Archive for ஹரன் பிரசன்னா

கண்ணில் நிற்கும் துளிகள்

கண்ணில் நிற்கும் துளிகள்
–ஹரன்பிரசன்னா

இரட்டைக் கோட்டுக்குள் சிறைபடாமல்
நான்கு கோடுகளுக்குள் அடங்காமல்
பிதுங்கி வழியும் எழுத்துகளை
சலிப்போடு
இரப்பர் கொண்டழிக்கும்
சிறுகையைப் பற்றி முத்தமிட
வெறிக்கும் சிறுமிக்கு
வாய்திறக்காமல் ஒரு வார்த்தை-
ஒன்றிலிருந்து நூறுவரை
சும்மா எண்ண,
வேண்டியிருக்கிறது ஒரு தனிப்பொழுது.

Share

வடிவம்

வடிவம்
— ஹரன்பிரசன்னா

கிளியாய் நினைத்திருக்கலாம்
சிரிக்கிறான்

ரெண்டு கொம்பு, மூன்று கண்ணுள்ள
அரக்கனாய்த் தோன்றி மறைந்திருக்கலாம்
கண்களில் மிரட்சி

தாடியுடன்
மிட்டாய் விற்கும் தாத்தா
சந்தோஷம்

ஒண்ணுக்கிருந்தபடி
அண்ணாந்து வானம் நோக்கும்
சிறுவனின்
முகமாற்றச் சமகணத்தில்
எனக்கு மட்டும்
எப்போதும் மேகமாய்.

Share

சிதம்பர நினைவுகள்-பாலசந்திரன்சுள்ளிக்காடு

சிதம்பர நினைவுகள்-பாலசந்திரன்சுள்ளிக்காடு
–என் பார்வை

ஒருமுறை குமுதம் ஜங்கஷனில் மகாநடிகன் என்ற தலைப்பில் சிதம்பரநினைவுகள் புத்தகத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிவாஜி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்த பின் (சிவாஜி மீது கொண்டுள்ள மிகப்பெரிய ஆர்வத்தால் ) அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடந்த முறை இந்தியா சென்ற போது வாங்கி, ஒரு வாரத்திற்கு முன்புதான் படித்தேன்.

மகாநடிகன் பற்றிய பாலனின் (பாலசந்திரன் சுள்ளிக்காடு) கட்டுரையைப் படித்த பின்பு மலையாளிக் கூட்டுக்காரனிடம் அவரைப் பற்றிக் கேட்டேன். எழுத்தாளர் என்றும் ஏதோ ஒரு படத்தில் ஹீரோ என்றும் சொன்னான். (தற்கால மலையாளக் கவிதைகள் புத்தகத்தில் ஜெயமோகன் பாலனைப் பற்றிச் சொல்லும்போது அவர் அரவிந்தனின் போக்கு வெயில் படத்தில் நடித்ததாகச் சொல்கிறார்.)

சிதம்பர ஸ்மரண என்ற மலையாள மூலத்தை சிதம்பர நினைவுகளாக கே வி சைலஜா மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பின் நேர்த்தி சிதம்பர நினைவுகளுக்கு பெரிய பலம்.

இனி புத்தகத்திலிருந்து.. ….

முதல் நினைவே சிதம்பரம் கோயிலுக்குள் நிகழ்ந்ததாக இருக்கிறது. பிள்ளைகள் ஆதரிக்கத் தயாராய் இருந்தும் அவர்களுக்குத் தொல்லை தரவிரும்பாத இரண்டு வயதான பெற்றோர்களைப் பற்றியது. கொஞ்சம் அவர்களின் வாழ்க்கையை விவரித்துவிட்டு, வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தரவாய் இருப்பதைச் சொல்லிவிட்டு கடைசியில் இப்படி முடிக்கிறார்.

“பிரியத்தில் பின்னிப் பினைந்து குழந்தைகளைப் போல அடி வைத்து நடக்கும் அந்த முதிர்ந்த தம்பதிகளில் யார் முதலில் இறந்து போயிருப்பார்கள்.

ரங்கசாமியா? கனகாம்பாளா? “

மனதில் வேதனை படர்வதைத் தவிர்க்க இயலாத அந்த முடிவு வரிகள் பாலனின் டச்.

“பைத்தியக்காரன்”என்ற நினைவுகளில் பழைய நண்பன் தற்போதைய பைத்தியக்காரனைப் பற்றிச் சொல்கிறார். அவனைக் கொண்டுபோய் குளிப்பாட்டி புதிய aaடைகள் அணிவித்து ஹோட்டலில் மசால் தோசை வாங்கிக்கொடுத்து.. .

“ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்து மசால் தோசை கொண்டு வரச்சொன்னேன். சாப்பாட்டைப் பார்த்தபோது மோகனின் கண்கள் மின்னின. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்பது எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது”

கடைசியில் அந்த பைத்தியத்தை என்ன செய்வது என்று தெரியாமல் யோச்¢க்கிறார் பாலன்.

“திருச்சூரில் இருக்கும் என் நண்பனும் மனோதத்துவ நிபுணருமான ரமேஷிடம் கொண்டு விட்டுவிடலாமா? அவன் வேலை செய்வது பைத்தியக்கார அஸ்பத்திரியில்தான். இல்லையெனில் பாதி ராத்திரியில் மார்த்தாண்டவர்ம பாலத்தில் உச்சியில் கொண்டு போய் மோகனனை கீழே ஆலுவா ஆற்றின் மத்தியில் தள்ளி விட்டு எல்லாவற்றிற்குமாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாமா? அப்படி மோகனனை உலகத்திலிருந்தும் உலகத்தை மோகனனிடமிருந்தும் மீட்டு விமோசனம் கொடுக்க முடியுமா?

இல்லை அதெல்லாம் செய்ய என்னால் முடியாது……

….. அவனை ஆலுவா பஸ் ஸ்டாண்டில் நிர்தாட்சண்யமாக விட்டுவிட்டு அடுத்த பஸ்ஸில் ஏறி நான் எர்ணாகுளத்திற்கு வந்துவிட்டேன்”என்று தொடர்கிறது நினைவு. கடைசியில் அந்த மோகனன் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது பாலனுக்கு.

