Archive for ஹரன் பிரசன்னா

ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை

அந்திமழையில் ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு கடையில் வெளி ரங்கராஜன் சி.சு.செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’ நாவலை வெளியிட்டு அதைப் பற்றிப் பேசினார். அன்றே ஜீவனாம்சம் வாங்கினேன்.

பிராமண விதவைப் பெண் சாவித்திரியின் உலகம் புத்தகம் முழுதும் சுழல்கிறது; நம்மைச் சுழன்றடிக்கிறது. சாவித்திரியின் எண்ண ஓட்டத்தில் எழுதப்பட்டுள்ள கதையில் சாவித்திரியின் நினைவுகள் எழுப்பும் கேள்விகள், கேவல்கள், ஆசைகள் அனைத்தும் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விதவைப் பெண்ணின் உலகம் தீவிரமாகவும் ஆழமாகவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த சாவித்திரி சமையல் கூடத்தைத் தாண்டாதவள். அவளின் உலகம் என்பது வெளி நபர்கள் மூலம் ஏற்படுத்தப்படுகிற ஒன்று. ஒவ்வொரு வெளி நபர் வரும்போதும் சாவித்திரி நினைவுச் சுழலுக்குள் ஆள்வதும், அவர்களின் மூலம் அறிகிற விஷயங்களில் இருந்து நிகழ்கால உலகத்தை யூகத்தில் உருவாக்கிக்கொள்வதும் விதவைப் பெண்ணின் கட்டுப்பெட்டி வாழ்க்கையை வெளி எளிதாகத் தெரிவித்துவிடுகின்றன.

சாவித்திரியின் புகுந்த வீடு வாழ்க்கை அவளுக்குத் தந்திருந்த சுதந்திரம் மீதும் உரிமை மீதும் அவளுக்குப் பெரிய கர்வம் இருக்கிறது. அவள் சமைத்த உணவின் ருசியின் மீது நடத்தப்படும் இயல்பான விவாதங்கள் யார் வீட்டிலும் நிகழக்கூடியதே; அதை வைத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் மறைமுகமாகச் சொல்லிவிட முடிகிறது செல்லப்பாவிற்கு. சாவித்திரி எப்பேற்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாள் என்று வாசிக்கிற வாசகரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நினைக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர். செல்லப்பாவின் வரிகளில் பூடகம் இல்லை. ஆனால் அவை ஒரு மனிதனின் மன ஆழத்தில் இருந்து வெளிப்படும் சொற்பமான வார்த்தைகள் தரும் அதிக பட்ச விளைவை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவை. நாவலில் வரும் மிகக்குறைந்த கதாபாத்திரங்கள் இத்தகைய வலிமையான உணர்வுகளால் பின்னப்பட்ட வசனங்களினால் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. மிகச் சில இடங்களில் மட்டுமே நேரடியாக இடம்பெறும் கணபதி, சாவித்திரியின் எண்ண ஓட்டங்களின் மூலமாகிறான். சாவித்திரியின் எண்ண ஓட்டங்கள் ஒன்று கணபதியிலிருந்து தொடங்குகின்றன; அல்லது கணபதியில் -நேரடியாகவோ மறைமுகமாகவோ – முடிகின்றன. கணபதி குழந்தை என்பதன் மூலம் சாவித்திரியின் எண்ணத்தில் அவளுக்குக் குழந்தை இல்லாதது எங்கோ புதைந்து எரிந்து கொண்டிருக்கிறதோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது. சாவித்திரி சுமங்கலியாய் இருந்தபோது அவளது பிறந்த வீட்டில் அண்ணனோடும் மன்னியோடும் அவளுக்கிருக்கிற சிநேகபாவம் வெளிப்படும் இடங்கள் மிகவும் கிண்டலும் கேலியுமாக வெளிப்பட்டுப் போகிறது. பின்னாளில் விதவையாக அவ்வீட்டில் இருக்க நேரிடுகிற சாவித்திரிக்கு அத்தகைய சுதந்திரங்கள் அப்போது தானாகவே விலகிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. அது சாவித்திரியாக உருவாக்கிக்கொள்வதில்லை. அல்லது அவளது அண்ணனோ மன்னியோ உருவாக்கிவிடுவதில்லை. எந்தவொரு விதவைப் பெண்ணுக்கும் எளிதாக ஏற்பட்டுவிடுகிற தனிமை.

சாவித்திரியின் நினைவுகள் ஒரு பெண்ணின் மன ஆழங்களை வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. அதிலும் விதவைப் பெண்ணாகிவிட்ட சாவித்திரிக்குத் தன் நினைவும் தன் கற்பனையும் தன் யூகமும் மட்டுமே துணை என்றாகிவிடுகிறபோது, எப்போதோ நடந்த விஷயங்களை அசை போடுவதும், அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் யோசிப்பதும், ஒவ்வொரு முறையும் அதைப் புதிய கோணத்தில் அணுகுவதும் சில சமயம் சரியாக அதை அடைவதும், சில சமயம் தனக்குத் தோதான கருத்தை அடைந்துகொள்வதும் நாவல் முழுவதும் நிகழ்கிறது. சாவித்திரியின் அண்ணனோ மன்னியோ சாவித்திரியைத் துன்புறுத்துகிறவர்கள் அல்ல. ஆனால் ஒரு நிலையில் தன் தொடர்ச்சியான யோசனைகளின் மூலம் சாவித்திரி அப்படி ஒரு நிலைக்கு வாசகர்களைக் கொண்டு வந்து விடுகிறாள். ஏனென்றால் அவளது மனதில் புகுந்தவீடு தந்த சுதந்திரம் மீதும், சாவித்திரி என்கிற ஈகோவிற்கு அவ்வீடு தந்த மரியாதையின் மீதும் பெரிய இஷ்டமும் அதைப் பறிகொடுத்துவிட்ட அவலமும் கலந்து கிடக்கிறது. பிறந்த வீடு சிறையில்லை என்ற நிலை இருந்தபோதும் புகுந்த வீட்டின் பிரேமையும் கணபதியின் வாத்சல்யமும் அவளை அப்படி ஒரு நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

அண்ணன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவன் நினைக்குமாறே செய்துகொள்ளலாம் என்கிற சாவித்திரி, அதன் பின் அதைப் பின்தொடர்ந்து யோசிக்கும்போது அவளுக்கு அவளே முன்வைத்துக்கொள்ளும் கேள்விகள் வாசகனைப் பதட்டமடையச் செய்கின்றன. சாவித்திரி அவளது அடுத்த முறையில் அவள் மனத்திலிருக்கும் கேள்விகளை, ஆசைகளைத் தெளிவாக அண்ணன் முன் சொல்லிடவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் பதட்டமடைகிறான். மீண்டும் மீண்டும் சாவித்திரியின் நினைவுகளாலேயே சுழன்றடிக்கப்படும் வாசகன் ஒரு கட்டத்தில் சாவித்திரியாகி, அச்சுழலில் இருந்து வெளியேறத் துடிக்கிறான். சாவித்திரி சீக்கிரம் கணபதியைக் கைகளில் ஏந்திக்கொள்வது பற்றிய ஒரு பிம்பத்தை வாசகன் உருவாக்கிக்கொண்டு, அதை மனதில் வைத்தே அந்நாவலை வாசிக்கிறான். இப்படி ஒரு விஷயத்தை வாசகன் மனதில் சாவித்திரியின் நினைவுகள் மூலம் சொல்லி, சாவித்திரி பிறந்த வீட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென்கிற பதட்டத்தை உருவாக்குவதில் சி.சு.செல்லப்பா மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறார். ஒரு விதவைப் பெண்ணுக்கு, அதிலும் தன் வீடு மட்டுமே உலகம் என்று வாழ்ந்துவிட்ட பெண்ணுக்கு எண்ணங்களே துணை. எனவே இந்நாவலுக்கு நினைவோடை உத்தியைத் தவிர வேறு ஏதும் உசிதமில்லை என்ற முடிவெடுத்துவிட்ட தருணத்திலேயே செல்லப்பா பெரும்பாலான நாவலை உருவாக்கிவிட்டார் எனலாம்.

