Archive for அரசியல்
கமல் 10
சசிகலாவைப் பற்றிய மீம்ஸ்கள்
சுப்ரமணியம் சுவாமியின் சட்ட (சசிகலா) ஆதரவு
ஓபிஎஸ்ஸின் தியானம் அல்லது திடீர்ப் புரட்சி
அடுத்து என்ன?
எப்படியும் இன்று ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு நான்கரை வருடங்கள் உள்ள நிலையில், இதே வேகத்தை மக்கள் மத்தியில் நீட்டித்து வைத்திருப்பது சாத்தியமே இல்லாதது. ஓபிஎஸ் பின்னால் ஒரு எம் எல் ஏ கூட வரமாட்டார் என்பதுவே இப்போதைய நிலை. ஒருவேளை ஒரு எம் எல் ஏ கூட வரவில்லை என்றால், ஓபிஎஸ் என்ன செய்வார் என்பதைவிட எதிர்க்கட்சிகள் அவரை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே முக்கியத்துவம் பெறும். ஏனென்றால் மக்கள் ஆதரவை நிரூபிக்க நான்கரை வருடங்கள் காத்திருக்கவேண்டும். நான்கரை வருடங்கள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம். ஜெயலலிதா மறைந்து இரண்டு மாதங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று பாருங்கள். அதுவே ஜெயலலிதா ஆண்ட ஐந்தரை ஆண்டுகளில் (ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு விவகாரங்கள் நீங்கலாக) இப்படி பரபரப்பாக பெரும்பாலும் எதுவும் இல்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள். அரசியல் உறுதித்தன்மை இல்லாதபோது சிறுநிகழ்வு கூட பெரிய உருவம் கொள்ளும். அதைத்தான் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்.
ஒரு கட்சியின் வளர்ச்சி அக்கட்சியின் உள்ளார்ந்த வளர்ச்சியைப் பொருத்தது என்பதோடு, போட்டிக் கட்சியின் தாழ்விலும் அமையும். இன்னொரு கட்சியின் அழிவுக்கு நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று வெளியில் பேசிக்கொண்டாலும், உள்ளே குழிப்பறி வேலைகள் நடந்தவண்ணம் இருக்கும். இதில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நேர்மையான செயல்களும், மோசமான நடவடிக்கைகளும் அடங்கும். அரசியல் இப்படித்தான்.
சசிகலா முதல்வராகப் பதவி ஏற்கும் பட்சத்தில், அவர் எப்படியும் ஆறு மாதத்துக்குள் ஒரு தொகுதியில் நின்று எம் எல் ஏவாக வென்றே ஆகவேண்டும். அத்தொகுதியில் ஓபிஎஸ் நிற்கவேண்டும். இது சசிகலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். ஓபிஎஸ் மனதில் வேறு பெரிய எண்ணங்கள் இருக்குமானால், நல்ல ஒரு வேட்பாளரை நிற்கவைக்கலாம். ஒருவேளை ஓபிஎஸ் நின்று தோற்றுப் போனால், உடனடியாக அவரது அரசியல் வாழ்வு பின்னடைவு கொள்வதை இது தடுக்கலாம். வேறொரு வேட்பாளரை நிறுத்தும்போதோ அல்லது ஓபிஎஸ்ஸே நிற்கும்போதோ, திமுக தன் வேட்பாளரை நிறுத்தாமல், தன் ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு அளிப்பதன்மூலம் சசிகலாவின் தோல்வியை உறுதி செய்யலாம். இதை ஸ்டாலின் செய்வது திமுகவுக்கும் ஒரு வகையில் நல்லது.
சசிகலாவின் தோல்வி அவரது முதலமைச்சர் கனவைத் தூளாக்குவதோடு, அதிமுகவின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். இது ஸ்டாலினின் உடனடி வளர்ச்சிக்கு நல்லது. திமுக வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்கட்டும் என்று கருணாநிதி பாணியில் யோசிக்காமல், தன் சிறுநலனை விட்டுக்கொடுத்து பெரிய நலனில் அக்கறை கொள்வது ஸ்டாலினுக்கு நல்லது. இதனால் ஏற்படப்போகும் இன்னொரு நன்மை, ஓபிஎஸ்ஸின் திடீர்ப் புரட்சிக்குப் பின்னால் திமுக உள்ளது என்று சொன்னவர்கள் இதைக் கையில் எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு தர்ம சங்கடம் ஏற்படும். இன்னுமொரு நன்மை, தொடர்ச்சியாக ஸ்டாலினைச் சுற்றி நிகழும் அரசியல். இவற்றையெல்லாம் மனதில் வைத்து ஸ்டாலின் முடிவெடுக்கவேண்டும்.