நூல் முழுதும் பாலனின் வறுமையும் இயலாமையும் விரிந்து கிடைக்கின்றன. நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மாற்றாமல் பதிவு செய்யும் நேர்மை புத்தகத்தின் முதுகெலும்பு. ஒரு திருவோணத்திருநாளன்று கையில் காசில்லாமல் நண்பனிடம் கேட்டு அவனிடமும் இல்லாததால் , பசிதாங்க முடியாமல் பிச்சை எடுக்கும் அளவிற்குப் போனதாகச் சொல்கிறார். (நண்பனிடம் காசு கேட்கும்போது நடக்கும் சம்பாஷணையின் உச்சத்தில் நண்பன் பாலனுக்கு அறிவுரைகள் சொல்கிறார்: “பாலா.. நீ குருவா நினைச்சிருக்கியே அந்த கடம்பனிட்டையும் சச்சிதானந்தத்தையும் கெ.ஜி. சங்கரன் பிள்ளையையும் அவர்களெல்லாம் ஒழுங்காய்ப் படித்து பாஸாகி நல்ல உத்தியோகத்திற்கும்போய் வாழ்க்கையைப் பத்திரப் படுத்திக்கொண்டுதான் அரசியல் பேசுகிறார்கள். அதைக்கேட்டு உன்ன மாதிரி இருக்குற சில புத்திகெட்டவர்கள் வெறி நாய்கள் போல ஏண்டா சுத்தறீங்க? அந்த சச்சிதானந்தனும் கடம்பனிட்டமும் சங்கரன் பிள்ளையும் ஓணத்துக்கு குடும்பத்தோடு அப்பளம் பழம் பாயாசத்துடன் சுகமாய் விருந்து உண்பார்கள். உன்னைப் பத்தி நெனக்கக்கூட மாட்டாங்கடா..” ) ஓணத்தினத்தன்று வெளியில் திண்ணையில் சோறு போடும் ஒரு வீட்டில் சாப்பாட்டை உண்ண முற்படும்போது அந்த வீட்டுப்பெண் அவள் அம்மாவிடம் “அம்மா அது பிச்சைக்காரனில்ல. பாலசந்திரன் சுள்ளிக்காடு என்கிற கவிஞன். கடம்பனிட்டோடு எங்கள் காலேஜுக்கு கவிதை வாசிக்க வந்தார்”என்கிறாள். மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான் என்று சாப்பிடுகிறார் பாலன்.

வீட்டின் ஆதரவில்லாமலும் வேலையில்லாமலும் படிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது மனைவி கர்ப்பமாகிவிடுகிறார். (“விடுமுறை நாட்களில் ஒரு ஸ்னேகிதன் வீட்டுக்கு நானும் விஜயலக்ஷ்மியும் ஒன்றாய்ப் போயிருந்தோம் அதன் பலன் இது”) மிகுந்த யோசனைக்குப்பின் தர்க்கங்களுக்குப் பின் (ஒரு சமயத்தில் கருகலைக்க மறுக்கும் மனைவியின் கழுத்தை நெறிக்கக்கூடத் தயாராகிறார்) தன்மனைவியை கருகலைக்க சம்மதிக்க வைக்கிறார். பிறக்காது போன மகனுக்காக ஒரு கவிதையும் உண்டு.

“உலகின் முடிவு வரை பிறக்காமல்
போக இருக்கும் என் மகனே
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும்போது
தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத்தவிர-ஆனாலும்
மன்னித்துவிடு என் மகனே”

மகா நடிகனாய் சிவாஜியை விவரிக்கும்போது கொஞ்சம் உயர்வாய்ப் புகழ்கிறாரோ என்று தோன்றுகிறது. ஒட்டுமொத்த புத்தகத்திலும் இப்படித் தோன்றியது இந்த ஒரு கட்டுரையில் மட்டும்தான். மற்ற இடங்களிலெல்லாம் உண்மையைப் பதிவு செய்த பாலன் சிவாஜி பற்றி சொல்லும்போது மட்டும் செயற்கைத்தனத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது யோசிக்கவேண்டியதும். கூட வந்த நண்பர் சிவாஜியிடம் வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து ஒரு டயலாக் சொல்லக் கேட்க பாலன் இப்படித் தொடர்கிறார்.

“சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து இடதுகையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து மெதுவாக நிமிர்ந்தெழுந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான வயதான எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீர பாண்டிய கட்டபொம்மன் தான் அது. சூரியன் அஸ்தமம் ஆகாத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக தி தமிழக வீர பௌருஷத்தின் சிங்க கர்ஜனை முழங்கியது…..

………ஒரு இளம் சூட்டினை லஜ்ஜையோடு நான் உணர்ந்தபோது தான் என்னுடைய உள்ளாடைகள் நனைந்தது எனக்குத் தெரிய வந்தது”

1995இல் யாத்ரா மொழி படத்தின் விவாததிற்குச் சென்ற போது பேசியதாகச் சொல்கிறார். வயதான சிவாஜி இவ்வளவு தூரம் பாதிக்கிறார் என்றால் பாலன் அறுபதுகளின் சிவாஜியைக் கண்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்த்தேன்.

முகம் என்ற கட்டுரையில் சேல்ஸ் செய்ய வரும் பெண்ணின் இடையைத் தடவ முற்பட்டு, அவள் பாலனைக் கன்னத்தில் அறைவாங்கியதைச் சொல்லும்போதும் காணும்போதே பாலியல் இச்சையைத் தூண்டும் ஒரு பெண்ணிடம் இருந்து விலகி இருக்க முற்படுவதும் அவளின் தற்கொலைக்குப் பின் பிணமாகக்காணும்போதும் போஸ்ட்மார்ட்டத்திற்குப் பின் மொட்டைத்தலையும் உடையணியாத உடலுமாய்க் கண்டதைச் சொல்லும்போதும் பாலனும் சாமான்யன் என்று தெரிகிறது.

வீட்டு வாடகைக்கூட கொடுக்கமுடியாத ஒரு கவிஞனைக்காணும்போது பாலனின் கோபங்கள் வெளியாகின்றன.

மார்த்தா அம்மா என்ற நீக்ரோப் பெண் ஆசிரியையை தென் ஆப்பிரிக்காவில் ஒரு புத்தகக்கண்காட்சியில் எதேச்சையாகச் சந்திக்கிறார் பாலன். அந்தப் பெண்மணி அவள் வீட்டில் பாலனுக்கு காபி விருந்தளிக்கிறாள். அப்போதுதான் பாலன் அந்தப் பெண்மணியின் கைகளில் சில விரல்கள் இல்லாமலிருப்பதைக் காண்கிறார். வெலவெலத்துப்போய் என்ன வென்று கேட்கும்போது,

“போரில் என் ஒவ்வொரு மகனாய்க் கொல்லப்பட்டபோதெல்லாம் அவர்களின் நினைவாக ஒவ்வொரு விரலாய் எங்கள் வழக்கப்படி நானே வெட்டிக்கொண்டேன். பத்துவிரலும் வெட்டப்பட்டு, சில கால் விரல்களையும் இழந்த தாய்மார்கள் கூட எங்கள் இனத்தில் உண்டு”என்கிறாள்.

