இந்த முறை புத்தகக் கண்காட்சியில் கடந்த நான்கு நாள்களாகக் கண்ணில் பட்டவையும் அவை தொடர்பாக மனதில் தோன்றியவையும்.
* வழக்கம்போல முதல் வரிசைக் கடைகளில் மட்டுமே பெரும் கூட்டம். மற்ற கடைகளில் ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவு. வரிசைகளை மாற்றி மாற்றி டிக்கெட் கொடுத்தாலும், மக்கள் என்னவோ தொடக்க ஸ்டாலில் இருந்து பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள். இது தொடர்பாக இன்னும் சீரியஸாக பபாஸி யோசிப்பது நலம்.
* நான்கு ஸ்டால்கள் எடுத்தாலும் கூட, முதல் வரிசையில் அரங்கு இல்லாவிட்டால் விற்பனை ஒப்பீட்டளவில் குறையவே செய்யும்.
* இந்த முறை தமிழ்ப் புத்தகங்களைவிட ஆங்கிலப் புத்தக அரங்குகளில் அதிகம் கூட்டம் தென்படுவது போன்ற ஒரு பிரமை.
* தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சிகளால் நிச்சயம் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் விற்பனை ஒட்டுமொத்த அளவில் குறைந்திருக்கிறது. ஆனாலும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் மீதான மக்களின் ஆர்வம் கூடுதலாகவே இருக்கிறது. இந்திய அளவில் அதிக அளவில் மக்கள் புத்தகம் வாங்க வரும் புத்தகக் கண்காட்சிகளில் இது முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.
* பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் ஒட்டுமொத்த பதிப்பு உலகத்தையே மாற்றிப் போட்டிருக்கிறது. இதற்கேற்றாற் போல் திட்டமிடாவிட்டால் கடினம்.
* பதிப்பகம் ஒரு பிராண்டாக நிலைபெறாவிட்டால் பதிப்பகமாகப் பெரிய சவாலைச் சந்திக்கவேண்டி இருக்கும். இப்படி நிலைபெற வைப்பது அத்தனை எளிதல்ல.
* எழுத்தாளரையே ஒரு வெற்றிகரமான பிராண்டாகக் கொண்டிருக்கும் பதிப்பகங்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால் அந்த எழுத்தாளர் அதே பிராண்டாக, நிலை பிறழாத ஒருவராக இருக்கவேண்டும்.
* ஃபேஸ்புக்கில் வரும் லைக்கில் ஆயிரத்தில் ஒரு பங்கு விற்றால் கூட ஒவ்வொரு புத்தகமும் ஆயிரம் விற்கும்.
* சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லாவிட்டால் புத்தகங்களை இத்தனை எளிதாகப் பிரபலப்படுத்த முடியாது. அதே சமயம் சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் புத்தக வாசிப்பும் விற்பனையும் கூடுதலாக இருந்திருக்கும். ஒருவகையில் இது வரமும் சாபமும்.
* புத்தக விமர்சனங்களை அதிகமாக்குவதன் மூலம் மட்டுமே புத்தகம் குறித்தான தொடர் கவனிப்பைக் கொண்டு வர முடியும். தொடக்க கால ப்ரொமோஷன்கள் அந்தக் காலத்துக்கு உதவுமே ஒழிய, தொடர் கவனத்தைக் கொண்டு வராது. இன்றிருக்கும் ஆகப் பெரிய சவாலே இதுதான்.
* புத்தகம் எழுதியவர் எழுத்தாளரல்ல. எழுத்தாளர் என்பது ஒரு நிலை. ஒரே ஒரு புத்தகம் எழுதியவர் முக்கியமான எழுத்தாளராகவும், பல புத்தகங்கள் எழுதி இருந்தாலும் அவர் எழுத்தாளர் என்ற நிலையை அடையாமல் இருக்கும் வாய்ப்பு உள்ள சூழல் இது. தன்னை எழுத்தாளன் என்று நினைக்கும் கர்வமே, திறமையே ஒருவரை எழுத்தாளராக்கும்.


