
Archive for ஹரன் பிரசன்னா
UTS App

சென்னை தினம் – 2017
டிசம்பர் 2004. இனி சென்னையில்தான் வேலை என்ற நிலையில் சென்னையில் வந்து இறங்கினேன். பதிமூன்று ஆண்டுகாலம் ஓடிவிட்டது. தொடக்கத்தில் சென்னை தந்த கலக்கம், எரிச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. திருநெல்வேலி சொர்க்கம் என்றும் சென்னை குப்பை என்ற எண்ணமும் மனம் முழுக்க நிறைந்திருந்தது. ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும் எப்போது இந்த சென்னையை விட்டு ஓடுவோம் என்ற எண்ணம் மேலோங்கிய காலம். இரவு ஏழு மணிக்கு மேல் சென்னைக்குக் கொம்பும் ரத்தக்காட்டேறியின் பற்களும் முளைத்துவிடும் என்று நம்பிய காலம். சென்னையில் கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் எரிச்சலை மட்டுமே கொண்டு வந்தது. முறையான பேருந்து இல்லை. மரியாதை இல்லை. ஊர் முழுக்க குப்பை. நீர்ப் பிரச்சினை. இப்படியே எண்ணங்கள் ஓடும்.
மெல்ல மெல்ல சென்னை என்னை உள்வாங்கிக் கொண்டது. இப்போதும் திருநெல்வேலிக்குச் செல்வது சொர்க்கம் போன்ற ஒரு நிகழ்வுதான் என்றாலும், சென்னையை வெறுத்துச் செல்லும் காலங்கள் ஓடிப்போய்விட்டன. திருநெல்வேலியில் ஒருவாரம் தங்கிவிட்டு வரலாம், இனி அங்கேதான் வாழ்க்கை என்றால் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. சென்னை தன் கடல் போன்ற வளத்தைத் திறந்துகாட்டிவிட்டால் அக்கடலின் வசீகரத்தில் இருந்து யாராலும் வெளியேறவே முடியாது. சென்னையின் நிறம் நீலம் என்றால் நீலம் தீண்டிய உடல் இழக்க விரும்பாத போதையை சென்னை உங்களுக்குப் புகட்டும். எனக்குப் புகட்டி இருக்கிறது.
தொடக்கத்தில் கண்ணில் பட்ட எரிச்சல்களெல்லாம், சென்னையின் குணங்கள் என்றாகிப் போகின. சென்னையின் பிரம்மாண்டத்துக்கு இணையான ஊர் தமிழ்நாட்டில் இல்லை என்று அடிக்கடித் தோன்றும். சென்னைக்குள் பத்து திருநெல்வேலிகளைப் பார்க்கலாம். ஐந்து திருச்சிகளைப் பார்க்கலாம். அப்புறம் என்ன?
கிழக்கு பதிப்பகம் சென்னை தினத்தை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில், சென்னை குறித்த இதே எண்ணத்தைப் பதிவு செய்து வந்த கதைகள் ஏராளம். பொதுவாக சென்னை ஒரு பலாப்பழம் போலவே எல்லாராலும் பார்க்கப்படுகிறது என்று தோன்றுகிறது. தொடக்கத்தில் முள், உள்ளே சுளை. சென்னையின் வெள்ளம் தந்த மிரட்டல் சென்னையைப் பற்றிய பீதிக்கதைகளுக்கு வேறொரு நிறம் கொடுத்தது. ஆனால் அதே வேகத்தில் சென்னை மீண்டெழுந்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிசயித்து நின்றது. சென்னையைப் பற்றித் திரைப்படங்கள் சொல்லிய கதைகள், சென்னையைத் தாண்டிய தமிழ்நாட்டில் சென்னையைப் பற்றிய ஒரு கருத்தை முற்றான ஒரே கருத்தாக எல்லார் மனத்திலும் பதிய வைத்திருக்கின்றன. அந்த சென்னையும் உண்மைதான் என்றாலும் அது மட்டுமே சென்னை இல்லை. சென்னையிலும் அன்பு உண்டு. நம்புங்கள்.
சென்னையில் யாருக்காவது கஷ்டம் என்றால் ஒருத்தனும் திரும்பிப் பார்க்கமாட்டான் என்பதெல்லாம் பொய். எப்படி திருநெல்வேலியில் சில நேரம் பார்ப்பார்களோ சில நேரம் பார்க்கமாட்டார்களோ அப்படித்தான் சென்னையிலும். சென்னைக்கென்று பிரத்யேகமான குணங்கள் இருக்கலாம். ஆனால் அவை தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, திருகிய குணங்கள் அல்ல. வெட்டியும் ஒட்டியும் உள்ளவை மட்டுமே. எல்லா இடங்களையும் போலத்தான் சென்னையும்.
