Archive for ஹரன் பிரசன்னா

சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வைப் படித்து இப்படி ஒரு எழுத்தாளர் தமிழின் கொடை என ஏங்கிக் கிடந்த காலங்களில் பாலகுமாரன் வழியாக எனக்குத் தெரிந்த பெயர் சுப்ரமண்ய ராஜு.பாலகுமாரன் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிய எழுதிய வரிகளின் மூலமாக சுப்ரமண்ய ராஜுவைப் படிக்கவேண்டும் என்கிற தீவிரமான எண்ணம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ மூலம், கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, நிறைவேறியது. மாலனும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இடையில் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட ‘ஞானரதம் இதழ்த் தொகுப்பு’ நூலுக்காக படித்துக்கொண்டிருந்தபோது சுப்ரமண்ய ராஜுவின் கதையொன்றையும் கவிதையொன்றையும் வாசித்தேன். இரண்டுமே சிறப்பாக இருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் இந்த இரண்டுக்குள்ளாகவே சுப்ரமண்ய ராஜுவின் மொத்த உலகமும் அடங்கிப்போனதுதான்.

வித்தியாசமான உத்தி, சிறுகதையின் எல்லைகளை பரிட்சைக்கு உட்படுத்துதல், நவீன – பின்நவீனத்துவ கதை கூறல் என்கிற எந்தவிதமான யோசிப்புக்கும் இடம் வைக்காத, வாசகனை அதிகம் மெனக்கெட வைக்காத எழுத்து. எவ்விதக் குழப்பத்தையும் வைக்காமல் நேரடியாக, எளிமையாகப் பேசுகிறது. சுஜாதாவின் நாடகங்கள் போல, தொடர்ச்சியான பேச்சு; மறுபடியும் பேச்சின் மூலமாக கதாபாத்திரங்கள் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு கதையை எடுத்துச் செல்கின்றன. எல்லாக் கதைகளுமே பேச்சின் மூலமாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சுஜாதாவிற்கு இருக்கும் சாமர்த்தியம் மற்றும் ஹ்யூமரைப் போன்றே சுப்ரமண்ய ராஜுவின் கதைகளிலும் சாமர்த்தியமும் நகைச்சுவையும் கதை நெடுகிலும் பரந்திருக்கின்றன. இது வாசிப்பை சுலபமாக்குகிறது; ஒரு கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. அடுத்து என்ன என்கிற எண்ணத்தையும் இப்படித்தான் இருக்கும் என்கிற முன்கூட்டிய தீர்மானத்தையும் இக்கதைகள் வெகு சீக்கிரமே பெற்றுவிடுகின்றன. ஆனால் இதைப் பற்றி சுப்ரமண்ய ராஜு யோசித்ததாகவோ கவலைப்பட்டதாகவோ அலட்டிக்கொண்டதாகவோ தெரியவில்லை. அவர் பாட்டுக்கு, ஒரு மாமி எதிரிலிருக்கும் பொம்மைக்கு மிமிக்ரி கலந்து கதை சொல்லுவதுபோல, ஓயாமல் பேசிக்கொண்டே கதைகளைச் சொல்லிச் செல்கிறார். இதனால் கவனிக்கப்படவேண்டிய கதைகள் எவை என்பதை நாம் மீண்டும் யோசிக்கவேண்டியிருக்கிறது.

சுப்ரமண்ய ராஜுவின் கதைத்தன்மையை மொத்தமாக, மேம்போக்காகப் பார்த்தால், ஆண்களின் பெண்கள் மீதான ஏளனப் பார்வையை முன்வைக்கும் கதைகளாகச் சொல்லலாம். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் அவை ஆண்களின் ஹிபோகிரைசியைத் தோலுரித்து, பெண்களுக்கு மறைமுக ஆதரவும் பாதுகாப்பும் தருவதை அவதானிக்கலாம். சுப்ரமண்ய ராஜுவிற்கு பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு கதை முழுதும் காணக் கிடைக்கிறது. பெண் இல்லாமல், பெண் பற்றிய உடல் ஈர்ப்பில்லாமல் கதைகளே இல்லை. எல்லா கதைகளும் பெண்ணையும் பெண் உடலையும் சுற்றிச் சுற்றியே வருகின்றன. பெண் கதையை நடத்திச் செல்லும்போதுகூட ஆண்களின் ஹிபோகிரைசியை தோலுரித்துவிட்டு, மிக சாதரணமாக அந்த ஹிபோகிரைசியை தான் அடைந்துகொள்கிறாள்.

பெரும்பாலான கதைகள் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, அதை நிராகரித்து அல்லது அதை கேள்விக்குட்படுத்தி, கடைசியில் அதே புள்ளியிலேயே முடிந்துவிடுகின்றன. இதை ஒரு டெம்ப்ளேட் என்று சொல்லிவிடத்தக்க அளவில் எல்லாக் கதைகளிலும் சுப்ரமண்ய ராஜு பயன்படுத்தி இருக்கிறார். பாலசந்தரின் படங்கள் – பெரும்பாலானவை – இப்படிப்பட்ட ஒரு சுழலுக்குள் சிக்கித் தவிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரம் கண்டிக்கும் ஒரு விஷயத்திற்குள் அக்கதாபாத்திரமே, சூழ்நிலை காரணமாகவோ விரும்பியோ வேறு வழியின்றியோ விழுந்துவிடுவது என்கிற தொடர் சித்திரம் எனக்கு பெரும் அலுப்பை ஏற்படுத்தும் ஒன்று.

ஆண்களின் உலகை பட்டவர்த்தனமாக படம்போட்டுக் காட்டும் கதைகள், சுப்ரமண்ய ராஜுவின் உலகத்தில் சபலிஸ்டாக இல்லாத ஆண்களுக்கு இடமே இல்லையோ என்கிற தவிர்க்கமுடியாத கேள்வியை எழுப்புகின்றன. ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருள் மாத்திரமே என்கிற எண்ணத்தைச் சொல்ல நினைக்கும் ராஜு தன் எல்லா கதைகளிலும் இப்படி ஆண்களை ஒவ்வொரு பெண்ணாக ஓட வைக்கிறார். அதையே பெண்களின் விஷயத்தில் சுதந்திரமாக மாற்றி, சிறந்த சிந்தனையுள்ள, ஆணைச் சாராத பெண்ணாகப் படைத்துவிடுகிறார். தூண்டில், வெளிச்சம், உமா, முகமூடி, முதல் கதை போன்ற கதைகள் ஒரு ஆணின் மனத்தில் இருக்கும் வக்கிரத்தைப் பேசுகின்றன. சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் ஆணின் மனதைப் படம் பிடிக்கும் இக்கதைகள், மிக மேம்போக்காக, ஆனால் மீண்டும் மீண்டும் ஆண்களின் உலகத்தைச் சொல்வதன் மூலம் ஒரு அழுத்தத்தை உருவாக்க முயல்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவை வெறும் வார்த்தைகளாகத் தங்கி விடுகின்றன. அதேசமயம் இக்கதைகளில் வரும் பெண்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ‘நாளை வரும்’ கதையில் தன் கணவனுக்கு இருக்கும் தொடர்பை மிக எளிதாக துண்டிக்க வைக்கிறாள் ஒரு பெண். கணவனிடம் கேள்வி கேட்டால் தன் வாழ்க்கை போய்விடும் என்கிற பயத்தின் காரணமாக எதார்த்தமாகச் சிந்திக்கிறாள் அப்பெண். இப்படி சுப்ரமண்ய ராஜு ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றி பெரிய சித்திரம் ஒன்றை வலிந்து கொடுக்க முனையாவிட்டாலும், அவர்களை பெண்ணியம் பேசும் வீர வசனங்களுக்கு உட்படுத்தாவிட்டாலும், பெண்களின் பாத்திரப்படைப்பு என்பது யதார்த்தத்தையும் சமூகச் சூழலையும் கணக்கில் கொண்டு செயல்படுவதாகவே அமைந்து முழுமை பெற்றுவிடுகிறது.

சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான ‘வழியில் வந்த முட்டாள்கள்’ இப்படி ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. கதையின் உத்தி, மீண்டும் ஆரம்பத்திற்கே செல்லும் அலுப்பு தரும் உத்தியாக இருந்தாலும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் சிறந்த பதின்ம வயதுக் கதையாக இதைக் கொள்ளமுடியும். எதிர்ப்படும் ஆண்களையெல்லாம் தன் அழகைச் சார்ந்து ஏற்படும் அதீத கர்வத்தால் புறந்தள்ளும் ஒரு பெண்ணை, புறந்தள்ளுகிறான் ஒருவன். பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி உடைந்து நொறுங்கும் அப்பெண், தன் ஈகோவைத் தொலைத்துவிடாமல் அவனை மறந்து முதலில் தன் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட ஆணுக்கு மீண்டும் ‘ஹலோ’ சொல்கிறாள். பெண்ணின் பார்வையில் வெளிப்படும் இக்கதை, பெண்ணை ஆணுக்குரிய சாயலில் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணைப் பற்றிய கதையைச் சொல்லும்போது கூட, சுப்ரமண்ய ராஜுவால் அவரே ஆண்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் சுழலிலிருந்து மீள இயலவில்லை என்கிற எண்ணம் வருகிறது. இக்கதையின் பெண், அவரின் மற்ற கதையின் ஆண்களைப் போலவே சிந்திக்கிறாள்.

மல்லிகைப்பூ, உறவு, விலை, நடுவிலே நான், தாகம், இப்படியா சின்னப் பெண்ணை பயமுறுத்துவது போன்றவை ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் எழுதிப்பழகும் கதைகளை ஒத்திருக்கின்றன. ‘செல்லிக்கு படிப்பு வரவில்லை’ மோசமான கதைகளுள் ஒன்று. இது குமுதத்தில் தண்டமாக எடிட் செய்யப்பட்டுவிட்டது என்று முன்னுரையில் சொல்கிறார் தேவகோட்டை மூர்த்தி. புத்தகத்தில் இருக்கும் கதை குமுத்தத்தால் எடிட் செய்யப்பட்டதா அல்லது முழுமையானதா எனத் தெரியவில்லை. ‘கொடி’ சிறுகதையை முக்கியமான சிறுகதையாகக் கருதுகிறார் தேவகோட்டை மூர்த்தி. என்னைப் பொருத்து அது அப்பாவிக்கான கதை. கடைசியில் தன் மாமனார் போலவே அவனும் ஆகும் அதே கதைச் சுழல்!

ஆண்களும் பெண்களும் பதின்ம வயதும் ஏமாற்றலும் களவொழுக்கமும் சலிக்க சலிக்க வரும் கதைகளிலிருந்து கொஞ்சம் விலகி சில கதைகள் (லெவல் கிராஸிங், நாலு பேர்) மேலே செல்ல முயல்கின்றன. லெவெல் கிராஸிங் சக மனிதர் மீதான அன்பைச் சொல்லும் மிகச் சிறிய நிகழ்வொன்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் சாதாரணமான கதை. ‘நாலு பேர்’ அதிலிருந்து கொஞ்சம் உயர்ந்து, ஒரு நண்பனின் சாவை எதிர்கொள்ளும் நான்கு நண்பர்களின் மனநிலையை அலசுகிறது. இக்கதை ஆண்-பெண் ஏமாற்றம்/ஏமாற்றப்படுதலைப் பற்றிப் பேசாமல், அதை மீறிய கதையொன்றைக் கொஞ்சம் யோசனைக்கு இடம் கொடுத்துச் செல்வதாலேயோ என்னவோ எனக்கு பிடித்துவிட்டது. இக்கதையிலும் ஆண்களுடன் உரச பெண்களும், அவர்களுடன் மோகம் கொள்ள ஆண்களும் வருகிறார்கள். ஆனால் அவை நடக்கும் சூழலுக்குப் பின்னே நிறைந்திருக்கும் பெரும் சோகம் இவற்றைத் தாண்டிய யோசனையைத் தருகிறது.

மொத்தமாக சுப்ரமண்ய ராஜுவின் கதைகள் ஆண்கள் பெண்களின் மன நிலையை விவரிக்கும்போது, கூடவே மிடில் கிளாஸ் மக்களின் நிலையையும் அவர்களின் எண்ணங்களையும், நகரத்து மக்களின் மனப்போக்கைப் பற்றிய சித்திரத்தையும் அளிக்கின்றன. சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் இவை ஒரு முக்கிய அம்சம். ஆனால் இவற்றை ஒரு வாசகன் வலிந்து தேடி அடையவேண்டியிருக்கிறது. எவ்விதத் தீவிரத்தன்மையும் இல்லாமல் சொல்லப்படும் கதைகள் இந்த அம்சத்தை மிக மெல்லிய குரலில் சொல்கின்றன. உரத்து மீண்டும் மீண்டும் வலிந்து சொல்லப்படும் ஆணின் உலகம் இதை மறைத்து வைத்துவிடுகிறது என்றும் சொல்லலாம்.

சொல்லத் தோன்றும், ஆனால் அதிகம் பொருட்படுத்தத் தேவையற்ற, இன்னொரு விஷயம், சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் வரும் ஆண்களின் பெயர்கள். ராஜாராமன், கணேசன், முத்து – இந்தப் பெயர்கள்தான் பெரும்பாலான கதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. தீவிர எண்ணமின்றி தோன்றிய உடனே எழுதிக் கொடுத்துவிட்டுப் விடுவதைப் போன்ற சித்திரம் ஒன்று என் மனதுள் எழுகிறது.

சிறுகதைகளோடு இரண்டு குறுநாவல்களும் தொகுப்பட்டுள்ளன. ‘இன்று நிஜம்’ குறுநாவல் பணத்தை படாடோபத்தை சுதந்திரமற்ற வாழ்க்கையை வெறுக்கும் ஒரு இளைஞனின் கதையையும் வறுமையால் அந்த இளைஞனுக்கு சித்தியாகும் ஒரு பெண்ணின் நிலையையும் ஆராய்கிறது. இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. இதிலும் மற்ற சிறுகதைகளின் நீட்சியாகவே இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அமைகின்றன.

