Archive for ஹரன் பிரசன்னா

மொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3)


ஒபாமா ப்ராக் புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட அரவிந்தன் பெற்றுக்கொண்டார். ஆயில்ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட தமிழ் சுஜாதா பெற்றுக்கொண்டார்.

ஆர். முத்துக்குமார் எழுதிய ஒபாமா பராக் புத்தகத்தைப் பற்றி சந்திரமௌலி பேசினார். ஒபாமாவின் வெற்றிக்கான உழைப்பு, அமெரிக்காவின் தேர்தல் முறை என்பதைப் பற்றி ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். ஒபாமாவின் வெற்றி, அவர் கருப்பர் என்பதற்காகக் கிடைத்த வெற்றியல்ல என்றார். அவர் தன்னை கருப்பர் என முன்வைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒபாமாவைப் பற்றிய பல்வேறு புத்தகங்களின் எஸென்ஸ் இந்தப் புத்தகம் எனக் குறிப்பிடும் வகையில், ஒபாமா பற்றி இல்லாத தகவல்களே இப்புத்தகத்தில் இல்லை என்று பாராட்டினார். புத்தகத்தின் குறைகளையும் குறிப்பிட்டார். புத்தகத்தில் உள்ள சில எழுத்துப் பிழைகளையும், ஃபார்மட்டிங் பிழைகளையும் குறிப்பிட்டார். இன்னும் நல்ல எடிட்டிங் இருந்திருக்கவேண்டும் என்றும் சொன்னார். கிழக்கு வெளியிட்டிருக்கும் மற்ற புத்தகங்களின் தரத்தில் இருந்து, எடிட்டிங்கை மையமகா வைத்து, இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றார். ஆனால் இத்தகைய சிறிய குறைகள், புத்தகத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் இக்குறைகள் களையப்படவேண்டியவை மட்டுமெ என்றும் குறிப்பிட்டார். பதிலளித்த பத்ரி, சந்திரமௌலி குறிப்பிட்ட பல பிழைகள் ஏற்கெனவே களையப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். உண்மையில் சந்திரமௌலி போன்றவர்கள் முன்வைக்கும் இக்குறைகள் நிச்சயம் பதிப்புக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உருப்படாதது நாராயணனும் பா.ராகவனும், ஒரு சிறிய மாற்றம் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார்கள். முதலில் பன்னிரண்டு நிமிடங்கள் (அது என்ன பன்னிரண்டு நிமிடக் கணக்கு எனத் தெரியவில்லை) நாராயணன் பேசுவார், பின்பு நாராயணனும் ராகவனும் கலந்துரையாடுவார்கள். பின்பு எல்லாரும் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல். இதுதான் விஷயம். நாராயணன் பேசியது, பின்பு அவர் பதில் சொன்னது எல்லாம் சேர்த்தால் 90 நிமிடங்கள் வருமென்றால், அதில் அவர் பேசிய நிமிடங்கள் 50 இருக்கலாம். மீதி 40 நிமிடங்கள் பேச ஆயத்தமாவது, மூச்சு இழுத்து விட்டுக்கொள்வது, ஆள்காட்டி விரலால் மூக்கின் கீழே நெருடிக்கொள்வது, தொண்டையைக் கனைத்துக்கொள்வது என்பது போன்ற கமல்தோஷத்தில் செலவழிந்தன. ஆனால் பேசிய நிமிடங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார். எண்ணெய் அரசியலோடு, உலக அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஆர்வம், அறிவு என்னை வியக்க வைத்தது. பொது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியான அணுகுமுறையில் பதில் சொன்னார். ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றியதாக அவருடைய பேச்சு அமையாமல், ஒரு ஒட்டுமொத்த, அமெரிக்கா சார்ந்த/சம்பந்தப்பட்ட அரசியலை முன் வைத்ததாக அமைந்தது. புத்தகத்தில் குறை சொல்லவேண்டியது சம்பிரதாயம் என்றவர் புத்தகத்தில் உள்ள ஒருசில குறைகளைச் சொன்னார். புத்தகத்தில் உள்ள ஓர் அச்சுத்தவறைச் சொன்னவர், புத்தகத்தின் போதாமையாகச் சொன்னது, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு என்பதைப் பற்றி.

பின்பு எல்லோரும் பங்குபெறும் கலந்துரையாடல் ஆரம்பித்தது. பத்ரியின் முதல் கேள்வியே, நாராயணன் சொன்ன, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு, இந்தியா எப்படி அதை எதிர்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியது. பத்ரி கேட்ட இரண்டு நிமிடக் கேள்விக்கு, பாரா 20 நிமிடங்கள் பதில் அளித்தார். (பாராவிற்குப் பேசத் தெரியாது என்று ஏற்கெனவே நாம் அளித்த செய்தி நினைவில் இருக்கலாம்.) ஆரம்பிக்கும்போது, ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றி, ரிப்பன் பக்கோடாவைக் கொறித்துக்கொண்டே ஆரம்பிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி, தனக்கும் தமுஎச-விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருள் பற்றிய விவாதத்தில், சில விஷயங்கள் இன்று பரிசோதனை முயற்சியில் இருந்தாலும், இன்னும் ஒரு 50 வருடங்களுக்காகவது பெட்ரோலின் தேவை இருந்தே தீரும் என்றார். ஏகப்பட்ட கேள்விகள் இந்த எண்ணெய் அரசியலைப் பற்றி எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் பாரா, நாராயணன், பத்ரி ஆகியோர் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அணு சக்தி என்பது பெட்ரோலுக்கு முழுமாற்றாகமுடியுமா என்ற கேள்விக்கு, அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றார் நாராயணன்.

சத்யா (எம்.டி, நியூ ஹொரைசன் மீடியா), நம்நாட்டில் ஏகப்பட்ட சூரிய சக்தி இருக்க, அதற்கு இதுவரை எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இப்போதாவது இதில் கவனம் செலுத்துவோமா, அது சரியாக வருமா என்றார். அதில் இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போது அதில் இந்திய அரசின் கவனம் குவிந்திருக்கிறது என்றும் நாராயணன் சொன்னார். ஆனால், அணு ஆயுதத்தில் நம் கவனம் இருக்குமளவிற்கு சூரிய சக்தியில் நம் கவனம் இதுவரை இருக்கவில்லை என்றும், தற்போது இருக்கும் கவனமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதுதான் என்றும் சத்யா சொன்னார்.

எண்ணெய் அரசியலின் மீதான கேள்விகள் மிக நீண்டு கொண்டிருக்க, கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லிவிடும் அபாய முடிவிற்கு முத்துக்குமார் சென்ற நேரத்தில், அவரிடம் நான் கேள்வியைத் துவக்கி வைத்தேன். ஏற்கெனவே இரண்டு ஒபாமா புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆர்.முத்துக்குமார் எழுதியிருக்கும் புத்தகத்தின் தேவை என்ன, அது மற்ற புத்தகங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது என் கேள்வி. அதை தான் எழுதிய ஒரு காரணத்திற்காகவே அனைவரும் வாங்கவேண்டும் என்று சொல்லி, பேச்சுக்கலையில் திராவிடப் பாரம்பரத்தியின் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து, மற்ற புத்தகங்கள் ஒபாமாவைப் பற்றி மட்டும் சொல்லிநிற்க, தனது புத்தகம் ஒபாமாவோடு அமெரிக்காவின் அரசியலையும், தேர்தல் முறையையும் முன் வைக்கிறது என்றார். தொடர்ந்து பதிலளித்த பாரா, ஒரு வாழ்க்கை வரலாறு என்பது அவர் பிறந்தார், வென்றார், இறந்தார் என்று சொல்வதல்ல; மாறாக, எந்த முறையில், எந்த இடத்தில் ஒருவரின் வெற்றியும், முக்கியத்துவமும் இருக்கிறது, அதன் பின்னணி என்ன என்பனவற்றை விளக்குவதிலேயே இருக்கிறது, அதை இப்புத்தகம் தெளிவாகச் செய்திருக்கிறது என்று அப்புத்தகத்தின் எடிட்டர் என்கிற முறையில் பதில் சொன்னார். தொடர்ந்து ஒபாமா பற்றிய விவாதங்கள் களைகட்டின. ஒபாமா வென்றதுக்குக் காரணம், கருப்பர்கள் வெறித்தனமாக வருக்கு வாக்களித்ததே என்றார் லக்கிலுக். அது மட்டுமே காரணமல்ல என்று விளக்கினார் பத்ரி. ஸ்ரீகாந்த் இது தொடர்பான தனது கருத்துகளையும் சொன்னார். ஸ்ரீகாந்த் ஒபாமாவை அண்ணன் ஒபாமா என்றார். வைகோ சந்தித்தது ஒபாமாவையா, ஸ்ரீகாந்தையா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துவிட்டது. அமெரிக்கா எந்த நாட்டில் தனக்கு லாபம் வருகிறதோ அங்கு மட்டுமே உதவி என்ற போர்வையில் உள்ளே செல்லும் என்று கிட்டத்தட்ட அனைவரும் சொன்ன நிலையில், அதற்கும் சில எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா அழித்த நாடுகளும் உண்டு, அமெரிக்காவால் வாழ்ந்த நாடுகளும் உண்டு என்றார் ஸ்ரீகாந்து. உதாரணமாக ஜப்பான் என்றார். லாபத்திற்காக மட்டுமே அமெரிக்கா ஒரு நாட்டிற்காகச் செல்லும் என்றால், வியட்நாமை எந்த வகையில் சேர்ப்பது என்றார் சத்யா. ஒரு சில விலக்குகள் நீங்கலாக, அமெரிக்காவின் குணம் அதுவே என்றார் பாரா. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவியது தனது குற்ற உணர்விற்காக என்றார் பத்ரி. ஒபாமா மீது நிறைய எதிர்பார்ப்பு எல்லாருக்குமே உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும், அமெரிக்காவின் இன்றைய நிலையை மேம்படுத்தினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி என்று ஒபாமாவின் தம்பி நம்பிக்கையாகச் சொன்னதோடு கூட்டம் முடிவடைந்தது.

ஒபாமாவின் வெற்றிக்கு அவர் பையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் படமே காரணம் என்ற செய்தி உண்மைதானா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு ஏன் அனைவரும் அப்படி சிரித்தார்கள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு: நேசமுடன் வெங்கடேஷ் பின்நவீனத்துவப் பாணி கேள்வி (அது கேள்வியாக இல்லாமல் பதிலாகவும் இருக்கலாம்!) ஒன்றை எழுப்பினார். அதைப் பற்றி தனியாக ரூம் போட்டு யோசிக்க உத்தேசித்திருக்கிறேன்.

Share

மால்கம் எக்ஸும் நிறைய எக்ஸ்களும் (நாள் 2)

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகத்தை சோம வள்ளியப்பன் வெளியிட ’உருப்படாதது’ நாராயணன் பெற்றுக்கொண்டார். மால்கம் எக்ஸ் புத்தகத்தை பா.ராமசந்திரன் வெளியிட நேசமுடன் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.

சோம வள்ளியப்பன் யுவ கிருஷ்ணாவின் (லக்கிலுக்) ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தக்த்தைப் பற்றிப் பேசினார். விளம்பரங்களைத் தயாரிப்பதில் விளம்பர ஏஜென்ஸிகளின் பங்கு, ஒரு விளைபொருள் (ப்ராடக்ட்) வெற்றியில் விளம்பரங்களின் பங்கு, அதன் தோல்வியில் விளம்பரங்களின் பங்கு, நெகடிவ் விளம்பரங்களின் வெற்றி, விளம்பரங்களில் நேரும் போட்டி (உதாரணமாக கோக் Vs பெப்சி, ஹார்லிக்ஸ் Vs காம்ப்ளான்) எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். நல்ல விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் ஒரு விளம்பரமாக, பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த சிறிய மொபைல் போனுக்கான விளம்பரத்தைக் குறிப்பிட்டார். ஒரு பெண் மொபைல் பேசிக்கொண்டிருக்க, தன்னுடன் பேசுவதாக நினைக்கும் ஒருவர் எழுந்து வரவும், அவரிடம் ‘ஒன் காஃபி ப்ளீஸ்’ (என்று நினைக்கிறேன்) எனச் சொல்லும் விளம்பரம் அது. (அந்த விளம்பரத்தில் எனக்குப் பிடித்தது, அந்த மனிதர் முகம் அடையும் பாவங்கள். சிறந்த நடிப்பு அது.) லக்கிலுக்கின் இப்புத்தகம் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும், பல்வேறு விஷயங்களை லக்கிலுக் எழுதியிருப்பதாகவும் பாராட்டினார். ஒரு சிறிய குறையாக, எப்படி சிறந்த விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எப்படி விருது வழங்குகிறார்கள் என்பதைப் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதியிருக்கலாம் என்றார். சிறந்த நடையில் புத்தகம் எழுதியிருப்பதாக லக்கியைப் பாராட்டினார். (சோம வள்ளியப்பன் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நேற்றைய கூட்டத்தில் அவர் இன்னும் சிறப்பாகப் பேசுவார் என எதிர்பார்த்தேன். அவர் பேச்சில் ஒரு கோவை இல்லை என்பதே மிகப்பெரிய குறை.)

