சகோதரி சுபலக்ஷ்மியின் சுயசரிதை, சென்ற வருடம் நான் படித்த புத்தகங்களுள் முக்கியமானது. எழுத்தாளர் அம்பை பதிப்பாசிரியராக இருந்து, ஸ்பாரோ மற்றும் சுவாசம் பதிப்பகம் இணைந்து கொண்டு வந்த முக்கியமான புத்தகம் அது.

சகோதரி சுபலக்ஷ்மி மிகச் சிறிய வயதிலேயே, அதாவது திருமணம் என்றால் என்ன என்று அறியாத வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு விதவையானவர். திருமணம் என்பது ஒரு விளையாட்டு என்பது போலத்தான் அந்தச் சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு இருந்திருக்கும். இதில் விதவை என்றால் என்ன தெரிந்திருக்கும் என்பதை நாம் யோசித்துப் பார்க்கலாம். உண்மையில் இதை யோசிக்கும்போது அந்தப் புத்தகத்தைப் படிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.
ஒரு பெண் குழந்தை – நிஜமாகவே குழந்தை – விளையாடும்போது உடன் விளையாடும் சிறுமிகள், நீ தாலி அணிந்து கொள்ளக் கூடாதே என்று சொல்ல, அந்தக் குழந்தை ஓடிப் போய் தாலியை அம்மாவிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு விளையாட வர, அதைப் பார்த்த மற்ற சிறுமிகள், உன் தாலி எங்கடி என்று விளையாட்டாகக் கேட்க, அந்தப் பெண் மீண்டும் போய் தாலியைப் போட்டுக்கொண்டு விளையாட வரும் அந்த இடம், கண்ணீரை வரவழைத்து விட்டது. அந்தச் சிறுமியைப் பற்றிய குறிப்பில் இப்படிச் சொல்கிறார், இடுப்பில் அரச்சிலை மட்டும் கட்டி, ரவிக்கை பாவாடை எதுவும் இல்லாமல், கழுத்தில் தாலி மட்டும் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி அவள்.
இன்னொரு இடம், இறந்துபோன ஒரு விதவைப் பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்ய வரும் புரோகிதர்கள் அவளுக்குத் தலைமுடி இருப்பதால் அச்சடங்கைச் செய்ய மறுப்பது. வேறு வழியின்றி நாவிதரை வரவழைத்து, அந்தப் பெண்ணின் முடியை மழித்த பின்னர்தான் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
ஆனால் இந்தப் புத்தகம் கண்ணீரைச் சொல்லும் புத்தகம் அல்ல என்பதுதான் இது ஹைலைட்.
கண்ணீரிலிருந்து ஒரு பெண், அதுவும் அதிகக் கட்டுப்பாடுகள் நிறைந்த பிராமண வைதீகக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், சிறுவயதிலேயே விதவையான ஒரு பெண், எவ்வாறு மேலெழுந்து இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கிறாள், வஞ்சித்த சமூகத்திற்குத் தன்னால் இயன்ற அரும்பெரும் பணிகளை எவ்வாறு செய்கிறார், எப்படி உயரிய கைசர் – இ – ஹிந்த் விருதைப் பெறுகிறார் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.
1948லிருந்து வெளிவந்திருக்கும் இந்தச் சுயசரிதை, அந்தக் காலத்தில் உள்ள பல நடைமுறைகளைக் கண் முன் கொண்டு வருகிறது. இன்று நாம் எந்த அளவுக்கு முன்னேறிவிட்டோம் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சாட்சியாக விளங்குகிறது. இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் தொடர்ந்து வருவது, திருமணம் ஆனவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டே இருப்பதைப் பற்றிய குறிப்புகள். அதில் பல குழந்தைகள் இறந்து போகின்றன. சில உயிருக்குப் போராடி பின்னர் எப்படியோ உயிர் பிழைக்கின்றன. ஆயுத கேஸ் என்பதை நாம் முன்பு கேள்விப்பட்டிருப்போம். அவற்றை எல்லாம் இந்தப் புத்தகத்தில் பார்க்கலாம்.
அதேபோல் சில சுவாரசியமான சம்பவங்களும் உண்டு. அதில் குறிப்பாக ஒரு வரி, முதல் முதலில் சைக்கிள் வந்தபோது அதற்கு காற்றடிக்கும் வசதி கிடையாது என்றும், கடினமான ரப்பர் டியூப் மட்டுமே உண்டு, அதைத்தான் ஓட்ட வேண்டும் என்பதும். எப்படித்தான் ஓட்டினார்களோ!