ஜீவனாம்சம் கேட்கலாமா வேண்டாமா என்கிற கேள்விக்கு சாவித்திரியிடம் நேரடியான பதிலில்லை. பல சமயங்களில் புகுந்த வீட்டின் பெருமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்கள் சார்பாகவே யோசிக்கிறாள் சாவித்திரி. ஆனாலும் சாவித்திரியின் அண்ணனின் நேரடியான கேள்விகளுக்கு சாவித்திரியிடம் பதிலில்லை. அவளது பதில்கள் எல்லாமே அவள் மனதுள் பெரும் போராட்டமாக மட்டுமே நடந்து அங்கேயே முடிந்துவிடுகின்றன. மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே ஒவ்வொரு வார்த்தையாக வெளிப்படத் தொடங்குகின்றன. வார்த்தைகள் என்றால் சாதாரண வார்த்தைகள் அல்ல. அவ்வார்த்தைகள் சாவித்திரியின் மாற்றத்தை, அவளது சிந்தனைகளின் கோணங்களை வெளிப்படுத்தும் ஆழமான வார்த்தைகள். இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லும் வசனங்களில் இருக்கும் வார்த்தைகளின் வலிமை முக்கியமாகப் பார்க்கவேண்டியது. சாவித்திரியின் நினைவோட்டம் பெரும்பாலும் ஏதோ ஒரு வார்த்தையிலிருந்தே தொடங்குகிறது. அவளது முடிவும், அவளது மாற்றமும் மிகப் பெரிய வரியிலிருக்கும் ஏதோ ஒரு வார்த்தையில் குடியிருக்கிறது. வார்த்தையின் பலத்தைப் புரிந்துகொண்ட சி.சு.செல்லப்பா, அவற்றை பிராமணக் குடும்பத்து நடவடிக்கைகளில் கையாளுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாவலில் தொடர்ச்சியாக வரும் நினைவுகள் ஒரு சமயத்தில் அலுப்புத் தட்ட தொடங்குகின்றன. ஆனால் இந்த அலுப்பே வாசகனின் பதட்டத்திற்குக் காரணமாகவும் அமைகிறது. எப்போது சாவித்திரி இந்த அலுப்பு நிறைந்த நினைவுகளாலான உலகத்திலிருந்து வெளியேறுவாள் என்று ஒவ்வொரு வாசகனும் சிந்திக்கத் தொடங்கிவிடுகிறான். சாவித்திரியின் மாமனார் இறந்துவிடுகிறபோது, அவளுக்கு அதில் அதிகம் தீட்டில்லை என்ற விஷயத்தைத் தொடர்ந்து சாவித்திரியின் நினைவுகள் செல்லுகிறது. அவளுக்கான உலகம் எது, அவளுக்கான வீடு எது என்பதை சாவித்திரி கண்டடைந்துவிடுகிறாள் என்று வாசகன் முடிவுக்கு வரும்போது, “துக்கத்துக்குப் போன காலோடு அங்கு தங்கவா?” என்று கேட்டு வாசகனைக் குழப்பத்துக்குள் ஆழ்த்துகிறார் சி.சு.செல்லப்பா. ஒரு நேரடியான திறந்த முடிவு ஏனில்லை என்ற கேள்வி சாவித்திரியோடு தொக்கி நிற்கிறது. அதுவரை சாவித்திரியின் நினைவுச்சுழலுக்குள் சுழன்றடித்த அலை வாசகன் மனதில் இடம் பெயர்ந்துகொள்கிறது.

ஒவ்வொரு அத்தியாய முடிவில் வரும் வார்த்தைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அடுத்த அத்தியாய தொடக்கத்தில் பயன்படுத்தப்படுவது, உணர்வு ரீதியான கடத்தலுக்கு உதவினாலும், அடுத்த அத்தியாயத் தொடக்கம் இப்படித்தானிருக்கும் என்ற முன்னேற்பாடு வாசகன் மனதில் ஏற்பட்டுவிடுவது, அத்தியாயத்தின் தொடக்கத்திற்கு, வலிந்து திணித்தது போன்ற செயற்கைத்தனத்தைத் தந்துவிடுகிறது. உணர்வுத் தொடர்ச்சியின் பலம் வார்த்தைத் தொடர்ச்சியில் சிதைந்துபோய்விடுகிறது போலத் தோன்றுகிறது.

விதவைப் பெண்ணின் உடல் இச்சை சார்ந்த பிரச்சினைகள் பற்றிச் சி.சு.செல்லப்பா எங்கேயும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. சாவித்திரியின் சிந்தனைகள் மீண்டும் மீண்டும் உறவு வட்டத்தில் பல்வேறு கோணங்களில் விரிகிறதேயன்றி, திருமணம் ஆன சில காலங்களில் கணவன் இறந்துவிட விதவையாகும் அவளின் உடல் சார்ந்த மோகம் பற்றி அவள் அதிகம் சிந்திப்பதில்லை. நாவலின் ஓட்டம் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் சாவித்திரியின் எண்ணங்களுக்குள் காமம் என்கிற ஒன்றே இல்லாமல் போவது சாத்தியமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

நினைவு மடிப்புகளுள் உள்ளடைந்துகிடக்கும் உணர்வுகளின் வெளிப்பாடே இந்நாவலை நடத்திச் செல்கிறது. ஒரு நிகழ்வின் எல்லாக் கோணங்களையும் படம்பிடிக்கிறது செல்லப்பாவின் எழுத்து. சொல்லப்படாத விஷயங்கள் குறித்துச் சிந்திக்க வைக்கும் கூர்மையான வசனங்கள் இந்நாவலின் பலம்.

[ஜீவனாம்சம் – சி.சு.செல்லப்பா – காலச்சுவடு – 70.00 ரூபாய்]

Share

(என்) நிழல் வெளிக் கதைகள் – புத்தகப் பார்வை

அந்திமழையில் என் நிழல் வெளிக் கதைகள் (புத்தகப் பார்வை) வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

பயத்தையும் பீதியையும் கிளப்பும் வாய்மொழிக் கதைகளை நான் அதிகம் கேட்கத் துவங்கியது கல்லுப்பட்டியில் வாழ்ந்த காலங்களில்தான். அதுவரை இருந்துவந்த சூழலுக்கும் (சேரன்மகாதேவி) கல்லுப்பட்டியின் சூழலுக்கும் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன் என்றே சொல்லவேண்டும். மூளைக்குப் பொருந்தாத, ஆனால் நினைத்த மாத்திரத்தில் பயத்தைக் கிளப்புகிற பல கதைகளை யாரேனும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மூன்றாவது வீட்டில் வசித்து வந்த குட்டி அண்ணன் இது போன்ற கதைகளைத் தினமும் இரவு அவிழ்த்துவிடுவார். “அவன் ராத்திரி பயந்துக்குவான்” என்கிற என் அம்மாவின் பேச்சை மீறி, நானும் விஜயகுமாரும் வாய் திறக்காமல் கேட்டுக்கொண்டிருப்போம். ஒரு நாள் குட்டி அண்ணனின் அப்பா சொன்னார். “ராத்திரி கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும். ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்துச்சு. சரி, எதுத்தாப்புல இருக்கிற ஓடைல உட்காருவோம்னு உட்காந்து ஒண்ணுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். ணங்குன்னு யாரோ மண்டைல அடிச்ச மாதிரி. தலை முச்சூடும் வலி. பின்னாடி திரும்பி பார்த்தேன். ஒரு பயலையும் காணலை. கொஞ்சம் மயக்கமா இருந்தது. தட்டி முட்டி வீட்டுக்கு வந்து அப்படியே தூங்கிட்டேன். காலேல எந்திரிச்சு தலையை பின்னாடி தடவிப் பாத்தா, அருதலி, ரத்தமா இருக்கு. ஒடம்பெல்லாம் ஆடிப்போச்சு. ஒண்ணுக்கு இருந்துட்டு விழுந்த இடத்துல போய் பாத்தேன். அங்க ஒரு ஓணான் செத்துக் கிடந்தது.” ஆர்வமும் பயமும் ஒரு சேர நான், “ஓணான் இருந்தா?” என்றேன். குட்டி அண்ணன் சட்டென்று, “கருப்பு அப்படி எதாவது உருவம் எடுத்துதான் வருமாம். இல்லப்பா?” என்றார். அப்போது எனக்கு வயது 14.