கடைசி கட்டுரை நோபெல் பரிசு அரங்கிலிருந்து….நோபெல் பரிசு எனக்குக் கிடைத்தாலும் கூட நான் வாங்கமாட்டேன் என்று சொல்லும் பாலன் காரணமாய், “டால்ஸ்டாய் என்ற மகா புருஷனுக்குக் கொடுக்காமல் ஷெல்லி ப்ருதோம் என்ற அல்ப மனிதனுக்கு நீங்கள் இலக்கியத்திற்கான முதல் நோபெல் பரிசைக்கொடுத்தீர்களே! டால்ஸ்டாய் என்ற அந்த மகாகலைஞனுக்கு கொடுக்காத நோபெல் பரிசை, அவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச் சாதாரணமான ஒரு எழுத்தாளனான நான் ஏற்றுக்கொள்ள முடியாது”என்கிறார்.

கமலாதாஸைச் சந்தித்த ஒரு கட்டுரையும் உண்டு.

புத்தகத்தைப் படித்த முடித்த போது தோன்றிய எண்ணம்; அனுபவங்கள்தான் மனிதனை மிகச் சிறந்த கலைஞனாக்குகின்றன. பாலன் அந்த வகை.

கடைசியாய் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கவிதை ஒன்று.

தற்கால மலையாளக் கவிதைகள்-தொகுத்து மொழிபெயர்த்தவர் ஜெயமோகன், வெளியீடு-கனவு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி எண்: 4801603.

நின்று போன கைக்கடிகாரம்

நேற்றிரவு என் கைக்கடிகாரம் நின்று போயிற்று.
களிம்பேறிப் போன ஓர் இதயம்
இனி அதில் துடிக்காது

தங்கை பிறக்க நிமிடம் தந்ததும்
பாட்டி இறக்க முகூர்த்தம் குறித்ததும்
இந்த கைக்கடிகாரமே.
ஜாதகத்தின் காரணமும்,
வாழ்வின் இலக்கணமும்,
இந்தக் கைக்கடிகாரமே.

தூக்கத்திற்கு முன் செவி கூர்ந்தால்
இதிலிருந்து இணை ஜீவனின் மூச்சிணைப்பைக் கேட்கலாம்
குண்டடி பட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்
இருளிலும் மினுங்கும் பச்சை ஊசிகளுக்கு
அன்னிய கிரகங்களுடன் உள்ள தீய உறவை எண்ணி
நான் பிரமிப்படைகிறேன்.

டிக் டிக், டிக்-டிக்…
அடிமைகள் கல் உடைக்கும் சத்தம்.
யாகக் குதிரைகளின் குளம்போசை
திக்விஜயிகளின் இரத்தம் தோய்ந்த சாந்தி மந்திரம்
தீர்க்க தரிசிகளின் குற்றுயிரான நாடித் துடிப்பு

டிக் டிக், டிக்-டிக்….
அகதிகளின் காலடியோசை.
மரணம் வழியாக வெற்றி நோக்கி
தற்கொலைப் படைகளின் கனவுநடை!
வெற்றிகொள்ளப்பட்ட வாழ்விற்கு மேலே
எதிரிப் படைகளின் காவல் தாளம்.

நேரமாகவில்லை போலும்
நேரமாகவில்லை போலும்!
மெல்லிய ஊசிகள் சந்திக்கும் கணம்.
ஜனங்களைத் தூக்கிலிட தீர்ப்பளித்த
கோர்ட் கலைகிறது

நான் இனிமேல் காலத்தின் வாதியோ பிரதிவாதியோ அல்ல
நேற்றிரவில் நின்று போயிற்று என் கைக்கடிகாரம்.

***

புத்தகம்: சிதம்பர நினைவுகள்
வெளியீடு: காவ்யா
14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை-600 024.
தொலைபேசி எண்: 4801603.

Share

பென்சில் படங்கள்

பென்சில் படங்கள்– ஞானக்கூத்தனின் சமீபத்திய கவிதைகள் தொகுப்பு. ஞானக்கூத்தனுடனான மாலனின் நேர்முகத்தைப் பற்றி பத்ரி அவரது வலைக்குறிப்பில் எழுதியிருந்தார். திண்ணையும் கமல்ஹாசன் படித்துக் கண்ணீர் விட்ட கவிதை என்கிற குறிப்போடு அந்தக் கவிதைத்தொகுப்பைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்திருந்தது.

சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா டுடேயில் அபி எழுதிய பென்சில் படங்கள் மீதான கட்டுரை.

சித்திரமும் கேலிச்சித்திரமும்
— அபி

கவிதை எப்படி இருக்க வேண்டும்? இது என்ன கேள்வி, அது கவிதையாக இருக்கவேண்டும். பெயர், புகழ், உள்-வெளி வட்டங்கள் ஆகிருதிகள் தாண்டி கவிஞனை மதிப்பிட இந்தப் பொது அளவுகோல் போதுமானது.

ஞானக்கூத்தனின் முழுத் தொகுப்புக்குப் பின்னர் வந்திருக்கிறது 87 கவிதைகள் அடங்கிய “பென்சில் படங்கள்”. “அமெரிக்க அசலும் நம்மூர் நகலும்”என்று ஞானக்கூத்தன் மீது பிளேஜியாரிச குற்றச் சாட்டைத் தொடுத்த (சம்பந்தப்பட்ட கவிதை: பறவையின் பிணம்) ஒருவித குரோதத்துக்கும் “படிப்பவருக்குப் பரவசமூட்டும்”, “புதிய அனுபவத்தை உண்டாக்கும்”என்ற புல்லரிப்புப் புகழ்ச்சிக்கும் நடுவே நின்று ஞானக்கூத்தனை மதிப்பிட நீண்ட நடுவெளி நிச்சயமாக இருக்கிறது.