சென்னையைத் தாண்டிய தமிழ்நாடு சென்னையைப் பார்க்கும் பார்வை தரும் கலவரத்துடன் சென்னைக்குள் வருபவர்கள் நீண்ட கால வாழ்வில் பெரிய வித்தியாசம் தெரியாத நிலையில் சென்னைக்குள் அமிழ்வார்கள். கிராமப்புறங்களில் இருக்கும் அடிப்படைவாதப் பிரச்சினைகள்கூட சென்னையில் இருப்பதில்லை என்ற திடீர் ஞானோதயமெல்லாம் தட்டுப்படத் தொடங்கும். அப்போது நீங்கள் சென்னைடா என்ற ஹேஷ் டேக் போட்டுக்கொண்டிருப்பீர்கள்.
#சென்னைடா. #சென்னைதினம். #ஐலவ்சென்னை
அம்மா – சொல்லில் அடங்காதவள்
அம்மாவின் மரணம் கடந்த ஞாயிறு நள்ளிரவு 1.20 மணிக்கு நிகழ்ந்தது. கடந்த சில மாதங்களாகவே அம்மா மெல்ல மெல்ல மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இப்படி இதற்கு முன்பும் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. அவற்றில் தப்பித்துக்கொண்டவரை இந்த முறை விதி வென்றுவிட்டிருந்தது. சென்னையில் என் வீட்டில் இருந்து என் அண்ணன் வீட்டுக்கு திருநெல்வேலிக்குப் போகவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். கடந்த மே மாதம் திருநெல்வேலிக்குச் சென்றார். அப்போதே உடல்நிலை மிகவும் பலவீனமாகவே இருந்தது. ஆனாலும் பிடிவாதமாக திருநெல்வேலி சென்றே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். திரும்ப அம்மா சென்னைக்கு வரமாட்டார் என்று அப்போதே என் மனதில் பட்டது. அத்துடன் அவரது இறுதி யாத்திரை திருநெல்வேலியில் நிகழ்வதுதான் நியாயம் என்றும் எனக்குத் தோன்றியது.

அம்மாவைப் பற்றி எழுதவேண்டும் என்கிற உணர்வு உள்ளது. ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. கடலைக் குடிக்கப் புகுந்த பூனை என்பதைப் போலவே உணர்கிறேன். பிறந்த நொடி முதல் இந்நிமிடம் வரை எப்போதும் அம்மாவின் ஒரு பிள்ளையாகவே நான் இருந்திருக்கிறேன். அன்போ சண்டையோ எல்லாமே அம்மாவுடன் என்றாகிய வாழ்க்கை என்னுடையது. இன்று அம்மாவை இழந்து நிற்கும்போதுதான் அம்மாவின் தாக்கம் என்ன என்பது முழுமையாகப் புரிகிறது.
பிறந்த மூன்று மாதத்தில் என்னைப் பெற்ற லீலா அம்மா மரணம் அடைந்தபோது என்னைக் கையில் வாங்கிக்கொண்டவர் என் அம்மா சரோஜா அம்மா. அன்றுமுதல் இன்றுவரை அவரது உலகம் முழுக்க முழுக்க என்னைச் சுற்றியதாகவே இருந்திருக்கிறது. என்னிடம் என்றில்லை, என் வீட்டில் உள்ள ஒவ்வொருவர் மேலும் அவர் உண்மையான அன்புடனும் அக்கறையுடனும் இருந்தார். அந்த அன்பும் அக்கறையுமே அவரது பலம். அதில் போலித்தனம் இருக்காது. கோபம் இருந்தால் அதை உடனே வெளியே காட்டிவிடுவார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் என் அம்மாவின் குடும்பமாகவே இருந்தது. ஒவ்வொருவருக்கும் இருந்த தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் என் அம்மாவின் பங்களிப்பு இருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. படிப்பறிவு இல்லை. பட்டறிவு மட்டுமே. எதைக்கொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் கையில் எடுத்தார்? ஒரே பதில், உண்மையான அன்பு என்பது மட்டுமே.