அங்கங்கே சட்டென தெறிக்கும் சுப்ரமண்ய ராஜுவின் சாமர்த்தியமும் நகைச்சுவையும் அதிசயிக்க வைக்கின்றன. இப்படி நிறைய இடங்களில் வருவது கதையை வாசிக்கும்போது ஒரு புன்னகையை வரவழைக்கிறது. உப்பு சப்பற்ற கதைகளைக் கூட கொஞ்சமாவது உயிரோட்டத்தோடு வைத்திருப்பது சுப்ரமண்ய ராஜுவின் இந்த சாமர்த்தியமே. ஆனால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு கண சம்பவங்களும் இந்த சாமர்த்தியமும் மட்டுமே கதைகளாகிவிடுவதில்லை. இதை சுப்ரமண்ய ராஜூ உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

தேவகோட்டை மூர்த்தி சுப்ரமண்ய ராஜுவின் கதைகளைப் பற்றிக் கொஞ்சமும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றி நிறையவும் முன்னுரையில் எழுதியிருக்கிறார். சுப்ரமண்ய ராஜுவை இவர் சிறந்த இலக்கியவாதியாக நம்புவதாகத் தெரிகிறது. சுஜாதா தான் வெளியிட்ட பட்டியலில் புதுமைப்பித்தனைச் சேர்க்கவில்லை, சுப்ரமண்ய ராஜூவைச் சேர்த்திருந்தாராம். காலத்தின் கொடுமையில் இதுவும் ஒன்று. ஒருவேளை அப்போது சுஜாதாவிற்கு இலக்கியம் பிடிபடாமல் இருந்திருக்கலாம். இப்போது அவர் இப்படி நினைக்கமாட்டார். ஏனென்றால் காலத்தின் கரங்கள் குரூரமானவை.

கிழக்கு பதிப்பகம் வழக்கம்போல சிறப்பாக இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. ஆனால் கதைகளைத் தொகுத்தவர் பெயர் இல்லை. சுப்ரமண்ய ராஜுவின் முழுக்கதைத் தொகுப்பு என்னும்போது தொகுத்தவர் பெயர் முக்கியமானதாகிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து தொகுத்தவர் பெயர் என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறலாம். அதேபோல் கதைகள் வந்த வருடங்கள் குறிக்கப்படவில்லை. இது ராஜுவின் எழுத்து குறித்த வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ளவிடாமல் செய்துவிட்டது. ஒரு செம்மையான தொகுப்பிற்கு இவையயெல்லாம் முக்கியமானவை.

சுப்ரமண்ய ராஜு 1973ல் ஞானரதம் இதழில் எழுதிய கவிதை:

புலி

எதிரில் நீ வரும்போது
இடப்பக்கம் ஒதுங்கிடுவான்
Peak-hour பஸ்ஸில்
பின் பக்க நெரிசலில்
உன் பக்கப் பார்வையை
ஒதுக்கியே வைத்திருப்பான்
மொட்டை மாடிக் குளிர் நிலவில்
கட்டை போல் படுத்திருப்பான்
தியேட்டரின் இருட்டிலே
கைபடாது படம் பார்ப்பான்
பெண்ணே!
உன்னை உரித்துப் பார்க்கத் துடிக்கும்
கற்கால மனிதனொருவன்
என்னுள் உறங்குகின்றான்
எப்போது எழுப்பட்டும்?

இக்கவிதையில் அடங்கி விடுகிறது சுப்ரமண்ய ராஜுவின் ஒட்டுமொத்த கதைகளும் அவரது உலகமும். கற்கால மனிதன், கற்கால எண்ணம் என்கிற சொல்லாடல் கூட நிறையக் கதைகளில் வருகிறது. பல பரிமாணங்களற்ற, தட்டையான கதைகள் சுப்ரமண்ய ராஜுவின் தோல்வியில் முக்கியப் பங்காற்றும் விஷயமாகும்.

(இக்கவிதை பற்றி: எனக்குப் பிடித்த கவிதை இது. ஆரம்பத்தில் படர்க்கையில் வரும் கவிதை சில வரிகளுக்குப் பின் தன்னை நோக்கித் திரும்பி, அதை முன்வைத்து ஆண்களின் பொதுவான தளத்திற்குச் செல்கிறது.)

சுப்ரமண்ய ராஜு கதைகள், கிழக்கு பதிப்பகம், விலை: 200 ரூபாய்.

இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=26120

Share

இரு கவிதைகள்

பிரதி

முடிக்கும்போது
இருப்பதில்லை
தொடக்கம்

எழுத்து மாறாமல்
பிரதி எடுக்கும்போதுகூட
இரண்டு அ-க்கள்
ஒன்றுபோல் இருக்கவில்லை

வானெங்கும் விரவிக்கிடக்கும்
வெண்பனி அலைந்து
கீழிறங்கும்
பறவையைப் பற்றிய
குறிப்புகளில்
இப்போது
பறவையில்லை,
வெண்பனியில்லை
வானில் அதன் தடங்கள் இல்லை.

விலகி இருத்தல்

அவனைப் பற்றி நினைக்கும்போது
தனிமையில்
எதிரியை
மிக மூர்க்கமாய்
வெய்த மோசமான வார்த்தையும்
அவளைப் பற்றி நினைக்கும்போது
மூக்கைச் சிந்தி
ஏதோ யோசனையில்
சேலையில் துடைத்துக்கொண்ட காட்சியும்
கவனத்தை சிதைக்கிறது நண்ப.
கொஞ்சம் விலகியே இருப்போம்.

Share

சில கவிதைகள்

1.

நதியின் படிக்கட்டில்
நீரில் எழுதிய கோடுகள்
விரிந்து விரிந்து
ஒன்றோடு ஒன்றிணைய
இடையில் கிடக்கின்றன
நீரால் நனைக்கப்படாத
கட்டங்கள்
என் கவன ஈர்ப்பாக.

-oOo-

2.

அவன் புன்னகைப்பதற்குள்
நகர்ந்துவிடத்தான் நினைத்தேன்
அதற்குள் சிரித்துவிட்டான்
நானும் சிரித்துவைத்தேன்
இப்படியே நான்கைந்து முறை ஆகிவிட்டது
எவ்வளவு யோசித்தும்
யாரென்றே சிக்கவில்லை
அவனிடமே கேட்டபோது
‘அடிக்கடி பார்க்கிறோம்ல அதான்’ என்றான்,
எங்களிடையே ஒரு பூ மலர.

-oOo-

3.

கடும் மழையிலும்
பூ விற்கிறாள் கிழவி
ஐந்து முழம் வாங்கினேன்
தலையை சுற்றியிருக்கும்
கோணிப்பை அகற்றி
மலர்ச்சியுடன் தந்தாள்
மொட்டு மல்லிகைகளை
எனக்கும் அவளுக்கும் மட்டுமான
மழை பெய்துகொண்டிருக்கிறது
நிறைவான இசையின் தாளத்தோடு.

-oOo-

4.

பூட்டிய வீட்டுக்குள்
செத்துக்கிடந்தது
தெரு நாயொன்று
எப்படி உள்ள போச்சு என
எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க
என் நினைவை அழுத்துகிறது
தனிமையைக் கண்டுவிட்ட
தெரு நாயின் சாபம்.

-oOo-

5.

நேற்றிரவு இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
உறுதியாகத் தெரியவில்லை என்றார்கள்
அவன் செல்·போன் எண் என்னிடம் இருக்கிறது
ஆனாலும் அவனை அழைக்கவில்லை.

-oOo-

Share

மஜித் மஜிதியின் பரன் – இரானியத் திரைப்படம் (Majid Majidi’s Baran – Iranian Movie)

பரன் (இரானியத் திரைப்படம்)

கதை: (கதையை விரும்பாதவர்கள் இதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து வாசிக்கவும்!)

மஜித் மஜிதி (Majid Majidi) 2001ல் இயக்கி வெளிவந்த திரைப்படம். உலகப் புகழ் பெற்ற Children of Heaven திரைப்படத்தைப் போலவே மிக எளிமையான கதையை, செய்நேர்த்தியின் மூலம் உன்னதப் படைப்பாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். சிறப்பான ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு, ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் எடுத்துக்கொள்ளும் உழைப்பு இவற்றின் வழியாக பரன் ஒரு சிறந்த படமாகிறது.

பதின்ம வயதில் இருக்கும் லதீ·ப் (Lateef) ஒரு இரானியன். டெஹ்ராடூனில் கட்டுமானத் தொழில் நடக்கும் இடத்தில், அங்கிருக்கும் தொழிளாலர்களுக்கு தேநீரும் உணவும் செய்து பரிமாறும் வேலையைப் பார்க்கிறான். வயதிற்கேற்ப விளையாட்டுத்தனத்தோடும் துடுக்கோடும் திரியும் அவன் வாழ்க்கையில் ஒரு பெண் ஏற்படுத்தும் மாறுதலும் அதை அவன் எதிர்கொள்ளும் விதமும் கவித்துவமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் போர் நடப்பதால், அங்கிருந்து பாஸ்போர்ட் இல்லாமல் இரான் வரும் அகதிகள், சொற்ப சம்பளத்தில், சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்கிறார்கள். அப்படி வேலை பார்க்கும் ஒரு ஆப்கானிஸ்தானியான நஜ·ப் (Najaf) இரண்டாவது மாடியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிடுகிறான். அங்கு வரும் லதீ·ப் “ஏன் நஜ·ப் பாராசூட் இல்லாம குதிச்சார்” எனக் கேட்கிறான். படம் ஆரம்பித்த இரண்டு, மூன்று காட்சிகளில் லதீ·பின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுவிடுகிறது. அவன் இப்படி கேட்கும் வசனமும் அதற்கு இசைவாக இருக்கிறது.

மறுநாளிலிருந்து சொல்தான் (Soltan) என்னும் மனிதனுடன் நஜ·பின் 14 வயது மகன் ரஹ்மத்தும் வேலைக்கு வருகிறான். மேஸ்திரி மெமர் (Memar) முதலில் சிறுவனை வேலைக்குச் சேர்க்க மறுக்கிறான். சொல்தானின் வற்புறுத்தலுக்கு இணங்க, நஜ·பின் வறுமையை மனதில் கொண்டு, சம்மதிக்கிறான். 14 வயது சிறுவனால் சிறப்பாக வேலை செய்யமுடியவில்லை. எல்லாரும் அவனைத் திட்டுகிறார்கள். நிலைமை கட்டுக்கு மீறும் சமயத்தில், அவன் வயதை கருத்தில் கொண்டு, மெமர் சிறுவனுக்கு தேநீர் செய்யும் வேலையையும் லதீ·ப்க்கு கடினமான வேலையையும் மாற்றித் தந்துவிடுகிறான். இதைத் தொடர்ந்து கடும் கோபமடையும் லதீ·ப் சிறுவனுடன் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறான். ஆனால் சிறுவன் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்து, அனைத்து தொழிலாளர்களிடம் நல்ல பெயர் எடுத்துவிடுகிறான். இது மேலும் எரிச்சலைத் தருகிறது லதீ·புக்கு. திடீரென ஒருநாள் தற்செயலாக சமையலறையில் பார்க்கும்போது, அந்தச் சிறுவன் ஒரு சிறுவனல்ல என்றும், அது ஒரு பெண் என்றும் அறிந்துகொள்கிறான் லதீ·ப்.
அவனுள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவளுக்கு ஒரு கார்டியன் போலச் செயல்படுகிறான். சோதனைக்கு வரும் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான். அதன் பின்பு அரசாங்க அதிகாரிகள் பாஸ்போர்ட் இல்லாத ஆ·ப்கானிஸ்தானியர்களை வேலைக்கு வைக்கக்கூடாது என்று மெமரைக் கடுமையாக எச்சரிக்க, அந்தப் பெண்ணும் சொல்தானும் வேலை வரமுடியாமல் போகிறது.

ரஹ்மத்தைப் பார்க்காமல் லதீ·பின் உலகம் இருள்கிறது. அவளைத் தேடிக் கிராமத்துக்குச் செல்வது என்று முடிவெடுத்து, மெமரிம் பொய் சொல்லிவிட்டு அவளைத் தேடிப் போகிறான். கிராமத்தில் ரஹ்மத் லதீ·பைக் கண்டாலும், அவன் கண்ணில் படமால் மறைந்துகொள்கிறாள். எதேச்சையாக சொல்தானைச் சந்திக்கும் லதீ·ப், ரஹ்மத் குடும்பத்தின் வறுமை நிலையை அறிகிறான். அதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் மெமரிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதை சொல்தானிடம் தருகிறான். அப்பணத்தை சொல்தான் நஜ·ப்க்குத் தரவேண்டும் என்றும் அது தான் தந்ததாக நஜ·பிற்குத் தெரியவேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறான். மறுநாள் அவரை சந்திப்பகாதக் கூறிச் செல்கிறான். மறுநாள் சொல்தானுக்குப் பதில் அங்கு நஜ·ப் வருகிறான். சொல்தான் பணத்தைத் தனக்குத் தர வந்ததாகவும் தன்னைவிட பணம் சொல்தானுக்குத்தான் தேவை என்பதால் சொல்தான் அப்பணத்துடன் ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டதாகவும் கூறுகிறான் நஜ·ப். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறான் லதீ·ப். அப்போது ரஹ்மத்தின் உண்மையான பெயர் பரன் என்றும் அறிந்துகொள்கிறான்.

வீட்டின் வறுமை தாளாமல் பரன் ஆறுகளில் கல் பொறுக்கும் வேலை செய்வதைப் பார்த்து மிகவும் வருத்தமடைகிறான் லதீ·ப்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் போரில் நஜ·பின் அண்ணன் இறந்துவிடுவதால் நஜ·ப் உடனடியாக ஆப்கானிஸ்தான் செல்லவேண்டியிருக்கிறது. நஜ·பைப் பார்க்கவரும் லதீ·ப் இதை அறிந்துகொண்டு, தன் பாஸ்போர்ட்டை விற்றுப் பணம் கொண்டு வந்து நஜ·பிற்குத் தருகிறான். அந்தப் பணத்தை மெமர் தந்ததாகவும் அது நஜ·பிற்குச் சேரவேண்டிய பணம்தான் என்றும் பொய் சொல்லுகிறான். அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தன் மகள் பரனுடன் ஆப்கானிஸ்தான் செல்கிறான். அவள் விட்டுச் செல்லும் கால் சுவட்டை அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போது மழை கால்சுவட்டை நீரால் நிறைக்கிறது.