ஒரே மூச்சில் படித்து முடியக்கூடியவை கவிதைகளாகவும் இருக்க முடியும் என்றால் அதற்கு உதாரணம் ஞானக்கூத்தன் கவிதைகள். சுளுவும் நளினமும் ஐரனியும் அந்தக் கவிதைகளுக்கு எந்த வழியாக வந்து சேர்கின்றன என்று யோசிக்க நேர்வதுண்டு. பெரிய ஆழங்களை யாரும் அவரிடம் எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் அங்கங்கே எளிய சொற்களில் திடுக்கென ஏதோ ஒரு ஆழம் ஒரு அலட்சிய பாவத்தைப் போர்த்துக்கொண்டு தோன்றுவதுண்டு. அவர் தேடிப் போகாமல் அது தேடி வந்தது என்று சொல்ல முடியும். யேசுவின் சிலுவையை நிர்பந்தமாகப் பறித்து/சுமந்து பார்த்தேன்/யேசுவின் சிலுவையில் பாரமே இல்லை/அவர்தான் முன்பே சுமந்துவிட்டாரே என்ற வரிகளில் இது தெரியும். அந்தக் கவிதைக்கு இருந்திருக்க முடியாத ஒரு கனம் இந்தத் “தான் தோன்றி”வரிகளில் வந்துவிடுகிறது. சரி, ஞானக்கூத்தனுக்கு இணையாக, அவருடன் வந்து, அவரைத் தாண்டு கண்சிமிட்டிப் போகும் கவித்துவ அடையாளங்கள் இந்தத் தொகுதியில் முழுக்க முழுக்கக் குறைந்துவிட்டன என்பதுதான் வாசகனின் முகத்தில் அறையும் உண்மை.

இவை எல்லாம் கவிதைதானா என்று கேட்கச்செய்யும் கவிதைகள் இந்தத் தொகுதியில் நிறைந்திருக்கின்றன. மேம்பாலங்கள், பலமரணஸ்தர், என்ஜின் கொட்டகை, படியும் பிராமணரே படியும், பூகம்பம் (என்ன ஒரு வளவளப்பு..!) .. பட்டியல் நீண்டு போகிறது. ஆரம்பம், நடு, முடிவு என்ற ஆரம்பப் பள்ளிக் கட்டுரைகளின் அமைப்பில் “கவிதை”படிக்க நேர்வது கொடுமை. (ஞானக்கூத்தனுக்கு “மனைவியைக் கனவில் காணும் வாழ்க்கை”யே கொடுமை). பென்சில் படங்கள், வெள்ளத்தனைய மலர்நீட்டம், சிம்மாசனம் போன்ற கட்டுரைகளுக்குத் துணையாக நிறைய கதைகள் ஆடிப்பாடிப் பேசிக்கொண்டு திரிகின்றன. ஆடிகாற்று, வெளிச்சம் வந்தது, சூன்ய சம்பாதனை, பங்க்கா புல்லர், துரத்தும் எண்கள்… நிகழ்வுகள், அவற்றைப் பற்றிய வர்ணனைகள் – என்னமாய்ப் பொங்கிப் பெருகிகிறது எழுத்து! ஆரம்பித்தபின் ஞானக்கூத்தனின் பொறுப்பிலிருந்து அறுத்துக்கொண்டு போகிறது அசிரியச்சந்தம். அங்கங்கே தட்டுப்படும் சுவாரஸ்யங்கள் கவிதையின் முடிவிடத்தைத் தாண்டு தள்ளிக்கொண்டு போகின்றன. சொல்லில், சந்தத்தில் பிடிபடாத கனம் சூழலில் பிடிபட்டது அன்று. இன்றோ சூழல் தானும் வாய் ஓயாமல் பேசுகிறது. அன்றைய “பறவையின் பிண”த்துடன் இன்றைய “ஓர் இரண்டு சக்கரவண்டியின் கதை”யை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.

“நீலமசியை இந்தப் பூக்களின் இதழ்களில் துடைத்துக்கொண்டது யார்?” , “சும்மா நிற்கவும் காலுக்குக் கீழே தண்டவாளங்கள் வைத்திருக்கும் என்ஜினைப் போலொரு ஜீவன் உண்டோ?”, “மிதிபடும் ஒன்று வெல்கம் சொல்லுமா?” (மிதியடி) – இவை ஞானக்கூத்தனின் வரிகள் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. பல கவிதைகள் முந்தைய நல்ல கவிதைகளின் கேலிச்சித்திர நகல்களாகக் காட்சி தருகின்றன.

“மரபைச் சோதித்துத் தமிழ்க்கவிதையை போஷிப்பது”ஞானக்கூத்தனின் லட்சியமாம். “ஆய்தொடி நங்கோய்”, “அடேய் ஆய் அண்டிரா”, “யாம் உம் கிழத்தி”, “அழுங்கல் மூதூர்” – இந்தப் பழந்தமிழ்த் தொடர்களை இரசிக்கமுடியாத நையாண்டிக்குப் பயன்படுத்தி மரபை நன்றாகவே சோதித்திருக்கிறார். இதில் கம்பராமாயண மேற்கோளில் அர்த்தச் சறுக்கல் வேறு! “வன்மருங்கல் வாள் அரக்கர்” – இது அரக்கியர் என்று இருக்கவேண்டும்.

ஞானக்கூத்தனின் சுவாரஸ்ய மோகத்தைத் தாண்டிக்கொண்டு பிறந்திருக்கிற மிகச்சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் உண்டு. அப்பா குறுக்கிட்ட அந்தக் கதை, கண்டான் இல்லாத சொப்பனம் (நீளத்தைப் பொருட்படுத்தத் தோன்றாத ஒரே கவிதை), சுவர்க்கடிகாரம், கரடித்தெரு, பத்திரப் பகிர்வுகள், லூசிக்ரே போன்றவை அவை.

உள்ளடக்கம் இன்னது, இவை என்று வரையறுக்க முடியாமலிருப்பது படைப்பாளிக்கு குறைபாடு அன்று. ஞானக்கூத்தனின் இந்த யதேச்சைத்தன்மை இந்தத் தொகுதியிலும் தெரிகிறது. ஆனால் யதேச்சையின் பழைய அம்சங்களே திரும்பவும் வருகின்றன. இந்தமுறை நீர்த்த வடிவத்தில்! ஞானாட்சரியும் பாரிசும்தான் புதியவை போலும். ஞானாட்சரி ஏதாவது சொல்ல – செய்யவேண்டும். ஞானட்சரி சொன்னால் ஞானக்கூத்தன் கேட்பார்.