இரவு முழுவதும் உறக்கத்திலும் விழிப்பிலும் அந்தக் கதைகள் என்னைச் சுழன்றடிக்கும்.

பண்டாரங்குளம் என்றொரு குளம் உண்டு. காலைக் கடன்கள் கழிக்க கழிப்பறைகளெல்லாம் கிடையாது. போய்க்கொண்டிருக்கும்போது பன்றிகள் பின்னால் காத்து நிற்கும். சில பன்றிகள் சிறுவர்களை முட்டித் தள்ளக் கூடத் தயாராய் இருக்கும். அப்படி பண்டாரங்குளத்தின் வரப்புகளில் ஒதுங்கியிருந்த சமயத்தில் இன்னொரு கதை காதில் விழுந்தது. பண்டாரங்குளத்தில் ஒரு புளியமரம் உண்டு. அந்தப் புளியமரத்தில் ஆணி அடித்திருந்தார்கள். ‘ஊரெல்லாம் கருப்பு சுத்தி பொண்ணுங்களையும் புள்ளைங்களையும் புடிச்சுப் போடுதுன்னு சொல்லி ஆணில அடிச்சு கட்டி வெச்சிட்டான் மந்திரவாதி’ என்ற கதை அது. அதை நம்பாமல் அந்த ஆணியைத் தொட்டவன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தான் என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது. அதன் பின்பு அந்தப் புளிய மரத்தைக் கடக்கும்போதெல்லாம் என் கண் அந்த ஆணியிலேயே குத்தி நிற்கும். சில நாள்கள் கழித்துப் பார்த்தபோது அந்த ஆணியைக் காணவில்லை. நான் அந்த வயதில், அந்த ஆணியைப் பிடுங்கி எறிந்த வீரனைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

கல்லுப்பட்டிக்குப் பக்கத்து ஊர் காரைக்கேணி. கல்லுப்பட்டியைக் காட்டிலும் இது மாதிரியான பேய்க்கதைகள் உலவும் பட்டிக்காடு. அங்குப் படுகளம் என்றொரு விழா நடக்கும். அந்த விழாவுக்கு ஒரு முறை சென்றிருந்தேன். கண்ணாக்குட்டி எங்களை எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்றான். அங்கிருந்த இடங்கள் என்னவோ ஒன்றிரண்டுதான். ஆனால் அவற்றையெல்லாம் விடாமல் துரத்தித் துரத்திக் காட்டினான் கண்ணாக்குட்டி. இலைகளே இல்லாத முள்மரங்கள் நிறைந்த காடு ஒன்று இப்போதும் என் மனதில் நிறைந்து கிடக்கிறது. பாரதிராஜா ஏன் இன்னும் அந்த முள்மரங்களுக்குக் கீழே ஒரு ஷாட் கூட எடுக்கவில்லை என்பது எனது அந்நாளைய கேள்வியாக இருந்தது. கண்ணாக்குட்டி பாதாள பைரவி என்றொரு அம்மனைக் காண்பிப்பதாகச் சொன்னான். அதைக் காண்பிக்கப் போவதற்கு முன்பாகப் பாதாள பைரவியைப் பற்றிப் பெரிய பெரிய கதைகளைச் சொன்னான். ஒரு காலத்தில் அந்த அம்மன் சாலையை மறித்த படி படுத்துக் கிடந்தாள். இதனால் காரைக்கேணியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். அந்த அம்மனை அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றிப் பிரதிஷ்டை செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லாரும் பயந்தார்கள். ஒரே ஒரு பூசாரி மட்டும் தைரியத்துடன் அந்த அம்மனின் இடத்தைச் சாலையை விட்டுக் கண்மாய்க்கு நடுவில் மாற்றினார். அம்மனையும் கண்மாயின் நடுவே அமர்த்தினார். மறுநாள் காலை அந்தப் பூசாரி இரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தாராம். அதுமட்டுமல்லாமல் வேறு சில கதைகளும் சொன்னான். அந்த அம்மன் மிகவும் உக்கிரமானது என்றும் அவள் முன் நின்று பொய் சொன்னாலே மறுநாள் சாவு உறுதி என்றும் கண்ணாக்குட்டி சொல்ல, அந்த அம்மனைப் பார்த்துத்தான் ஆகவேண்டுமா என்கிற பயம் தொற்றிக் கொண்டது. ஏதோ ஒரு வெளிநாட்டுக்காரன் ஊர்மக்கள் சொல்வதை மதிக்காமல் அந்த அம்மனைப் புகைப்படம் பிடித்ததாகவும் ஆனால் அன்றே அவன் ஒரு விபத்தில் இறந்துபோனதாகவும் சொன்னான். மிகுந்த பயத்துடன் அந்த அம்மனைப் பார்க்கப்போனேன். சிமிண்ட்டில் செதுக்கப்பட்ட சிலையுடன் பலவித வண்ணங்களைக் கொண்டு பாதாள பைரவி நீரற்ற கண்மாயில் கையையும் காலையும் விரித்துப் படுத்துக் கிடந்தாள். அதன் காலோரத்தில் ஒரு புகைப்படம் ஒன்று கிடந்தது. யாரோ ஒருவனின் புகைப்படம் அது. அதைப் பற்றிக் கண்ணாக்குட்டியிடம் கேட்கவில்லை. நான் கேட்டு, அவன் இன்னொரு புதுக்கதையை ஆரம்பித்தால் அதைக் கேட்கிற தைரியம் எனக்கு இல்லை. மறுநாள் மாமாவிடம் (கண்ணாக்குட்டியின் அப்பா) பேசிக்கொண்டிருந்தபோது கண்ணாக்குட்டி சொன்ன கதையெல்லாம் பொய் என்றார்! அவர் ஒரு வரலாற்றைச் சொன்னார். அக்காலத்தில் ஏகாளி (வண்ணான்) வர்ணத்தைச் சேர்ந்தவர் அந்த அம்மனை கண்மாயில் வைத்தாராம். அப்படிக் கண்மாயில் வைத்துத் தன்னை வழிபடவேண்டுமென்று அந்த ஏகாளியைப் பாதாள பைரவியே சொன்னாளாம். கண்மாயில் துவைத்துக்கொண்டு, தன்னை வழிபட்டுக்கொண்டிருக்குமாறு பாதாள பைரவி அந்த ஏகாளியைப் பணித்தாளாம். அவரும் அது போலவே செய்துவந்தார். வருடத்திற்கு ஒரு முறை பாதாள பைரவிக்கு விழா எடுக்க நினைத்த அவர், நிறையப் பேருக்குத் தேவையான உணவைச் சமைத்து பிற சாதியைச் சேர்ந்த (தேவர்) பெரியவர்களைச் சாப்பிட அழைத்தாராம். அதை ஏற்க மறுத்த அச்சாதியினர் அவர் உணவை உண்ண வரவில்லை. மனம் சோர்ந்து போன ஏகாளி, அந்த உணவையெல்லாம் பாதாள பைரவியின் முன்னே ஒரு குழியைத் தோண்டி அதிலிட்டு மூடி வைத்துவிட்டார். மறு வருடம் மீண்டும் விழா நாளில் அக்குழியைப் பறித்துப் பார்த்தபோது, அந்த உணவு கெடாமல், மண் விழாமல் அப்படியே இருந்ததாம். இதைப் பார்த்துப் பாதாள பைரவியின் சக்தியை உணர்ந்து கொண்டு அனைவரும் அவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்களாம். சாலையை அம்மன் மறித்தது எல்லாம் திருநெல்வேலி பக்கத்தில் வேறொரு அம்மன் (வண்டி மறிச்ச அம்மன்) என்றும் அக்கதையைப் பாதாள பைரவிக்குப் பொருத்தி அளந்துவிட்டான் கண்ணாக்குட்டி என்றும் மாமா விளக்கினார்.

