கலாம், தெருவில் களைத்துப் போகும் அளவுக்கு விளையாடலாம். சைக்கிள் ஓட்டலாம். திருடன் போலிஸ் ஆடலாம். ஷட்டில் ஆடலாம். படம் பார்க்கலாம். என்ன என்ன இருக்கிறது! அதைவிட்டுவிட்டு எப்போதும் படிப்பு படிப்பு என்று ஏன் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இந்தப் பெற்றோர்கள்?

எல்லோரும் 90+ மதிப்பெண்கள் வாங்கிவிட்டால், 70+ மற்றும் 40+களையெல்லாம் வாழவைப்பது யார்? என் மனைவியிடம் நான் தீர்மானமாகச் சொன்னது, எப்பவும் படி படி என்று சொல்லக்கூடாது, மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் ஜஸ்ட் ஓர் எச்சரிக்கை போதும், தண்டனை கூடாது என்பது. (என் மகன் இதை அவன் டீச்சரிடமே சொல்லி, அவர் எங்களை அழைத்து, “அதை நீங்க மனசுக்குள்ள வெச்சிக்கோங்க, பையன்கிட்ட சொல்லாதீங்க, ஏண்டா மார்க் குறைஞ்சதுன்னா எங்க அப்பா திட்டமாட்டாங்கன்னு என்கிட்டயே சொல்றான்” என்று சொன்னது உபரிக்கதை.)

மிக முக்கியமாக, காமிக்ஸ், குழந்தைகள் நூல்களைப் படிக்க வைப்பது. படிப்பது என்பது சுவாரஸ்யமானது என்பதை உணர இதுதான் வழி. உண்மையில் இந்த காமிக்ஸைப் படிக்கவே என் மகன் முகம் சுழிக்கிறான். இருந்தாலும் கட்டாயப்படுத்தி வாராவாரம் படிக்க வைக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரத்துக்கு மட்டுமே. மற்ற நேரம் முழுக்க அவன் விளையாடிகொண்டுதான் இருப்பான். எனக்கு இப்போது 38 வயது. என்னால் விளையாட முடியவில்லை. 🙁

விளையாடும் நேரத்தில் விளையாடும் வயதில் குழந்தைகளை விளையாட விடுங்கள். ஒருவன் ஐ ஏ எஸ் கனவைப் பெறுவதற்கு 5 வயது ஏற்றதல்ல. 🙁 எப்போதும் படித்துக்கொண்டே இருப்பதற்கு குழந்தைகள் சாவி முடுக்கிவிடப்பட்ட குழந்தைகள் அல்ல. தமிழ் பேசுவது பாவமல்ல. ஆங்கிலம் தெரியாதது அவமானமல்ல. ஐயோ, எத்தனை எத்தனை கற்பிதங்கள் இந்தப் பெற்றோர்களுக்கு. நீங்கள் தோற்றுப் போனதை ஜீரணிக்க உங்கள் குழந்தைகளைப் பந்தயம் வைக்காதீர்கள். எங்காவது சென்று இதையெல்லாம் சொல்லி கத்த வேண்டும் போல் உள்ளது.

உண்மையில் குழந்தைகளுக்கு டியூஷன் தேவையே இல்லை. வேறு வழி இல்லை என்றால் மட்டும் டியூஷன் சேர்த்துவிடுங்கள். சனி ஞாயிறுகள் குழந்தைகளின் விளையாட்டுக்கு உருவாக்கப்பட்டவை என்று புரிந்துகொள்ளுங்கள். ஒரே நேரத்தில் ஆங்கிலம் தமிழ் ஹிந்தி சம்ஸ்கிருந்தத்தில் ஆறு வயதில் குழந்தைகள் புலைமை பெற்றுவிடும் என்று நம்பாதீர்கள். பக்கத்து வீட்டுப் பையன் செய்கிறான், என் பையன் ஏன் செய்யக்கூடாது என்று ஒருக்காலும் கேட்காதீர்கள். ஒரு குழந்தைக்கு ஒரு திறமை இருக்கும், இன்னொரு குழந்தைக்கு இன்னொரு திறமை இருக்கும் என்பதைவிட முக்கியமானது, இயல்பிலேயே திறமை குறைவான குழந்தைகளும் இருக்கலாம் என்று புரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் குழந்தையாகவே இருக்கலாம். ஏனென்றால் நாம் அப்படித்தான் இருந்தோம். 