பா. ராமசந்திரன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) மருதனின் மால்கம் எக்ஸ் புத்தகத்தைப் பற்றிப் பேசினார். தமுஎச-வின் மாநாடு தற்போதுதான் முடிவடைந்திருந்ததால் தான் மிகவும் பிஸியாக இருந்ததாகவும், ஆனாலும் மால்கம் எக்ஸ் புத்தகம் என்பதால் தான் பேச ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் பேச வருவதற்கு முன்பாக எல்லாரும் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பேச ஆரம்பித்த பா.ராமசந்திரன் (பாரா என்று வந்தாலே இப்படி எதாவது சொல்லி பேச ஆரம்பிப்பார்கள் போல!) தான் பேச வரும்போது யாரும் சிப்ஸ் கொறித்துக்கொண்டிருக்கக்கூடாதே என்று நினைத்ததாகச் சொன்னார். காரணமாக, ‘மால்கம் எக்ஸை சிப்ஸ் கொறித்துக்கொண்டு பேசமுடியாது’ என்று சொல்லி, தான் தமுஎச-வின் தீவிர உறுப்பினர் என்பதை நிரூபித்தார். இன்னும் சிறிது நேரத்தில் காப்பி வருமே என நினைத்துக்கொண்டேன். [’ஹிந்துமத வெறியன் கோட்ஸே காந்தியைக் கொன்ற போது அவர் ஹே ராம் என்று சொல்லி இறந்ததுபோல’ என்றெல்லாம் பேசினார். கோட்ஸே ஹிந்துமத வெறியன். அதில் விவாதமில்லை. ஆனால் காந்தி இறந்தபோது ஹே ராம் என்று சொன்னாரா இல்லையா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது இப்போது தேவையா என நினைக்கலாம். தமுஎச என்று வந்துவிட்டாலே என்ன வேண்டுமானாலும் எழுத வந்துவிடுகிறது. :-)] பா.ராமசந்திரன் மால்கம் எக்ஸின் வாழ்க்கையை, அவர் கறுப்பினத்தவராகப் பிறந்து அடைந்த அவமானங்களை, வலியை விவரித்தார். இனவெறியை எங்கும் பரப்பும் அமெரிக்காவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட மால்கம் எக்ஸை வானளாவப் புகழ்ந்தார். ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று நூலில் இருந்ததைப் பார்த்தபோதே, மால்கம் எக்ஸ் இஸ்லாமியராக மாறுவார் என எதிர்பார்த்ததாகச் சொன்னார். முதல் அத்தியாயத்திலேயே சுட்டு வீழ்த்தப்படும் மால்கம் எக்ஸ் புத்தக்த்தை சிறப்பாக எழுதியிருப்பதாக மருதனைப் பாராட்டினார். புத்தகத்தில் எவ்விதக் குறையையும் பா.ராமசந்திரன் வைக்கவில்லை. மால்கம் எக்ஸை ஒரு புனித பிம்பமாகவே நிறுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

பின்னர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். பத்ரி மருதனிடம் நிறையக் கேள்விகள் கேட்குமாறு ஊக்குவித்தார். மால்கம் எக்ஸைப் பற்றி கூட்டத்துக்கு வந்திருந்த ஏகப்பட்ட மிஸ்டர் எக்ஸ்கள் கேள்வி கேட்டார்கள். விளம்பரப் பிரியர் யுவகிருஷ்ணாவை கேள்வி கேட்காதவர்களே இல்லை எனலாம். தொடர்ந்து விளம்பரங்கள் பற்றியும், விளம்பர ஏஜென்ஸிகள் பற்றியும் கேள்விகள். எல்லாவற்றிற்கும் லக்கிலுக் பொறுமையாகப் பதில் சொன்னார். அனைவரும் பொறுமையாகக் கேட்டார்கள். விளம்பரங்களில் ‘செலிபிரிட்டியை ஏன் விளம்பரங்களில் போடவேண்டும்’ என்கிற கேள்வியும், ‘கருப்பு நிறத் தோல்’ பற்றிய கேள்வியும் சில விவாதங்களை எழுப்பின. (கருப்பு வேண்டாம் என்று சொல்கிறோமே, ஆனால் டை (மயிர்ச்சாயம்) அடிக்கும்போது மட்டும் கருப்பை வேண்டுகிறோமே, அது எப்படி என்று ஒரு நண்பர் கேட்டபோது, அவரது பேரல்லல் திங்கிங்கை நினைத்து கூட்டமே அசந்துவிட்டது! அந்த நண்பர் எங்கள் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் என்பது ஜெனெரல் நாலெட்ஜுக்காக மட்டும் இங்கே.) மருதனை மறந்துவிட்டார்கள். ஒரு எக்ஸ் ஏன் அரசியல்வாதிகளை வேட்டி விளம்பரங்களில்கூட பயன்படுத்துவதில்லை என்றார். அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் தரமாட்டார்கள் என்றார் லக்கி. ஆனால் உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்தேன். அரசியல்வாதிகளை நம்பி வேட்டி விளம்பரங்களை எடுத்தால், அவர்கள் வேட்டியை உருவிக்கொண்டு சண்டைக்கு நிற்கும்போது விற்பனை பாதிக்கப்பட்டுவிடும் என்று விளம்பர நிறுவனங்கள் அஞ்சலாம் என்றேன். நல்ல அரசியல்வாதி யார் என்று ஒரு நிமிடம் யோசித்த லக்கி, தமிழருவி மணியன் எனச் சொன்னார். எங்கே கருணாநிதி பெயரைச் சொல்லிவிடுவாரோ என்று அந்த ஒரு நிமிடத்தில் நான் அடைந்த கலவரத்தைச் சொல்லி மாளாது. இந்த யுவனுக்குள் இருந்து பதில் சொன்ன கிருஷ்ணனுக்கு நன்றி. 🙂

பத்ரி மீண்டும் ஞாபகப்படுத்தி மருதனிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.. இன்னொரு ’நண்பர் எக்ஸ்’, இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து மருதன் எந்தத் தலைவரைப் பற்றி எழுதப்போகிறார் என்று கேட்டார். அவர் கேட்ட தொனி, இன்றைக்கு நல்ல தலைவர்களே இல்லையே என்கிற ஆதங்கத்தில். ஆனால் பத்ரி அப்படி எல்லாம் நிகழாது என்றும் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தலைவர்கள் உருவாவர்கள் என்றும் சொன்னார். (பத்ரி லெஃப்ட் விங்க் என்கிறார்கள்! ஆம், நிச்சயம் புரட்சி வரும்.) நான், மருதனே தலைவராகிவிட்டால் அவர் ஏன் புத்தகம் எழுதவேண்டும் என்றேன். அப்போதும் பத்ரி விடவில்லை, சுயசரிதை எழுதுவார் என்றார். (புரட்சி வந்தேவிட்டது!) கூட்டம் முடிவதற்கு முன்பாக மைக்கைப் பிடித்த பா.ராமசந்திரன், இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத நிறையப் பேர் இருப்பார்கள் என்றும், அதற்கான நம்பிக்கை உள்ளது என்றும், அந்த விதையை கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தில் விதைக்காவிட்டால் தனக்கு அன்றிரவு தூக்கம் வராது என்றும் சொன்னார். (இவர் தமுஎச என்கிறார்கள்.)

இப்படி கூட்டம் களையாக நடந்துகொண்டிருக்க ஒரு பெரிய விஷயம் நடந்தது. பலர் கவனிக்கவில்லை. ஏதோ ஒரு நண்பர் மட்டும் அதை படம் பிடித்தார். லக்கியின் இரண்டு கொலைவெறி ரசிகர்கள் ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்தில் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள். நான் கேட்க நினைத்த ஒரே கேள்வி இதுதான். ‘லக்கி, நீங்கள் இப்படி கையெழுத்து போடும்போது எப்படி உணர்ந்தீர்கள்?’ என்பதே. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்க முடியாமல் போயிற்று. அந்த இரண்டு கொலைவெறி ரசிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

’இன்னும் கேள்விகள் கேட்டால் நான் நிஜமாகவே பேசவேண்டியிருக்கும்’ என மருதன் அறிவிக்க இருந்த கணத்தில் கூட்டம் நிறைவடைந்தது.

இன்றைய கூட்டம்:

பாராவின் ஆயில் ரேகை புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார் நாராயணன். நிறையக் கேள்விகள் வரும் என்பதால் வீட்டில் கடுமையான பயிற்சியில் பாரா ஈடுபட்டிருக்கிறார். யாருக்கேனும் கேள்விகள் தேவைப்பட்டால் என்னைத் தனிமடலில் தொடர்புகொள்ளவும். ஆயில்ரேகை புத்தகத்தை எப்படி இஸ்லாத்துடன் இணைப்பது, அங்கிருந்து எப்படி பாராவை மதச்சண்டைக்குள் கொண்டுபோவது எனப் பல விஷயங்களைத் தயாரித்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு புத்தகம் ஒபாமா பராக் பற்றியது. இப்புத்தம் பற்றிய ஒரு பார்வையை லக்கிலுக் அவரது பதிவில் வைத்திருக்கிறார். அதைப் படித்துவிட்டு (புத்தகத்தையே படித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு) யார் வேண்டுமானாலும் முத்துக்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம்.

முக்கியமான விஷயம், கேள்விகள் கேட்பதன் பெயர் கலந்துரையாடல் என்பதாகும்.

Share

கொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் – நாள் 1)

வோல்ட்டேரின் கேண்டீட் நாவலை மாலன் வெளியிட இரா.முருகன் பெற்றுக்கொண்டார். சூஃபி வழி நூலை மாலன் வெளியிட ஜே.எஸ்.ராகவன் பெற்றுக்கொண்டார்.

மாலன் கேண்டீட் நாவலைப் பற்றிப் பேசினார். வோல்ட்டேரின் அறிமுகத்தோடு தொடங்கிய மாலன், கேண்டீட் நாவல் எழுதப்பட்டதன் நோக்கத்தை விவரித்தார். பின்பு பத்ரியின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பாராட்டிய மாலன், மொழிபெயர்ப்பின் எல்லையையும் மொழியின் போதாமையையும் பற்றிக் குறிப்பிட்டு, நாவலிலுள்ள சில பிழைகளைச் சுட்டிக்காட்டினார். நாவலின் ஓரிடத்தில் இப்படி வரும். ‘—–ஐக் கொட்டினாள்’ என்று. நான் கேண்டீட் நாவலைப் படித்தபோதே இதைப் பற்றி பத்ரியிடம் கேட்டேன். நாவலின் மூலப் பிரதியிலும் இப்படித்தான் இருக்கிறது என்று பத்ரி சொன்னார். மாலன் வேறொரு மூலத்தில், அவள் தண்ணீரைக் கொட்டினாள் என்றுதான் இருக்கிறது என்றார். ஆனால் பத்ரி மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டது வேறொரு ஆங்கில மூலத்தை. அதேபோல் கொலைகள் பற்றிய விவரணைகளை தவிர்த்துவிட்டு, பொதுவாக, ’படுகொலை செய்யப்பட்டார்’ என்று பத்ரி எழுதியிருக்கிறார், இது மொழிபெயர்ப்பாளரின் சுதந்திரம் என்றார் மாலன். இன்னொரு இடத்தில் ‘நயா பைசா’ என்று வருவதைச் சுட்டிக்காட்டிய மாலன், அக்காலத்தில் நயா பைசா என்று கிடையாது என்றார். (பின்பு சூஃபி வழி நூலை வெளியிட்டு பா.ராகவன் பேசினார். பத்ரியும் நாகூர் ரூமியும் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள்.) பின்பு பதிலளித்தபோது பத்ரி சில கருத்துகளைச் சொன்னார். சில இடங்களில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே தான் மொழிபெயர்த்துவிட்டதாகச் சொன்னார். பல்வேறு பிரிவுகளைக் கொண்ட பாதிரிகளைத் தனித்தனியாக குறிப்பிடாமல் ஒரே வார்த்தையாக பாதிரி எனக் குறிப்பிட்டது, பல்வேறி படிகளைக் கொண்ட ஜமீந்தார் முறைகளைத் தனிதனியாகச் சொல்லாமல் ஒரே வார்த்தையாக ஜமீந்தார் எனப் பயன்படுத்தியது என்பது போன்ற விஷயங்களை விளக்கினார். நாகூர் ரூமி ‘நயா பைசா’ என்பது சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்தார். இரா.முருகன் தன் கருத்தைத் தெரிவித்தபோது, டிரான்ஸ்லேஷனுக்கும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கும் டிரான்ஸ்கிரியேஷனுக்கும் (மொழிபெயர்ப்புக்கும் தழுவலுக்கும் எனக் கொள்ளலாம்) வித்தியாசங்கள் உண்டென்றும், மொழித் தழுவல் என்பது வெகு காலமாக நம்மிடையே உள்ளதுதான் என்றும் கருத்துச் சொன்னார். ஆனால் பத்ரி செய்தது மொழிபெயர்ப்புதான். அதனால் நயா பைசா என்பதை மாலன் சுட்டிக்காட்டியது சரியான குறையே என்பது என் எண்ணம். அதை அடுத்த பதிப்பில் சரி செய்யலாம். இந்த நாவலை மொழிபெயர்க்க ஏன் தேர்தெடுத்தீர்கள் என்று பத்ரியிடம் கேட்டபோது, தன்னாலும் மொழிபெயர்க்க முடியும் என்று தனக்கே நிரூபித்துக்கொள்ளவும், அதன் மூலம் நல்ல மொழிபெயர்ப்புகளை ஊக்கப்படுத்தவும் முடியும் என்பதாலும் என்றார். முதல் மொழிபெயர்ப்பு வாங்கிக்கொடுத்திருக்கும் நல்ல பெயரின் எக்ஸைட்மெண்ட் அடுத்தடுத்த மொழிபெயர்ப்புகளை நிச்சயம் கொண்டுவரும் என்று நினைக்கிறேன்.

