Eko – Truly a Master Piece

Eko (M) – என்ன சொல்ல! எப்படியாவது வார்த்தைகளில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு த்ரில்லர் வகைப் படத்தை இத்தனை விரிவாக இத்தனை ஆழமாக எடுக்க முடியுமா? த்ரில்லரும் இலக்கிய வகைமையும் ஒன்று சேர முடியுமா? த்ரில்லை திரைப்படத்தை ஓர் இலக்கிய நாவல் போல எழுத முடியுமா? நாவலில்கூட கை கூட முடியாத சில நுட்பங்களைத் திரையில் கொண்டு வந்துவிட முடியுமா? இசை, நடிப்பு, ஒளிப்பதிவு, நிலம் என அனைத்தும் ஒரு படத்தில் ஒன்றுகொன்று உச்சமாக இயைந்து ஒத்துழைக்க முடியுமா? ஓர் இந்திய நிலத்தில் இன்னொரு நிலத்தின் ஆத்மாவையும் காதலையும் அச்சு அசலாகக் கொண்டு வந்துவிட முடியுமா? ஒவ்வொரு நொடியும் புல்லரிக்க வைக்கும் காட்சியும் வசனமும் திரைக்கதையும் என படம் தொடங்கிய நொடி முதல் இறுதி வரை கொண்டு செல்ல முடியுமா? மெல்ல நகரும் படம் ஆனால் இப்படி விறுவிறுப்பாக இருக்க முடியுமா? ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரையில் இப்படிச் செதுக்க முடியுமா? தேவையற்ற காட்சி ஒன்று கூட இல்லாத ஒரு படம் இருக்க முடியுமா? அத்தனையையும் செய்து காட்டி இருக்கிறது எக்கோ என்னும் மலையாளத் திரைப்படம்.

இது திரையில் ஒரு ஆழமான நாவல். த்ரில்லர் வகையின் ஆழமான இலக்கியப் பிரதி.

இறுதிக் காட்சியில் வரும் புல்லரிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இது ஒரு திரையரங்க அனுபவமாக முகிழ்ந்திருக்கவேண்டும். தவற விட்டுவிட்டேன்.

நாம் எப்போது தமிழில் இப்படி ஒரு படம் எடுப்போம் என என்னால் யூகிக்கக் கூட முடியவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் திறமைச்சாலிகளுக்குக் குறைவில்லை. தேவையற்ற அரசியல் தூண்டிலில் சிக்கிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மலையாளிகளோ நிலம் சார்ந்த கதை, கதை சார்ந்த திரைக்கதை என இடதுகையால் திரைப்படம் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் செலவு 5 கோடிதானாம். நம்ப முடிகிறதா?

எந்த வித நட்சத்திர மதிப்பும் இல்லாத பையன் அப்படி நடிக்கிறான். விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு வாய்ப்புக் கிடைத்தால் மலையாளப் பையன்கள் அசரடித்துவிடுகிறார்கள். சந்தீப் பிரதிப்புக்கு 25 வயது இருக்குமா? சில படங்களில் சாதாரண கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அப்படிச் சாதாரணமாக வந்து பின்னர் இந்தப் பையன் எடுக்கும் விஸ்வரூபம் நம்மை வாய் பிளக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குநர் தின்ஜித் அய்யநாதன். இவரது கிஷ்கிந்தா காண்டமெல்லாம் இந்தப் படத்தின் முன்னால் ஒன்றுமே இல்லை என்றால் இந்தப் படம் எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள்.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை என அனைத்திலும் இந்தப் படம் தேசிய விருது பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

டோண்ட் மிஸ் வகையறா.

Truly a master piece.

Share

Comments Closed