
தலைவர் தம்பி தலைமையில் – சுமாரான திரைப்படம்தான். ஆனாலும்…
படம் முழுக்க வெட்டு குத்து ரத்தம் போன்றவை இல்லை என்பதற்காகவும், கஞ்சா குடி எனப் படம் நெடுக வலிய திணிக்காமல் இருந்த காரணத்துக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். இன்னும் வேறு சில விஷயங்களுக்காகவும் பார்க்கலாம். இயக்குநர் மலையாளி என்பதாலோ (ஃபேலிமி) என்னவோ மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு. ஃபேலிமி அளவு இல்லையென்றாலும், அழகான உணர்வுதான். நேரடி சிறிய பட்ஜெட் மலையாளத் திரைப்படங்கள் பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் வெறுக்காது.
மிக எளிய கதை. முதல் ஒரு மணி நேரம் கலகலப்பாகவே இருந்தது. பின்னர்தான் கொஞ்சம் இழுக்க ஆரம்பித்துவிட்டது. முடிவை வேறு மாதிரி யோசித்திருக்க வேண்டும். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட், மலையாளத் திரைப்படங்களில் வருவது போலவே அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். சிறிய வேடத்தில் நடிப்பவர்கள் உட்பட. கொஞ்சம் சுமாராக நடித்தார் என்றால் அது ஜீவா மட்டுமே. தம்பி ராமையா, இளவரசு இருவரும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.
படத்தில் சில காட்சிகள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டன. குழிக்குள் காதலி காதல் காதலனைக் கட்டிக் கொள்ளும் காட்சி. தம்பி ராமையா தன் பொண்ணு வீட்லதான் இருக்கா என்று சொன்னபடியே வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொள்ளும் காட்சி. இந்தக் கதவை மூடிக்கொள்ளும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், அதைச் சரியான இடத்தில் நிறுத்தியதுதான். தொடர்ந்து அழுவது போலக் காண்பிக்காமல் அப்படி நிறுத்தியது அழகாகவே இருந்தது.
நேரமும் பொறுமையும் இருப்பவர்கள், மினி மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் பார்க்க விரும்புபவர்கள், நாகர்கோவில் வட்டார வழக்கை உருப்படியாகக் கேட்க நினைப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மற்றவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள்.