(தொடரும்)

Share

குரு உத்ஸவ்

குரு உத்ஸவ் என்ற பெயர் மாற்றம் ஏன் கூடாது என்பதற்கு நாராயணன் எழுதியிருக்கும் இப்பதிவே, குரு உத்ஸவ் ஏன் தேவை என்பதை விளக்கப் போதுமானதாகிவிடுகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை வானுறையும் தெய்வத்துள் வைப்பதே நம் மரபு. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதே நம்மை வழிநடத்தும் கருவி. (நீ த்வைதி இல்லையா என்பவர்கள் விலகி நிற்க. த்வைதமும் அத்வைதமும் மிக மெல்லிய வகையில், தெய்வத்து நிகராகலாம், தெய்வமாகவே ஆகலாம் என்பதில் மட்டுமே முரண்படுகிறது என்று மிக எளிமையாக எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றும் என்னளவில் இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்துகொள்க!) எனவே மனிதனை தெய்வமாக்குவது ஹிந்து, எனவே இந்திய, முறைமை. இதில் மேன்மையே உள்ளது. மனிதன் எக்காரணத்தினாலும் தெய்வமாக முடியாது என்பதும் தெய்வம் ஒன்றே என்பதும் நம்க்கு ஒவ்வாத ஆபிரஹாமிய சிந்தனைகள். இந்த சிந்தனைகளில் இருந்து வெளிவர குரு உத்ஸவ் என்ற வார்த்தை மாற்றமே உத்வேகம் அளிக்கக்கூடியது என்பதை நான் நம்பவில்லை என்றாலும், இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்ப்பவர்கள் நம்புவதால் அந்தப் பெயர் மாற்றத்தை நான் வரவேற்கிறேன். மனிதன் என்பவன் நிச்சயம் தெய்வமாகலாம்.

குரு என்பதற்கும் ஆசிரியர் என்பதற்கும் நானாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர்கள் குருவாகவே வேண்டும் என்பதே என் ஆசை. குரு என்னும் வார்த்தை (அது தமிழா சம்ஸ்க்ருதமா என்பது தேவையற்றது. தமிழில் பெருவகையில் புழங்கியபின்னர் இது தமிழ் வார்த்தையாகவே இருக்கட்டும் என்பதே என் கருத்து) பெரிய அளவில் பரந்த அளவில் ஆழமான அளவில் ஒரு பொருளைக் கொண்டுவிடுகிறது என்று தோன்றுகிறது. ஆசிரியர் என்பது நம் இயல்பான வாழ்க்கையில் அதிகம் புழங்கிவிட்டதால், எதையேனும் கற்றுத் தருபவர் ஆசிரியர் என்ற பொருளில் பழக்க அளவில் சுருங்கிவிட்டது என்றும் எனக்குத் தோன்றுகிறது. இவை தோற்ற மயக்கங்களாகவே இருக்கலாம். ஆனால் இன்று இப்படித்தான் தோன்றுகிறது என்பதைப் புறக்கணித்துவிட்டு எப்படி யோசிக்கமுடியும்?

இப்படி ஒரு பிரிவை வைத்துக்கொண்டோமானால், இதை ஏற்றுக்கொண்டோமானால், எனக்கு குரு என்று யாருமில்லை. இதில் ஆணவம் எதுவும் இல்லை. ஒரு குருவை அடையும் குறைந்தபட்ச தகுதிகூட எனக்கில்லை என்ற அளவில் நான் இதை என்னை மட்டம்தட்டித்தான் சொல்கிறேன். குரு இல்லை என்பதல்ல, குருவைக் கண்டுணர்ந்து குருவை ஏற்கத்தக்கவனாக நான் இன்னும் தயாராகவில்லை என்றே சொல்கிறேன். நம்புங்கள். ஆனால் ஆசிரியர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். மிருதஞ்ஜெயன் என்ற ஆசிரியர் அடிக்கடிச் சொல்வார், கல்லூரியில் படிப்புக்குப் பின்னர் தேர்வு ஆனால் வாழ்விலோ தினம் தினம் தேர்வுக்குப் பின்னர்தான் படிப்பு என்று. அப்படி எனக்குப் பலப்பல விஷயங்களைக் கற்றுத் தந்த, கற்றுத் தந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வணக்கத்துக்குரியவரே. (க்ளிஷே போதும்.)