மறுநாள் படுகளம் தொடங்கியது. படுகளத்தின் வரலாற்றை நினைவில் இருந்து சொல்கிறேன். தென்னமனூர் மற்றும் கவசக்கோட்டை என்ற இரண்டு ஊர்கள் உண்டு. கவசக்கோட்டையில் இருந்து ஒரு வள்ளத்தான் குருவி தென்னமனூருக்கு வந்துவிட்டது. தென்னமனூரைச் சேர்ந்த ராஜா அந்தக் குருவியைத் தர மறுத்துவிட்டான். கவசக்கோட்டை ராஜா அந்தக் குருவி தனக்குச் சொந்தமானது என்றும் அது தனக்கு வேண்டுமென்றும் கேட்டான். ஆனால் அதை மறுத்த தென்னமனூர் ராஜா, வேண்டுமென்றால் நாள் குறித்துச் சண்டையிட்டு, வென்றால் அதைக் கொண்டு போ என்று சொல்லிவிட்டானாம். நாள் குறிக்கப்பட்டது. தென்னமனூருக்கும் கவசக்கோட்டைக்கும் இடையில் காரைக்கேணியில் சண்டை. தென்னமனூர் ராஜா கவசக்கோட்டை ராஜாவுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். சண்டைக்கு வருபவர்கள் இரு தரப்பிலும் ஒருவர் ஒருவராக மட்டுமே வரவேண்டும் என்பதே அது. கவசக்கோட்டை ராஜா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். அதை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆளாக சண்டைக்கு அனுப்பினான். ஆனால் தென்னமனூர் ராஜா ஐந்தாறு பேர்களாக ஆளை அனுப்பி, கவசக்கோட்டை சண்டைக்காரர்களைத் தோற்கடித்துக் கொன்றுவிட்டான். சென்றவர்கள் யாருமே திரும்பவில்லை என்பதை நினைத்த கவசக்கோட்டை ராஜா தங்களின் பரம்பரைச் சாமிகளைக் காவலுக்கு வைத்தான். தென்னமனூர் ராஜா ஐந்தாறு பேர்களாக அனுப்பிக் கொன்று விட்டுப் போனது தெரியாமல் கசவக்கோட்டை ராஜா சாமிகளை வேண்டிக்கொண்டான். ஒரு சேவலை அறுத்து ஒரு ஈட்டியில் குத்தி நட்டான். ஒரு ஆட்டின் குடலை உருவிவிட்டு, அந்த ஆட்டைத் தன் தலையில் மாலையாகப் போட்டுக்கொண்டாள் ஒரு கிழவி. அந்தச் சேவலும் அந்த ஆடும் சாகாமல் உயிரோடு இருந்தன. அவை சாமிகளின் சக்தி. அவற்றை வணங்கிவிட்டுக் தானே தனியாகச் சண்டைக்குச் சென்றான் கவசக்கோட்டை ராஜா. அவனும் சதிக்குப் பலியானான். அவன் பலியான போது, கழுத்தறுபட்ட சேவலும், குடலற்ற ஆடும் உயிர் துறந்தன. அதைப் பார்த்து அவர்களது ராஜா தோற்றுப்போனதை அவ்வூர் மக்கள் அறிந்துகொண்டார்களாம். இக்கதை அப்படியே படுகளத்தில் நடத்திக் காட்டப்பட்டது. ‘சேவல் ஈட்டியில உயிரோட இருக்கும்டி’ எனச் சொல்லி என்னை அசத்தி வைத்திருந்தான் கண்ணாக்குட்டி. ஆட்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டு ஒரு கிழவி சாமியாடிக்கொண்டிருந்தாள். மாலை ஐந்து மணி வாக்கில் அச்சேவல் மூன்று முறை தலையைத் தூக்கி உயிரை விட்டதைத் தூரத்திலிருந்து காண்பித்தான் கண்ணாக்குட்டி. முதல் நாள் இரவில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில், தென்னமனூர்க்காரர்களாக வேடமிட்டவர்கள் ஐந்து பேரும் கவசக்கோட்டை ராஜாவாக வேடமிட்ட ஒருவரும் சேவலின் பச்சை இரத்தத்தையும் ஆட்டு இரத்தத்தையும் குடித்துக்கொண்டு கூச்சலிட்டு ஓடிவந்தார்கள். நான் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரோரத்தில் வெளியில் திரையிடப்பட்ட ஆண்டவன் கட்டளையையும் பூம்புகாரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஜெயமோகனின் நிழல் வெளிக் கதைகள் இப்படி காலம் காலமாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் கதைகளைப் பிடித்துக்கொண்டுள்ளது. இப்படி மரபு ரீதியான கதைகளையும் வாய்மொழிக் கதைகளையும் அறிவுக்கு ஒவ்வாதவை என விலக்கி வைத்துவிடலாம். ஆனால் அவை தரும் பழக்க ரீதியான தொடர்ச்சியையும் அக்கதைகளில் நிலவும் நிஜம் கலந்த கற்பனைகளையும் இரசிக்கத் தொடங்கினோமானால் மூதாதயர்களைப் பக்கத்தில் வைத்துப் பார்த்த கிளர்ச்சி உண்டாவதை உணரலாம். என்றோ இளம்பருவத்தில் கன்னி கழியாமல் செத்துப் போன ஒரு பெண்ணை இன்னும் கன்னித்தெய்வமாக வழிபடும் குடும்பத்தின் வேர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருவதைப் புரிந்துகொள்ளலாம். உலகின் எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான பதில் இல்லை, அப்படியே இருந்தாலும், அவை தேவையுமில்லை. சில விஷயங்கள் மனதைப் பொருத்தும் உணர்ச்சி சார்ந்தும் சந்ததிகளுக்குள்ளே பரிமாறிக்கொள்ளப்பட்டு வேர் பிடித்துக்கொள்கின்றன. ஜெயமோகனின் நிழல்வெளிக் கதைகளும் இத்தகையப் பரம்பரை ரீதியிலான கதைகளே.

வடிவத்தைப் பொருத்தவரையில் அனைத்துக் கதைகளும் வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றன. சிறுகதையின் சிறப்பான உயரங்களைத் தொட்டவர்களுள் ஒருவர் ஜெயமோகன். அதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. நிழல்வெளிக் கதைகளும் ஜெயமோகனுக்குரிய தனித்துவமிக்க மொழியில் சிறப்பான வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. உயிர்மை இதழில் வந்த கதைகளும் வேறு சில கதைகளும் இச்சிறுகதைத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

இக்கதைகளில் மிகச் சிறப்பான கதைகளாக நான் கருதுவன பாதைகள், ஏழுநிலைப் பந்தல், தம்பி மற்றும் இரண்டாவது பெண். பாதைகள் கதையில் ஜெயமோகனின் எழுத்து வன்மை முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு அறை திறக்கும் விதமும் மனதை மயக்கும், வசீகரிக்கும், குழப்பும் ஓவியங்களின் விவரிப்பும் ஒரு தேர்ந்த எழுத்தானுக்கு மட்டுமே உரித்தானவை. தம்பி கதையின் உயிர்நாடி ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விஷயம்தான். என்றாலும் கதை சொல்லப்படும் நேர்த்தியும், ‘ம்ம்ம்பீ’யின் பிம்பமும் நம்முள் புகுந்துகொள்ள, சரவணன் இறப்பதை நேரில் காண்பது போன்ற எண்ணம் உண்டாகிவிடுகிறது. ‘ஏழு நிலைப் பந்தலும்’, ‘இரண்டாவது பெண்ணும்’ வசீகரமான வட்டார வழக்குடன் நெஞ்சில் அறைந்து பீதியை உண்டாக்குகின்றன. குறிப்பாக ‘இரண்டாவது பெண்’ கதையில் வரும் விவரிப்புகள், நம்மைச் சுற்றி இருக்கும் சூழலை மறக்கச் செய்து, இருளில் உறைந்துபோன நிலையை உண்டாக்கிவிடுகின்றன. ஐந்தாவது நபர் கதையில் வரும் தர்க்கங்களைக் கொண்டு கதையின் முடிவை வாசித்தோமானால் அக்கதை வேறொரு இடத்தில் திறப்புக் கொள்கிறது. பிளாஞ்செட்டில் இருக்கும் நான்கு நண்பர்களின் ஒட்டு மொத்த மனநிலை சேர்ந்து உருவாக்கும் எண்ணங்கள் ஐந்தாவது நபராக பிளாஞ்செட்டில் வேலை செய்கிறது என்கிற தர்க்கத்தை ஏற்றோமானால், மாஸ்டர் சரசுவைக் கொன்றார் என்பதை அந்த நான்கு பேரில் ஒருவரோ அல்லது நான்கு பேருமோ (மாஸ்டர் உட்பட) சொல்ல நினைத்திருக்கிறார்கள் என்ற வகையில் யோசிக்கத் தொடங்கலாம். மற்றக் கதைகளும் தத்தம் அளவில் சிறப்பாகவே வந்துள்ளன.