எல்லாரையும் தாண்டி என் மேல் அதிக ஒட்டுதலாக இருந்தார் என்பதை நான் எப்போதும் உணர்ந்தே இருக்கிறேன். என் குடும்பத்தினர் அனைவருமே அதை உணர்ந்திருந்தார். என் அண்ணன் அடிக்கடிச் சொல்வது, என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய அதிர்ஷ்டம் இப்படி ஒரு அம்மா எனக்குக் கிடைத்திருப்பது என்பது. அது உண்மைதான். இப்படி ஒரு அம்மா கிடைப்பதற்குப் பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்கவே வேண்டும்.
சேரன்மகாதேவியில் ஒரு நாளில் மாலைப் பொழுதில் பேருந்து நிலையம் அருகில் இருந்த ஓரிடத்தில் வைத்து எதோவொரு பத்திரத்தில் கையெழுத்திட்டார்கள் என் அம்மாவும் அப்பாவும். (அம்மாவுக்கு இணையாகக் கொண்டாடப்படவேண்டியவர் என் அப்பா. அப்படி ஒரு நல்ல இதயம் கொண்டவர் அவர். இவர்கள் இருவருக்கும் மகனாக இருப்பது ஒரு பேறு.) அது என்னை அவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொண்ட தினம். அதற்கு முன்பும்கூட நான் அவரது மகனாக மட்டுமே அறியப்பட்டிருந்தேன். ஆனாலும் சட்டரீதியாக எடுத்துக்கொண்டார்கள். அந்தப் பத்திரத்தில் அவர்கள் கையெழுத்திட்ட காட்சி இன்னமும் மங்கலாக நினைவிருக்கிறது. அதன் கடனை நான் அவருக்குக் கொள்ளி வைப்பதன் மூலமாக அடைக்கவேண்டும் என்பதே என் அம்மாவின் ஒரே ஆசை. அதைச் செய்துமுடித்தேன். கடைசியாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும்போதுகூட, ‘என் கடைசி காலத்துல நீ கூட இருக்கணும். சங்கரர் மாதிரி வந்து சேரணும்’ என்றார். எங்கே இருந்தாலும் வருவேன் என்று சத்தியம் செய்துவைத்தேன்.
அம்மாவை எப்படி வரையறுப்பது என்று யோசித்தால் உணவின் வடிவமாகவே வரையறுக்கத் தோன்றுகிறது. அம்மாவின் ஒரே எண்ணம், பிள்ளைகள் பசியோடிருக்கக்கூடாது என்பதே. அம்மா தன் பதினெட்டாவது வயதில் என் அப்பாவைக் கைப்பிடித்து வீட்டுக்குள் நுழையும்போது அவரது நாத்தனாருக்கு வயது 30 நாள். அதாவது 30 நாள் குழந்தை. மைத்துனனுக்கு வயது 6 அல்லது 7. இப்படி குழந்தைகளுடனேயே அவரது மண வாழ்க்கை துவங்கியது. ஆனால் அவருக்கென்று ஒரு குழந்தை பிறக்கவில்லை. பெரிய குடும்பம். எல்லாரையும் அரவணைத்து அதிர்ந்து அடக்கி என சகலமும் செய்து குடும்பத்தின் இணையில்லாதவர் ஆனார். அம்மா செய்த பணிவிடைகளை இன்றுவரை நினைவுகூரும் என் சித்தப்பாவும் அத்தையும் அடிக்கடிச் சொல்வது, எங்க அம்மா எங்களைப் பெத்தா, செஞ்சது எல்லாமே அண்ணிதான் என்பது. இது வாய்வார்த்தை இல்லை, உண்மை. இன்றுவரை பிறந்த குழந்தைகள் அத்தனை பேரையும் என் அம்மாவுக்கு உயிர். குழந்தைகள் வயிற்றுப் பசியுடன் இருக்கக்கூடாது என்பது மட்டுமே அம்மாவின் முதலும் கடைசியுமான குறிக்கோள். இதனாலேயே என் வீட்டில் பல சின்ன சின்ன சண்டைகள் நிகழ்ந்ததுண்டு. காப்பி, டிஃபன், சாப்பாடு எனக் குழந்தைகளுக்கு எல்லாமே அந்த அந்த நேரத்தில் நிகழவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்.