சூஃபி வழி புத்தகத்தை வெளியிட்டு பாரா பேசினார். பேசத் தெரியாது என்றும் மைக் பிடித்து அதிகம் பழக்கமில்லை என்றும் நல்ல நகைச்சுவையோடு ஆரம்பித்த பாரா கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்குப் பேசினார். தான் சிறு வயதில் கண்ட சாமியார்களிடத்திலும் சூஃபித்தன்மையைப் பார்ப்பதாக தற்போது உணர்வதாகச் சொன்னார் பாரா. சிறந்த புத்தகம் ஒன்றைப் படித்த திருப்தியைப் பற்றிக் குறிப்பிட்ட பாரா, ஒரே இரவில் எப்படி இப்புத்தகம் அவரை உள்ளிழுத்துக்கொண்டது என்பதையும் குறிப்பிட்டார். ஆண்டாள், ராமகிருஷ்ணர் என யாரையும் பாரா விட்டுவைக்கவில்லை. எல்லாரிடத்திலும் சூஃபித் தன்மை உள்ளது என்றார். ராமானுஜரிடத்திலும் சூஃபித் தன்மையைக் கண்டார் பாரா. சென் பௌத்தம், இஸ்லாம், ஹிந்துமதம் என எந்த மதத்திற்கும் சூஃபித்தன்மைக்கும் தொடர்பே இல்லை என்றார். அதனாலேயே சூஃபி வழி என்கிற பெயரைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும், மதத்துக்கும் சூஃபிக்கும் தொடர்பில்லை என்று நம்பும் எந்தவொரு மனிதனையும் இப்புத்தகம் பாதிக்கும் என்றும் விளக்கினார் பாரா. சூஃபிகளின் சில வரிகளைப் பார்க்கும்போது, ரிக் வேதத்தோடு தன்னால் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது என்பதையும் விளக்கினார் பாரா. புத்தகம் மிகக் கடுமையாகவே அவரைப் பாதித்திருக்கிறது என்கிற உண்மையை உணரமுடிந்தது. அதற்குப் பின்பு சில கேள்விகளுக்கு நாகூர் ரூமி பதிலளித்தார். அரங்கம் எல்லாவித இறுக்கங்களையும் இழந்து, கலந்துரையாடலுக்கான ஒரு மன நிலையைப் பெற்றது நாகூர் ரூமி கேள்விகளுக்கு பதிலளித்தபோதே.

இஸ்லாமுக்கும் சூஃபியிசத்துக்கும் தொடர்பில்லை என்றார் நாகூர் ரூமி. இஸ்லாமியர்கள் இக்காலத்தில் சூஃபியிஸத்தை ஏற்கிறார்களா (கேட்டவர் நேசமுடன் ஆர். வெங்கடேஷ்) என்று கேட்டபோது, எக்காலத்திலும் இஸ்லாம் சூஃபியிஸத்தை ஏற்றுக்கொண்டதில்லை என்றார் ரூமி. அவனே உண்மை எனச் சொல்லவேண்டிய ஒரு சூஃபி, நானே உண்மை எனச் சொன்னதாகவும் (இதற்கான அராபியச் சொற்கள் மறந்துவிட்டன. ஒரு மோன நிலையில் சூஃபி இப்படி மாற்றிச் சொல்கிறார்), அவர் அதையே மீண்டும் மீண்டும் சொன்னதால் அவர் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் எறியப்பட்டார் என்றும் சொன்னார் நாகூர் ரூமி. இஸ்லாத்தின் கட்டுக்களிலிருந்து வெளிவர விரும்பும் ஒருவர் இஸ்லாமியராகத் தொடர நினைக்கும்போது உருவாகும் வெளியை சூஃபியிஸம் எனலாமா எனக் கேட்டேன். நாகூர் ரூமி சொன்ன பதில் சரியாக நினைவில்லை. சூஃபியிஸம் என்பதை எம்மதத்தோடும் தொடர்புபடுத்தவேண்டியதில்லை என்றார். ஹிந்து மதத்திலும் சூஃபித்தன்மையைக் காணலாம் என்றார். கபீர்தாஸ் ஒரு சூஃபி என்றார். ராமகிருஷ்ண பரமஹம்சரிசம் சூஃபித் தன்மையைக் காணலாம் என்றார். சூஃபிகள் சிலை வழிபாட்டை ஏற்கிறார்களா என்று கேட்டேன். கண்டிப்பாக ஏற்கவில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடம் சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்றார். அவரிடத்திலும் ஒரு சூஃபித்தன்மை குடிபுகுந்துவிட்டதை நான் அந்நிமிடத்தில் கண்டேன். 🙂 வெங்கடேஷ் மற்றொரு கேள்வி கேட்டபோது மாலன் ‘பாரதியார் நானே கடவுள் என்றெழுதிய சமயத்தில் அவருக்குள் ஒரு சூஃபித்தன்மை இருந்ததை உணர்வதாக’ச் சொன்னார். ஹிந்துமத்தில் சூஃபியிஸத்தின் தேவை என்ன என்று நான் கேட்டேன். மீண்டும் வழக்கம்போல மதத்துக்கும் சூஃபியிஸத்துக்கும் தொடர்பு தேவையில்லை என்கிற கருத்தே முன்வைக்கப்பட்டது. மீண்டும் சூஃபியிஸம் பற்றிய கேள்விகளுக்கு, சூஃபியிஸத்தை சரியாக விளக்கமுடியாது, அது அனுபவம் என்றார் ரூமி. அப்படியானால் அது பின்நவீனத்துவமாக மட்டுமே இருக்கமுடியும் என்றேன் நான்.

சூஃபிஸத்திற்கும் மதத்திற்கும் தொடர்பே இல்லை என்கிற கருத்தையே நான் முற்றிலுமாக மறுதலிக்கிறேன். நிச்சயம் சூஃபியிஸத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டு. இஸ்லாத் சட்டங்களின் அடிப்படையான மதம். சட்டப்படி சரி, தவறு என்கிற இரண்டு பார்வைகளே உண்டு.

பொதுவாகவே எந்த ஒரு மதச் சட்டத்தின் முன்னாலும் அதன் மக்கள் ஓர் அறிவார்ந்த முட்டாள்களாகவே செயல்படமுடியும். அறிவார்ந்த முட்டாள்கள் தங்கள் முட்டாள்தன்மையை கைவிட்டால், அவர்கள் சட்டத்தை மீறவேண்டியிருக்கும். அங்கே தார்மீகம் முன்னுக்கு வரும். அறிவார்ந்த முட்டாள்கள் அப்படியே தொடர்ந்தால் அவர்கள் சட்டத்திற்குள்ளே வாழமுடியும். இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதே.

இஸ்லாத்தில் ஒருவன் இஸ்லாமியனாக இருக்கமுடியும் அல்லது இஸ்லாமியனாக இருக்கமுடியாது என்கிற இரண்டு எல்லைகள் மட்டுமே சாத்தியம். கருப்பு வெள்ளைகளுக்கு நடுவே உள்ள பல்வேறு நிறங்களில் வாழ்வது சாத்தியமல்ல. இங்கேதான் சூஃபியிஸத்தின் தேவை இருக்கிறது. கட்டுக்களின் மீது கேள்வியும் எதார்த்தத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒருவர் ஒரு சூஃபியாகவே இருக்கமுடியும். இதனால் இது இஸ்லாத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகிறது. ஹிந்து மதத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. கடவுளை எதிர்த்துக்கொண்டே ஒரு ஹிந்து ஹிந்துவாகத் தொடர்ந்துவிடமுடியும். ஹிந்துவாக இருப்பதற்கான எந்தவொரு வழிமுறையும் கோரப்படவில்லை. ஹிந்துக்களின் புனித நூலாகச் சொல்லப்படும் பகவத்கீதையை மறுதலித்துவிட்டவனும் ஹிந்துவாகத் தொடரமுடியும். இதனால் ஒரு ஹிந்து கட்டுக்களிலிருந்து வெளிவரவேண்டிய தேவை இல்லை. உள்ளிருந்தே அவன் கேள்விகளை எழுப்பமுடியும் என்பதால் அங்கே சூஃபியிஸம் தேவையில்லை. தீர்ப்பு நாளில் நீங்கள் கடவுளை அடைவீர்கள் என்று இஸ்லாமும், மனிதனாக இருக்கும்போதே கடவுளை அடையும் என்று சூஃபியிஸமும் சொல்கின்றன. இதை இஸ்லாமியர்கள் ஏற்க வாய்ப்பில்லை. ஆனால் ஹிந்துக்கள் இதை எளிதாக ஏற்பார்கள். நாடெங்கும் நிலவும் குலதெய்வ (சிறுதெய்வ) வழிபாட்டின் அடிப்படை இதுவே. அதன் தொடர்ச்சியே தர்கா. இஸ்லாம் வெளிநாடுகளில் பரவும்போது, அங்கிருக்கும் கலாசாரத்தோடும், மதங்களோடும் நெருங்கிவரும்போது அங்கே நிச்சயம் சூஃபியிஸத்தின் தேவை இருக்கும். அதன்வழியேதான் சிலை வழிபாட்டை சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஒரு இந்திய இஸ்லாம் வீட்டுக் கல்யாணத்தில் இடம்பெறும் பூவும் பழமும் கூட சூஃபிஸத்தின் ஒரு கூறுதான் என்று ஓங்கிச் சொல்லிவிடமுடியும். ஏனென்றால் யாரும் சூஃபியிஸத்தை அறுதியிட்டு விளக்கமுடியாதே! 🙂