பதின்ம வயதில் லதீ·பிற்கு ஏற்படும் உணர்வுகள் வெகு அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன. ரஹ்மத்தாக வேலை செய்யும் ஆண் நிஜத்தில் ஒரு பெண் என அறிகிற நேரத்தில் அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிக அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. பரனாக வரும் கதாபாத்திரம் ஒரு வசனம் கூட இப்படத்தில் பேசுவதில்லை. கடைசியில் ஆப்கானிஸ்தான் செல்லும்போது, ஒரேயொரு முறை லதீ·பைப் பார்த்து புன்னகைக்கிறாள். அவளை நினைத்தே லதீ·ப் இவ்வளவும் செய்கிறான் என்பதை அவள் புரிந்துகொண்டிருக்கிறாள் என்பதை அக்காட்சி காட்டுகிறது.

அழகான ஒரு காதல் கதைக்கு இடையில் ஆப்கானிஸ்தான் அகதிகள் படும் கஷ்டமும் சொல்லப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள் சோதனைக்கு வருவது தெரிந்தவுடன், அனைத்து ஆப்கானிஸ்தான் தொழிலாளர்களும் அவர்களிடத்தில் மாட்டாமல் இருக்க மறைவிடம் நோக்கி ஓடுகிறார்கள். மெமர் ஒரு காட்சியில், இரானியர்களை வேலைக்கு வைப்பதை விட ஆப்கானிஸ்தான் அகதிகளை வேலைக்கு வைப்பது நல்லது என்கிறான். காரணம், ஆப்கானிஸ்தான்காரர்கள் மாடு போல் உழைப்பவர்கள்; அவர்களுக்குக் குறைந்த கூலி கொடுத்தால் போதுமானது.

குறிப்பு: baran என்பதன் சரியான உச்சரிப்பு தெரியவில்லை. பாரோன் என்பதாக இருக்கலாம். இப்போதைக்கு பரன் என்றே எழுதியிருக்கிறேன்.

லதீ·ப் இரானியன் என்பதால் அவன் பாஸ்போர்ட் நல்ல விலைக்குப் போகிறது. அதை ஏதேனும் ஒரு ஆப்கானிஸ்தானியின் படம் ஒட்டி, அவனை இரானியாக உலவ விட பயன்படுத்திக்கொள்ளமுடியும். உண்மையில் இது லதீ·பின் எதிர்காலத்தையே தகர்த்துவிடக்கூடியது. அதுமட்டுமில்லாமல், லதீஃப் அத்தனை காலம் உழைத்த பணம் முழுவதையும் நஜ·பிற்குக் கொடுக்க முடிவெடுக்கிறான். விடாமல் துரத்தும் அந்தப் பெண்ணின் நினைவே அதன் காரணம். அவள் நினைவாக அவளது ஹேர் பின்னையும் அதில் சிக்கியிருக்கும் அவளது முடி ஒன்றையும் கடைசி வரைக்கும் வைத்திருக்கிறான். அவள் அவனை விட்டு விடைபெறும் காட்சிக்கு முன்னதாக அதுவும் அவனுக்குத் தெரியாமலேயே அவனிடமிருந்து விடைபெற்றுவிடுகிறது.

Children of Heaven வருவது போலவே இப்படத்திலும் ஒரு ஓட்டக் காட்சி இடம்பெறுகிறது. அக்காட்சி படம் பிடிக்கப்பட்ட விதம் அப்படியே Children of Heavenல் கடைசி காட்சியில் அலி ஓடுவது போலவே இருக்கிறது. பின்னணி இசை எதுவில்லாமல், சிறப்பான ஒளிப்பதிவில், ஒருவரை ஒரு முந்தும் காட்சி, அதே போல வேக வேகமாக இளைக்கும் மூச்சுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. தன் சிறந்த படத்தை நினைவுபடுத்தும் விதமாக மஜித் மஜிதி இக்காட்சியை வேண்டுமென்றே வைத்திருக்கலாம்.
அதேபோல Children of Heaven படத்தில் வருவதுபோல அழகிய சிவப்பு மீன்கள் உலவும் குளமும் இப்படத்தில் வருகிறது. இரானின் வீதிகளில் இதுபோன்ற சிறிய நீர் தேக்கங்கள் இருக்குமோ என்னவோ.

Children of Heaven படம் போலவே, இப்படத்தில் வரும் ஒவ்வொரு சட்டமும் (Frame) புகைப்படத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதுவும் இரானின் பனிப்பொழிவுக் காலத்தில் கதை நடைபெறுகிறது. வீதியெங்கும் அப்பிக் கிடக்கும் வெண்பனியும், மழைக்காலத்தில் தெருவெங்கும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும், ஓடும் வாய்க்காலுமென ஒரு ஒளிப்பதிவு இயக்குநர் அதிகம் விரும்பும் களமாக இப்படத்தின் களன் அமைந்துவிட்டது. அதை மிக அழகாக, இதைவிட சிறப்பாகச் செய்யமுடியாது என்ற அளவிற்கு படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர் Mohammad Davudi. ஏகப்பட்ட காட்சிகள் கிரேன் ஷாட்டுகள் மூலம் எடுக்கப்பட்டிருப்பதால், நடிகர்களைத் தாண்டி அவர்களைச் சுற்றியிருக்கும் வண்ணமயமான வெளியும் படத்தில் பிரிக்கமுடியாத ஒன்றாக கலந்துவிடுகிறது. கடைசி காட்சியில் பரன் விட்டுப் போன காலடிச் சுவட்டை மழை நிறைக்கிறது. இதுவும் ஒரு புகைப்படத்தன்மை உள்ள காட்சியே.

மஜித் மஜிதியின் இரண்டு திரைப்படங்களிலும் (Children of Heaven, Baran) முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் நல்லவர்களாகவே வருகிறார்கள். யாருக்கும் ஏமாற்றும் எண்ணம் இல்லை. Children of Heaven திரைப்படத்தில் ஒரு காட்சியில் அலி தான் குடிக்கும் க·பாவிற்கு சர்க்கரை கேட்பான். அலியின் தங்கை வீட்டில் கிடக்கும் உடைக்கப்படாத சர்க்கரையை எடுத்துத் தரப்போவாள். அப்போது அவர்களின் தந்தை சொல்லுவார், “மசூதிலேர்ந்து சர்க்கரை துண்டுகளை உடைக்கச் சொல்லி கொடுத்திருக்காங்க. அது மசூதிக்குச் சொந்தமானது. உனக்கு வேண்டியது வீட்டுல அம்மா கிட்ட கேளு” என்று. இதே போன்ற நேர்மை இத்திரைப்படத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. பணத்தை எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் செல்லும் சொல்தான் ஒரு சீட்டில் இப்படி எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறான். “ஆண்டவன் ஆணையாக இப்பணத்தைத் திரும்பத் தருவேன்.” மஜித் மஜிதியின் மனிதர்கள் இயல்பில் கள்ளமில்லாமலேயே படைக்கப்படுகிறார்கள். அவ்வளவு பணத்தை பார்த்த நஜ·ப், தான் கால் நடக்கமுடியாத அந்த நேரத்திலும் அந்தப் பணம் தனக்குச் சொந்தமானதில்லை என நினைப்பதால், அப்பணத்தை சொல்தானையே வைத்துக்கொள்ளச் சொல்லுகிறான். மெமரும் இப்படியே. (Children of Heavenல் அலியின் தந்தையாக வரும் நடிகரே (Mohammad Amir Naji) இப்படத்தில் மெமராக நடித்திருக்கிறார்.) அவன் தன் கையில் பணம் வைத்துக்கொண்டு யாருக்கும் பணம் இல்லை என்று சொல்லுவதில்லை. இப்படியான மனிதர்கள். இப்படி அழகழகான மனிதர்களுடன், அழகழகான காட்சிகளுடன், கவிதை போல செல்கிறது திரைப்படம்.

இரண்டு அடிப்படை விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. ஒன்று, ஆண் வேஷமிட்டு வரும் பெண்ணை யாரும் கண்டறிவதில்லை. ஆனால் நாம் முதல் காட்சியிலேயே அதைக் கண்டுபிடித்துவிடுகிறோம். இரண்டாவது, ஒரு வார்த்தை கூடப் பேசாத ஒரு பெண்ணிற்காக தன் எதிர்காலத்தையே ஏன் பணயம் வைக்கிறான் லதீ·ப்; பதின்ம வயதுக்கோளாறு இத்தனை தூரம் கொண்டு செல்லுமா என்பது. இது போன்ற அடிப்படை லாஜிக்குகள் இடித்தாலும் படத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் ட்ரீட்மெண்ட் படத்தை மிகச் சிறப்பான ஒன்றாக்குகிறது.

பரன் என்றால் மழை என்று அர்த்தமாம். (ஆதாரம்: விக்கி பீடியா.) மழை போல ஒரு பதின்ம வயது வாலிபனின் மனதில் பெய்துவிட்டு மறைவதால் இப்பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் இயக்குநர்.

மேலதிக விவரங்களுக்கு: http://www.imdb.com/title/tt0233841/

Share

சொற்கள் – சிறுகதை

ப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத இடங்களின் வழியே உள்ளே தெறித்து விழுந்துகொண்டிருந்தது. சுசியின் தொடைவரை ஏறியிருந்த நைட்டியில் பளீரெனத் தெரிந்தது அவளது நிறம். தனியறையில் படுத்திருக்கும்போது அவளுக்கு எப்படி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கமுடிகிறது. இதுவே வேறு ஏதேனும் ஒரு இடத்தில் படுத்திருந்தால், போர்வையை கழுத்திலிருந்து கணுக்கால் வரை போர்த்தியிருப்பாள். அறையை நோட்டம் விட்டேன். இடது பக்கத்தில் படபடத்துக்கொண்டிருந்தது நேற்று வாசித்துவிட்டு நான் கைவாக்காய் வைத்த புத்தகம். சுசி பார்த்தால் ‘கண்ட கண்ட இடத்துல புத்தகத்தை வைங்க’ என்பாள். அவள் பேசிப் பேசி, அவள் பேசாதபோது கூட அவளது சொற்கள் எங்கும் சிதறிக் கிடப்பது போலத் தோன்றும் எனக்கு. சொற்களைப் பற்றி யோசிக்கும்போதுதான் தோன்றியது, சுசியைப் பற்றி இப்படிச் சொல்லலாம் என. அவள் வாய் எப்போதும் ஒரு வார்த்தையைத் தயாராகவே வைத்திருக்கிறது. நான் எது கேட்டாலும், கேட்ககூட வேண்டாம், பார்த்தாலே போதும், அதற்கான சொல்லை சொல்லிவிட்டிருப்பாள். இப்படி அவளது உலகத்தில் அவள் தயாராய் வைத்திருக்கும் சொற்களைவிடவும் குறைவாகப் பேசி ஒருவனது வாழ்க்கையைக் கழித்துவிட முடியும். இப்படி அவளிடத்தில் குவிந்து கிடக்கின்றன சொற்கள்.

தூக்கம் வராத நேரத்தில் டிவியைப் போட்டுப் பார்ப்பேன். அடுத்த நொடியில் அவள் வாய் பேசத் தொடங்கும். இவ்வளவு நேரம் அவள் தூங்கிக் கொண்டிருந்தாளா அல்லது நான் தூக்கமில்லாமல் அலைந்து எப்போது டிவியைப் போடுவேன் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தாளா எனக்கூட எனக்குத் தோன்றும். நேற்றிரவு மெத்தையில் படுத்தபோது, மெத்தையிலிருக்கும் மண்ணை தட்டிவிட்டேன். உடனே அவள் பேசத் தொடங்கினாள். “என்னைக்காவது ஒரு நாளைக்காவது மெத்தையைத் தூசி தட்டிப் போட்டிருக்கீங்களா? மண்ணைத் தட்டிவிட்டு குத்திக் காமிக்கிறதுல மட்டும் குறைச்சலில்லை.” தொடர்ந்து வந்து விழுந்தன சொற்கள். சுசி அவற்றையெல்லாம் வார்த்தைகளாகவும் வசவுகளாவும் பாவித்தே அதைச் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் அவை என்னளவில் சொற்களாகி நாள்கள் பல ஆகிவிட்டன. ஓரோர் வேளையில் இத்தகைய சொற்களை நான் எதிர்பார்க்கவும் அவை வராதிருக்கும் நேரங்களில் சலிப்படையவும் ஏக்கம் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒருவித வலியை எதிர்பார்த்திருக்கும் சுகம்.