இதில் ஒரு பின்னடைவு ஸ்டாலினுக்கு உள்ளது. திமுக போட்டியிடாத நிலையில், ஏதேனும் ஒரு கட்சி கொஞ்சம் அதிகம் செல்வாக்குடன் இரண்டாவது இடத்துக்கு வரும். இடைத்தேர்தல்தான் என்பதாலும் அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக எளிதாக முதலாவதாகவோ இரண்டாவதாகவோ வரும் என்பதால் திமுக அல்லாத ஒரு கட்சி இரண்டாம் இடத்துக்கு வருவது மிகத் தற்காலிகமே என்பதாலும் இந்தச் சிறிய பின்னடைவை ஸ்டாலின் பொறுத்துக்கொள்ளலாம்.
இந்த உடனடி நன்மையைக் கணக்கில் கொண்டால் மட்டுமே ஓபிஎஸ் மூலம் கொஞ்சம் அறுவடையைத் தமிழ்நாடு பெறும். இல்லையென்றால் இந்தப் புரட்சி ஒருநாள் புரட்சியாக மட்டுமே வரலாற்றில் தேங்கிப் போகும்.
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றால், இது எதுவுமே தேவை இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறாவிட்டால், மேலே உள்ளதைத் தவிர வேறு வாய்ப்புகளை யோசிக்கமுடியவில்லை.
ரஜினியின் அரசியல் பிரவேசம்? (2017)
குடியரசு தினம் – 2017
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்
மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் இதுவரை மிகவும் அமைதியாக நடந்துகொண்டிருப்பது நல்ல விஷயம்தான். பாராட்டப்படவேண்டியது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு இந்தத் தொடர் போராட்டங்கள் எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக உணர்வு ரீதியாக தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மாணவர்கள் ஒருநாள் போராட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தினால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு தரப்படும்வரை போராட்டம் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் நடத்தும் திடீர் தொடர் உண்ணாவிரதங்கள் போல இது தோற்றமளிக்கிறது. இதுவரை மாணவர்களின் போராட்டம் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்தாலும், இதில் சில விஷமிகள் கலந்துகொண்டு போராட்டத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏதேனும் நடந்தால் அது மாணவர்கள் தலையில்தான் விடியும். எனவே மாணவர்கள் அமைப்புகள் மிகக் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். இது தன்னெழுச்சியான போராட்டம் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை. உள்ளடியாக நிச்சயம் சில அரசியல் நோக்கம் கொண்ட அமைப்புகள் இருந்தே ஆகவேண்டும். இப்படி இருப்பது தவறல்ல, இயல்பானதுதான். ஆனால் மாணவர்களின் முதல் வேலை படிப்பில் கவனம் செலுத்துவது. அரசியல் ஆர்வமும் அரசியல் பங்கெடுப்பும் இரண்டாவது வேலையாக இருக்கலாம். எனவே தொடர் போராட்டங்கள் எல்லாம் சரியானதுதானா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது அரசியல்வாதிகள் தங்கள் தேவைக்கு மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வது புதிதுமல்ல.
இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், 1967ல் மாணவர் போராட்டம் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்த சம்பவத்திலிருந்தே, மாணவர்கள் போராட்டம் பெரிய பிரச்சினையை மட்டுமே கொண்டுவரும் என என் மனதில் பதிந்துவிட்டது. இதை மனதில் வைத்தாவது மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, ஜல்லிக்கட்டுக்கு உணர்வு ரீதியாக தீவிரமான ஆதரவைத் தந்தது போதும் என்று முடிவெடுத்து படிப்புக்குத் திரும்பவேண்டும். நானெல்லாம் படிக்கும்போது ஒருநாள் விடுமுறை கிடைப்பதுதான் ஸ்ட்ரைக்கின் நோக்கம் என்ற புரிதலோடு கல்லூரியில் படித்தவன். இன்று மாணவர்கள் உணர்வோடு தொடர்போராட்டம் நடத்துவது பெரிய ஆச்சரியம் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.