ராமானுஜரிடத்திலும் ஆண்டாளிடத்திலும் பரமஹம்சரிடத்திலும் பாரதியாரிடத்திலும் ஒருவர் சூஃபித் தன்மையைக் காண்பது ரசனையின் அடிப்படையில், அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல. விமர்சனத்தின் ஒரு புள்ளி அது. ரசனையின் மேம்பட்ட புள்ளி அது. அது உண்மையாக இருக்கவேண்டியதில்லை. அது உண்மையென்றால், தி.ராசகோபாலன் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள், சங்ககாலங்களில் காதலன் காதலியோடு பேசும்போது நேரம் விரைவாகச் சென்றது; காதலன் காதலியைப் பிரிந்து இருந்தபோது நேரம் மெதுவாகச் சென்றது என்பது சார்பியல் என்பதன் வெளிப்பாடே; அதனால் அவர்களுக்கு அறிவியல் தெரிந்திருந்தது என்கிற கொடுமையையெல்லாம் ஏற்கவேண்டியிருக்கும். கடல் நீர் ஆவியாகி, மேகமாகி, மழை பெய்வதை பாசுரத்தில் காணலாம் என்பதை சுஜாதா சிலாகித்தார். அது அப்படியே ரசனையோடு நின்றது. அறிவியல் புனைகதைகளின் கூறுகளைப் பட்டியலிட்ட சுஜாதா, அதன் சில கூறுகளை நாம் ராமாயணத்திலேயே, விக்கிரமாத்தித்தன் கதையிலேயே காணலாம் என்றார். அதுவும் ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்ததே. மாறாக, அதுவே சயின்ஸ் பிக்க்ஷனின் முதல் பிரதி என்று நாம் பிரஸ்தாபிக்கமுடியாது. இதுவே சூஃபித்தன்மைக்கும். சூஃபித்தன்மையை நாம் யாரிலெல்லாம் பார்க்கமுடிகிறது என்று யோசிப்பது ஒரு ரசனையின் அடிப்படை. அதை கபீர் தாஸுக்குப் பொருத்துவது, இரண்டு எதிரெதிர் மதங்களுக்குள்ளான ஆன்மிகத்தன்மையின் ஒற்றுமைப்புள்ளியைக் கண்டடைவது. பாராவிற்கு நிகழ்வதும் இதுவே. அதற்காக பரமஹம்சரும், கபீரும் சூஃபி என்பதெல்லாம் ஏற்கமுடியாதது. சூஃபியிஸத்தையும் இஸ்லாத்தையும் பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை. மென் இஸ்லாமியர்களின் துவக்கப்புள்ளியாக சூஃபியிஸத்தை வைத்துக்கொள்ளலாம். இந்தக் காரணத்துக்காகவே தீவிர இஸ்லாமியர்கள் இதை ஏற்கவில்லை என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகிறது. அதனால், சூஃபி வழி – இஸ்லாமியர்களின் இதயம் என்று ரூமி வைக்க இருந்த தலைப்பு மிகவும் நேர்மையானதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

எனது கருத்தையெல்லாம் நான் சூஃபி வழி புத்தகத்தைப் படிக்காமல் எழுதியிருக்கிறேன். புத்தகத்தைப் படித்தபின்பு, ‘இஸ்லாத்திற்கும் சூஃபியிஸத்திற்கும் தொடர்பே இல்லை’ என்று நானே சொல்லக்கூடும். அப்போது – நாகூர் ரூமி பேசும்போது இடையில், ‘உங்களுக்குத் தெரியாத நாகூர் ரூமி ஒருத்தன் இருக்கான். அவன் எழுதின புத்தகம் இது’ என்றார். அந்நியன் படம் பார்த்தமாதிரி இருந்தது. கொஞ்சம் திகிலாக உணர்ந்தேன் – நீங்களும் இதேபோல் திகிலடையக்கூடும். அந்த நிமிடத்தில், ’பெரியாரும் ஒரு சூஃபியே’ எனச் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

(பி.கு.: நேற்று காராசேவு கொடுத்தார்கள். எந்த சூஃபி தயாரித்தார் எனத் தெரியவில்லை. மிக நன்றாக இருந்தது.)

Share

கிழக்கு மொட்டைமாடி புத்தகத் திருவிழா

கிழக்கு மொட்டைமாடி புத்தக வெளியீட்டுத் திருவிழா

22.12.2008 முதல் 27.12.2008 வரை தினமும் புதிய புத்தகங்கள் வெளியீடு

இடம்: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 18.

நேரம்: தினமும் மாலை 6.00 மணிக்கு.

பட்டியல் கீழே உள்ளது. மேல வருவனாங்குது. அதனால் கீழே சென்று பார்க்கவும்!

தேதி கிழமை புத்தகம் ஆசிரியர் பேச்சாளர்
22.12.08 திங்கள் கேண்டீட் வோல்ட்டேர்; தமிழில் பத்ரி சேஷாத்ரி மாலன்
சூஃபி வழி நாகூர் ரூமி பா. ராகவன்
23.12.08 செவ்வாய் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் யுவ கிருஷ்ணா சோம வள்ளியப்பன்
மால்கம் எக்ஸ் மருதன் பா. ராமசந்திரன்
24.12.08 புதன் ஆயில் ரேகை பா. ராகவன் நாராயணன்
ஒபாமா பராக் முத்துக்குமார் எஸ். சந்திரமௌலி
25.12.08 வியாழன் நெ.40 ரெட்டைத் தெரு இரா. முருகன் ஜே.எஸ். ராகவன்
விண்வெளி ராமதுரை பத்ரி சேஷாத்ரி
26.12.08 வெள்ளி இருளர்கள் ஓர் அறிமுகம் குணசேகரன் ப்ரவாஹன்
செங்கிஸ்கான் முகில் இகாரஸ் பிரகாஷ்
27.12.08 சனி வாங்க பழகலாம் சோம வள்ளியப்பன் எஸ்.எல்.வி. மூர்த்தி
ஜார்ஜ் வாஷிங்டன் பாலு சத்யா ஆர். வெங்கடேஷ்
Share

இருளர்கள் ஓர் அதிசயம்

நன்றி: இட்லிவடை

இருளர்கள் ஓர் அறிமுகம், க. குணசேகரன், 75 ரூபாய், கிழக்கு பதிப்பகம்.

இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தை முதலில் பார்த்தபோதே அதன் மீதான ஓர் ஈர்ப்பு தோன்றியது. புத்தகத்தின் மிக நல்ல அட்டையும், இருளர்கள் என்னும் பழங்குடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வமும் இவற்றிற்குக் காரணம்.

முதல் அத்தியாத்தைப் படித்தபோது, நூலாசிரியரின் ரசனையை எண்ணி வியந்தேன். அவர் விவரிக்கும் சம்பவங்கள் காட்டு வாழ்க்கை மீதான போதையைத் தந்தன. வாழ்க்கையில் இது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும் சில சமயங்களில் மனம் கொள்ளும் ஒருவித ஆசையை இப்புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் மீண்டும் கண்டேன். என் சுவாசக்காற்றே திரைப்ப்டடத்தில் வரும் ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடலும் காடு நாவலும், ஜெயமோகனின் சில கட்டுரைகளில் இத்தகைய ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே கிறக்கத்தை இந்நூலின் முதல் கட்டுரையில் என்னால் காணமுடிந்தது. இரண்டாம் அத்தியாயம் அப்படியே மேலெழுந்து, ரசனையை முற்றிலும் உதறி, சிறந்த ஆய்வுப் புத்தகமாக மாறியது. உண்மையில் ஓர் அதிசயத் தருணமாக முதலிரண்டு கட்டுரைகளுக்குள் இருந்த வேற்றுமையை உணர்ந்தேன். கிட்டத்தட்ட இதை ஒத்த உத்தியொன்றை மு.க. புத்தகத்திலும், நான் வித்யா புத்தகத்திலும் பார்த்திருக்கிறேன். என்னளவில் அவை தோல்வியான முயற்சிகள். ஆனால் இப்புத்தகம் மிக இயல்பாக இந்த மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.

முதல் அத்தியாயத்தில் கோபால் ராவ் என்பவர் இருளரைப் பற்றிச் சொல்கிறார். இரண்டாவது கட்டுரையில் குணசேகரன் தன் பார்வையைத் தொடர்கிறார். அங்கே தொடரும் தகவல் மழை இப்புத்தகம் முழுக்க எல்லாக் கட்டுரைகளிலும் கொட்டி வழிகிறது. இவ்வளவு தகவல் மழைகளை எப்படி ஆசிரியர் திரட்டினார் என்பதே பெரும் ஆச்சரியம். தகவல் மழைகள் என்றால், வெறும் அடுக்குதல் அல்ல. ஆராய்ச்சியுடன் கூடிய தகவல்கள். ஆராய்ச்சிக்கான தகவல்களும் அதற்கான நிரூபணங்களும் சங்க காலத்திலிருக்கும் பாடல்களிலிருந்து, இருளர்களின் வாழ்வில் சமீப, கடந்த காலங்களில் சந்தித்த அரசியல், சமூகப் பிரச்சினைகள் வரை நீண்டு விரிகின்றன.

பழங்குடிகளாக வாழ்ந்த மக்கள் கடற்கோள்களாலும் இயற்கைச் சீற்றங்களாலும் பல்வேறு இனக்குழுக்களாக இடம்பெயர்கிறார்கள். அங்கிருந்து கிளைக்கிறது இருளர் என்னும் இனக்குழு. அது பின்னர் சாதியாக நிலைபெறுகிறது. இருளர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு நாடோடியின் வாழ்க்கையையாகவே வாழ்கிறார்கள். காடுகளில் தேன் எடுப்பது, பாம்பு பிடிப்பது, மூலிகைகள் சேகரிப்பது என அவர்களது வாழ்க்கை தொடர்கிறது.

சங்ககால மக்கள் தங்கள் குலச்சின்னங்களாக மரத்தையும் பறவையையும் வரித்துக்கொள்வதை ஆசிரியர் விளக்கியிருப்பது சுவையானது. கீரனார், மருதனார் என எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கி, அதற்கான காரணமாக ஆசிரியர் முன்வைப்பது, அக்கால மக்களின் மனதைத் துல்லியமாகப் படம் பிடிக்கிறது. ‘அவர்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை அளிப்பது போலிருந்தது.’ இருளர்களின் பெயருக்கான காரணங்கள் பல. இருளான பகுதிகளில் வாழ்பவர்கள், இருளைப் போன்ற கருமையானவர்கள், இருள மரத்தின் சந்ததிகளாகத் தங்களைக் கருதுபவர்கள் எனப் பல காரணங்கள். அவர்கள் பேசும் மொழி இருள என்னும் மொழியைப் பேசியிருக்கிறார்கள். இருள என்னும் மொழி தமிழ் மொழியின் ஒரு கிளை. இருளர்கள் ஐவகை நிலங்களில் வாழ்ந்த தமிழர்கள். தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் வழங்கும் நிலங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருவித தனி மொழி புழக்கத்தில் உள்ளது. இன்று இருளர்கள் கன்னடம் பேசினாலும், மலையாளம் பேசினாலும், துளு பேசினாலும், அவர்கள் தமிழர்களே.

இருளர்கள் எந்நிலையிலும் தங்கள் மரபைக் கைவிடாத தீவிர இந்துக்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் வழிபாடு குலதெய்வ வழிபாடு சார்ந்தது. கன்னித் தெய்வத்தை அவர்கள் நம்புகிறார்கள். எல்லாத் திருவிழாக்களிலும், சடங்குகளிலும் கன்னித் தெய்வமே முதலிடம் பெறுகிறது. எல்லா இருளர்களின் வாழ்விலும் கன்னித் தெய்வமும், அவர்களின் மரபான திருவிழாவும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

இருளர்கள் கொண்டாடும் திருவிழா பல்வேறு படிகளைக் கொண்டது. அத்தனையையும் மிக விரிவாக, பொறுமையாக, படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியிருக்கிறார் குணசேகரன். ஆய்வு செய்து, அவர்கள் அத்திருவிழாவின் ஒவ்வொரு நிலையிலும் பாடும் பாடல்களைத் தொகுத்திருக்கிறார். இன்று மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வழிபடும் இடங்களை வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் ஆசிரியர். தாங்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் கோயிலையும், கடவுளையும் அழைத்துக்கொண்டவர்கள் இருளர்கள்.

வழிபாட்டில் முதல் இறைவணக்கம் பாடும் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் குணசேகரன். பாணர்களின் (பாணரின் மனைவி பெயர் பாணிச்சி என்கிறார் ஆசிரியர். இப்படி போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்லும் விஷயங்களின் பட்டியலிடவே முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை அதிகம்) பாடல்களையும், பழங்குடிகளின் பாடல்களையும் தொடர்ந்து இன்றுவரை காப்பாற்றிக்கொண்டு வந்தவகள் இருளர்களே. இதனால் இருளர்களின் வாழ்க்கையில் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (கம்பியில் கட்டிய சலங்கையால் இசையை எழுப்பி, ஒருவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு ஆடுவதை ஆசிரியர் விவரிக்கும்போது, பின்னொலியில் இளையராஜாவின் முள்ளும் மலரும் ஹம்மிங்கான ‘எலலே’ (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்) ஒலிக்கிறது.)

இருளர்கள் திருமணத்திற்காக மேற்கொள்ளும் பெண் பார்க்கும் படலம் மிகவும் சுவையானது. (இதன் நம்பகத்தன்மை குறித்துத் தெரியாது. ஆசிரியர் சொல்வதை அப்படியே நம்புகிறேன். அவ்வளவே.) பெண் பார்க்க வரும் இருளர் அதைப் பற்றிப் பேசுவதில்லையாம். வரும்போது கையில் இரண்டு கம்பிகளைக் கொண்டு வருகிறார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் நீட்டி முழக்கிப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். இப்படியே இரண்டாவது முறையும் செய்கிறார்கள். அப்போது பெண் வீட்டார்கள் ‘சென்றமுறையும் இப்படிச் செய்தீர்கள், என்ன விஷயம்’ என்று கேட்க திருமண விஷயம் தொடங்குகிறது. துளை உள்ள பானை ஒன்றை சீதனமாகத் தருகிறார்கள். இதுவே இருள ஆணுக்குப் பின்னர் எலி பிடிக்கப் பயன்படுகிறது. எலி என்பதைச் சிறந்த உணவாகச் சொல்கிறார்கள் இருளர்கள்.