நான் ப்ளஸ் டூ படித்தபோது பள்ளி முடிந்து மாலை 5.45 மணிக்கு வீட்டுக்கு வருவேன். அடுத்த டியூஷன் 6 மணிக்கு அந்த பதினைந்து நிமிடத்துக்குள், குழம்பு சாதம், ரசம் சாதம், மோர் சாதம் எனப் பிசைந்து கையில் போட்டுத்தான் அனுப்பி வைப்பார். கையில் பிசைந்து உருண்டை பிடித்துக் கொடுப்பது என் அம்மாவின் வழக்கம். கடந்த பத்து வருடங்களில் அவருக்குக் கை வலி வந்துவிட்டதால் இதைத் தவிர்த்துவிட்டார். அதற்கு முன்பு வரை எப்போதும் கையில் உருண்டை பிடித்துக் கொடுப்பதுதான் அவரது பாணி. அப்படியேதான் என் உடல் வளர்ந்தது. மிக மோசமான சமையல்கூட என் அம்மாவின் கை வழியே வரும்போது எனக்குப் பிடித்துப் போனதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
அம்மா சமையல் செய்த காலங்கள் மிகக் குறைவு. எப்போதும் சுற்றுவேலையே அவரது முதல் பணி. சமையல் என்று செய்தது, நானும் அம்மாவும் அப்பாவும் மதுரையில் தனித்து இருந்த ஒரு வருடத்திலும், பின்னர் அக்கா கல்யாணம் ஆகிச் சென்றபிறகான ஒரு வருடத்திலும்தான். அண்ணி வீட்டுக்குள் காலை வைத்த மறுநாள் முதல் சமையலறை பக்கமே அம்மா போகவில்லை. அம்மாவின் சமையல் கட்டுசெட்டாக இருக்கும். சிக்கனத்தின் உச்சம் அம்மா. ஒருவகையில் கஞ்சம் என்றுகூடச் சொல்லலாம். மதுரையில் ஒரு டவராவில் சாம்பார், ஒரு டவராவில் ரசம் என வைப்பார். ஆச்சரியமாக இருக்கும். அம்மா அட்டகாசமாகச் செய்வது, பாகல் பொறியல், பிட்ளை, வெந்தயக் குழம்பு, மோர் களி போன்றவை. எப்போதும் ஒரு சிட்டிகை உப்பு தூக்கலாகவே இருக்கும் அவரது சமையலில். எத்தனை சொன்னாலும் அது சரியாகவே ஆகாது.
அம்மாவின் பாதி வாழ்க்கை வரை முழுக்க கஷ்ட ஜீவனம். என் அண்ணா வேலைக்குச் செல்லவும்தான் நாங்கள் நல்ல உணவையே பார்க்க ஆரம்பித்தோம். அதுவரை அம்மா அத்தனை கஷ்டத்தையும் வெகுமான மன உறுதியுடன் எதிர்கொண்டார். இரண்டு கைகளில் பத்து பத்து கிலோ அரிசி மூட்டைகளை ரேஷன் கடையில் வாங்கிச் சுமந்துகொண்டு வரும் காட்சி இன்னும் கண்ணில் உள்ளது. மண்ணெண்ணெய்க்கு வரிசையில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடப்பார். மதுரையில் தண்ணீர்ப் பஞ்சத்தில் நீருக்காக அலைந்ததெல்லாம் இப்போது நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படியெல்லாம் அம்மா வளர்த்த என் அக்கா அடிக்கடிச் சொல்வார், அம்மாவின் வளர்ப்பு என்பதால்தான் எனக்குப் புகுந்த வீட்டில் மரியாதை என்று. உண்மைதான். அம்மாவுக்கும் அக்காவுக்குமான உறவை வரையறுப்பது கஷ்டம். எப்போது பிறாண்டிக் கொள்வார்கள், எப்போது கொஞ்சிக் கொள்வார்கள் என்று சொல்லவே முடியாது. ஆனால் உள்ளூர இருக்கும் அன்புக்கு எக்குறையும் இல்லை.