குரு இல்லை என்றாலும் குருத்துவத்தில் சில பரிமாணங்களை சில பொழுதுகளில் காட்டிய ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் அனைவரும் வணக்கத்துக்குரியவர்கள்.

நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு வகுப்பெடுத்த முத்துலக்ஷ்மி டீச்சர் நினைவுக்கு வருகிறார். மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்யாமல் வருவது பாவமல்ல, சேட்டை செய்வது குற்றமல்ல, எதிர்த்துப் பேசுவது தவறல்ல என்று செயல்பட்ட அந்த ஆசிரியர் எப்போதுமே எங்களிடம் (என்னிடம்) அன்பாகவே இருந்தார். அவருடன் வேலை பார்த்த மற்ற ஆசிரியர்கள் முகத்தில் எள்ளும் கடுகும் வெடித்தபோது (அப்போது அந்த வயதில் அப்படித் தோன்றியது) இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பின்னாளில் என்னுடன் டேக்-கில் வேலை செய்த மந்திரமூர்த்தி இந்த ஆசிரியரின் மகன் என்று அறிந்தபோது, முத்துலக்ஷ்மி டீச்சரின் மேல் இருந்த பிரியும் மந்திரமூர்த்தி அண்ணனின் மேலும் வந்தது என்றால், எனக்கு முத்துலக்ஷ்மி டீச்சரை எவ்வளவு பிடித்தது என்று பார்த்துக்கொள்ளுங்கள். சேரன்மகாதேவியில் இருந்த அந்த பஞ்சாயத்து போர்ட் ஸ்கூல் முத்துலக்ஷ்மி டீச்சரின் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஆசிரியராக இருந்தால் என்னால் முத்துலக்ஷ்மி டீச்சர் போல இருந்திருக்கமுடியாது என்பதே இந்த டீச்சரின்மேல் மரியாதையை வரவழைக்கிறது.

9ம் வகுப்பை மதுரையில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் படித்தேன். அப்போது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் லக்ஷ்மணன் ஐயா. இவர் இல்லாவிட்டால் தமிழின் இலக்கணத்தை என் வாழ்நாள் எதிரியாக நினைத்திருப்பேன். தமிழ் இலக்கணம் என்பது எளிமையானது, அழகானது, ஆர்வத்துடன் படிக்க வல்லது என்பதை நிரூபித்தவர் அவர். இன்று வரை எனக்குத் தெரிந்த தமிழுக்கு அடிப்படை வித்து லக்ஷ்மணன் ஐயா இட்டதே.

10ம் வகுப்பில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் நார்மன் சார் எனக்கு வகுப்பாசிரியராக வந்தார். இவர் என் மேல் வைத்திருந்த பாசம் இப்போதும் எனக்குப் புரியாததாக இருக்கிறது. குள்ளப்பையா என்றுதான் என்னை அழைப்பார். கிறித்துவ இறைவழிபாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டவர் என்று இப்போது தோன்றுகிறது. வகுப்பு முடிந்ததும் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கும் என்று சொல்லி, சிலரை அழைத்துவந்தார். அவர்கள் கிறித்துவ இறைப் பாடல்களைப் பாடினார்கள். கண்ணை மூடி இறைவனை நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நான் மறுநாள் நார்மன் சாரிடம் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று சொன்னேன். நான் ஹிந்து என்றோ, நடப்பது கிறித்துவத்தைப் புகுத்தும் செயல் என்றோ அன்று எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் எனக்கு ஒப்பவில்லை. என் தெய்வம் ஏசுவல்ல என்று மட்டும் மனத்தில் பட்டது. இப்ப என்ன, நீ உனக்குப் பிடிச்ச சாமியை நினைச்சுக்கோ என்றார். நான் தலைமை ஆசிரியரான தர்மராஜ் சாரிடம் சென்று சொன்னேன். (இவரைப் பற்றி அடுத்து.) அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பின்னர் அதுபோன்ற வகுப்பு நடக்கவில்லை. ஆனால் நார்மன் சார் எப்போதும் போல் என்னிடம் அன்பாகவே இருந்தார். பள்ளி இறுதித் தேர்வின்போது மிகச் சிறிய பைபிள் ஒன்றை (ஒரு குழந்தையின் கை அகலத்துக்கும் குறைவானது) அனைவருக்கும் பரிசளித்தார். எனக்குத் தரும்போது, உனக்கு வேண்டாம்னா பரவாயில்லை என்றார். இல்லை, தாங்க சார் என்று வாங்கி வைத்துக்கொண்டேன். பல நாள் அதனுள்ளே ஓம் டாலரை வைத்திருந்தேன். பள்ளி சமயத்தில் திடீரென்று ஒருநாள் அவரை ஒரு சாலையில் பார்க்க நேர்ந்தது. வாடா என்று அழைத்துக்கொண்டு போய் எனக்கு பஜ்ஜி வாங்கித் தந்தார். இப்போது நினைத்தாலும் அன்று பட்ட கூச்சம் இப்போதும் வருகிறது. ஆனாலும் எந்த ஆசிரியர் இப்படிச் செய்வார் என்பதும் நினைவுக்கு வருகிறது. என் வாழ்வில் நான் நன்றாக இருக்கவேண்டும் என எனக்காகப் பிரார்த்தித்த நார்மன் சாரை இன்றும் நினைத்துக்கொள்கிறேன்.

எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தர்மராஜ் சார். வாழ்நாளில் என்னால் இவரை மறக்கவே முடியாது. நான் அங்குப் படித்த மூன்று ஆண்டுகளும் என் மீது மிகுந்த பாசத்தையும் நம்பிக்கையையும் வைத்திருந்தவர் தர்மராஜ் சார். நார்மன் சார் கிறித்துவப் பாடல் குழுவைக் கூட்டிக்கொண்டு வந்தபோது இவரிடம் சொன்னேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பின்னர் இவர் தலையீட்டின்பேரில்தான் அது நிறுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். பத்தாம் வகுப்பு முடிந்ததும் டிசி வாங்கப் போயிருந்தேன். ஐயரே இங்கயே படி, என் வீட்ல தங்கிப் படி என்றார். நான் திருநெல்வேலிக்குப் போகவேண்டி இருந்தது. மனதில்லாமல் டிசி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். அவரது முகவரியைக் கேட்டேன். ஜார்ஜ் தர்மராஜ்னு போட்டு, ஸ்கூல் அட்ரஸுக்கு போஸ்ட்கார்ட் போடு, சரியா எனக்கு வந்துரும் என்று சொன்னார். அப்போதுதான் அவரும் கிறித்துவர் என்றே தெரிந்தது. அதுவரை அன்றுவரை அவர் கிறித்துவர் என்று எனக்குத் தெரியாது. அவரிடமே சென்று நார்மன் சாரின் கிறித்துவக் குழுவின் பாடலைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரும் இதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்தாம் வகுப்பில் நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க தர்மராஜ் சார் பட்ட பாடு சொல்லமுடியாதது. எங்களுக்குகாக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். அவர் இல்லையென்றால் எங்கள் பள்ளியே இல்லை என்னும் அளவுக்கு அவர் பள்ளியின் மேல் ஈடுபாட்டோடு இருந்தார். அவரை மறக்கமுடியாது.

பத்தாம் வகுப்பில் வரலாறு புவியியல் சமூகவியல் எடுத்த கிருஷ்ணன் சார். உட்கார்ந்த இடத்திலேயே கண்முன் அத்தனையையும் படமாக விரித்து பாடம் நடத்த வல்லவர். அவரைப் போன்ற ஒருவர் பாடம் எடுத்தால் வரலாறெல்லாம் இனிக்கும். புவியியலெல்லாம் பிடிக்கும். சமூகவியல் சலிக்காது. பத்தாம் வகுப்புப் பரிட்சைக்கு முன்னர் அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த பேனாவை எனக்குப் பரிசாகத் தந்தார். அன்றோடு அவரது பணி நிறைவடைந்து பள்ளியை விட்டும் விடைபெற்றுக்கொண்டார். மிக நல்ல ஆசிரியர்.