இருளர்களின் இன்றைய முக்கிய வேலை பாம்பு பிடிப்பது. பாம்பு பிடிப்பதன் முகமாகவே இன்றைய இருளர்கள் அறியப்படுகிறார்கள். பாம்பின் வகையை அதன் மணத்தை வைத்தே கண்டறியும் திறமை பெற்றவர்கள் என்கிறார் ஆசிரியர். (எந்தப் பாம்பு என்ன மணம் என்கிற விவரணையும் உண்டு!) எந்தப் புற்றில் பாம்பிருந்தாலும் Y வடிவ முனை கொண்ட கழியை வைத்துப் பிடிக்கிறார்கள். கையாலும் பிடிக்கிறார்கள். காடுகள் குறைந்து வீடுகள் அதிகரிக்கும் சூழலில் இருளரின் தேவையைப் புரிந்துகொள்ளமுடியும். எந்த விதப் பாம்புக் கடிக்கும் மூலிகை மருந்து உண்டு என்கிறார்கள். மூலிகைகளின் பட்டியலையும், பாம்புக்கடிக்கான மருத்துவத்தின் பட்டியலையும் மிக விரிவாகக் கொடுத்து அசர வைக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு தாவரத்தின் தாவரவியல் பெயரையும் கொடுப்பது இன்னும் பாராட்டப்படவேண்டியது.

இருளர்களின் உரிமைப் போராட்டங்கள் பற்றியும் குணசேகரன் எழுதியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருளர்கள் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டதையும் அதற்கான போராட்டத்தையும் ஓர் இருளரே விவரிக்கிறார். இன்றைய இருளர் வாழ்வின் முக்கியப் பிரச்சினையான சான்றிதழ் வாங்குவதைப் பற்றிச் சொல்லும் ஆசிரியர், இதன் காரணமாகவே பெரும்பாலான இருளர்கள் பாம்பு, அணில் பிடிக்கும் இருளர்களாகவே தங்கிவிடுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மிக எளிமையான தமிழ், ஆழமான பார்வை, தொடர்ச்சியான தகவல்கள் என அசர வைக்கும் ஆசிரியரின் முதல் நூல் இது என்னும்போது அந்த ஆச்சரியம் இன்னும் பன்மடங்கு அதிகரித்தது. இத்தனை முயற்சியும் உழைப்பும் காண்பித்த ஆசிரியர் இன்னும் சில விஷயங்களில் கவனம் கொண்டிருக்கலாம்.

ஒரே விஷயத்தைப் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்வதன்மூலம் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். ஐவகை நிலங்கள் பற்றியும், இருளர்களின் மொழி பற்றியும் இது போன்ற இன்னும் நிறைய தகவல்களும் நிறைய முறை வருகின்றன. ஆரிய படையெடுப்பு என்கிற ஒரு கருத்தாக்கம் இன்று பல ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை ஒரு விவாதித்திற்குரிய விஷயமாகக்கூட ஆசிரியர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆரியப்படையெடுத்து நிகழ்ந்தது என்கிற முடிவின் அடிப்படையில் இருளர்களை தஸ்யூக்களாகவே அணுகிறார். அதேபோல், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருளர்களின் பெருமையைச் சொல்வதாக எண்ணிக்கொண்டு, இன்றைய மக்களின் நாகரிகத்தைப் பற்றிய கிண்டல்கள், ஒருவகையில் ஆசிரியரின் சமூக அக்கறையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ள முடிந்தாலும், செயற்கைத்தனமாக ஒலிக்கிறது. இந்த செயற்கைத்தனமான எழுத்துகள், இந்நூலில் ஆசிரியர் எட்டியுள்ள உயரத்திற்குச் சற்றும் பொருந்தாதவை. சில இடங்களில் இந்த சமூக அக்கறை எல்லை மீறி ஒருவித அலுப்பைத் தருகிறது. ஆய்வுகள் ஊகங்களின் அடிப்படையிலும் நடக்கின்றன என்றாலும், இந்த ஊகம் ஓரோர் இடங்களில் அதிகமாகவிடுகிறது. ஓர் உதாரணம், இருளர்கள் தலைப்பாகை கட்டுவதைப் பற்றியது. இதை இன்றைய உலகின் மக்கள் அணியும் தலைக்கவசங்களோடு ஒப்பிடுவது கொஞ்சம் அதிகபட்ச கற்பனை, ஊகம். இருளர்களின் திருமணம் பற்றிய சிறந்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர், இருளர்களின் மறுமணம் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கலாம். (நிறைய தகவல்களை விடாமல் படித்ததில், இதை நான் பார்க்கத் தவறியிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நன்றி.) நிறைய நூல்களையும், குறிப்புகளையும் படித்து நூலாய்வு செய்திருக்கும் ஆசிரியரின் கள ஆய்வு குறித்த விவரங்கள் இல்லை. கள ஆய்வும் செய்திருந்தால் இந்நூலில் இருளர்களின் இன்னொரு பரிமாணமும் கைக்கூடியிருக்கலாம்.

‘சோளகர் தொட்டி’ நாவலில் இருளர்கள் வாழ்வின் இன்னொரு பக்கத்தை உணரமுடியும். காட்டில் வாழ்வதால் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் நம்மைப் பதறவைப்பவை. சரியான கல்வி அறிவும், பொருளாதார சமூக முன்னேற்றமும் மட்டுமே இவர்களை முன்னேற்ற முடியும். இன்றைய இருளர்கள் தங்கள் சந்ததிகளாவது படித்து முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது முக்கியமானது. இது நிகழ அவர்களின் இஷ்டமான கன்னித் தெய்வம் அருளட்டும்.

தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான விருதைப் பெறும் தகுதியுடைய இப்புத்தகத்தைப் போன்ற இன்னும் பல புத்தகங்களை, ஆய்வு நூல்களை குணசேகரன் எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/767/Irullargal%20:%20Orr%20Arimugam

Share

ஞாநி – கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – பொழுதுபோக்கின் உச்சகட்டம்


எவ்வித சம்பிரதாயமும் இல்லாமல் தொடங்கிய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தை, ஞாநி கலந்துரையாடலாக்கினார். மும்பை தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி அவர் ஏற்கெனவே எழுதி, அதை அனைவரும் படித்திருப்பார்கள் என்று கருதியதால், கூட்டடத்தை ஒரு கலந்துரையாடலாக்கலாம் எனச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது. பல்வேறு கருத்துகளைச் சொன்ன ஞாநியின் சில கருத்துகள் பற்றி மட்டும் இங்கே. (மொத்த ஒலித்துண்டு பத்ரியின் பதிவில் வெளிவரும்.) மீண்டும் ஒருமுறை ஒலித்துண்டைக் கேட்டுவிட்டு எழுத நினைத்தேன். ஆனால் இப்போது நினைவில் இருந்து எழுதுகிறேன். வேறுபாடுகள் இருந்தால், அது என் தவறாக இருக்கலாம். சிறிய வேறுபாடுகள் இருக்கலாமே அன்றி, பெரும் கருத்து மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

ஞாநியின் முக்கியமான குற்றச்சாட்டுகள்.

01. ’இன்று இந்தியாவில் நிலவும் இஸ்லாம் இந்துப் பிரச்சினைக்கு பாப்ரி மசூதி இடிப்பே காரணம். அதற்கு முன்பு எங்கும் இந்தியாவில், ஜம்மு காஷ்மீரைத் தவிர, மதக் கலவரங்கள் நிகழ்ந்ததே இல்லை.’

இது ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் இல்லையா என்று கேட்டேன். மீண்டும் அவர் சொன்னதை சரி என்று உறுதி செய்தார். அதற்கான தரவுகளைப் பார்த்துவிட்டே இதைச் சொல்வதாகச் சொன்னார். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதற்கான தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. அதைப் பார்த்தால்தான் தெரியும். அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார், ஜடாயு, திருமலை உள்ளிட்ட தீவிர ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் இதற்கான தரவுகளைத் தரவேண்டும். இல்லையென்றால் ஞாநி சொன்னதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் எல்லா பிரச்சினைகளுக்கும் பாப்ரி மசூதி இடிப்பு மட்டுமே காரணம் என்பது ஒரு எஸ்கேப்பிஸம் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை வைத்து இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை ஞாநி ஆதரிக்கவில்லை என்பதும் உண்மை. அதுவே பிரச்சினையின் வேர் என்கிறார். 47 ஆண்டுகளாக இந்தியாவின் எப்பகுதியிலும் இல்லாத மதத்தீவிரவாதம், அதற்குப் பின் தலைதூக்கியது பாப்ரி மசூதி இடிப்பினால் மட்டுமே என்பது ஞாநியின் கருத்து. அதற்கு முன்பு இந்தியாவில் அல், உல் எனத் தொடங்கும் எந்த இயக்கமும் இல்லை என்றார். கூடவே, அப்படி ஒருவேளை பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் கலவரங்கள் நடந்திருக்குமானால், அது தேர்தல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். தூண்டிவிட்ட கலவரமாக இருந்திருக்கும் என்றார்.

02. ’பாகிஸ்தானில் இருந்து இந்தியா தீவிராவாதிகளைக் கோருவதற்கு நூற்றுக்கு நூற்றம்பைது சதவீதம் உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கும் தீவிரவாதிகளான அத்வானி, தொக்காடியா, மோடி ஆகியோரை இந்தியா விடுவிக்கவேண்டும்.’

இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. அவர்களையும் இந்திய அரசியல்வாதிகளையும் ஒப்பிடுவது, கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அதில் உண்மை இல்லை. வீரப்பன் காட்டில் செய்த அக்கிரமங்களைவிட ஜெயலலிதா செய்தது அதிகம் என்ற திண்ணைப் பேச்சுக்கும் ஞாநியின் பேச்சுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. மோடியோ, அத்வானியோ, தொக்காடியாவோ ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. சட்டம் அவர்களை எந்நேரத்திலும் எதிர்கொள்ளமுடியும். இந்திய அரசு அவர்களைப் பாதுகாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் சரியான விதத்தில் மாட்டினால், இந்திய காங்கிரஸ் அரசு இவர்களை விட்டுவைக்கப்போவதும் இல்லை. இப்படி இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கமுடியக்கூடிய அனைத்துவகை சாத்தியங்கள் உள்ள நிலையில், இவர்களை இஸ்லாமிய அடிப்படை பயங்கராவதிகளுடன் ஞாநி ஒப்பிடுவது குழந்தைத்தனமானது. அத்வானி, தொக்காடியா விஷயங்களில் ஞாநி முன்வைப்பது பாப்ரி மசூதி இடிப்பை. கூட்டத்தில் ஒருவர் இந்த விஷயத்தில் நரசிம்மராவின் பங்கைப் பற்றிக் கேட்டபோது, அவர் செத்துப்போயிட்டாரே நான் என்ன பண்ணட்டும் என்றார் ஞாநி. ஞாநி சொதப்பிய பதில்களுள் இதுவும் ஒன்று. மனு தர்மம் குறித்த பேச்சை பேசும் ஞாநிக்கு நரசிம்மராவுக்கு முன்பே மனு இற்ந்துவிட்டார் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் ஏன் இன்று மனுதர்மம் பற்றி பேசுகிறோம். அவர் சொல்வதுபோலவே பிரச்சினையின் வேரைப் பற்றிப் பேச விரும்பினால், இறந்தவரையும் பற்றிப் பேசவேண்டும்.

03. ’மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஊடகங்களின் பங்கு வர்க்க பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. தாஜ் ஹோட்டலில் இறந்தவர்கள் பணக்காரர்கள் (வெளிநாட்டுக்காரர்கள்) என்பதால்தான் ஊடகங்கள் இதை இப்படி காண்பித்தன. ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஊடகங்கள் வாய் திறக்காதது அருவருப்பானது.’