நான் எழுதுகிறேன் என்றா பிரக்ஞை பூத நிழலாய் ஞானக்கூத்தன் மீது கவிந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே மூச்சில் படித்து முடியக்கூடியவை பெரும்பாலும் கவிதைகளாக இருப்பதில்லை என்ற பொதுவிதிக்கு உதாரணம் சொல்லவும் நாம் ஞானக்கூத்தனையே (இந்தத் தொகுதியைப் பொறுத்த வரை) சுட்டிக்காட்ட நேர்கிறது.

நன்றி: இந்தியா டுடே

Share

நேற்றைய இரவு

நேற்றைய இரவு
—ஹரன்பிரசன்னா

வழுக்கும் வரப்பில்
கால்குத்தி நிறுத்திய
கண்ணாடி வளையலின் ஒரு துண்டு
– கால்கள் பின்னியிருந்ததை
– வெம்மை பரிமாறப்பட்டதை
– வெற்றுடல்களின் போர்வையாய் இருள் இருந்ததை
நேற்றிரவுக்குள் தள்ளுமுன்
நினைத்தேன்-
கண்ணுள்ள பானைத்தலை
கந்தல் வெள்ளையாடை
வெக்கங்கெட்ட சோளக்காட்டு பொம்மை
கண்மூடியிருக்காது என.

Share

தீப்பெட்டிக்குள்…

தீப்பெட்டிக்குள்…
–ஹரன்பிரசன்னா

மரக்குச்சிகள் சுமந்து
மரத்துப் போயிருந்த தீப்பெட்டி
உயிர்த்திருக்கிறது

சிணுங்கிவிட்டுக் காணாமல் போன தூறலில்
நிமிர்ந்த பசுந்தளிர்களின் வழியே
நடந்து, நனைந்து
சுகித்திருக்கவேண்டிய பொன்வண்டு
சிறையிடப்பட்டிருக்கிறது

படுத்துக்கொள்ளப் புல்மெத்தை
எப்போதும் போர்த்தியிருக்கும் மேலட்டை
அவ்வப்போது வானம்
இது போதாதா?

திறக்கவும்
முன்னிரு கொம்புகள் அலையவும்
பிஞ்சு முகம் சிரிக்கவும்
இலக்கியமென்க

விடுதலை வேண்டும் வண்டு
இணைகூடாமல்
மூச்சுமுட்டி இறக்குமானால்
சொர்க்கம் சேரும்
நிச்சயம்.

Share

மழை நாள்

ஒரு காதல் கதை
—ஹரன் பிரசன்னா

னக்குப் பாண்டிமாரோடு இருந்த கோபங்கள் எல்லாம் இப்படிச் சடாரென நீர்த்துப் போகும் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவேயில்லை. இத்தனை நாள் தனக்கிருந்த இனவெறியால் சிந்திக்க முடியாமல் போனதை நினத்து வருந்தும் வேளையில் நிஜத்தைத் தெரியவைத்தச் சொர்ணலதாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டான். நன்றி சொல்லத் தேவையில்லை என்றது அவனது உள்மனம். மூன்றாம் நபர்களுக்குள் இருக்கவேண்டிய
ஒரு சொல் அவர்களுக்கிடையில் வருவதை அவன் அறவே விரும்பவில்லை.

கிருஷ்ணன் பிள்ளை, தனது காதலை சொர்ணலதாவிடம் சொல்லி மூன்று நாள்தான் ஆயிருக்கும். அவளும் நாணிக் கோணி வெட்கி அதை ஏற்றுக்கொண்ட நிமிடம் சடாரென வானத்தில் நீந்தி, மேகத்தைக் கிண்டல் செய்து விட்டு, சூரியனை முறைத்துவிட்டு, நிலவிடம் சேதி சொல்லிவிட்டுத் தரைக்கு வருவதற்குள் சொர்ணா கம்ப்யூட்டர் சென்டரை விட்டு, வெட்கத்தையும் சேர்த்தெடுத்துக்கொண்டு, ஓடிப்பொயிருந்தாள். சொர்ணலாதவை கடந்த மூன்று நாளாய் சொர்ணா என்றுதான் கூப்பிட்டான் கிருஷ்ணன் பிள்ளை. அதை இரசித்தாள் சொர்ணா என்பதை அவன் அறிந்தபோது இனித் தொடர்ந்து அப்படியே கூப்பிட முடிவு செய்தான். அவன் என்ன சொன்னாலும் அவள் சிரித்தாள். அவர்களுக்குள் மூன்று வருடங்கள்.. இல்லை இல்லை… முப்பது வருடங்கள் காதல் இருந்ததாய்த் தோன்றியது அவனுக்கு.

கலமசேரியில் மலையாளக் குட்டிகளை சைட் அடித்துக்கொண்டு தனது இளவயதைக் கழித்துக்கொண்டிருந்த கிருஷ்ணன்பிள்ளைக்குக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. போயும் போயும் பாண்டிமாரோடு வேலை பார்க்கப்போறியா என்ற கூட்டுக்காரர்களின் கிண்டலையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தமிழ் மண்ணை மிதித்தான். அன்று அவனிருந்த மனநிலையில் அவனிடம் யாராவது நீ ஒரு தமிழ்ப்பெண்ணைத்தான் மணக்கப்போகிறாய் என்று சொல்லியிருந்தால், சொல்லியது யாரானலும், காறி உமிழ்ந்திருப்பான். அதற்குக் காரணம் இருந்தது. அவன் அதுவரை சொர்ணாவைச் சந்தித்திருக்கவில்லை.

மலையாளி கொலையாளி; மலைப்பாம்பை நம்பினாலும் மலையாளத்தானை நம்பாதே என்று எல்லோரும் அவன் காது படப் பேசுவதெல்லாம் பழகிப் போய், எல்லாம் தன் தலையெழுத்து என்று மனம் நொந்த ஒரு நிமிடத்தில்தான் சொர்ணலாதவைச் சந்தித்தான்.
அவள் கண்கள் பேசுவதைக் கண்டு கொஞ்சம் வசமிழந்த மனசை அதட்டு உருட்டி – ஆ குரங்கி தமிழானு – அடக்கி வைத்தான். அவள் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து அளந்து கொணட்டி கொணட்டிப் பேசினாள். ஏஸியும் ஏர் ·ப்ரெஷ்ணரின் மணமும் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்கள் நிறைந்த அறையும் அவளை படபடப்பாக்கியிருக்கலாம். தினம் தினம் எத்தனை பெண்களும் பையன்களும் இப்படி வந்து போகிறார்கள்..