பத்தாம் வகுப்பில் ஜான் சார். கணித ஆசிரியர். இத்தனை நன்றாக கணிதம் எடுக்கமுடியுமா என்று வியக்க வைத்தவர். எதையும் விடாமல் புத்தக அட்டை டூ அட்டை நடத்திய முதல் ஆசிரியர். நண்பனைப் போல என்னிடம் பழகியவர். தினமும் மதியம் தன் வீட்டுக்குச் சாப்பிடச் செல்லும்போது சைக்கிளில் டபிள்ஸ் என்னை ஏற்றிக்கொண்டு சென்று என் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போனவர். இதெல்லாம் ஒரு ஆசிரியர் செய்வாரா என்று என்னை ஆச்சரியப்பட வைத்தவர். நான் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன் என என்னைவிட அதிகம் நம்பியவர்.

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் திருநெல்வேலி மதிதா பள்ளியில் எனக்குத் தமிழ் கற்பித்த சோமசுந்தரம் ஐயா. இவரைப் பற்றிய சில மதிப்பீடுகள் வயதின் காரணமாக பின்னர் சற்றே மாறி, மீண்டும் அதே வயதின் காரணமாக சரிந்த மதிப்பீடு மீண்டும் உயர்ந்தது என்பதைச் சொல்ல்த்தான் வேண்டும். இவர் தமிழ் இலக்கணம் கற்பித்த முறை மறக்கமுடியாதது. பல இலக்கண விதிகளை அப்படியே ஒப்பிப்பார். மிக அழகாக விளக்குவார். மற்ற மாணவர்கள் எல்லாம் எரிச்சலில் இருக்க, நானும் அவரும் மட்டும் விடாமல் இலக்கணம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். நீங்க ரெண்டு பேரும் தனியா போய் பேசுங்கல என்று நண்பர்கள் அலறுவார்கள். பனிரெண்டாம் வகுப்புக்கான ஃபைனல் ரிவிஷன் தேர்வில் தமிழில் 197 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். தன் வாழ்நாளில் தமிழை இத்தனை ஆர்வமாகக் கற்ற மாணவனைப் பார்த்ததில்லை என்று சொல்லி, எனக்கு நன்னூல் ஒன்றைப் பரிசளித்தார். 

மற்ற ஆசிரியர்கள் பாடம் எடுக்காமல் உதார் விட்டுத் திரிந்தபோது, பள்ளியில் பாடம் எடுப்பதைத் தன் சத்தியச் செயலாகக் கடைப்பிடித்த சுப்பையா சார். கணித ஆசிரியர். நான் அவரிடம் டியூஷன் சேர்ந்தபோது, ஒனக்கு என்ன இங்க தனியாவா எடுக்கபோறேன், அங்க எடுக்கதுதான் இங்கயும், ஒனக்கு டியூஷன் வேண்டாம்ல என்று சொன்னவர். பள்ளியில் 45 நிமிடங்கள் கொண்ட ஒரு வகுப்பில் 45வது நிமிடம் வரை பாடம் நடத்தியவர். கணிதத்தின் மேல் காதல் வரக் காரணமாய் இருந்த ஆசிரியர் சுப்பையா சார். இன்றும் மதிதா பள்ளியில் பணியில் இருக்கிறார்.

மதிதா கல்லூரியில் வேதியியல் கற்பித்த மிருதஞ்ஜெயன் சார், விஸ்வநாதன் சார், கந்தசாமி சார். இவர்கள் மூவரும் முக்கண்களாக இருந்து எங்களை வழிநடத்தினார்கள். வேதியியலைக் காதலோடு படிக்க் வைத்த விற்பன்னர்கள் இவர்கள். எங்கள் வயதைப் புரிந்துகொண்டு எங்களிடம் பழகியவர்கள். எங்களின் விளையாட்டுத்தனத்தையும் விடலைத்தனத்தையும் மன்னித்தவர்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் தன்னுள்ளே கொண்டு எனக்குக் கல்வி கற்றுத் தந்த என் தாத்தா என் வாழ்நாளின் மிக முக்கியமான ஆசிரியர். இவர் இல்லாவிட்டால் நான் இல்லை.