அயர்ச்சி தருகிற விஷயம் என்று பார்த்தால் எல்லாக் கதைகளும் ஒரே போல் தொடங்குவதும் ஒரே போல் முடிவதும் என்பதைக் கூறலாம். பெரும்பாலும் எல்லாக் கதைகளிலிலும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்குகிறார்கள். இப்படியில்லாமல் நேரடியான நிகழ்கதைகளைப் போலவே வடிவமைத்திருக்கமுடியும். இவை சொல்லப்பட்டு வந்த கதைகள் என்பதால் ஜெயமோகன் இப்படி அமைத்தாரா என்பது தெரியவில்லை. மிகச் சிறப்பாகச் சொல்லப்படும் இரண்டாவது பெண் சிறுகதை கடைசியில் ஒரு திடும் திருப்பத்தைக் கொண்டுள்ளது போல் தோன்றுவது யதார்த்தமாக – இவை எல்லாமே யதார்த்தத்தை மீறின கதைகள் என்றாலும் – இல்லை.

கதைகளின் முழுக்க வரும் யட்சிகள் நம்மைத் தம் பிடியிலிருந்து விட நேரமாகிறது.

நிழல்வெளிக் கதைகள், உயிர்மை பதிப்பகம், விலை 60.00 INR.

Share

துக்ளக் பிடித்த பதிலும் கார்ட்டூனும்

இந்த வார துக்ளக் படித்ததில் பிடித்த பதிலும் கார்ட்டூனும்.

Image hosting by Photobucket

பதிலுள்ள நகைச்சுவைக்காகப் பிடித்தது. அதிலும் கடைசிவரியில் அதிகம் சிரித்துவிட்டேன்.

-oOo-

Image hosting by Photobucket

கார்டூனுக்காகப் பிடித்தது.

நன்றி: துக்ளக்

Share

மஹரிஷி – அஞ்சலி

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மஹரிஷியின் சீடர்களுள் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வந்து எங்களுக்கு ஆன்மிகம் பற்றியும் அறிவுத் திருக்கோயில் பணிகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார். அவர் சொன்ன எளிய உவமைகள் இன்றும் மனதில் அப்படியே இருக்கின்றன. அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் செந்தில் பகவதி முருகன் மஹரிஷியின் தீவிரப் பக்தர்களில் ஒருவர். அவர் மஹரிஷியைப் பற்றி நிறைய விஷயங்கள் அடிக்கடிச் சொல்வார்.

Thanks:http://vethathiri.org

மஹரிஷியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கத் தொடங்கியது எனது 21 – ஆம் வயது வாக்கில். எங்களுக்கு மேலதிகாரியாக இருந்த தண்டவேல் மஹரிஷியின் தீவிர பக்தர். அவர் எங்களுக்கு மஹரிஷியைப் பற்றியும் அவரது ஆன்மிகக் கருத்துகள் பற்றியும் அவரது எளிய குண்டலினிப் பயிற்சி பற்றியும் விடாமல் தினமும் சொல்லி வந்தார். அவரது புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருந்த காலம் அது. வாழ்க்கைப் பயணம் விலகிப் போகவும் மஹரிஷியை மறந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வருத்தம் ஏற்பட்டது. எனது சில நண்பர்கள் அவரது தீவிரப் பக்தர்கள். அவர்களில் ஒரு நண்பர் யோகா மூலம் அடைய முடியாத சித்திகளே இல்லை என்று சொல்வார். ஏதோ ஒருநாள் அவர் கண்ணாடியில் உற்று நோக்கிக் கொண்டிருந்தாராம். கண்ணாடியில் அவரது முகம் மெல்ல மறைந்து வேறொரு முனிவரின் முகம் தெரிந்ததாம். அவருக்கே பயமாகிவிட்டதாம். பின்னொருநாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தான் கண்ணாடியில் கண்ட அதே முனிவரைக் கண்டதாகக் கூறினார் என் நண்பர். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் நம்புவதில்லை. இந்த விஷயமும் அப்படியே. ஆனால் மஹரிஷியின் ஆன்மிகக் கருத்துகள் இதுபோன்றவை அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். எனது வேறு சில நண்பர்கள் குண்டலினி சக்தியை நெற்றிக்கு ஏற்றிக்கொண்டு, நெற்றியில் நம் சக்தி துடிப்பதைக் காணலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தப் பயிற்சிக்குச் செல்லவில்லை. நான் அதிகம் ஈர்க்கப்பட்டது அவரது எண்ணங்களினால்தான். ஆன்மிகத்திற்கும் நிகழ்முறை வாழ்வுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்க அவர் சொல்லும் எளிய உவமைகள், சிந்தனைகயைத் தூண்டும் கேள்விகள் பெரிதும் அர்த்தமுள்ளவை, அதிசயத்தில் ஆழ்த்துபவை.

வேதாத்ரி மஹரிஷி மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

Share

அந்த நிமிடம் – கவிதை

அந்த நிமிடத்திற்கான
காத்திருப்பு
அவஸ்தை நிரம்பியது
எதிர்பார்ப்பு நிறைந்தது
படபடப்பைக் கொண்டது
சந்தோஷம் தருவது
துக்கம் தருவது
ஏதோவொன்றாக
அல்லது எல்லாமுமாக
நீண்ட காத்திருப்பு அது
வருடங்கள், மாதங்கள்
நாள்கள் எனக் கழிந்து
நிமிடங்கள் எனக் குறைந்து
நொடிகளாகி
ஒரு சொல் தொடங்கும்போதே
முடிந்துவிடுவதுபோல
கடந்து போனது
அந்நிமிடம்.
இனி அந்நிமிடத்தைப் பற்றிச்
சொல்ல ஒன்றுமில்லை.

Share

பிம்பம் பற்றிய கவிதைகள்

கை நழுவிக் கீழே விழும்
கண்ணாடிக் கோப்பை
தரையைத் தொடுமுன்
கைநீட்டியிருக்கவேண்டும்
தேவதை
உன் பிம்பத்தைக் காப்பாற்ற

*

உடைந்த பலூனின் சிதறல்கள்
பெரிதும் சிறிதுமாய்
கலைந்தபோன கோலக் கம்பிகளுக்குள்
தெறித்துப்போன உன் பிம்பம் போல
ரசமுள்ள கண்ணாடியா என்ன
ஒவ்வொன்றும் தனித்துவம் பெற?

*

பிம்பமற்ற
பிம்பத்துக்குள்
அடங்கிவிட வேண்டும்
அதுவே பிம்பமென!

*

மறைத்து வைத்திருக்கும்
முகச் சலனங்கள்
ஓடும் நீரின் மேற்பிம்பத்தில்
தெளிவாக, மிகத் தெளிவாக.

*

Share

பிரசாத் – சிறுகதை

பிரசாத்தின் கையிலிருந்து காலாவதியாகிக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது நிலைக்குத்தி நின்றிருந்தன என் கண்கள். அந்தச் சமையலறையின் வாஷ் பேசினில் சரியாக அடைக்கப்படாத நீர் சொட்டிக்கொண்டிருந்தது. பிரசாத் பேசாதபோது சொட்டும் நீரின் ஒலியே எனக்குத் துணை.

பிரசாத் ஏதோ ஒரு மோன நிலையில் லயித்தவர் போல, தன்னிலையில் இல்லாது வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தார். குடித்தவன் வார்த்தைகள் போல அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. பிரசாத் குடித்திருந்தார்தார். தொடர்பற்ற வாக்கியங்களுக்கு இடையில் ஒரு தொடர்பை நம்மால் உருவாக்கிக்கொள்ள இயலுமானால் பிரசாத்தின் வார்த்தைகள் மிகப் பலம் பொருந்தியவை.