“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”

அவளின் ஆங்கிலம் கண்டு கிருஷ்ணன்பிள்ளை சிரித்துக்கொண்டான். ஆனால் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது. உடனே தமிழன்மார்கள் எல்லாம் லோரி என்றும் ஸோரி என்றும் கோப்ம்பெனி என்றும் ஆரம்பித்துவிடுவார்கள் என அவனுக்குத் தெரியும். ஒருவழியாய் தனக்குத் தெரிந்த தமிழில் சொல்லி அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டு அவளைச் சேர்த்துக்கொண்டான். கிருஷ்ணன் பிள்ளை நினைத்திருந்தால் சொர்ணலதாவுக்கு கொஞ்சம் கூடுதல் டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாம்தான். தமிழச்சிக்குப் போய் கொடுப்பானேன் என விட்டுவிட்டான்.

இபோது கிருஷ்ணன் பிள்ளைக்கு, அன்று டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. அவளைக் கண்ட முதல் நாள் முதல் நேற்று முதல்நாள் சொன்ன ஐ லவ் யூ வரைக்கும் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக்கொண்டான்.

“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”
“சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +..”எனத் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். இன்று உறங்குவோம் என்று கிருஷ்ணன் பிள்ளைக்குத் தோன்றவில்லை.

கிருஷ்ணன்பிள்ளை காதல் அவனை இந்தப் பாடு படுத்தும் என எதிர்பார்க்கவில்லை. மிகுந்த பிரயாசைக்குப் பின் தூங்க ஆரம்பிக்கும்போது கனவில் சொர்ணா வந்து, “என்ன தூக்கம் வரலியா?”என்பாள். இவன் உடனே, “நீ பறையுன்ன தமிழ் எத்தற சுகமானு அறியோ?”என்பான். இப்படி மாறி மாறி ஆளுக்கொரு பாஷயில் கதைத்து முடிக்கும் போது காலை விடிந்திருக்கும். இல்லையென்றால் கனவில் அவள் வந்து “அஞ்சனம் வெச்சக் கண்ணல்லோ மஞ்சக் குளிச்ச நெஞ்சல்லோ”என்பாள். இவன் பதிலுக்கு “இனிக்குந் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே”என்பான். இப்படியே பாடிப் பாடி காலை விடிந்திருக்கும்.

இன்றைக்கு காலையில் நேர்ந்த அந்தச் சம்பவத்துக்குப் பின் , இனித் தூங்கக்கூட முடியாது என்று தோன்றியது கிருஷ்ணன் பிள்ளைக்கு. அவன் இன்னும் தன் புறங்கையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். இதுவரை இல்லாத ஒரு மிருதுத்தன்மை அவனது புறங்கைக்கு எப்படி வந்தது என்ற ஆச்சரியம் இன்னும் அடங்கவில்லை. காலையில் கிருஷ்ணங்கோவிலுக்குப் போயிவிட்டு வரும்போது தெரியாத்தனாமாக சொர்ணாவின் புறங்கையில் அவன் புறங்கை பட்டுவிட்டது. அதிர்ந்து போனான் கிருஷ்ணன் பிள்ளை. சொர்ணாவும் ஒரு நொடி அதிர்ந்தாள். பின் வெட்கப்பட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை தான் ஒரு கவிஞனாய் இல்லாமல் போய்விட்டோமோ என்று முதன்முறையாக வருந்தினான். இருந்திருந்தால் அப்படியே காதல் ரசம் சொட்டச் சொட்ட அந்த நிமிடத்தையும் சொர்ணாவின் வெட்கத்தையும் வார்த்தைகளில் கொட்டியிருப்பான்.

கையின் புறங்கையை முகர்ந்து பார்த்தான். எங்கிருந்தோ காற்றில் “சந்தனத்தில் கடஞ்செடுத்தொரு சுந்தரி சில்பம்”என்ற வரிகள் மிதந்து வந்தது. சொர்ணா வெள்ளைப் பட்டுடுத்தி சந்தனக் கீறலிட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை வெள்ளைப் பட்டில் முண்டுடுத்தி மோகமாய் அவளை நெருங்கினான். அவள் “வேண்டாம்.. வேண்டாம் “எனச் சிணுங்கினாள். அவளின் சிணுங்கல் அவனை மேலும் தூண்ட… அந்த நேரத்தில் போன் ஒலிக்காமல் இருந்திருந்தால் அவளை முத்தமிட்டிருப்பான். ஏக எரிச்சலில் போனை எடுத்தான். கிருஷ்ணன்பிள்ளையின் அம்மா அழுதுகொண்டே அவனது பாட்டி இழுத்துக்கொண்டிருப்பதாய்ச் சொன்னாள். கிருஷ்ணன் பிள்ளைக்கு ரொம்ப வருத்தம் மேலிட்டது. அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பாட்டி இழுத்துக்கொண்டிருக்கிறாள் என்ற கேட்டவுடனேயே கலமசேரிக்குப் போய் அவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது அவனுக்கு.

கிருஷ்ணன் பிள்ளைக்கு தலையைச் சுற்றியது. அப்பாவிடமிருந்த கம்யூனிச இரத்தம் அவனுக்குள் இல்லையென்பது அவனுக்குத் தெரியும். அந்த இரத்தம் அப்படியே கிருஷ்ணன் பிள்ளைக்கும் வந்திருந்தால் இப்படி அவசியமில்லாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ள நேர்ந்திருக்காது. அவனது கொச்சச்சன் சுகுந்தன்நாயரை நினைத்தாலே கிருஷ்ணன் பிள்ளைக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவன் வீட்டில் சொர்ணா விஷயம் தெரிந்த ஒரே நபர் சுகுந்தன் நாயர் மட்டுமே.

சின்ன வயதிலேயிருந்து கொச்சச்சன் மேலே கிருஷ்ணன்பிள்ளைக்கு பாசம் அதிகம் இருந்தது. சுகுந்தன்நாயருக்கும் கிருஷ்ணன்பிள்ளை மேலே வாஞ்சை ஜாஸ்தி. தனது முதல் பையனாகத்தான் அவனைப் பார்த்தார் சுகுந்தன் நாயர். அவனை “மோனே”என்று விளிக்கும்போதே அவரின் நிஜமான வாத்சல்யம் அதில் தெரியும். அந்தச் சுதந்திரம் தந்த தைரியத்தில்தான் கிருஷ்ணன்பிள்ளை தன் பிரேம விஷயத்தை நாயரிடம் சொன்னதும்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் நாயர், “இது சரியா வராது மகனே “என்றார். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுகுந்தன் நாயர் இப்படி நிறைய விஷயங்களில் குறி சொல்வதுமாதிரி ஏதாவது உளறி வைப்பார். அதைக் கேட்கும்போது கிருஷ்ணன் பிள்ளைக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வரும். மரியாதை காரணமாயும் அவர் மேல் வைத்த உண்மையான பாசம் காரணமாயும் அதை அப்படியே விட்டுவிடுவான். நாயர் தன் காரியத்திலேயே இப்படி ஏதாவது சொல்லி வைப்பார் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கலவரமடைந்து போனான்.