ஞாநி சொல்வதில் எனக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், ஊடகங்களுக்கு மேல்தட்டு, கீழ்த்தட்டு குறித்த வித்தியாசமான பார்வைகள் அடிப்படையிலேயே உண்டு என்பதை நான் ஏற்கிறேன். ஊடகங்களின் பார்வையில் அடித்தட்டு மக்கள் என்பவர்கள் என்றாவது ஒருநாள் கவரேஜுக்குப் பயன்படும் நிகழ்ச்சிகளாக மட்டுமே தெரிகிறார்கள். ஆனால் தாஜ் ஹோட்டல் விஷயத்தில் அப்படி மட்டுமே என்று சொல்லிவிடமுடியாது. ரயில்வே ஸ்டேஷன் விஷயம் என்பது அங்கே உடனே முடிந்துவிட்ட சம்பவம். ஆனால் தாஜ் ஹோட்டலில் இரண்டு நாள்கள் முழுக்க முழுக்க தீவிரவாதிகளின் பிடியில் மக்கள். இதனால் இயல்பாகவே அங்கு ஊடகங்கள் ஓடியது எதிர்பார்க்கக்கூடியதே. இதுவே மறுதலையாக, தாஜ் ஹோட்டலில் மக்கள் கொல்லப்பட்டு, ரயில்வே ஸ்டேஷனில் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்டிருந்தால், ஊடகங்கள் அங்கு குவிந்திருக்கும். (அதியமான் இதைச் சொன்னார்.) ஏனென்றால் ஊடகங்களின் பெரிய எதிர்பார்ப்பு ஒரு பரபரப்பு. ஆனால் இதை ஞாநி அடியோடு மறுக்கிறார். அவருக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட் வெளிக்குதிக்கும் தருணம் இதுவாக இருக்கலாம்.

04. கஷ்டப்படும் பிராமணர்கள் பற்றி, ஏழை பிராமணர்கள் பற்றி ஒரு வரியாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டேன். பதிலுக்கு என்னிடம் எந்த பிராமணர்கள் பற்றி என்றார். 1978ல் பிராமண சங்கம் தொடங்கப்பட்ட போது, அதை ஆதரித்து எழுதியதாகச் சொன்னார். ஆனால் அப்போதும் அது எந்த பிராமணர்களுக்கு உதவப்போகிறது என்று கேள்வி எழுப்பியதாகவும் சொன்னார். ஏழை பிராமணர்களுக்கா அல்லது செல்வாக்குள்ள பிராமணர்களுக்கா என்பது அவர் கேள்வி. நான் ’இது எல்லா ஜாதியிலும் உள்ள பிரச்சினை’ என்றேன்.

பொதுவாகவே இன்று பொருளாதார ரீதியாக வர்க்கப் போராட்டத்தைப் பற்றிப் பேசும் யாரும், பொருளாதார ரீதியாகப் பிந்தங்கிப் போயிருக்கும் பிராமணர்களைப் பற்றிப் பேசுவதில்லை. (நான் இங்கு பிராமணர்கள் என்று எழுதுவது ஒரு குறியீட்டுக்காக மட்டுமே. அது, முற்படுத்தப்பட்ட எல்லா ஜாதிகளுக்கும், அதிலிருக்கும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.) தீட்டு ஒட்டிண்டும் பாருங்கோ. எத்தீண்டாமையும் தவறு. ஆனால் முற்போக்கை ஒட்டிவிடும் பிராமணத் தீண்டாமை பெரும் துன்பம் தரக்கூடியது. உங்கள் முகமூடிகள் உடைந்து விழுந்துவிட்டால் என்னாவது. பிச்சை எடுக்கும் நிலையிலிருக்கும் பிராமணர்களைப் பற்றி எழுதிவிட்டால் அத்தீட்டு ஒட்டிவிடும். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத, முற்படுத்தப்பட்ட சாதியிலிருக்கும் ஏழைகளைப் பற்றி எழுதிவிட்டால், இருக்கவே இருக்கிறது பிராமணியத் தீட்டு. 31 வருடங்களில் ஒரு தடவை ஞாநி எழுதியதை நினைவு வைத்துச் சொன்னாரா அல்லது அதுதான் முதல் தடவையாக எழுதியதா என்று தெரியவில்லை. ஞாநி போன்றவர்களுக்கு பிராமணர்கள் என்றதும் நினைவுக்கு வருவது சோ, என்.ராம், குருமூர்த்தி, இல.கணேசன் வகையறாக்கள்தான். அடித்தட்டு மக்கள் நினைவுக்கு வருவதில்லை.

05. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்டிருக்கும் தீவிரவாதிக்க்கு ராம்ஜெத்மலானி வாதாட முன் வந்ததற்கு ஞாநி பூச்செண்டு கொடுத்திருக்கிறார். மாலேகான் குண்டுவெடிப்பில் இதே போன்றதொரு பூச்செண்டு கொடுக்கப்படுமா என்றேன். நிச்சயம் என்றார். அதுமட்டுமன்றி, தான் தீவிரவாதிகளாக முன்வைக்கும் தொக்காடியா, மோடி உள்ளிட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் நிற்கும்போது அவர்களுக்காகவும் சட்ட வக்காலத்து தரவேண்டும் என்றும் சொல்லுவேன் என்றார்.

06. குமுதத்தைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, மீண்டும் அதில் சேருவது சரியா, இதையே ஓர் அரசியல்வாதி செய்திருந்தால் நீங்கள் சும்மா விட்டிருப்பீர்களா, இப்போது உங்களை நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள் என்றேன்.

நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். ஓரளவு நியாயமான கோபமும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இருந்தன. ஆனால் இன்னும் விடையிறுக்கப்படாத கேள்வி ஒன்றிருக்கிறது. குமுதம் படைப்பாளிகளின் உரிமத்தின் மீது கைவைக்கிறது. ஞாநி எதிரிக்கிறார். விமர்சிக்கிறார். ஆவியில் எழுதுகிறார். ஆவியில் பிரச்சினை வருகிறது. விலகுகிறார். குமுதம் எழுத அழைக்கிறது. இவர் நிபந்தனைகள் சொல்கிறார். குமுதம் ஏற்கிறது. இது முன்/பின்கதைச் சுருக்கம். நிபந்தனைகளில்தான் பிரச்சினை. தன் படைப்புகளின் மீதான் உரிமத்தை குமுதம் கட்டுப்படுத்தாது என்ற நிபந்தனை அது. உண்மையில் எல்லா படைப்பாளிக்காகவுமான கேள்வியாக அதை ஏன் ஞாநி எழுப்பவில்லை. பா.செயப்பிரகாசம் ஞாநியின் படைப்பாளிகளின் உரிமம் தொடர்பாக ஆதரவைத் தந்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் குமுதத்தில் எழுதிவிட்டார். கொஞ்சம் பார்த்தால், ஞாநி எழுதுவதற்கு நான்கு வருடங்களும், செயப்பிரகாசம் எழுதுவதற்கு நான்கு மாதங்களும் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. பிரேக்கிங் பாயிண்ட். தன் நிபந்தனை தன்னளவில் மட்டும் ஏற்கப்பட்டால் போதுமென்றால், ஞாநி குமுதத்தை எதிர்த்து இத்தனை தீவிரமாகச் செயல்பட்டது தேவையற்றதாகிறது.

07. வடபழனியில் இருந்து வந்திருந்த கோபு என்பவர் கடுமையான கேள்விகளைக் கேட்டார். கடும் கோபம் அவர் முகத்தில் இருந்தது. மோடியைத் தீவிரவாதி என்று சொல்லும் ஞாநி, கம்யூனிஸ்ட் கொலைகாரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்றார். கம்யூனிஸ்ட் பிராடு என்றார். பதிலுக்கு ஞாநியும் ‘நீங்க இங்கேருந்து என்ன பிடுங்குறீங்க’ என்று என்னவோ கேட்டார். கோபு தான் ஹிந்துத்வா இல்லை என்றும், தான் சுதந்திரா கட்சியின் ஆதரவளானகவே இருக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுக்கொண்டார். அவர் ஞாநியை கம்யூனிஸ்ட் என்றதற்கு, ஞாநி தான் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளை விமர்சித்திருக்கிறேன் என்று சொன்னார். அதன் பின்பும் கோபுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த வண்ணமே இருந்தது. முக்கியமாக, மண்டல் கமிஷன் பற்றி ஞாநி பேசியபோது, கோபு ‘மண்டல் கமிஷனுக்கும் மனுதர்மத்திற்கும் என்ன வித்தியாசங்கள்’ என்றார். மீண்டும் பிரச்சினையின் வேருக்குப் போய்விட்ட ஞாநி, மனு செய்த பிரச்சினையின் தீர்வு மண்டல் கமிஷன் என்றார். இன்றைய தீர்வு, நாளைய வர்ணமாக எப்படி மாறாமல் இருக்கும் என்ற கோபுவின் கேள்விக்கு, ஞாநி இன்றையத் தீர்வைப் பற்றித்தான் சொன்னார்.

08. நாடெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் நடக்க, சென்னை மட்டும் அமைதியாக இருப்பதன் காரணம் தமிழ்நாட்டில் பெரியார் இருந்ததுதான் என்று ஒருவர் திடீரென புல்லரிக்க வைக்க, ஞாநி ஒரு டிப்ளமேடிக்கான பதிலைச் சொன்னார். இன்று பேசும்போது, சென்னையில் குண்டு வெடிக்காததற்கு பெரியாரே காரணம் என்று சொன்னால், அதைக் கேட்பவர்கள் சந்தோஷப்படக்கூடும்; ஆனால் நாளையே குண்டு வெடித்தால் பெரியார் தவறு என்றாகிவிடுமா என்றார். பெரியாருக்கும் இந்த தீவிரவாதச் செயல்களுக்கும் தொடர்பில்லை என்றார். சென்னை அமைதியாக இருப்பதற்குக் காரணம், எல்லா பயங்கரவாத ஆதரவும் சென்னையிலிருந்து செல்வதால் இருக்கலாம் என்றேன். நான் நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பலர் சிரித்தார்கள். இதிலிருக்கக்கூடிய அரசியல் அவர்களுக்குப் புரிந்தால் நல்லது.

இரண்டு மூன்று இடங்களில் சொதப்பினாலும், மொத்தத்தில் ஞாநி எல்லாக் கேள்விகளையும் நிதானமாகவும் அவரது கருத்தியலுக்கு வலுச்சேர்க்குமாறும் எதிர்கொண்டார். மும்பை குண்டுவெடிப்பில் இறந்த காவல்காரர்கள், முக்கியமாக துக்காராம் பற்றி மிக உயர்வாகப் பேசியவர், இவர்களை நினைவில் வைத்து மும்பையெங்கும் போஸ்டர்கள் ஒட்டி அஞ்சலி செலுத்தியவர்கள், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளே என்று அரசியல்வாதிகளுக்கு பூச்செண்டு கொடுத்தார். ஞாநியிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மதத்தோடு தொடர்புடையதல்ல என்றும், அது பொதுவான பயங்கராவதம் என்றும், இந்து முற்படுத்தப்பட்ட சாதிகளில் இருக்கும் அடிமட்ட ஏழைகளைப் பற்றி எழுதுவது முற்போக்குக்குத் தீட்டு என்றும் கருதாமல், இதிலிருக்கும் உண்மையை அவர் பார்க்கமுன்வரவேண்டும் என்பதே. பிரச்சினையின் வேர்கள் நமக்குத் தெரிந்துவிட்டதாலேயே நாம் அவ்விஷயத்தை அப்படியே விட்டுவிடமுடியாது. ஒரிஸாவில் கிறித்துவர்கள் மீதான கலவரங்கள் என்பது இந்து சாமியாரின் கொலைக்கு எதிரானது என்று வேரைக் கண்டுவிட்டு, அதை அப்படியே விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவீர்களா என்ன?

முக்கியமான பிகு: கருணாநிதியைக் கடுமையாக ஏசி ஞாநி ஒன்றுமே பேசாதாததால், லக்குலுக் மனம் வெறுத்துப்போனதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா எனத் தெரியவில்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.writerpara.net/archives/319

http://prathipalipaan.blogspot.com/2008/12/blog-post_16.html

http://www.writermugil.com/?p=202

Share

மழை – அறிவியல் புனைகதை

சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில் நீர் இருந்தது. அந்த நீர் அதிர்ந்துகொண்டே இருந்தது. ஒல்லியான ஆசாமி ஒருத்தன் சம்மணமிட்டு, விறைப்பாக உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி இருந்தன. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் வசத்தில் அவன் இல்லை என்பது தெரிகிறது. சுரேஷன் நாயர் அடுத்த கேள்வியைக் கேட்டார். ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு விரலை வைத்திருந்த ஒல்லி ஆசாமியின் விரல் நாணயத்தோடு அங்குமிங்கும் நகர ஆரம்பித்தது.