மெதுவாக நகரும் கலைப்படம் மாதிரி எங்கள் இருப்பை நினைத்துக்கொண்டேன். பிரசாத் வார்த்தைகளைக் கொட்டுவதற்குத் தேவையான இடைவெளியை எடுத்துக்கொண்டார். ஒரு வரியைச் சொல்லி முடித்துவிட்டு, மிக ஆழமான ஒரு இழுப்பை இழுத்தார். புகையை சில வினாடிகள் உள்ளுக்குள் அடக்கி, மிகவும் இரசித்து வெளிவிட்டார். புகை அடர்த்தியாக வெளிவந்து, சமையலறையுள் விரவி நீர்த்தது. அறையெங்கும் மிக இலேசான புகை மூட்டம் இருப்பதை வெளியில் இருந்து அறையினுள் வரும் புதுமனிதர்கள் மட்டுமே கண்டுகொள்ளமுடியும். என்னாலோ பிரசாத்தாலோ முடியாது. யாராவது வந்து ‘வீடு ஒரே புகையா இருக்கே’ என்னும்போதுதான் அதைக் கவனிப்போம்.

பிரசாத்தின் மேலிருந்து வந்த விஸ்கி வாசமும் சிகரெட் வாசமும் ஒன்று கலந்து ஒருவித நெடியை சமையலறைக்குள் பரவி விட்டிருந்தது. அதுவும் எனக்குப் பழகிவிட்டிருந்தது.

மெதுவாக நகரும் எங்கள் கலைப்படத்திலும் எப்போதோ ஒருமுறைதான் பிரசாத் பேசினார். அந்த வார்த்தைகள் பிரசாத்தின் ஆழ்மனத்தில் அவர் கொண்டிருந்த சோகத்தின் வெளிப்பாடாக இருந்தன. பிரசாத் பேசும்போது அவரின் கண்ணிமைகள் மேலேயும் கீழேயும் அலைந்தன. அவர் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியானார். கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் இழுத்தார். எதிரே நின்றுகொண்டிருக்கும் என்னை உற்றுப் பார்த்தார். நான் ஏதேனும் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ என்று நினைத்து, வாயில் வந்ததைச் சொல்ல எத்தனித்தேன். அதற்குள் அவர் பார்வை கேஸ் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரின் மேல் மாறி நிலைத்தது.

நான் என் கவனத்தைச் சொட்டும் நீரின் மேல் மாற்றினேன். எங்களைச் சுற்றிய கலைப்படம் அந்த நேரத்தில் மிகவும் இரசிக்கத்தக்கதாயிருக்கிறது என்று நினைத்தேன். இந்நேரத்தில் பிரசாத்தைப் பற்றிக் கொஞ்சம் நினைக்கலாம். பிரசாத்தின் அறிமுகம் கலீக் என்ற வகையில்தான் தொடங்கியது. சிகரெட் குடிப்பவர்கள் அரைமணிக்கொருதரம் வெளியில் செல்லும் போது கொஞ்சம் இறுகியது. குடிப்பவர்கள் இராத்திரி கூடும் பொழுதில் இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டது. நாற்பத்தைந்து வயதில் திருமணம் ஆகாமலிருக்கும் ஒருவர் குடித்தால், அவர் தன்னிலையில் இல்லாதபோது அவரிடமிருந்து வரும் குமுறலின் பலத்தை பிரசாத்திடம்தான் கண்டேன். பிரசாத் ஒருகாலத்தில் அவரை இலக்கியவாதியாகவும் நினைத்துக்கொண்டவர்.அதனால் அவரது குமுறல் இரண்டு மடங்காக இருந்தது. ஒரு முப்பது வயது இளைஞனைப்போல் தோற்றமும் சிவப்புத் தோல் சருமமும் கைநிறையச் சம்பளமும் உள்ள பிரசாத் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்காக அவர் சொல்லாத காரணங்களில்லை. கொஞ்சம் தொகுத்துப்பார்த்தால் இவர் காதலித்த பெண் இவரை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லலாம். ஏனென்றால் இந்த ஒரு காரணத்தை மட்டுமே அவர் சொல்லவில்லை. ஆனால் இந்தக் காரணத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோக அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவேண்டும் என்ற பலத்த சந்தேகம் எனக்கு இருந்தது.

கலைப்படத்தில் பிரசாத் பேசத்தொடங்கினார். அவரின் பார்வை கொதிக்கும் சாம்பாரின் மீதுதான் இன்னும் நிலைக்குத்தி இருந்தது. இந்த முறை பிரசாத்தின் வசவு எங்கள் மேனேஜரின் மீதானது. அவர் பிரசாத்தை அண்டர் எஸ்டிமேட் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டு, தன் நேரம் வரும்போது தன்னை நிரூபித்து அவர் முகத்தில் கரியைப் பூசுவதாகத் துணை நினைவை எழுப்பிக்கொண்டு, அதன்பின் சொன்ன வார்த்தைகளே பிரசாத் சொன்னவை. வரிகளுக்குப் பின்னால் சென்று பார்த்து அதைப் புரிந்துகொண்டேன். அவர் சொல்வதை மட்டும் கேட்டால் ஒன்றும் புரியாது. தினமும் பிரசாத்திடம் பேசுவதால் “பின் சென்று பார்ப்பதில்” எனக்குக் கஷ்டம் இருப்பதில்லை.

பிரசாத் சிகரெட்டை மீண்டும் இரசித்து இழுத்தார். இந்த முறை பாதிப் புகையை மூக்கின் வழி விட்டார். நான் என் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தேன். அதைப் பற்ற வைக்க பிரசாத்திடம் சிகரெட்டைக் கேட்க எத்தனித்தேன். பிரசாத்தின் கவனம் என் மீது விழவேயில்லை. ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் சிறுத்துக்கொண்டிருக்கும் சிகரெட்டின் மீது இருந்தது. லேசாகச் சிரித்தார். கலைப்படத்தின் காட்சிகள் ஏதோ ஒரு கணத்தில் இறுக்கத்தை இழப்பது போல. இரண்டு வினாடிகள் இடைவெளியில் சத்தமில்லாமல் மெல்ல குலுங்கிச் சிரித்தார். நான் அவரை “என்ன?” என்பது போலப் பார்த்தேன். இலேசான சிரிப்பினூடே, இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கும் சிகரெட்டைக் காட்டி, “அல்மோஸ்ட் செக்ஸி!” என்றார். நானும் சிரித்தேன். கட்டை விரலால் சிகரெட்டி பின்பக்கத்தைத் தட்டி சிகரெட்டைக் கொஞ்சம் முன்னகர்த்தினார். நான் சிரித்தேன். என்கையிலிருக்கும் சிகரெட்டைப் பற்ற வைக்க அவரின் சிகரெட் வேண்டும் என்று நான் கேட்க வாயெடுக்க நினைத்தபோது, கொஞ்சம் பலமாகச் சிரித்தார். “செக்ஸி!” என்றார். சிகரெட்டின் எரியும் முனையில் சாம்பல் சேர்ந்துவிட்டிருந்தது. கட்டை விரலால் இரண்டு முறை தட்டினார். சாம்பல் தெறித்துக் காற்றில் பறந்தது. ஒரு சிறிய துகள் காற்றிலாடி கொதிக்கும் சாம்பாரில் விழுந்தது போலிருந்தது. பிரசாத் அதைக் கவனிக்கவில்லை. பிரசாத் மீண்டும் மௌனமானார். என் கையிலிருக்கும் சிகரெட்டை மீண்டும் உள்ளே வைத்துவிடலாமா என்று நினைத்தேன். பிரசாத் சொட்டிக்கொண்டிருக்கும் குழாயை, பலமாகத் திருகி அடைத்தார். சொட்டும் நீர் நின்றது. சாம்பார் கொதிக்கும் சப்தத்தை மீறி அறையில் அமானுஷ்ய மௌனமும் இலேசான புகையும் சிகரெட்டின் நெடியும் பிரசாத்தின் கடந்த கால ஏக்கங்களும் அவர் மீதான என் வருத்தங்களும் நிறைந்திருந்தன. கலைப்படத்தின் அமைதியான காட்சிகள் அவை.