இத்தனை ஆசிரியர்களுக்கும் என் குரு வணக்கம். ஆசிரியர் தினம் என்றதால் இன்று கொஞ்சம் சிறப்பாக நினைக்கிறேன். ஆனாலும் மற்ற எல்லா தினங்களிலும் இவர்களை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். கண்ணில் நீருடன் அவர்கள் அனைவருமே தெய்வத்துள் வைக்கத் தக்கவர்கள் என்றெண்ணி அவர்கள் அனைவரின் பாதம்தொட்டு நமஸ்கரிக்கிறேன். என் திமிரினாலும் அறியாமையாலும் இவர்களுக்கு எந்த வகையிலேனும் மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருந்தால் பெருந்தன்மை கொண்ட இவர்கள் என்னை மன்னித்துவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். குரு உத்ஸவ் தொடரட்டும்.

Share

டியூஷன் (1)

என் மனைவி கடந்த இரண்டு வருடங்களாக டியூஷன் எடுத்துக்கொண்டிருக்கிறாள். அதில் வரும் சில மாணவர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது. இவர்கள் இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே புரியவில்லை.

ஒரு மாணவன், கடந்த வருடம் 6ம்வகுப்பில் படிக்கும்போது டியூஷனுக்கு வந்தான். ஒரு வாரம் பாடம் எடுத்த என் மனைவி, என்னிடம் இயற்பியலில் ஒரே ஒரு பாடம் எடுத்துப் பாருங்க என்றாள். நானும் ஆவலாக அவனுக்கு மிக ஆழமாக விரிவாக இயற்பியலில் ஒரு பாடம் எடுத்தேன். பையன் ஒரு தனியார் பள்ளியில் சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருந்தான். அவன் நான் நடத்தியதை மிகவும் ஆர்வமாகக் கேட்டான். அதை ஒட்டிய சில யூடியூப் வீடியோக்களைக் காட்டினேன். மிகவும் ஆர்வமாகப் பார்த்தான். அன்றைய வகுப்பு முடிந்ததும், மறுநாள் அந்தப் பாடத்தை எழுதிக் காண்பிக்கவேண்டும் என்று சொல்லி, வீட்டில் வைத்துப் படித்துவிட்டு வருமாறு சொல்லி அனுப்பினேன். என் மனைவி அமைதியாக இருந்தாள்.

மறுநாள் அந்தப் பையன் வந்தான். கேள்விகளை எழுதிக் கொடுத்தேன். அவன் பதில் எழுதித் தரவே இல்லை. என்னதான் எழுதியிருக்கிறான் என்று பார்க்கலாம் என வாங்கிப் பார்த்தபோது, அவன் எழுதிய விதமும் எழுத்தும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட அவனால் ஒழுங்காக எழுத இயலவில்லை. ஒரு கேள்விக்கும் சரியான பதிலை எழுதத் தெரியவில்லை. எழுதிய அனைத்துப் பதில்களும், அனைத்து வார்த்தைகளும் தவறு. ஆறாவது படிக்கும் பையனுக்கு ஒரு வரி கூட ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து எழுதத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு பையனுக்கு நேரடியாக ஒரு பாடத்தை எப்படி விழுந்து விழுந்து எடுத்தாலும் அது பயன் தரப்போவது கிடையாது. தமிழ் எப்படி படிப்பாய் என்று கேட்டேன். அவன் பெயரில்கூடத் தமிழ் உண்டு. தமிழ் நல்லா வரும் என்றான். முதல் மனப்பாடச் செய்யுளை எழுதச் சொன்னேன்.

நான்கு வரி உள்ள அந்த மனப்பாடச் செய்யுளை எழுதிக் காண்பித்தான். நான்கைந்து வார்த்தைகள் தவிர அனைத்தும் பிழையுடன் இருந்தன. சரி, ஒருமுறை பார்த்து எழுதிவிட்டு வா என்றேன். அப்போதும் கிட்டத்தட்ட அதே பிழைகள் அப்படியே இருந்தன. பார்த்துத்தானே எழுதினாய் என்று கேட்டேன். ஆமாம் என்றான். என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் அவனுக்கு அ, ஆ மற்றும் க ங ச நடத்தினாள் என் மனைவி. அதில் சில எழுத்துகளை எழுதச் சொன்னபோதும் அவனுக்கு எழுதத் தெரியவில்லை. உயிரெழுத்து, மெய்யெழுத்து என எதையும் சரியாக எழுதத் தெரியவில்லை.