S
U
C
C
E
S
S

சுரேஷன் நாயர் ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார். இந்தியா முழுவதும் அறியப்படும், எதிர்பார்க்கப்படும் அந்த விஞ்ஞானியின் முகத்தில் நிம்மதி பிறந்தது.

நாடெங்கும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அலறிக்கொண்டிருந்தன. புயல் சின்னம் உருவாகி இருந்தது. இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்கிற செய்தியெல்லாம் ஒளி(லி)பரப்பாமல் ஊடகங்கள் இன்னொரு முக்கியச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தன. புயலை திட்டமிட்டு நகர்த்தும் முயற்சியின் முதல் சோதனை அன்று நிகழவிருக்கிறது. இதுவரை உள்கட்டங்களில் மட்டும் சோதனையில் இருந்த, ‘புயலை விருப்பப்பட்ட இடத்துக்கு மாற்றும் சோதனை’ இன்று முதன்முறையாக சோதிக்கப்பட இருக்கிறது.

சுரேஷன் நாயர் தலைமையில் நூற்று நாற்பது பேர் கொண்ட குழு வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் புயல் சின்னத்தை நகர்த்தி, கடலுக்கு நடுவில் அதை வலுவிழக்கச் செய்யவேண்டும். 920 மில்லிபார் உள்ள குறைவழுத்த காற்று மண்டலம். அதைவிடக் குறைந்த காற்றழுத்த தாழ்வை, விரும்பும் இடத்தில் உருவாக்கி, அதை நோக்கி குறைந்த காற்றழுத்தத்தை நகர வைப்பதுதான் அடிப்படை நோக்கம். குறைந்த காற்றழுத்தத்தைவிட மிகக்குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதில் வெற்றி அடைந்த சுரேஷன் நாயர் இத்திட்டம் நிச்சயம் வெல்லும் என்று நம்பினார். அறிவியல் பொய்த்தாலும் ஆவி சொன்னது பொய்க்காது என்று நினைத்துக்கொண்டார்.

மிகக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்கவேண்டிய இடத்தைத் தேர்வு செய்து, அதற்கான வேலையை ஆரம்பித்தார். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது அவருக்கு. ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார்.

சிறிய குன்றின் உச்சியில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தார். மேலே செல்லும் படிகளில் உட்கார்ந்திருந்த தலைப்பாக்கட்டு பண்டாரம் காவிப் பல் தெரியச் சிரித்துக்கொண்டார். கைகளில் பற்ற வைத்திருந்த பீடியை ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டு தூரத்தில் நிற்கும் தூணில் உள்ள சிலையிடம் பேசினார்.

‘மழைய நிறுத்திடுவானுவளா மக்கா? கேக்கேன், நிறுத்திடுவானுவளாங்கேன்? கேட்டா அறிவியலும்பானுவோ. இன்னைக்கு நானும் பாக்கேன். மழ வல்லேன்னே இனிமே தலைப்பாக்கட்டு கிடையாதுங்கேன். என்னவே சிரிக்கீரு? பாரும், மழ வரும். புயல் வரும். ஒரு மசுரையும் ஒரு மசுராண்டியாலும் புடுங்கமுடியாதுங்கேன். தலப்பாக்கட்டா அறிவியலான்னு நானும் பாக்கேன்.’

கேமராக்கள் பளிச்சிட ஒளி வெள்ளத்தில் சுரேஷன் நாயர் பற்கள் தெரிய பேட்டி கொடுத்தார். மிகப் பெரிய வெற்றி. கரையைக் கடக்கும் புயல் கடலையே கடந்தது. கடலிலேயே மழை பெய்து, காற்றடித்து புயல் ஓய்ந்துவிட்டது.

‘இது ஒரு மிகப்பெரிய சாதனை. இச்சாதனையை இதுவரை எந்த நாடும் செய்ததில்லை. இச்சாதனையில் இந்தியா ஒரு முன்னோடியாக விளங்கும். ஒரு காற்றழுத்தத்தைவிடக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் இதைச் சாதித்தோம். மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு நீர் ஓடுவதைப் போல, காற்று நாங்கள் சொன்ன திசைக்கு ஓடியது.’

சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டார். வெண்மை நிற மேகங்கள் மெல்ல மெல்ல தங்கள் நிலையிலிருந்து விலகி, சுரேஷன் நாயர் வட்டமிட்டிருந்த இடத்திற்குச் சென்றன.

‘இது ஒரு தொடக்கம்தான். இதை வைத்தே புயலையும் நாம் உருவாக்கமுடியும். தேவையான அளவு மழையையும் நாம் பெறமுடியும். இது அதற்கடுத்த பெரிய வெற்றியாக இருக்கும். செயற்கை மழைக்கு அவதிப்படவேண்டியதில்லை. ஒரு சின்ன காற்றழுத்தத் தாழ்வுநிலை. கொஞ்சம் நீராவி. மழை ரெடி.’

கேள்விகள் நாலா பக்கமும் இருந்து பாய்ந்துவந்தன.

’எல்லாம் பகவதி செயல்’ என்றார்.

‘மழையை நிறுத்தவே முடியாது என்று பலர் சொன்னார்கள். நானும் மரபிலும் இயற்கையிலும் நம்பிக்கை உள்ளவந்தான். ஆனால் அறிவியலின் சாத்தியங்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவை. நீங்கள் கடவுளையும் அறிவியலையும் பிரிக்கவேண்டியதில்லை. எனக்கு அறிவியலும் பகவதியும் ஒன்றுதான்.’

‘மிகக்குறைந்த காற்றழுத்தத்தை எப்படி உருவாக்கினோம் என்பது ரகசியம். அணுக்கரு பிளவின் அடிப்படையிலான உயர் சோதனை அது. அதை மட்டுமே இப்போது சொல்லமுடியும். செலவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். தடுக்கமுடியாத புயல் தரும் அழிவையும் சேதத்தையும் விடக் குறைவுதான்.’

சுரேஷன் நாயர் ஓர் இந்திய முகமாக மாறத் தொடங்கியிருந்தார்.

கோவிலின் படிகளில் சோர்ந்து படுத்திருந்தார் தலப்பாக்கட்டு பண்டாரம். அவர் கண்களில் பெரும் மருட்சியும் பயமும் தெரிந்தன. தான் இப்படி தோற்போம் என்று அவர் நினைக்கவே இல்லை. இயற்கையையும் கடவுளையும் விஞ்சும் அறிவியலைப் பற்றித் தனக்குத் தெரியவில்லையே என்கிற கவலையும் கொஞ்சம் இருந்தது.

எதிரில் தூணில் இருந்த சிலை தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்ட பண்டாரம் நெக்குருகி ‘முருகா’ என்றார். இனியும் தான் தலைப்பாக்கட்டு கட்டக்கூடாது என்று எண்ணி, தலையில் கட்டியிருந்த துணியை எடுத்து தூர வீசினார். காற்றில் அவரின் தலைமயிர் பரவிப் பறந்தது. அப்படியே ஓர் ஓரத்தில் ஒண்டிப் படுத்துக்கொண்டார். சொல்லொணாத துயரத்தில் அதன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. ‘இனி வெள்ளமே இல்லை’ என்பதை நினைக்கவே அவருக்குக் கஷ்டமாக இருந்தது. தன் சிறுவயதில் திடீர் மழையில் தனக்குக் கிடைத்த சந்தோஷத்தையும், அந்நீரில் மிதந்த காகிதக் கப்பலையும் நினைத்துக்கொண்டார். ஆறு பொங்கிப் பிரவகித்து ஊருக்குள் வர, அனைவரும் முழங்கால் வரைக்கும் ஆடைகளைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, தூரத்தில் எங்கும் பரவிக்கிடக்கும் வெள்ளத்தைப் பார்த்த சந்தோஷத்தை நினைத்துக்கொண்டார். இது எல்லாம் இனிமேல் கிடையாதா என்று நினைத்தபோது அவரது சோகம் எல்லை மீறியது.

எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்த பண்டாரத்தின் மீது நீர்த்துளிகள் பட்டன. எழுந்து உட்கார்ந்து வானத்தைப் பார்த்தார். ஒன்றிரண்டு நீர்த்துளிகள் வானத்திலிருந்து பொத்துக்கொண்டு வருவது தெரிந்தது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. வலுத்த மழை மேலும் மேலும் வலுக்க, இதுவரை தான் காணாத ஒரு பேய் மழையைக் காணப் போகிறோம் என்பது பண்டாரத்திற்குப் புரிந்துபோனது.

சுரேஷன் நாயரின் குழு தீவிரவமாக ஆராய்ந்தது. எங்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமில்லை. இது புயலில்லை என்றார் சுரேஷன் நாயர். ஆனால் மழை கொட்டிக்கொண்டே இருந்தது. காற்று சுழன்றடித்தது. தீவிரமான மழை. விடாமல் இரண்டு நாள்கள் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. முக்கியச் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. எல்லா ஆறுகளிலும் வெள்ளம். நிறைய வீடுகளில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சுரேஷன் நாயர் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவினார். இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்கிற அறிக்கை மட்டும் வானிலைச் செய்தியாகச் சொல்லச் சொல்லிவிட்டுப் போனார்.

வீடுகளில் வெள்ளம் புகுந்த மக்கள் கோவிலின் படிகளில் ஏறி, மேலே உள்ள கோவிலில் தஞ்சம் பெற ஓடினார்கள். பண்டாரம் உறக்கச் சொன்னார், ‘மழய நிறுத்திட்டோம்னு சொன்னவன் அறிவாளி, மழ வரும்னு முன்னக்கூடியே இங்க வந்து நிக்கவன் பயித்தியக்காரனா, சொல்லுங்கல.’

தூரத்தில் கிடந்த துணியை எடுத்து மீண்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார் பண்டாரம்.

Share

கரம் ஹவா – கற்பிதங்களும் யதார்த்தமும்

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவிலேயே தங்கும் ஒரு இஸ்லாமியக் குடும்பம் நேர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய திரைப்படம். 1973ல் இயக்கப்பட்ட இத்திரைப்படம் இந்திய மாற்றுத் திரைப்படங்களின் முன்னோடிகளுள் ஒன்று. சிறந்த இசை, சிறந்த நடிப்பு இவற்றோடு மிக முக்கியமான பிரச்சினையை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து பொருட்படுத்தத்தக்க வகையில் எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமும் இதுதான் எனத் தெரிகிறது.

சலீம் மிர்ஸா என்னும் காலணி உற்பத்தியாளரின் வாழ்க்கையை மையமாக வைத்து நகர்கிறது. கதை. பிரிவினைக்குப் பின் சலீம் மிர்ஸாவின் உறவினர்கள் பெரும்பாலானோர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட, சலீம் மிர்ஸா இந்தியாவிலேயே தங்குகிறார். எந்த முஸ்லிமும் எப்போதுவேண்டுமானாலும் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்கிற எண்ணம் நிலவுவதால், யாரும் சலீம் மிர்ஸாவிற்கு கடன் தர மறுக்கிறார்கள். வங்கியில் கடன் வாங்கும் பல முஸ்லிம்கள் கடனை அடைக்காமல் பாகிஸ்தான் சென்றுவிடுவதால் வங்கிகளும் சலீம் மிர்ஸாவிற்குக் கடன் தர மறுக்கின்றன.

சலீம் மிர்ஸாவின் தம்பி பாகிஸ்தானுக்குச் சென்றுவிடுவது ஊரில் தெரிந்துவிடுவதால், சலீம் மிர்ஸா தங்கியிருக்கும் அவரது தம்பியின் வீட்டிற்கும் பிரச்சினை வருகிறது. வேறு வழியின்றி வாடகை வீட்டிற்கு இடம்பெயர்கிறார்கள்.

சலீம் மிர்ஸாவின் மகளின் காதலன் குடும்பமும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்கிறது. அவன் வந்து அவளை மணம் முடிப்பது இயலாமல் போகும் நிலையில், அவள் தன் அத்தை மகனையே காதலிக்கிறாள். அவனும் பாகிஸ்தான் சென்றுவிடுகிறான். அவனுக்கு அங்கேயே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஏற்கெனவே அவனோடு உடலுறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், அவனை மறக்கமுடியாமல், தற்கொலை செய்துகொள்கிறாள் அமினா.

சலீம் மிர்ஸாவின் மூத்த மகன் இனியும் இந்தியாவில் இருந்தால் வேலைக்காகாது என்று பாகிஸ்தான் செல்கிறான். தனது தம்பியையும் அங்கு வருமாறு வற்புறுத்துகிறான்.

சலீம் மிர்ஸாவின் இரண்டாவது மகன் நன்கு படித்தும் வேலை கிடைக்காமல் அலைகிறான். அவனும் அவனையொத்த நண்பர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் சாய்கிறார்கள்.