இரண்டு நாள்களுக்கு முன்பு அவளது தம்பி வீட்டிற்கு வந்தபோது அவனிடம் நான் சரியாகப் பேசவில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. அவனது தம்பியின் சொற்கள் வேறு வகையானவை. அவன் என்னிடம் எப்போதும் சொன்னதையே சொல்லுவானேயன்றி எதையும் புதியதாகச் சொல்லிவிடமாட்டான். அவன் ஏதேனும் புதிய வார்த்தைகளை என்னிடம் பிரயோகித்துவிட்டால் அன்றைக்கு பீர் அடிக்கவேண்டும் என்று நினைத்து, கிட்டத்தட்ட தொடர்ந்து 16 நாள்கள் கவனித்துப் பார்த்தும், அவன் எந்தவொரு புதிய வார்த்தையையும் சொல்லிவிடவில்லை. அந்த வெறுப்பில் பீர் குடித்தேன். இப்படியும் ஒரு மனிதனால் இருக்கமுடியுமா? அப்படிக்கு அலுத்துப்போனானா அவனது அத்தான்? ஆனால் அவனது சொற்களுக்கும் அவனது அக்கா, என் மனைவி சுசியின் சொற்களுக்கும் இடையே இருக்கும் ஒத்திசைவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு தலை சுற்றத் தொடங்கிவிடும். இரண்டு பல் சக்கரங்கள் ஒன்றுடன் பொருந்துவது போல, அக்காவும் தம்பியும் சதா எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது நான் என் வாழ்க்கையில் மிகச் சொற்பம் தடவை மட்டுமே கேட்டிருக்கும் சொற்களையெல்லாம் பயன்படுத்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவான். என்னிடம் பேசும்போது அவனுக்குக் கிடைப்பதென்னவோ பத்து அல்லது பதினோரு வார்த்தைகள்தான். “அத்தான் எப்படி இருக்கீங்க, பையன் எப்படி இருக்கான்? அம்மா எப்படி இருக்காங்க? சுசி எப்படி இருக்கா? நான் ஞாயித்துக்கிழமை உங்க வீட்டுக்கு வர்றேன்.” எவ்வளவு யோசித்தாலும் இதைவிட அதிகமான சொற்களை அவன் என்னிடம் பேசியிருக்கிறானா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஒருமுறை பால்குடத்திற்கு அழைத்த நினைவு வருகிறது. பால்குடத்தினத்தன்று சுசியின் சொந்தக்காரர்கள் முழுவதும் நிறைந்து நின்று பேசிப் பேசி பேசிப் பேசி சொற்களை பால்குட நடையெங்கும் விரித்துவைத்திருந்தார்கள். நான் பயந்து ஓடி தாமிரபரணியில் குதித்து நடுவில் இருந்த பாறையில் ஏறி அமர்ந்துகொண்டேன். எந்தவித சொற்களும் என்னை அணுகாது, நீரின் சத்தத்தில் என்னை மீட்டெடுக்க முடியாமல் போயிருந்தால் அன்று என்ன நடந்திருக்கும் என்று என்னால் இப்போது நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

வீட்டுக்கு வந்த தம்பியிடம் நான் சரியாகப் பேசாததற்கு குறைந்தது அரை மணிநேரமாவது சுசி என்னிடம் பேசித் தீர்த்திருக்கவேண்டும். ஆனால் அவள் அன்று ஒன்றுமே சொல்லவில்லை. மிகவும் மெதுவாக அவள் தம்பியிடம், ‘நீ பார்த்துப் போயிட்டு வாடா’ என்று சொல்லி அனுப்பிவைத்தாள். அன்று இரவு முழுவதும் காத்திருந்தேன். வேறு ஏதேதோ விஷயங்களுக்கு என்னென்ன விதமான சொற்களெல்லாம் வந்தன. ஆனால் இந்த விஷயத்தைப் பற்றிய சொல்லை மட்டும் காணோம். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு நேரத்தில் அவளிடமே கேட்டுவிடலாம் என்று கூட நினைத்தேன். அவள் சொல்லாமல் விட்டுப்போன வார்த்தைகள் என்பது ஒன்றாவது இருக்கட்டும் என்று அவளிடம் கேட்காமல் வைத்தேன். ஆனாலும் அது எனக்களித்த அதிர்ச்சி அதிர்ச்சிதான். அன்றுதான் புரிந்துகொண்டேன், அவளின் சொற்களில் எனக்கு வளர்ந்த வெறுப்பு, எப்படியோ எதிர்த்திசையில் வளர்ந்து, அது இல்லாவிட்டால் நான் ஏமாற்றமடைந்துவிடும் நிலைக்குக் கொண்டுவிட்டது என்று. தவிர்க்கமுடியாத காமம் போல தவிர்க்கமுடியாத சொற்கள்? இருக்கலாம்.

மஞ்சள் நிற வெளிச்சத்தைப் புரட்டி அவள் திரும்பிப் படுத்தாள். கைகளை அவள் மீது பரவவிட்டால் உடனே ஒட்டிக்கொண்டு விடுவாள். சொற்களை இறைக்கத் தயங்காதது போல அவள் அவளைத் தருவதிலும் என்றும் தயங்கியதில்லை. சில சமயங்களில் உச்சத்தில்கூட பேசிக்கொண்டே இருந்திருக்கிறாள். அவசர அவசரமாக அழுத்தமான முத்தமிடுவேன். அவளின் சொற்கள் வெளியில் சிந்தாமலேயே எனக்குள் அமிழும் தருணங்கள் அவை.

ஒரு சில தினங்களுக்கு முன்பு சுசியுடன் படித்த சில பெண்கள் வீட்டுக்கு வந்தனர். அதில் ஒருத்திக்கு கல்யாணமாம். அவள் ஏதோ கேட்க இவள் ஏதோ சொல்ல மாறி மாறி பேசிக்கொண்டார்கள். சுசி பேசும்போது அவளது உதடுகளையே கவனிப்பது வழக்கம். சொற்கள் தாங்கள் பிரசவிக்க எப்படிப்பட்ட வடிவங்களில் துளையை ஏற்படுத்திக்கொள்கின்றன என்று கவனிப்பதில் இருக்கும் ஒரு வெறித்தனமான இன்பம் என்றும் எனக்குள்ளே இருக்கிறது. அதில் லயிக்கத் தொடங்கினால் பின்பு சொற்களும் அதன் பிறப்பிடங்களும் தவிர அவள் என்ன பேசுகிறாள் என்பதையே கவனிக்காமல் போய்விடுவேன். உ, ஊ, ஓ என்ற எழுத்துகள் வரும்போதெல்லாம் உதடுகள் குவிவது எனக்குப் பிடிக்கும். சுசி என்றல்ல, எந்தப் பெண்கள் பேசினாலும் உதடிகள் அப்படி குவிவது பிடிக்கும். அப்படி அடிக்கடி உதடுகளை குவித்துப் பேசும் பெண்களுக்குக் கொணட்டி என்று நானும் என் நண்பர்களும் பெயர் வைத்திருந்தோம். எனக்கு ஒரு கொணட்டியே மனைவியாக வாய்த்ததுதான் நல்ல முரண். நான் அவள் பேசுவதைக் கேட்காமல் அவளது சொற்களையும் உதடுகளையும்தான் கவனிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரிந்திருக்காது. பெரும்பாலும் சொற்களைக் கொட்டும்போது அவள் என் முகம் பார்ப்பதில்லை. எனக்குப் பக்கத்தில் நிற்கும் யாரோ ஒருவரிடம் சொல்வதுபோல வேகமாகத்தான் சொல்லுவாள். நான் அப்படித்தான் எடுத்துக்கொள்வேன், யாரோ ஒருவன் எனக்கருகே நிற்பவனுக்கானவை அவை. எனக்கானவை அர்த்தமற்ற சொற்களும் அவள் உதட்டின் அசைவும்தான். அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்த, கல்யாணம் நிச்சயமான பெண்ணும் அப்படித்தான். சரியான கொணட்டி. அவள் உதடுகள் சுசியின் உதடுகளைக் காட்டிலும் தீவிரமான வேகத்தில் மாறிக்கொண்டே இருந்தன. விருப்பம்போல சொற்கள் வந்து விழுந்தன. அவர்கள் சென்ற பின்பு, யதேச்சையாக சுசி குப்பைகளைப் பொறுக்கினாள். ஒரு கவிஞனின் லாகவத்தோடு, குப்பை அள்ளும் பிளாஸ்டிக் கையில் சொற்களை அள்ளினாள். குப்பையை வெளியே எறியச் சென்றபோது, யாரும் என்னைக் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்ட பின்பு, கீழே கிடப்பதாக நான் கற்பனை செய்துகொண்ட ஒரு சொல்லை, என் ஆத்திரம் தீர ஓங்கி உதைத்தேன். அந்தச் சொல் எதிரே இருந்த சுவரில் முட்டி, அதிலேயே புதைந்துவிட்டது.

அவள் படம் பார்க்கும்போதுகூட ஏதோ பேசுவது போலேயே எனக்குத் தோன்றும். சில சமயங்களில் அவளின் குரல் கூட கேட்டதுண்டு. ஏன் படம் பார்க்கும்போது பேசிக்கொள்கிறாள் என நினைத்துக்கொள்வேன். இப்படி சதா பேசும் ஒரு பெண்ணை நான் பார்த்திருப்பது பற்றியும் அவளுடன் வாழ்ந்துகொண்டிருப்பது பற்றியும், அதுவும் நான் அதை வெறுக்கிறேன்; சில சமயங்களில் ஏங்குகிறேன் என்பதும் இவற்றை அவள் அறியாமல் வாழ்வது பற்றியும் எனக்குப் பெருமையாக இருந்தது. எப்போதோ வந்த அவளது சொந்தகாரன் ஒருவன் அவளிடம் கேட்டான், “படம் பாக்கும்போது அந்த வசனத்தை நீ பாட்டுக்கு சொல்லிக்கிட்டு இருப்பியே, அது இன்னும் இருக்கா” என்று. அதை நான் கேட்டுவிட்டது பற்றி அவள் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. நான் இதைப் பற்றிக் கேட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரம் அதற்கு விளக்கம் அளிக்கும் சக்தி அவளிடம் உண்டு என்பதை நான் அறிந்திருந்ததால் நானும் அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவாறு விட்டுவிட்டேன். அவள் அந்த சொந்தக்காரனிடம் பதில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். அவன் அவளது வெகுளித்தனத்தையும் விகல்பமில்லாமல் பேசும் குணத்தையும் பாராட்டிவிட்டுப் போகிற போக்கில் என்னிடம் “இப்படி ஒரு பொண்ணு உங்களுக்குக் கிடைச்சது நீங்க பண்ணின அதிர்ஷ்டம் மாப்பிள” என்று சொல்லிவிட்டுப் போனான். இதை கிட்டத்தட்ட இரண்டு வருடமாகச் சொல்ல நினைத்திருந்தானாம். “சரி, போயிட்டு வாங்க” என்று மட்டும் சொன்னேன்.

இன்று காலை அவள் மொபைலில் அவள் அம்மாவுடன் பேசினாள். எல்லா பெண்களும் இப்படித்தான் பேசுவார்கள் போல என தினமும் நினைக்கும் விதமாக யாரேனும் ஒருத்தி பேசிவிடுவதுண்டு. இன்று அவள் அம்மா. அப்படி ஒரு பேச்சு. அதில் சுசி அவள் அம்மா சொன்னதையே திரும்பச் சொல்லிச் சொல்லி, அப்படியா என்று கேட்டுக்கொண்டாள். ‘என்னது பாலாஜிக்கு கல்யாணமா? அப்படியா?’, ‘மூணாவது வீட்ல தீ பிடிச்சிட்டா? அப்படியா?’ ‘அப்பாவை யாரோ கீழ தள்ளிட்டானா? அப்படியா?’ என்றும் வீடெங்கும் சிதறிக் கிடக்கும் அவளது சொற்களோடு சேர்ந்துகொண்டன அவளது குடும்பச் சொற்களும்.

எப்படியும் என்றேனும் ஓர்நாள் நான் அவளிடம் சொல்லியே ஆகவேண்டும். மிகவும் மிருதுவாக, அவள் அதிர்ச்சி அடையாதவாறு, இத்தனை நாள் அமைதியா இருந்த ஆம்பிளைக்கு அப்படி என்ன திடீர்னு அகம் என்று பதில் கேள்வி எழுப்ப இடம் தராதவாறு, மெல்லச் சொல்லியே ஆகவேண்டும். பேசுவதைப் போலவே பேசாமலிருப்பதிலும் உள்ள சுகத்தை, மௌனம் கூட மொழியின் தேவையை செய்யக்கூடிய அழகைச் சொல்லவேண்டும். ஒருவகையில் அவள் இப்படி பேசிக்கொண்டே இருப்பதற்கு, வீடெங்கும் வழியெங்கும் சொற்களை கொட்டிக்கொண்டு செல்வதற்கு நானும் ஒரு காரணம். எனது அதீத மௌனமும் அவளது அதீத பேச்சும் எதிர்த்திசையில் சந்தித்துக்கொள்வதாக இருக்கலாம். இதை அவளிடம் சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள் எனத் தெரியவில்லை.

கல்யாணம் ஆன புதிதில் அவள் பேசியதெல்லாம் கிறக்கம் தருவதாகத்தான் இருந்தது. பின்னெப்படி எந்தக் கணத்தில் அவளது பேச்சு வீடெங்கும் இறைந்து கிடக்கும் சொற்களாக எனக்கு மாறியது என்பது தெரியவில்லை. ஒருவேளை வாழ்க்கையில் எல்லா ஆண்களும் இப்படிப்பட்ட ஒரு இடத்தை அடைந்தே தீரவேண்டுமோ. அவள் சொல்லாத வார்த்தைகளுக்குக் காத்துக்கிடந்த காலங்கள் இனி ஒருவேளை வராமல் போகலாம். பெண் நிச்சயிக்கப்பட்ட பிறகு அவளது ஒரு பேச்சுக்கு மணிக்கணக்கில் காத்துக்கிடந்த காலங்கள், எழுதித் தள்ளிய கடிதங்கள், வாய் மூடாமல் அவளைப் பேசச் சொல்லிக் கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் ஒரு கனவைப் போலத் தெரிந்தன. மழை பெய்யாதா என ஏங்கிய மண் வெள்ளத்து நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் போல ஆகிப் போனது. அவள் என் மௌனத்தைப் பற்றி என்ன நினைப்பாள் என்றெல்லாம் நான் யோசித்திருக்கிறேன். அவளுக்கும் சேர்த்தே நாந்தான் யோசிக்கவேண்டும். ஒருமுறை கூட அவளை என் மௌனம் படுத்துகிறது என்று சொன்னதில்லை. இன்னும் ஒரு வகையில் சொல்லப்போனால் என் அதீத மௌனத்தையே அவள் விரும்பியிருக்கக்கூடும். பொதுவாகவே அவள் பேசும் போது இடையில் ஏற்படும் தடங்கல்களை விரும்புவதில்லை. ஒருமுறை கோபமாக அவள் அம்மாவிடம், “மொதல்ல நான் சொல்றத கேளு, எதிராளியைப் பேசவிடாம நொய் நொய்னு பேசாத” என்றாள், நான் இங்கே என் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே உட்காருவதை அறியாமல்.