வாசல் மணி ஒலித்தது. இலேசாக அதிர்ந்து அடங்கினேன். பிரசாத் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வேகமாக விரைந்தார். ஒரு பாட்டில் விஸ்கியும் ஒரு சிகரெட் பாக்கெட்டும் சாம்பாருக்குத் தாளிக்க கடுகும் வாங்கிவரச் சொல்லியிருந்த பையன் வந்திருப்பான். அவனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு பிரசாத் சமையலறைக்குள் வந்தார். அவர் கையில் சிகரெட் பாக்கெட்டும் கடுகும் மட்டுமே இருந்தது.

அவர் வருவதற்குள் எரியும் கேஸ் அடுப்பில் என் சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தேன். பிரசாத்தைப் போல் நிதானமாக, இரசித்து என்னால் சிகரெட் புகைக்க முடியாது. கடனென இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு வீசியெறிந்துவிடுவேன். அப்படிச் செய்யும்போதெல்லாம் ஏதோ நினைவு வந்தவராக பிரசாத் சிரிப்பார். ஏன் சிரிக்கிறார் என நான் புரிந்துகொண்டதில்லை.

பிரசாத்தின் இரவுகள் சட்டெனத் தீராது. மறுநாள் விடுமுறையென்றால் நீண்டுகொண்டே இருக்கும். விஸ்கி பாட்டில் காலியாகும் வரை அவர் உறக்கம் தொடங்காது. சிகரெட் பாக்கெட்டுகள் எண்ணற்றவை காலியாகிக் கிடக்கும். இதைப் பற்றியெல்லாம் என்றுமே பிரசாத் நினைத்துப்பார்த்ததில்லை. கேட்டால் மேன்சன் வாழ்க்கை என்பார்.

எனக்கான இரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. பிரசாத்திடம் சொல்லிவிட்டுச் சென்று படுத்துக்கொள்ளலாம். படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. எதையேனும் யோசித்துக்கொண்டிருப்பேன். பிரசாத் சாம்பாரில் தாளித்துக்கொட்டுவதில் மும்முரமாக இருந்தார். ஒரு சிறிய வாணலியில் எண்ணெயை இட்டு, அதில் கடுகை இட்டு வெடிக்க வைத்தார். யாருக்கோ சொல்வதுபோல “கருவேப்பிலை இல்ல” என்றார்.

நான் பொறுமை இழந்து அடுத்த சிகரெட்டை எடுத்தேன். பிரசாத்தின் விரல்களிலிருந்த சிகரெட் இறுதியை எட்டியிருந்தது. அவர் இழுத்ததைவிட, வெறுமனே அது காற்றில் புகைந்த நேரமே அதிகம். இடது கையின் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் மத்தியில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, வலதுகையால் தாளித்த எண்ணெயெயைச் சாம்பாரில் கொட்டினார். சத்தத்துடன் சாம்பாரின் ஒரு துளி பிரசாத்தின் கையின் மீது தெறித்தது. பிரசாத் கையை உதறினார். சிகரெட் கீழே விழுந்து அணைந்தது. பிரசாத் அதை எடுத்து, டேப்பைத் திறந்து நீரில் காண்பித்து முழுவதுமாக அணைத்தார். பின் ட்ஸ்ட்பின்னில் தூக்கி எறிந்தார்.

சமைத்தவற்றை எடுத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றார். வேறு வழியின்றி நானும் அவர் பின்னே சென்றேன். அவர் மீதிருந்த கழிவிரக்கம் மெல்ல விலகி, நான் தூங்கப் போகவேண்டும் என்ற எண்ணம் தலைகொண்டது.

பிரசாத் ஒரு வித்தியாசமான ஆளுமை. அவருக்கு என்னை விட்டால் வேறு யாரையும் நண்பர்கள் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் பல பெயர்களைச் சொல்லி அவர்களெல்லாம் என் நண்பர்கள் என்பார். இன்றிருக்கும் பெரிய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லி, நாங்களெல்லாம் ஒரே சமயத்தில் எழுதினோம் என்பார். இவற்றையெல்லாம் வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே எனக்குப் பிடிக்கும். அவற்றில் எவ்வளவு உண்மையிருக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதை நான் நிறுத்திவிட்டிருந்தேன். சில சமயங்களில் பிரசாத் என்னை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைப்பதுண்டு. இருந்தாலும் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு அமைதியாகிவிடுவேன்.

இப்போது பிரசாத் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இடது கையில் புகையும் சிகரெட். பிரசாத்தின் சித்திரத்தை கையில் சிகரெட் இல்லாமல் யோசிக்கமுடிந்ததே இல்லை. அவரது வாழ்க்கையையும் நிறையப் புகை நிறைந்ததே. அவர் எல்லோரிடமும் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்றே சொல்லி வைத்திருந்தார். ஆனால் அதில் எனக்குப் பலத்த சந்தேகம் இருந்தது. அவரது அறையில் காணக் கிடைத்த சில கடிதங்களும் அடிக்கடி வரும் தொலைபேசிகளும் எனக்கு அந்தச் சந்தேகத்தை அளித்திருந்தன. ஆனால் அவர் அடிக்கடி தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் அதை நம்புவதே அவருக்குத் திருப்தி தரும் என்று நம்பத் தொடங்கினேன்.

மூன்றாம் அறையிலிருந்து கேசவன் வந்தான். எங்களைப் பார்த்துச் சிரித்தான். பிரசாத் அவனைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நான் கேசவனைப் பார்த்துச் சிரித்தேன். “கிச்சன் ·ப்ரீயாயிட்டு போலயே. அப்ப நான் சமைக்கலாம்” என்றான். நான் கிச்சனில் சமைப்பதில்லை. வெளியில்தான் சாப்பிடுகிறேன். அதனால் இந்தக் கேள்வி பிரசாத்திற்குரியது. ஆனால் பிரசாத் பதில் சொல்லவில்லை.

பிரசாத் யாருடனும் அவ்வளவு எளிதில் பேசமாட்டார். கேசவனுக்கு எரிச்சல் வந்திருக்கவேண்டும். அவன் என்னிடம் பிரசாத்தைப் பற்றிப் பல முறை திட்டித் தீர்த்திருக்கிறான். இன்றோ நாளையோ அவன் கேட்ட கேள்விக்குச் பிரசாத் பதில் சொல்லாமல் இருந்ததைப் பற்றித் திட்டித் தீர்க்கத்தான் போகிறான். “பிரசாத் சமைச்சிட்டார். நீ சமை” என்றேன் லேசான புன்னகையோடு. கேசவன் என்னை ஆழமாகப் பார்த்துவிட்டு, அவன் அறைக்குச் சென்றுவிட்டான். நாளை என்னைப் பார்க்கும்போது, பிரசாத்தை மேன்சனை விட்டுக் காலி செய்யச் சொல்லவேண்டும் என்பதைப் பற்றி கேசவன் நிச்சயம் வலியுறுத்துவான்.

கேசவன் வந்த அடையாளமோ நாங்கள் பேசிக்கொண்டதன் சலனமோ பிரசாத்திடம் இல்லை. பிரசாத் தட்டை வழித்து நக்கினார். சமையலறையில் உள்ள வாஷ் பேசினில் தட்டைக் கழுவினார். அங்கேயே வாய்க்கொப்பளித்துத் துப்பினார். பிரசாத் இப்படி சமையலறை வாஷ் பேசினில் வாய் கொப்பளித்துத் துப்புவதைப் பற்றிப் பலமுறை கேசவன் கோபப்பட்டிருக்கிறான். நானும் பிரசாத்திடம் சொல்லியிருக்கிறேன். “கேசவன் கோபப்பட்டானா? அவன் யாரு கோபப்பட” என்றார் ஒருமுறை. இன்னொரு முறை “அவன் கெடக்கான் தாயோளீ” என்றார்.