அம்மாவின் இளமைப் பருவத்தில் அவரது ஆர்வம் மூன்று விஷயங்களில் இருந்தது. இதுவே அவரது வாழ்க்கையாகக் கொள்ளலாம். ஒன்று, தொடர்கதைகளை பைண்ட் செய்து வைப்பது. கே.பாலசந்திரின் மூன்று முடிச்சு நாவலை இப்படி நான் வாசித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் வண்ணப் படங்களுடன் பைண்ட் செய்து வைத்திருந்தார். உறவினர் ஒருவர் அதை லவட்டிக்கொண்டு போனதை கடைசிக் காலம் வரையில் புலம்பிக்கொண்டிருந்தார். இரண்டாவது ஆர்வம், சினிமா பார்ப்பது. வாரத்துக்கு இரண்டு மூன்று படங்கள் அசராமல் பார்ப்பார் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை சிவாஜி கணேசனின் 275 படங்கள் அடங்கிய பட்டியல் வெளி வந்திருந்தது. அதில் 197 படங்கள் பார்த்திருந்தார். சிவாஜி கணேசன் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு சிவாஜி வெறியர்கள் சூழ் குடும்பம் எங்களது. மூன்றாவது ஆர்வம், ரேடியோவில் பாட்டுக் கேட்பது. இரவில் கண் விழித்து டீ போட்டுக் குடித்துக்கொண்டு பாடல் கேட்டிருக்கிறார். இவையெல்லாம் அவரது 35வயது வாக்கில் மெல்ல விட்டுப் போயின. இவை அனைத்தையும் எங்கள் குடும்ப நலன் காவு வாங்கிக் கொண்டிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

கடைசிப் பத்து வருடங்களில் அம்மாவின் ஒரே பொழுது போக்கு சன் டிவியின் மெகா சிரீயல் என்றானது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு வாக்கில் சங்கரா டிவியும் திருப்பதி தேவஸ்தானமும் வந்தபோது, அவற்றுக்குள் அப்படியே அமிழ்ந்து போனார். கடைசிவரை மெகா தொடரும் கடவுளர் சானலுமே அவரது ஒரே பொழுது போக்காக இருந்தது. டிவியைப் பார்த்துக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வார். இங்க வாடா வந்து கும்பிட்டுட்டுப் போ என்று கூப்பிடுவார். இந்த மூன்று சானல்களுக்கும் மனதார நன்றி சொல்ல விரும்புகிறேன்.

அம்மாவுக்குப் பேரக் குழந்தைகள் மேல் உயிர். மொத்தம் 8 பேரக் குழந்தைகள். ஒவ்வொருவரும் உயிர்தான். யாரையும் தனித்துச் சொல்லமுடியாது என்றாலும், முதல் பேரனான சுஜித் மேல் கொஞ்சம் வாஞ்சை அதிகம்தான். அதேபோல் கடைசி பேரனான நாராயண் மேலும் அத்தனை பிரியம். என் இரண்டு குழந்தைகள் மேலும் உயிராக இருந்தார் என்றாலும், மஹிதான் அவரது வாழ்க்கை என்ற அளவுக்கு ஒட்டிப்போனார். அபிராமை வளர்த்ததே அவர்தான் என்பதில் அவருக்கு அத்தனை கர்வம். மஹி பிறந்தபோது, பொண்ணா, சரி சரி, ஆணோ பொண்ணோ என்ன இப்போ என்றே சொன்னார். பின்னர் பலமுறை, இந்த வைடூரத்தையா வேணான்னு நினைச்சேன் என்று சொல்லி சொல்லிக் கொஞ்சுவார். தன்னுடைய வாரிசி மஹிதான் என்று உறுதியாக நம்பினார். தான் இறந்துவிட்டால் தன் பேரக் குழந்தைகளைப் பார்க்கமுடியாது என்பது மட்டுமே அவரது பெரிய சோகமாக இருந்தது. இதைச் சொல்லி பல தடவை அழுதிருக்கிறார். தான் இறந்துவிட்டால் தன் உடலைச் சுற்றி எத்தனை பேர் அழுதாலும், சுற்றி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் குரலே தன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்பது அவரது நம்பிக்கை. அது அப்படியே நிகழ்ந்தது. குழந்தைகள் அத்தனை பேரும் சோகத்தின் ஆழம் புரியாத வயதில் விளையாடிக்கொண்டிருக்க, நாங்கள் யாரும் அவர்களைக் கண்டிக்கவே இல்லை. ஏனென்றால் அம்மா விரும்பியதே அதைத்தான்.