அன்று அவன் தம்பி வந்திருந்தான். நான் வழக்கம்போல ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, காதுகளை அவர்கள் பேசுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அவன் தம்பி புதிய விஷயங்களாகப் பேசினான். எப்படி அவன் அவனது அக்காவிற்காக பேச்சுக்களை சுமந்து கொண்டு வருவான் என்பது ஒரு பெரிய புதிர். அவன் காதல் வயப்பட்டிருக்கும் பெண்ணைப் பற்றிய நீண்ட சம்பாஷணைகளை நிகழ்த்தினான். அவள் பேசுவதே இல்லை என்று அரற்றினான். அவன் சொல்வதையெல்லாம் தொகுத்திருந்தால் சிறந்த கையறுநிலை காவியம் ஒன்று கிடைத்திருக்கும். சுசி ரொம்ப இதமாக, “எல்லா ஆம்பிளைங்களும் ஆரம்பத்துல இப்படித்தாண்டா பேசுவீங்க, கொழந்தை பெத்து அதுங்க பேச ஆரம்பிக்கும்போது பொண்டாட்டி வாயத் திறந்தாலே உங்களுக்கெல்லாம் எரியும்” என்றாள். (நல்லவேளை, என் மகன் இன்னும் பிறக்கவில்லை. தப்பித்தான்.) அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்றும் தோன்றியது; இப்படி ஜாடை மாடையாகப் பேசும் அவசியம் இல்லை என்றும் தோன்றியது. அவள் இப்படிப் பேசுவது எனக்கு எரிச்சல் தரும் என்று தெரிந்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் இருப்பாள் என்று நான் நம்பவில்லை. தம்பி பல புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டு, பல தடவை சொல்லி ஓய்ந்த அவர்களது குட்டிக்கால கதைகளை ஆரம்பித்தான். அதுவரை கையில் வைத்திருந்த மிக்ஸியின் ஜாரை கீழே வைத்துவிட்டு கொஞ்சம் வசதியாக உட்கார்ந்துவிட்டாள். இன்று சமையல் ஆனாலும் அதில் உப்போ புளியோ நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். நல்ல தம்பி, நல்ல அக்கா.

குட்டிக்கால கதைகள் என்பதைப் பார்த்தவுடன் ஒரு கனவு தேவதையைப் போல சுசியின் குட்டிக்காலங்கள் பல்வேறு கதைகளால் ஆனது என்றெல்லாம் நினைக்கத் தேவையே இல்லை என்பதை இந்த மூன்று வருடங்களில் புரிந்துகொண்டிருந்தேன். மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கு கதைகள். அதில் இரண்டு அவள் அப்பா சம்பந்தப்பட்டது. மற்றொன்று எல்லா குடும்ப உறுப்பினர்களும், அவர்கள் என்றோ வளர்த்து பாம்பு கடித்துச் செத்துப் போன நாய் உட்பட, இடம் பெறும் ஈஸ்மெண்ட் கலர் சோகப் படம் ஒன்று, அவள் முதன்முதலாக சென்னை வந்தபோது அவளது சித்தப்பா குடை ராட்டினத்தில் ஏற்றிச் சுற்றிக் காண்பித்த சென்னையைப் பற்றிய சித்திரம் ஒன்று. இவ்வளவுதான். இவ்வளவேதான். இதை எத்தனை தடவை பேசிக்கொள்வார்கள்? தேர்ந்த கலைஞனைப் போல ஒரே கதையை பலவாறாகச் சொல்லும் வித்தையும் இல்லை. முதல் தடவை எப்படிச் சொன்னாளோ அதையே சொல்லுவாள். அடி பிசகாமல் அப்படியே சொல்லுவாள். நான் சிறுவயதில் படித்த மனப்பாடப் பாடலைக் கூட இப்படி என்னால் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை.

அவளது அப்பா கதையில் அவள் சொல்லும் வாக்கியம்: ஞானிக்கேத்த புத்தி தீனிக்கேத்த லத்தி. இந்தப் பழமொழியைப் பற்றிப் பேசினால் அவள் இந்தக் கதையைத்தான் சொல்லப்போகிறாள் என்று அர்த்தம். அந்தக் கதையை ஆதி முதல் அந்தம் வரை வரி பிசகாமல் என்னால் இப்போது சொல்லமுடியும். அத்தனை முறை நேரடியாகவும் காதுகளைக் கடன் கொடுத்தும் கேட்டிருக்கிறேன். ஆனால் அக்கதை இப்போது தேவையில்லை. அவள் முதல் தடவை எப்படிச் சொன்னாளோ அதே மாதிரி இப்போதும் சொன்னாள். இது 147வது முறையாக இருக்கலாம். முதல் தடவை கேட்டதை விட அதிகம் சிரித்தான் ‘நல்ல தம்பி.’

குடும்ப உறுப்பினர்கள் கதையில் அக்காவைப் பற்றி: “அழுதுகிட்டே சொல்றா அவ ‘சூடா இட்லி போடும்மா’ன்னுட்டு. அழறோம்கிற ரோஷம் கூட இல்லாம, அதுவும் எத்தனாவது இட்லி? 8வது இட்லி!” ஆறாவது அறிவைப் போல, ஏழாவது உலகத்தைப் போல, யாராவது எட்டாவது என்றால் நான் இட்லி என்பேன். எத்தனை முறை கதை சொல்லியிருக்கிறாள்? ஒரு தடவை கூடவா பிசகாது? மறக்காது? ஆறாவதோ ஏழாவதோ இட்லி என்றுகூட சந்தேகத்தின் பலனைத் தரமாட்டாள். சொற்களை சரியாக வீசுவதில் அவ்வளவு கச்சிதம். ‘நல்ல தம்பி’ இந்தக் கதையைக் குறைந்தது 200 தடவை கேட்டிருப்பான். 201 வது தடவை கேட்கும்போது அவனுக்கு சந்தேகம் வருகிறது, “அக்கா சட்னி கேப்பாளா, மிளகாய்ப்பொடியா?”

‘நல்ல தம்பி’ மடையன் அத்தனைக்கும் தலையாட்டினான். அவனும் சில புதிய சொற்களையும் அவளோடு சேர்ந்து நைந்து பிய்ந்து போன பழைய சொற்களையும் சொல்லிவிட்டுப் போனான். தமிழின் தொடக்கத்திலிருந்து கணக்கு கூட்டிப் பார்த்தாலும் அக்காவும் தம்பியும் பயன்படுத்திய சொற்களை அவர்களைப் போல் யாரும் அவ்வளவு பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அவள் தம்பியை வெளியனுப்ப போனபோது, தரையில் சிதறிக் கிடந்த சொற்களைக் கூட்டிப் பெருக்கி குப்பைக் கூடையில் போடலாமா என்று கூட யோசித்தேன்.

ஒவ்வொரு நேரத்தில் யார் பேசினாலும் எனக்கு வெறுப்பு வந்தது. ஏன் இப்படி சொற்களை உதிர்த்துச் செல்கிறார்கள் என்று தோன்றியது. கடலலையைப் பார்த்தால்கூட வெறுப்புத் தோன்றியது. ஏன் இத்தனை ஆர்பாட்டம், சத்தம்? வானத்தில் தூரத்தில் பறக்கும் பறவைகளை ரசிக்க முடிந்தது. வீட்டு ஜன்னலில் வந்து அமர்ந்து காக்காவைக் கல்லெடுத்து விரட்டினேன். அதை சுசி பார்த்துவிட்டாள். அன்று வீடெங்கும் காக்காய், சனி பகவான் என்பதை ஒட்டிய சொற்கள் சிதறிக் கிடந்தன. எல்லா சொற்களையும் கூட்டிப் பெருக்கி, சனி பகவான் சொல்லை மட்டும் கையில் எடுத்து – பக்திதான் – தூர எறிந்தேன்.

இன்னொரு நாள் சொற்கள் ஏதும் புதியதாக விழாத ஒரு நேரத்தில் ‘நல்ல தம்பி’ வந்தான். அவன் பீச்சுக்கு அழைத்தான். வரும்போது தனியாக வரமுடியாது என்பதற்காக என்னையும் வரவேண்டும் என்று சொல்லி சுசி அழைத்துப் போனாள்.

மணலில் பாவும்போது வீட்டில் இறைந்து கிடக்கும் சொற்களில் நடந்து நடந்து சலித்துப் போன கால் கொஞ்சம் உற்சாகம் கொண்டது. கொஞ்சம் வேகமாக நடந்தேன். மணலில் கால் புதைந்து வெளியேறி, மணலின் வெம்மையும் நுண்மையும் என்னைக் கொஞ்சம் மீட்டெடுத்தன. என்னை ஒட்டிக்கொண்டு கிடந்த சுசியின் சொற்கள் அனைத்தும் கடலில் கரைந்தொழியட்டும் என்கிற எண்ணத்தில் கடலில் குளித்தேன். தூரத்தில் ‘நல்ல தம்பி’ கூட்டிக்கொண்டு வந்த பெண்ணிடம் என்னவோ கொஞ்சிக்கொண்டிருந்தான். வேறென்ன இருக்கும்? பேசச் சொல்லிக் கேட்பான். சொன்னால் அவனுக்கு விளங்காது. பட்டால்தான் தெரியும். அந்தப் பெண் முகத்தை நாணிக் கோணி என்னவோ சொல்லியிருக்கவேண்டும். உடனே சுசியைப் பார்த்து வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பதைப் போல என்னவோ சைகை செய்தான். அங்கிருந்து ஓடி வந்து அக்காவிடம் என்னவோ சொன்னான். அவள் சிரித்துக்கொண்டே என்னவோ சொன்னாள். அவன் மீண்டும் அந்தப் பெண்ணிடம் ஓடினான். நான் சுசியிடம் வந்தேன்.

“என்ன சொன்னான் நல்ல தம்பி?”

அவள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். அப்படி அவள் பார்த்த பார்வை எனக்குக் கொஞ்சம் பயம் தருவதாகவும் கொஞ்சம் சந்தோஷம் தருவதாகவும் இருந்தது.

“உன்னைத்தான் கேக்கிறேன். என்ன சொன்னான் உன் தம்பி.”

‘நல்ல தம்பி’ என்பதைக் கவனிக்கவில்லை ‘நல்ல அக்கா’. அவள் என்னை லட்சியம் செய்யாதவாறு கடலை நோக்கினாள். அன்றுதான் முதன்முதலாக அலையைப் பார்க்கும் குழந்தையிடம் கூட அவ்வளவு ஆர்வம் இருக்காது. அப்படிப் பார்த்தாள் கடலை. அவளிடமிருந்து சொற்கள் எங்கு போயின? ஒருவேளை திருந்திட்டாளோ? கொஞ்சம் கலவரமாக இருந்தது. ஆனாலும் நம்பிக்கை வந்தது, அப்படியெல்லாம் சீக்கிரம் என்னை விட்டுவிடமாட்டாளென.

வீட்டுக்கு வந்தோம். வரும் வழியெங்கும் அவளது அமைதி என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. நான் என் டைரியில் அவளைப் பற்றிய குறிப்புகளை அவள் படித்து, அவளது சொற்களின் மீது எனக்கு இருக்கும் வெறுப்பைத் தெரிந்துகொண்டு, என்னைத் தெரிந்து கொண்டு… வாய்ப்பே இல்லை. நான் டைரி எழுதுவதில்லை. எழுதினாலும் அதிலிருக்கும் சொற்கள் எல்லாமே எப்படியும் சுசியின் வார்த்தைகளாகத்தான் இருக்கும். பெருக்கித் தூர எரிவதே சிறந்த செயல் என்று நான் நினைத்துக்கொண்ட நாள்களிலிருந்து அவளது சொற்கள் எதுவும் என்னிடம் தங்குவதில்லை. அவை வந்த வேகத்தில் என் பார்வையிலேயே முனை மழுங்கி என் மீது மோதி கீழே விழும், நான் அவற்றைப் பொறுக்கிக் குப்பைக் கூடையில் கொட்டுவேன். இப்படி நான் நினைத்துக்கொண்டுவிட்ட நாள்களிலிருந்து சுசியை என்னால் பார்க்கவாவது முடிந்தது. என்ன ஆயிற்று சுசிக்கு? இந்தக் கேள்விக்கு மட்டும் ஏனிந்த குடலைப் புரட்டும் அமைதி.

மீண்டும் ஒரு தடவை மெல்ல கேட்டேன். “என்ன சொன்னான் உன் தம்பி?”

அவள் மெல்ல இருமிக்கொண்டாள். பதில் ஒன்றும் சொல்லவில்லை. எங்கே போயின அவள் தயாராய் வைத்திருக்கும் வார்த்தைகள்?

மறுநாள் அவள் தம்பி என்னவோ ·போன் செய்தான். அவள் வள வளவென்று பேசினாள். ஒன்றும் புதியதாக இல்லை. அதே சொற்கள்தான். வெறும் சொற்கள். ஒரு கோணியை எடுத்துக்கொண்டு போய் அவள் வாயருகே ஏந்திக்கொண்டு நிற்கலாமா? அவன் தம்பி சொன்னதையும் சேர்த்துச் சொன்னாள். அவனது சொற்களும் சேர்ந்து அறையில் விழுந்தன. அடுத்து விழுந்த சொல் புதியதாக இருந்தது. அந்தப் பெண் பேசினாள். எனக்கு கொஞ்சம் ஆர்வம் வந்தது. சுசி சிரித்து சிரித்துப் பேசினாள். ·போனை ஒரு கையால் மூடிக்கொண்டு என்னிடம், “இன்னைக்கும் பீச் போகலாமான்னு அந்தப் பொண்ணு கேக்குது” என்றாள். நேற்று முத்தம் கொடுக்க மறந்திருக்கலாம் ‘நல்ல தம்பி.’

“நேத்து உன் தம்பி என்ன சொன்னான், அதச் சொல்லு” என்றேன்.

“அத அப்புறம் சொல்றேன்.”

“மொதல்ல சொல்லு.”

அவள் என்னை முறைத்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் போகலாம் என்று சொல்லி ·போனை வைத்தாள். நான் வரமாட்டேன் என்றேன்.

“நேத்து அவன் ஓடிவந்து, ‘அக்கா, பொண்ணு நம்ம அத்தான் மாதிரி முசுடு இல்லை, அப்பப்ப பேசுறா, சிரிக்கிறா’ன்னான். போதுமா” என்றாள். பதிலுக்குக் காத்திருக்காமல் அவள் சமையலறைக்குள் சென்றாள். எனக்கு தலை சுற்றியது. நான் இவர்களை பைத்தியம் என்று நினைத்துக்கொண்டிருக்க, பைத்தியங்கள் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு பட்டம் கொடுக்கின்றன. இத்தனை நாள் நானில்லாதபோது இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் இவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருப்பார்களோ? அவள் அங்கு சென்றதும் கீழே கிடந்த சொற்களைப் பார்த்தேன். பைத்தியம் என்கிற வார்த்தையும் முசுடு என்கிற வார்த்தையும் தனியே கிடந்தன. அவற்றை காலால் தள்ளியபோது அவை என் காலிலேயே ஒட்டிக்கொண்டன. எத்தனை காலை உதறியும் அவை காலிலிருந்து போகவே இல்லை. எனக்கே கொஞ்சம் அசிங்கமாக இருந்தது.