சிஸ்டர் சுபலக்ஷ்மி தன்னைப் போன்ற விதவையான பெண்களுக்கு ஒரு காப்பகம் தொடங்குகிறார். அதில் வரும் பிரச்சினைகளை எல்லாம் மிக விரிவாக எழுதியிருக்கிறார். ஆங்கிலேய அரசின் உதவியுடன்தான் இந்தக் காப்பகம் தொடங்கப்படுகிறது. ஆனால் சமூக ரீதியாகப் பல தடைகள், அதைத் தொடங்குவதிலும் சரி, அதைத் தொடர்ந்து நடத்துவதிலும் சரி. எண்ணற்ற பிரச்சினைகளை அவர் எதிர்கொள்கிறார்.
ஆனாலும் எவ்விதச் சுணக்கமும் இன்றித் தொடர்ந்து நடத்துகிறார். சித்தி உதவியுடன் அவர் அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார். அங்கே இருக்கும் விதவைப் பெண்களுக்கு வாழ்க்கைக் கல்வியையும், ஏட்டுக் கல்வியை கற்றுக் கொடுத்து அவர்களை ஒரு நிலைக்கு உயர்த்துகிறார். 1940களில் இவையெல்லாம் கற்பனைக்கு எட்டாத சாதனைகள்.
பெண்களின் ஹாஸ்டல் இன்றைக்கு இருந்தாலும் கூட அதையொட்டி எத்தனை பிரச்சினைகள் வரும் என்பது நமக்குத் தெரியும். அந்தக் காலத்தில் அதுவும் விதவைப் பெண்கள் காப்பகம் என்னும்போது கூடுதலாக வரும் ரோமியோக்களின் பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று யோசித்துப் பார்க்கலாம். அதைப் பற்றிய சில குறிப்புகள் இந்த நூலில் உண்டு.
சிறுவயதுத் திருமணத்தை எதிர்க்கும் சிஸ்டர் சுபலக்ஷ்மி, தன்னுடைய முழுக் கவனத்தையும் அவர்களுக்குக் கல்வி கொடுப்பதில் செலவிடுகிறார். அவர்களுடைய மறு திருமணம் பற்றி அவருக்குச் சில குழப்பமான எண்ணங்கள் தொடக்கத்தில் இருக்கின்றன. ஆனால் அப்போதே சில முற்போக்காளர்கள் விதவை பெண்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சகோதரியிடம் சொல்ல, பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அதற்குச் சம்மதித்து அதையும் முன்னெடுக்கிறார். தொடர்ந்து பல விதவைகளின் மறுமணங்கள் நடைபெறுகின்றன. பலர் நன்றாக இருக்கிறார்கள். சில பெண்கள் தன் குழந்தை மற்றும் தன் கணவனோடு சிஸ்டரை வந்து பார்த்துக் கண்ணீர் மல்க நன்றி சொல்வதெல்லாம் மிக முக்கியமான ஆவணங்கள்.
இந்தப் புத்தகத்தில் மிக முக்கியமாக நாம் சொல்ல வேண்டியது, இன்றைக்குச் சிலரால் அரசியல்சரியுடன் எழுதப்படும் உள்நோக்கம் கொண்ட புத்தகம் போல் அல்லாமல், இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க இயல்பு நிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. எனவே உண்மையான ஆன்மா இருக்கிறது. ஹிந்து மதத்தைப் பீடித்திருந்த குழந்தைத் திருமணத்தையும் அதனால் எழும் இளம் விதவைக் கொடுமைகளையும் மிகக் கடுமையாகச் சாடுகிறார் சகோதரி. அதேசமயம், குடும்பம் என்னும் அமைப்பை அவர் உதறித் தள்ளச் சொல்லவில்லை என்பது முக்கியமானது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டிலும் அவருக்குப் பிரச்சினை இல்லை என்பதோடு, கணவன் உயிருடன் இல்லாவிட்டால் மறுமணத்தில் தவறில்லை என்பதிலும் அவருக்குச் சந்தேகம் இருக்கவில்லை. மிக உயர்ந்த சரியான லட்சியம் இதுதான். மயக்கங்களுக்குள் செல்லாமல் யோசித்தால் இதுபுரியும். இதை அன்றே யோசித்திருக்கிறார் சகோதரி.
தன் மதத்தைச் சேர்ந்த குறைகளைச் சொல்லும் சிஸ்டர், தன் மதத்தைக் கை விடுபவரல்ல. எந்த ஒரு காலத்திலும் அவர் தன் மதத்துக்கு மாற்றாக நினைக்கவே இல்லை. குறைகள் களையப்படவேண்டும் என்பது மட்டுமே அவரது சிந்தனை. ஆங்கிலேயர்களின் உதவியுடன் நடத்தப்படும் பள்ளி என்பதால், இவர் படிக்கும்போது இவருக்கு உதவும் பல ஆங்கிலேய கிறிஸ்துவர்கள் இவரது அறிவையும் சேவை மனப்பான்மையையும் மெச்சி இவரை கிறித்துவ மதத்திற்கு மாற்றக் கடும் முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால் அது அத்தனையையும் தனியாளாக எதிர்த்திருக்கிறார் சிஸ்டர் சுபலக்ஷ்மி.