இந்தப் போராட்டத்தின் பின்னணி தனித்தமிழ்நாடு என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தால், போராட்டக்காரர்கள் ஏமாந்து போவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன். ஃபேஸ்புக்கிலும் மாய ஊடகத்திலும் இருக்கும் தமிழகத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு இத்தனை முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஊருக்குள் பெரும்பாலும் இதைப் பற்றிய பேச்சே இல்லை. எனவே தமிழ்நாட்டை மையமாக வைத்து இந்தியாவை எதிர்ப்பவர்கள் வேறு விஷயத்தைத் தேடுவது நல்லது. காவிரி நீர்ப் பிரச்சினை போன்ற மிக ஆதாரமான விஷயத்தில்கூட, வடிவேலு போல ‘லைட்டா வலிக்குது’ என்று தாண்டிப் போனவர்கள் நம் மக்கள். போராட்டம் நடப்பது இவர்களை நம்பியே என்பதுதான் வரமும் சாபமும்!
அதிமுக இன்று (10-12-2016)
அதிமுக தற்போதைக்கு உடையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எதிர்பார்த்ததுதான். அடுத்த நான்கரை வருடங்களை யாரும் வீணாக்க விரும்பமாட்டார்கள். எம்ஜியார் இறந்தபோது ஜெயலலிதா இருந்த நிலையைவிட ஒப்பீட்டளவில் கம்பீரமான நிலையிலேயே இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட் – கரிஷ்மா. சினிமா புகழ். இது இன்று சசிகலாவுக்குக் கிடையாது. அன்று ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய மைனஸ் என்று எதுவும் கிடையாது. இன்று சசிகலாவுக்கு ஏகப்பட்ட சுமைகள். இதையும் மீறி அவரை மக்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதே சசிகலாவின் முன்னே உள்ள மிகப்பெரிய சவால். ஆனால் மக்கள் இதையெல்லாம் எளிதில் கடந்து செல்வார்கள் என்பதே எரிச்சலூட்டும் முகத்திலறையும் உண்மை. அடுத்த தேர்தல் வரை சசிகலாவுக்குப் பிரச்சினை இல்லை. உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்றாலும் பெரிய கவலை இல்லை. சட்டமன்றத் தேர்தலே முதல் இலக்கு. எம்ஜியார் இறந்தபோது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருக்குமே ஜெயலலிதா ஒரு பொருட்டில்லை. தானே தலைமையேற்க சரியான ஆள் என்று எண்ண பலர் இருந்தார்கள். இன்று சசிகலாவுக்கு இப்பிரச்சினை இல்லவே இல்லை. அடிமையில் மோகம் கொண்ட அமைச்சர்கள் அடுத்த தலைமைக்குத் தயாராக இருக்கிறார்களே ஒழிய, தானே தலைவர் என்றறிவிக்கும் அளவுக்கு தைரியமாக இல்லை. கட்சியை உடைத்துக்கொண்டு போனாலும் சில வருடங்களில் அரசியலில் காலி ஆகிவிடுவோம் என்று தெரிந்திருக்கிறது. அதையும் மீறி கட்சியை உடைக்கும் தேவை திமுகவுக்கு இருக்கிறது.
நம் மக்களின் இன்னொரு பிரச்சினை, ஒரு தடவை ஓர் அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தேர்தலில் வாக்களித்துவிட்டால், அவருக்குத் தண்டனை வழங்கிவிட்டதாக மானசீகமாக முடிவெடுத்துவிடுவார்கள். சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை விரும்பாத மக்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மிக மோசமாகத் தோற்கடித்துவிட்டால், அதற்கடுத்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கோபத்தை மறந்துவிடுவார்கள். இது சசிகலாவுக்கு இருக்கும் இன்னுமொரு சாதகம்.