“அது என்ன கொச்சச்சா? அப்படிச் சொல்லிட்டீங்க”என்றான் கிருஷ்ணன் பிள்ளை. நாயர் பெரிதாய் விளக்கம் ஒன்றும் கொடுக்கவில்லை. “நம்ம குடும்பத்துக்கு நல்லதில்லை. இது சரியாகாது மோனே”என்று மீண்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார்.

கிருஷ்ணன்பிள்ளை இதைக் கேட்ட சில தினங்களுக்குக் கொஞ்சம் வருத்தமாய் இருந்தான். பின் ஒரு தடவை சொர்ணாவைப் போனில் கூப்பிட்டுப் பேசிய பின் கொச்சச்சனையும், அவர் சொன்ன விஷயங்களையும் மறந்துபோய்விட்டான். ஆனால் நேற்று நடந்த சம்பவம் அவனை மீண்டும் கொஞ்சம் கலவரப்படுத்தியிருந்தது.

திருவனந்தபுரம் ரோட்டில் சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பிடித்துக்கொண்டது. பக்கத்திலிருக்கும் ஒரு பள்ளி வளாகத்தில் ஒதுங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமையான காரணத்தால் பள்ளியில் யாருமில்லை. சுற்றிலும் மரங்கள் பசுமையாய் சிலிர்த்துப் போயிருந்தது. மழையின் மண்வாசனையும் தூறலும் சொர்ணாவின் அருகாமையும் கிருஷ்ணன்பிள்ளைக்கு ஒரு கிளர்ச்சியை தந்துவிட்டது. சொர்ணாவும் அதே நிலையில்தான் இருந்தாள். சொர்ணாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. தனிமையும் மழையும் பலப்பல எண்ணங்களைக் கிளற மெல்ல முன்னேறி அவள் கைகளைப் பற்றினான். கையை உதறுவாள் என்று எதிர்பார்த்திருந்த கிருஷ்ணன்பிள்ளைக்கு அவள் அப்படிச் செய்யாதது தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் முன்னேறினான். மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு நீர்த்துளி உதட்டில் இருந்துகொண்டு கிருஷ்ணன்பிள்ளையின் உயிரை வாங்கியது. அவள் கைகள் ஒருவித நடுக்கத்தில் இருப்பதை உணர்ந்த கிருஷ்ணன்பிள்ளை பிடியை இறுக்கினான்.

எங்கிருந்தோ வந்த ஆடு ஒன்று மே என்று கத்தியபடி அவர்களைக் கடந்து கொண்டு ஓடியது. மழைக்குப் பயந்து அதுவும் ஒதுங்கியிருக்கவேண்டும். ஆட்டின் குரல் சொர்ணாவை தன்நிலைக்குக் கொண்டுவந்தது. மென்மையாக கிருஷ்ணன்பிள்ளையின் பிடியைத் தளர்த்திவிட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்றாள். கிருஷ்ணன்பிள்ளை ஆட்டைத் துரத்திக்கொண்டு ஓடினான். சொர்ணலதா அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

மழை வெறித்த பின்பு தன் அறைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்பிள்ளை எப்போதும் போல் வீட்டிற்குப் போன் செய்தான். சுகுந்தன் நாயருக்கு நெஞ்சுவலி வந்ததாயும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாயும் அவன் அம்மா வருத்தம் கலந்த குரலில் சொன்னாள். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. “இது சரியா வராது”என்று சுகுந்தன் நாயர் சொல்வது போலத் தோன்றியது அவனுக்கு.

இப்போது ஒன்றன் பின் ஒன்றாய் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்ததில் சுகுந்தன் நாயர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று தோன்றத் தொடங்கியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. அவளது புறங்கை மேலே பட்ட அன்றுதான் அவனது முத்தச்சிக்கு மேல் சரியில்லாமல் போனது. பகவதி புண்ணியத்தில் அவள் பிழைத்துக்கொண்டாள். நேற்று சொர்ணாவை மீண்டும் தொட்டபோது கொச்சச்சனுக்கு நெஞ்சு வலி வந்தது.

இப்படியெல்லாம் கண்மூடித்தனமாய் யோசிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டாலும் இந்த எண்ணங்களை, கிருஷ்ணன்பிள்ளையால் களைய முடியவில்லை. நெடு நேரத் தீவிர யோசனைக்குப் பின் அயர்ச்சியில் அப்படியே உறங்கிப் போனான்.

அதிகாலையிலேயே சொர்ணா கூப்பிடுவாள் என்று எதிர்பார்க்காத அவனுக்கு, அவள் குரலைக் கேட்டதும் சந்தோஷமாய் இருந்தது. அவளுடன் பேச ஆரம்பித்தக் கொஞ்ச நேரத்திற்கெல்லாம், நேற்று இரவு தானாய் ஏற்படுத்திக்கொண்ட கற்பனைகள் எத்தனை மோசமானவை என்று அவனுக்குப் புரிந்தது. இனி அப்படி நினைக்கக்கூடாது என்பதை ஒரு சபதமாகவே எடுத்துக்கொண்டான்.

ரொம்பத் தயங்கித் தயங்கி சொர்ணா கேட்டாள்.

“இன்னைக்கு ·ப்ரீயா இருந்தா படத்துக்குப் போகலாம். எங்க வீட்டுல எல்லாரும் மதுரைக்குப் போயிருக்கிறாங்க. எனக்கு படிக்க வேண்டியிருக்குதுன்னு நான் வரலைனு சொல்லிருக்கேன். இன்னைக்கு உங்களுக்கு டைம் இருக்குமா?”

கிருஷ்ணன் பிள்ளைக்கு நம்பவே முடியவில்லை. எத்தனை நாளாய்க் கெஞ்சியிருப்பான். ஒருநாள் கூட மசியாத சொர்ணா, தானே அழைத்து சினிமாவுக்குப் போகலாமா என்கிறாள். அந்தச் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளில்லை அவனிடம்.