அந்தப் பையனின் தந்தையை அழைத்துப் பேசினேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவருக்கு. பார்த்துமா எழுதத் தெரியலை என்று கேட்டார். அவன் எழுதியதை வாங்கிப் பார்க்குமாறு சொன்னேன். உடனே அவனை ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பது நல்லது என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கெனவே நான்காம் வகுப்பில் இரண்டு முறை இருந்துவிட்டான், இனியும் அப்படிச் செய்யமுடியாது என்றார். இவனுக்கு ஆறாம் வகுப்பின் பாடங்களை நடத்துவது சரியாக வராது என்றேன். முதலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்கான பாடங்களைத் தொடங்கவேண்டும், அதுவரை அவனது பள்ளியை நீங்களே சமாளித்துக்கொள்ளவேண்டும் என்றேன். சரி என்று சொல்லிவிட்டார். அடுத்த மூன்று மாதங்கள் அவனுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வியை என் மனைவி நடத்தினாள். மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்தான். வேகமான முன்னேற்றமெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். மெதுவாக மிக மெதுவாக மெல்ல மெல்ல படிக்க ஆரம்பித்தான்.

படம் பட்டம் என்பதையெல்லாம் ஆறாம் வகுப்பு மாணவன் தவறுடன் எழுதுவது எனக்கு கடுமையான சோர்வை அளித்தது. இத்தனைக்க்கும் ஆறு வருடங்கள் முக்கியமான ஒரு தனியார்ப் பள்ளியில் வருடம் 40,000 ரூ கட்டிப் படித்திருக்கிறான். தனிப்பயிற்சியும் உண்டு. யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லையா? தெரியவில்லை. அவரது தந்தைக்கும் தாய்க்கும் அவர்களது தினப்படி வாழ்க்கையை எதிர்கொள்வதே பெரிய சவாலாக இருந்ததால் இவனைக் கவனிக்கமுடியவில்லை. மேலும் பணப் பிரச்சினை காரணமாக எப்படியாவது தன் மகன்களைப் (இந்தப் பையனுக்கு ஒரு தம்பியும் உண்டு, அவன் 3ம் வகுப்பு. அவனுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எந்த எழுத்தும் தெரியவில்லை. 3ம் வகுப்பு என்பதால் கொஞ்சம் தப்பித்தான்) படிக்கவைக்க கடுமையாக உழைப்பதை மட்டுமே இருவரும் முழுநோக்காகக் கொண்டுவிட்டார்கள். எனவே தன் மகன் எப்படிப் படிக்கிறான் என்பதில் கவனம் செலுத்தவில்லை. எப்படிப் படிக்கவைக்கவேண்டும் என்பதும் அவர்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

ஒரு வழியாக ஆறு மாதங்களில் அந்தப் பையன் குறைவான பிழைகளுடன் எழுத ஆரம்பித்தான். நீண்ட கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு, கோடிட்ட இடம் நிரப்புதல், பொருத்துதல், ஒரு வரிக் கேள்வி பதில், இருவரிக் கேள்வி பதில் இவற்றை மட்டும் படிக்க வைத்தாள் என் மனைவி. மெல்ல மெல்ல இரண்டு இலக்க மதிப்பெண்கள் வாங்கினான். அவனது வீட்டில் அதை ஒரு பெரிய சாதனையாகப் பார்த்தார்கள். இதுவரை அவன் எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதனால் பள்ளி அந்தப் பெற்றோர்களுக்குக் கடும் நெருக்கடியைத் தந்தது. பலவீனமான மாணவர்கள் அதிக நேரம் பள்ளியில் இருந்து படிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் மாணவர்களால் படிக்க இயலாது என்பதே உண்மை. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை நெருக்க ஆரம்பித்தது. இந்தப் பையனின் ஆசிரியர்கள் எப்படியாவது தன் வகுப்பில் இவன் சேராமல் இருக்கவேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஏனென்றால் இவன் ஏன் இத்தனை குறைவாக  மதிப்பெண் பெறுகிறான் என்பதற்கு அவர்கள் நிர்வாகத்துக்கு விளக்கம் தரவேண்டியிருந்தது.