ஒரு முறை இவரை கிறித்துவ மதத்திற்கு மாற்ற விரும்பும் ஒரு ஆங்கிலேய அதிகாரி இவரிடம் ஹிந்து மதத்தில் உள்ள குறைகளைச் சொல்ல, இவர் மறுநாளே கிறித்துவத்தில் உள்ள குறைகளை எல்லாம் படித்துவிட்டு அந்த ஆசிரியரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அதிலிருந்து அவர் சுபலக்ஷ்மியிடம் இப்படிக் கேள்விகள் கேட்பதில்லை. அதேபோல் இவர் சிறியதாக விபூதி வைத்துக்கொண்டு வருவதைப் பார்க்கும் ஓர் ஆசிரியர், அதெல்லாம் எதற்கு, நாளை முதல் அழித்துவிடு என்று சொல்ல, மறுநாளிலிருந்து மிகப் பெரிய பட்டைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். இப்படிப் பல தருணங்கள்.
அதேசமயம் அந்தக் கிறிஸ்துவர்கள் செய்யும் சேவைய்ல் சிறு பங்காவது நாம் செய்ய ஆரம்பித்தால் நம் இந்துச் சமுதாயத்திற்கு எத்தனை நல்லது நடக்கும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. மதம் மாற்றம் ஒரு நோக்கமாக இருந்தாலும், அவர்கள் செயலில் மனிதாபிமானமும் இருப்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
கணவன் இல்லாதவர்கள் சஷ்டியப்த பூர்த்தி கொள்ளலாமா என்பது இன்றுவரை நிலவும் ஒரு கேள்வி. ஆனால் 1946லேயே சிஸ்டர் சஷ்டியபத பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார்.
இப்படிப் பல தகவல்களுடன் ஒரு பொக்கிஷமாகத் திகழ்கிறது சிஸ்டரின் சுயசரிதை.
இதில் அம்பையின் பங்கு என்ன?
அம்பை சிறந்த எழுத்தாளர் என்பதோடு, ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட்டும் கூட. எனவே இந்தப் புத்தகம் அதே கச்சிதத்துடன் ஒரு செம்பதிப்பாக வெளியாகி இருக்கிறது. அம்பை இல்லாமல் இது சாத்தியமில்லை. இரண்டாவதாக, அம்பை பல அடிக்குறிப்புகளைச் சேர்த்திருக்கிறார். அது இந்த நூலைப் பல படிகள் உயர்த்துகிறது. பல அடிக்குறிப்புகள் அம்பையின் உழைப்பைச் சொல்கின்றன. மூன்றாவதாக, மிக முக்கியமானதாகச் சொல்லவேண்டியது – இந்த நூல் ‘ஜகன்மோகினி’யில் தொடராக வந்ததன் சில அத்தியாயங்கள் இப்போது கிடைக்கவில்லை. சகோதரியின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அதை எடுத்து இந்த நூலோடு சரியான இடத்தில் சேர்த்து, அதைத் தனியே குறிப்பிட்டு, ஒரு முழுமையைக் கொண்டு வந்திருக்கிறார். மிக முக்கியமான நீண்ட முன்னுரையையும் எழுதி இருக்கிறார் அம்பை. மாலதி ராமநாதனுடன் இணைந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்.
இந்த நூலில் சிலவற்றை மட்டுமே நான் சொல்லி இருக்கிறேன். சிஸ்டரின் பயணங்களைத் தனியே சொல்லலாம். அந்த அளவுக்குப் பயணம் செய்திருக்கிறார். உ.வே.சாமிநாதையர் சிஸ்டரின் தமிழ் ஆசான். விதவைப் பெண் படிக்க நினைக்கும்போது, அதற்கு ஆதரவாகவும் ஒரு சமூகத்தில் பலர் இருந்திருக்கிறார்கள். உலகம் முற்றிலுமாகக் கறுப்பு வெள்ளையாக இருந்துவிடவில்லை. இப்படி இன்னும் பல மாணிக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன.
மொத்தத்தில் இந்த நூல் நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத நூல்!
புத்தகத்தை வாங்க: https://www.swasambooks.com/products/en-suya-sarithai/225301000101187037
To buy the English Version: https://www.swasambooks.com/products/my-life-story/225301000100939582