“செரி..”என்றான். அவன் குரலில் இருந்த சந்தோஷம் அவனுக்கே தெரிந்தது.

திரையில் காட்சிகள் வேகவேகமாய் மாறிக்கொண்டிருந்தன. கொஞ்சம் புரிந்தும் நிறைய புரியாமலும் படத்தை இரசித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. சொர்ணாவின் அருகாமை அவனுக்குச் சொல்லமுடியாத சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இருவரின் கைகளும் அருகருகில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் சொர்ணாவின் கையைப் பிடிக்கலாம். அவள் ஒன்றும் உதறி விட மாட்டாள் என்று தெரியும் அவனுக்கு. உதறவேண்டுமானால் மழைக்கு ஒதுங்கிய நாளிலேயே உதறியிருக்கலாம். கையை இன்னும் இரண்டடி நகர்த்தினால் சொர்ணாவின் மிருதுவான கைகளைப் பற்றி விட முடியும்.

இப்படி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் லேசான வெப்பத்தோடு சொர்ணாவின் கைகள் தன் கைகள் மீது பரவுவதைக் கண்டு அவளைப் பார்த்தான். அவனும் அவள் கையை
பலமாகப் பற்றிக்கொண்டான். கைகளை மெல்ல இறுக்கினான்.

தோளை அவள் பக்கமாகச் சாய்த்து அவள் முகத்தை மிக அருகில் இருந்து இரசித்தான். அவள் அவன் கைகளை மேலும் மேலும் இறுக்கினாள். இன்னும் கொஞ்சம் வசமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கொஞ்சம் நெருங்கி, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளின் கன்னங்களில் உதடுகளால் லேசாய் முத்தமிட்டான். அவள் கண்களைத் திரைகளிலிருந்து விலக்கவே இல்லை. அதே சமயம் கிருஷ்ணன்பிள்ளையின் கைகளை இன்னும் இறுக்கினாள்.

கைகளை மெல்ல விடுவித்துக்கொண்டான் கிருஷ்ணன்பிள்ளை. அவளின் முகத்தை அவனை நோக்கித் திருப்பினான். அவளது சுவாசம் அவன் மீது வெம்மையாகத் தாக்கியது. அவளின் கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. கண்கள் பாதி சொருகிய நிலையில் இருப்பதாகப் பட்டது கிருஷ்ணன்பிள்ளைக்கு.

விரல்களால் சொர்ணாவின் உதடுகளை மெல்ல வருடினான். அவளது கழுத்து நரம்புகள் புடைத்து அடங்குவது, அந்த மங்கலான வெளிச்சத்தில் கூடத் தெளிவாய்த் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை உதடுகளை வருடினான். முகத்தை முன்னே இழுத்து, மிக அழுத்தமாய் உதடுகளில் முத்தமிட்டான் கிருஷ்ணன்பிள்ளை. சூர்யா யாரையோ சுட்டுக்கொண்டிருந்தபோது சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தார்கள்.

படம் முடிந்து வரும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒரு தடவை ஸாரி சொல்லிவிடலாமா என்று கூடத்தோன்றியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. ஆனாலும் அமைதியாய் இருந்துவிட்டான்.

அவளை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டுத் தானும் பஸ் பிடித்து ரூமிற்குள் நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. வேகமாய் எடுக்கப் போனான். கட்டாகி விட்டது. யார் அழைத்திருப்பார்கள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. சொர்ணா அழைத்திருப்பாளோ? இருக்காது. இப்போதுதானே போனாள். ஒருவேளை.. கலமசேரியிலிருந்து அழைத்திருப்பார்களோ.. இப்படித் தோன்றிய போதே கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது அவனுக்கு. இன்றைக்கும் ஏதாவாது நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. நேற்றுதான் கொச்சச்சனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாய் அம்மா சொன்னாள். ஒருவேளை அவருக்கு ஏதாவது…

மீண்டும் போன் ஒலித்தது. அவனுக்கு அதை எடுக்கவே பயமாய் இருந்தது. “நம்ம குடும்பத்துக்கு இது சரியாகாது”என்று கொச்சச்சன் சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. இந்த முறையும் எதாவது நேர்ந்திருந்தால் என்ன செய்வது என்றே கிருஷ்ணன் பிள்ளையால் யோசிக்க முடியவில்லை. மனதை அடக்கிக்கொண்டு போனை எடுத்தான்.

“ஹலோ”

“சொரணா பேசறேன்”

கொஞ்சம் நிம்மதியானது கிருஷ்ணன் பிள்ளைக்கு.

“ம் பறா..”என்றான் கிருஷ்ணன் பிள்ளை. விசும்பல் சத்தத்திற்கிடையில் சொர்ணா சொன்னாள்.

“ஏதோ ஆகிஸிடெண்ட்டாம். அப்பாவை சீரியஸாக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறாங்க”என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள்.

000

Share

ஒரு காதல் கதை

மழை நாள்
—ஹரன் பிரசன்னா

சலனமற்றிருக்கும் வானம் தன்
சல்லடைத் துளைகளின் வழியே
சமைந்த மரங்களுக்குப்
பூப்புனித நீராட்டும்
மழைநாள்

ஆர்ப்பரிக்கும் வானத்தைத் தடுக்கும்
பலவண்ணப் பூக்கள் குடைகளாய்
சில தலைகள்

மாலை கடந்து காலையும் தொடர்ந்தால்
பள்ளிசெல்லும் தொல்லையில்லையெனச்
சில மனங்கள்

இறங்கி வரும் துளிகளில்
ஒரு துளி தொட்டாலும்
விலக்கவொவ்வா களங்கம் வருமென
நீட்டப்பட்ட நிழற்குடைகளில் நிற்கின்றன
சில கால்கள்

மழையை புகையால் துரத்தும்
முயற்சியாய் புகைகின்றன
சில கைகள்

மழைச்சாரல் மனதுள் பதித்துச் சென்ற
மயக்கத் தடங்களில் முந்தானை தொடுகின்றன
சில விரல்கள்

நனைந்து ரசிக்காமல்
வீணாகப்போய்க்கொண்டிருக்கிறது
மற்றுமொரு மழைநாள்

இந்தக் கவிதை மாலனின் மின்னிதழானத் திசைகளில் வெளியாகியிருந்தது.

Share