சலீம் மிர்ஸா தன் தம்பியிடமிருந்து வீட்டை வாங்க, தன் வீட்டின் நகலை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார். அது பிரச்சினையாகி அவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்க்கிறார் என்று கைது செய்யப்படுகிறார். அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்தாலும் மக்கள் அவரை பாகிஸ்தான் உளவாளியாகப் பார்க்கிறார்கள். (இந்த ஒரு காட்சி மட்டுமே கொஞ்சம் நாடகத்தன்மையுடன் அமைக்கப்பட்டுவிட்டது. அவர் நடந்து வரும்போது, தெருவில் நிற்பவர்கள் எல்லாம் அவரைப் பார்த்து ‘பாகிஸ்தான் உளவாளி பாகிஸ்தான் உளவாளி’ என்று சொல்கிறார்கள்!)

சலீம் மிர்ஸா வரும் குதிரைவண்டி தெரியாமல் ஹிந்துக்கள் குடியிருப்பில் இருக்கும் ஹிந்துகள் மீது மோதிவிட, பிரச்சினை வெடித்து மதக்கலவரம் ஆகிறது. சலீம் மிர்ஸாவின் காலணி உற்பத்திக்கூடம் தீ வைக்கப்படுகிறது.

மனம் வெறுக்கும் சலீம் மிர்ஸா தன் மனைவி மகனோடு பாகிஸ்தான் செல்ல முடிவெடுக்கிறார். வீட்டைக் காலி செய்துகொண்டு வரும் வழியில் பெரும் ஊர்வலம் போகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து செல்லும் ஊர்வலம் அது. அனைவருக்கும் வேலை கேட்டு நடக்கும் ஊர்வலம். மகன் அந்த ஊர்வலத்தில் பங்குகொள்ள அனுமதி கேட்டு தந்தையைப் பார்க்கிறான். தன் மகனின் உலகம் இந்த ஊர்வலத்தில், இந்தப் போராட்டத்தில் இங்கேதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் சலீம் மிர்ஸா, அவனைத் தடுப்பதில்லை. அதுமட்டுமன்றி, தனது உலகமும் இங்கேதான் இருக்கிறது என்று புரிந்துகொண்டு, பாகிஸ்தான் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு அப்போராட்டத்தில் இணைகிறார்.

1973ல் எடுக்கப்பட்ட திரைப்படம் மிக யதார்த்தமாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. சலீம் மிர்ஸாவாக வரும் நடிகர் Balraj Sahni இன் நடிப்பு மிக உணர்வுபூர்வமானது. தனது மனதின் சலனங்களை முகத்திலேயே காண்பித்துவிடுகிறார். Ismat Chughtai இன் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை இது. மூலக் கதையில் பிரிவினைக்குப் பின் கைவிடப்படும் ஸ்டேஷன் மாஸ்டர், திரைக்கதையில் காலணி தயாரிப்பவராக மாற்றப்பட்டிருக்கிறார். முதலில் இத்திரைப்படத்தை இயக்க ஒத்துக்கொள்ளும் ஒரு தயாரிப்பாளர், இப்படம் வெளிவருவதில் சிக்கல்கள் வரலாம் என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார். என் எஃப் டி சி (அப்போது எஃ எஃ சி) உதவியுடன் இத்திரைப்படம் எடுக்கப்படுகிறது. இத்திரைப்படம் எடுக்க சில பிரச்சினைகள் வந்தபோது, சில இடங்களில் இத்திரைப்படம் எடுக்கப்படுவதுபோல செட் அப் செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத இடங்களில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தங்கும் ஒரு முஸ்லிம் குடும்பம் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன. தான் காதலிக்கும் காதலன் காஸிமை பிரியவேண்டி நேர்கிறது அமினாவிற்கு. (சலீம் மிர்ஸாவின் மகள்.) அவன் அவளைத் தேடி பாகிஸ்தானிலிருந்து ஓடி வருகிறான். ஆனால் போலிஸால் சிறைப்பிடிக்கப்பட்டு இந்திய எல்லைக்குக் கடத்தப்படுகிறான். அவன் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்ததும், மாடிப்படிகளில் எதிரெதிரே அவனும் அவளும் சந்தித்துக்கொள்ளும் காட்சியை ஒரு கவிதை எனலாம். இக்காதல் நிறைவேறாது என்பதைப் புரிந்துகொள்ளும் அமினா, தன்னையே சுற்றி வரும் தன் அத்தை மகனின் காதலை ஏற்கிறாள். பதேபூர் சிக்ரி, தாஜ்மகால் என சுற்றுகிறார்கள். முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். உடலுறவு ஏற்படுகிறது. அவனும் பாகிஸ்தான் செல்கிறான். இக்காதலும் தோல்வி அடைவதைத் தாங்கமுடியாத அமினா தற்கொலை செய்துகொள்கிறாள். அமினாவின் இரண்டாவது காதல் தொடங்கும் இடமும் கவிதை என்றே சொல்லவேண்டும். பதேபூர் சிக்ரியில் அவர்களுக்கு இடையில் உருவாகும் காதல் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஒலிக்கும் பாடல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அமினா தன் பழைய காதலின் கடிதத்தைக் கிழிக்கவும் அப்பாடல் நிற்கவும் என, மிக நேர்த்தியான காட்சிகளை இயக்கியிருக்கிறார் இயக்குநர். (M. S. Sathyu.) அமினா இரண்டாவது காதல் கொண்டதும், தன் பழைய காதலினின் கடிதங்களைக் கிழிப்பதற்கு முன்பு அதைப் படிக்கிறாள். அப்போது அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகள் அசாதாரணமானவை. தன்னை விட்டுவிட்டு, பாகிஸ்தானில் ஒரு அமைச்சரின் மகளைத் திருமணம் செய்துகொண்டுவிட்ட காதலனின் மறக்கமுடியாத முகமும், அவனது ஆசை மொழிகளும், அவன் மீதான வன்மமும் என பல உணர்வுகளை ஒருங்கே வெளிப்படுத்துகிறது அமினாவின் முகம்.

படத்தின் தொடக்கக் காட்சிகள் மிக முக்கியமானவை. தன் உறவினர் ஒருவரை பாகிஸ்தானுக்கு வழியனுப்பிவிட்டு வருகிறார் சலீம் மிர்ஸா. வண்டியில் திரும்பிச் செல்லும்போது வண்டி ஓட்டுபவன் சொல்கிறான், ‘இந்நாட்டில் நாய் கூட வாழாது’ என்று. அவனுக்குள் பாகிஸ்தான் பற்றிய கனவு முட்டிக் கிடக்கிறது. இப்படத்தில் பாகிஸ்தான் ஒரு கனவு தேசமாகவே காட்டப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்குச் செல்லும் யாரும் அங்கே தோல்வியடைவதில்லை. அங்கிருந்து பாகிஸ்தானின் வளங்களைப் பட்டியலிட்டு கடிதம் அனுப்புகிறார்கள். அங்கே செல்லும் அரசியல்வாதியும் செல்லுபடியாகிறார். இதைக் காணும் கேட்கும் இந்தியாவில் தங்கிவிட்ட முஸ்லிம்களுக்குள் பாகிஸ்தான் என்னும் கனவு தேசம் பற்றிய கற்பிதங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. இதனை மிக அழகாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர். இவற்றை வைத்தே அத்தலைமுறையின் இந்தியாவில் தங்கும் முஸ்லிம்களின் மனநிலையைப் படம் பிடிக்கிறார். அடுத்த தலைமுறையைக் கொண்டு அவர் உருவாக்கிய கனவு தேசம் பற்றிய கற்பிதங்களை உடைக்கிறார். சலீம் மிர்ஸாவின் மகன் இந்தியாவே தன் தேசம் என்பதைக் கண்டடைகிறான். எங்கேயும் எப்போதும் எதற்கும் சவால்களும் பிரச்சினைகளும் உண்டு என்றும் அதை எதிர்ப்பதும் வெல்வதுமே வாழ்க்கை என்பதை உணருகிறான். அதற்கான விடை நாடுவிட்டுப் போவதில் இல்லை என்பதில் முடிவாக இருக்கிறான். இதே எண்ணம் சலீம் மிர்ஸாவிற்குள் ஆரம்பித்தில் இருந்தே இருந்தாலும், கனவு தேசம் பற்றிய கற்பிதங்கள் அவரை சலனப்பட வைக்கின்றன. அவர் மயங்குகிறார். பாகிஸ்தான் என்பது எல்லா முஸ்லிம்களுக்கான தேசம் என்றும் அது எப்போதும் எல்லா முஸ்லிம்களையும் அரவணைக்கக் காத்திருக்கிறது என்பதுமான அபத்தமான கற்பனைகளை தன் மகனைக் கொண்டு கடக்கிறார் சலீம் மிர்ஸா.

இன்னொரு முக்கியமான திரைமாந்தர் காஸிம்மின் அப்பா. அவர் முஸ்லிம் லீக்கின் பிரதிநிதி. முகமது அலி ஜின்னா உள்ளிட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்திய முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரே தலைவர் தான் மட்டுமே என்கிற எண்ணம் அவருக்குத் தீவிரமாக இருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைமைக்காகப் போராடும் ஒரே தலைவர் தாந்தான் என்று பிரகடனப்படுத்திக்கொள்கிறார். இந்தியாவில் இருக்கும் அத்தனை முஸ்லிமும் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாலும், இங்கே ஒரேயொரு முஸ்லிமின் மூச்சு மட்டும் கடைசி வரை இருக்கும், அது தனது மூச்சுதான் என்கிறார். ஏனென்றால் இந்தியாவே தனது நாடு என்று முழங்குகிறார். அடுத்த நாளே பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார். அங்கிருந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியா வரும் ஹிந்து, முஸ்லிம்களின் நிலபுலன்கள், தொழிற்சாலைகளைப் பயன்படுத்தி பணக்காரராகிவிடலாம் என்று பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார். இவரது சந்தர்ப்பவாதமே காஸிம்மின் அமினாவுடனான காதலையும் உடைக்கிறது.

இன்னொரு முக்கியமான பாத்திரம் சலீம் மிர்ஸாவின் தாய். ஏன் தனது பிறந்த வீட்டை தான் காலி செய்யவேண்டும் என்று புரியாமல் தவிக்கிறாள். வீட்டைக் காலி செய்ய மறுத்து அவள் யாருக்கும் தெரியாமல் ஓரிடத்தில் ஒளிந்துகொள்கிறாள். அவளை வம்படியாகத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. தான் சாகுமபோது தான் வாழ்ந்த வீட்டிலேயே சாக ஆசைப்படுகிறாள். அவளது மரணம் அவள் நினைத்த மாதிரியே அவள் வாழ்ந்த, திருமணம் ஆகிவந்த அவளது பழைய வீட்டிலேயே நேர்கிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையையோ, இந்து முஸ்லிம் பிரச்சினையையோ அவளால் கடைசிவரை புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

கடைசியில் சலீம் மிர்ஸா போராட்டத்தில் அமைதியாகக் கலந்துகொண்டு செல்கிறார். இத்தனை நாள் அவருக்கிருந்த பிரச்சினைகளின் இன்னொரு காரணம், அவர் இந்திய நீரோட்டத்தில் கலக்காமல் இருந்ததே என்கிற ஒரு எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்படும் வண்ணம், அவர் மெல்ல அமைதியாக போராட்டத்தில் கலந்துகொண்டு நடந்து செல்கிறார். இத்தனை நாள் அவருக்கிருந்த பாகிஸ்தான் செல்வது பற்றிய மனமயக்கங்கள் தீர்கின்றன. எங்கும் எல்லா இடத்தில் போராட்டம் நிச்சயம் என்பதை அவருக்குப் புரிய வைக்கிறான் அவரது மகன். மகனுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த ஒரு நாட்டையும் தாய் நாடாக நினைக்கமுடிவதில்லை. அவனது நண்பர்கள் அவனிடம் சொல்கிறார்கள், ‘உனக்கு இந்தியாவில வேலை கிடைக்கலைன்னா பாகிஸ்தான்ல வேலை தேடலாம். நாங்க எங்கே போவோம்’ என்று. அவன் வேலை கேட்டுச் செல்லும் இடங்களிலெல்லாம் அவன் பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறான். அத்தனையையும் மீறி, அவன் தன் வாழ்க்கையை இந்தியாவிலேயே கண்டடைகிறான்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னான இந்திய முஸ்லிம்களின் மனநிலையையும், பாகிஸ்தான் பற்றிய கற்பிதங்களையும், அதை உடைக்கும் அடுத்த தலைமுறையினரையும் பற்றிய முக்கியமான திரைப்படம்.

Share