கடைசி வரை எப்படியும் பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் தன் இறுதி மூச்சையும் அம்மா விட்டார். அம்மாவின் நினைவுகள் நான்கைந்து நாளாகக் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா துணிவுடன் எத்தனை விஷயங்களை எதிர்கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. என் பதின்ம வயதில் இரவுகளில் காமத்தின் முதல்படியில் நின்றிருந்த காலங்களில் ஒருநாள் காலையில் போகிற போக்கில் அம்மா சொன்னார், ‘அக்காவுக்கு கல்யாண வயசு ஆயிடுச்சு. அடுத்து அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணனும்’ என்று. அந்த வரி தந்த அர்த்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படியே மிரண்டு நின்றேன். அந்த அம்மா சாதாரணமான அம்மா அல்ல. நான் ஒரு பெண்ணைக் காதலித்தபோது அதை அந்தப் பெண்ணுக்குச் சொல்வதற்கு முன்பாகவே அம்மாவிடம் சொன்னேன், அந்தப் பெண்ணிடம் சொல்லப் போகிறேன் என்று. ஒரே வரியில் சொன்னார், ‘ஒத்து வராது. ஆனா உன் இஷ்டம்’ என்றார். அது ஒத்துவராமலேயே போனது.
இப்படி அம்மா எளிதாகக் கடந்த தீவிரமான விஷயங்கள் ஆயிரம் உள்ளன. என் வாழ்க்கையில் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உள்ளது. அதனால்தான் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த இழப்பு பெரியதாக உள்ளது. என்னளவில் இது பேரிழப்பு. இந்த இழப்பு நிகழும் என்று எதிர்பார்த்ததுதான். அதையும் மீறி என்னால் தாங்கிக் கொள்ளமுடியாத அளவுக்கு அது பேரிழப்பாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான்கைந்து நாள்களுக்குப் பிறகுதான் மெல்ல என் நிலைக்குத் திரும்புகிறேன். ஒவ்வொரு விஷயத்திலும் இனி அம்மா சொன்னது நினைவுக்கு வரும். அது ஒரு சுகமான நினைவாகவும் இருக்கும்.
அம்மாவைப் பற்றி முடிப்பதற்கு முன்னால் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம், என் அண்ணியைப் பற்றியும் என் மனைவியைப் பற்றியும். என் அம்மா எத்தனைக்கு எத்தனை அன்பான அம்மாவோ அத்தனைக்கு அத்தனை கடினமான மாமியார். அம்மாவின் ஒரே நோக்கம், தன் சொல் கேட்கப்படவேண்டும் என்பது மட்டுமே. அது ஒரு கெத்து. இப்படி ஒரு மாமியாருக்கு மருமகள்களாக இருப்பது கொஞ்சம் சாபம். அதை எதிர்கொண்டு வெற்றிகரமாகச் சமாளித்தவர்கள் என் அண்ணியும் என் மனைவியும். இன்னும் சொல்லப்போனால் என் அம்மாவின் நிம்மதியான வாழ்க்கைக்குக் காரணம், நானும் என் அண்ணாவும் என்பதைவிட, இவர்கள் இருவருமே. இவர்கள் இருவரும் இல்லையென்றால் எங்கள் வாழ்க்கையே நரகமாகிப் போயிருக்கும். அம்மாவின் மீதான எனது மற்றும் என் அண்ணாவின் அன்பைப் புரிந்துகொண்டு இவர்கள் தங்களைப் பின்தள்ளி என் அம்மாவின் நலனை முன்வைத்து நடந்துகொண்டார்கள். அதுவும் கடைசி இரண்டு வருடங்களில் இவர்கள் இருவர் செய்த சேவை மறக்க முடியாதது. இதனால்தான் அம்மா தன் கெத்துடன் மரணம் அடைந்தது சாத்தியமானது. இவர்கள் இருவருக்கும் நன்றி என்று சொல்வது சாதாரண வார்த்தை. வேறென்ன சொல்ல.
நாங்கள்
நாங்கள் என்றொரு திரைப்படம் வந்தது. 1992ல். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம். 1991ல் நான் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வீடுமாற்றிக்கொண்டு வந்துவிட்டோம். ஆனாலும் மதுரையின் மீதிருந்த காதலும் ஈர்ப்பும் குறையாமல் இருந்த காலகட்டம். எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மதுரைக்குப் போய்விடுவேன். அங்கே இருந்த நண்பர்களுடன் படத்துக்குச் செல்வது ஒரு பொழுதுபோக்கு. அந்தமுறை எந்த நண்பரும் வீட்டில் இல்லை. நாங்கள் இருந்த வளைவுக்குச் சென்று அங்கிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, வேறு என்ன செய்வது என்று தெரியாமல், நான் மட்டும் தனியாகக் கிளம்பி மதி தியேட்டரில் ‘நாங்கள்’ படம் பார்க்கப் போனேன். இந்தப் படத்தைப் பார்க்க ஒரே காரணம், இளையராஜா.
சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ‘பாடு குயில்களே பாச மலர்களை’ பாடலைக் கேட்டபோது, அதுவரை மறந்திருந்த பாடல் நினைவுக்கு வந்தது. அப்படியே நான் மதுரைக்குச் சென்றது, படம் பார்த்தது என எல்லா நினைவுகளும். மதுரையில் அந்த வயதில் பார்த்தபோதே அந்தப் படம் படு குப்பை என்ற எண்ணம் வந்ததை நினைத்துக்கொண்டேன். அப்போது தீபிகா மகாபாரதத்தில் மிகப் பிரபலமாகி இருந்தார். அவர், சிவாஜி, பிரபு என ஏகப்பட்ட பேர் இருந்தும், இருந்ததாலேயே படுகுப்பையாக அந்தப் படம் இருந்தது.
இந்த நாங்கள் திரைப்படம் நான்கைந்து நாள்களுக்கு முன் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சரி, பழைய நினைவுகளுக்காகவும், ‘பாடடி குயிலே’ பாடலுக்காகவும் பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கினேன். இந்தப் படத்தை எப்படி அந்தக் காலத்தில் பொறுமையாகப் பார்த்தோம் என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் தீர்ந்த பாடில்லை.
இன்னொரு அதிர்ச்சி, வசனம் மகேந்திரன். மகேந்திரன் எப்படி இப்படி ஒரு மோசமான படத்துக்கு மோசமான வகையில் வசனம் எழுதினார் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒருவேளை வேறொரு மகேந்திரனாக இருக்குமோ என்று விக்கியில் பார்த்தால், கதை மகேந்திரன் என்றிருக்கிறது. ஆனால் வசனம் மகேந்திரன் என்று படம் சொல்கிறது. என்னதான் மோசமான கதையாக இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவர் எவ்வித ஒரு ‘பளிச்’சும் இல்லாமல் இப்படி வசனம் எழுதமுடியுமா என்ற சோகம் இந்த நிமிடம் வரை தீர்ந்தபாடில்லை. அந்த வயதிலேயே மகேந்திரன் எனக்கு மிகப் பிடித்த இயக்குநர். இருந்தும் அன்று மதுரையில் படம் பார்க்கும்போது எப்படி மகேந்திரன் பெயரைத் தவற விட்டேன் என்பதுவும் பிடிபடவில்லை. 🙂
ஒய் எம் சி ஏ – சென்னை புத்தகக் கண்காட்சி 2017
சச்சின் – பில்லியன் ஆஃப் ட்ரீம்ஸ்
பிக் பாஸ் – கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சி கமலுக்குத் தேவைதானா என்கிற எண்ணமே மேலோங்குகிறது. காலில் அடிபட்டதில் இருந்து கமல் மீண்டும் நடிக்கத் துவங்கவில்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில் இந்நிகழ்ச்சி மூலம் நல்ல பணம் கமலுக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தால் அது நல்லதுதான். ஆனால் இப்படித் தொலைக்காட்சிகளில் வரும் பிரபலங்கள் நாளடைவில் தங்கள் ஸ்டார் கவர்ச்சியையும் அந்தஸ்தையும் இழப்பார்கள் என்றுதான் நான் நம்புகிறேன். கமல் ஸ்டார் அந்தஸ்தைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டாரே என்று அப்பாவியாக (ஒரு பக்க உண்மையை மட்டும்) நம்புபவர்களுக்குச் சொல்ல எதுவும் இல்லை.
இந்திய அளவில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரபலங்களுக்கு இப்படி நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இப்படித்தான் ஆகும். குஷ்பூ தன் நட்சத்திர வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது வந்த தொலைக்காட்சி வாய்ப்புகளை மறுக்க சொன்ன காரணம், ‘தினம் தினம் டிவில வந்தா மவுசு போயிடும்’ என்ற ரீதியில்தான். மவுசு குறைந்தபோதுதான் டிவிக்கு வந்தார். இன்றளவும் நட்சத்திர அந்தஸ்திலும் சரி, மரியாதையிலும் சரி, கமலுக்கு எக்குறைவும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில் இவர் ஏன் தொலைக்காட்சிக்கு வரவேண்டும்? பிக் பாஸ் ஒளிபரப்பாகியதும், தொடக்கத்தில் எல்லா ஊடகங்களிலும் கமலின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும். பின்பு இது ஒரு சடங்காகும். கமலுக்கு இது நேரக்கூடாது.