இதையும் மீறி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலைச் சந்தித்தால் தோற்கும் வாய்ப்புகளே அதிகம். தோற்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். நான்கரை ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அரசியல் அதிகாரமும் பணமும் இந்த நான்கரை ஆண்டுகளில் எப்படி வேண்டுமானாலும் செயல்படச் சொல்லும். இதை மீறி, தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்கெனவே அதிமுக வென்றிருக்கும் வேளையில், மூன்றாவது முறையாக வெல்வது அத்தனை எளிதல்ல. ஜெயலலிதாவின் கரிஷ்மா என்றும் சசிகலாவுக்குக் கைக்கூடப் போவதுமில்லை. ஜெயலலிதா இருந்தபோது தள்ளி வைத்திருந்த நிலையிலேயே சசிகலாவின் குடும்பத்தினர் உருவாக்கிய பிரச்சினைகள் நமக்குத் தெரியும். இன்று ஜெயலலிதா இல்லாத நிலையில், சசிகலாவின் தலைமை உருவாகி வரும் சூழலில், இவர்கள் மிக வெளிப்படையாகவே அதிகார வட்டங்களை உருவாக்குவார்கள். இது 1996 அளவுக்குக் கூட அதிமுகவைக் கொண்டு செல்லும் வாய்ப்பு உண்டு. கூடவே தமிழ்த் தேசியவாதிகளின் பங்களிப்பும் சேர்ந்துகொண்டால், நிலைமையை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியான திமுகவின் நிலையையும் பார்க்கவேண்டும். கருணாநிதியில் அதிகாரம் இல்லாத அரசியல் அந்நேரம் உருவாகி இருக்கும். வாரிசுச் சண்டைகள் எல்லாம் ஓய்ந்து ஸ்டாலின் நிச்சயம் முக்கியத்துவம் பெற்றிருப்பார். இப்போதே கிட்டத்தட்ட அப்படித்தான். சரியான கூட்டணியுடன் ஸ்டாலின் வெல்லும் வாய்ப்புகளே அதிகம். அந்த வாய்ப்பை உறுதி செய்யவேண்டியதே இன்றைய திமுகவின் முக்கிய வேலையாக இருக்கவேண்டும். பாஜக புழைக்கடை வழியாக வருகிறது, நூலேணியில் இறங்கி வருகிறது என்றெல்லாம் கதை பேசிக்கொண்டிருந்தால், சசிகலாவிடமும் தோற்க வேண்டிய அவல நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதிமுகவை உடைப்பது குறித்து அதிமுகவினரை விட திமுகவினர் பதற்றமடைகிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்கக்கூடாது என்று திமுகவினர் பதறுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திமுககூட அதிமுகவை உடைக்கக்கூடாது என்று நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது எதிரணியை உடைப்பதையும் உள்ளடக்கியதுதான் அரசியல். மற்ற கட்சிகளைவிட நல்லாட்சியைத் தருவோம் என்பதே ஒரு முக்கியக் கட்சியின் முதன்மை நோக்கமாக இருக்கும். இதன் பின்னணியில் நல்லது செய்வதை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்சியை உடைப்பதும் அந்த வெற்றிடத்தில் ஆட்சியைப் பிடிப்பதும் அரசியல்தான். இந்த அரசியலை எத்தனை வெளிப்படையாக மேற்கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது. பணத்தின் மூலம் இதைச் செய்வதுதான் பிரச்சினைக்குரியதே ஒழிய, அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு செய்வது பெரிய பாவமல்ல. இதற்காக திமுகவினர் பதறுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தைப் பற்றி யோசிப்பது நல்லது. இதைச் சொல்வது ஏனென்றால் இது பாஜகவுக்கும் பொருந்தும். 🙂 ஆனால், பொன் இராதாகிருஷ்ணனும் தமிழிசையும் எத்தனை நல்லவர்கள் என்றால், ஒரு ஃபோன் போட்டு, இப்படி அதிமுக தத்தளிக்கும்போது அதை உடைக்கும் அரசியல் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு உடனே ஏற்றுக்கொண்டு இன்னும் அமைதியாகிவிடுவார்கள். அத்தனை நல்லவர்களைப் பார்த்து பின்வாசல் அவதூறுகளைப் பரப்பாதீர்கள். மீறினால் நரகம் நிச்சயம். 🙂