பீச்சுக்கு போகத் தயாரானேன். பஸ்ஸில் போகும்போது கேட்டாள், “சந்தோஷமா இருக்காங்கள்ல” என்றாள். உம் கொட்டினேன். “அப்படியே இருக்கணும்” என்றாள். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. “அதுக்கு ரெண்டு பேரும் பேசிக்கணும்” என்றாள். பஸ்ஸின் கண்ணாடியின் வழியே உலகம் என்னை வெறித்து நோக்குவது போல இருந்தது. நான் உம் கொட்டுவதற்கு முன்பு அவள் சொன்ன சொற்களைத் தேடினேன்.

“ஏன் அடிக்கடி எதையோ தேடறீங்க?” என்றாள்.

இங்க சந்துரு சந்துருன்னு ஒரு மானஸ்தான் இருந்தான் என்று சொல்வார்கள் என் நண்பர்கள். நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

“நாம மொதல் மொதல்ல பீச்சுக்கு போனோமே ஞாபகம் இருக்கா?”

“ம்.”

“எவ்ளோ சந்தோஷம், இல்ல?”

“ம்.”

“ஏன் இப்படி எல்லாத்துக்கும் விட்டேத்தியா பதில் சொல்றீங்க?”

“இல்லியே…”

அவ்வளவுதான். அப்போது ஆரம்பித்ததுதான், பீச்சிலிருந்து வீட்டிற்கு வரும்வரை ஓயவில்லை. தம்பியிடம் அழுது புலம்பி ‘சரியான முசுடுகிட்ட மாட்டிக்கிட்டேண்டா’ என்று சொல்லி என்னைத் திட்டித் தீர்த்தாள். அன்று மட்டும் அவள் சிதறிய வார்த்தைகளின் எண்ணிக்கை எப்படியும் பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கும். ‘நல்ல தம்பி’யோ ஏதோ ஒரு கிறக்கத்திலேயே இருந்தான். சுசி சொன்னதை சிரத்தையாகக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவன் போன பின்பு சுசி பொதுவாக, “இவன் பொண்டாட்டியும் பொலம்பிக்கிட்டுத்தான் அலயப்போறா” என்று சொன்னது காதில் விழுந்தது.

Share

சூரஜ் கா சாத்வன் கோடா – ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 03)

படம்: சூரஜ் கா சாத்வன் கோடா (சூரியனின் ஏழாவது குதிரை)
இயக்கம்: ஷ்யாம் பெனகல்
மொழி – ஹிந்தி

ஷ்யாம் பெனகலின் ‘சூரியனின் ஏழாவது குதிரை திரைப்படம்’, அலஹாபாத்தில் வசிக்கும் ஒரு ரயில்வே ஊழியரின் பால்ய வயது, பதின்ம வயது மற்றும் இளம் வயது காதல்களை முன்னிறுத்தி, அவற்றின் ஊடாக பெண்களைப் பற்றிய, காதலைப் பற்றிய, வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆணின் பார்வையை முன்வைக்கிறது. ரகுவீர் ஆதவ் என்னும் நடிகர் தன் நண்பர்களைப் பற்றிய நினைவுகளை நினைக்க படம் ·ப்ளாஷ் பேக்கில் துவங்குகிறது. ரயில்வே துறையில் வேலை பார்க்கும் மாணிக் முல்லா அவரது நண்பர்களுடன் தினம் தினம் கதைகளைப் பகிர்ந்துகொள்ளுகிறான். சிறந்த கதை சொல்லியான அவன் கதைகளை ஆர்வமுடன் கேட்கும் அவன் நண்பர்கள் அது பற்றிய கடுமையான விவாதமும் மேற்கொள்ளுகிறார்கள். கதையைச் சொல்லி அதைக் கேட்பதை விட அவர்களுக்கு வேறு நல்ல பொழுது போக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். அப்படி ஒரு நாள் தன் பால்ய கால காதல் கதையைச் சொல்லுகிறான் மாணிக் முல்லா.

Thanks:nfdcindia.comதன்னாவும் ஜமுனாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தன்னாவிற்குப் பெண்ணைத் தர ஜமுனாவின் அம்மாவிற்குச் சம்மதம் இல்லையென்றாலும், தன் பெண்ணின் சந்தோஷமே முக்கியம் என்று சம்மதிக்கிறார் ஜமுனாவின் தந்தை. தன்னாவிற்குப் பெண்ணைத் தர சம்மதிக்காததற்குக் காரணம், தன்னாவின் சாதி தனது சாதியை விடத் தாழ்ந்த சாதி என்று ஜமுனாவின் தாய் நினைப்பதுதான். ஆனாலும் சில நிபந்தனைகளுடன் பெண் தரச் சம்மதிக்கிறாள். அதில் முக்கியமானது, தன்னா தன் வீட்டுடன் மாப்பிள்ளை ஆகவேண்டும் என்பது. அதற்கு தன்னா மறுக்க, அவன் சாதியைச் சொல்லித் திட்டி விரட்டுகிறாள் ஜமுனாவின் தாய். மாணிக் முல்லா படிக்கும் வயதில் இருக்கிறான். அவன் மேல் மிகுந்த அன்பு காட்டுகிறாள் ஜமுனா. தன் திருமணம் தடைபட்டுப்போன சோகத்தில் மாணிக் முல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் மேல் ஆதரவாகச் சாய்கிறாள். மனம் மயங்கிச் சரியும் பொழுதொன்றில் அவனை முத்தமிடவும் முயல்கிறாள். தன் மன மயக்கத்தை கண்டு அஞ்சி அவனை விட்டு விலகி ஓடுகிறாள். மாணிக் முல்லாவின் பதின்ம வயது இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் மாற்றத்துக்குள்ளாகிறது. அவனால் ஜமுனாவை மறக்கமுடியவில்லை. ஆனாலும் அது காதலில்லை என்றும் தெளிவாக உணர்கிறான். ஜமுனாவிற்கும் வயதான ஒரு செல்வந்தருக்கும் மணம் முடிகிறது. ஜமுனா இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள். இதை எதிர்த்து தன்னாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் கொடுமைக்கார தந்தைக்குப் பயந்து தன் காதலை தன் மனதிலேயே புதைத்துக்கொள்ளுகிறான். பின்பு தன்னாவிற்கும் வேறொரு பணக்கார பெண்ணான லில்லிக்கும் திருமணம் நடக்கிறது. இதை அறியும் ஜமுனா, அவள் வீட்டிற்கு வரும்போது தன்னாவிடம் அவள் மனைவி தன்னைவிட அழகியா என்று கேட்கிறாள். என்ன சொல்வது என்று தெரியாமல் தன்னா தடுமாறும்போது, அவன் எதிர்பாராத சமயத்தில் ஜமுனா அவனைக் கட்டிபிடித்துக்கொள்ளுகிறாள். அவளை பலவந்தமாக விலக்கித் தள்ளிவிட்டு ஓடுகிறான் தன்னா. தனது புதிய வாழ்க்கை மிகுந்த செல்வம் நிறைந்ததாக இருக்க, அதனால் கர்வம் கொள்ளும் ஜமுனா, வம்படியாக தன்னாவை வெறுக்கத் துவங்குகிறாள். தன்னா இல்லாத சமயத்தில் லில்லியிடம் பேசி தன்னா பற்றிய ஒரு எதிர்மறை சித்திரத்தையும் உருவாக்க முனைகிறாள். இந்நிலையில் ஜமுனாவின் வயதான செல்வந்தக் கணவர் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக சில பூஜைகளை மேற்கொள்ளுகிறார். அதை கவனித்துச் செய்ய தன் வேலைக்காரனைப் பணிக்கிறார். அந்த வேலைக்காரனுக்கும் ஜமுனாவிற்கும் இடையே ஏற்படும் புரிதல் மெல்ல காதலாகி உறவில் முடிகிறது. பூடமாகச் சொல்லப்படும் இக்காட்சிக்குப் பின் ஜமுனாவிற்குக் குழந்தை பிறக்கிறது. அதைக் கொஞ்சுகிறார் வயதான கணவர். அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிய அவர் உயிர் பிரிகிறது. ஒரு பெண் குழந்தையுடன் தனித்து விடப்படும் ஜமுனா பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அவர் வீட்டிலேயே வாழ்கிறாள். வேலைக்காரனும் அவளுடனேயே இருந்துவிடுகிறான் கார்டியனாக.

முதல் கதை முடிந்ததும் நண்பர்கள் விவாதிக்கிறார்கள். ஒரு நண்பன் இதை கற்பனைக் காதல் கதை என்று சொல்ல, வெடித்தெழும் ரகுவீர் யாதவ் இக்கதை பெண்களின் மீதான வன்முறை என்கிறார். பெண்கள் என்றைக்கும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்கிறார். இன்னொரு நண்பர் கண்ணீர் சிந்தி அழுகிறார் தன்னாவிற்காக. இரண்டாவது கதையைக் கேட்கிறார்கள் நண்பர்கள். மாணிக் முல்லா சொல்லத் தொடங்குகிறார்.

தன்னாவின் தந்தை மஹசேர் தலால் தனது கிழட்டுப் பருவத்தில் திருமணம் செய்துகொள்கிறார். மகன் காதலில் இருப்பது தெரியாமல் தனக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவர, அவரது மகள்கள் அருவருப்பின் உச்சத்திற்குச் செல்கிறார்கள். மகன் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருப்பது மஹசேர் தலாலுக்குப் பெரும் எரிச்சலைத் தருகிறது. தன் இரண்டாவது மனைவியுடன் உல்லாசமாக இருக்கும்போது அங்கு வரும் தன்னாவின் மீது எரிந்து விழுகிறார். திடீரென தன்னாவிற்கு பணக்காரப் பெண் லில்லி கிடைக்கவும் அவன் திருமணத்திற்கு நிச்சயிக்கிறார். ஜமுனாவின் மீது காதலில் இருக்கும் தன்னா தன் தந்தையை எதிர்க்கும் தைரியமின்றி திருமணத்திற்குச் சம்மதிக்கிறான். தன் கணவன் தன் மீது அன்பாக இல்லை என்கிற எண்ணம் உண்டாகிறது லில்லிக்கு. அதை ஆமோதிக்கும் விதமாக ஜமுனாவும் பேச, தன்னா தன் மீது அன்பாக இல்லை என்கிற முடிவுக்கே வந்துவிடுகிறாள் லில்லி. இதில் ஏற்படும் பிரச்சினையில் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விடுகிறாள் லில்லி. எதேச்சையாக ஒருநாள் ரயில்வே ஸ்டேஷனில் ஜமுனாவைச் சந்திக்கிறான் தன்னா. ஜமுனா கணவனை இழந்து, தன் வீட்டு வேலைக்காரனுடன், கையில் குழந்தையுடன் அடுத்த வண்டிக்குக் காத்திருக்கிறாள். இருவரும் பேசிக்கொள்கிறார்கள். விடைபெற்றுச் செல்லும் தன்னா, எதிர்பாராமல் ஒரு ரயிலில் அடிபடுகிறான். ஜமுனா அவனை மருத்துவமனையில் சேர்க்கிறாள். அவனுக்கு ஒரு கால் போய்விடுகிறது. தன்னா கதறி அழுகிறான். ஜமுனாவும் அழுகிறாள். அப்போது ஏற்படும் நெஞ்சு வலியில் தன்னா இறந்துவிடுகிறான். தன்னாவைப் பார்க்க வரும் லில்லியைக் கட்டிக்கொண்டு ஜமுனா கதறி அழ, லில்லிக்கு சில விஷயங்கள் பிடிபடுகின்றன.

இத்துடன் இரண்டாவது கதை முடிவடைகிறது. நண்பர்கள் கதை பற்றி விவாதிக்கிறார்கள். இது மிகவும் சோகமான கதை என்கிறான் ஒரு நண்பன். வாழ்க்கையில் ஏற்படும் சங்கிலித் தொடர் போன்ற சோகங்கள் சொல்வதுதான் என்ன என்று தீவிரமாக விவாதிக்கிறார்கள். மூன்றாவது கதை கேட்க நண்பர்கள் அவசரப்படுகிறார்கள். மூன்றாவது கதை தொடங்குகிறது.

மூன்றாவது கதை இரண்டு கிளைகளில் செல்கிறது. முதல் கிளையில் தன் நண்பர்களுக்கு காதல் என்றால் என்ன விளக்க மாணிக் முற்படுகிறான்.

Thanks:italkies.comநிலவும் மழையும் பொழியும் இரவில் கவிதைத்துவமாகப் பேசுகிறான் மாணிக். அவனது பேச்சில் மயங்கிக் கிடக்கிறாள் லில்லி. தனக்கும் தன்னாவிற்கும் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதைச் சொல்கிறாள் லில்லி. அதை மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மாணிக் அன்று தான் கண்ட வங்காளப் படத்தின் காதல் காட்சிகளை அவளுக்குச் சொல்கிறான். இது விளையாட நேரமல்ல என்று லில்லி எத்தனைமுறை சொல்லியும் அதை பொருட்படுத்தாமல், இது விளையாட்டல்ல இதுவே வாழ்க்கை என்கிறான் மாணிக். இரவீந்தரநாத் தாகூர் எழுதிய காவிய வரிகளை அவளுக்குச் சொல்லி அவளைத் தேற்றுகிறான். அவளிடமிருந்து என்றென்றுமாக விடைபெறுகிறான். லில்லிக்கு அவன் மேலிருக்கும் ஈர்ப்பு குறையவில்லை. ஆனாலும் அதை மறந்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதற்கும் இன்னொரு காரணம் பின்னர் சொல்லப்படுகிறது.