ஒருவழியாக இந்தப் பையன் அறிவியல் மற்றும் கணிதம் தவிர மற்ற பாடங்கள் தேர்ச்சி பெறத் தொடங்கினான். பெரிய சாதனை இது. ஆனால் இது அறிவு வளர்ந்ததற்கான முழுமையான அடையாளம் அல்ல. கொஞ்சம் வளர்ச்சி, அதோடு வினாக்கள் கேட்கப்படும் முறையைத் தெரிந்துகொண்டு, எதைப் படித்தால் மதிப்பெண்கள் எளிதாகப் பெறலாம் என்பதையும் சேர்த்து கிடைத்த வெற்றி. அதாவது மதிப்பெண்ணுக்காக படிக்கும் முறை. இதை வெற்றி என்று சொல்லமுடியாது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் தன் மகன் இப்படி மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்பதை பெரிய மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். பள்ளியிலும் இப்போது இந்தப் பையன் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல ஆரம்பித்தார்கள். மதிப்பெண் என்ன ஆனாலும் பரவாயில்லை, அவன் முதலில் எழுத்துகளை வார்த்தைகளை மொழியைப் படிக்கட்டும் என்று விட்டுவிட பெற்றோரும் ஆசிரியரும் சமூகமும் தயாராக இல்லை. 

இதில் இன்னொரு விஷயம், இந்தப் பையன் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பான். மற்ற பையன்கள் போல ஏமாற்றுவது, படிக்காமல் இருப்பது, பார்த்து எழுதுவது என எதையும் செய்யமாட்டான். மூன்று மணி நேரம் தொடர்ந்து படிக்கச் சொன்னாலும் எவ்வித சுணக்கமும் இன்று படித்துக்கொண்டே இருப்பான். எத்தனை முறை எழுதச் சொன்னாலும் எழுதிக்கொண்டு வருவான்.  இப்படிச் சிலரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அப்படிப் படித்தும் அவனால் பெரிய மதிப்பெண்கள் பெறமுடியவில்லை.

இந்த வருடம் மெட்ரிகுலேஷனுக்கு மாற்றிவிட்டார்கள். ஏழாம் வகுப்புக்கு எப்படியோ தேர்ச்சி பெற்று வந்துவிட்டான். சமச்சீர்க் கல்வி என்பதால் கொஞ்சம் எளிமையாக இருக்கிறது. ஆனால் பள்ளியின் நெருக்கடி அப்படியே தொடர்கிறது. இப்போதும் 3 பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளான். கணக்கிலும் அறிவியலிலும் 35க்கும் குறைவான மதிப்பெண்களே பெறுகிறான். கேள்வித்தாள் ப்ளூ பிரிண்ட்டை வைத்துத்தான் மதிப்பெண்கள் வாங்க வைக்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக இந்தக் கல்வியினால் அவன் பெறப்போவது என்ன என்று யோசிக்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. 

இவன் இப்படி ஆன விஷயத்தில் பள்ளிக்கும் பெற்றோர்க்கும் சம பங்கு பொறுப்பு உள்ளது. பள்ளிகள் அதனை மிக எளிதாகக் கடந்துவிடும். பெற்றோர்கள் மாட்டிக்கொள்வார்கள். தன் மகன் எப்படி என்ன எதற்காகப் படிக்கிறான் என்பதை நிச்சயம் ஒரு பெற்றோர் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட நிலைக்குத்தான் எந்த ஒரு பையனும் போய்ச்சேர வேண்டியிருக்கும். இந்தப் பெற்றோரின் மன நெருக்கடியும் பண நெருக்கடியும் சாமானியமானதல்ல. வருடம் இரண்டு பையன்களுக்கும் சேர்த்து குறைந்தது 70,000 ரூபாய் செலவு செய்தும் பையன்களின் படிப்பின் நிலை இப்படித்தான் என்றால் அந்தப் பெற்றோரின் நிலை இப்படி என்றால், யோசித்துப் பாருங்கள்.

இப்படி ஒரு வகை பெற்றோர் என்றால், இன்னொரு வகை பெற்றோர் உண்டு. அவர்களைப் பற்றி அடுத்து.

Share