சமையலறையில் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு மெயின் ஹாலில் வந்து அமர்ந்தார். டிவியை ஆன் செய்து, விசிடி ப்ளேயருக்குள் ஒரு விசிடியைச் செருகினார். திரை உமிழ்ந்தது. நீலப்படம். தினம் ஒரு நீலப்படம் பார்க்காமல் பிரசாத் உறங்கியதே இல்லை. பலமுறை பார்த்துவிட்ட அந்நீலப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எனக்கு மனப்பாடம். பிரசாத் கையிலிருந்த சிகரெட்டிலிருந்து அறையெங்கும் புகை சூழ்ந்தது.

“ஜன்னலைத் திறந்து வைக்கட்டுமா” என்று பிரசாத்தைக் கேட்டேன்.

“இப்பவா” என்றார்.

“புகையா இருக்கே”

“திறந்து வெச்சா புகை போயிடுமா”

“சரி நான் படுத்துக்கப் போறேன்”

“அப்ப புகை போயிடுமா”

அமைதியாக இருந்தேன்.

“என்ன பேச்ச காணோம்?”

“சும்மாதான்”

“புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல் தெரியுமா? என்னைக்காவது ஒரு நாள் முழுக்க சலனமோ குழப்பமோ சந்தேகமோ அடுத்த நாள் பற்றிய பயமோ இல்லாம இருந்திருக்கியா? குழந்தையா இருக்கிறப்ப விட்று. நான் சொல்றது நீ யோசிக்க ஆரம்பிச்ச பின்னாடி. நீ யாருன்னு ஒனக்குத் தெரிஞ்ச பின்னாடி. என்னைக்காவது புகையில்லாம இருந்திருக்கியா? புகை நம்ம வாழ்க்கையோட சிம்பல். ஜன்னலைத் திறந்து வெச்சிட்டா புகை போயிடும்னு சொல்றது அசட்டுத்தனம் இல்லையா?”

“எனக்குத் தூக்கம் வருது”

“தூங்கு. ஆனா தூக்கம் வருமா”

“தெரியலை”

“சரி.. போய் படு,” என்று சொல்லிவிட்டு டிவிக்குள் ஆழ்ந்தார். நான் மெயின் ஹாலைவிட்டு விலகி என் அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டுப் படுத்தேன்.

படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தேன். கேசவன்.

“என்னடா தூங்கிட்டியா”

“இல்ல, இப்பத்தான் படுத்தேன்”

“என்னடா ஆச்சு உனக்கு?”

“ஏன், ஒண்ணுமில்லையே. நல்லாத்தானே இருக்கேன்”

“டேய், சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. ஒரு ரெண்டு மாசம் லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிட்டு வா. நா மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கேன். லீவு தர்றேன்னு சொல்லியிருக்கார்”

“எனக்கு எதுக்கு லீவு?”

“பிரசாத் பிரசாத்னு அவனோட சுத்தாதடா. அவன் ஆள் சரியில்லை. நம்ம ஆபிஸ்ல யாராவது அவனோட பேசறாங்களா? எப்பவும் குடி, சிகரெட்.”

மெயின் ஹாலை எட்டிப் பார்த்தேன். பிரசாத்தின் முன்னே விஸ்கியும் இடது கையில் சிகரெட்டும் இருந்தது. நீலப்படத்தின் ஏதோ ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு தலையை லேசாக உயர்த்தி லேசாகச் சிரித்தார்.

“ஒரு நாள்கூட அவரால ப்ளூ ·பிலிம் பார்க்காம இருக்கமுடியலை. அவர் வயசு என்ன? உன் வயசு என்ன? எப்பவும் அவர்கூட சுத்திக்கிட்டு, உம்மனா மூஞ்சி மாதிரி… நம்ம ஊர்ல எப்படியெல்லாம் இருந்த? ஏண்டா இப்படி மாறின? என் கூட நீ பேசறதே இல்லை”

“கேசவன். போதும் நிறுத்து. எனக்குத் தூக்கம் வருது”

“சொல்றதைக் கேளு. ரெண்டு மாசம் லீவு போட்டு ஊருக்குப் போயிட்டு வா. எல்லாம் சரியாயிடும். அதுக்குள்ள அவரை நம்ம ரூமை விட்டுக் காலி பண்ணிடறேன். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு. நேத்து சீனு சொல்றான், ஒனக்கும் அவருக்கும் இடையில என்னவோ தப்பு இருக்குன்னு. இதெல்லாம் ஒனக்குத் தேவையா?”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அவரை என்னைக்கோ ரூமை விட்டு அனுப்பியிருப்பேன். உன் பிடிவாதத்தாலதான் வெச்சிருக்கேன்”

நான் குழப்பத்தில் நின்றிருந்தேன். சில சமயம் நானே யோசித்திருக்கிறேன், பிரசாத்தை விட்டுக் கொஞ்சம் விலகி இருப்பது நல்லது என்று.

“சரி இப்ப போய் படு. நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்றான்.

அறைக்குள் சென்று படுத்தேன். அரைத்தூக்கத்தில் ஏதேதோ பிம்பங்கள் என் கண்ணில் நிழலாடின. பிரசாத் சத்தமாகச் சிரித்தார். அமைதியாக இருந்தார். நிறையத் தத்துவங்கள் சொன்னார். திடீரென என் மீது பாய்ந்தார். திடுக்கிட்டு விழித்தேன். அவரது பெட் காலியாக இருந்தது. மெயின் ஹால் விளக்கின் வெளிச்சம் என் அறையில் கசிந்தது. பிரசாத் இன்னும் டிவி பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

எப்போது உறங்கினேன் எனத் தெரியாமல் உறங்கிப்போனேன்.

அறைக்கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். மீண்டும் கேசவன். பதட்டமாக இருந்தான். என் கையை இழுத்துக்கொண்டு சென்று மெயின் ஹாலில் நிறுத்தினான். பிரசாத் மெயின் ஹாலின் மெத்தையில் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு சாய்ந்து கிடந்தார். அவரது வாயின் ஓரத்திலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவர் இறந்துவிட்டதாகக் கேசவன் கூறினான்.

“சூசயிட் பண்ணிக்கிட்டார்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. மேனேஜர்க்கு போன் பண்ணி சொல்லியிருக்கேன். அவரோட ·ப்ரெண்ட் ஒருத்தர் வக்கீலாம். அவரையும் கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கார்”

எங்கள் கலைப்படத்தின் இக்காட்சி எனக்கு விளங்கவில்லை.

“ரொம்ப புகையா இருக்குடா”

“எங்கடா”

“ஒண்ணுமில்லை விடு. நான் ஊர்க்குப் போகணும்”

“அதான் நல்லது, போய்ட்டு வா. நா பார்த்துக்கறேன்”

கேசவன் சில காரியங்களை அடுக்கிக்கொண்டே போனான். நான் ஜன்னல் கதவைத் திறந்துவைத்தேன். மீண்டும் பிரசாத்தைப் பார்த்தேன். அவரது இடது கையின் கீழே ஒரு சிகரெட் துண்டு கிடந்தது. புகையற்றிருந்த சிகரெட்டின் மீது பிரசாத்தின் கண்கள் நிலைக்குத்தி நின்றிருந்தன.

* * *

Share

நிழலின் மீதான யுத்தம் – கவிதை

நான் விட்டுச் செல்லும்
காலடிச் சத்தம்
ஒரு பூனையின் லாகவத்தோடு
பதுங்கியிருக்க
பொழுதுகளில்
காற்றில் கரையும்
என் மூச்சும் வேர்வையும்
எங்கோ ஓரிடத்தில்
நிலைகொள்ள
தரையில் விரிந்து
நீர்த்துப்போகும் நிழலும்
காத்திருக்கின்றன
மீண்டும் என் வருகைக்காய்

விரிந்து பரந்த உலகத்தில்
என் உலகம்
தினம் நான் செல்லும் சாலைகளும்
கோயில்களுமென
அங்கே காத்திருக்கும்
என் காலடிச் சத்தமும்
மூச்சும் வேர்வையும் நிழலுமென
மிகச் சிறியதாகிவிட்டது

எப்போதும் நடந்துகொண்டிருக்கும்
நிழலின் மீதான யுத்தம்
தன் சத்தத்தை
இரவுகளில் நிறுத்திக்கொள்ளும்போது
மெர்க்குரிப்பூவின்
வெளிச்சத்தில்
என் மீது சரிகிறது
மதில் சுவரின் நிழல்

Share