கமலின் ஒட்டுமொத்த கவனமும் உழைப்பும் திரைப்படங்களில் நடிப்பதிலும், அது இயலாமல் போகும் நேரத்தில் திரைப்படங்கள் இயக்குவதிலும் மட்டுமே செலவழியவேண்டும். அதுதான் கமலுக்கும் தமிழ்த் திரையுலகுக்கும் நல்லது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்பது ஏனோ வருத்தமாகவே இருக்கிறது.
ஃபேஸ்புக்கில் சொன்ன பதில்: (சேமிப்புக்காக)
எனக்குள்ள பிரச்சினைகளைத் தெளிவாகச் சொல்கிறேன். நண்பர் கோவிந்துக்கு நான் பதில் சொல்ல இவையே காரணங்கள்.
* நான் ரஜினி பற்றி பதிவிடும்போதெல்லாம் கோவிந்த் கமலை ஆதரிக்கிறார். இத்தனைக்கும் கமல் ஹிந்து எதிரி, ஹிந்துத்துவ எதிரி. இதை மீறி ரஜினிக்கு எதிராகக் கமலை முன்வைக்கும்போது அது நகைப்புக்கு இடமாகிறது. ஜெயலலிதாவைத் திட்டுபவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு அளித்தது போல.
* ரஜினியை மட்டும் திட்டிவிட்டுச் சென்றிருந்தால், அது ஒருவரது அரசியல். கமலை ஏற்றுக்கொண்டு ரஜினியைத் திட்டும்போது அது வேறொரு அரசியல்.
* இதில் கமலுக்கு ஆதரவாக ரஜினிக்கு எதிராகச் சொல்லப்படும் அரசியல் ஆதரவுக்கான காரணம், பெண்கள் சித்திரிக்கப்படும் விதம். என்ன கொடுமை இது? நான் என்ன கண்ணையும் காதையும் மூடிக்கொண்டா சினிமா பார்க்கிறேன்? தமிழ்த் திரையுலகில் யார் செய்யாத ஒன்றை ரஜினி செய்துவிட்டார்? அல்லது கமல் இதில் எதைச் செய்யாமல் இருந்தார்? ஒரு நியாயம் வேண்டாமா? பெண்களின் மரியாதையை முன்வைத்தால் ரஜினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் ஒரே தராசுதானே? கமல் சொன்ன இரட்டை அர்த்த வசனங்களுக்கு என்ன பஞ்சம்? ரஜினி சொன்ன, பெண்கள் அடங்கி இருக்கவேண்டும் என்பதை கமல் எத்தனை படங்களில் சொல்லி இருக்கிறார்? இதில் என்ன கமலுக்கு ஆதரவு?
* இப்படிப் பேசிக்கொண்டே, ஐநாவில் நடனம் ஆடிய ரஜினியின் மகளைப் பற்றிய வர்ணனையை மேலே பாருங்கள். ஐநாவில் ரஜினியின் மகள் நடனம் ஆடியதில் நிச்சயம் விதிகள் மீறப்பட்டிருக்கும். அல்லது வளைக்கப்பட்டிருக்கும். தகுதியான நபர் ஆடவில்லை. ஆடவும் அவருக்குத் தகுதி இல்லை. இதை எப்படி எதிர்கொள்வது? அந்தப் பெண்ணின் தோற்றத்தை எள்ளி நகையாடியா? அப்படிச் சொல்லிக்கொண்டே, ரஜினி படங்களில் பெண்ணுக்கு மரியாதை இல்லை எத்தனை பெரிய முரண்? ரஜினியாவது திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரமாகப் பேசினார் என்று ஏமாற்றி (நான் ஏற்கவில்லை) நழுவவாவது பார்க்கலாம். இதை எப்படி ஏற்பது? இதில் கடைசியில் வரும் ரஜினி பக்தர்! யார் யாருக்கோ பக்தர்கள் இருக்கும் நாட்டில், கருணாநிதிக்கும் ஈவெராவுக்கும் ஜெயலலிதாவுக்கும் சீமானுக்கும் பக்தர்கள் இருக்கும் நாட்டில் ரஜினிக்கு பக்தராக இருப்பது கேவலமல்ல. கமலையே அரசியலில் ஏற்கத் துணிந்தவர்கள் முன்பு ரஜினியை ஏற்பது மரியாதைக்குரியதே.
https://www.facebook.com/haranprasanna/posts/1439249269429771?pnref=story