தன்னாவின் தந்தை மஹசேர் தலால் இனிப்புக் கடையில் அமர்ந்திருக்கும்போது அங்கு இனிப்பு விற்க வருகிறாள் சத்தி. அவளை நோட்டமிடும் கடைக்காரனை சத்தி கத்தியைக் காட்டி மிரட்டுகிறாள். அதைப் பார்க்கும் தன்னாவின் தந்தையின் மனதுக்குள் அவள் மீது காதல் அரும்புகிறது. ஏற்கனவே இரண்டாவது திருமணமாகி வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை மறுக்க மூன்றாவது பெண் மீது காதல் கொள்ளுவதுதான் வழியென முடிவெடுக்கிறார் மஹசேர் தலால். இதை அறியும் இரண்டாவது மனைவி சண்டை பிடிக்க, அவனை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார் மஹசேர் தலால். தன் தந்தையின் இரண்டாவது மனைவிக்கும் தன்னாதான் ஆறுதல் சொல்கிறான். சத்திக்கு கார்டியனாக இருப்பவன் சத்தியை அலஹாபாத்தின் ஓரிடத்தில் கண்டெடுத்ததாகவும் அதுமுதல் அவளை வளர்த்துவருவதாகவும் சொல்கிறான். அவனுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து அவளை அடைய விரும்புகிறார் மஹசேர் தலால். அதற்குச் சம்மதிக்கிறான் சத்தியின் கார்டியன். சத்திக்கு மிட்டாய் விற்றதில் ஏற்படும் கணக்குக் குழப்பங்களைத் தீர்க்கிறான் மாணிக். இதனால் மாணிக் மேல் சத்திக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. மாணிக் படித்து பெரியாளாக வேண்டும் என்று சத்தி மெனக்கெடுகிறாள். மாணிக்கும் பாஸ் செய்கிறான். இடையில் ஒருநாள் இரவு சத்தி மாணிக்கைத் தேடிக்கொண்டு அவன் வீட்டிற்கே வந்துவிடுகிறாள். உடனே அன்றிரவே அவள் எங்கேனும் போகவேண்டும் என்கிறாள். மஹசேர் தலால் அவளைத் துரத்துவதுதான் காரணம். அவரிடமிருந்து தப்பிக்க மாணிக்கிடம் தஞ்சமடைகிறாள். மாணிக் அவளைத் தன் வீட்டில் இருக்க வைத்துவிட்டு தன் அண்ணனிடம் வந்து சொல்கிறான். சத்தி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். அவளுக்கும் தன் தன் தம்பி மாணிக்குக்கும் உறவு இருப்பதை விரும்பாத மாணிக்கின் அண்ணன், மஹசேர் தலாலிடமும் சத்தியின் கார்டியனிடமும் அவள் இங்கிருப்பதைச் சொல்லிவிடுகிறார். அங்கு வரும் இருவரும் சத்தியை இழுத்துச் செல்கிறார்கள். சத்தியின் வீட்டில் ஏற்படும் பிரச்சினையில் சித்தி மரணமடைகிறாள். இதைக் கேட்கும் மாணிக் பெரும் சோகம் கொள்கிறான். மஹசேர் தலாலை போலிஸ் தேடுகிறது. அவர் தலைமறைவாகிறார்.

மூன்றாவது கதை முடிவடைகிறது. இதில் பல்வேறு காட்சிகள் முதலிரண்டு கதையோடு பொருந்தி படத்திற்கு வேறொரு கோணத்தைத் தருகின்றன. முதலில் முக்கியமானது, மஹசேர் தலால் தலைமறைவாகியிருப்பது லில்லியின் வீட்டில். லில்லியின் தாய்க்கும் மஹசேர் தலாலுக்கும் இடையே உறவு இருக்கிறது. இதனால்தான் லில்லி தன்னாவுடன் சேர்ந்திருப்பதில் சுணக்கம் கொள்கிறாள். லில்லிக்கும் மாணிக்கிற்கும் இடையே ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. இதனால் லில்லி, ஜமுனவிற்கும் தன்னாவிற்கும் இடையே இருக்கும் காதலை உணரும் கணத்தில், வாஞ்சையுடன் ஜமுனாவின் தலையைத் தடவிக்கொடுக்கிறாள். இப்படி பல முடிச்சுகள் மூன்றாவது கதையில் அவழ்கின்றன. ரயில்வே ஸ்டேஷனில் மாணிக் சந்திக்கும் ஜமுனா அவனுக்கு ஒரு மாட்டின் லாடத்தைப் பரிசாகத் தருகிறாள். அதை பத்திரமாக, தன் பால்ய, இளமைக்காலத்தின் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறான் மாணிக்.

நண்பர்கள் பெரும் குழப்பத்திற்கும் ஆச்சரியத்திற்கும் ஆளாகிறார்கள். ரகுவீர் யாதவ் இனி கதையே வேண்டாம் என்று சொல்லி அழுது மாணிக்கைக் கட்டிக்கொள்ளுகிறான். நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டே, கதைகளில் சந்தேகம் கேட்டுக்கொண்டே, டீ குடிக்கச் செல்லுகிறார்கள். அங்கு ஒரு ஊனமுற்றவனைக் கொண்டு பிச்சை எடுக்க வருகிறாள் சத்தி. இவனைக் கண்ட நேரத்தில் அந்த இடத்தை விட்டு மறைகிறாள். அவளைத் தேடும் மாணிக் அவளைக் காணாமல் பெரும் குழப்பம் கொள்ளுகிறான். ஒரு குதிரை கட்டுக்கடங்காமல் பிடறி சிலிர்க்க ஓடி வருகிறது. தன் நினைவுகளில் இருந்து மீள்கிறான் ரகுவீர் யாதவ். படம் நிறைவடைகிறது.

மூன்று கதைகளில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று ஊடாடி முன்னர் சொல்லப்பட்ட கதைக்கு எதிரான புதிய புரிதலை ஏற்படுத்துகின்றன. முதல் கதையில் நாம் பச்சாதாபம் கொள்ளும் பாத்திரம் அடுத்த கதைக்குப் பின் அதன் எதிர்த்திசையில் நின்று கொள்கிறது. நாம் கோபம் கொள்ளும் பாத்திரம் மூன்றாவது கதைக்குப் பின் பாவம் கொள்ள வைக்கிறது. காட்சிகள் தொடங்கும்போதெல்லாம், அவை அதற்கு முன்னர் வந்த காட்சிகளின் நிறைவுப் பிரதிகளாக அமைந்து காட்சிகளுக்கு பெரும் கனத்தைச் சேர்க்கின்றன. இதை இயக்குநரின் உச்சபட்ச திறமை என்று சொல்லவேண்டும். இப்படி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக களம் கொள்ளும் கதை கடைசியில் இன்னொரு பெரும் யோசனையை கதை சொல்லிக்கும் நண்பர்களுக்கும் தருகிறது. அவர்கள் சத்தியை உயிருடன் பார்த்த நேரத்தில் அதுவரை சொல்லப்பட்ட கதையை எல்லாம் நாம் மீண்டும் யோசித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.

மாணிக் முல்லா கொள்ளும் மூன்றுவித பால் ஈர்ப்புகளும் அவற்றிற்குப் பின்னர் மிகப்பெரிய மறைபிரதியை வைத்திருக்கின்றன. அவற்றை தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர்கிறான் மாணிக் முல்லா. தன் மேல் காதலாக இருக்கும் லில்லி மணக்கப் போகும் தன்னா ஏற்கனவே ஜமுனாவுடன் காதலில் இருந்தவன் என்கிற உண்மை அவனுக்குத் தெரிவதால், லில்லி காதல் சொல்லும் நேரங்களில் மிக நிதானமாக அதை எதிர்கொள்ளுகிறான். வாழ்க்கை போடும் கோலங்களைப் புரிந்து கொள்ளுகிற கணத்தில் அவனுக்குக் காதல் மீது புதிய புரிதல் ஏற்படுகிறது. கடைசியில் சத்தியைப் பார்க்கும் நேரத்தில் அவன் மீண்டும் வாழ்க்கையைப் படிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவதை உணர்கிறான். அதுவரை தான் சொல்லும் எல்லாக் கதைகளும் தனக்கு முழுக்கப் புரிந்தது என்கிற ‘சொல்லும்’ நிலையிலிருந்து, தனக்கே புரியாத பிரதிகள் இன்னும் வாழ்க்கையில் வாசிக்கக் காத்துக்கிடக்கின்றன என்பதை உணர்கிறான் மாணிக்.

இப்படத்தின் வசனங்களின் தீர்க்கம் படத்தை மிக உன்னதமான கலைப்படைப்பாக மாற்றுகின்றன. முன்னுக்குப் பின் முரணான கதை சொல்லல் மூலம் தொடர்ந்து முடிச்சுகளை உருவாக்குவதும் அடுத்தடுத்த காட்சிகள் அதை அவிழ்ப்பதுமாக படத்தின் ஒவ்வொரு காட்சியும் மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. படம் பார்த்த முடிந்தவுடன் படத்தைப் பற்றிய சிந்தனையை யாரும் அத்தனை சீக்கிரம் விட்டுவிடமுடியாது. உண்மையில் மேலும் மேலும் சிந்திப்பதையும் மறைந்து கிடக்கும் வாழ்க்கையின் பிரதிகளையும் வாசிப்பதையுமே இப்படம் முன்னிறுத்துகிறது.

அடைந்து கிடக்கும் ஒரு கதவைத் திறக்க அதனுள்ளே கதவுகள் பல திறந்துகொண்டே செல்லும் அனுபவம் போல ஒவ்வொரு கதைக்குள்ளும் செல்லும் நாம் மீண்டும் முதல் கதைக்கு வந்து அதன் வழியாக மீண்டும் அடுத்த கதைகளை அடைந்து கொண்டே இருக்கிறோம். வாழ்க்கை என்பதே இப்படி பல அறைகளைக் கொண்டதுதான்.

சூரியனின் ஏழாவது குதிரை, ஏழு குதிரைகளில் மெதுவாகச் செல்லக்கூடியதும் வலிமையற்றதுமாகும். ஆக, இந்தக் குதிரையே ஏழு குதிரைகளின் ஒட்டுமொத்த வேகத்தையும் நிர்ணயிக்கக்கூடியது. இப்படியே இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் மீதான நம் முடிவுகள் அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு கதாபாத்திரத்தை நிர்ணயிக்க, நாம் அதன் கடைசி இயக்கம் வரை காத்திருக்கவேண்டியிருக்கிறது. எப்படி சூரியனின் ஏழாவது குதிரை சூரியனின் வேகத்தை முடிவு செய்கிறதோ அதைப் போல.

ஷ்யாம் பெனகலின் இத்திரைப்படம் தந்த அனுபவம் மிக உன்னதமானது. முதல் முறை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, இரண்டாவது முறை லோக்சபா தொலைக்காட்சியில் பார்த்தபோது, நாம் ஒரு மிகச்சிறந்த இந்தியப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டேன். பத்து நிமிடம் பார்த்துவிட்டு அணைத்துவிடலாம் என நினைத்து நினைத்து, படம் முழுவதும் பார்த்து முடிந்த பின்பும் அதன் நினைவு என்னை விட்டு அகலவில்லை.

(கதையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதற்குச் சிறிய வாய்ப்பு இருக்கிறது. அப்படியே மாறியிருந்தாலும் கதை இதுதான். டிவிடி கிடைக்காததால் சரி பார்க்கமுடியவில்லை. மீண்டும் ஒருமுறை பார்க்க நேர்ந்தால், பெயர்களில் தவறு இருந்தால் திருத்தி வைப்பேன். கதையை இவ்வளவு விஸ்தாரமாக எழுதி வைப்பது பின்னர் யாருக்காவது (எனக்கும்!) உதவும் என்பதற்காக.)

Share

மீன்காரத் தெரு – புத்தகப் பார்வை

Thanks:AnyIndian.comமீன் விற்று வறுமையில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கைக்குள் நிகழும் போராட்டங்களை, ஜாதிய அடக்குமுறைகளை, வறுமையை முன்வைத்து பெண்கள் போகப்பொருளாக்கப்படும் விஷயத்தை மீன்காரத்தெருவின் மணத்தோடும் பாசாங்கில்லா மக்களின் வாழ்க்கை முறையோடும் முன்வைக்கிறது மீன்காரத் தெரு நாவல்.

வங்கப் பிரிவினை காலகட்டத்தில் நடக்கிறது நாவலின் களம். இது காலத்தைச் சொல்ல மட்டுமே பயன்படுகிறது. மற்றபடி வங்கப் பிரிவினை கதையில் நேரடிப் பங்கைச் செலுத்தவில்லை. கதை சொல்லல் எந்தவிதக் கட்டுக்கும் உட்படாமல் நினைத்தவாறு அங்கும் இங்கும் முன்னுக்கும் பின்னுக்கும் பாய்ந்து, தொடர்ச்சியின்மையின் மூலம் ஏற்படும் எதிர்பார்ப்பையும் கூட எடுத்துக்கொண்டு, முன் செல்கிறது. கதை மாந்தர்கள் அப்படியே ரத்தமும் சதையுமாக எந்த வித ஆபரணங்களுமின்றி யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். நாவலில் யாரும் நாயகனும் இல்லை, நாயகியும் இல்லை. எந்த நேரத்தில் கதை யாரைப் பிடித்துக்கொண்டு செல்கிறது என்று வரையறுக்கமுடியாதபடி மீன்காரத்தெருவின் ஒவ்வொரு நபரையும் தொற்றிக்கொண்டு செல்கிறது.

வறுமையும் தொழிலும் அதன் ஜாதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, கொஞ்சம் கூடப் பிரிக்கமுடியாத ஒன்று என்பது நாவல் நெடுகிலும் வலியுறுத்தப்படுகிறது. பங்களாத் தெருவில் வாழும் மனிதர்கள் மேட்டிமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாழ்வு தங்கத்தாலும் பன்னீராலும் அத்தராலும் மணக்கும் திரவியங்களாலும் தினம் ஒரு பெண்களாலும் ஆனது. மீன்காரத் தெருவில் இருக்கும் பெண்கள் வயதுக்கு வரும்போது பங்களாத் தெருவில் இருக்கும் பெரியவர் வீட்டுக்கு வேலைக்கு வருகிறார்கள். அந்தப் பெண்களுக்கு சில நாள்களிலெல்லாம் பெரியவர் செலவிலேயே, பணமும் பொருளும் கொடுக்கப்பட்டு, திருமணமும் செய்துவைக்கப்படுகிறது. இடைப்பட்ட காலங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து உலவும் புனைவுகள் பங்களாத் தெருவின் வாழ்க்கையை நமக்கு விவரித்துவிடுகிறது. பெரியவரின் அதே வாழ்க்கை முறையை அவரது மகன் சலீமும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். வைப்ப்பாட்டியாக இருந்தால் கூட அவன் மேற்கொள்ளும் காதல் லீலைகள், வைப்பாட்டியாக அனுப்பப்பட்டிருக்கும் பெண்களின் மனதில் பெரிய சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்துவிடுகின்றன. சலீமின் தோற்றத்திலும் அவன் பேசும் மலையாளத்திலும் வைப்பாட்டியாக இருக்கக்கூட பெண்கள் பெரும் ஆர்வம் கொள்ளுகிறார்கள்.

ஆமினாவை முக்கியமான கதாபாத்திரமாகக் கொள்ளலாம். அவளும் சலீமின் மேல் அளவு கடந்த அன்பு வைத்து நெக்குருகுகிறாள். அப்படி அவனுடன் ஏற்படும் வாழ்வு நிலையில்லாதது என்று தெரிந்தும் அவளால் அவன் மேல் ஏற்படும் அளவு கடந்த ஈர்ப்பைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிறுவயதில் உடன் படிக்கும்போதிருந்தே அவளுக்கு அவன் மீது அளவில்லா ஈர்ப்பு. வாழ்க்கை தரும் ஏகப்பட்ட நெருக்கடிகளையும் மீறி அவள் அவன் நினைவிலிருந்து மாறுவதேயில்லை. பின்னர் ஒரு நேரத்தில் அவனும் அப்படிச் சொல்கிறான். அப்படிப்பட்ட ஒரு வேளையில் அம்பன் குதிரைவண்டி மீன்காரத்தெருவிற்கு வரும்போது முகமலர்ச்சியுடன் பெரியவர் வீட்டிற்குச் செல்கிறாள். இத்தனைக்கும் ஆமினா எட்டாவது வரையில் படித்தவள். மோக வேளையில் சலீம் சொன்ன வார்த்தைகள், பாங்கு ஓசை கேட்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் தழுவிக் கிடந்த தீவிரமான காம நிமிடங்கள் எல்லாமே பொய் என்பதை உணர்கிறாள், அவளுக்கும் பெரியவர் திருமணம் நிச்சயம் செய்யும்போது. மீன்காரத் தெருவில் வயசுக்கு வரும் பெண்களை தேடிப்பிடித்து பங்களாவிற்குக் கூட்டிச் செல்லும் ரமீஜா, பங்களாவில் இதெல்லாம் சகஜம் என்று ஆமினாவுக்கு அறிவுறுத்துகிறாள். அதுமட்டுமின்றி சலீமிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து அவனுக்கென ஒரு குடும்பம் இருப்பதையும் கூறுகிறாள். ஆமினாவால் இதையெல்லாம் அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.

நைனா ஆமினாவின் அண்ணன். சமூகத்தின் ஏற்ற இறக்கங்களில் கடும் கோபம் உள்ளவன். எல்லாரும் இஸ்லாமியர்கள் என்னும்போது ஏன் இத்தனை வேறுபாடு என்பதில் பங்களாத் தெருவின் மீதில் அதீத வெறுப்பில் இருப்பவன். எப்போதும் குடியும் கேள்வியுமாகத் திரியும் நைனாவிற்கு வேற்று மதப் பெண் வள்ளியோடு தொடுப்பு உண்டு. ராவுத்தர் நல்ல நிலையிலிருந்து வறுமையில் விழுந்து நாதியற்று மீன்காரத் தெருவிற்கு வாழ வரும்போது அங்கு சென்று வம்பு செய்யும் நைனா அவரிடம் அவர் பெண் ஆயிஷாவைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கவும் கேட்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம், மீன்காரத் தெரு பெண்கள் பங்களாவுக்கு போனால், அங்கிருந்து ஒருத்தி ஏன் மீன்காரத் தெருவுக்கு வாக்கப்பட்டு வரக்கூடாது என்பது. மிக எளிமையான நேரடியான ஆனால் சமூகம் பதிலிறுக்கமுடியாத கேள்வி. நைனாவோடும் ஆமினாவோடும் சேர்த்து ஹிந்து மதத்தில் இருக்கும் ஜாதி வேறுபாடுகளும் காட்டப்படுகிறது. நாவிதன் துருத்தியின் மகன் சண்முகம் பெருமாள் கோவில் அர்ச்சருக்கு ‘சவரம்’ செய்யும்போது அவரது ஆண்குறியை அறுத்துவிட்டுத் தலைமறைவாகிறான். ஆமினாவுக்கு பாடம் சொல்லித் தரும் மருதமுத்து அய்யா, பள்ளியில் நிலவும் தீவிரமான ஜாதி வேறுபாட்டைக் கண்டித்து மாற்றல் வாங்கிக்கொண்டு போகிறார். ஒருதடவை ஆமினா பேருந்து நிலையத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட, அவளுடன் படித்த, இரண்டு ஹிந்து மத நண்பர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள்.

ஹனீபா ராவுத்தரின் சொத்தையெல்லாம் லெபைக்காரர்கள் வேண்டுமென்றே கேஸ் போட்டுப் பிடுங்கிக்கொண்டார்கள் என்கிற கோபம் ஹனீபா ராவுத்தருக்கு இருக்கிறது. அவரது மகள் ஆயிஷாவும் தாங்கள் லெபைக்காரர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்றே தீவிரமாக நம்புகிறாள். பங்களாத் தெரு சீக்கிரமே லெபைக்காரர்களின் தெருவாகப் போகிறது என்று நினைக்கிறார் அவருக்கு வீடு பார்த்துத் தரும் ஷேக்காத்தா.

நைனாவின் மனைவி மும்தாஜ் நைனாவின் முரட்டுத்தனம் தாங்காமல் அவனை விட்டுப் பிரிந்து சென்று வேறு கல்யாணம் செய்துகொள்கிறாள். இத்தனைக்கும் அவள் நைனாவிற்கும் வள்ளிக்கும் பிறக்க இருந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள சம்மத்தித்தவள். நைனா கருகமணி கட்டி வள்ளியை கட்டிக்கொள்கிறான். வள்ளி இறக்கும்போது அவளை நைனாவின் மனைவியாக ஏற்க மறுக்கிறார் முத்தவல்லி. ஆனால் மீன்காரத் தெருவே சேர்ந்து நின்று அவளை அடக்கம் செய்து, அவளை வள்ளி பீவியாக்கி, ‘அவளுக்கு ஜியாரத் செய்யக்கூட’ தயாராக இருக்கும் அளவிற்குப் போகிறது.

மீன்காரத் தெரு பெண்கள் எப்படி பங்களாவிற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இயங்கும் கதை, அதற்கு முக்கியக் காரணமாக ஜாதியையும் வறுமையையும் முன்வைக்கிறது. ஜாதியும் வறுமையும் ஒன்றோடு ஒன்று இயைந்தது என்பதை சேக்காத்தா ஒரு கட்டத்தில் சொல்கிறாள். அதே வேளையில் எப்படி லெபைக்காரர்கள் ராவுத்தர்களின் இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் சொல்கிறாள். ஆனால் மீன்காரத் தெரு காரர்களுக்கு அந்த விடிவே இல்லை என்கிற ஆதங்கமும் ஏக்கமும் அவள் பேச்சில் தெறிக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல, நைனா, காசிம், ஆமினா என எல்லாருக்கும் அதே எண்ணமும் கையலாகாத் தனமும் இருக்கின்றன. “கலிமா சொல்லி குரான் வழி நடக்குற எல்லாமே முஸல்மானுங்கதே. அவுங்களுக்குள்ள ஜாதியோ பிரிவோ கிடையாதுண்டு சொல்லியிருந்தாலும் ஏதோ ரூபத்துல ஜாதி இருக்கத்தாஞ் செய்யிது” என்கிறாள் சேக்காத்தா.

மீன்காரத் தெரு பெண்கள் இரவில் கணவன்மார்கள் தூங்கியபின்பு பேசும் பேச்சுகள் மிகுந்த சுவாரஸ்யம் உள்ளவை. அசிங்கமான, விரசமான பேச்சாக அவை வெளிப்பட்டாலும், அதனூடே அந்த மக்களின் வெகுளித்தனத்தை அவை முன்வைக்கின்றன. ஆமினாவும் சலீமும் கொள்ளும் காதல் விளையாட்டுக்களின் விவரணையில் ஆமினா எவ்வளவு தூரம் சலீமை விரும்புகிறாள் என்று நமக்கு உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் இந்த வாழ்வு நிரந்தரமானதல்ல என்று தெரிந்தும் அவள் கொள்ளும் அன்பு அவள் மேல் ஒரு பச்சாதபத்தைக் கொண்டு வந்துவிடுகிறது. அதேபோல் காசிம் தன் மனைவியின் அருமை தெரிந்தவனாகச் சித்தரிக்கப்படுவது, நமக்கு பெரிய ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. ஜாதி, ஏமாற்றங்கள், சாவு எனச் செல்லும் கதையில் இப்படி ஒரு தெளிந்த நீரோடை போன்ற அன்பைப் பார்க்கும்போது சில்லிப்பு ஏற்படுகிறது.

இஸ்லாமியர்களின் வட்டார வழக்கு அத்தமிழின் இனிமையை நமக்குச் சொல்கிறது. வட்டார வழக்கில் அதிகமான இஸ்லாமிய வார்த்தைகள் சேர்த்துக் குழப்பாமல், அதே சமயம் யதார்த்த வட்டார வழக்கும் சிதைவுபடாமல் எழுதியிருக்கிறார் கீரனூர் ஜாகிர் ராஜா.

நாவலை பெரிய நாவலாக 400 பக்கங்களுக்கு மேல் எழுத முடியுமென்றாலும், தமிழ் நாவலின் தடித்த கட்டமைப்பை உடைத்து, சொல்லாமல் விடப்பட்டவற்றின் மூலம் வாசகனின் தவிப்பை அதிகப்படுத்துவதே குறுகிய பக்கங்களில் (104 பக்கங்கள்) நாவல் வந்ததன் காரணம் என்கிறார் ஆசிரியர் கீரனூர் ஜாகிர் ராஜா. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். எந்த வித தொடக்கம் முடிவு என்பன போன்ற சடங்குகளையும் தகர்த்தெறியும் இந்நாவல் 400 பக்கங்களில் இன்னும் விஸ்தாரமாகவே எழுதப்பட்டிருக்கலாம் என்ற நினைப்பைத் தவிர்க்கமுடியவில்லை.

ஜாதிகளை கடக்க மீன்காரத் தெருவையும் கடந்தே தீரவேண்டும்.

மதங்களின் மீதான விமர்சனமாக, அம்மதங்களின் மீது பற்றுள்ளவர்கள், அம்மதங்களுக்குள்ளிருந்தே செய்யும் தீவிர எதிர்ப்புகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. மதத்திலிருந்து வெளியேறி அதன் மீது விமர்சனம் வைப்பதற்கும் உள்ளிருந்துகொண்டு, மதத்தை ஏற்றுக்கொண்டு, அதில் நிலவும் பாகுபாடுகளின் மீது விமர்சனம் வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் மிக முக்கியமானது. முதலாவதை எளிதில் மதத்தின் நம்பிக்கையாளர்கள் புறக்கணிப்பதைப் போல இரண்டாவதை புறக்கணிக்கமுடியாது. மேலும் மதத்துக்குள்ளிருந்தே வரும் எதிர்ப்புகளே மதத்தை காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றும் தன்மையுடையதும் மேலும் முன்னகரச் செய்வதும் ஆகும். இதற்கு வழிவிடாத எம்மதமும் அதன் நம்பிக்கையாளர்களை தன் கொடிய கரத்தோடு துரத்துவதாகவே என்னால் கற்பனை செய்யமுடியும். மதத்தை மீறியது தனிமனித சுதந்திரமும் தனிமனித மரியாதையும். இதை நிலைநிறுத்த மறுக்கும் எம்மதமும் கேள்விக்குட்பட்டாக வேண்டிய ஒன்றே. அந்த வகையில் இந்நாவல் மிக முக்கியமான பிரதியாக காலப்பிரதியாக மாறுகிறது.

மீன்காரத் தெரு, கீரனூர் ஜாகிர் ராஜா, விலை: 60.00 ரூபாய், 144 பக்கங்கள், மருதா பதிப்பகம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: AnyIndian.com

Share

சில கவிதைகள்

புதுஎழுத்து

நீண்ட வாக்கியங்களில்
நம்பிக்கையற்றுப் போனபோது
வார்த்தைகளில் விழுந்தேன்
அவையும் அதிகமென்றானபோது
எழுத்துகளைப் பிடித்துக்கொண்டேன்
ஒற்றையெழுத்துகளும் சலித்தபோது
மொழியின் போதாமையில்
என்னை புதைத்துக்கொண்டது மௌனம்
மௌனத்தின் வசதியின்மையில்
உருவாகிறது என் மொழி

யாருமற்ற தனிமை

அடைந்து கிடந்த அறையினுள்ளிருந்து
முதலாமவன் வெளியேறினான்
அவன் சொன்ன வார்த்தைகளை நினைவூட்டி
அவனுக்கு முகமன் கூறினார்கள் மற்றவர்கள்
இரண்டாமவன் போனபோது
அவன் நற்செய்கைகளை காட்டி
வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்தார்கள்
மூன்றாமவன் போனபோது
சந்தோஷமான நிமிடங்களை
நான்காமவன் நினைத்துக்கொண்டான்
கடைசியாக அவனும் விடுவித்துக்கொண்டபோது
தனித்து விடப்பட்டது அந்த அறை

அடைந்து கிடந்தபோது
அவர்கள் பரிமாறிக்கொண்ட
அன்பான வார்த்தைகளை விட்டுவிட்டு
அவர்களைச் சொல்லி
திட்டிக்கொண்டிருந்தது அறை

சின்னஞ்சிறு கவிதைகள்

சிதைப்புகையை
ஆழ்ந்து உள்ளிழுக்க,
இனியென்னை
வாழ்வெங்கும்
துரத்தப்போகும்
மணம்

-oOo-

ஒரு பூனையின் நிமிடங்கள்
ஒரு எலியின் நிமிடங்கள்
ஒரு பூனை மற்றும் எலியின் நிமிடங்கள்
முடிந்துவிடுகிறது பேருலகம்

-oOo-

தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்

-oOo-

வீடெங்கும் தவழும்
இசையில் இருப்பதில்லை
ஆயத்தமற்ற
நொடிக்கோபத்தில் விளையும்
அமைதியின் குறிப்புகள்

-oOo-

Share